(தொகுப்பு: மௌலவீ: அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)
இலங்கை வாழ் “முல்லா மகான்களில்” விழி கண் குருடான சிலர் இஸ்லாமிய “தஸவ்வுப்” ஸூபிஸம் பேசிய எனக்கும், அதை ஏற்றுக் கொண்ட உலகம் வாழ் பல இலட்சம் முஸ்லிம்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்களென்று வழங்கிய தீர்ப்பு மார்க்கத்திற்கும், நீதிக்கும் முற்றிலும் முரணான தீர்ப்பாகும்.
இமாம் மன்ஸூர் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் இறை போதை தலைக்கேறி “அனல்ஹக்” நானே மெய்ப்பொருள் – நானே அல்லாஹ் – என்றார்கள். அவர்கள் மீது பொறாமை கொண்ட முல்லாக்கள் அவர்களைக் “காபிர்” என்று கூறி சித்திரவதை செய்து கொன்றார்கள். அவரை மட்டுமே அவ்வாறு கூறினார்களேயன்றி அவர்களைக் குருவாக ஏற்றுக் கொண்டிருந்த மற்றவர்களை அவ்வாறு சொல்லவுமில்லை. அவர்களைக் கொல்லவுமில்லை.
ஆனால் இலங்கை வாழ் முல்லாக்களில் மனக் கண்ணும், முகக் கண்ணும் குருடானோர் மட்டுமே என்னையும், எனது கருத்தைச் சரி கண்டவர்களையும் கொன்றொழிக்க வேண்டுமென்று பகிரங்கமாகக் கூறினார்கள். இதனால்தான் இவர்களின் தீர்ப்பு கிண்ணஸ் புத்தகத்தில் பதிய வேண்டிய ஒன்றென்று கூறினேன்.
இந்த முல்லா மகான்கள் தம்மை இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டாலும் இவர்கள் அஷ்அரீ அவர்களைப் புரிந்து கொள்ளவுமில்லை. அவர்களின் கொள்கையைத் தெரிந்து கொள்ளவுமில்லை.
இமாம் அஷ்அரீ அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பின்வரும் வரிகளை வாசித்து இவர்கள் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ونقل الشيخ أبو طاهر القَزْوِيْنِيْ فى كتابه ‘ سِرَاجِ الْعُقُوْلِ ‘ عن أحمد بن زاهر السَّرْخَسِيِّ اَجَلِّ أصحابِ الشَّيْخِ أبى الحسن الأشعري رحمه الله تعالى: لَمَّا حَضَرَتِ الشَّيْخَ أبا الحسن الأشعري الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لِيْ اِجْمَعْ أَصْحَابِيْ، فَجَمَعْتُهُمْ فقال لنا اِشْهَدُوْا على أَنِّيْ لا اَقُوْلُ بِتَكْفِيْرِ اَحَدٍ مِنْ عَوَامِّ أهل القبلةِ، لِأَنِّيْ رَأَيْتُهُمْ كُلَّهُمْ يُشِيْرُوْنَ إِلَى مَعْبُوْدٍ وَاحِدٍ، وَالْإِسْلَامُ يَشْمَلُهُمْ وَيَعُمُّهُمْ، (اليواقيت والجواهر، الأوّل، ص 21)
அஷ் ஷெய்கு அபூதாஹிர் அல்கஸ்வீனி றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஸிறாஜுல் உகூல்” என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மிக நெருங்கிய தோழர் அஹ்மத் இப்னு ஸாஹிர் அஸ்ஸர்கஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
பக்தாத் நகரிலிருந்த எனது வீட்டுக்கு அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் வந்த சமயம் அவர்களுக்கு மரண வருத்தம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் என்னிடம், இங்குள்ள எனது தோழர்கள் அனைவரையும் ஒன்று கூட்டித் தாருங்கள் என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். தோழர்கள் அனைவரும் ஒன்று கூடிய பின் இமாம் அவர்கள் அவர்களிடம், (நான் முஸ்லிம்களில் பொது மக்களில் எவரையும் “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்லவுமில்லை. அவ்வாறு “பத்வா” மார்க்கத் தீர்ப்புக் கூறவுமில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் வணங்கப்படுகின்றவன் ஒருவனென்றே நம்பியுள்ளார்கள். இஸ்லாம் என்பது அவர்கள் அனைவரையும் உள்வாங்கிக் கொள்ளும் என்று கூறி இதற்கு நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள்) என்று கூறினார்கள்.
(அல்யவாகீத் வல்ஜவாஹிர், பாகம் 01, பக்கம் 21, ஆசிரியர் – அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ)
மரணப்படுக்கையில் இருந்த நிலையிலும் கூட இமாம் அவர்கள் இவ்வாறு சொன்னதற்கான காரணம் என்னவெனில் ஒரு முஸ்லிமை “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்வதும், “பத்வா” வழங்குவதும் பெருங்குற்றச் செயலாதலால் அத்தகைய ஒரு பாவத்தை தான் செய்யவில்லை என்பதை தோழர்களுக்குச் சொல்வதற்காகவும், அவ்வாறான பாவச் செயலை எவரும் செய்யக் கூடாதென்று மற்றவர்களை குறிப்பாக அரை வேக்காடுகளை எச்சரிப்பதற்காகவுமேயாகும்.
உலகில் வாழ்கின்ற “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகள் அனைவரும் எந்தவொரு கருத்து வேறுபாடுமின்றி ஏற்றுக் கொண்ட இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “அகீதா” கொள்கையின் இமாமாக இருந்தும் கூட தங்களின் வாழ்க்கையில் எவருக்கும் “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்லவுமில்லை, “பத்வா” வழங்கவுமில்லை என்று கூறியுள்ளார்களென்றால் ஒரு முஸ்லிமை காபிராக்கும் விடயத்தில் எந்த அளவு பேணுதலுள்ளவர்களாகவும், “தக்வா” இறையச்சமுள்ளவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதை இந்த முல்லா மகான்கள் அறியாமலிருப்பது இவர்களின் “ஜஹாலத் – ஹமாகத்” என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
எனக்கும், உலகில் வாழ்கின்ற ஸூபிஸ ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” என்று “பத்வா” வழங்கிய முல்லா மகான்கள் அஷ்அரீ அவர்களின் கூற்றை அறியாதிருப்பது சிந்திக்கவும், சிரிக்கவும் வேண்டிய ஒரு விடயமாகும்.
ஸூபிஸ ஞானத்தின் சாரமான “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பான கருத்துக்களை நான் பேசியிருக்கின்ற நிலையில் அதை (ஹுலூல் இத்திஹாத்) என்று தமது அறியாமையாலும், பேதமையாலும் தவறாக விளங்கிக் கொண்ட, அல்லது என்மீது கொண்ட பொறாமையினால் அவ்வாறு நடந்த முல்லா மகான்கள் எனக்கு “முர்தத்” முடிச்சுப் போட்டிருப்பது அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஐ உரிய முறையில் விளங்கிக் கொள்ளவில்லை என்பதற்கான பகிரங்க ஆதாரமாகும். இதன் மூலம் இந்த முல்லா மகான்கள் என்னுடைய விவகாரத்தின் பிறகுதான் “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல்லைக் கூட கேள்விப்பட்டிருப்பார்கள் என்று எண்ணத் தோணுகிறது.
“வஹ்ததுல் வுஜூத்” என்றால் உள்ளமை ஒன்றென்பதே அதன் சுருக்கம். இன்னும் தெளிவாகச் சொல்வதாயின் அல்லாஹ் ஒருவன் என்பதே அதன் சுருக்கமாகும். இதுவே வடித்தெடுத்த சாரம். இத் தத்துவமே இஸ்லாமிய தத்துவம். இதற்கு மாறாக உள்ளமை இரண்டென்று அல்லது பலதென்று ஒருவன் சொன்னால் அல்லது நம்பினால் அவன் எதார்த்தத்தில் அல்லாஹ் இருவரென்று அல்லது பலரென்று சொன்ன “முஷ்ரிக்” இணை வைத்தவனேயாவான். இதில் இரண்டாம் கருத்துக்கோ, மீழாய்வு செய்வதற்கோ இடமில்லை.
“வஹ்தத்” என்றால் ஒன்று. “வுஜூத்” என்றால் உள்ளமை அல்லது மெய்ப் பொருள். இவ்விரு சொற்களையும் சேர்த்தால் “வஹ்ததுல் வுஜூத்” என்று வரும். இதன் பொருள்தான் உள்ளமை ஒன்று அல்லது மெய்ப் பொருள் ஒன்று, அல்லாஹ் ஒருவன் என்பதாகும். இதுவே இஸ்லாம் கூறும் அடிப்படைத் தத்துவம்.
முல்லா மகான்கள் வழங்கிய தீர்ப்பு திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு வழங்கியதுமல்ல. ஹதீதை ஆதாரமாகக் கொண்டு வழங்கியதுமல்ல. அது அவர்களின் “ஹவா” என்ற மனோ இச்சை கொண்டும், பொறாமை கொண்டும் வழங்கப்பட்டதாகும்.
இஸ்லாமிய தீர்ப்பு என்பது மேற்கண்ட இரண்டு ஆதாரங்களையும் மற்றும் “இஜ்மாஉ, கியாஸ்” என்பவற்றையும் ஆதாரங்களாகக் கொண்டு வழங்கப்படுகின்ற ஒன்றேயன்றி ஒருவன் தனது சிந்தனை கொண்டும், ஆய்வு கொண்டும் வழங்குகின்ற ஒன்றல்ல.
قال الإمام ابن حجر رحمه الله فى الصفحة التاسعة والثلاثين من الفتاوى الحديثيّة، وَمِنْهَا: مَا صرح بِهِ أَئِمَّتنَا كالرافعي فِي الْعَزِيز وَالنَّوَوِيّ فِي (الرَّوْضَة) و (الْمَجْمُوع) وَغَيرهمَا من أَن الْمُفْتِي إِذا سُئِلَ عَن لفظ يحْتَمل الْكفْر وَغَيره لَا يَقُول هُوَ مهدر الدَّم أَو مباحه أَو يقتل أَو نَحْو ذَلِك، بل يَقُول يسئل عَن مُرَاده فَإِن فسره بِشَيْء عمل بِهِ،
இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் பதாவல் ஹதீதிய்யா” என்ற நூல் 39ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
இமாம்களான றாபியீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்அஸீஸ்” என்ற நூலிலும், இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “றவ்ழா” மற்றும் “மஜ்மூஉ” என்ற நூல்களிலும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
ஒரு “முப்தீ”யிடம் – தீர்ப்பு வழங்குபவரிடம் – ஒருவன் சொன்ன ஒரு சொல் பற்றியோ, ஒருவன் பேசிய பேச்சு பற்றியோ கேட்கப்பட்டால், அந்தச் சொல் அல்லது அந்தப் பேச்சு “குப்ர்” என்ற நிராகரிப்புக்கும், வேறு நல்ல கருத்துக்கும் சாத்தியமானதாயிருக்கும் நிலையில் கேட்கப்பட்டால் அவர் அவனைக் கொலை செய்ய வேண்டும், அவனைக் கொல்வது ஆகும், அல்லது அவனை வெட்டலாம் என்றோ சொல்வது கூடாது. எனினும் அவனிடம் அவன் சொன்ன சொல்லுக்குரிய அல்லது அவன் பேசிய பேச்சுக்குரிய விளக்கம் பற்றிக் கேட்க வேண்டும். அவன் சொல்கின்ற பதிலையும், விளக்கத்தையும் ஆய்வு செய்துதான் ஏதாவது ஒரு முடிவு செய்ய வேண்டும்.
(அல்பதாவல் ஹதீதிய்யா, பக்கம் – 39, ஆசிரியர் – இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ்)
இதன் சுருக்கம் என்னவெனில் யாராவது ஒருவன் “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்துவதற்கும், வேறு நல்ல கருத்துக்கும் சாத்தியமான ஒரு சொல்லைச் சொன்னால், அல்லது ஒரு பேச்சைப் பேசினால் சொன்னவனிடம் அல்லது பேசினவனிடம் அது பற்றி விளக்கம் ஒன்றும் கேட்காமல் அவனைக் கொலை செய்யலாம் என்று சொல்வது கூடாது. அவனிடம் விளக்கம் கேட்டு அவன் கூறும் விளக்கத்தை கொண்டே அவனுக்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.
ஓர் உதாரணம் கூறுகின்றேன். காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஸெய்யித் ஸெய்ன் மௌலானா பள்ளிவாயல் முன்றலில் மீலாத் விழா ஒன்று நடைபெற்றது. காலம் நினைவில் இல்லை. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். அந்த விழாவுக்கு பிரதம பேச்சாளர்களாக என்னையும், சம்மாந்துறை கவிஞர் ஈழ மேகம் பகீர் தம்பி அவர்களையும் அழைத்திருந்தார்கள்.
அவ்விழாவில் சற்று நேரம் கவி நடையில் பேசிய கவிஞர் ஈழ மேகம் அவர்கள், “அல்லாஹ்வின் தலையில் மண்ணள்ளிப் போடுறான்” என்று ஒரு வசனம் சொன்னார். எனக்குப் பக்கத்திலிருந்த ஒரு மௌலவீ “இவரைப் பேச விட வேண்டாம்” என்று எழுதி தலைவருக்குக் கொடுத்தார். தலைவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். அவரை நிறுத்த வேண்டாமென்று ஜாடை செய்தேன். இதைக் கண்ட மௌலவீ மகான் மேடையிலிருந்து எழுந்து சென்றார். அதன் பிறகு பேசிய நான் ஈழ மேகத்தின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்தேன். அவ்விளக்கத்தின் போது மேலே நான் எழுதிக் காட்டிய இமாம்களான றாபிஈ, நவவீ றஹிமஹுமல்லாஹ் ஆகியோரின் ஆதாரங்களோடு வேறு பல ஆதாரங்களும் கூறி விளக்கி வைத்தேன். ஈழ மேகம் எழுந்து வந்து என் நெற்றி முத்தி வாழ்த்தினார்.
திருக்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் இவ்வாறான வசனங்கள் வருகின்றன. அவற்றை ஓதுவதால் மட்டும் ஒருவரை காபிர் அல்லது முர்தத் என்று சொல்வதாயின் திருக்குர்ஆன் ஓதுகின்ற அனைவரையும் காபிர்கள், முர்தத்துகள் என்றே சொல்ல வேண்டும்.
திருக்குர்ஆனின் பல இடங்களில் படைப்புகளுக்குரிய தன்மைகளைக் கொண்டு அல்லாஹ் வர்ணிக்கப்பட்டுள்ளான். உதாரணமாக திருக்குர்ஆனில் وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا உங்கள் இறைவனும், மலக்குகளும் அணியணியாக வந்தனர் என்று கூறியுள்ளான். (89-22) இன்னுமொரு வசனத்தில் مَا مَنَعَكَ أَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ எனது இரு கைகளாலும் நான் படைத்ததற்கு “ஸுஜூத்” செய்வதற்கு உன்னைத் தடுத்தது எது என்று இப்லீஸ் என்பவனிடம் கேட்டான். (38-75) இன்னுமொரு வசனத்தில் يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ அல்லாஹ்வின் கை அவர்களின் கைகளுக்கு மேல் உள்ளது. (48-10)
இன்னுமிதேபோல் ஹதீதுகளிலும் வந்துள்ளது. உதாரணமாக يَدُ اللهِ مَلْأَى அல்லாஹ்வின் கை நிரம்பியுள்ளது (புகாரீ 4684)
إِنَّ اللَّهَ يَقْبِضُ يَوْمَ القِيَامَةِ الأَرْضَ، وَتَكُونُ السَّمَوَاتُ بِيَمِينِهِ،
நிச்சயமாக அல்லாஹ் பூமியை தனது கையால் பொத்திக் கொள்வான். வானங்கள் எல்லாம் அவனின் வலக் கையில் இருக்கும். (புகாரீ – 7412)
فَتَقُولُ: هَلْ مِنْ مَزِيدٍ، ثَلاَثًا، حَتَّى يَضَعَ فِيهَا قَدَمَهُ فَتَمْتَلِئُ، وَيُرَدُّ بَعْضُهَا إِلَى بَعْضٍ، وَتَقُولُ: قَطْ قَطْ قَطْ ‘
இது நீண்ட ஹதீதின் ஒரு பகுதி. இத்தலைப்புக்குத் தேவையானதை மட்டும் இங்கு எழுதியுள்ளேன். இதன் சுருக்கத்தை தருகிறேன்.
நரகத்துக்குரியவர்களை அல்லாஹ் அதில் போட்டுக் கொண்டே இருப்பான். அந்த நரகம் இன்னும் ஆட்கள் உள்ளார்களா? என்று இடையிடையே கேட்டுக் கொண்டே இருக்கும். அவ்வேளை அல்லாஹ் தனது கால் பாதத்தை நரகில் வைப்பான். அவ்வேளை அது நிரம்பிவிடும். அதன் பின் அது போதும், போதும், போதும் என்று மூன்று தரம் சொல்லும். (புகாரீ 7449)
மேற்கண்ட வசனங்கள் திருக்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் வந்த வசனங்களாகும்.
இவற்றை வாயால் சொல்பவர்கள் அனைவரும் (முல்லா மகான்கள் சொல்வது போல்) காபிராகிவிடுவார்களாயின் திருக்குர்ஆனையும், ஹதீதுகளையும் ஓதுகின்ற அனைவரும் காபிராகியே விடுவார்கள். காபிர், முர்தத் என்று “பத்வா” வழங்கிய முல்லா மகான்களும் கூட காபிர்களாகியேவிடுவார்கள். இவ்வடிப்படையில் அல்லாஹ்வும், றஸூலும் யார்? முல்லா மகான்கள் விடை கூற வேண்டும்.
எனவே, எந்த ஒரு முஸ்லிமாயினும் அல்லாஹ்வின் விடயத்தில் வித்தியாசமான எந்த ஒரு கருத்தைக் கூறினாலும், அல்லது எந்த ஒரு வசனத்தைச் சொன்னாலும் அவனிடம் விளக்கம் கேட்டு அவன் தரும் விளக்கம் திருக்குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணாக இருந்தால் மட்டுமே அவனுக்குரிய தீர்ப்பு வழங்க வேண்டும்.
முஸ்லிம் சகோதர, சகோதரிகள் சாதாரணமாகப் பேசும் போது கூட எல்லாம் அல்லாஹ்வின் கையிலுள்ளதென்றும், அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கின்றான் என்றும், மக்கா நகரிலுள்ள “கஃபா”வை بَيْتُ اللهِ அல்லாஹ்வின் வீடு என்றும் சொல்வதை நாம் கேட்கிறோம்.
இதனால் அல்லாஹ்வுக்கு கை உள்ளதென்றும், கண் உள்ளதென்றும், காதுள்ளதென்றும், கஃபாவில் அல்லாஹ் இருக்கின்றான் என்றும் ஒருவன் சொல்லிவிட்டானாகையால் அவன் காபிர் ஆகிவிட்டான் அல்லது முர்தத் ஆகிவிட்டான் என்று “பத்வா” வழங்குதல் முட்டாள்தனம் என்று சொல்வதை விட பைத்தியம் என்று சொல்வதே பொருத்தமானதென்று நான் நினைக்கிறேன்.
எனவே, எவர் அல்லாஹ்வின் விடயத்தில் வித்தியாசமான எந்த ஒரு சொல்லை, அல்லது எந்த ஒரு வசனத்தை, அல்லது எந்த ஒரு கருத்தைச் சொன்னாலும் சொன்னவனிடம் அதற்கான விளக்கத்தை கேட்டறிந்த பின்புதான் அவனுக்குப் பொருத்தமான தீர்ப்பு வழங்க வேண்டும். சொன்னவனை விசாரிக்காமல் அவனுக்கு தீர்ப்பு வழங்குதல் பெருங்குற்றமாகும். இக்குற்றத்திற்கு துணையாக இருந்தவர்களும் குற்றவாளிகள்தான்.
“இல்முல் அகீதா” கொள்கை, கோட்பாட்டின் “இமாம்” என்று உலகப் பிரசித்தி பெற்றவர்களும், “ஸுன்னத் வல்ஜமாஅத்” கொள்கை மக்களால் பின்பற்றப்படுகின்றவர்களுமான இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ அவர்களின் இறுதியுபதேசத்தைக் கருத்திற் கொள்ளாமலும், அவர்களின் வழியைப் பின்பற்றாமலும், முல்லா மகான்கள் குற்றவாளி என்று நினைக்கின்ற என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமலும், நான் பேசிய கருத்துக்களுக்கான விளக்கத்தை என்னிடம் கேட்காமலும் முல்லா மகான்களில் ஒரு சிலர் ஒன்று கூடி தமது மனம் போன போக்கில் தீர்ப்பு வழங்கிய இந்த முல்லா மகான்களை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டியவர்களேயாவர். இதற்கான நேர காலம் வெகு தொலைவில் இல்லை.
“பத்வா” வழங்கிய முல்லா மகான்கள், காத்தான்குடி முல்லா மகான்களின் “வைன்” விசை கொடுத்து திருகிவிடுவதால் இயங்கும் “ப்லாஸ்டிக்” பொம்மைகளானதே இந்த “பத்வா”வுக்கு காரணமாகும்.
“முர்தத்” மதம் மாறியவர்கள் என்று மட்டும் “பத்வா” தீர்ப்பு வழங்குவதால் தமது இலட்சியம் நிறைவேறாதென்பதையறிந்த நரித்தந்திரமுள்ள முல்லாக்கள் என்னையும், எனது கருத்தைச் சரிகண்டவர்களையும் கொலை செய்ய வேண்டுமென்று தீர்ப்பு வழங்கிவிட்டார்கள். அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்கிய முல்லா மகான்கள் இன்று கைசேதப்பட்டு தப்பிக் கொள்வதற்கு வழி தேடி சட்டத்தரணிகளின் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருக்கின்றார்கள். எந்த சட்டத்தரணி எவ்வாறு வாதாடினாலும் அல்லாஹ் என்ற நீதிவானிடம் எடுபடாது. وهو أحكم الحاكمين அவனே நீதிவான்.
முல்லா மகான்கள் “பத்வா”வில் தில்லுமுல்லுச் செய்துள்ளார்கள். முல்லா மகான்களின் “பத்வா”வின் பெயர் அறபியில் اَلتَّدْسِيْسُ عَلَى التَّوْحِيْدِ என்பதாகும். தமிழில் “ஏகத்துவத்தில் ஊடுருவல்” என்பதாகும். இவர்கள் ஊடுருவல் செய்துள்ளது உண்மையா? இல்லையா? என்பதை அறிய விரும்புவோர் இரத்த நிற அட்டையுள்ள அவர்களின் புத்தகத்தை பார்க்க வேண்டும். இரத்த நிறத்தை இவர்கள் தமது “பத்வா”வுக்கு தெரிவு செய்ததிலுள்ள இரகசியம் புரிகிறதல்லவா?
அறபும், அதன் தமிழாக்கமும் உள்ள அந்த “பத்வா” புத்தகம் அறபுப் பகுதியில் எந்த ஓர் இடத்திலும் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் தமிழ் மொழியாக்கப் பகுதியில் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அறபியில் இல்லாத ஒன்று தமிழ் மொழிபெயர்ப்பில் எவ்வாறு வந்ததோ?
ذهب عبد الله إلى السوق இந்த அறபு வசனத்திற்கு “அப்துல்லாஹ் கடைத் தெருவுக்குச் சென்றான்” என்று மட்டுமே பொருள் வரும். அப்துல்லாஹ் கடைத்தெருவுக்கு ஆட்டிறைச்சி வாங்குவதற்காகச் சென்றான் என்று பொருள் வராது. வந்தால் அது பிழைதான். யாராவது இவ்வாறு மொழி பெயர்த்தால் அவர் தவறுதலாக மொழி பெயர்த்திருக்கலாம், அல்லது ஏதோ ஒரு தந்திரத்தை மனதில் வைத்துக் கொண்டு அவ்வாறு மொழிபெர்த்திருக்கலாம்.
“பத்வா”வை மொழி பெயர்த்தவர் தவறுதலாக மொழி பெயர்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் அகில இலங்கை ஜமஇய்யதுல் உலமா ஓர் اَحْمَقْ -அஹ்மக்- பச்சப் பேயனிடம் கொடுத்து மொழி பெயர்த்திருக்காது. திறமையுள்ள ஒருவர்தான் மொழிபெயர்த்திருப்பார். அவர் No 01 வஹ்ஹாபியாகவும், எனது கடும் விரோதியாகவும் இருந்திருப்பார். இதனால் எனது பெயரைக் குறிப்பிட்டு என்னை அவமானப்படுத்த நினைத்திருப்பார்.
அறபியில் مَا تَقُوْلُ فِى رَجُلٍ ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்றுதான் கேள்வி தொடங்கப்பட்டுள்ளது. என்னுடைய பெயர் கூறப்படவில்லை. மொழிபெயர்ப்பில் எனது பெயர் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல. தமிழ் மொழியாக்கம் முன் பக்கத்தில் பின்வரும் அமைப்பில் எனது பெயர் கூறப்பட்டுள்ளது. அறபுப் பகுதியில் இந்த அமைப்பில் எனது பெயர் கூறப்படவில்லை. வேறு எந்த அமைப்பிலும் கூறப்படவில்லை.
******************************************************
காத்தான்குடி றஊப் மௌலவீ போன்றோரின் மார்க்க விரோத
கருத்துக்கள் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
வழங்கிய
பத்வா
மார்க்கத்தீர்ப்பு
******************************************************
கேள்வி என்னவெனில் அறபு மொழியில் இல்லாத ஒரு கருத்து தமிழ் மொழிபெயர்ப்பில் எவ்வாறு வந்தது? என்பதேயாகும்.
இந்த வேலை இருட்டடிப்பும், தில்லுமுல்லுமா இல்லையா?
குறிப்பு: ஒரே நாளில் முல்லா மகான்கள் கூடி எனக்கு உடறட மெனிகா, றுஹுனு குமாரி வேகத்தில் “பத்வா” வழங்கிய முல்லா மகான்கள் கௌரவத்திற்குரிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அல்லாமா ரிஸ்வீ முப்தீ அவர்கள் வெசாக் தினத்தன்று விகாரைக்குச் சென்று கையில் வெசாக் விளக்கேற்றி நின்றாரே! பல மாதங்கள் கடந்தும் இவருக்கு “பத்வா” வழங்கப்படாமல் இருப்பதற்கான இரகசியம் என்ன?
كيف يُفتى المُفتى من أطلق الألفاظ المُحتملةَ للكفر وغيره أو من ذكر المعاني المحتملة لهما بأنّه مرتدّ عن دين الإسلام أو كان كافرا من غير سؤال عن مراد الألفاظ التي قالها والمعاني التي أظهرها؟ فإن كان الإفتاء بالردّة جائزا لمن أطلق الألفاظ المحتملة للوجهين ولمن أظهر المعاني المحتملة لهما جاز أن يفتي لمن كان يقرأ القرآن ولمن يقرأ الأحاديث التي فيها الألفاظ المحتملة للوجهين، وقد كان الشّيخ قطب الزمان محي الدين عبد القادر الجيلاني رضي الله عنه وأبو حامد الغزّالي رضي الله عنه قد أنكرا على من أفتَى المنصور الحلاج رضي الله عنه بالردّة مع كونه مِمّن صرّح بأنّه الحقُّ، وإن كان الإفتاء للمنصور بردّته خطأً، فكيف يجوز إفتاء من أطلق الألفاظَ المحتملةَ للكفر وغيره ، ومن أطلق المعاني المحتملةَ لهما؟ سبحان الله هذا بهتان عظيم، وظلم كبير، وتعذيب لقلوب المؤمنين الموحدين المخلصين، والمُفتي وأعوانُه كلّهم معاقبون فى قُبورهم بعقاب شديد، ومُعلّقون بألسِنتهم كما يُعلّق فى دكان الجزّار،
أما قرع آذان المفتى وأعوانه الوهّابيّين الحاسدين ما قال قطب الوجود حجّة الإسلام محمد الغزّاي فى كتابه ‘مشكاة الأنوار ومصفاة الأسرار ‘ فصلا مطوّلا فى أمر الفاني فى الله حُسين منصور الحلّاج رحمه الله واعتذر عن إطلاقاته كقوله أنا الحقّ وما فى الجبّة إلّا الله، وحمَمَلها كلّها على محامِلَ حسنةٍ، وقال هذا من فرط المحبّة وشِدّة الوجد، وهو مثل قول القائل أنا من أهوى ومَن أهوى أنا فإذا أبصـرته أبصـرتنا، وحسبكم هذا مِدحة وتزكية، وكان ابن شُريح إذا سُئل عنه يقول هذا رجلٌ خَفِيَ عليّ حالُه، وما أقول فيه، وهذا شبيهٌ بكلام عمر بن عبد العزيز رحمه الله، وقد سُئل عن عليّ ومعاوية رضي الله عنهما فقال ‘دِماءٌ طهَّرَ الله منها سُيوفَنا أفلا نُطهِّر من الخوض فيهم ألسِنَتَنَا ‘
وهذا ينبغي لمن يخاف الله أن لا يكفّر أحدا من أهل القبلة – المسلمين – بكلام يصدر منه ويحتمل التأويل على الحق والباطل،
கடந்த பதிவுகளில் இத்தலைப்பில் நான் எழுதிய விடயங்களை வாசித்தவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “புத்வா” குழு செய்துள்ள இருட்டடிப்புகளையும், தில்லுமுல்லுகளையும் அறிந்திருப்பார்கள்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பது அல்லாஹ்வின் வேதமல்ல. அவர்கள் சொல்வதெல்லாம் சரியென்று கொள்வதற்கும், அவர்களுக்கு அனைத்து மக்களும் சரணடைந்துதான் ஆக வேண்டுமென்பதற்கும் அவர்கள் நபீமாருமல்ல, இமாம்களுமல்ல. குறைந்தபட்சம் நீதியுள்ளவர்களுமல்ல.
தலைவரும், உப தலைவரும் முழுமையான வஹ்ஹாபிகளாக உள்ளனர். அதேபோல் அதன் நிர்வாக உறுப்பினர்களிற் பலரும் வஹ்ஹாபிகளாகவே உள்ளனர். ஸுன்னீகள் ஒரு சிலர் இருந்தாலும் கூட அவர்களால் மற்றவர்களுக்கு எதிராக வாய் திறக்க முடியாத நிலையில் உள்ளனர்.
பு(ப)த்துவாய்க்குழு ஒரு விடயத்திற்கு தீர்க்கமான முடிவொன்றைக் கூறாமல் ஒவ்வொரு வாயாலும் ஒவ்வொரு முடிவைச் சொல்லிக் கொன்டிருக்கிறது.
“தறாவீஹ்” தொழுகை இருபது “றக்அத்”துக்களா? எட்டு “றக்அத்”துக்களா? என்ற சர்ச்சை பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு முல்லா மகான்கன் இதுவரை தீர்க்கமான முடிவொன்றும் கூறாமலேயே காலம் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இருபது தொழ விரும்பினவர்கள் இருபது தொழலாம், எட்டு தொழ விரும்பினவர்கள் எட்டு தொழலாம் என்பது மார்க்கச் சட்டமுமல்ல, மார்க்க “பத்வா”வுமல்ல. அது ஒரு வகை தாளிப்பு. கறி தாளிப்புக்கும் முறையுண்டு. அது கெட்டால் அது சமாளிப்பேயன்றித் தாளிப்பாகாது.
பாங்கு சொல்லு முன் “ஸலவாத்” சொல்ல வேண்டுமா? சொல்லக் கூடாதா? எது சரி? எது பிழை? என்ற சர்ச்சை பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. இதுவரை அதற்குக் கூட ஒரு தீர்க்கமான முடிவில்லை. முல்லா மகான்களால் அதற்கு சரியான முடிவு சொல்ல முடியாதுள்ளது. இதற்குக் காரணம் உலமா சபை கலவன் சபையாக இருப்பதேயாகும். ஏனெனில் அதிலுள்ள ஸுன்னீ உறுப்பினர் சொல்ல வேண்டுமென்பார். வஹ்ஹாபீ உறுப்பினர் கூடாது என்பார். கோட்டைக்குள்ளேயே யுத்தம் மூளும். இதனால்தானோ என்னவோ ரிஸ்வீ சேர் அவர்கள் சமாளித்துக் கொண்டும், தாளிச்சிக் கொண்டும் காய் நகர்த்துகிறார். அவர்தான் என்ன செய்வார்? அவரும் இருமுகத்தோடும், இரு நாவோடும்தானே உள்ளார்.
வலீமாரின் விஷேட நிகழ்வுகள் எங்கு நடைபெறாது போனாலும் கொழும்பு ஜம்இய்யதுல் உலமா அரண்மனையிலும், மற்றும் நாட்டிலுள்ள ஜம்இய்யதுல் உலமா கட்டடங்களிலுமே நடைபெற வேண்டும். இதேபோல் எங்கு மீலாத் விழா நடைபெறாது போனாலும் அங்குதான் நடைபெற வேண்டும். இதுகாலவரை ஏதாவது நடைபெற்றுள்ளதா? வரலாறுண்டா? இது சிந்திக்க வேண்டும். இதற்கு காரணம் உலமா சபைகளில் அதிகமானவை கலப்பு உலமா சபைகளாக இருப்பதேயாகும்.
இந்நாட்டில் கலப்பு உலமா சபைகள் இருப்பதினால்தான் மார்க்கச் சட்டங்கள் தீர்க்கமான முடிவெடுத்து சொல்லப்பட முடியாதுள்ளது.
எனவே, ஸுன்னீகளுக்கென்று தனியான உலமா சபைகளும், மற்றவர்களுக்கென்று தனியான உலமா சபைகளுமிருந்தால் எந்தவொரு பிரச்சினையும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படுவதற்கு வழியே இல்லாமலாகிவிடும். பன்றியின் இறைச்சி முதல் அதன் எந்த உறுப்பும் சாப்பிடக் கூடாதென்று ஸுன்னீகள் சொல்வார்கள். அதன் இறைச்சிதான் சாப்பிடக் கூடாதேயன்றி அதன் ஏனைய பாகங்களைச் சாப்பிடலாம் என்று PJ அவர்களும், வஹ்ஹாபிகளும் சொல்வார்கள். சொல்வது மட்டுமல்ல. வயிறு புடைக்கச் சாப்பிட்டு ஏப்பமும் விடுவார்கள். அதோடு முஸ்லிம் ஊர்களிலும் பன்றி இறைச்சிக் கடைகள் போட்டி போட்டுத் திறக்கப்படும். இதேபோல் ஸுன்னீ கொள்கையுள்ள செல்வந்தர்கள் ஒவ்வொரு வருடமும் “ஸகாத்” கொடுப்பார்கள். மற்றவர்கள் வாழ்நாளில் ஒரு தரம் மட்டும் கொடுப்பார்கள். இதனால் ஏழைகளின் சாபத்தைப் பெற்று அவர்கள் செத்திறந்து போவார்கள்.
ஸுன்னீகள் திருக்குர்ஆனை “வுழூ” என்ற சுத்தம் செய்துவிட்டுத் தொடுவார்கள். மற்றவர்கள் மனைவியை “தக்பீல்” செய்துவிட்டு திருக்குர்ஆனைத் தொடுவார்கள். குழியலறை சென்று மல சலம் கழித்துவிட்டு “வுழூ” செய்யாமலேயே திருக்குர்ஆன் பிரதியைத் தொடுவார்கள். ஸுன்னீகள் தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் வணக்கங்கள் உள்ளிட்ட அனைத்து வணக்கங்களுக்கும் “நிய்யத்” உண்டு என்றும் சொல்வார்கள். “நிய்யத்” வைக்காமல் எந்தவொரு முக்கிய வணக்கமும் செய்யவுமாட்டார்கள். ஸுன்னீகள் ஜனாஸாவை நல்லடக்கம் செய்துவிட்டு தல்கீன், துஆ ஓதி “ஸலவாத்” கூறிக் கலைவார்கள். மற்றவர்கள் செத்த நாயையும், பூனையையும் மடுத் தோண்டிப் புதைப்பது போல் புதைப்பார்கள். ஸுன்னீகள் அவ்லியாஉகள் பேரில் மௌலித் ஓதி உலமாஉகளுக்கு உதவி செய்து அவர்களை கண்ணியப்படுத்துவார்கள். ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்குவார்கள். மற்றவர்கள் இவையெல்லாம் “ஷிர்க்” என்று சீறிப்பாய்வார்கள். ஸுன்னீகள் அவ்லியாஉகள் பேரால் வழங்கப்படுகின்ற “தபர்றுக்”, நார்ஸா போன்றவற்றை தலைமேல் சுமந்து சென்று மனைவி மக்களுக்கும், அயலவர்களுக்கும் கொடுத்து கண்ணியப்படுத்துவார்கள். மற்றவர்கள் மடுவெட்டி தமது ஜனாஸாக்களைப் புதைப்பது போல் புதைப்பார்கள். ஸுன்னீகள் “திக்ர்” செய்யும் போது தலையையும், உடலையும் அசைத்து “திக்ர்” செய்வார்கள். மற்றவர்கள் பே ஓணான் போலும், சிலைகள் போலும் ஆடாமலும், அசையாமலும் இருப்பார்கள். ஸுன்னீகள் உலமாஉகள், உஸ்தாதுமார்கள், ஷெய்குமார்கள், வயோதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களைக் கண்டால் எழுந்து நிற்பார்கள். அவர்களின் கை, நெற்றி முதலானவற்றை முத்தமிட்டு அருள் பெறுவார்கள். மற்றவர்கள் மேற்கண்டவர்களைத் தூக்கியெறிந்து நடப்பார்கள். ஸுன்னீகள் திருமண மஜ்லிஸ் – சபைகளிலும், வலீமா விருந்து வைபவங்களிலும் “அதப்” – ஒழுக்கம் பேணி நடப்பார்கள். மற்றவர்கள் ஒருவருக்கொருவர் வாழைத்தோலை எறிந்து விளையாடுவார்கள். ஸுன்னீகள் தொழும் போது தலை மறைப்பார்கள். மற்றவர்கள் அது “பித்அத்” என்று அதை விட்டுவிடுவார்கள்.
ஸுன்னீகள் ஐவேளைத் தொழுகை முடிந்த பின் கூட்டமாயிருந்து தஸ்பீஹ், தஹ்மீத், தக்பீர் எல்லாம் ஓதி 10 தரம் “திக்ர்” செய்து கூட்டு “துஆ”வும் ஓதிக்கலைவார்கள். மற்றவர்கள் தொழுகை முடிந்ததும் பேதிக்கு மருந்து பாவித்தவன் அவசரமாக மல கூடத்திற்குச் செல்வதுபோல் அவசரமாகப் போய்விடுவார்கள். ஸுன்னீகள் ஒரு சபை முடிவில் ஸலவாத் சொல்லிக் கலைவார்கள். மற்றவர்கள் ஸலவாத் சொல்லி முடிவதற்குள் எழுந்து ஸலவாத் சொன்னவர்களை வெட்டும் மாடு பார்ப்பது போல் பார்த்துச் செல்வார்கள். ஸுன்னீகள் மலசல கூடத்துள் பிரவேசிக்கும் போது தலை மறைப்பார்கள். மற்றவர்கள் தலையில் ஒன்றுமில்லாமற் போவார்கள். ஸுன்னீகள் உலமாஉகளிடம் சென்று தண்ணீர் ஓதிக் குடிப்பார்கள். தாயத்தும் கட்டுவார்கள். ஓதியும் – ஊதியும் பார்ப்பார்கள். மற்றவர்கள் இவையெல்லாம் “ஷிர்க்” என்று சொல்வார்கள். ஆயினும் அவர்களிற் சிலர் நோனாவுக்குப் பயந்து தமது குழந்தைகளுக்கு இந்துக்களிடம் சென்று ஊதிப் பார்ப்பார்கள். தாயத்தும் கட்டுவார்கள். இன்னும் சிலர் என்னிடமும் வேஷத்தை மாற்றி வந்து வைத்தியம் செய்வார்கள். ஸுன்னீகள் கந்தூரிச் சோறையும், கறியையும் கண்ணியமாகச் சாப்பிடுவார்கள். அதில் அருள் உண்டு என்றும் சொல்வார்கள். மற்றவர்கள் கந்தூரிச் சோறு “ஹறாம்” என்றும் கந்தூரி இறைச்சி சாப்பிடுவது பன்றி இறைச்சி சாப்பிடுவதற்குச் சமம் என்று ஜும்ஆப் பிரசங்கத்தில் கண்ணீர் ஒப்பாரி வைப்பார்கள். ஆயினும் சோறையும், கறியையும் பெட்டியில் போட்டு எவருக்கும் தெரியாமல் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தால் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி உறங்கும் மனைவியையும், மக்களையும் எழுப்பிக் கொடுப்பார்கள்.
இன்னுமிவை போன்ற பல விடயங்கள் உள்ளன. இவையனைத்திற்கும் காரண கர்த்தாக்கள் சமீப காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வஹ்ஹாபீகளேயாவர். இவர்களை இன்னும் வளரவிடுவது நாட்டுக்கே ஆபத்தாகலாம். இந்த வஹ்ஹாபிகளின் தூர நோக்குச் சிந்தனையற்ற, பரந்து விரிந்த அறிவின்மையாலும், நடவடிக்கையாலும் பின்னொரு காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களாலும், அரசாலும் பல இன்னல்களை எதிர் கொள்ள வேண்டியேற்பட வாய்ப்பு உண்டு.
எனவே, இந்நாட்டில் ஸுன்னீகளுக்கென்று தனியான உலமா சபையும், மற்றவர்களுக்கென்று தனியான உலமா சபையும், அதேபோன்று பள்ளிவாயல்களும் இருக்குமானால் மார்க்க ரீதியான எந்த ஒரு கருத்து வேறுபாடுமின்றி மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழலாம்.
ஸுன்னீகளின் தாகம் ஸுன்னிஸமும், ஸூபிஸமுமே!
குறிப்பு: எனது பதிவுகளில் “முல்லா மகான்கள்” என்று நான் குறிப்பிடுவது எனக்கும், உலகெங்கும் வாழ்கின்ற ஸூபிஸ முஸ்லிம் சமூகத்திற்கும் “முர்தத்” மதம் மாறியவர்களென்று “பத்வா” தீர்ப்பு வழங்கிய முற்றும் கற்றும் முழு மடையர்களை மட்டும் குறிக்குமேயன்றி உலமா சபைக்குப் பயந்து அவர்களின் “பத்வா”வை சரி கண்டவர்கள் போல் நடித்தாலும் கூட மனதால் அதைச் சரி காணாத நற்குணமுள்ள உலமாஉகளைக் குறிக்காது.
“பத்வா” வழங்கிய முல்லா மகான்கள் நீதிக்கு தலை குனியும் வரை எனது எழுதுகோல் உறங்காது.
என்னை ஓர் இலங்கை முஸ்லிமென்று ஏற்றுக் கொண்ட அரசு என்னை முஸ்லிமல்ல என்று கூறும் கூத்தாடிகளுக்கு நடவடிக்கை எடுக்குமா?
எனக்கும், உலகில் வாழும் ஸூபிஸ ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்களென்று முல்லா மகான்கள் வழங்கிய “புத்வா” – புத்துவாயிலுள்ள இருட்டடிப்புகள், தில்லு முல்லுகள் தொடர்பாக தொடரந்து பல பதிவுகள் செய்துள்ளேன். இது எனது 05வது பதிவாகும்.
முல்லா மகான்களின் அறபு “பத்வா” 32 பக்கங்களையும், அதன் மொழியாக்கம் 28 பக்கங்களையும் கொண்ட இரத்த நிற அட்டை போட்ட ஒரு சிறு நூலாகும்.
இந்த “புத்வா” நூல் நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” ஞானம், “குப்ர்”, “ஷிர்க்” என்று எழுதப்பட்ட நூலாகும்.
இந்த “புத்வா” நூலின் எந்த ஓர் இடத்திலாவது நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பிழை என்பதற்கான ஓர் ஆதாரமோ, அல்லது பாதி ஆதாரமோ கூறப்படவில்லை. அதுமட்டுமல்ல. “வஹ்ததுல் வுஜூத்” என்ற வசனம் கூட ஓர் இடத்திலாவது எழுதப்படவுமில்லை. ஒருவர் ஒரு தலைப்பில் ஒரு நூல் எழுதினால் அந்நூலில் பல இடங்களில் அத்தலைப்பிலுள்ள சொல் மாறி மாறி வருவது வழக்கம்.
உதாரணமாக “நப்ஸ் பற்றி ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதினால் அந்நூலின் பல இடங்களில் “நப்ஸ்” என்ற சொல் மாறி மாறி வருவது போன்று.
ஆனால் நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” தலைப்பிற்கு எதிராக எழுதப்பட்ட நூலில் அச் சொல் ஓர் இடத்தில் கூட கூறப்படாதிருப்பது அந்த மறுப்பு நூல் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு மறுப்பான நூலல்ல என்பதற்கான ஆதாரமாகும்.
அவர்களின் அந்நூல் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழை என்பதற்கு மறுப்பான நூல் என்பதற்கு இச்சொல் அந்நூலில் பல இடங்களில் கூறப்பட்டிருப்பது மறுக்க முடியாத ஓர் ஆதாரமாகும்.
இரண்டு கொள்கைகளுக்குமுள்ள வேறுபாடு தெரியாமற் போனதே இதற்கு காரணமாகும்.
இவ்வாறு நான் எழுதும்போது அப்படியானால் அவர்களின் “புத்வா”வில் என்னதான் எழுதப்பட்டுள்ளதென்று ஓர் அறிஞன் அல்லது ஓர் ஆய்வாளன் கேட்கலாம். அவர்களுக்கு நான் கூறும் பதில் “துறை தெரியாமல் தோணி தொடுக்கப்பட்டுள்ளது” என்பதேயாகும்.
நான் அன்று பேசியதும், இன்றுவரை பேசி வருவதும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானமேயாகும். முல்லா மகான்கள் “புத்வா” வழங்கியிருப்பது “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை இரண்டும் பிழை என்பதற்கேயன்றி வஹ்ததுல் வுஜூத் பிழை என்பதற்கல்ல. நான் அன்றும், இன்றும் “ஹுலூல் – இத்திஹாத்” இரண்டும் பிழையான கொள்கையென்றே எழுதியும் வருகிறேன். பேசியும் வருகிறேன். இதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. தேவையேற்படின் காண்பிக்கப்படும்.
நான் காத்தான்குடியில் நடைபெற்ற மீலாத் விழா ஒன்றில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசினேன். எனது பேச்சு ஒலிப்பதிவு செய்யப்பட்டது. காத்தான்குடியில் அந்நேரமிருந்த மார்க்க ஞானமோ, இறை ஞானமோ தெரியாத ஓர் அரசியல்வாதி ஏனோதானோ எனக்கு விரோதமாகக் குரலெழுப்பி இந்த விவகாரத்தை பெரிதாக்கி சர்ச்சைக்குரியதாக்கிவிட்டார். அவர் காத்தான்குடி மௌலானா கபுறடி மைதானத்தில் 1979ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில், (றஊப் மௌலவீ பேசிய கருத்து இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது, காத்தான்குடி உலமாஉகள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்) என்று கூறினார்.
இது நடந்து சில நாட்களில் அதே மைதானத்தில் மார்க்க சம்பந்தப்பட்ட கூட்டமொன்று நடைபெற்றது. அதில் பேசுவதற்கு நான் அழைக்கப்பட்டு அங்கு சென்று உரையாற்றினேன். எனதுரையில் குறித்த அரசியல்வாதியின் பெயர் கூறி, “நான் கூறிய இஸ்லாமிய ஞானம் மார்க்கத்திற்கு முரணானதென்று இந்த அரசியல்வாதி கூறுவதற்கு இவருக்கு என்ன யோக்கியதை உண்டு” என்று பேசினேன். இல்லை சீறினேன்.
குறித்த அரசியல்வாதியின் செவியுட் சென்ற “இவருக்கு என்ன யோக்கியதை உண்டு” என்ற எனது பேச்சு அவரை ஸஹாபீ – நபீ தோழர் இக்ரிமாவின் தந்தையாக்கிவிட்டது. அதேநேரத்தில் எனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று வைராக்கியம் கொண்டார் போலும்.
மறு நாளிரவு சிக்கந்தர் ஆலிமின் குர்ஆன் பாடசாலையில் குறித்த அரசியல்வாதி குறிப்பாக உலமாஉகளுக்கென்று மட்டும் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்திருந்தார். அங்கு எனது பேச்சு ஒலி நாடா கட்டம் கட்டமாக இயக்கிவிடப்பட்டது. இறுதியில் பேசிய அரசியல்வாதி “காத்தான்குடி உலமா சபையிடம் இவ்விடயத்திற்கு முடிவெடுக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறேன்” என்று அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பின்னணியிலிருந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்.
மறுநாள் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கட்டிடத்தில் உலமாஉகள் மட்டும் ஒன்று கூடி கொழும்பு சென்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் தொடர்பு கொள்வதாக முடிவு செய்து அவ்விடத்திலேயே கொழும்பு செல்ல ஒரு குழுவும் தெரிவு செய்யப்பட்டது. அந்தக் குழுவினர் யாரென்பது எனக்குத் தெரியாது. எனினும் அதிலொருவர் இரு நாக்குடைய எனது நீண்டகால நண்பர். அவர் இப்போதில்லை. மரணித்துவிட்டார்.
இவர் மறுநாள் என்னிடம் வந்து (மச்சான்! கொழும்பு செல்லும் குழுவில் என்னையும் ஒருவராக தெரிவு செய்துள்ளார்கள். என்னால் முடியாதென்று சொல்லியும் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைப் பகைத்துக் கொள்ளவும் முடியாது. அதே நேரம் உனக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைக்கு நான் உடந்தையாக இருக்கவும் முடியாது. நீ தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்) என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறிவிட்டுப் போன மறு கணமே என்னோடிருந்த மௌலவீ நண்பர்களிலொருவர் “இவன்தான் முதல் முனாபிக்” என்றார்.
ஒரு வாரத்தில் மீண்டும் மாஜி நண்பன் இரு நாக்கன் என்னிடம் வந்து “மச்சான்! உனக்கு பாரதூரமான “புத்வா” கொடுக்கப் போறானுகள் போல் தெரிகிறது” என்றார்.
என்ன ஆதாரம் கொண்டு அவ்வாறு செய்யப் போகிறார்கள்? என்று கேட்டேன். அதற்கவர்,
مَنْ زَعَمَ أَنَّ اللهَ مِنْ شَيْئٍ أَوْ فِى شَيْئٍ أَوْ عَلَى شَيْئٍ فَقَدْ كَفَرَ،
என்ற பொது விதியொன்றை பிரதான ஆதாரமாக எடுத்துள்ளார்கள் என்றார். அவர் இவ்வாறு சொன்னதைச் செவியேற்ற நான் என்னை என்னாலேயே “கொன்றோல்” பண்ண முடியாதளவு சிரித்துவிட்டு இதுதானே அவர்களின் ஆதாரம் என்று கேட்டேன். அதற்கவர் இதுவே பிரதான ஆதாரமாம் என்று சொன்னார். யானையின் குசுவைக் கேட்டு ஏமாந்தவன் போலானேன்.
யானை பெரிய உருப்படியாதலால் அதன் பருமனுக்கேற்றவாறு அது குசு உட்டால் ஒரு நகரமே நடுங்கிவிடுமென்று நம்பியிருந்தவன் கதை போலாகிவிட்டது. அது ஒருவருக்கும் கேட்காத அளவு “புஷ்” என்று குசு விட்டது.
இவ்வாறு உலமாஉகளின் ஆதாரமென்றால் அது அசைக்க முடியாத பெரும் உருக்குத் தூணாயிருக்குமென்று நினைத்திருந்தேன். ஆனால் இரு நாக்கன் மூலம் அவர்களின் ஆதாரத்தை அறிந்த நான் அவர்களின் அறியாமையை எண்ணி சிரித்த எனக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது.
ஆதாரத்தைச் சொன்ன இரு நாக்கனிடம், (மச்சான்! உலமாஉகள் என்னை “காபிர்” என்று கூற எடுத்துள்ள ஆதாரத்திற்கும், நான் கூறிய கருத்துக்கும் மண்ணளவும் எந்தவொரு தொடர்புமில்லையே! இது “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கான ஆதாரமல்லவா? என்று சொன்னேன். அதற்கவர் நானும் அவர்களிடம் நீ சொல்வது போல் சொன்னேன். ஆயினும் அவர்களுக்கு ஒன்றும் விளங்குதில்லையே!) என்றார்.
என்னைக் காபிராக்க முல்லா மகான்கள் எடுத்த ஆதாரம் தொடர்பாக சிறு விளக்கமொன்று கூறுகிறேன். அவர்கள் ஆதாரமாக எடுத்த வசனத்தின் பொருள் பின்வருமாறு.
யாராவதொருவன் அல்லாஹ் ஏதோ ஒரு வஸ்த்தில் நின்றுமுள்ளவன் என்றோ, ஒரு வஸ்த்திலே உள்ளவன் என்றோ, ஒரு வஸ்த்தின் மீது உள்ளவன் என்றோ நம்பினால் அவன் காபிராகிவிட்டான் என்பதாகும்.
இதுவே “ஹுலூல் – இத்திஹாத்” என்று சொல்லப்படும். இவ்வாறு நம்புதல் பிழையாகும். இவ்வாறு நம்புதல் “ஷிர்க்” என்ற இணை வைத்தலையே சேரும். இவ்வாறு நம்புதல் பிழையானதேன்? இதற்கான காரணமென்ன? என்பதற்கான விளக்கம் மிக விரிவானது. இனிவரும் பதிவுகளில் கூற முடிந்தால் கூறுவோம். இது தொடர்பான விரிவான விளக்கம் தேவையானோர் எனது CD களை கேட்டறிந்து கொள்ளலாம். அல்லது நான் எழுதிய நூல்களை வாசித்தறிந்து கொள்ளலாம்.
இக் கொள்கை இஸ்லாமிய கொள்கைக்கு முரணானதென்று நாங்களும் பேசுகின்றோம். எழுதியும் வருகின்றோம். எனினும் இக் கொள்கை பிழையென்பதை பகுத்தறிவு ரீதியான ஆதாரங்கள் கொண்டு நிறுவுவதாயின் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை வழிக்கு வந்து நிறுவுவதே சிறந்ததாகும். விரைவில் விளங்கக் கூடிய வழியுமாகும். இது வுஜூதிய்யீன்களால் மட்டுமே முடிந்தது.
சுருக்கமென்னவெனில் “முல்லா மகான்களின் “புத்வா” “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையுடையவர்களுக்கு மறுப்பானதேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு மறுப்பானதல்ல. துறை தெரியாமல் தோணி தொடுத்துவிட்டார்கள்”
இவ்வாறு அவர்கள் “புத்வா” வழங்கியதற்கு “வஹ்ததுல் வுஜூத்” அவர்களுக்குத் தெரியாமற் போனது ஒரு காரணமாயிருக்கலாம். அல்லது “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையும், “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையும் ஒன்றுதான் என்று அவர்கள் விளங்கியது இன்னொரு காரணமாயிருக்கலாம்.
“வஹ்ததுல் வுஜூத்” விபரம் உலமாஉகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. அது “தரீகா”வோடும், “இல்முத் தஸவ்வுப்”, “இல்முல் ஹிக்மா”வோடும் தொடர்புள்ள, அனுபவசாலிகளான ஷெய்குமார்களுக்கு மட்டும் தெரிந்த ஒன்றாயிருப்பதால் தமது உலமா சபையில் அத்தகையோர் இல்லாதிருந்தால் இலங்கை நாட்டின் எந்த ஓர் சிற்றூரிலாவது அல்லது நமது அண்டை நாடான தமிழ் நாட்டிலாவது தேடி அவர்களுடனும் தொடர்பு கொண்டும், என்னோடு தொடர்பு கொண்டும் ஒரு நேர்மையான, நீதியான முடிவுக்கு வந்திருக்க வேண்டும். இதுவே மனச்சாட்சிக்கு முரணற்ற அல்லாஹ்வும். றஸூலும் விரும்புகின்ற நற்செயலாகும். முன்னோர்களான “ஸாலிஹீன்” நல்லடியார்களும் இவ்வாறுதான் நடந்துள்ளார்கள். செயல்பட்டுள்ளார்கள்.
உலமா சபையின் “புத்வா” குழுவுக்கு எல்லாம் தெரியுமென்ற பாணியில் நடந்து கொள்வது பிறருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்ற செயலாகிவிடும். وَلِكُلِّ فَنٍّ رِجَالٌ ஒவ்வொரு கலைக்கும் சிலருளர் என்ற தத்துவம் உலமா சபைக்கு தெரியாத ஒன்றல்ல.
உலமா சபை அல்லது “புத்வா” குழு எங்களுக்கு எல்லாம் தெரியுமென்றும், எவரிடமும் நாங்கள் எதையும் கேட்கத் தேவையில்லை என்றும் சொல்வார்களாயின் அவர்கள் போன்ற “ஜுஹலாஉ”கள் வேறு யாருமே இருக்க முடியாது. அவ்வாறு அவர்கள் சொன்னால் இறை ஞானங்களில் உச்ச கட்ட ஞானம் எழுதப்பட்ட சில நூல்களை நான் தருகிறேன். அவற்றை வாசித்து அவற்றின் விளக்கத்தை பகிரங்க சபைஒன்றில் அவர்கள் சொல்ல வேண்டும். அவர்கள் தயாரா? அல்லது وفوق كل ذي علم عليم என்ற இறை மறை வாசகத்தின் படி அவர்கள் செயல்பட வேண்டும்.
உலமாஉகள் எல்லோரும் திறமையுள்ளவர்களல்லர். ஒரு சமயம் நான் ஒரு மௌலவீயிடம் (நான் கடைக்குச் சென்று இரண்டு வாழைப்பழங்கள் வாங்கி ஒன்றை நான் சாப்பிட்டேன். மற்றதை எனது மாமி மகளுக்கு கொடுத்தேன்) என்று நீ அறபியில் சரியாகச் சொன்னால் உன்னை எனது குருவாக ஏற்றுக் கொள்ள நான் தயார் என்று சுமார் 500 பேர் கூடி நின்ற ஓர் இடத்தில் நான் சொன்னேன். அவர் தலை குனிந்தார். அவரால் சொல்ல முடியவில்லை. அவர் இன்றுவரை காத்தான்குடியில் உயிருடன் உள்ளார். இது நீண்ட வரலாறோடு தொடர்புள்ளது. விரிவையஞ்சி எழுதவில்லை
அகில் இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்னுடன் தொடர்புள்ள மார்க்க விடயத்திற்கு என்னை விசாரிக்காமல் அவசரமாக முடிவு எடுத்ததேன்? என்பது பற்றிய சிறிய ஆய்வுதான் இப்பதிவின் நோக்கமாகும்.
நாட்டிலுள்ள எல்லா நீதி மன்றங்களிலும், முஸ்லிம்களுக்குரிய காழீ நீதி மன்றங்களிலும் தாக்கல் செய்யப்படுகின்ற வழக்குகளிற் சில சில மாதங்களிலேயே தீர்த்து வைக்கப்படுகின்றன. இன்னும் சில பல வருடங்கள் வரை இழுபட்டுச் செல்கின்றன.
எல்லா நீதி மன்றங்களிலும் வழக்கை தீர விசாரிப்பதற்காகவும், பல தவணைகள் வழங்குவதன் மூலம் இரு தரப்பினரும் நல்லிணக்கத்திற்கு வரக் கூடுமென்பதை நீதிவான் எதிர்பார்த்தும் பல தவணைகள் கூறுவதும், அவசரப்பட்டு தீர்ப்புக் கூறாமலிருப்பதும் மக்களின் நலன் கருதி நீதி மன்றங்களில் நடைபெறுகின்ற வழக்கமாகும்.
காத்தான்குடி முல்லா மகான்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிடம் அள்ளிச் சென்ற இந்த மார்க்க விவகாரம் அவர்களால் ஒரு தவணையேனும் எனக்கு வழங்கப்படாமலும், ஒரு தரமேனும் என்னை விசாரிக்காமலும் அவர்கள் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்து முடித்ததற்கான காரணம் என்ன? புத்திஜீவிகளும், அறிவுள்ளவர்களும் இது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.
ஸூபிஸத்தின் உச்ச கட்டத் தத்துவம்தான் “வஹ்ததுல் வுஜூத்” என்ற தத்துவமாகும். இது படித்தவர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், ஆன்மீகவாதிகள் ஒன்று சேர்ந்து பல்கலைக் கழக மட்டத்தில் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். எதார்த்தம் இவ்வாறிருக்க “புத்வா” குழுவிலுள்ள ஒரு சிலர் மட்டும் ஒன்று சேர்ந்து அவர்களின் அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஏற்றவாறு எடுத்த முடிவை மக்கள் மத்தியில் “புத்வா” என்ற பெயரில் வெளியாக்கி முஸ்லிம்களுக்கிடையில் பிரச்சினையையும், பிழவையும் ஏற்படுத்திவிட்டு அந்த முல்லா முப்தீகள் தமது அரண்மனைகளிலிருந்து வேடிக்கை பார்ப்பது முஸ்லிம்களுக்கும், இஸ்லாம் மார்க்கத்திற்கும் செய்த சதியும், துரோகமுமாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா “புத்வா” குழுவிலுள்ளவர்களின் பெயர் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும். அவர்களிடம் இறைஞான நூல்களைக் கொடுத்து விளக்கம் கேட்டு அவர்களை ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா என்ற நான்கு தராசுகளில் நிறுத்துப் பார்க்க வேண்டும்.
எனக்கு மின்னல் வேகத்தில் “புத்வா” வழங்கிய குழு அல்லாமதுஸ்ஸமான் ரிஸ்வீ முப்தீ அவர்கள் வெசாக் தினம் விகாரை சென்று கையில் வெசாக் விளக்கு ஏற்றி நின்றதற்கு இதுவரை “புத்வா” வழங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதேன்? இதிலுள்ள இரகசியம் என்ன? சிந்தனையாளர்களும், அறிஞர்களும், ஆய்வாளர்களும் இது தொடர்பாக சிந்திக்க வேண்டும். ஆய்வு செய்து பார்க்க வேண்டும். நீதியை நிலைநாட்ட முன்வரவும் வேண்டும்.
முன்னாள் “முப்தீ”யின் ஆலோசனை.
கண்ணியத்திற்குரிய மர்ஹூம் அப்துஸ்ஸமத் ஹழ்றத் முப்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி பல தவணைகள் கொடுத்து இரு தரப்பினரையும் விசாரித்து முடிவு செய்யுங்கள் என்றும், அப்துர் றஊப் மௌலவீ என்னிடம் ஓதிய மாணவர்தான். அவர் ஓரளவு திறமை உள்ளவரும் கூட. பாணந்துறையில் என்னிடம் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் சிறிய பாட மாணவர்களுக்கு ஓதிக் கொடுத்தவராகவும் உள்ளார். ஏன் இவ்வாறு பேசினார்? என்பது தெரியாது. ஆகையால் அவசரப்படாமல் மிக நுணுக்கமாக ஆராய்ந்தும், விசாரித்தும், காலம் தாழ்த்தியும் முடிவு செய்யுங்கள் என்று அவர்கள் “வஸிய்யத்” சொல்லியிருந்தும் கூட அவர்களின் ஆலோசனைகளைப் புறம் தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் முடிவெடுத்ததற்கான காரணம் என்ன? இரகசியம் என்ன? உலமா சபை நீதிமன்றில் இதற்கான விளக்கம் கொடுக்க வேண்டும். இதற்கான காலம் தொலைவில் இல்லை.
கௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பாதுகாப்பு அதிகாரிகள் முஸ்லிம்களின் விஷேட நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கும் வேளையில் அவர்களுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் முஸ்லிம் மத குரு “துஆ” பிரார்த்தனை செய்யும் சமயம் அவர்களில் எவரும் முஸ்லிம்கள் போல் கையேந்துவதில்லை. இதனால் முஸ்லிம்கள் அவர்களை எதிரிகளாகப் பார்ப்பதுமில்லை. மார்க்க அனுஷ்டானங்களை அலட்சியம் செய்பவர்களாக கருதுவதுமில்லை. இவர்கள் போல் மகான் ரிஸ்வீ முப்தீ அவர்களும் செயல்பட்டிருந்தால் இன்று அவர் தலை நிமிர்ந்து நின்றிருக்கலாம். மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கலாம்.
முஸ்லிம் மத குருக்கள் தம்மைத்தாமே இழிவாக்கிக் கொள்வதை நாம் பார்க்கிறோம். பல்லின, பல்மத மக்களும் ஒன்றிணையும் பெருங் கூட்டங்களில் பல்மத மதகுருக்களும் கதிரைகளில் வெள்ளைத்துணி விரித்து வரவேற்கப்படுகின்றார்கள். அங்கு ஜனாதிபதி வந்தாலும், பிரதமர் வந்தாலும் முஸ்லிம் மத குருக்கள் மட்டுமே எழுந்து நின்று மரியாதை செய்கிறார்கள். ஏனைய மதகுருமார் தமது கௌரவத்தைப் பேணி அமர்ந்தவர்ளாகவே இருக்கின்றார்கள். இந்த நிகழ்வை நேரில் காணும் முஸ்லிம்கள் வெட்கித் தலை குனிகிறார்கள். மற்ற மதத்தினர் முஸ்லிம் மத குருக்களின் அறியாமையை எண்ணி வியப்படைகின்றார்கள்.வேதனைப்படுகிறார்கள். அரசாங்கமே சர்வ மதகுருமாருக்கும் கதிரைகள், அவைமேல் வெள்ளைத் துணியும் விரித்து கௌரவிக்கும் போது குருமார்கள் புரிந்துணர்வின்றிச் செயல்படுவது அவர்களின் அறியாமையே.
மதிப்பிற்குரிய ரிஸ்வீ முப்தீ அவர்கள் பௌத விகாரையில் வெசக் விளக்கேற்றி நின்ற அன்று வெளிநாடுகளில் வேலை செய்கின்ற நம் நாட்டு முஸ்லிம்களும், வெளிநாட்டு முஸ்லிம்களில் சிலரும் ரிஸ்வீ முப்தீ அவர்கள் விளக்கேற்றி நின்ற படத்தை போனில் பதிவு செய்து இது என்ன? என்று என்னிடம் கேட்டார்கள். நான் அவர்களுக்கு மிகச் சுருக்கமாக பதில் கொடுத்தேன். “இதுவே துன்யா” என்றேன். அதோடு لَا تَحْصُلُ الدُّنْيَا إِلَّا بِحِيْلَةٍ என்ற பழமொழியையும் எழுதினேன்.
இன்றைய இப்பதிவின் சுருக்கமென்னவெனில் எந்த ஒரு நீதிமன்றின் நீதிவானாயிருந்தாலும் அவர் வழக்காளி, எதிரி இருவரையும் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும். இருவரில் ஒருவர் சமுகம் தராதவிடத்து வழக்கை பிற்போட வேண்டும். ஒருவர் தொடர்ந்து வராதவிடத்து அவருக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டும். அவரை பிடிக்க முடியாமற் போனால் மட்டுமே ஒரு தரப்பை மட்டும் விசாரித்து தீர்ப்புக் கூற வேண்டும். இதுவே நியாயம்.
எனது மார்க்க விவகாரத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி முல்லா மகான்களின் மந்திரத்தில் மயங்கி அதிரடி நடவடிக்கை எடுத்து தீர்ப்பு வழங்கியது முற்றிலும் பிழையானதாகும். இஸ்லாமிய நீதியின் படியும், பொது நீதியின் படியும் உலமா சபையின் “புத்வா” செல்லுபடியாகாது. இந்த நியாயம் தெரியாத பலர் அந்த “புத்வா”வை அமுல்படுத்தி வருவது அவர்களின் மூளை எந்த அளவு வேலை செய்ய வேண்டுமோ அந்த அளவு வேலை செய்யவில்லை என்பதை உணர்த்துகிறது. ஒரு முறை அவர்கள் மூளை தொடர்பான அனுபவமிக்க ஒரு “ஸ்பெஷலிஸ்ட்” இடம் இப்போதே காட்டினால் நல்லது.
நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பிழையென்று பொது மக்களுக்குக் காட்டியும், என்னையும் எனது கருத்தைச் சரி கண்டவர்களையும் கொலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியும் “முல்லா மகான்கள்” ஒரு “புத்வா” வெளியிட்டார்கள். அதில் பொய்களையும் எழுதி தில்லுமுல்லுகளும் செய்துள்ளார்கள். கடந்த பதிவுகளில் அவர்களின் பொய்களிற் சிலதையும், தில்லு முல்லுகளிற் சிலதையும் கூறியிருந்தோம்.
அதே தொடரில் இந்தப் பதிவிலும் சில விடயங்களைக் கூறுகின்றேன். அவற்றில் ஒன்று.
#ஒப்பமில்லாத “புத்வா”
தனி நபர் “புத்வா” வழங்கினாலும், ஒரு குழு சேர்ந்து வழங்கினாலும் “புத்வா” வழங்கியவரின், அல்லது வழங்கியவர்களின் ஒப்பம் – கையெழுத்து அந்த புத்வாவில் இருக்க வேண்டும். இதுவே நடைமுறையும், மார்க்கமுமாகும். இது உலமாஉகள் வெளியாக்கிய “புத்வா”வேயன்றி பெயர் முகவரி இல்லாதவர்களின் “புத்வா” அல்ல. அவ்வாறிருந்தும் ஒருவரின் பெயர் கூட அதில் கூறப்படவில்லை. இது இருட்டடிப்பா? அறியாமையா?
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் “புத்வா” வழங்குவதற்கென்று ஒரு குழு இருப்பதாக அறிகிறோம். அவ்வாறாயின் அவர்கள் பெயர், முகவரி இல்லாதவர்களா? அல்லது அவர்களுக்கு தமது முழுப்பெயரையும் எழுத முடியாமற்போய்விட்டதா? உலமா சபை இதற்கு நீதிமன்றில் காரணம் கூறவேண்டும். இப்போதிருந்தே ஒரு காரணத்தை சோடிப்பார்கள் என்று நினைக்கிறேன். சோடிக்கட்டும். நீதி மன்றில் சோடனைகள் சோபிக்காது.
ஒருவன் கடிதம் எழுதினாற்கூட அதில் அவனின் கையெழுத்து இல்லையானால் அது நீதிமன்றில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவர்களின் “புத்வா” ஒரு கடிதமல்ல. அது ஒரு பயங்கர தீர்ப்பு.
#கலைந்தது கல்முனை மாநாடு.
1980 – 81 களில் கல்முனையில் நடந்த – திட்டமிட்டு எனக்கு எதிராக நடத்தப்பட்ட உலமாஉகள், பொது மக்கள் கூடியிருந்த மாபெரும் கூட்டமொன்றில் பேசிய முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் பரீத் மீராலெப்பை அவர்கள் இது தொடர்பாகவே கேள்வியெழுப்பினார். (இந்த “புத்வா” அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வெளியீடு. “புத்வா” வழங்கியவர் அல்லது வழங்கியவர்கள் யார்? இது கையெழுத்தில்லாத, அர்த்தமற்ற வெறும் புத்வா. இந்தப் பிரச்சினை – படித்தவர்கள், ஆய்வாளர்கள், மார்க்க மேதைகள் பலர் கூடி பல்கலைக்கழக மட்டத்தில் ஆராயப்பட வேண்டிய விடயத்தை பாதையிலும், சந்தியிலும் ஆராய முற்பட்டிருப்பது – அறிவுடைமையல்ல) என்று பேசிய அவர் கையிலிருந்த “புத்வா” புத்தகத்தை கூடியிருந்த மக்கள் மத்தியில் தூக்கியெறிந்தார்.
அவர் எதிராக பேசப் போனாரேயன்றி ஆதரவாகப் பேசப் போனவரல்ல. எனினும் அல்லாஹ் அவரின் நாவை அவ்வாறு பேச வைத்துவிட்டான். அல்ஹம்து லில்லாஹ்.
பரீத் மீராலெப்பை “புத்வா”வை தூக்கியெறிந்தவுடன் சபையிலிருந்த யாரோ ஒரு அரை வேக்காடு மௌலவீ எழுந்து அவருக்கு முன்னாலிருந்த ஒலிவாங்கியைத் தூக்கியெறிந்தான். உடனே பிரதியமைச்சர் பரீத் தன்னிடமிருந்த ரிவோல்வரை எடுத்து சத்த வெடில் வைத்தார். அதோடு கூட்டத்தில் அமளிதுமளியேற்பட்டது. கை கலப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. பாதுகாப்புச் செய்துகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சத்த வெடில் வைத்து கண்ணீர் புகையடித்து கூட்டத்தைக் கலைத்தனர்.
கொழும்பிலிருந்து எனக்கு எதிராகப் பேசவந்த உலமாஉகளும், பொது மக்களும் பல வழிகளாலும் ஓட்டம் பிடித்தனர். கொழும்பிலிருந்து எனக்கு எதிராகப் பேசவந்த அந்தக் காலகட்டத்தில் பீரங்கிப் பிரசங்கியென்று பிரசித்தி பெற்றிருந்த காயல் பட்டணத்தைச் சேர்ந்தவரும், கொழும்பு சம்மாங்கோட் பள்ளிவாயல் பேஷ் இமாமும், காலஞ்சென்ற மர்ஹூம் அப்துல்லாஹ் ஹழ்றத், அலியார் ஹழ்றத் ஆகியோரின் நெருங்கிய நண்பருமான மௌலவீ அபுல் ஹஸன் காஹிரீ (காய்கறி) அவர்கள் தனது சேனையுடன் கல்முனையிலிருந்து கடற்கரை வழியால் கால் நடையாக இரவோடிரவாக நடந்து காத்தான்குடி வந்து ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் குளித்து உடைகளையும் மாற்றிக் கொண்டு ஹழ்றத் அவர்கள் வழங்கிய “நாஸ்த்தா”வை பார்சலாக எடுத்துக் கொண்டு கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்னும் சிலர் கல்முனையிலிருந்து அம்பாரை, பொத்துவில் வழியாக தமதூரைச் சென்றடைந்தனர்.
கல்முனையில் கூட்டம் குழம்பிவிட்டதாம் என்ற செய்தி எனக்கும், எனது ஆதரவாளர்களிற் சிலருக்கும் கிடைத்தது. நாங்கள் சிலர் பிரதான வீதி சென்று அந்நேரமிருந்த அலியார் பேக்கரியில் தேனீர் குடித்துவிட்டு மெயின் வீதியால் ஏறாவூர், ஓட்டமாவடிகளை நோக்கிப் பயத்தால் அதி வேகமாக பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை வேடிக்கையாக பார்த்துக் கொண்டு நின்றோம்.
கல்முனையிலிருந்து ஓட்டமாவடி செல்ல வந்த வாகனம் ஒன்று அலியார் பேக்கரியில் தேனீர் குடிக்க நிறுத்தினார்கள். அவர்களுக்கு நாங்கள் யாரென்று தெரியாததால் எங்களிடமே றஊப் மௌலவிக்கு எதிராக ஏற்பாடு செய்த மாநாடு குழப்பத்தில் முடிந்து விட்டது. பொலிஸ் கண்ணீர் புகையடித்து கூட்டத்தைக் கலைக்கிறார்கள். இடையிடையே கல்லெறிகளும் விழுகின்றன. நாங்கள் “தப்பினோம் பிழைத்தோம்” என்று வந்துவிட்டோம் என்று சொல்லிவிட்டு “கெஸட்பீஸ்” ஒன்றும் தந்துவிட்டுப் போனார்கள்.
அதை அலியார் பேக்கரியில் நாங்கள் இயக்கினோம். ஸுப்ஹானல்லாஹ்! பெரும் யுத்த களத்தில் புடிடா, குத்துடா, வெட்றா என்ற சத்தங்களும், பெரும் இரைச்சலுமே கேட்டது.
கல்முனை மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கென்று தயாரிக்கப்பட்ட பல சட்டி சோறும், பல சட்டி இறைச்சிக் கறியும், பல சட்டிப் பருப்புக் கறியும் பழுதாகி மறு நாட்காலை நாய்களுக்கும், பூனைகளுக்கும், சிட்டுக் குருவிகளுக்கும் உணவாயின.
இது தொடர்பான முழு விபரங்கள் அந்நேரம் சுமார் 20 – 25 வயதுள்ளவர்களாக இருந்தவர்களுக்கும். அதைவிடக் கூடிய வயதுள்ளவர்களாக இருந்தவர்களுக்கும் தெரியும். இப்போது அவர்கள் உயிருடன் இருந்தார்களாயின் சுமார் 60 வயதுள்ளவர்களாக இருப்பார்களென்று நினைக்கிறேன். இந்த விடயம் இன்றுள்ள இளைஞர்களுக்குத் தெரியாது. அவர்கள் விபரமொன்றும் தெரியாமலேயே என்னை எதிர்க்கின்றார்கள்.
கல்முனையில் நடந்த இந்த மாநாட்டிற்கு அந்நேரம் அமைச்சராக இருந்த மர்ஹூம் MH முஹம்மத் அவர்கள் ஹெலியில் கல்முனைக்கு வந்திருந்தாலும் கூட கால நிலை சீரில்லாமல் இருப்பதால் ஹெலி ஓட்டுநரின் (விமானி) ஆலோசனைக்கமைவாக அமைச்சர் “மக்ரிப்” தொழுகையுடன் கொழும்பு சென்றுவிட்டார்.
இந்த மாநாடு குழப்பத்தில் முடிந்த கால கட்டத்தில் பக்க சார்பற்ற பொது மக்கள் (அல்லாஹ்ட வேலையைப் பார்த்தீர்களா? கோடிக்கணக்கில் பணம் செலவிட்டாலும் கூட இப்படியொரு மாநாட்டை குழப்பிருக்க முடியாது. சத்தியம் ஒருபோதும் அழியாது) என்று பேசிக் கொண்டார்கள். அந்நேரம் எனது வயது சுமார் 35 – 36 இருக்கும்.
1980 – 81களில் வஹ்ஹாபிஸம் தலைவிரித்தாடாத காலமாயிருந்தது. ஆங்காங்கே ஒரு சில வஹ்ஹாபிகள் இருந்தாலும் கூட அவர்கள் அட்டூழியங்களில் இறங்காமல் அமைதியாக இருந்தார்கள். அக்கால கட்டத்தில் மதனீகளும், மக்கீகளும், ரியாதீகளும், நளீமீகளும் மிகவும் குறைவாகவே இருந்தனர்.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் வஹ்ஹாபிஸம் தலைவிரித்தாடவுமில்லை. ஸூபிஸம் தலை தூக்கவுமில்லை.
காத்தான்குடியிலிருந்து மதீனாவிலுள்ள “அல்ஜாமிஅதுல் இஸ்லாமிய்யா” பல்கலைக் கழகத்திற்கு முதலில் சென்றவன் நான்தான். எனக்கு முன் காத்தான்குடியிலிருந்து எவரும் போகவில்லை. கல்முனை, சாய்ந்தமருதுகளிலிருந்து முதலில் அங்கு சென்றவர் மர்ஹூம் மௌலவீ ஷம்ஸுத்தீன் CEO அவர்கள்தான். இவருடன் மாதம்பை அல்மத்றஸதுல் கியாதிய்யா அறபுக் கல்லூரியின் தாபகர் அபூஸாலிஹ் ஹழ்றத் அவர்களும் இருந்தார்கள்.
நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பிழை என்பதற்கு முல்லா மகான்கள் திருக்குர்ஆனிலிருந்து இரண்டு வசனங்களை மட்டும் தமது “புத்வா”வில் எழுதியுள்ளார்கள்.
ஒன்று – لَيْسَ كَمِثْلِهِ شَيْئٌ என்ற வசனம் (42-11). இந்த வசனத்தின் பொருள் அவன் போன்று எதுவுமில்லை என்பதாகும்.
இந்த வசனத்தில் “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கு ஓர் அணுவளவேனும் எந்த ஓர் ஆதாரமும் இல்லை. இதை அறிஞர்களும், ஆய்வாளர்களும் அறிவர். “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்னவென்று தெரியாத காரணத்தால் இத்திருவசனத்தை எழுதியுள்ளார்கள். இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை எதிர்க்குமுன் அதுபற்றி ஐயமறத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவன் போல் – அல்லாஹ் போல் ஏதாவதொன்று உண்டு என்று சொன்னவனுக்கு மறுப்பாகச் சொல்ல வேண்டிய ஆதாரமே இத்திரு வசனமாகும். இதை “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பிழையென்பதற்கு முல்லா மகான்கள் கூறியிருப்பது பைத்தியத்தில் ஒரு வகை என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் நான் இதுகாலவரை எந்த ஓர் இடத்திலாவது, எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது, ஒரு தரமாவது அல்லாஹ் போல் ஏதாவதொன்று உள்ளதாக பேசியதே இல்லை. நான் பேசியதாக எவரும் ஆதாரம் கூறி நிறுவவும் முடியாது. அவ்வாறு நான் பேசுவதற்கு நான் இவர்கள் போல் அரை வேக்காடுமல்ல.
இவ்வாறிருக்கும் நிலையில் முல்லா மகான்கள் “அவன் போல் எதுவுமில்லை” என்ற திரு வசனத்தை எனக்கு எதிரான “புத்வா”வில் ஏன் கூறினார்களோ? என்னை அவர்கள் போல் உலக்கை என்று எண்ணிக் கொண்டார்களோ? இது என்ன மூளையில் கலக்கமா? அல்லது விளக்கத்தில் குழப்பமா? இது பற்றி நீதிவான் முன்னிலையில் நீதிமன்றிலேயே கேட்க வேண்டும். காலம் வரும் பார்ப்போம். அங்கு கேட்டால்தான் முல்லா மகான்களின் அறிவின் தரத்தை நீதிவானும் கூட தெரிந்து கொள்வார்.
لَيْسَ كَمِثْلِهِ شَيْئٌ அவன்போல் எதுவுமில்லை என்ற இத்திருவசனம் தருகின்ற கருத்து முதலாம் “ஸும்றா” வகுப்பு மாணவர்களுக்குக் கூட நன்றாகத் தெரியும். அதை இறை கொள்கையில் ஊறிப்போன எனக்கு எதிரான ஆதாரமாக எழுதிய இவர்கள் என்னை நையாண்டி பண்ணுகிறார்களா? அல்லது வரண்டுபோன தமது மூளை எவ்வாறானதென்று அறிவுலகுக்கு காட்டுகிறார்களா?
“வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கு மேற்கண்ட திரு வசனத்தை ஆதாரமாக எழுதிய முல்லா மகான்களே! பின்வரும் எனது கேள்விக்கு விடை தாருங்கள். இத்திருவசனத்திலுள்ள كَمِثْلِهِ என்ற சொல்லிலுள்ள “காப்” என்ற எழுத்தின் பொருள் என்ன? இந்த “காப்” இல்லாமல் சொல் வந்தாலும் பொருள் ஒன்றுதானே! இந்த “காப்” இல்லாது போனால் வசனம் لَيْسَ مِثْلَهُ شَيْئٌ அல்லது لَيْسَ شَيْئٌ مِثْلَهُ என்றுதானே வந்திருக்கும். இந்த “காப்” இல்லாமலேயே கருத்து மாறுபடாமல் இருக்கும் நிலையில் மேலதிகமாக இந்த “காப்” என்ற எழுத்தை அல்லாஹ் வசனத்தில் கொண்டு வந்தது ஏன்? இதற்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அந்த பதில் உங்கள் வாயால் வர வேண்டும் அல்லது உங்களின் பேனா தர வேண்டும் என்பதற்காகவே கேட்கிறேன். உங்களின் பதிலே உங்களுக்குப் பாதகமாகிவிடும்.
“காப்” என்ற எழுத்து அர்த்தமில்லாமல் சும்மா வந்துள்ளதென்று சொல்ல நினைக்கிறீர்களா? சொல்லப் போகின்றீர்களா? அதாவது زَائِدْ போடு தேங்காய் போல் சும்மா வந்துள்ளதென்று நீங்கள் சொல்வீர்களாயின் உங்களிடம் இன்னும் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கும் விடை தாருங்கள்.
அர்த்தமில்லாத ஓர் எழுத்துக் கூட திருக்குர்ஆனில் இல்லையென்பதே திருக்குர்ஆன் ஆய்வாளர்களின் முடிவாயிருக்கும் நிலையில் நீங்கள் அவ்வாறு சொன்னால் அது எந்த வகையில் நியாயமானதாகும்? அல்லாஹ்வின் பேச்சுக்கும், மனிதர்களின் பேச்சுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும். மனிதனின் பேச்சில் அர்த்தமில்லாத ஓர் எழுத்தோ, ஒரு சொல்லோ வருவதற்கு சாத்தியமுண்டு. ஆனால் அல்லாஹ்வின் பேச்சில் ஓர் எழுத்துக் கூட அல்லது ஒரு “நுக்தா” புள்ளிகூட அர்த்தமற்றதாக இருக்க முடியாது. “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கு இவ்வசனத்தை ஆதாரமாக கூறிய நீங்கள் இதற்கு விளக்கம் கூறுங்கள். இது ஒரு விடயம்.
குறித்த “காப்” அர்த்தமில்லாமல் வரவில்லையென்று நீங்கள் கூறுவீர்களாயின் அதாவது அர்த்தமுள்ளதாகத்தான் வந்துள்ளதென்று நீங்கள் சொல்வீர்களாயின் அந்த வசனம் لَيْسَ شَيْئٌ مِثْلَ مِثْلِهِ என்றுதானே வர வேண்டும். வசனம் இவ்வாறு வந்தால் அதன் பொருள் என்ன? விளக்கம் என்ன? கூறுவீர்களா? அனைவருமறிய நான் கேட்கும் கேள்விக்கு அனைவருமறிய பதில் கூறுங்கள். எந்த ஒரு வஸ்த்தும் அவன் போன்றது போன்றதாக இல்லையென்றால் விளக்கமென்ன?
இன்னொரு விடயம் என்னவெனில் நீங்கள் தவறாக ஆதாரம் கூறியிருந்தாலும் அதிலும் இருட்டடிப்பும், தில்லுமுல்லும் செய்துள்ளீர்கள்.
அதாவது, لَيْسَ كَمِثْلِهِ شَيْئٌ என்ற இந்த வசனம் ஒரு முழு வசனமல்ல. ஒரு வசனத்தின் பாதிதான். அதன் மறுபாதி وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ என்று வரும். இதன் பொருள் “கேட்பவனும், பார்ப்பவனும் அவனே” என்பதாகும். ஒரு வசனத்தின் ஒரு பாதியைக் கூறி மறு பாதியை முல்லா மகான்கள் விட்டதேனோ? மறைத்ததேனோ? இரகசியம் புரிகிறதா? தில்லு முல்லு இவர்களின் தொழிலாயிற்று.
முல்லாக்கள் விட்ட மறு பாதி பற்றி சற்று ஆய்வு செய்து பார்ப்போம்.
அவன் போல் எதுவுமில்லை என்று கூறிய அல்லாஹ் அதைத் தொடர்ந்து அதே வசனத்தில் கேட்பவனும் அவனே, பார்ப்பவனும் அவனே என்று கூறி வசனத்தை முடித்துள்ளான்.
இந்த வசன நடையை ஊன்றிக் கவனித்தால் இதில் تَأْكِيْدْ – அல்லது حَصْرٌ என்று ஒரு அம்சம் இருப்பது ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல. تأكيد என்றால் ஒரு பேச்சை பலப்படுத்துதல் என்றும், حَصْرٌ என்றால் ஒரு பேச்சை மட்டுப்படுத்துதல் என்றும் பொருள் வரும்.
இவ்விடயத்தை ஓர் உதாரணம் மூலம் தெளிவுபடுத்துகிறேன். தமிழில் “கேட்பவனும் அவன் பார்ப்பவனும் அவன்” என்ற வசனத்திற்கும், கேட்பவனும் அவனே, பார்ப்பவனும் அவனே என்ற வசனத்திற்கும் பொருளில் வித்தியாசம் உண்டு.
வசனத்தின் முந்தின பாதியான அவன் போல் எதுவுமில்லை என்ற வசனம் பலப்படுத்தப்பட்டதோ, மட்டுப்படுத்தப்பட்டதோ அல்ல.
ஆயினும் இரண்டாவது பாதி வசனமான “கேட்பவனும் அவனே பார்ப்பவனும் அவனே” என்ற வசனம் பலப்படுத்தப்பட்டதும், மட்டுப்படுத்தப்பட்டதுமாகும். அதாவது இந்த வசனம் அல்லாஹ் மட்டும்தான் கேட்பவனும், பார்ப்பவனுமேயன்றி மற்றெவரும் கேட்பவருமல்ல, பார்ப்பவருமல்ல என்ற கருத்தை தரும்.
மேற்கண்ட திரு வசனத்தின் பிந்தின பாதியான, முல்லா மகான்கள் இருட்டடிப்புச் செய்த وهو السميع البصير என்ற பிந்தின பாதி எனக்கு – “வஹ்ததுல் வஜூத்” ஞானத்திற்கு – சாதகமான பாதி வசனமாகும். அதெவ்வாறு சாதகம் என்று ஆய்வு செய்தால் குன்றின்மேல் தீபம் போல் ஒரு தத்துவம் பளிச்சிடும்.
அல்லாஹ் மட்டும்தான் கேட்பவனும், பார்ப்பவனுமென்றால் – மற்றவரெவரும் கேட்கவும் முடியாது, பார்க்கவும் முடியாது என்று கருத்து வரும். மற்றவரெவரும் கேட்பவருமல்ல, பார்ப்பவருமல்ல என்ற கருத்து வரும்.
இங்கு நாம் மிக நுணுக்கமாகவும், ஆழமாகவும் சிந்திக்க வேண்டும். இன்று உலகிலுள்ள உயிரினங்கள் யாவும் கேட்பதையும், பார்ப்பதையும் நாங்கள் கண்ணால் பார்க்கின்றோம். அறிகின்றோம். இங்கே திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ளதை நம்புவதாயின் மனிதன் உள்ளிட்ட எந்த உயிரினமாயினும் அது அல்லாஹ்தான் என்று நம்ப வேண்டும். அல்லாஹ்வின் பேச்சைத்தான் நாம் நம்ப வேண்டுமேயன்றி ஜம்இய்யதுல் உலமா சொல்வதையோ, அந்த முப்தீ இந்த முப்தீ சொல்வதையோ நம்பக் கூடாது.
வல்லமையுள்ள அல்லாஹ் நாகரீகமான பாணியில் அவன் போல் எதுவுமில்லை என்று “தன்ஸீஹ்” நிலை பற்றியும், கேட்பவனுமவனே, பார்ப்பவனுமவனே என்று “தஷ்பீஹ்” நிலை பற்றியும் குறிப்பிட்டுள்ளான்.
“புத்வா” வழங்கிய முல்லா மகான்கள் ஒரே வசனத்தில் பிந்திய பாதியை விட்டு முந்தின பாதியை மட்டும் கூறியிருப்பது அவர்களின் இருட்டடிப்பும், தில்லுமுல்லும் என்பது பொது மக்களுக்குப் புரிகிறதா?
மேற்கண்ட لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ என்ற திருவசனத்தின் பாதியை அதாவது لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ அவனைப் போல் எதுவுமில்லை என்ற பகுதியை மட்டும் தமது “புத்வா”வில் எழுதி அவ்வசனத்தின் மறு பாதியை மறைத்து எனக்கு எதிராக அந்த “புத்வா”வை அமைத்த முல்லா மகான்களின் இருட்டடிப்பையும், தில்லுமுல்லையும் கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
அதே தொடரில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
ஸூபீ மகான்களும், “வஹ்ததுல் வுஜூத்” பேசுகின்ற தத்துவ ஞானிகளும் மேற்கண்ட திரு வசனத்தை முந்தின பாதி, பிந்தின பாதி என்று பிரிக்காமல் அவ்வசனத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
முல்லா மகான்களோ தமக்குச் சாதகமானதென்று அவர்கள் கருதிய பகுதியை இத்துப்போன “புத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டு தமக்குப் பாதகமானதென்று அவர்கள் கருதிய மறு பகுதியை முழுமையாக விட்டுவிட்டார்கள். இது இவர்கள் செய்த இருட்டடிப்பும், தில்லுமுல்லுமாகும். இவர்கள் யார்? முப்தீகளா? முப்ஸித்களா?
இந்த முல்லா மகான்கள் இந்த இடத்தில் மட்டும் இருட்டடிப்புச் செய்யவில்லை. அவர்கள் இந்த “புத்வா”விலேயே இன்னோர் இடத்திலும் இருட்டடிப்புச் செய்துள்ளார்கள். அதைப் பின்னால் விபரமாக எழுதுவேன். அதற்கு முன் இந்த விடயத்தை முடித்துக் கொள்கிறேன்.
இறைஞானிகளும், ஸபீ மகான்களும் தமது நூல்களில் மேற்கண்ட வசனத்தைக் கருவாகக் கொண்டு, அதை மையப்படுத்தி “தன்ஸீஹ்”, “தஷ்பீஹ்” என்று இரண்டு விடயங்களைக் கூறுகிறார்கள். இறைஞான நூல்கள் அனைத்திலும் இதைக் காணலாம்.
“தன்ஸீஹ் – தஷ்பீஹ்” تَنْزِيْهْ – تَشْبِيْهْ
இறைஞானிகளிலும், ஸூபீ மகான்களிலும் இவ்விரண்டு அம்சங்களையும் ஏற்றுக் கொள்ளாத ஒருவர் கூட இல்லை. அனைவருமே ஏற்றுக் கொள்கிறார்கள். அதோடு தமது நூல்களிலும் தனித் தலைப்பில் எழுதியுமுள்ளார்கள்.
யாராவதொருவர் தன்னை இறைஞானியென்று அல்லது ஸூபீ என்று சொல்லிக் கொண்டு இதை மறுத்தாராயின் அவர் இறைஞானியாகவோ, ஸூபீயாகவோ இருக்கமாட்டார். ஒன்றுமே தெரியாத வெறும் வெங்காயமாகவே இருப்பார்.
இறை ஞானத்திற்கும், ஸூபிஸத்திற்கும் அறவே தொடர்பில்லாமல் “ஷரீஆ”, “பிக்ஹ்” என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்கின்ற “ளாஹிர்” வெளிரங்க அறிவுடையோர் “தன்ஸீஹ்” என்ற அம்சத்தை மட்டும் ஏற்றுக் கொள்வார்கள். “தஷ்பீஹ்” என்ற சொல்லைக் கேட்டாலே மயங்கி விழுந்து விடுவார்கள்.
1979ம் ஆண்டு – “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை நான் பகிரங்கமாகப் பேசிய கால கட்டத்தில் இலங்கையிலுள்ள ஓர் அறபுக் கல்லூரியின் ஆசிரியர்களில் – “உஸ்தாது”மார்களில் 13 பேர் ஓர் இடத்தில் ஒன்று கூடி எனது ஆரம்பப் பேச்சை “கெஸட் ப்லேயர்” மூலம் கேட்டிருக்கிறார்கள்.
எனது பேச்சின் ஒரு கட்டத்தில் (அல்லாஹ்வுக்கு இரு நிலைகள் உள்ளன. ஒன்று “தன்ஸீஹ்”. அரூப நிலை – பரிசுத்த நிலை என்றும், மற்றது “தஷ்பீஹ்” ரூப நிலை என்றும் வழங்கப்படுமென்றும், அவனுக்கு “தன்ஸீஹ்” உடைய நிலையில் உருவமில்லை என்றும், “தஷ்பீஹ்” உடைய நிலையில் உருவம் உண்டு என்றும் நம்ப வேண்டும்) என்று கூறியுள்ளேன்.
இந்தப் பேச்சைக் கேட்ட 13 “உஸ்தாது”மார்களில் ஒருவர் தலையில் இரு கைகளையும் வைத்து அல்லாஹ் என்று சத்தமிட்டவராக சீமெந்து தரையில் விழுந்திருக்கிறார். அவரின் முகத்தில் கல்லொன்று குத்தி காயமேற்பட்டு “வார்ட்”டில் இரண்டு நாட்கள் இருந்து சுகம் பெற்றிருக்கிறார். இந்த சம்பவம் நடந்து சில நாட்களின் பின் அவர் ஒரு கனவு கண்டுள்ளார். அந்தக் கனவில் எங்கேயோ ஓர் ஊரிலுள்ள “தர்ஹா” ஒன்றுக்கு அவர் சென்று “பாதிஹா” ஓதுவது போன்றும், அப்போது அங்கு அடக்கம் பெற்றுள்ள ஒரு பெரியார் அந்தக் கப்றிலிருந்து எழுந்து இவரைப் பார்த்து, (அல்லாஹ்வுக்கு இரு நிலைகள் உண்டென்பது உண்மைதான்) என்று சொன்னது போலும் கண்டுள்ளார்.
அன்று முதல் அவருக்கு 12 வருடங்கள் தொடராக இருந்து வந்த வயிற்று வலி சுகம் கிடைத்துள்ளது.
இதனால் இவருக்கு இவ்விடயத்தில் நம்பிக்கை ஏற்பட்டதால் அதிபர் அவர்களிடம் இவ்விடயத்தை இரகசியமாகக் கூறியிருக்கின்றார். அதிபர் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பற்றிய அறிவில்லாதவராக இருந்தாலும் “ஸியாறதுல் குபூர்” கப்றுகளை ஸியாறத் செய்வதைச் சரிகண்டவராயிருந்ததால் எவருக்கும் தெரியாமல் நாமிருவரும் காத்தான்குடிக்குச் சென்று நம்மை மௌலவீமார் என்று காட்டிக் கொண்டாலும் ஓதிக் கொடுக்கும் இடத்தை மட்டும் சொல்லாமல் அவரைச் சந்திப்போம் என்று ஆலோசனை கூறி இருவரும் காத்தான்குடி வந்துள்ளார்கள்.
சுமார் 15 வருடங்களுக்கு முன் ஒரு நாள் மக்ரிப் தொழுகைக்கு பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு வந்த அவர்கள் தொழுகையின் பின் எனது தகப்பனார் அவர்களை “ஸியாறத்” செய்துள்ளார்கள். “ஸியாறத்”தைக் கண்ட மௌலவீ அவர்கள் தனது அதிபரிடம் நான் கனவில் கண்ட தர்ஹா இதுதான் என்று கூறியுள்ளார்.
இருவரும் அன்றிரவு சுமார் 7.30 மணியளவில் எனது இல்லத்திற்கு வந்தார்கள். அன்றிரவு “ஸுப்ஹ்” வரை என்னுடனேயே உறங்காமலிருந்து அவருக்கு நடந்தவற்றையெல்லாம் கூறினார்கள். இந்த இறை ஞானம் தொடர்பான கிதாபுகளின் பெயர்களைக் குறித்துத் தாருங்கள் என்று என்னிடம் கேட்டார்கள். எழுதிக் கொடுத்தேன். அவர்கள் வந்து போன செய்தியை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அதன்பிறகு இரண்டு தரம் என்னிடம் வந்து தங்கிச் சென்றுள்ளார்கள். அன்று தலை வெடித்த மௌலவீ இன்று இரகசியமாக ஞானம் சொல்லிக் கொடுக்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
அல்லாஹ் ஞானத்தை தான் நாடியவர்களுக்கு வழங்குவான். எவருக்கு இறைஞானம் வழங்கப்படுகின்றதோ அவர் அதிக நன்மை வழங்கப்பட்டவராவார். “லுப்பு” உள்ளவர்களே தவிர இதை விளங்கிக் கொள்ள மாட்டார்கள். (திருமறை 2-269)
“லுப்புன் – லுப்பு” என்றால் சுருங்கச் சொன்னால் அறிவுள்ளவர்கள் எனலாம். அல்லது மாசற்ற நெஞ்சுடையார் என்றும் கூறலாம். இதில் ஆழமான விபரம் உண்டு. அதைக் கூற இவ்விடம் பொருத்தமில்லை.
காத்தான்குடியில் பஷீர் என்று ஒருவர் இருக்கின்றார். இப்போதும் உயிருடன் உள்ளார். இவரின் தந்தை அட்டாளைச்சேனையில் அடக்கம் பெற்றுள்ள காமில் வலீ அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்களை கிண்டல் செய்து ஒரு பாடல் எழுதி தெருவெல்லாம் பாடித் திரிந்தார். அந்தப்பாடல்
கும்மியடி பெண்ணே கும்மியடி
“குப்ர்” ஓங்கி ஓடவே கும்மியடி
என்று தொடங்கும் பாடலாகும். ஏனைய அடிகள் எனது நினைவில் இல்லை. அந்தப்பாடலில் வெள்ளி ஆலிம் அவர்களை அவர் நையாண்டி பண்ணுகிறார்.
ஒரு நாளிரவு அவரின் கனவில் தோன்றிய வெள்ளி ஆலிம் அவர்கள் அவரைப் பிரம்பால் அடித்து எச்சரித்தார்கள். காலையில் எழுந்த அவர் முகம் கூடக் கழுவாமல் வெள்ளி ஆலிம் அவர்களின் சந்திப்புக்காக “கிராண்குளம்” என்ற தமிழர்கள் வாழும் ஊரை நோக்கி நடையைக் கட்டினார். அக்காலத்தில் வெள்ளி ஆலிம் அவர்கள் அங்குள்ள ஒரு தென்னந் தோட்டத்தில் ஒரு “மகாம்” அமைத்து அங்கு “கல்வத்” இருந்தார்கள். அங்கு சென்ற நக்கல் பாடகர் தான் எடுத்துச் சென்றிருந்த மகானுக்கு எதிராக தான் வெளியிட்டிருந்த நக்கல் பாடல் பிரசுரப் பிரதிகளில் எஞ்சியதை மகான் முன்னிலையில் தரையில் போட்டு காலால் மிதித்து அதில் துப்பிவிட்டு மகானின் காலடி பணிந்து ஞானதீட்சை கேட்டு நின்றார். அன்றிரவே அவருக்கு ஞானதீட்சை வழங்கினார்கள் மகான் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் அவர்கள். றஹிமஹுல்லாஹ்.
அன்று முதல் பாடகர் ஞானத்துறையில் இறங்கி தான் மரணிக்கும் வரை அவர்களின் சிஷ்யன் – முரீதாகவே வாழ்ந்து இறையடி சேர்ந்தார். “கபறல்லாஹு துனூபஹ்” غفر الله ذنوبه
இந்தப் பாடகர் வேறு யாருமில்லை. நமக்கு அறிமுகமான, இவ்வூரின் பிரமுகர்களில் ஒருவருமான அஷ்ஹாபிய்யா பஷீர் அவர்களின் தந்தைதான். شفى الله أمراض ابنه ببركة شيخه
மேற்கண்ட இரண்டு வரலாறுகள் மூலம் அல்லாஹ் ஒருவரை நல்வழிப்படுத்த நாடினால் “குன்” என்பான் அது நடந்துவிடும். “குன்” என்ற சொல்லால் குவலயத்தை வெளியாக்கியவன் துய்யவன்.
سبحان من أظهر العوالم كلّها بالكاف والنّون، وهو عينُها، وأوجد الموجودات كلّها من ذاته المقدّسة المنزّهة من كلّ عيب ونقص وهو عينُها، وأنعم على كلّ عبدٍ من عباده بنِعَمٍ وهو عينُها، أعمى اللهُ أبصارَ وبصائرَ من أفتى بردّة القائلين بوحدة الوجود والعارفين بها، وعفى عنهم إن رجعوا من فتواهم، لأنّه عَفُوٌّ كريم، وابتلاهم بأمراض إن لم يرجعوا لأنّه جبّار قهّار منتقم،
அறபுக் கல்லூரி மாணவர்களில் ஒரு மாணவன் ஓர் அமைப்பின் “அமீர்”மார்களில் ஒருவரிடம், “முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே” என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறியுள்ளான். இதுபற்றி விளக்கம் சொல்லுங்கள் என்று கேட்டானாம்.
அதற்கு அந்த அமீர் ஸாஹிப் இது சாதாரணமாக விளங்க வேண்டிய சின்ன விடயம்தானே! இது உனக்கு விளங்கவில்லையா? என்று ஒரு கேள்வி எழுப்பிவிட்டு தம்பி! படைப்புகளைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் மட்டும் இருந்தானல்லவா? அதனால் அவன் முந்தினவன், படைப்புகள் எல்லாம் அழிந்த பின் அவன் மட்டும் இருப்பானல்லவா? அதனால் அவன் பிந்தினவன் என்று விளக்கம் கூறிய அமீர் ஸாஹிப் அவர்கள் தனது உள்ளங்கையை விரித்துக் காட்டி இப்போது உள்ளங்கை வெளியானதல்லவா? விரல்களை மடக்கி கையை பொத்திவிட்டு இப்போது உள்ளங்கை உள்ளானதல்லவா? இதுவே திரு வசனத்தின் விளக்கம் என்றாராம் அமீர் ஸாஹிபு.
இவரின் விளக்கம் யாவையும் அமைதியாக செவிமடுத்துக் கொண்டுடிருந்த கல்லூரி மாணவன் அமீர் ஸாப் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேட்டான். அதற்கவர் சற்றுப் பயந்தவர் போல் ஆம் என்றார்.
அமீர் ஸாப்!, هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ என்ற திரு வசனம் நான்கு அம்சங்களைக் கொண்டதாகும். இந்த நான்கும் ஒரே நேரத்தில் ஒருவனில் இருக்க வேண்டும் என்றே இத்திரு வசனம் கூறுகின்றது. இதற்கு ஆதாரம் குறித்த நான்கு அம்சங்களும் “வாவு” என்ற எழுத்து மூலம் இணைக்கப்பட்டிருப்பதேயாகும். முந்தினவனும், பிந்தினவனும், வெளியானவனும், உள்ளானவனும் அவனே என்ற திரு வசனத்தின்படி அல்லாஹ் ஒரே நேரத்தில் முந்தினவனாயும், அதே நேரத்தில் பிந்தினவனாயும், அதே நேரத்தில் வெளியானவனாயும், அதே நேரத்தில் உள்ளானவனாயும் இருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் விளக்கம் இத்திரு வசனத்திற்கு பொருத்தமானதாகத் தெரியவில்லையே! ஒரே நேரத்தில்தான் நான்கு அம்சங்களும் இருக்க வேண்டுமென்று ஒவ்வொரு அம்சத்திலுமுள்ள “வாவு” சொல்கிறது என்றான்.
அமீர் ஸாப் அவர்கள், தம்பி! நீ சொல்வதும் சிந்திக்க வேண்டிய விடயம்தான். நான் ஒரு வாரம் ஜமாஅத் போக உள்ளேன். வந்தபின் நாம் சந்தித்துப் பேசுவோம் என்றார் அமீர் ஸாப். நல்லது என்றான் கல்லூரி மாணவன். வருடங்கள் பல நகர்ந்தும் கூட அமீர் ஸாப் கல்லூரி மாணவனின் வீட்டு வழியால் கூட போகவில்லை.
கல்லூரி மாணவன் கேட்ட கேள்வி நியாயமானதும், அர்த்தமுள்ளதுமாகும். அமீர் ஸாப் தனது கையைப் பொத்தி விரித்துக் காட்டியதற்கும், அல்லாஹ் படைப்புகளைப் படைக்குமுன் முந்தினவன் என்றும், படைப்பு அழித்த பின் அவன் பிந்தினவன் என்றும் விளக்கம் கொடுத்ததற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. அமீர் ஸாப் கல்லூரி மாணவனுக்கு பேய்ப் படமொன்று காட்டியுள்ளார்.
கல்லூரி மாணவனின் கேள்வி ஒரே நேரத்தில் அல்லாஹ் முந்தினவனாயும், பிந்தினவனாயும், வெளியானவனாயும், உள்ளானவனாயும் இருப்பது எவ்வாறு? என்பதேயாகும். ஏனெனில் ஒருவன் முந்திவனாயிருந்தால் அவனே பிந்தினவனாயிருக்க முடியாது. இதேபோல் ஒருவன் வெளியானவனாயிருந்தால் அவனே உள்ளானவனாயிருக்க முடியாது. எதிர்ச் சொற்கள் ஒன்றில் ஒன்றுசேர்வது “முஹால்” அசாத்தியமானதாகும்.
“ஹுவல் அவ்வலு” என்ற திரு வசனம் தருகின்ற கருத்தின்படி அல்லாஹ்வில் எதிர்ச் சொற்கள் ஒன்று சேர்கின்றன.
எதிர்ச் சொற்கள் ஒன்றுசேர்வது அசாத்தியம் என்பது உண்மைதான். ஆயினும் இவ்விடயத்தில் அல்லாஹ்வை பொறுத்த மட்டில் அது சாத்தியமானதே. சாத்தியமாதல், அசாத்தியமாதல் என்பது சிருட்டிக்கேதான். அல்லாஹ்வுக்கல்ல. அல்லாஹ்விலும் அது அசாத்தியமென்றால் திருக்குர்ஆனும், நபீ மொழிகளும் பொய்யாக்கப்பட்டுவிடும்.
ஸூபீ மகான்கள் தமது நூல்களில் இது தொடர்பாக தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். ضِدَّانِ لَا يَجْتَمِعَانِ إِلَّا فِى ذَاتِ اللهِ تَعَالَى அல்லாஹ்வின் “தாத்”திலேயே தவிர எதிர்ச் சொற்கள் ஒன்று சேராதென்று அவர்கள் சொல்லிவிட்டார்கள். மேற்கண்ட வசனத்தில் முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற எதிர்ச் சொற்கள் ஒன்று சேர்ந்திருப்பது படிப்பறிவற்றவர்களுக்கும் தெரிந்த விடயமேயாகும்.
முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே என்பதற்கு படைப்புகளைப் படைப்பதற்கு முன் அவன் முந்தினவன் என்றும், எல்லாமே அழிந்த பின் அவன் பிந்தினவன் என்றும் விளக்கம் சொன்னவரும், வெளியானவன், உள்ளானவன் என்பதற்கு தனது கையைப் பொத்தியும், விரித்தும் காட்டியவருமான அமீர் ஸாப் தனது “அக்ல்” புத்தியோடு நின்று கொண்டார். அது சொன்னதை நம்பினாரேயன்றி அல்லாஹ் சொன்னதை நம்பவில்லை. அமீர் ஸாப் கூறிய விளக்கத்தின்படி எதிர்ச் சொற்கள் ஒரே நேரத்தில் ஒன்று சேரவில்லை என்பது சிந்தனையாளர்களுக்கு மறையாது.
“அல் இன்ஸானுல் காமில்” என்ற நூல் அப்துல் கரீம் அல் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரியது என்ற கருத்தின்படி அவர்கள் சொன்னதாக, அல்லது அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரியது என்ற கருத்தின்படி அவர்கள் சொன்னதாக வந்துள்ள பாடல் பின்வருமாறு.
وَمَا الْـخَلْقُ فِى التِّمْثَالِ إِلَّا كَثَلْجَةٍ – وَأَنْـتَ بِهَا الْـمَاءُ الَّـذِيْ هُـوَ نَابِعٌ
فَمَا الـثَّـلْجُ فِى تَحْقِيْقِنَا غَيْرَ مَائِهِ – وَغَيْرَانِ فِى حُكْمٍ دَعَتْهُ الـشَّـرَائِعُ
وَلَكِنْ بِذَوْبِ الـثَّلْجِ يُـرْفَعُ حُكْمُهُ – وَيُوْضَعُ حُكْمُ الْمَاءِ وَالْأَمْرُ وَاقِعٌ
تَـجَـمَّعَتِ الْأَضْدَادُ فِى وَاحِدِ الْبَهَا – وَفِـيْـهِ تَـلَاشَـتْ فَهُوَ عَنْهُنَّ سَاطِعٌ
படைப்புக்கு உதாரணம் ஐஸ் கட்டி போன்று. அல்லாஹ் அதிலுள்ள தண்ணீர் போன்றவனாவான். ஸூபீகளான நாங்கள் தண்ணீர் வேறு ஐஸ் கட்டி வேறு என்று சொல்ல மாட்டோம். ஆயினும் அது வேறு இது வேறு என்று சொல்வது “ஷரீஆ”வின் பார்வையிலேதான். ஐஸ் கட்டி கரைந்தால் தண்ணீர்தான். கரையுமுன் அது ஐஸ் கட்டிதான். அதற்கான சட்டம் வேறு. கரைந்து தண்ணீரான பின் அதற்கான சட்டமும் வேறுதான். எதிரானவைகள் இங்கு ஒன்று சேர்ந்துள்ளன. ஐஸ்கட்டி என்பது “ஷரீஆ”வின் பார்வையில்தானேயன்றி எதார்த்தத்தில் அது தண்ணீரேயன்றி வேறில்லை. ஒரு வகையில் ஐஸ்கட்டியாகவும், இன்னொரு வகையில் தண்ணீராகவும் உள்ளது. ஐஸ்கட்டி தோற்றத்திலும் நீருக்கு வேறானதும், பாவனையிலும் நீருக்கு வேறானதுமாகும். ஐஸ்கட்டியாகத் தோற்றுவது நீரேயன்றி வேறொன்றில்லை. அதை நீரென்று சொல்லாவிட்டாலும் கூட அது நீரேதான்.
ஒவ்வொரு “ஸூறத்” உருவத்திற்கும் ஒவ்வொரு பெயருண்டு. அதேபோல் அதற்கான பாவனை முறையுமுண்டு. உருவத்திற்கேற்ற பெயரைச் சொல்வது போல் அதற்கான பாவனை முறையையும் கொடுக்க வேண்டும்.
ஐஸ்கட்டி எதார்த்தத்தில் நீராக இருந்தாலும் கூட அதைச் சுட்டிக் காட்டி நீரை எடு என்று எவரும் சொல்வதுமில்லை. சொல்லவும் கூடாது. ஆயினும் அந்த ஐஸ்கட்டி நீரேயன்றி நீருக்கு வேறானதல்ல என்று “ஈமான்” கொள்ள வேண்டும். நம்ப வேண்டும். இதேபோல் நீரை சுட்டிக் காட்டி ஐஸ்கட்டியை எடு என்று எவரும் சொல்வதுமில்லை. சொல்லவும் கூடாது.
ஐஸ்கட்டி எதார்த்தத்தில் நீரென்பதால் மீனைப் பாதுகாக்க நீரை ஊற்றி வைக்க முடியாது. வைக்கவும் கூடாது. ஐஸ்கட்டியைப் போட்டே மீனைப் பாதுகாக்க வேண்டும். நீர், ஐஸ் கட்டி இரண்டிலும் ஒவ்வொன்றுக்கும் தனியான பாவனை முறை உண்டு.
இவ்வாறுதான் அல்லாஹ்வும், அவன் படைப்புகளுமாகும். ஐஸ்கட்டி நீரின் வெளிப்பாடாயிருப்பது போல் எந்த ஒரு படைப்பாயினும் அது அல்லாஹ்வின் வெளிப்பாடேயன்றி – அவனுடைய “தாத்”தின் வெளிப்பாடேயன்றி அது அவனின் “தாத்”திற்கு வேறான ஒன்றல்ல. எவன் வேறென்று சொன்னானோ அவன் பொய் சொன்ன பாவியாகிவிடுவான். இவ்வடிப்படையில் படைப்பு படைத்தவனுக்கு வேறானதென்று சொன்னவனும் பொய் சொன்ன பாவியேயாவான்.
َوَالوُجودُ وَالْعَدَمُ مُتَقَابِلَانِ، وَفَلَكُ الْأُلُوْهِيَّةِ مُحِيْطٌ بِهِمَا، لِأَنَّ الْأُلُوْهِيَّةَ تَجْمَعُ الضِّدَّيْنِ مِنَ الْقَدِيْمِ وَالْحَدِيْثِ، وَالْحَقِّ وَالْخَلْقِ، وَالْوُجُوْدِ وَالْعَدَمِ، وَلَيْسَ لِتَجَلِّي الْأُلُوْهِيَّةِ حَدٌّ يَقِفُ عَلَيْهِ التَّفْصِيْلُ، فَلَا يَقَعُ عَلَيْهَا الْإِدْرَاكُ التَّفْصِيْلِيُّ بوجهٍ مِنَ الْوجوهِ، لأنّه محالٌ على الله أن يكونَ له نهايةٌ، وَلَا سَبِيْلَ إِلى إِدْراكِ ما ليس له نِهَايَةٌ سبحانه وتعالى، (الإنسان الكامل، 1 – 23، 24 )
“வுஜூத்” உள்ளமை என்பதும், “அதம்” இல்லாமை என்பதும் எதிர்ச் சொற்களாகும். ஒன்றுக்கு மற்றது எதிரானதாகும். எனினும் “உலூஹிய்யத்” என்ற தெய்வீகம் இரண்டையும் உள்வாங்கியதாகும். ஏனெனில் தெய்வீகம் என்பது “கதீம்” பூர்வீகத்தையும், “ஹதீது” புதியதையும், “ஹக்கு” என்ற இறைவனையும், “கல்கு” என்ற படைப்பையும், “வஜூத்” என்ற உள்ளமையையும், “அதம்” என்ற இல்லாமையையும் – அதாவது ஒன்றுக்கு மற்றது நேர் எதிரானதையும் ஒன்று சேர்த்துக் கொள்ளும். உள்வாங்கிக் கொள்ளும். தெய்வீகத்தின் வெளிப்பாட்டிற்கு விபரம் கூறினாலும் கூட அதற்கு எல்லை, கட்டுப்பாடு இல்லாமற் போய்விடும். எந்த வகையிலும் அதன் விபரத்தை அறிந்து கொள்ளமுடியாது. ஏனெனில் அல்லாஹ்வுக்கு ஒரு முடிவெடுப்பது -முடிவு காண்பது “முஹால்” அசாத்தியமானதாகும். முடிவில்லாத ஒன்றை அடைந்து கொள்வதற்கு வழியே இல்லை.
(அல் இன்ஸானுல் காமில், பாகம் – 01, பக்கம் – 23, 24)
ஊடுருவல் “பத்வா”வில் ஊடுருவல்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை எனக்கும், நான் கூறிய “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தைச் சரிகண்ட, உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற பல்லாயிரம் முஸ்லிம்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று வழங்கிய “புற்று நோய் புத்வா”வில் ஊடுருவல் செய்துள்ளார்கள் என்றும், பல பொய்கள் கூறியுள்ளார்கள் என்றும், அவர்களின் ஊடுருவல், மற்றும் பொய் புரட்டல்கள் பற்றியும் கடந்த பதிவுகளின் போது சுட்டிக் காட்டியிருந்தேன். புட்டுக் காட்டியிருந்தேன்.
எனது பதிவுகளைப் பார்த்த பலர் “ஸுப்ஹானல்லாஹ்” உலமாஉகள் அவ்வாறு செய்வார்களா? என்று வியந்து போனார்கள். அவ்வாறு வியந்து வியர்வை சிந்தி நின்ற சகோதரர்களுக்கு அவர்கள் ஊழற்பேர்வழிகள்தான் என்பதை ஆதாரத்தோடு நிறுவுவதற்காகவே இவ்விடயத்தைப் பதிவிடுகிறேன்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் மௌலவீ MMM முர்ஷித் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்காகச் சென்று அங்கு நடைபெற்ற விடயங்களை கள்ளத் தனமாக போனில் “ரெகோர்ட்” பதிவு செய்தபோது எதிர்பாராமல் மாட்டிக் கொண்டு தடுமாறிய செய்தியை பல ஊடகங்கள் மூலம் உலகில் வாழும் பலரும் பார்த்தார்கள். “ஸுப்ஹானல்லாஹ்” உலமாஉகள் அவ்வாறு செய்வார்களா? என்று வியந்து வியர்த்துப் போனவர்கள் கூடப் பார்த்து மீண்டும் வியந்துவிட்டார்கள். உலமாஉகள் சமுகத்திற்கே இந்த மௌலவீ கரி பூசிவிட்டார். இவர் யார்? திருடனா? இல்லையா? பணத்தை திருடியவன் மட்டும் திருடனல்ல. கள்ள வேலை செய்தவனும் கள்ளன்தான் என்பது படித்தவர்களுக்கு மறைவானதல்ல.
“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்ற முன்னோர்களின் தத்துவத்தை பொது மக்கள் சரியாக விளங்கிக் கொண்டால் போதும். அல்ஹம்துலில்லாஹ். உலமாஉகள் எல்லோரும் கள்வர்களுமல்ல. அவர்கள் எல்லோரும் நல்லவர்களுமல்ல என்ற உண்மை தெளிவாகும்.
அல்லாஹ் திருமறையில்,
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
அல்லாஹ்வின் அடியார்களில் அவனைப் பயந்து நடப்பவர்கள் உலமாஉகள்தான் (திருக்கர்ஆன் 35-28) என்று கூறியுள்ளான்.
திருக்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் இவ்வசனத்தை إِنَّمَا يَخْشَى اللَّهُ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءَ என்றும் ஓதலாம். இதற்கும் சட்டம் உண்டு. இவ்வாறு ஓதினால் “அல்லாஹ்வின் அடியார்களில் உலமாஉகளையே அவன் பயப்படுகின்றான்” என்று பொருள் வரும்.
இதன் மூலம் உலமாஉகளில் அல்லாஹ்வைப் பயப்படுபவர்களும் உள்ளார்கள். அவன் பயப்படும் உலமாஉகளும் உள்ளார்கள் என்ற உண்மை தெளிவாகும்.
இத்திருவசனத்திலுள்ள அறபு மொழியிலக்கணம் பற்றி சுருக்கமாக எழுதுகிறேன். இவ்விபரம் அறபு மொழியிலக்கணம் கற்றவர்களுக்கு மட்டுமே புரியும்.
(அதாவது இந்த வசனத்தில் வந்துள்ள يَخْشَى – “யக்ஷா” என்ற பிஃலுக்கு اللهَ “அல்லாஹ்” என்ற சொல்லை மப்ஊல் முகத்தம் – مَفْعُوْلْ مُقَدَّمْ ஆகவும், اَلْعُلَمَاءُ – “அல்உலமாஉ” என்ற சொல்லை “பாயில் முஅக்கர்” ஆகவும் கொள்ள வேண்டும்)
1. لفظة الله فى الآية المذكورة مفعولٌ مقدَّمٌ لِيَخشى، ولفظة العلماء فاعلٌ مؤخَّرٌ ليخشَى، وهذا يفيد المعنى الأوّل،
2. ولفظة الله فى الآية فاعلٌ ليخشَى، ولفظة العلماء مفعولٌ ليخشَى، وهذا يفيد المعنى الثاني،
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவல் செய்தது போன்றே குறித்த உலமா சபையைச் சேர்ந்த “புத்வா” குழுவினரும் எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் “முர்தத்” “புத்வா” வழங்கிய விடயத்தில் ஊடுருவல் செய்துள்ளார்கள். இதன் முழு விபரமும் நூல் வடிவில் மிக விரைவில் வெளிவரும். இன்ஷா அல்லாஹ்!