Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மஹ்மூத் நபீயின் மதீனா மண்ணில் நடமாடும் மீலாத் கந்தூரி!

மஹ்மூத் நபீயின் மதீனா மண்ணில் நடமாடும் மீலாத் கந்தூரி!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

பைத்தியம் பல வகை என்பது போல் வஹ்ஹாபிஸத்திலும் பல வகை உண்டு. பைத்தியக் காரர்களிற் சிலர் முணுமுணுத்துக் கொண்டு றோட் அளப்பர். இன்னும் சிலர் அழுக்கான உடலோடும், கந்தலான உடையோடும் பேமண்டில் ஒதுங்கிக் கிடப்பர். வேறு சிலர் அர்த்தமின்றி புலம்பித்திரிவர். இன்னும் சிலர் பாதையால் போவோர் வருவோரை அடித்து துன்புறுத்துவர். இவர்களில் இன்னும் சிலர் உளர். இவர்கள் ஒரு மாதத்தில் பூரணை நாட்களில் மட்டும் சற்று வழமைக்கு மாறாக சோகத்துடன் இருப்பர்.

இவ்வாறு வஹ்ஹாபிகளிலும் பல ஐட்டம் உள்ளனர். இவர்களிற் சிலர் கொள்கையளவில் மட்டுமே வஹ்ஹாபிகளாயிருப்பர். இன்னும் சிலர் ஸுன்னீகளுக்கும், அவர்களின் நடவடிக்கைகளுக்கும் எதிராக முணுமுணுப்பர். இன்னும் சிலர் ஸுன்னீகளுக்கு எதிராக கொம்பித்திரிவர். கண்டவர்களையெல்லாம் ஏசித்திரிவர். துன்புறுத்துவர். தாம் வஹ்ஹாபிகள் என்று காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆயினும் உள்ளே இருந்து உரொட்டிக்கு மாக் குழைப்பது போல் ஸுன்னீகளுடனிருந்து அவர்களுக்கு சதி செய்வர். இவ்வாறு வஹ்ஹாபிகளில் பல ஐட்டம் உண்டு.

ஆயினும் இவர்கள் அனைவருக்கும் வருடத்தில் சில நாட்களில் மட்டும் வாந்தி பேதி நோய் ஏற்படும். அந்த நோயுள்ள நாட்களில் மட்டும் இவர்கள் வெளியே வராமலும், முகத்திற்கு கவசம் அணியாது போனாலும் காதுக்கு மட்டும் கவசம் அணிந்து கொண்டு அல்லது பஞ்சை சிறியளவில் போளையாக்கி உருட்டி காது ஓட்டையை அடைத்துக் கொண்டும் இருப்பார்கள்.

ஒன்று: அந்த நாட்கள் றபீஉனில் அவ்வல் 12 நாட்கள். கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மௌலித் நடைபெறும் நாட்கள். இது றபீஉனில் அவ்வல் மாத முதலாம் பிறையிலிருந்து பன்னிரண்டாம் பிறை வரையாகும். இந்த மாதம் அறபு மொழியில் “முதல் வசந்தம்” என்று அழைக்கப்பட்டாலும் சகல பெண்களும், நபீகளார் மீது “மஹப்பத்” உள்ள ஆண்களும் கொண்டாட்ட மாதம் என்று அழைப்பர்.

இரண்டு: முஹ்யித்தீன் கந்தூரி மாதம். இது அறபியில் “இரண்டாம் வசந்தம்” என்று அழைக்கப்படும். இந்த மாதத்தில் தான் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் நினைவு தினம் கொண்டாடப்படும்.

மூன்று: மீரா கந்தூரி மாதம். இது அறபியில் “ஜுமாதல் ஊலா” (வறட்சியுடைய முதல் மாதம்) என்று அழைக்கப்படும். இந்த மாத்திலேதான் நாகூர் நாயகம் குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் றஹிமஹுல்லாஹ் அவர்களின் நினைவு தினம் கொண்டாடப்படும்.

இவைதவிர இன்னும் பல நாட்கள் உள்ளன. இந் நாட்களில் மட்டும் குறிப்பிட்ட நபர்களுக்கு வாந்தி பேதி நோய் இருக்கும்.

மேலே குறித்த மூன்று தினங்களில் மட்டுமே வாந்திபேதியின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏனைய விஷேட நாட்களில் தடிமல், காய்ச்சல் மட்டும் வந்து போய்விடும்.

வஹ்ஹாபிஸ ராஜ நாகம் காத்தன்குடியில் நுழையுமுன் – சுமார் 25 வருடங்களுக்கு முன் – இங்குள்ள பள்ளிவாயல்களில் அநேகமானவற்றில் றபீஉனில் அவ்வல் 12 நாட்களும் ஸுப்ஹான மௌலித் – நபீ புகழ் காப்பியம் பாடி, தினமும் “பயான்” நடத்தி “தபர்றுக்” வழங்கப்படும். ஆண்களும், பெண்களும் சாரிசாரியாக பள்ளிவாயலுக்கு வருகை தந்து சிறப்பிப்பார்கள்.

நேர்ச்சைப் பொருட்களோ மலைபோல் குவிந்து காணப்படும். அந்தப் பகுதிக்கென்றே பள்ளிவாயலில் ஓர் இடம் ஒதுக்கப்படும். பள்ளிவாயல் நிர்வாகிகளில் ஒரு குழு இதற்குப் பொறுப்பாக இருப்பார்கள். கோழிகளும், ஆடுகளும், மற்றும் நேர்ச்சைப் பொருட்களும் மலைபோல் குவியும். அவை இறுதியில் ஏலத்தில் விற்கப்பட்டு அந்தப் பணம் பள்ளிவாயல் தேவைக்காக செலவிடப்படும்.

அக்கால கட்டத்தில் “மொடர்ன் – நாகரீகமான பொடியன் மௌலவீமார் மிகவும் குறைவு. 50 வயதுக்கு மேற்பட்ட, அடர்ந்த தாடியும், நிறைந்த ஜுப்பாவும் அணிந்த ஆலிம்கள் சினிமா ராகமின்றி அந்தக் காலத்து ராகத்தில் போட்டி போட்டு மெட்டுக்கு மேல் மெட்டெடுத்துப் பாடும் காட்சியை கண்டு களிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. ஆயிரம் கண்களே வேண்டும்.

குடி மௌலித் என்று ஒவ்வொரு குடியிலுள்ளவர்களும் மற்றக் குடிக்காரர்களுடன் போட்டி போட்டு நார்ஸா கொண்டு வரும் காட்சி கண்களைக் கவர்வதுடன் கல்பிலும் ஒரு பக்தி நிலையை உருவாக்கிவிடும்.

குடிகளில் பணக்காரர்கள் உள்ள குடிகள் இரண்டு அல்லது மூன்று எனலாம். இம் மூன்றிலும் இரண்டு குடிகள் மட்டும் காசிக்காரர்களின் குடிகளாகும். அவை இரண்டும் சம்மாட்டி குடி, மரைக்காறன் குடிகளாகும்.

இவர்களின் கந்தூரி “டேர்ன்” வந்தால் போதும். பள்ளிவாயலில் மக்கள் வெள்ளம் அலை மோதும். மாட்டு வண்டில். அது டெகரேஷன் – சோடிக்கப்பட்டிருக்கும். பட்டாசுகள் முழங்கும். பாவாமார் “தகறா” அடித்து நபீ புகழ் பாடி பள்ளிவாயலுக்கு நார்சா – சோத்துப் பெட்டிகள் கொண்டு வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தெருவின் இரு மருங்கிலும் ஆண்களும், பெண்களும் “ஸலவாத்” சொல்லும் சத்தம் விண்ணைத் தொடும்.

நிர்வாகம் ஒழுங்காக நடந்தாலும் சில ஒழுக்குகளும் இருக்கும். சில கோழிகள் வந்த வழி தெரியாமற் போவதும் உண்டு. கொட்டைப்புக்கை மாயமாய் மறைவதுமுண்டு. சில றெஸ்டிமாரின் வீடுகளுக்கு கோழிகள் உயிருடன் போவதும் உண்டு.

அது ஒரு காலம். பறகத் நிறைந்த காலம். அருள் பொங்கிய காலம். மாதம் 75 ரூபாய் சம்பளத்தில் ஐந்துபேர்கள் கொண்ட குடும்பமே நிம்மதியாகவும், மன நிறைவோடும் உண்டு உடுத்து வாழ்ந்த காலம்.

எனது தந்தை அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் குர்ஆன் மத்ரஸா நடத்திய வகையில் மாதாந்தம் பெற்ற சம்பளம் 75 ரூபாய் மட்டும்தான். அதைப் பெறுவதற்கு கூட தேங்காய் குலை படம் போட்ட பத்து ரூபாய் முத்திரையில் கையெழுத்திட்ட பிறகுதான் கையில் பணம் கிடைக்கும். அவர்கள் இறுதியாக எடுத்த சம்பளம் 125 ரூபாய் மட்டுமே.

ஆனால் அப்ஸோஸ் அப்ஸோஸ்!

பல நூறாண்டுகளாக நமதூர் பள்ளிவாயல்களிலும், வீடுகளிலும் நடைபெற்று வந்த மௌலிது நிகழ்வுகளும், கந்தூரி வைபவங்களும் நிறுத்தப்பட்டு நபீ புகழ் ஒளிர வேண்டிய இந்த புனிதமிகு றபீஉனில் அவ்வல் மாதம் பள்ளிவாயல்களும், வீடுகளும் இருள் சூழ்ந்து கிடப்பதைப் பார்க்கும் போது கண்கள் மட்டும் கலங்கவில்லை. உள்ளமும், உடலும் செயலிழந்து சோகமாய்த் தோற்றுகிறது. இதற்குக் காரணம் வஹ்ஹாபிஸ வழிகேடேயாகும். இந்த வழிகேட்டையே ஸுன்னத் ஜமாஅத் கொள்கை என்கிறார் ரிஸ்வீ.

கரு நாகம் தலை நீட்டிய பின் நார்சா சோறு ஹறாம் என்று “பத்வா” வந்து விட்டது. வலீமாரின் கந்தூரிக்காக அறுக்கப்படும் இறைச்சி பன்றி இறைச்சிக்கு சமம் என்று “புத்வா” நடமாடத் துவங்கியது.

இன்று அறபு நாடுகளில் வஹ்ஹாபிஸ நாடுகள் தவிர ஏனைய நாடுகளில் வீசும் தென்றலே நபீ புகழ் பாடி வீசுகிறது. அறபு மக்கள் வஹ்ஹாபிஸத்திற்கு சாவு மணி அடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

நபீ நேசர்கள் பலர் “ட்ரே: தட்டில் பழ வகைகள், ஜூஸ் வகைகள், டொபி, சொக்லட் வகைகளை நிரப்பிக் கொண்டு தெருத் தெருவாக ஸலவாத் முழக்கத்துடன் அன்பளிப்புக்கள் வழங்கி வருகின்றார்கள்.
عيد ميلاد محمد – مبروك – مبروك
என்ற கோஷத்துடன் கொடுத்து வருகின்றார்கள்.

صل على محمد என்று சொல்லச் சொல்ல அன்பளிப்பை பெறுபவர்களும் “ஸலவாத்” சொல்கிறார்கள். سبحان الله இந்நிலை இப்பாக்கியம் நமது காத்தநகர் மண்ணுக்கு எப்போது வரும்?

12 நாட்களையும் பக்தியுடன் கழிப்போம்.
தான தருமங்கள் செய்வோம்.
வீடுகளிலும், கடைகளிலும் நபீ புகழ் பாடுவோம்.
வீடுகளையும், வீதிகளையும் அலங்கரிப்போம்.

முக்கிய குறிப்பு: 12ம் நாள் நள்ளிரவு பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறவுள்ள “ஸலவாத்” சபையில் கலந்து சிறப்பிப்போம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments