இரண்டு“வுஜூத்” உள்ளமை இல்லையாதலால் அல்லாஹ்வுக்கு நிகரில்லை! “அத்வைதம்” என்பது ஸூபிஸத்தின் மூத்த பிள்ளை!
————–
துவிதமே எமது கொள்கை! அதுவே இஸ்லாம்!
அத்வைதமல்ல! அது “ஷிர்க்” ஆகும்!
எங்கள் சபையில் ஸூபீகளும் உள்ளனர்.
பொய்யுரையாப் பெருந்தகை ரிஸ்வீ முப்தீ அறிவிப்பு.
————–
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.
“தஸவ்வுப்” என்ற ஸூபிஸக் கொள்கைதான் வடித்தெடுத்த, சுத்தமான, சரியான இஸ்லாமிய கொள்கையாகும். இது தொடர்பான விளக்கமில்லாத ஒருவர் அல்லாஹ்வை அறிதலென்பதும், அவனை அடைவதென்பதும் கடினம் என்பதை விட அசாத்தியம் என்பதே பொருத்தமானதென்று நான் கருதுகிறேன். இது நான் கண்ட அனுபவ ரீதியான முடிவாகும்.
வுஜூத் – தாத்
“வுஜூத்” என்றும், “தாத்” என்றும் ஸூபிஸ ஞான மகான்களால் அழைக்கப்படுகின்ற அல்லாஹ் என்ற திரு நாமத்திற்குரிய மெய்ப் பொருள் படைப்புக்களில் எது போன்றும் இல்லாததாகும். எவனாவது அந்த மெய்ப் பொருள் படைப்புக்கள் போன்றதென்று சொன்னானாயின் அல்லது மனதில் நினைத்தானாயின் அவன் “முஷ்ரிக்” இணை வைத்தவனாகிவிடுவான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
لَيْسَ كَمِثْلِهِ شَيْئٌ
“அவன் போன்று எதுவுமில்லை” என்ற
திரு வசனமும்,
وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
“அவனுக்கு நிகராக எவனுமில்லை” என்ற திரு வசனமும் மேற்கண்ட உண்மையை நிறுவுகின்றன.
அவனுக்கு நிகராக – அவன் போல் எதுவுமில்லையென்றால் அது எந்த அம்சத்தில், எந்த விடயத்தில் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த மெய்ப் பொருள் எதார்த்தத்தில் உருவமில்லாததாயும், சடமில்லாததாயும், எந்த ஒரு குறிப்பு இல்லாததாயும் இருக்கின்ற நிலையில் எந்த அம்சத்தில் அவன் போல் எதுவுமில்லை, எவனுமில்லையென்று சொல்வது முக்கியமான ஒரு கேள்வியாகும். இதற்குரிய சரியான விடை தெரியாத பொது மக்கள் அவனுக்கு கை உண்டு ஆயினும் அவனின் கை போல் எவனுக்கும் கையில்லை, அவனுக்கு காலுண்டு. எனினும் அவனின் கால் போல் எவனுக்கும் கால் இல்லை, அவனுக்கு வாய் உண்டு. எனினும் அவனின் வாய் போல் எவனுக்கும் வாய் இல்லை. அவனுக்கு உருவமுண்டு. எனினும் அவனின் உருவம் போல் எவனுக்கும் உருவமில்லை என்று கற்பனை செய்வதற்கும், விளங்குவதற்கும் சாத்தியமுண்டு. இதற்கான காரணம் என்னவெனில் ஒன்று இன்னொன்று போன்றதா? இல்லையா? என்பதை அறிந்து அது இதற்கு நிகரானது அல்லது நிகரில்லாதது என்று சொல்வதாயின் இரண்டிலும் உறுப்புக்கள் இருக்க வேண்டும், சில குறிப்புக்களும் இருக்க வேண்டும். ஒன்றுமே இல்லையென்றால் எதைக் கொண்டு அது இதற்கு நிகராணது அல்லது நிகரில்லாதது என்று சொல்ல முடியும்?
ஆகையால் அல்லாஹ்வுக்கு நிகராக உயர்திணையிலோ அல்லது அஃறிணையிலோ எதுவுமே இல்லையென்று சொல்வது “வுஜூத்” என்ற உள்ளமையிலென்று அறிந்து கொள்ளுதல் வேண்டும். இதுவே மிகப் பிரதானமானது.
அல்லாஹ்வுக்கு “வுஜூத்” உள்ளமை உண்டு. அது அவனுக்கு சுயமானது. அதாவது அது இன்னொருவரால் அவனுக்கு வழங்கப்பட்டதல்ல. அவனின் உள்ளமை தனக்குத் தானான உள்ளமையாகும். படைப்புக்களில் ஒன்றுக்கும் சுயமான உள்ளமை இல்லவே இல்லை. அவற்றின் உள்ளமை அல்லாஹ்வினால் வழங்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் சுயமான உள்ளமைக்கு அவனால் படைப்புகளுக்கு வழங்கப்பட்ட உள்ளமை எந்த வகையிலும் நிகரானதாயிருக்க முடியாது.
அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை தனக்குத் தானான சுயமானதாகும். அத்தகைய உள்ளமைக்கு அவனால் படைப்புகளுக்கு வழங்கப்பட்ட உள்ளமை எந்த வகையில் நிகராகும்?
அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்பவனும், நிலைபாடானவனுமாவான்.
الله قَائِمٌ بِنَفْسِهِ
அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்பவனும், நிலைபாடானவனுமாவான். இது அவனுக்குரிய, அவனில் அவசியம் இருக்க வேண்டிய “வாஜிப்” ஆன “ஸிபத்” தன்மையாகும்.
படைப்பு என்பது அல்லாஹ் போல தன்னைக் கொண்டு உண்டாகி தன்னைக் கொண்டு நிற்பதும், நிலைபாடானதுமல்ல. அது அவனைக் கொண்டு உண்டாகி நிற்பதும், அவனைக் கொண்டு நிலைபாடானதுமாகும்.
اَلْخَلْقُ قَائِمٌ بِاللهِ
படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு உண்டாகி , அவனைக் கொண்டே நிற்பதும், நிலைபாடானதுமாகும். எனவே, படைப்பு படைத்தவனுக்கு நிகராதல் என்பது எவ்வாறு சாத்தியமாகும்?
எனவே, அல்லாஹ்வுக்கு நிகராக எதுவுமில்லை, எவனுமில்லை என்பது “வுஜூத் ஹகீகீ” , “வுஜூத் மஜாஸீ” என்ற அடிப்படையிலாகும் என்று திட்டமாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். இந்த அடிப்படையில்தான் அல்லாஹ்வுக்கு நிகராக எதுவுமில்லை, எவனுமில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலே எழுதிக்காட்டிய திரு வசனங்கள் இரண்டும் இரண்டு விடயங்களைச் சுட்டிக் காட்டுவது ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல. ஆயினும் சுருக்கமாக இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.
ليس كمثله شيئ
“அவன் போன்று எந்தவொரு வஸ்த்தும் இல்லை” என்ற திரு வசனம் அஃறிணையை மட்டும் குறிப்பது போன்றும்,
ولم يكن له كفوا أحد
“அவனுக்கு நிகராக எவனுமில்லை” என்ற திருவசனம் உயர்திணையை மட்டும் குறிப்பதும் போன்றும் அமைந்துள்ளன.
இவ்வாறு வசனம் அமைந்திருப்பது அவன் போன்று – அவனுக்கு நிகராக அஃறிணையிலும் ஒன்றுமில்லை, உயர்திணையிலும் ஒன்றுமில்லை என்பதை உணர்த்துகிறது. படைப்புக்களில் இவ்விரண்டும் தவிர மூன்றாவதொன்று இல்லையாதலால் பொதுவாக இத்திரு வசனங்கள் இரண்டும் அவனுக்கு இணையே இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.
உயர்திணை என்பது புத்தி, அறிவுள்ள அனைத்தையும் குறிக்கும். அஃறிணை என்பது இவ்விரண்டும் இல்லாத அனைத்தையும் குறிக்கும். அறபு மொழியில் உயர் திணைக்கு عَاقِلْ – “ஆகில்” என்ற சொல்லும், அஃறிணைக்கு غَيْرُ عَاقِلْ – “ஙெய்று ஆகில்” என்ற சொல்லும் பயன்படுத்தப்படும்.
இதன் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ் படைத்த சர்வ படைப்புக்களிலும் அவனுக்கு நிகராக எந்த ஒரு வஸ்த்தும் இல்லை என்பதாகும்.
“க” என்ற எழுத்தின் நுட்பம்.
இந்த விடயம் உலமாஉகளுக்கும், ஆய்வாளர்களுக்கும் மட்டும் உரியதாகும். இவர்கள் தவிர ஏனையோர் வாசிக்காமலிருப்பது நல்லது. அவர்களும் வாசிக்க விரும்பினால் அறபு மொழி, இலக்கணம், மற்றும் இலக்கியத் துறையில் திறமையுள்ள ஒருவரின் உதவியுடன் வாசிப்பதில் தவறில்லை எனினும் திறமையுள்ளவர்களாயினும் பொறாமை, வஞ்சகம், பெருமை, எரிச்சல் போன்ற பெரு வியாதிகளால் பாதிக்கப்பட்ட உலமாஉகளைத் தவிர்த்துக் கொள்வதவசியமாகும். ஏனெனில் இவர்கள் சுக்கானை மாற்றிப் பிடித்து சுடு காட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.
இவ்விரு திரு வசனங்களில் முந்தின திரு வசனமான ليس كمثله شيئ “அவன் போன்று எந்த வஸ்த்தும் இல்லை” என்ற இவ்வசனத்தில் ஒரு நுட்பம் இருப்பதாக ஸூபீ மகான்கள் கூறி அதற்கு விளக்கமும் சொல்கிறார்கள். எனினும் அவர்கள் கூறும் விளக்கம் எனக்கு தெளிவைத் தரவில்லையாதலால் அதை இங்கு எழுதாமல் நுட்பத்தை மட்டும் எழுதுகிறேன்.
ஆய்வுத் திறனுள்ளவர்கள் இது தொடர்பாக தாமறிந்த கருத்தை எமக்கு எழுதியனுப்பினால் அது பொருத்தமாகவுமிருக்குமானால் ஏற்றுக் கொள்வோம். அறிவிப்பவர்கள் தமது பெயர் முகவரியோடும், கைபேசி எண்களோடும் அறிவித்தால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.
அதாவது குறித்த திரு வசனத்தில் வந்துள்ள كَمِثْلِهِ என்ற சொல்லில் அதன் முதலெழுத்தாக ஒரு “காப்” வந்துள்ளது. இந்த எழுத்துக்கும், இதன் பின்னால் வந்துள்ள مِثْلْ என்ற சொல்லுக்கும் தனித்தனியே “போன்றது” என்ற பொருள் உண்டு. இந்த அடிப்படையில் குறித்த திரு வசனத்திற்கு “அவன் போன்றது போன்றது எதுவுமில்லை” என்றுதான் பொருள் வரும். இவ்வாறு பொருள் கொண்டால் “அவன் போன்றது உண்டு என்றும், ஆனால் அவன் போன்றது போன்றதுதான் இல்லை” என்றும் பொருள் வரும். இந்தப் பொருள் “அல்லாஹ் போன்றது உண்டு” என்ற கருத்தை தருவதால் திருக்குர்ஆன் விரிவுரைக் கலையான “தப்ஸீர்” கலையில் வெளியில் நீந்துபவர்களான அறிஞர்கள் அவ்வாறு பொருள் கொள்ளாமல் அந்த “காப்” என்ற எழுத்து தேவையின்றி மேலதிகமாக வந்துள்ளதென்று – அதாவது “ஸாயித்” அர்த்தமில்லாமல் வந்துள்ளதென்று கூறுகிறார்கள். அதாவது வெளியில் நீந்துகின்றவர்கள் தம்மை மற்றவர்கள் – உள்ளே நீந்தும் குழியோடிகள் – குற்றம் பிடிக்காமலிருப்பதற்காக அவ்வாறு கூறி சமாளிக்கின்றார்கள் போலும். இவர்களின் சமாளிப்பு உப்பு, உறைப்பு இல்லாத வெறும் பச்சத் தண்ணீர் சமாளிப்பேயாகும்.
ஆயினும் இவர்களின் இந்த சமாளிப்பை கடலின் அடியில் நீந்துகின்ற குழியோடிகளான ஸூபீ மகான்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் முத்துச் சிப்பியை மட்டும் எடுப்பார்கள். மற்றவர்கள் எதையும் எடுப்பார்கள்.
“க” என்ற எழுத்து زَائِدٌ – மேலதிகமாக வந்துள்ளதேயன்றி அதற்குப் பொருளில்லை என்று கூறும் வெளியில் நீந்தும் வெளி நீச்சல் காரர்களுக்கு முத்துச் சிப்பிக் காரர்கள் கூறும் காரணம் இதோ!
திருக்குர்ஆன் என்பது كَلَامُ الله அல்லாஹ்வின் பேச்சாகும். அதற்கு நிகராக எவராலும் பேச முடியாது. அதேபோல் அதன் ஆழம், நீளம் என்பவற்றை எவராலும் மட்டுப்படுத்திக் கூறவும் முடியாது. அது சத்தம், திசை என்பவற்றை விட்டும் தூய்மையான சத்துள்ள பேச்சு. அத்தகைய பேச்சில் அர்த்தமில்லாத ஓர் எழுத்துக் கூட வரச் சாத்தியமில்லை. ஆகையால் “க” என்ற எழுத்துக்கு அறபு மொழியில் அதன் பின்னால் வந்துள்ள مِثْلْ “மித்ல்” என்ற சொல்லின் “போன்ற” என்ற பொருள் இருப்பதால் அதே பொருளை “க” என்ற அந்த எழுத்துக்கு கொடுத்து لَيْسَ مِثْلَ مِثْلِهِ شَيْئٌ என்றோ அல்லது لَيْسَ شَيْئٌ مِثْلَ مِثْلِهِ என்றோ சொல்ல வேண்டும் என்று கூறி அதற்கு விளக்கமும் சொல்கிறார்கள்.
ஸூபீ மகான்கள் கூறும் விளக்கத்தின்படி வெளிப்படையான கருத்து என்னவெனில், அல்லாஹ்வுக்கு நிகரான ஒன்றுக்கு நிகரில்லையே தவிர அல்லாஹ்வுக்கு நிகர் உண்டு என்பதாகும். இது ஷரீஆவின் பார்வையில் அதற்கு முற்றிலும் முரணானதாகும். ஸூபீ மகான்களோ எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் “ஷரீஆ”வுக்கு முரணாக ஒரு வார்த்தை கூடப் பேசவுமாட்டார்கள், ஒரு சொற் கூட எழுதவுமாட்டார்கள். எனவே, அவர்களின் அந்தப் பேச்சு ஆய்வு செய்தறிய வேண்டிய ஒன்றாகிவிட்டது. இதனால் இத்திருவசனத்திலுள்ள நுட்பத்தை மட்டும் இங்கு எழுதியுள்ளேன். அவர்கள் கூறியுள்ள நுட்பம் எனக்கு தெளிவில்லாமற் போனதால் அதை எழுதாமல் விட்டேன். நான், மேலே எழுதியது போல் விளக்கம் அறிந்தவர்கள் எமக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
கௌரவ அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் பொய் சொல்லாப் பெருந்தகை ரிஸ்வீ முப்தீ அவர்கள் தனது தலைமையில் இயங்கி வரும் உலமா சபையில் ஸூபீகளிற் பலர் இருப்பதாகக் கூறியுள்ளதால் அந்த மகான்களாவது இந்த முடிச்சை அவிழ்த்து வைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
“துவிதம்” என்ற சொல் இரண்டு என்ற பொருளைத் தருகின்ற சொல்லாகும். இதன் எதிர்ச் சொல் “அத்வைதம்” என்ற சொல்லாகும். இச் சொல்லை சிலர் “அத்துவிதம்” என்றும் சொல்வதுண்டு.
அல்லாஹ்வுக்கு நிகர் உண்டு என்று நம்புதல் “ஷிர்க்” இணை வைத்தலாகும் என்பதில் ஸூபீகளுக்கிடையில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது. ஸூபி வழி வாழும் நாங்களும் இவ்வாறுதான் சொல்கிறோம்.
எனினும் நாம் கூறும் கருத்துக்களைச் சரியாகப் புரிந்து கொள்ளதவர்களும், பொறாமை என்ற போதையினால் மூளைக்கும், நாவுக்கும் தொடர்பில்லாமல் உளறும் உலமாஉகளுமே எம்மைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றார்கள். அல்லாஹ் மிக்க அறிந்தவன். جَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا ஒரு தீமையின் கூலி அது போன்ற தீமையே!
அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்பதே இறை வாக்கும், எதார்த்தமுமாகும். எனினும் அவனுக்கு நிகர் உண்டு என்று நம்பினவன் “முஷ்ரிக்” இணை வைத்தவனாகிவிடுகிறான். ஒருவன் என்ன? ஓராயிரம் கோடிப் பேர் நம்பினாலும் அவர்கள்தான் இணை வைத்தவர்களாகிவிடுவார்களேயன்றி அதனால் அவனுக்கு இணை வந்து விடாது. அவன் என்றுமே இணையில்லாதவனும், துணையில்லாதவனுமே ஆவான்.
அவன் போன்று எதுவுமில்லை, எவனுமில்லை என்பதற்கு வெளியில் நீந்துவோர் எத்தனை காரணம் கூறித் தமது வாதத்தை நிறுவினாலும் அதெல்லாம் சிறு காற்றால் பறக்கும் பஞ்சு போன்றதேயாகும். ஆயினும் எவராலும் அசைக்க முடியாத, எந்த ஒரு புயலாலும் பறக்காத, எந்த ஓர் அறிஞனாலும் தோற்கடிக்க முடியாத ஒரேயொரு காரணம் “அத்துவிதம்” அத்வைதமே ஆகும். அதாவது “வுஜூத்” என்ற மெய்ப் பொருள் ஒன்றாயிருப்பதேயாகும். ஏனெனில் நிகர் சொல்வதற்கும், பார்ப்பதற்கும் குறைந்தது இரண்டு வஸ்த்துக்களாவது இருக்க வேண்டும். ஒரேயொரு பொருளை வைத்துக் கொண்டு அதற்கு நிகர் தேடுவது அல்லது சொல்வது வடிகட்டிய முட்டாள் தனமல்லவா? ஒரேயொரு பொருளை வைத்துக் கொண்டு அதற்கு நிகர் தேடுதலும், ஒன்றை ஒன்றாக்க முற்படுவதும் முட்டாள் தனமென்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது? அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், அவர்களின் “புத்வா” குழுவும் பரந்து விரிந்த சமுத்திரத்தை நாய் வாலால் அளக்க நினைப்பது முட்டாள் தனமேயாகும்.