Monday, October 7, 2024

ஸூபிஸ ஞானம்

தொகுப்பு: மௌலவி அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ

علم التصوُّف لَيْسَ هو اللَّقْلَقَةَ باللِّسان، وإنّما هو أَذْوَاقٌ وَوِجْدَانٌ، ولا يُؤخذ من الأوراق، وإنّما يُؤخذ من أهل الأذواق، وليس يُنال بالقيل والقال، وإنما يؤخذ من خِدمة الرِّجال، وصُحبة أهلِ الكمال، واللهِ ما أَفلحَ مَنْ أفلح إلّا بصُحبةِ مَنْ أفلح ‘

மேலே கண்ட இத்திருவசனம் الحكم “அல்ஹிகம்” என்ற ஸூபிஸ ஞான நூலின் விரிவுரை நூலான إيقاظ الهمم فى شرح الحكم என்ற நூலில் பதியப்பட்ட வசனமாகும்.

அல்ஹிகம்:
“அல்ஹிகம்” என்ற நூல் பின்வரும் இறைஞானியால் எழுதப்பட்டது.

هو الشّيخ الإمام تاج الدين وترجُمان العارفين أبو الفضل أحمد بن محمد عبد الكريم بن عبد الرحمن بن عبد الله بن أحمد بن عيسـى بن الحسين بن عطاء الله الجُذامِيُّ نَسَبًا، المالكيُّ مذهبا، الإسكندريُّ دارا، القِرَافِيُّ مزارا، الصوفيُّ حقيقة، الشّاذليّ طريقة، المتوفَّى فى جُمادَى الآخرة سنة تسع وسبعمأة،

இவர்களின் பெயர் தாஜுத்தீன் அபுல் பழ்ல் அஹ்மத் என்பதாகும். ஜுதாம் பரம்பரையைச் சேர்ந்தவர்களும், மாலிக் மத்ஹபைப் பின்பற்றியவர்களும், மிஸ்ர் நாட்டின் இஸ்கந்தரிய்யாவைச் சேர்ந்தவர்களும், “கறாபீ” என்ற இடத்தில் நல்லடக்கம் பெற்றவர்களும், ஸூபிஸ வழி வாழ்ந்தவர்களும், ஷாதுலிய்யா தரீகாவைப் பின்பற்றினவர்களுமாவார்கள். ஹிஜ்ரீ 709 ஜுமாதல் ஆகிர் மாதம் “வபாத்” மரணித்தார்கள்.

விரிவுரை நூல்:

இந்நூலுக்கு பல விரிவுரை நூல்கள் உள்ளன. அவற்றில் إيقاظُ الهِمَم என்ற நூலும் ஒன்று. இதை எழுதியவர்கள் அல் ஆரிப் பில்லாஹ் அஸ்ஸூபீ அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு அஜீபதல் ஹஸனீ றஹிமஹுல்லாஹ் ஆவார்கள்.

மேற்கண்ட அறபு வசனங்களுக்கான தமிழ் மொழியாக்கத்தை எழுதியபின் இது தொடர்பான ஏனைய விபரங்களையும் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்.

தமிழ் மொழியாக்கம்:

“தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானம் தொடர்பாக மேற்கண்டவாறு கருத்துக் கூறியவர்கள் ஒருவர் இருவரல்ல. இறைஞான மேதைகளிற் பலர் மேற்கண்டவாறு கருத்துக்கள் சொல்லியுள்ளார்கள்.

ஸூபிஸம் என்பது நாவால் – வாயால் உளறுவதல்ல. அது அனுபவத்தின் மூலம் சுவைத்தறிய வேண்டிய ஒன்றாகும். அதை ஏடுகளிலிருந்து – நூல்களிலிருந்து கற்றுக் கொள்ள முடியாது. மாறாக அனுபவித்தும், சுவைத்தும் அறிந்தவர்களிடமிருந்தே கற்றுக் கொள்ள முடியும். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதன் மூலமும் பெறக் கூடியதல்ல. இதை ஞானிகளுக்குப் பணி செய்வதன் மூலமும், அவர்களை நேசிப்பதன் மூலமுமே குறித்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இறைவன் மீது ஆணை, இறை ஞான வழியில் வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெற்றதெல்லாம் வெற்றி பெற்றவர்களுடன் நட்பாயிருந்ததினால்தான். (மொழியாக்கம் முற்றிற்று)

மேற்கண்ட அறபு வசனங்களில் لَيْسَ هو اللَّقْلَقَةَ باللِّسان என்று ஒரு வசனம் வந்துள்ளது. “லக்லகத்” என்ற சொல்லுக்கு அறபு மொழி அகராதியில் كثير الكلام அதிகம் கதைப்பவன் என்றும், حُبْسَةٌ فى اللِّسَانِ கதைக்கும் போது நாவிலேற்படும் தடை என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. இவ் இடத்தைப் பொறுத்த வரையில் வளவளவென்று கதைத்தல் என்று பொருள் கொள்வதே சிறந்ததென்று நான் கருதுகிறேன்.

இதே கருத்தை கவனத்திற் கொண்டு لَيْسَ هو اللَّقْلَقَةَ باللِّسان என்ற வசனத்தை தமிழில் மொழி மாற்றம் செய்வதாயின் “ஸூபிஸம்” என்பது வளவளவென்று நாவால் பேசுவதல்ல என்றே மொழியாக்கம் செய்ய வேண்டும்.

ஒருவன் அர்த்தமில்லாமலும், பொருத்தமில்லாமலும் தொடர்ந்து கதைத்துக் கொண்டே இருப்பானாயின் இலங்கை நாட்டின் கிழக்கில் வாழ்பவர்கள் அவன் குறித்துச் சொல்கையில் அவன் வளவளவென்று கத்திக் கொண்டிருக்கிறான் என்று கூறுவார்கள்.

“வளவள” என்ற சொல் எழுத்து, பேச்சு போன்றவற்றைக் குறித்து வரும் போது, சுருக்கமாக இல்லாமல் உரிய அளவை மீறியதாக வளவளவென்று பேசிக் கொண்டிருக்காதே, சீக்கிரம் வந்து விடு, வளவளவென்று எழுதியிருக்கிறானே தவிர கடிதத்தில் விஷயம் ஒன்றுமில்லை என்பன போன்ற கருத்துக்கு சொல்லப்படும்.

வளவள என்ற சொல்லுக்கு தமிழ் அகராதியில் மேற்கண்டவாறுதான் பொருள் கூறப்பட்டுள்ளது.

சுருக்கம் என்னவெனில் “ஸூபிஸ” ஞானக் கலையை எதிர்க்கும் அறிவிலிகள் அக்கலை தொடர்பாக பேசுகின்றவர்களை நையாண்டி பண்ணுவதற்காகவும், கிண்டல் செய்வதற்காகவும் நீண்ட நேரம் வளவளவென்று பேசிக் கொண்டிருக்கிறான் என்று இழித்துரைப்பதுண்டு, புனித நோக்கமின்றி ஸூபிஸ ஞானத்தை இவ்வாறு கிண்டல் செய்பவர்களை அறிவிலிகள் என்று கூறாமல் வேறெவ்வாறு கூறுவது?

ஸூபிஸ ஞானம், இறை ஞானம் என்பவற்றை எதிர்க்கும் பொது சனங்கள் தமது அறியாமையால் அவ்வாறு சொன்னால் அதற்காக நாம் கோபிக்கவோ, எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவோ தேவையில்லை. அவன் கெட்டான் மடையன் என்று கூறிவிடலாம்.

ஆனால் பல்லாண்டுகள் மார்க்கக் கல்வி கற்று, மௌலவீ பட்டமும் பெற்று ஊர் மக்களால் ஹஸ்றத்- ஹஸ்றத் என்று அழைக்கப்படுகின்ற ஒருவர் “தஸவ்வுப்” என்ற ஸூபிஸ இறைஞானம் பேசுகின்ற ஒருவரைக் குறித்து வளவளவென்று கத்திக் கொண்டிருக்கிறான் என்று கூறும் ஒருவரை என்னென்று சொல்வது? மா மேதை என்பதா? மா எருமை என்பதா? வாசகர்கள் முடிவு செய்யட்டும்.

சிறிய வரலாறொன்றை இங்கு எழுத வேண்டும்போல் தோணுகிறது. இது வளவளக் கதையல்ல. வடித்தெடுத்த சாரம். உண்மைச் சம்பவம்.

ஸூபிஸம் பேசுவோரும், எழுதுவோரும் தமது பேச்சிலும், எழுத்திலும் ஸூபிஸ கலைச் சொற்களை திரும்பத் திரும்ப சொல்வதுண்டு. எழுதுவதுமுண்டு. ஏன் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள்? எழுதுகிறார்கள் என்பதற்கான அடிப்படைக் காரணத்தை அவர்களிடம் கேட்டறிந்து கொள்ளாமலும், அல்லது தாமாக அதற்குப் பொருத்தமான நல்ல காரணத்தை ஆய்வு செய்தறியாமலும் அவ்வாறு பேசுகிறவனையும், எழுதுகிறவனையும் வளவளத்தான் என்று எள்ளி நகையாடும் பெரிய ஹஸ்றத்மார்களும் உள்ளனர். இன்றுவரை இன்னோர் இருந்தே வருகின்றார்கள்.

இதோ அந்த வரலாறு – ஸூபிஸ ஞானத்திற்கு ஆதரவான, தனக்கு றஊப் மௌலவீயின் ஆதரவாளன் என்று பிறரால் ஷீல் குத்தப்பட்ட ஒரு தீவிர இளைஞன் மா பெரும் ஹஸ்றத் ஒருவரைத் தனது சொந்த வேலை தொடர்பாக சந்திக்க அவர்களின் வீட்டுக்குச் சென்றான்.

போனவன் ஹஸ்றத் அவர்களுக்கு ஸலாம் சொன்னான். “நீ றஊபுடைய ஆள், உனக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றார் ஹஸ்றத். இவ்வாறு கூறிய ஹஸ்றத் அதோடு நின்றுவிடாமல் “என்னடா அந்த ஆள் இரவும் பகலும் தஜல்லீ, தாத், ஸிபத், ஷுஹூத், முறாகபா, முஷாஹதா என்று வளவளவென்று கத்திக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.

போனவன் தனது மூன்று வயதுக் குழந்தைக்காக பழக்கடையில் ஓர் அப்பிள் பழம் வாங்கி அதை ஒரு “சொப்பின் பேக்”கில் சுற்றி வைத்திருந்தான். அந்த பேக்கை தனக்கு முன்னாலிருந்த மேசையில் வைத்து விட்டு கோபப்பட்டவன் போல் நடித்து நீங்கள் சொன்ன வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள் என்று கூறியவனாக எழுந்து நின்றான்.

அந்த அப்பிள் பழத்தை ஆட்களைக் கொல்லும் “கிறேனைட்” என்று சந்தேகப்பட்டும், கோபத்தினால் அவன் எழுந்து நின்றதைக் கண்டு பயந்தும் போன ஹஸ்றத் அவர்கள், “தம்பி மகனே! நீ எனது பேரப்பிள்ளைகளுக்குச் சமமானவன். இதன் பிறகு மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்களைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை கூட நான் பேசமாட்டேன்” என்று பூமியில் கையாலடித்து அவனைக் கட்டியணைத்து முத்தங்கள் கொடுத்து உனக்கு நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார்கள். அவன் தனது தேவையைக் கூற அக்கணமே அதை முடித்துக் கொடுத்தார்கள் ஹஸ்றத் அவர்கள்.

இந்தச் சம்பவம் நடந்து சுமார் 15 வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். இப்போது அவர்கள் இருவருமில்லை. மரணித்துவிட்டார்கள்.
اَللهم اغْفِرْ لِلشَّابِّ الصُّوْفِـيِّ وَالْأُسْتَاذِ التَّائِبِ
இந்தச் சம்பவத்தின் மூலம் “தஸவ்வுப்” என்ற ஸூபிஸ இறை ஞானத்தை கிண்டல் செய்து அதை எள்ளி நகையாடும் பாமரர்கள் இருப்பது போல் ஒரு சில “ஹஸ்றத்”மார்களும் இருக்கின்றார்கள் என்பது தெளிவாகிறது. இன்னோரை حَضْرَةْ – “ஹழ்றத்” என்று அழைப்பதை விட حَسْرَةْ – ஹஸ்றத் என்றழைப்பதே சிறந்தது. இதன் பொருள் கை சேதம் என்பதாகும். وَا حَسْرَتَا عَلَى مَا فَرَّطْتُ فِى جَنْبِ اللهِ அல்லாஹ்வின் விடயத்தில் நான் செய்த கைசேதமே! என்று அநீதி செய்தவன் – அல்லாஹ்வை அறியாதவன் தனது கையைக் கடித்துக் கொண்டு கைசேதப்படுவான்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments