Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“தன்னை அறிந்தவன் தனது இறைவனை அறிந்து கொண்டான்”

“தன்னை அறிந்தவன் தனது இறைவனை அறிந்து கொண்டான்”

(தொகுப்பு – மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

இவ்வாறு சொன்னவர் யார் என்பதில் அறிஞர்களுக்கிடையில் பயங்கர சர்ச்சையொன்று நடந்து வருகின்றது.

சிலர் இது “ஹதீது” நபீ மொழி என்பர். இவ்வாறு சொல்பவர்களில் அநேகர் இறைஞானிகளும், ஸூபீகளுமாவர். அவர்களில் இன்னும் சிலர் நபீ மொழியாயினும் “ழயீப்” பலம் குறைந்ததென்பர்.

இன்னும் சிலர் இது நாலாவது கலீபா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தத்துவம் என்பர்.

இன்னும் சிலர் இது “மவ்ழூஉ” என்பர். அதாவது இனம் தெரியாத ஒருவரால் சொல்லப்பட்டு இஸ்லாமிய தத்துவமென்று ஆக்கப்பட்டதென்பர்.

இவ்வாறு பல்வேறு கருத்துக்கள் கூறி சண்டையிடுவோர் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் மேற்கண்ட مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ என்ற தத்துவத்தில் مَنْ عَرَفَ نَفْسَهُ என்ற வசனத்தில் نَفْسَهُ என்ற சொல்லில் உள்ள “பாஉன்” அல்லது “பேF” என்ற எழுத்துக்கு “ஸுகூன்” என்ற குறியீடு செய்து نَفْسَهُ என்று வாசிப்பவர்களேயாவர். نَفْسَهُ என்ற சொல்லில் உள்ள “பேF” என்ற எழுத்துக்கு “ஸுகூன்” என்ற குறியீடு செய்தால் மட்டும்தான் அந்த வசனத்துக்கு “தன்னை அறிந்தவன் தனது இறைவனை அறிந்தவனாவான்” என்று கருத்து வரும். “ஸுகூன்” குறியீடு என்பது இவ்வாறு வரும். ( ْ )

இறைஞான வழி செல்லும் இன்னொரு கூட்டம் குறித்த வசனத்தில் வந்துள்ள نَفْسَهُ என்ற சொல்லில் உள்ள “பேF” என்ற எழுத்துக்கு “ஸுகூன்” குறியீடு செய்யாமல் “பத்ஹ்” குறியீடு செய்து அச் சொல்லை نَفَسَهُ என்று வாசிப்பர்கள்.

இவ்வாறு குறியீடு செய்தால் குறித்த வசனத்தின் கருத்து “எவன் தனது சுவாசத்தை – மூச்சு – அறிந்தானோ அவன் தனது இறைவனை அறிந்து கொண்டான்” என்று கருத்து வரும். இவ்வாறு கருத்துக் கூறுபவர்களில் முஸ்லிம் ஞானிகளும் உள்ளனர். இந்து ஞானிகளுமுள்ளனர்.

இவர்கள் மனிதன் சுவாசிக்கின்ற சுவாசத்தை “திக்ர்” இறைவனை நினைக்கும் சாதனமாக்கி அவ்வழியிற் சென்று அவனை அறிந்து கொள்வர். அடைந்தும் கொள்வர்.

இது சுவாசக் கலை என்றும், சரவழி என்றும் சொல்லப்படும். இவ்வழியிற் சென்று இறைவனை அறிந்தவர்களும், அவனை அடைந்தவர்களும் இஸ்லாமிய வரலாற்றில் பலருளர் எனினும் இது மிகக் கடுமையான வழியாகும். இவ்வழியிற் செல்வோர் இது தொடர்பான குரு ஒருவரின் வழி காட்டலில் செல்ல வேண்டும். தமது விருப்பத்தின்படி ஒன்றும் செய்யலாகாது. அவர்களில் குறிப்பாக இந்தியா – தற்கலை – தக்கலையில் சமாதி கொண்டுள்ள அற்புத வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மத் அப்பா றஹிமஹுல்லாஹ் அவர்கள் மிகப் பிரசித்தி பெற்றவராவார்கள்.

பீரப்பா அவர்கள் சரஞானம் தொடர்பாக 36 ஆயிரம் பாடல்கள் இயற்றியுள்ளார்கள் என்றும், அது தொடர்பாக 40க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்கள் என்றும் அவர்களின் வரலாறு கூறுகிறது.

சரஞானத்திலுள்ள மிகப் பெரிய விஷேடமென்னவெனில் சரஞானம் கூறும் முறைப்படி சுவாசத்தை “திக்ர்” இறைவனை நினைக்கும் சாதனமாக்கி தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் அதிக காலம் நோய் நொடியின்றி உயிர் வாழலாம் என்று சொல்லப்படுகின்றது. அதோடு இதில் பூரண பயிற்சி பெற்ற ஒருவர் தான் மரணிக்கும் கால நேரத்தை முன்கூட்டி அறிவிக்கும் திறமையையும் பெற்றுக் கொள்வார்.

இந்த ஞானத்தில் கலாநிதியான பீரப்பா அவர்கள் 300 ஆண்டுகள் வாழ்ந்ததாக அவர்களின் வரலாறு கூறுகிறது.

பகீர்மார் – பாவாமார்.
(இத்தலைப்பு நிறைவு பெற்றபின் தன்னை அறிந்தவன் தனது நாயனை அறிந்தவனாவான் என்ற தலைப்பின் விளக்கம் இடம் பெறும்)

“பகீர்”மார் – பாவாமார் என்று முஸ்லிம்களில் ஒரு கூட்டம் உள்ளது. முஸ்லிம் உலமாஉகளை இனம் கண்டு கொள்ள முடியாது போனாலும் அவர்களை இனம் கண்டு கொள்ள முடியும். ஏனெனில் அவர்களுக்கென்று ஒரு “யூனிபோம்” சீருடை உண்டு. அவர்கள் மாத்திரமே அந்த சீருடை அணிவார்கள். அவர்களின் உடலமைப்பிலும் சில மாற்றங்கள் உண்டு. இவர்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்களேயாவர்.

ஆயினும் முஸ்லிம்களில் பணத்திமிர் பிடித்தவர்களிற் சிலரும், பட்டம் பதவிகளுக்கு அடிமையான பலரும் இவர்களை அவமதிப்பதும், இவர்களுடன் தரக்குறைவாக நடந்து கொள்வதும் வேதனைக்குரியதாகும்.

ஆயினும் “பாவா”மார்களை மற்றவர்கள் கண்ணியப்படுத்தாமலிருப்பதற்கு பாவாமார்களே காரணம் எனலாம். பிறர் அவர்களை கண்ணியம் செய்யுமளவு அவர்கள் நடந்து கொள்வதில்லை.

“பாவா”மார் எல்லோரும் பிழை செய்பவர்கள் என்று நான் சொல்லவில்லை. நல்லவர்களும், “மர்தபா” உடையவர்களும், “கறாமத்” அற்புதம் உடையவர்கள் கூட அவர்களில் இருக்கவே செய்கின்றார்கள். இருந்தும் உள்ளார்கள். ஆயினும் பணவாசை பிடித்த, நப்ஸுக்கு அடிமையான, “ஷரீஆ”வுக்கு முரணாக நடக்கின்ற “பாவா”மார்களிற் சிலரால் மற்றவர்களும் குறை காணப்படுகின்றார்கள். அவமதிக்கப்படுகின்றார்கள். “பாவா”மார் நூறு வீதம் “ஷரீஆ”வைப் பின்பற்றுபவர்களாக இருப்பதவசியம். பாவாமார் என்று சொன்னாலே கஞ்சா நினைவுக்கு வந்துவிடுமென்று சிலர் கூற நான் கேட்டிருக்கின்றேன். இந் நினைவை மாற்றுவது பாவாக்களின் கைகளிலேயே உள்ளது.

“பாவா” என்ற சொல் சாதாரண சொல் அல்ல. “வுழூ” என்ற வெளிச் சுத்தத்தோடும், கண்ணியத்தோடும், பக்தியோடும் சொல்லப்பட வேண்டிய சொல்லாகும்.

ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “பாவா ஆதம் நபீ” என்று கண்ணியமாகவே அழைக்கப்பட்டு வருகின்றார்கள். “பாவா” என்ற சொல் அறபுச் சொல் அல்ல. இதற்கு தந்தை என்ற பொருளும் உண்டு. ஒரு மகானை கண்ணியத்தோடு அழைப்பதற்கும் இச் சொல் பாவிக்கப்படும். உதாரணமாக குத்பு நாயகம் அவர்கள் “பாவா முஹ்யித்தீன்” என்று அழைக்கப்படுவது போன்று.

“பைஅத்” வழங்கும் ஷெய்குமார்களை “பாவா” என்றும் அழைக்கலாம். இச் சொல் உர்து மொழி, பாரசீக மொழி பேசுகின்றவர்கள் கௌரவமானவர்களுக்கு பயன்படுத்துவார்கள். ஒரு பெரிய மனிதனின் – மகானின் பெயர் தெரியாதவிடத்து “பாவா” என்று அழைக்கலாம்.

இச் சொல் குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களுக்கும், அவர்கள் போன்ற பல மகான்களுக்கும் பாவிக்கப்பட்டு வந்துள்ளதால் இப்பெயர் இன்று நேற்று வந்த பெயரென்று நினைப்பது தவறு.

ஒரு “பாவா” சபைக்கு வந்தால் அவரை சபையின் மூலையில் வைக்காமல் உலமாஉகள் வரிசையில் அவர் அமர்த்தப்பட வேண்டும். ஆலிமுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்துவிட்டு பாவாவுக்கு ஐந்து ரூபாய் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். சில பாவாக்கள் சில முப்தீகளை விடவும் ஆன்மீக “மர்தபா” அந்தஸ்த்தில் சிறந்தவராக இருப்பதற்கும் வாய்ப்புண்டு.

“விலாயத்” எனும் ஒலித்தனம் ஆலிமுக்கு மட்டும்தான் கிடைக்குமென்ற கருத்துப் பிழையானதாகும். ஆலிம் அல்லாத பலர் “விலாயத்” பெற்று – “கறாமத்” உள்ளவர்களாக இருந்ததற்கும் வரலாறு உண்டு. அது மட்டுமல்ல. எழுத வாசிக்கத் தெரியாத “உம்மீ”கள் கூட “குத்பு”மார்களாயிருந்ததற்கும் வரலாறுண்டு.

“விலாயத்” ஒலித்தனம் என்பது இரண்டு வகை. كَسْبِيْ மற்றது وَهْبِيْ ஆகும். “கஸ்பிய்யுன்” என்றால் ஒருவர் தான் செய்கின்ற நல்லமல்கள், முறாகபா, முஷாஹதா, திக்ர், பிக்ர் முதலானவை மூலம் பெறக் கூடியதாகும். இதனால்தான் இதற்கு “கஸ்பிய்யுன்” கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒலித்தனம் என்று பெயர் வந்தது. “வஹ்பிய்யுன்” என்றால் ஒருவர் எந்த அமலும் செய்யாத நிலையில் அல்லாஹ் அவர் மீது கொண்ட அன்பினால் அவருக்கு சன்மானமாக வழங்குவதாகும். இந்த வகை “விலாயத்” எவருக்கும் கிடைக்கலாம். பாவாவுக்கும் கிடைக்கலாம். இறைச்சி வியாபாரிக்கும் கிடைக்கலாம். மீன் வியாபாரிக்கும் கிடைக்கலாம். இழி தொழிலென்று மக்களால் கருதப்படுகின்ற தொழில் செய்பவர்களுக்கு கூட கிடைக்கலாம்.

#பாவா”மார் தொழிற் செய்வது தடையா?

பாவாமார் தொழிற் செய்யக் கூடாதென்று அவர்களின் “தரீகா”வில் ஏதும் விதியுண்டா? நான் அறிந்த வரை எந்த ஒரு தரீகாவின் ஷெய்குமார்களோ அதைப் பின்பற்றி வாழ்கின்றவர்களோ தொழில் செய்யக் கூடாதென்று ஒரு விதியில்லை. “தரீகா”வைச் சேர்ந்தவர்களோ, சேராதவர்களோ தொழில் செய்யக் கூடாதென்று இஸ்லாம் சொல்லவில்லை. மாறாக தேவையுள்ளவர்கள் தொழில் செய்ய வேண்டுமென்றே இஸ்லாம் கூறுகிறது.

உதாரணமாக சங்கைக்குரிய மர்ஹூம் அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா றஹிமஹுல்லாஹ் அவர்கள் தொழிற் செய்யாமல் சும்மா இருந்து கொண்டு முஹிப்பீன்கள் வழங்கும் “ஹத்யா” நன்கொடைகளைக் கொண்டு மட்டும் வாழவில்லை. அவர்கள் “தல்ஸமாத்” தொழில் செய்து கொண்டே இருந்தார்கள்.

அதேபோல் சங்கைக்குரிய மர்ஹூம் ஸூபீ ஹழ்றத் றஹிமஹுல்லாஹ் அவர்களும் தொழிற் செய்யாமல் முஹிப்பீன்கள் வழங்கும் நன்கொடைகளை பெற்றுக் கொண்டு மட்டும் வாழவில்லை. இராப்பகலாக மக்களுக்கு இறைஞானத்தை அள்ளி வழங்கிக் கொண்டே இருந்தார்கள். இதுவும் அவர்களின் தொழிலேயாகும்.

எனினும் “பாவா” தரீகாவைச் சேர்ந்தவர்களாயினும், வேறு தரீகாவைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களின் அவசியத் தேவைக்கேற்ற வகையில் அவர்கள் தொழில் செய்யவே வேண்டும். தொழில் செய்ய இயலாதவர்களுக்கு மன்னிப்பும் உண்டு. சலுகையும் உண்டு. ஓதிப்பார்த்தல், தாயத்துக் கட்டுதல், திருக்கர்ஆன், ஹதீதுகளைக் கொண்டு பேய், ஜின், ஷெய்தான்களை விரட்டுதல் இஸ்லாம் அங்கீகரித்த தொழில்களாகும். அறிவுக் கண் குருடர்கள் இவற்றை “ஷிர்க்” என்று சொல்வார்கள். குரைப்பார்கள்.

نَبْحُ الْكِلَابِ لَا يَضُرُّ السَّحَابَ،
நாய் குரைப்பதால் மேகத்திற்கு எந்தப் பிரச்சினையுமில்லை.

பாவாமாரும், “தகறா”வும்.

வலீமார், மகான்கள் “தகறா” அடித்து வீடு வீடாக, கடை கடையாகச் சென்று யாசகம் செய்துள்ளார்களா?

ஆம், செய்துள்ளார்கள். ஆயினும் அவர்களின் நோக்கம் வேறு. இன்றைய பாவாமாரில் சிலரைத் தவிர மற்றவர்களின் நோக்கம் வேறு. அவர்களின் நோக்கம் புகழப்பட்டது. இவர்களின் நோக்கம் இகழப்பட்டது.

ஒரு மனிதன் தனது மனவெழுச்சிக்கு உடன்படாமல் அதற்கு மாறு செய்வது அவன்மீது “பர்ழ்ஐன்” கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ் திருக்குர்ஆனில்,
قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا ، وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا،
“அந்த “நப்ஸ்” மனவெழுச்சிக்கு மாறு செய்து அதைச் சுத்தப்படுத்தியவன் வெற்றி பெற்றுவிட்டான். அதற்கு உடன்பட்டு அதை மாசு படுத்தியவன் தோல்வியடைந்துவிட்டான்” என்று கூறியுள்ளான். (திருமறை 91-9,10)

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
أَعْدَى عَدُوٍّ لَكَ نَفْسُكَ الَّتِي بَيْنَ جَنْبَيْكَ،
“உனது எதிரிகளில் உனக்கு கடுமையான எதிரி உனது இரு விலாக்களுக்கும் இடையிலுள்ள உனது “நப்ஸ்” ஆகும்” (இஃதிலாலுல் குலூப் லில் கராஇதீ – 32) பிறிதோர் அறிவிப்பில் أَعْدَى عَدُوِّكَ என்றும் வந்துள்ளது. இரண்டும் கருத்தில் ஒன்றேதான்.

“நப்ஸ்” மனவெழுச்சிக்கு மனிதன் உடன்பட்டு வாழக் கூடாதென்பது தொடர்பாக எச்சரித்து பல திருக்குர்ஆன் வசனங்களும், நபீ மொழிகளும் உள்ளன. அவற்றையெல்லாம் எழுதி விடயத்தைப் பெரிதாக்க விரும்பவில்லை.

சுருக்கமென்னவெனில் “நப்ஸ்” எதையெல்லாம் விரும்புகிறதோ அதையெல்லாம் அதற்கு கொடுத்து அதை வளர்த்து வலுவடையச் செய்யாமல் அதற்கு மாறு செய்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும். “நப்ஸ்”ஐ வென்றவன்தான் மனிதன். அதற்கு உடன்பட்டவன் மிருகமேதான்.

அக்காலத்தில் வாழ்ந்த ஸூபிஸ வழி செல்வோர், பாவாமார் சாலையில் இறங்கி வீடு வீடாகவும், கடை கடையாகவும் சென்று ஞானப் பாடல்கள் பாடியும், தகறா அடித்தும், யாசகம் செய்தும் தம்மை إذلال இழிவு படுத்தினார்கள். ஏனெனில் இவ்வாறு செய்வதால் மனதிலுள்ள கர்வம், மமதை, பெருமை, ஆணவம், புகழ் எல்லாமே அழிந்துவிடுகின்றன. மனதை சுத்தப்படுத்தியும், “நப்ஸ்” என்ற நச்சுப் பாம்பை கொன்றும் வாழவேண்டுமென்ற நோக்கத்தோடு அவ்வாறு செய்தார்கள். அவ்வாறு செய்தவர்களிற் பலர் பண வசதியுள்ளவர்களாகவும், காணி பூமி உள்ளவர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்களின் நோக்கம் தன்னை இழிவு படுத்துவதேயன்றி பணம் சம்பாதிப்பதல்ல.

ஆயினும் இன்றுள்ள பாவாமார்களில் அந்த நோக்கத்திற்காக “தகறா” அடித்து தம்மை இழிவுபடுத்துபவர்கள் சிலர் இருந்தாலும்கூட பணவாசை காரணமாக அவ்வாறு செய்பவர்களும் உள்ளனர். இவர்களில் எவர் நல்ல நோக்கத்தோடு செய்பவர்கள், எவர் பணவாசை பிடித்துச் செய்பவர்கள் என்பதை மிக எழிதாக இனங் கண்டு கொள்ள முடியும்.

சுமார் 50 வருடங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவரின் அழைப்பை ஏற்று பதுளை நகருக்குச் சென்றிருந்தேன். ஒரு ஜவுளிக்கடையில் அதன் உரிமையாளருடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு பாவா கடைக்கு முன்னால் நின்று தகறா அடித்து யாசகம் கேட்டார். உரிமையாளர் அந்த நேரம் ஒரு ரூபாய் பணம் கொடுத்தார். அதை ஏற்க மறுத்த பாவா ஐந்து ரூபாய் தர வேண்டுமென்று குரங்குப்பிடி பிடித்து நின்றார். முதலாளி எழுந்து சென்று அவருடன் அன்பாகப் பேசி வழமையாக வருகின்ற யாசகர்களுக்கு ஒரு சதம், அல்லது இரண்டு சதம்தான் கொடுப்போம். உங்களின் நல்ல காலம் ஒரு ரூபாய் தந்துள்ளோம். சந்தோஷமாக எடுத்துச் செல்லுங்கள் என்றார். அவரின் அன்பு வார்த்தையைக் கூடக் கேட்காத பாவா கோபப்பட்டவராக தனது சோழியில் இருந்த கம்பியொன்றை எடுத்து அவரின் கையில் குத்தி இரத்தம் எடுத்து அதைக் கடைப்பக்கம் எறிந்தார். அந் நேரம் நான் சுமார் 25 அல்லது 27 வயதுள்ளவனாயிருந்தேன். பாவாவின் அட்டூழியத்தை சகித்துக் கொள்ள முடியாமற் போன நான் எழுந்து அவரின் கையிலிருந்த கம்பியை எடுத்து எனது கையில் குத்தி இரத்தம் எடுத்து அவரின் முகத்தில் எறிந்தேன். அவர் அக்கணமே தரையில் விழுந்தார். தெருவில் நின்ற மக்கள் ஒன்றுகூடி விட்டனர். சுமார் 10 நிமிடத்தின் பின் தெளிவு பெற்று எழுந்த அவர் முதலாளியிடமும், என்னிடமும் மன்னிப்புக் கேட்டார். நான் அவருக்கு ஐந்து ரூபா பணம் கொடுத்து அனுப்பினேன்.

இவரை பல்லாண்டுகளின் பின் 18.06.2020 அன்று பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளி வீதியில் சந்தித்துப் பேசினேன். வயது 93 என்றார். அவரை கண்ணியப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

எனவே, முன்னோர்கள் போல் யாசகன் கோலத்தில் தம்மை இழிவு படுத்தி தமது மனவெழுச்சியின் பலத்தைக் குறைத்து அதைத் தமக்கு அடிமையாக்கும் அடிப்படையில் வீடு வீடாகவும், வீதி வீதியாகவும் தகறா அடித்தும், ஞானப்பாடல்கள் பாடியும் வலம் வருவது குற்றமாகாது. பாவாமார் அவர்களுக்கு மக்கள் கொடுப்பதை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந் நோக்கமின்றி பணவாசை பிடித்து தெருவெல்லாம் அலைந்து யாசகம் செய்யும் பாவாமார் தமது “நிய்யத்”தை சீர் செய்து கொள்வது கடமை.

“தன்னை அறிதல் எவ்வாறு?” – “தன்னை அறிந்தவன் தனது இறைவனை அறிந்தவனாவான்”

“தன்னை அறிந்தவன் இறைவனை அறிந்துவிட்டான்” என்ற தத்துவத்திற்கு விளக்கம் எழுதுமுன் அன்று வாழ்ந்த “பைஅத்” என்ற ஞான தீட்சை வழங்கிய ஷெய்குமார் ஒருவனை எவ்வாறு பக்குவப்படுத்தி ஞான தீட்சை வழங்கினார்கள் என்பதை சற்று விளக்கமாக எழுதுகிறேன்.

இந்திய தமிழ் நாடு காயல் நகரில் கண்ணுறங்கும் அற்புத வலிய்யுல்லாஹ் உமர் வலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் அருட்புதல்வர் தைக்கா ஸாஹிப் வலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் காயல் நகரில் ஆன்மீக ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் தங்களை தேடியும், நாடியும் வருகின்றவர்களுக்கு தங்களாலான ஈருலகத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

தங்களிடம் “பைஅத்” என்ற ஞானதீட்சை கேட்டு வருபவர்களின் மன நிலைகளைக் கவனித்து அவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கி வந்தார்கள். சிலருக்கு அவர்கள் கேட்டவுடனேயே “பைஅத்” வழங்கினார்கள். இன்னும் சிலருக்கு கால எல்லை குறிப்பிட்டு வழங்கினார்கள். இன்னும் சிலருக்கு உங்களுக்கு என்னிடம் “பைஅத்” பெற “நஸீப்” அமைப்பில்லை. வேறொருவரைத் தேடிக் கொள்ளுங்கள் என்று அன்பாகச் சொல்லியனுப்பி வைத்தார்கள்.

ஒரு நாள் அவர்களின் ஊரான காயல் நகர கோடீஸ்வரர் ஒருவர் அவர்களிடம் பிரசன்னமாகி தனக்கு “பைஅத்” வழங்குமாறு வேண்டினார். அதற்கவர்கள் நீங்கள் என்னிடம் “பைஅத்” பெறவிரும்பினால் நான் கூறும் நிபந்தனைகளுக்கு நீங்கள் உடன்பட வேண்டுமென்று கூறினார்கள். ஆம் என்றார் கோடீஸ்வரர். தைக்கா ஸாஹிப் நாயகம் பின்வரும் நிபந்தனைகளை முன்வைத்தார்கள்.

(எனது இல்லத்தில் என்னுடன் நாற்பது நாட்கள் தங்கியிருக்க வேண்டும். இடையில் ஒரு மணி நேரம் கூட வெளியே செல்லக் கூடாது. நான் தரும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வேறு எந்த உணவும் உட்கொள்ளக் கூடாது. சில நாட்களில் உணவு தராமல் பட்டினியிருக்குமாறு சொல்வேன். அதையும் பொருந்திக் கொள்ள வேண்டும். நான் தரும் உடைகளை மட்டுமே உடுக்க வேண்டும். வேறு எந்த உடையும் உடுக்கக் கூடாது. நான் சொல்லும் நேரம் மட்டுமே உறங்க வேண்டும். நான் வணக்கம் செய்யுமாறு பணிக்கும் நேரங்களில் வணக்கம் செய்ய வேண்டும். நான் என்ன பணி செய்யுமாறு பணித்தாலும் அதைச் செய்ய வேண்டும். அந்தப் பணி மனதுக்கு அருவருப்பான பணியாக இருந்தாலும் சரியே! மேற்கண்ட நிபந்தனைகளைப் பேணி 39 நாட்கள் இருந்த பின் நாற்பதாம் நாள் நான் சொல்வது போல் நீங்கள் செயல்பட வேண்டும். அதாவது ஒரு மாட்டு வண்டியில் மாடு நிற்க வேண்டிய இடத்தில் நீங்கள் நின்று நான் வண்டியில் இருக்க அதை காயல் நகர வீதியெல்லாம் இழுத்துச் செல்ல வேண்டும். தொப்புழுக்கும், முழங்காலுக்கும் இடைப்பட்ட பகுதியை சமையல் வேளையில் பாவிக்கப்பட்டு கரி நிறமாய் மாறிய, கிழிந்த துணியால் மறைத்திருக்க வேண்டும்)

இவ்வாறு செய்ய நீங்கள் விரும்பினால் நான் உங்களின் தேவையை நிறைவேற்றுவேன் என்று கூறினார்கள்.

குறிப்பிட்ட நிபந்தனைகள் அனைத்திற்கும் உடன்படுவதாகவும், கடைசியாகச் சொல்லப்பட்ட நிபந்தனையை மட்டும் விட்டுத்தர வேண்டும் என்றும் கேட்டார்.

அதற்கவர்கள், நான் கூறிய நிபந்தனைகள் யாவும் உடல் போன்றதாகும். இறுதியில் கூறிய நிபந்தனை மட்டும் அதன் உயிர் போன்றதுமாகும் என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

தன்னை அறுத்துக் “குர்பான்” செய்வதென்று முடிவு செய்த கோடீஸ்வரர் விருப்பம் தெரிவித்து தைக்கா ஸாஹிபுவின் பாதம் விழுந்து கிடந்தார்.

மறுநாள் ஸுப்ஹுத் தொழுகையின் பின் நாயகமவர்களின் இல்லம் வந்து இணைந்து கொண்டார். அன்று முதல் பயிற்சி தொடங்கிற்று. 39 நாட்கள் தொடராகப் பயிற்சி பெற்ற கோடீஸ்வரர் பயிற்சிக்கு முன்னர் தானிருந்த எடையில் சரிபாதி எடை குறைந்தவராகவும், உடல் மெலிந்தவராகவும், நடப்பதற்குக் கூட சக்தியற்றவராகவும் மாறிவிட்டார்.பணவாசை, பொருளாசை, பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை எல்லாமே அவருள்ளத்திலிருந்து வெளியாகிவிட்டன. இறையச்சம் அவரின் உள்ளத்தில் குடியேறிற்று. பெருமானாரின் அன்பு – மஹப்பத் அவரை முழுமையாக ஆட்கொண்டது.

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُوْنَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ (وَوُلْدِهِ) وَالنَّاسِ أَجْمَعِيْنَ

“உங்களில் எவரும் தனது பெற்றோர், பிள்ளைகள், மற்றும் மனிதர்கள் அனைவரை விடவும் என்னை அதிகம் நேசிக்கும் வரை “முஃமின்” விசுவாசியாக மாட்டார்” என்ற பெருமானாரின் அமுத வாக்கு அவரின் நெஞ்சுள் பாய்ந்து அவரை நபீ நேசராக மாற்றியது.

நாற்பதாம் நாள் இவரின் நிலையை அறிந்த மகான் தைக்கா ஸாஹிபு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.

ஒரு நாள் காலை சுமார் 10 மணியளவில் தைக்கா ஸாஹிப் வண்டியில் ஏறியிருக்க கோடீஸ்வரர் மாடு போல் தனது பிடரியில் வண்டியின் நுகத்தடியை (மேக்கால்) வைத்து காயல் நகர வீதிகளில் இழுத்துச் சென்றார். ஊர் மக்கள் அனைவரும் சாலைக்கு வந்து வேடிக்கை பார்த்து மகிழ்ந்தார்கள். கை தட்டிக் கூச்சலிட்டார்கள். அன்று 10 மணியளவில் தொடங்கிய ஊர்வலம் மாலை 05 மணிக்கு முடிவடைந்தது. ளுஹ்ர் தொழுகைக்காக மட்டும் ஊர்வலம் இடை நிறுத்தம் செய்யப்பட்டது.

அன்று இரவு இஷா தொழுகையின் பின் கோடீஸ்வரர் மகானின் கை பற்றி அவர்களின் ஆன்மீகச் சிஷ்யரானார். அக்கணமே அவர் இறையருளாலும், மகானின் அருட்பார்வையாலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவராகி மெய் நிலையடைந்தார்.

தைக்கா ஸாஹிப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்கண்டவாறு செய்தது கோடீஸ்வரரின் நெஞ்சில் குடியிருந்த أنانية – அனானிய்யத் என்ற நானெனும் மமதையையும், أنيّة – அன்னிய்யத் என்ற நான் என்ற உணர்வையும், غيريّة – ஙெய்ரிய்யத் என்ற வேறென்ற உணர்வையும், மற்றும் كبر – கிப்றுன் என்ற வெளிப் பெருமையையும், عجب – உஜுபுன் என்ற அகப் பெருமை – மனப் பெருமையையும், حب الجاه – ஹுப்புல் ஜாஹ் என்ற பதவி மோகம் மற்றும் இவை தவிரவுள்ள ஏனைய தீக்குணங்கள் அனைத்தையும் அகற்றிச் சுத்தம் செய்வதற்கேயாகும். ஏனெனில் தீக்குணங்கள் என்ற அசுத்தங்கள் “கல்பு” உள்ளத்தில் இருக்கும் வரை எந்த ஓர் ஆன்மீக வழியும் திறக்காது. இவையாவும் اَلْحُجُبُ الظُّلْمَانِيَّةُ இருட் திரைகள் எனப்படும். இத்திரைகளால் ஒருவரின் உள்ளம் மறைக்கப்பட்டிருக்கும் வரை அங்கு இறையருள் இறங்காது. இறைவனின் அருட்பார்வை செல்லாது.

நிலத்தில் எதை நட்டுவதாயினும் முதலில் நிலத்திலுள்ள அசுத்தங்கள், குப்பைகள், மற்றும் பயிர்கள் வளராமல் தடை செய்பவைகள் அனைத்தையும் அகற்றி நிலத்தை பக்குவப்படுத்த வேண்டும். நிலத்தை பண்படுத்திய பின்புதான் அதில் விதைகளையும், மரங்களையும் நட்ட வேண்டும். இவ்வாறு செய்யாமல் எதை நட்டினாலும், எதை விதைத்தாலும் அது வளராது.

இவ்வாறுதான் “கல்பு” என்ற உள்ளத்தில் படிந்துள்ள பாவம் என்ற கறைகளாகும். அவற்றை முதலில் அகற்ற வேண்டும்.

ஒருவன் தன்னிடமுள்ள எல்லாத் தீக்குணங்களையும் அகற்றிவிடலாம். ஆயினும் أَنِّيَّةٌ என்ற நானெனும் உணர்வை அகற்றுவது மிகவும் கடினமாகும். அந்த உணர்வு வேருடன் பிடுங்கி எறியப்பட வேண்டும். அந்த உணர்வு சாதாரணமான பாவமல்ல. அதுவே நிகரில்லாத பெரும் பாவமும், “ஷிர்க்” என்ற இணை வைத்தலுமாகும். இன்று வாழும் மக்களிற் பெரும்பாலானோர் இப்பாவத்தால் சூழப்பட்டவர்களாகவே உள்ளனர். இறைஞானிகளில் அநேகர் ஸூபிஸ வழியில் செல்பவர்களுக்கு இதையே – “அன்னிய்யத்” நானெனும் உணர்வை அழிக்க வேண்டும் என்பதையே விலியுறுத்தி வந்துள்ளனர்.

இப்னு அதாயில்லாஹ் அல் இஸ்கந்தரீ அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “ஹிகம்” என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
اِدْفَنْ وُجُوْدَكَ فِى أَرْضِ الْخُمُوْلِ، فَمَا نَبَتَ مِمَّا لَمْ يُدْفَنْ لَا يَتِمُّ نِتَاجُهُ،
“உனது “வுஜூத்” அதாவது உன்னை மறைவென்ற பூமியில் அடக்கம் செய்துவிடு. புதைத்துவிடு. பூமியில் புதைக்காத எந்த ஒரு விதையும் வளராது. என்று கூறியுள்ளார்கள்.

இதன் சாரம் என்னவெனில் நீ ஒருவன் இல்லை என்ற முடிவுக்கு வா. உன்னை இல்லாமற் செய்து விடு என்பதாகும்.

பூமிக்குள் விதையை நட்டினால்தான் அது முளைக்கும். பூமிக்கு மேல் வைத்தால் அது முளைக்காது. நீ ஒருவன் இல்லையென்ற உணர்வை நீ எடுத்துக் கொண்டால் மட்டுமே நீ ஆன்மீகத்தில் உயர்வாய் என்பதாகும்.

தனது வாழ்க்கையில் எந்த ஒரு பாவமும் செய்யாத ஒருவன் நான் செய்த பாவமென்ன? என்று இறைவனிடம் கேட்டானாம். அவனுக்கு ஓர் அசரீரி பின்வருமாறு கேட்டதாம்.

وَقُلْتُ وَمَا ذَنْبِيْ؟ فَقَالَتْ مُجِيْبَةٌ – وُجُوْدُكَ ذَنْبٌ لَا يُقَاسُ بِهِ ذَنْبٌ،
நீ ஒருவன் இருப்பதாக உணர்வதானது – நினைப்பது நிகரற்ற பாவம் என்று பதில் கிடைத்ததாம்.

அறபு மொழி தெரியாத ஞான வழி செல்கின்ற சிலர் أَنَانِيَّةٌ என்ற சொல்லுக்கும் أَنِّيَّةٌ அன்னிய்யத் என்ற சொல்லுக்கும் வேறுபாடு தெரியாமல் மாற்றிச் சொல்கின்றார்கள். அறபு மொழியறிவு தெரியாத பலரின் நூல்களில் இதைக்காணலாம். கிழக்கில் ஒரு ஞானி இருந்தார். தற்போது அவர் மரணித்துவிட்டார். அவர் எழுதிய சில நூல்களில் மாற்றி எழுதப்பட்டுள்ளது புத்தகப் பூச்சிகளுக்கு தெரியாமலிருக்காது.

أَنَانِيَّةٌ – “அனானிய்யத்” என்றால் நான் என்ற மமதை – கர்வம் என்பதைக்குறிக்கும். أَنِّيَّةٌ – “அன்னிய்யத்” என்றால் நானெனும் உணர்வு என்பதைக்குறிக்கும். இது சரியானது.

ஒருவன் ஐங்காலமும் முதலாம் வரிசையில் “அவ்வல்” முதலாம் “ஜமாஅத்” உடன் காலமெல்லாம் தொழுவான், ஒரு நோன்பு கூடத் தவறாமல் நோற்பான், ஒவ்வொரு வருடமும் “ஹஜ்” வணக்கம் செய்வான், “ஸகாத்” பணவரி கொடுப்பான், தவறாமல் “தஹஜ்ஜுத்” வணக்கம் செய்வான், திருக்குர்ஆன் ஓதுவான், “ஸலவாத்” சொல்வான், மற்றும் நல்லவை யாவும் செய்வான், தீயவை எதுவும் செய்யான், பொதுவாக ஒரு சிறு பாவம் கூட செய்யமாட்டான். இவனை ஊர் மக்கள் சுவர்க்கவாதியென்றே சொல்வார்கள். ஆனால் அவனின் கல்பில் – உள்ளத்திலிருந்து எல்லாத் தீக்குணங்களும் வெளியேறினாலுங் கூட “அன்னிய்யத்” என்ற நானெனும் உணர்வு (நான் என்ற மமதை அல்ல) ஒரு மண்ணளவேனும் இருக்குமாயின் அவன் விசுவாசவியின் – முஸ்லிமின் உருவத்தில் வாழும் முழு “முஷ்ரிக்” ஆவான் என்பதில் ஸூபீ மகான்களிடம் கருத்து வேறுபாடே கிடையாது.

ஒருவன் தன்னை இறைவனுக்கு வேறான, அவனைக் கொண்டு நிற்காத தனி “வுஜூத்” உள்ளமையுடையவன் என்று நினைத்தானாயின், உணர்ந்தானாயின் அவன் “முஷ்ரிக்” என்பதில் ஸூபீ மகான்களிடம் இரண்டாம் கருத்துக்கு இடமே கிடையாது. அவன் தொழுதும் பயனில்லை. நெற்றியில் தழும்பு ஏற்படும் வரை தொழுதும் பயனில்லை. எந்த ஒரு நன்மை செய்தும் அவனுக்கு எந்த ஒரு பயனுமில்லை. அவனிடமுள்ள “அன்னிய்யத்” நானெனும் உணர்வு நீங்கி அவனைத் தவிர – அல்லாஹ் தவிர வேறொன்றுமில்லை, தானுமில்லை என்ற முடிவுக்கு அவன் வர வேண்டும்.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments