(தொகுப்பு – மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)
வஹ்ஹாபிகள் கொண்டு வந்த அவர்களின் புதிய, நவீன மார்க்கத்தில் கூட்டு “துஆ” “பித்அத்”தாம்.
கூட்டு “துஆ” ஓதியவர்களும், ஓதிக் கொண்டிருப்பவர்களும் “பித்அத்” காரர்களாம். நரக வாதிகளாம். இவர்களின் இக்கூற்றின்படி நமக்கு முன் வாழ்ந்து மறைந்த இமாம்கள், மகான்கள், நல்லடியார்கள், வலீமார்கள், தரீகாவின் ஷெய்குமார்கள் அனைவரும் “பித்அத்” காரர்களும், நரகவாதிகளுமேயாவர். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு சொல்லாவிட்டாலும் மனதால் நினைத்தாலே “ரித்தத்” மதம் மாற்றம் ஏற்பட்டு விடும்.
வஹ்ஹாபிகள் தலை நீட்டிய பிறகுதான் கூட்டு “துஆ” சர்ச்சைக்குரிய விடயமானது. அதற்கு முன் எந்த ஒரு கருத்து வேறுபாடுமின்றி அனைவரும் ஓதியே வந்துள்ளார்கள்.
எல்லா விடயங்களுக்கும் கிதாபு – நூல்களும் எழுதி பாடங்களும் அமைத்த எந்த ஒரு மார்க்க மேதையும் “கூட்டு துஆ” என்று ஒரு பாடம் கூட எழுதவில்லை. எழுதுவதற்கான தேவையும் இருக்கவில்லை.
இந்த வஹ்ஹாபிகள் போல் மார்க்கத்தைப் புரட்டும் அட்டூழியக்காரர்கள் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியதேயில்லை. இவர்கள் போல் மனமுரண்டுள்ளவர்களும் தோன்றியதேயில்லை. இவர்கள் போல் பெருமையுள்ளவர்கள் வந்ததேயில்லை.
பெருமை என்பது அழகாக உடுப்பதோ, அழகிய செருப்பணிவதோ, அழகான, விலையுயர்ந்த வாகனத்தில் பயணிப்பதோ அல்ல.
اَلْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ
சத்தியத்தை, உண்மையை, சரியானதை மறுப்பதும், மனிதர்களை கீழ்த்தரமாக கணிப்பதுமேயாகும்.
اَلْبَطَرُ – اَلْحَقَّ تَكَبَّرَ عَنْهُ وَلَمْ يَقْبَلْهُ
சத்தியத்தை, சரியானதை ஏற்றுக் கொள்ளாமல் பெருமையினால் அதை மறுப்பதே “பதர்” என்பதற்கான அர்த்தமாகும்.
اَلْغَمْطُ – غَمَطَهُ اِحْتَقَرَهُ وَازْدَرَى بِهِ
மனிதனை கீழ்த்தரமாக கணித்து அவனைக் கிண்டல் செய்வதே “ஙமது” என்பதற்கான அர்த்தமாகும்.
இதன்படி பெருமை என்பது சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், மனிதர்களைக் கீழ்த்தரமாக கணிப்பதுமாகும்.
வஹ்ஹாபிகள் சரியானதை மறுப்பவர்களாகவும், ஏனையவர்களை கீழ்த்தரமாக கணிப்பவர்களாகவும் இருப்பது பொது சனங்களுக்குத் தெரியாது போனாலும் அறிவுள்ளவர்களுக்கு தெளிவாகத் தெரியும்.
அவர்கள் உண்மையை மறுக்கின்றார்கள் என்பதற்கு ஆதாரம் “கூட்டு துஆ” கூடும் என்பதற்கு நாம் கூறுகின்ற நூறு வீதம் பொருத்தமான ஆதாரத்தை அவர்கள் மனச்சாட்சிக்கு முரணாக மறுப்பதேயாகும்.
“ஸூறதுல் பாதிஹா” அத்தியாயம் தொழுகையில் ஓதப்பட்டாலும், தொழுகைக்கு வெளியே ஓதப்பட்டாலும், கூட்டாக ஓதினாலும், தனியாக ஓதினாலும் இறுதியில் “ஆமீன்” என்று சொல்வது மார்க்கத்தில் “ஸுன்னத்” ஆகும்.
“பாதிஹா” அத்தியாயம் ஓதி முடிந்த பின் “ஆமீன்” சொல்லும் வழக்கம் – நடைமுறை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் நடைமுறையில் உள்ளதாகும். அதில் “துஆ” உள்ளது என்பதற்கான ஆதாரம்தான் இறுதியில் “ஆமீன்” சொல்வதென்பது சிந்தனையாளர்களுக்கு மறைவானதல்ல.
“பாதிஹா” அத்தியாயத்தில் اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ என்பதிலிருந்து அத்தியாயம் முடியும் வரை தனி “துஆ”வேயாகும். இதனால்தான் இறுதியில் “ஆமீன்” சொல்கிறோம். “ஆமீன்” என்ற சொல்லுக்கு “ஏற்றுக் கொள்” என்ற அர்த்தம் உண்டு.
இது கூட்டு “துஆ” ஆகுமென்பதற்கு மறுக்க முடியாத, பகிரங்கமான ஓர் ஆதாரமாகும். இவ் ஆதாரத்தை வஹ்ஹாபிகளிடம் கூறினால் அது தொழுகையில் ஆகும், மற்ற நேரங்களில் ஆகாதென்று கூறுகின்றார்களாம். இது தலையில்லாதவர்களின் கதை. தலைக் கோளாறால் எல்லாமே கோளாறாகிவிடும்.
إِذَا صَلُحَ الرَّأْسْ، فَلَيْسَ مِنَ الْجَسَدِ بَأْسْ،
“துஆ” பிரார்த்தனையைப் பொறுத்த வரையில் தொழுகையில் ஆகும், தொழுகைக்கு வெளியே ஆகாதென்று ஒரு பிரார்த்தனை கிடையாது. நாம் அப்படியொரு “துஆ”வை காணவில்லை. பாலியல் தொடர்பான “துஆ” பிரார்த்தனை கூட தொழுகையில் அனுமதிக்கப்பட்டதேயாகும். தொழுகின்ற ஒருவன் தொழுகையில் اَللهم زَوِّجْنِيْ بِكْرًا جَمَالُهَا يُعْجِبُ النَّاظِرِيْنَ إِلَيْهَا என்று “துஆ” கேட்பது கூட ஆகுமென்று சட்ட நூல்கள் கூறுகின்றன. தொழுகையிலேயே இவ்வாறு கேட்கலாமென்றால் தொழுகைக்கு வெளியே இவ்வாறு கேட்பதற்கு ஆதாரம் தேவையில்லை. மேற்கண்ட அரபு வசனத்தின் பொருளையறிய விரும்புவோர் ஒரு மௌலவீயிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தொழுகையில் ஒரு “துஆ” ஆகுமென்றால் தொழுகைக்கு வெளியேயும் அது ஆகுமானதே!
எனவே, “பாதிஹா” அத்தியாயத்தை கூட்டு “துஆ”வுக்கு ஆதாரமாக நாம் கூறும் போது அதை மறுக்கும் வஹ்ஹாபிகளை மேலூட்டில் சரக்கில்லாத அதிசய படைப்புகள் என்று சொல்வது தவிர வேறு பதில் ஒன்றுமில்லை.
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِين آمِين آمِين» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ: آمِين آمِين آمِين، قَالَ: «إِنَّ جِبْرِيلَ أَتَانِي، فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِين، فَقُلْتُ: آمِين، وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُمَا، فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِين، فَقُلْتُ: آمِين، وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِين، فَقُلْتُ: آمِين، (رواه ابن خُزيمة – 1888 ، وابن حبان – 907 ، الترغيب والترهيب – 339 )
ஹதீதின் சுருக்கம்:
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “மின்பர்” பிரசங்க மேடையில் ஏறும் போது “ஆமீன்” என்று மூன்று முறை சொன்னார்கள். அப்போது அவர்களிடம் எதற்காக “ஆமீன்” மூன்று தரம் சொன்னீர்கள்? என்று தோழர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து ஒருவன் றமழான் மாதத்தை அடைந்தும் தனது பாவம் மன்னிக்கப்படாமல் மரணித்து நரகம் சென்றானாயின் அல்லாஹ் அவனை தூரமாக்குவானாக! என்று “துஆ” செய்து என்னிடம் “ஆமீன்” சொல்லுங்கள் என்றார்கள். நான் “ஆமீன்” சொன்னேன் என்றார்கள்.
ஒருவன் தனது பெற்றோர் இருவரையும் அல்லது அவர்களில் ஒருவரை அடைந்து அவர்களுக்கு உதவியுபகாரம் செய்யாமல் மரணித்து நரகம் சென்றானாயின் அவனை அல்லாஹ் தூரமாக்குவானாக! என்று “துஆ” கேட்டு என்னிடம் “ஆமீன்” சொல்லுமாறு சொன்னார்கள். நான் “ஆமீன்” சொன்னேன் என்றார்கள்.
ஒருவனிடம் உங்கள் பெயர் சொல்லப்பட்டு அவன் உங்கள் மீது “ஸலவாத்” சொல்லாமல் மரணித்து நரகம் சென்றானாயின் அவனை அல்லாஹ் தூரமாக்குவானாக! என்று “துஆ” செய்து என்னிடம் “ஆமீன்” சொல்லுமாறு சொன்னார்கள். நான் “ஆமீன்” சொன்னேன் என்றார்கள்.
ஆதாரம்: இப்னு குஸைமா – 1888, இப்னு ஹிப்பான் – 907, அத்தரஙீப் வத்தர்ஹீப் – 339)
இந்த ஹதீதின் மூலம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட “துஆ”வுக்கு நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “ஆமீன்” சொல்லியுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. அதாவது நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும், ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கூட்டு “துஆ” ஓதியுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.
வஹ்ஹாபிகள் இதே நொடியிலிருந்து இந்த ஹதீதை எப்படியாவது “ழயீப்” பலம் குறைந்ததென்று நிறுவுவதற்கு சிறகடித்துப் பறப்பார்கள். சக்றானிடம் கேட்டறிய அவனுமில்லையே என்று தலையில் கைவைத்து தம்மை மறந்து நிற்பார்கள்.
அவர்கள் எங்காவது பறந்து “ழயீப்” பலம் குறைந்ததென்று நிறுவினாற்கூட நாங்கள் அஞ்சமாட்டோம். “ழயீப்” பலம் குறைந்த ஹதீதை ஆதாரமாகக் கொண்டு செயல்படலாம் என்பதற்கான ஆதாரங்களைக் கூறி வஹ்ஹாபிகளின் வாய்களுக்கு பூட்டுப் போட இரும்பு பூட்டுடன் நாங்கள் ஆயித்தமாக உள்ளோம்.
“ழயீப்” பலம் குறைந்த ஹதீதுகளைக் கொண்டு செயல்படலாமென்பதை நிறுவுவதற்கு அதற்கான ஆதாரங்களை வஹ்ஹாபிகள் தமது மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ, அல்லது மாயா ஜாலத்தாலோ மறைத்துவிட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொல்லாத, செய்யாதவற்றைக் கூட நாம் செய்யலாம் என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து வஹ்ஹாபிகளுக்கு வாய் விலங்கிடவும் நாம் ஆயித்தமாயுள்ளோம் என்பதை அவர்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகிறோம். வஹ்ஹாபிகள் விரும்பினால் எமது வெளியீடான الجنون فنون “பைத்தியம் பல்கலை” என்ற நூலைப் பார்த்து தமக்கான பதுங்கு குழிகளைத் தேடிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.