Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்எது சரி? எது பிழை?

எது சரி? எது பிழை?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

தொடர் – 1

“எல்லாம் அல்லாஹ்” என்றும், “எல்லாம் அல்லாஹ்வின் வெளிப்பாடு” என்றும் சொல்லப்படுகின்றது. இவ்விரண்டும் ஒன்றா? அல்லது வேறு வேறா? எது சரி? எது பிழை?

இவ்விரண்டும் வசனங்களில் மட்டும்தான் வேறானவையாகும். இவ்விரு வசனங்களும் தருகின்ற கருத்திலும், சாராம்சத்திலும் இரண்டும் ஒன்றேதான். அமைதியாகவும், நுணுக்கமாகவும் ஆய்வு செய்தால் எதார்த்தம் எதுவென்று துலங்கும்.

“எல்லாம் அல்லாஹ்வின் வெளிப்பாடு” முன்னோர்களில் அநேகர் பேசிவந்த பழைய பாணியாகும். “ஓல்ட் மொடல்” ஆகும். “எல்லாம் அல்லாஹ்” என்று சொல்வது இப்போதுள்ளவர்கள் பேசி வரும் புதிய பாணியாகும். “நியூ மொடல்” ஆகும். எனினும் கருத்திலும், சாரத்திலும் இரண்டும் ஒன்றேதான்.

இவ்வாறு நான் எழுதுவதால் முன்னோர் பேசிய பழைய பாணிதான் சரியானதென்றும், இப்போது பேசப்படும் புதிய பாணி பிழையானதென்றும் கருத்துக் கொள்ள முடியாது.

“எல்லாம் அல்லாஹ்” என்ற வசனம் கருத்தில் சரியானதாயினும் இறைஞானம் தெரியாதவர்களுக்கு அது பெரும் தாக்கமாக, ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இதனால் நாயும், பன்றியும், மலமும், சலமும் அல்லாஹ்வா? என்று அவர்களைக் கேட்க வைக்கின்றது. கோபத்தையும், ஒரு வகைக் கொதியையும் ஏற்படுத்துகிறது. ஆயினும் “எல்லாம் அல்லாஹ்வின் வெளிப்பாடு” என்ற வசனம் ஓரளவு அவர்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது. கோபத்தையும் தணிக்கிறது.

முன்னோர்களின் நோக்கம்

“எல்லாம் அல்லாஹ்” என்று பேசாமல் “எல்லாம் அல்லாஹ்வின் வெளிப்பாடு” என்று முன்னோர்களிற் பலர் பேசியதற்கான காரணம் அவ்வாறு பேசுவது பிழை என்பதற்காக அல்ல. ஏனெனில் குறித்த இரண்டு வசனங்களும் ஒரே சாராம்சத்தைக் கூறுகின்றன என்றால் அவ் இரண்டும் சரியானவையாக இருக்க வேண்டும். ஆகையால் அவ்வாறு அவர்கள் பேசியதற்கான காரணம் “வஹ்ததுல் வுஜூத்” என்ற இறை ஞானத்தை ஆழமாகப் பேசிய, அக்காலத்தில் வாழ்ந்த இறை ஞானிகளிற் பலர் இதை மறுத்து எதிர்த்த எதிரிகளால் பல்வேறு துன்பங்களுக்குள்ளாக்கப்பட்டார்கள். அவ்வாறு துன்புறுத்தப்பட்ட பலரை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்யவாகீத்” என்ற நூல் முதலாம் பாகம் ஆரம்பத்தில் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார்கள். இதை விபரமாக அறிய விரும்புவோர் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ள 2000 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலில் கண்டு கொள்ளலாம். இந்நூல் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஆதாரங்களோடு நிறுவி எழுதப்பட்ட தமிழும், அறபும் கலந்த முதன்மையான நூலாகும்.

இவ்வாறு பட்டியல் போடப்பட்ட மகான்களில் ஒருவர்தான் “இறாக்” நாட்டைச் சேர்ந்த இறைஞானி இமாம் ஹுஸைன் மன்சூர் அல்ஹல்லாஜ் என்பவராவார். இவர் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் இவர் أنا الحق “நான் அல்லாஹ்” என்று சொன்னதாகும். இதன் முழு விபரமும் நான் வெளியிடவுள்ள நூலில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.

இறை ஞானம் பேசியவர்களிற் சிலர் கொல்லப்பட்டார்கள். இன்னும் சிலர் தோலுரிக்கப்பட்டார்கள். வேறு சிலர் நாடு கடத்தப்பட்டார்கள். இன்னும் சிலர் சிங்கம், கரடி, புலி போன்ற பயங்கர மிருகங்களுக்கு உயிருடன் உணவாக்கப்பட்டார்கள்.

இவ்வாறு துன்புறுத்தப்பட்டதை கண்டும், அறிந்தும் பயந்த ஸூபிஸ மகான்களிற் பலர் “இஷாறா” “கினாயா” – என்ற சிலேடை, நொடி போன்ற பாணியில் பேசத்திட்டமிட்டு தமக்கு – ஸூபீகளுக்கு மட்டும் விளங்கும் பாணியில் சில சொற் பிரயோகங்களை அமைத்துக் கொண்டார்கள். அந்த சொற்பிரயோகமே الإصطلاحات الصوفيّة ஸூபீகளின் கலைச் சொற்கள், ஸூபீகளின் பரிபாஷை என்ற பெயர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அறபு மொழியில் பல நூல்களும் எழுதப்பட்டுள்ளன.

எதிரிகளின் தீமையைப் பயந்து இஸ்லாம் கூறும் அடிப்படைத் தத்துவமொன்றை மறைக்கலாமா? என்ற கேள்விக்கும், ஆம் என்றால் இஸ்லாமியப் போர்கள் ஏன் கடமையாக்கப்பட்டன என்ற கேள்விக்கும் எனது விரிவான நூலான “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலில் விளக்கமான விடைகள் எழுதப்பட்டுள்ளன.

முன்னோர் பாணியில் “எல்லாம் அல்லாஹ்வின் வெளிப்பாடு” என்று பேசுவதால் இதன் கருத்தை – சாராம்சத்தை எல்லோரும் எழிதில் புரிந்து கொள்வது கடினமானதென்று நினைக்கிறேன், இதை எனது அனுபவத்தில் காண்கிறேன்.

ஏனெனில் “வெளிப்பாடு” தொடர்பாக எனது பேச்சை பல்லாண்டுகள் தொடர்ந்து செவியேற்று வந்தவர்கள் கூட வெளிப்பாடு தொடர்பான எந்தவொரு விளக்கமும் தெரியாமலிருப்பதை அறிந்து இதை நான் அறிந்து கொண்டேன்.

எனவே, இது தொடர்பாக சிறார்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இங்கு எழுதுகிறேன். அறபு மொழியில் (مظهر، ظهور، ظاهر) ளாஹிர், ளுஹூர், மள்ஹர் என்ற மூன்று அம்சங்கள் உள்ளன.

ظَاهِرْ “ளாஹிர்” என்றால் வெளியாகும் பொருள் அல்லது வஸ்த்து. مَظْهَرْ “மள்ஹர்” என்றால் வெளியாகும் இடம். ظُهُوْرْ “ளுஹூர்” என்றால் வெளியாதல்.

உதாரணமாக “தங்கம் மோதிரமாக வெளியாகியுள்ளது” என்ற வசனத்தில் வெளியான தங்கம் “ளாஹிர்” வெளியான வஸ்த்து என்றும், மோதிரம் என்பது தங்கத்தின் “மள்ஹர்” தங்கம் வெளியான இடம் என்றும், தங்கம் மோதிரமாக வெளியாதல் என்பதற்கு “ளுஹூர்” என்றும் சொல்லப்படும்.

எழிதில் விளங்கிக் கொள்வதற்காக மேற்கண்ட உதாரணம் போல் பஞ்சையும், ஷேட்டையும், மரத்தையும், கதிரையையும், இரும்பையும், ஆணியையும் உதாரணங்களாக எடுத்து ஆய்வு செய்யலாம்.

இம் மூன்று அம்சங்களில் வெளியாதல் என்பது எவ்வாறென்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

அல்லாஹ் வெளியாதல் என்பதற்கு ظَهَرَ اللهُ، تَجَلَّى اللهُ (ளஹறல்லாஹ், தஜல்லல்லாஹ்) என்ற சொற்களை ஸூபீ மகான்கள் பயன்படுத்துகின்றனர்.

அல்லாஹ் வெளியாதல் என்பது புற்றிலுள்ள பாம்பு அதிலிருந்து வெளியாதல் போன்றும், போத்தலில் அடைக்கப்பட்ட நீர் அதிலிருந்து வெளியாதல் போன்று என்றும் விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவ்வாறு வெளியாவதற்கு மேற்கண்ட முந்தின உதாரணத்தில் பாம்பு என்றும், புற்று என்றும், இரண்டாம் உதாரணத்தில் போத்தல் என்றும், நீர் என்றும் இரண்டு வஸ்த்துக்கள் தேவைப்படும். இவ்வாறுதான் அல்லாஹ் வெளியாதல் என்று விளங்கினால் அல்லாஹ் என்று ஒன்றும், இன்னொன்றும் தேவைப்படும். அவ்வாறாயின் இன்னொன்று என்பது எது? என்று ஆய்வு செய்தால் அப்படியொன்று இருக்காது. இருக்குமென்று வைத்துக் கொண்டாலும் அது எது? எங்கிருந்து எப்படி வந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டும். தேடியும் கண்டுபிடிக்க முடியாதென்பதே அதன் முடிவாகும். இது துவிதம் என்ற இடத்தை நோக்கிச் சென்று விடும். துவிதம் ஏகத்துவம் அல்ல. துவிதத்திற்கு இரண்டு வஸ்த்துக்கள் அவசியம்.

எனவே, அல்லாஹ் வெளியாதல் என்பது மேலே எழுதிய இரண்டு உதாரணங்கள் போலன்றி இரண்டு என்ற துவிதக்கருத்து வந்து விடாத வகையில் உதாரணம் கூற வேண்டும்.

உதாரணமாக தங்கம் மோதிரமாக வெளியாதல் போன்று. இதற்கு இரண்டு பொருட்கள் தேவையில்லை. மாறாக தங்கம் என்ற ஒரே பொருள்தான் மோதிரம் என்ற இன்னொரு பொருளாக வெளியானது. தோற்றம் பெற்றது.

இவ்வாறுதான் பஞ்சு ஷேட்டாகவும், மரம் கதிரையாகவும், இரும்பு ஆணியாகவும் வெளியாதல் என்ற உதாரணங்களை ஆய்வு செய்தறிய வேண்டும்.

மேலே சொன்னது போல் தங்கம் மோதிரமாக வெளியாவதற்கு இரண்டு பொருட்கள் தேவையில்லாமற் போனது போல் பஞ்சு ஷேட்டாக வெளியாவதற்கும், மரம் கதிரையாக வெளியாவதற்கும், இரும்பு ஆணியாக வெளியாவதற்கும் இரண்டு பொருட்கள் தேவையில்லை. துவிதத்திற்கு இடமே இல்லை.

வெளியாதல் என்ற சொல்லின் சரியான பொருள் ஒரே பொருள் இன்னொரு பொருளாக தோற்றம் பெறுதல் என்று விளங்கிக் கொள்ள வேண்டுமேயன்றி பாம்பு புற்றிலிருந்து வெளியாதல் போலென்றும், போத்திலின் ஓட்டை வழியாக அதிலிருந்த நீர் வெளியாதல் போலென்றும் விளங்கிக் கொள்ளக் கூடாது.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசிய முன்னோர்களிற் பலர் “வெளியாதல்” என்ற சொல்லைப் பயன்படுத்தி அல்லாஹ் சிருட்டியாக வெளியானான் என்று பேசினார்களேயன்றி “ளுஹூர்” வெளியாதலென்றால் எவ்வாறு என்று பொது மக்களுக்கு தெளிவாக விளக்கி வைக்கவில்லை. பொது மக்களுக்கு இது பற்றி ஆய்வு செய்யும் திறனும், ஆற்றலும் இல்லாதிருந்ததால் அவர்கள் ஆய்வு செய்யவுமில்லை.

ஒரு ஷெய்கு – ஞானகுரு ஒருவனுக்கு “பைஅத்” என்ற ஞான தீட்சை செய்வார். அல்லாஹ்தான் உன்னாகவும், என்னாகவும், மற்றும் அனைத்து படைப்புக்களாகவும் “தஜல்லீ” “ளுஹூர்” வெளியாகியுள்ளான் என்று சொல்லிக் கொடுத்து இவ்வாறு “திக்ர்” செய்ய வேண்டும் என்றும், இவ்வாறு தொழ வேண்டும் என்றும், “ஷரீஆ”வை பேணி நடக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுப்பார். சிஷ்யனும் ஒரு ஞான குருவிடம் “பைஅத்” பெற்றுக் கொண்டோம், சுவர்க்கம் செல்ல டிக்கட் – அனுமதிச் சீட்டு கிடைத்துவிட்டதென்ற மகிழ்வோடும், மன நிம்மதியோடும் வாழ்வான். குரு சொல்லிக் கொடுத்தவாறு செயல்படுவார். அவ்வளவுதான். அவர்களிடம் இறைஞானமென்பது மண்ணளவும் இருக்காது. அவர்களுக்கு அல்லாஹ் பற்றி ஒரு விளக்கமும் இருக்காது.

தரீகாவின் ஷெய்குமார் – குருமார்.

“பைஅத்” வழங்கிய “ஷெய்கு” குரு வெளியூரவராக அல்லது வெளி நாட்டவராக இருந்தால் ஒரு வருடத்தில் ஒரு தரம் அல்லது ஆறு மாதத்தில் ஒரு தரம் சிஷ்யர்களைச் சந்திக்க வருவார். சிஷ்யர்கள் அவரை உபசரித்து அனுப்பி வைப்பார்கள். சிஷ்யர்களிடம் அல்லாஹ் பற்றிய ஞானம் மண்ணளவும் இருக்காது. சிலரைத் தவிர. அவர்கள் தமது முயற்சியால் அல்லாஹ் பற்றி ஓரளவேனும் அறிந்து கொள்வார்கள். இவ்வாறுதான் பல நூறு வருடங்களாக ஷெய்கு – முரீத் – பைஅத்” என்ற கதை தொடர்ந்து செல்கிறது.

வறுமைப்பட்ட நாட்டுப் புறங்களுக்கு வருகின்ற ஷெய்கு – குருமார் அங்குள்ள மக்களுக்கு ஓரளவு இறைஞானம் சொல்லிக் கொடுத்தாலும், வஹ்ஹாபிஸம் பற்றி எச்சரித்தாலும்கூட பெரும் பெரும் பட்டணங்களுக்கு வந்து பண முதலைகளுடன் தொடர்போடுள்ள ஷெய்குமார் “பைஅத்” செய்து முரீது – சிஷ்யர்களை உருவாக்கிக் கொண்டாலும் அவர்களுக்கு அல்லாஹ்வின் ஞானம் சொல்லிக் கொடுப்பதுமில்லை. வஹ்ஹாபிஸம் பற்றி எச்சரிப்பதுமில்லை. அதோடு அவர்களுக்கு அதற்கெல்லாம் நேரமுமில்லை.

“தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானமும், “மஃரிபா” என்ற ஞானமும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டதற்கும், புதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் இந்த நடைமுறையே காரணம் எனலாம்.

“எல்லாம் அல்லாஹ்” என்றாலும், “எல்லாம் அல்லாஹ்வின் வெளிப்பாடு” என்றாலும் சாராம்சத்திலும், விளக்கத்திலும் எல்லாம் ஒன்றுதான். அதாவது அவனைத்தவிர வேறொன்றுமில்லை என்பதும், அவனல்லாத ஒன்றுமில்லை என்பதும், அவனுக்கு வேறான ஒன்றுமில்லை என்பதுமே சாராம்சமாகும்.

அன்று வாழ்ந்த குருமார் எதிரிகளின் துன்புறுத்தல்களைப் பயந்தும், “புத்வா” வியாபாரிகளின் வாளைப் பயந்தும் பொது மக்களுக்கு இறைஞானம் சொல்லிக் கொடுக்காமல் விட்டது போல் விஞ்ஞான அறிவும், ஆய்வுத்திறனும், பொது அறிவும் வளர்ச்சியடைந்துள்ள இக்காலத்தில் குருமாரும், உலமாஉகளும் சொல்லிக் கொடுக்கவில்லையானால் அவர்களே மறுமையில் குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களாவர்.

துவிதக் கொள்கை இஸ்லாமிய கொள்கைக்கு எந்த வகையில் முரண்படுகின்றது? அத்வைதம் எந்த வகையில் உடன்படுகிறது? (தொடரும்)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments