அன்புள்ள முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
நலன் விரும்பிகள் பலரின் வேண்டுகோளைக் கருத்திற் கொண்டு “ஸகறாத்” என்ற மரண விளிம்பில் தவிக்கும் படித்துமறிவற்ற பலருக்கான அவசர சிகிச்சைதான் இந்தப் பதிவாகும்.
أَفْضَلُ الْعِلْمِ عِلْمُ الْحَالِ “அறிவில் சிறந்தது கால சூழ் நிலைக் கேற்ற அறிவு” என்ற அணணலெம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருள்வாக்கின் படி “வஹ்ஹாபிஸம்” என்ற பயங்கர நோயால் முஸ்லிம்களிற் பலர் பாதிக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் அவர்களுக்கு சிகிச்சையளித்து அவர்களைச் சுகப்படுத்துவதும், பாதிக்கப்படாதவர்களை பாதுகாப்பதுமே மார்க்க அறிஞர்களான உலமாஉகளின் தலையாய கடமையாகும்.
இக்கடமையை வரிந்து கட்டிக் கொண்டு வஹ்ஹாபிஸம் என்ற நோய்க்கு எதிரான கொள்கைப் பிரச்சாரமென்ற மருந்து கொடுத்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய மார்க்க அறிஞர்கள் தம்மிடம் அந்த நோய்க்கான மருந்து இல்லாததினாலும், அல்லது இஸ்லாம் மார்க்கத்திற்காக தம்மை அர்ப்பணிக்கும் துணிவும், மனப்பான்மையும் இல்லாததினாலும் அவர்கள் தம்மை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் குரட்டையடித்து உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட, அறிந்த நான் என்னால் முடிந்த பணி செய்து இஸ்லாமிய மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற நூலை எழுதி இலங்கைப் பணம் 75 இலட்சம் ரூபாய் செலவிட்டு இந்தியாவில் அச்சிட்டு இலவசமாக வினியோகித்தேன்.
வெளியிடு முன்னேயே விஷப்பல் கழட்டப்பட்ட சில பாம்புகள் சீறிப் பாயுமென்பதை நான் அறிந்திருந்தும் கூட விஷப்பற்களற்ற அந்தப் பாம்புகளுக்கு பயப்படாமல் என் பணியைச் செய்தேன். அல்ஹம்து லில்லாஹ்! அச்சிட்ட 3000 பிரதிகளில் 1600க்கும் அதிகமான பிரதிகளை உலமாஉகளுக்கும், அறபுக் கல்லூரிகளுக்கும், பட்டதாரிகள், மற்றும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுக்கும், சட்டத்துறை சார்ந்தவர்களுக்கும் வழங்கியுள்ளேன். தமிழ் நாட்டிலுள்ள ஸுன்னீ அமைப்புக்களின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்களுக்கென்று 1000 பிரதிகளையும், இதுவரை இலங்கை அறிஞர்களில் வழங்கப்படாதவர்களுக்கென்று 400 பிரதிகளையும் வைத்துள்ளேன். இந்தியாவுக்கான போக்குவரத்துக் கதவு திறந்தபின் அங்கு அனுப்பவுள்ளேன்.
என்னுடைய இந்தப் பணி தம்மை ஸுன்னீகள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களால் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். ஆயினும் இதுவரை உலமாஉகள் அமைப்பினாலோ, அல்லது தம்மை ஸுன்னீ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறுபவர்களாலோ எந்த ஒரு பாராட்டுக் கடிதமும் எனக்கு வரவில்லை.
الحمد لله على كلّ حال، لا لي، لأني معدوم، كيف يُحمد المعدوم؟ أليس هذا محالا؟
ஆயினும் பாராட்டுதலுக்கு மாறாக எனது நூலில் பல இடங்களில் பிழையிருப்பதாகவும், அண்ணலெம்பெருமானின் பெற்றோர்களை நான் காபிர்கள் என்று எழுதியிருப்பதாகவும், மற்றும் இப்றாஹீம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் தந்தையைக் காபிர் என்று எழுதியிருப்பதாகவும் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி நாட்டில் முஸ்லிம்களுக்கிடையிலேயே பிளவையும், பிரச்சினைகளையும் உருவாக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு கற்றுமறிவற்ற சில சில்லறைகள் விசர் நாய்கள் போல் ஓடித்திரிகிறார்கள். இவர்களின் இச்செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவர்கள் ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டியவர்கள்.
சீறும் சில்லறைகளே!
எனது நூலில் நானே பல இடங்களில் “எனது நூலில் பிழை இருக்கக் கண்டால் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டும்” என்று அன்புடன் கேட்டிருக்கிறேன். நான் எழுதிய இந்த வரிகள் உங்களின் கண்களுக்கு தெரியவில்லையா? தெரிந்தும் தெரியாதவர்கள் போல் நடிக்கிறீர்களா? அல்லது உங்களின் பொறாமை இருள் அவ்வரிகள் உங்களின் கண்களுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டதா?
اَلدِّيْنُ اَلنَّصِيْحَةُ لِأَخِيْهِ الْمُسِلِمِ “
மார்க்கம் என்பது ஒரு சகோதரன் தவறு செய்தால் அவனுக்கு நல்லுபதேசம் கூறுவதேயாகும்” என்ற பெருமானாரின் அறிவுரை உங்களின் கண்களுக்குத் தெரியவில்லையா? உங்களின் செவிகளுட் செல்லவில்லையா? மார்க்கம் கூறிய மேற்கண்ட வழியிருக்க அவ்வழியால் நீங்கள் வராமல் பின் வழியில் நின்று கொண்டு குரைப்பதேன்? முதுகில் குத்துவதேன்? என்னிடம் கடிதம் மூலம் கேட்க உங்களிடம் தபாற் செலவுக்குப் பணமில்லையா? எவ்வளவு வேண்டுமென்று சொல்லுங்கள். அல்லது என்னிடம் வருவதற்கு பிரயாணச் செலவுக்கு பணமில்லையா? எவ்வளவு வேண்டுமென்று சொல்லுங்கள் தருகிறேன். சந்தியில் நின்று கூச்சலிடாமல் முறையோடு கேளுங்கள். அல்லது முறையோடு அணுகுங்கள். நீங்கள் முகவரி, வீட்டிலக்கம், தெருப் பெயர், றப்பர் சீல், லெட்டர்பேட் இல்லாத வந்தான் வரத்தானா? முறையோடு கடிதம் எழுதி கையெழுத்துடன் அனுப்புங்கள். அல்லது கொப்பி, பென்சிலுடன் என்னிடம் வந்து அமருங்கள். கற்றுத் தருகிறேன். العلم يُعطى ولا يأتي
நான் எனது நூலில் எந்தப் பக்கத்தில் என்ன பிழை எழுதியுள்ளேன் என்றும், அது பிழையென்பதற்கான ஆதாரம் எதுவென்றும் எழுத்து மூலம் சரியான பெயர் முகவரியுடன் எனக்கு பதிவுத் தபாலில் அனுப்புங்கள். அதற்கான விடையையும், விளக்கத்தையும் அதேபோல் அனுப்பி வைப்பேன்.
நான் பெயரில்லாதவனோ, முகவரி இல்லாதவனோ, வீட்டிலக்கம் இல்லாதவனோ, சமூகத்துடன் கலக்காமல் பதுங்கு குழியில் பதுங்கிக் கொண்டிருப்பவனோ அல்லன்.
எழுதுங்கள் பதில் தருவேன். தட்டுங்கள் திறப்பேன். முட்டிய பின் குனிவதை விட முட்டுமுன் குனிவதே கௌரவம் காக்கும்.
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
03.09.2020