Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஆலமுல் அர்வாஹ் - ஆலமுல் அஜ்ஸாம். அபுர் றூஹ் - உயிரின் தந்தை அபுல் பஷர் - உடலின் தந்தை...

ஆலமுல் அர்வாஹ் – ஆலமுல் அஜ்ஸாம். அபுர் றூஹ் – உயிரின் தந்தை அபுல் பஷர் – உடலின் தந்தை உயிரின் தந்தை பெருமானார் அலைஹிஸ்ஸலாம். உடலின் தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம்

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ، (سورة الأعراف 172)
நபீயே! உங்கள் இரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி அவர்களிடம் நான் உங்களின் இரட்சகன் அல்லவா? என்று கேட்டு உடன்படிக்கையை எடுத்த சமயத்தில் ஆம். நீதான் இரட்சகன். அதன்மீது நாங்கள் சாட்சியம் கூறுகிறோம் என்று அவர்கள் கூறியதை நீங்கள் அவர்களுக்கு நினைவூட்டுவீர்களாக! இது ஏனென்றால் இதனை ஒருவரும் எங்களுக்கு நினைவூட்டாததனால் நிச்சயமாக நாங்கள் இதனை மறந்தவர்களாக இருந்துவிட்டோம் என்று நீங்கள் மறுமை நாளில் சொல்லாதிருப்பதற்காக.
(ஸூறதுல் அஃறாப் – 172, 173)

உடல் என்பது தோல், தசை, சதை, எலும்பு, நரம்பு என்பவற்றாலும் இன்னும் பல உறுப்புக்களாலும் உருவாக்கப்பட்டதாகும். இது அறபியில் “பஷர்” என்று அழைக்கப்படும். இதனால்தான் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் “அபுல் பஷர்” என்று அழைக்கப்படுகின்றார்கள். “றூஹ்” என்பது உயிர். இது பற்றி எவராலும் இவ்வாறுதான் என்று விபரிக்க முடியாது. இது “நப்ஸ்”| என்றும், இதேபோல் “கல்ப்” என்றும் சொல்லப்படும். கிளி தங்கும் கூடு கிளிக் கூடு. உயிர் தங்கும் கூடு உடல்.

மனிதன் மரணித்தால் “றூஹ்” உயிர் போயிற்று என்றும், உயிர் அடங்கிற்று என்றும் சொல்வது வழக்கம். எவ்வாறு சொன்னாலும் உயிர் எங்கேயும் போவதில்லை. அது உடலிலேயே இருக்கும். ஆயினும் மரணித்தவனின் சுவாசம் வேலை செய்யவுமாட்டாது. ஆட்ட அசைவுகளும் அவனில் இருக்காது. எனினும் அவனில் உணர்வுகள், புலன்கள் மட்டும் வேலை செய்யும்.

மரணித்தான் என்ற பொருளுக்கு مَاتَ – மாத என்ற சொல்லும், மரணம் என்ற பொருளுக்கு مَوْتْ என்ற சொல்லும், மரணித்தவனுக்கு مَيِّتٌ என்ற சொல்லும் பயன்படுத்தப்படும். இச் சொற்கள் பொதுவாக அனைவருக்கும் பாவிக்கின்ற சொற்கள்தான்.

எனினும் மார்க்க ரீதியில் கண்ணியம் செய்யப்பட வேண்டிய ஒருவராயின் அவருக்கு مَاتَ என்ற சொல்லுக்குப் பதிலாக تُوُفِّيَ என்ற சொல்லும், مَوْتْ என்ற சொல்லுக்குப் பதிலாக وَفَاةْ என்ற சொல்லும் பயன்படுத்தப்படும். تُوُفِّيَ الشَّافعي رضي الله عنه، تُوُفِّيَ محمدٌ صلى الله عليه وسلّم என்று சொல்வது போன்று.

ஸூபீ மகான்கள், இறை ஞானிகள் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை أَبُو الْبَشَرْ உடலின் தந்தை என்றும், எம்பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை أَبُو الرُّوحْ உயிரின் தந்தை என்றும் அழைப்பர். ஆன்மீகத் தந்தை என்ற கருத்தும் இதற்கு வரும்.

உடல், உயிர் இரண்டும் ஒன்றுக்கு மற்றது அவசியமானதாயினும் உடல் அழிந்து போவதாலும், உயிர் அழிவற்றதாயிருப்பதாலும் றூஹ் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இவ்வடிப்படையில் “றூஹ்” உயிரின் தந்தையான பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உடலின் தந்தையான நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட முந்தினவர்களும், முதன்மையானவர்களுமாவர். ஏனெனில் உடலைவிட முந்தினதே உயிர்.

இத்தத்துவத்தை மையப்படுத்தி ஒரு மீலாத் விழாவில் பேசிய நான் நபீ பெருமானின் சிறப்பை எடுத்துரைக்கும் நோக்கத்தில், உடலின் தந்தை ஆதம் நபீ அவர்களை விட பல்லாயிரம் ஆண்டுகள் முந்தினவர்களாவர் பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்று கூறினேன். அதோடு தந்தைக்கு முன் பிறந்த தனயன் என்றும் சொன்னேன்.

அதைச் செவியேற்ற கொலைகாரன் ஸஹ்றான் பொது மக்கள் என்மீது வைத்துள்ள அன்பு, பாசம், பற்று என்பவற்றை அவன் பக்கம் திருப்புவதற்காகவும், என்னை முஸ்லிம் சமூகத்திடம் வழிகெட்டவனாகக் காட்டுவதற்காகவும் எனது கருத்தை வேறு பாணியில் திரிவு படுத்திக் கூறினான். நான் பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்களை “வாப்பாவுக்கு முன் பிறந்த ஹறாம் குட்டி” என்று பேசியதாக மாற்றிவிட்டான். எனினும் மக்கள் அவன் பேச்சை தூக்கியெறிந்து விட்டனர். இல்லை. அவனையே தூக்கியெறிந்து விட்டனர். மக்கள் மட்டுமன்றி அல்லாஹ்வும் தூக்கியெறிந்து விட்டான். அல்லாஹ்வால் தூக்கியெறியப்பட வேண்டியவர்கள் இன்னும் பலருளர். காலம் பதில் சொல்லும். தெய்வ நீதி என்றாவதொரு நாள் சந்திக்கும். அது எந்த உருவத்திலும் சந்திக்கலாம்.

ஆதம் நபீ அவர்கள் தவிர வேறு எந்த மனிதனையும் படைக்குமுன் அல்லாஹ் “ஆலமுல் அர்வாஹ்” ஆன்மலோகம் என்ற பெயரில் ஒரு “ஆலம்” உலகம் படைத்து அதில் ஒரு மாநாடு நடத்தினான். அந்த மாநாட்டில் அவன் இறுதி நாள் வரை படைக்கவுள்ள அனைத்துப் படைப்புக்களின் “றூஹ்” உயிர்களையும் அணுப்பிரமான அளவில் படைத்தான். அந்த மாநாட்டில் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் இறுதியாக அவன் படைக்கவுள்ள படைப்பு வரையான அனைத்து உயிர்களையும் ஒன்று சேர்த்தான்.

அவர்களில் ஒவ்வொருவரும் அணுப்பிரமான அளவில் இருந்தாலும் கூட மனித உருவத்தில் இருந்தார்கள் என்றும், அவ்வாறு இருக்கவில்லை என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாடு நடந்த வேளையில் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டுமே மனித இனத்தில் இருந்தார்கள். இவ்வேளை அன்னை ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்களும் படைக்கப்பட்டிருக்கவில்லை.

மாநாடு எங்கே நடந்தது? ஏன் நடந்தது?

وفى أيّ محلٍّ كان أخذُ هذا العَهدِ؟ فالجواب كما قاله ابن عبّاس رضي الله عنهما أنّ ذلك كان بِبَطْنِ نُعمان، وهو وادٍ بِجَنْبِ عَرَفَةَ، ةقال بعضُهم بِسَرَنْدِيْبْ من أرض الهند، وهو الموضع الّذي هبط به آدم من الجنّة، وقال الكَلْبِي كان أخذُ العَهدِ بين مكّة والطّائف، وقال عليّ بن أبي طالب أخذُ العهدِ والميثاق فى الجنّة،
عَهْدُ مِيْثَاقْ “அஹ்து மீதாக்” உடைய நாள் என்று இவ் ஒப்பந்த நாள் வழங்கப்படுகின்றது.

இவ் ஒப்பந்த மாநாடு அறபா என்ற இடத்திற்கு அண்மையில் “நுஃமான் நீரோடை” என்ற பெயரில் ஒரு ஓடை இருந்தது. அங்குதான் நடைபெற்றதென்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள். இன்னும் சிலர் இந்தியாவின் ஸறன்தீப் என்ற தீவில் நடைபெற்றதாகவும் சொல்கிறார்கள். ஆதம் நபீ சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு முதலாவது இறங்கிய இடம் இவ்விடம்தான், இதுவே இன்று ஸ்ரீலங்கா என்றும், இலங்கை என்றும் அழைக்கப்படுகின்றது. இமாம் கல்பீ என்பவர் இவ் ஒப்பந்தம் திரு மக்கா, தாயிப் இரண்டுக்கும் இடையில் நடந்ததாகவும், ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் இது சுவர்க்கத்தில் நடந்ததாகவும் கூறுகின்றார்கள்.

இவ் ஒப்பந்தம் நடந்தது பற்றி இறைவன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்.

وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ
இவ்வசனம் முழுமையாக முன்னால் எழுதப்பட்டுள்ளது.
وما كيفيّةُ اسْتِخراجِهم مِنْ ظَهْرِهِ؟
அவ் ஒப்பந்த நாளில் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதுகில் இருந்து இறுதி நாள்வரை அவன் படைக்க நாடியுள்ள அனைத்து படைப்புக்களையும் வெளியாக்கியது எவ்வாறு? என்ற கேள்விக்கு பின்வருமாறு விடை கூறப்பட்டுள்ளது.
قد جاء فى الحديث أنّ الله تعالى مَسَحَ ظَهْرَه وأخرج ذُرِّيَّتَهُ كلَّهم منه كَهَيْئَةِ الذَّرِّ، ثم اختلف النّاس هل شَقَّ ظهرَه واستخرَجَهم منه، أو استَخْرَجَهُمْ من بعضِ ثُقُوبِ رأسِه؟ وكِلَا هذين الوجهين بعيدٌ،

والأقرب كما قاله الشّيخ أبو طاهر القَزْوِيْنِيْ رحمه الله أنّه تعالى استَخْرَجَهم من مَسَامِّ شعرات ظهره، إذ تحت كلّ شعرةٍ ثُقبةٌ دقيقةٌ، يقال لها سَمٌّ مِثل سَمِّ الخيّاط، وجمعه مسامّ، ويُمكن خروجُ الذَّرَّة من هذه الثُّقَبِ كما يخرج منها العَرَقُ المنصب والصّنان، وهذا غير بعيد فى العقل، فيجب الإعتقاد بأنّه تعالى أخرج الذُّريَّةَ مِن ظهره آدم كما شاء،
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதுகிலிருந்து அவர்களின் சந்ததிகள் அனைவரையும் வெளிப்படுத்தினான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்கலாகாது. ஏனெனில் இது திருக்குர்ஆன் தரும் தகவலாகும். எனினும் எவ்வாறு வெளிப்படுத்தினான் என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

அல்லாஹ் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதுகை தடவி அதன் மூலம் அவர்களின் சந்ததிகள் அனைவரையும் அணுப்பிரமான அளவில் வெளிப்படுத்தினான் என்று நபீ மொழி கூறுகின்றது.

ஆயினும் நபீ ஆதம் அவர்களின் முதுகைப் பிளந்து அதன் வழியாக அவர்களை வெளிப்படுத்தினானா? அல்லது ஆதம் நபீ அவர்களின் தலையிலுள்ள துவாரங்கள் வழியாக வெளிப்படுத்தினானா என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. கூறப்பட்ட இவ்விரு வகையில் ஒரு வகையில் வெளிப்படுத்தினான் என்று கொள்வது நம்புவதற்கு பொருத்தமற்ற ஒன்றாக இருப்பதால் மேலே எழுதிய முறையில் வெளிப்படுத்தினான் என்ற சிலரின் கருத்தை விடுவோம்.

ஆயினும் இது தொடர்பாக அஷ் ஷெய்கு அபூ தாஹிர் அல் கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ள கருத்து பொருத்தமானதாகும்.

அல்லாஹ் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதுகிலிருந்த உரோமக் கண்கள் வழியாக வெளிப்படுத்தினான். ஏனெனில் ஒவ்வொரு உரோமத்தின் அடியிலும் மிக நுட்பமான துவாரங்கள் உள்ளன. அவ்வழிகளால் வியர்வை வெளியாவது போல் சந்ததிகளும் கண் பார்வைக்கு எட்டாத அணு அளவிலானவையாக வெளி வந்தார்கள். இது மனிதனின் புத்தி ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும்.

ஆகையால் எதற்கும் சக்தியுள்ள அல்லாஹ் தனது வல்லமை கொண்டு எவ்வாறு அவர்களை வெளிப்படுத்த வேண்டுமோ அவ்வாறு வெளிப்படுத்தினான் என்று நாம் நம்ப வேண்டும். இதுவே சரியான கருத்தாகும்.
ومَعْنَى مَسَحَ ظَهْرَهُ (مَسْحُ ظَهْرِهِ) أنّه أَمَرَ بعضَ ملائِكَتِهِ بِالْمَسْحِ،فَنَسَبَ ذلك إلى نفسِه لأنَّهُ بِأَمْرِهِ،

நபீ மொழியில் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதுகை அல்லாஹ் தடவி விட்டதாக கூறப்பட்டதிலிருந்து மனிதனின் கைபோல் அவனுக்கு கை இருந்ததென்றும், ஒருவன் இன்னொருவனின் முதுகை தடவுவதுபோல் அல்லாஹ்வும் தடவினான் என்று நம்பிக்கை கொள்வதும் பிழையானதாகும். அல்லாஹ் அவ்வாறு தடவுமாறு மலக்குகளுக்கு கட்டளையிட்டான். அவர்கள் தடவினார்கள் என்று கருத்துக் கொள்ள வேண்டும்.

“ஆலமுல் அர்வாஹ்” என்ற ஆன்மாக்களின் உலகில் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதுகிலிருந்து வெளியாகவுள்ள அனைத்து சந்ததிகளையும் வெளியாக்கி قَالَ أَلَسْتُ بِرَبِّكُمْ நான் உங்களின் “றப்பு” இரட்சகனா? இல்லையா? என்று கேட்டான். قَالُوْا بَلَى ஆம் என்று அவர்கள் பதில் கூறினார்கள்.
كَيْفَ أَجَابُوْهُ بقولهم بَلَى؟ هل كانوا أحياء عُقَلَاءَ؟ أم قالُوه بلِسان الْحَالِ؟

அவர்கள் அணுவை விட சிறிய அளவிலான தோற்றமுள்ளவர்களாக இருந்த நிலையில் அவர்கள் “அக்ல்” புத்தியுள்ளவர்களாகவும், உயிருள்ளவர்களாகவும் இருந்தார்களா? அல்லது “லிஸானுல்ஹால்” சந்தர்ப்ப சூழலுக்கேற்ற நாவினால் பேசினார்களா?

إنّ جَوابَهم كَانَ بالنُّطق، وهم أحياء، إذْ لا يستحيل فى العقل أن يُؤتِيَهم الله الحياةَ والعقلَ والنُّطْقَ مع صِغَرِهم، فإنّ بِحَارَ قُدرتِه واسعةٌ، وغايةُ وُسعِنا فى كلِّ مسئلةٍ أن نُثبِتَ الجوازَ ونكِلَ كيفِيَّتَهَا إلى الله تعالى،

அவர்கள் உயிருள்ளவர்களாக நாவினாலேயே பேசினார்கள். அவர்கள் அணுப்பிரமாண அளவு சிறியவர்களாயிருந்தாலும் அவர்களுக்கு அல்லாஹ் உயிரையும், புத்தியையும், பேச்சையும் கொடுப்பது அவனின் சக்தியென்ற கடலைப் பொறுத்து அசாத்தியமானதல்ல. மார்க்கம் ஆகுமென்று சொல்கின்ற எந்த ஒரு விடயமாயினும் அதை நாமும் ஆகுமென்றே சொல்ல வேண்டும். ஆயினும் அதற்கான காரணத்தை அல்லாஹ்விடம் கொடுத்து விட வேண்டும்.
إذَا قال الجميعُ بَلَى فَلِمَ قَبِلَ قومًا وَرَدَّ قوما؟
ألستُ بربِّكم நான் உங்களின் “றப்பு” இரட்சகனா இல்லையா என்று அல்லாஹ் கேட்ட கேள்விக்கு ஆம். நீ எங்களின் இரட்சகன்தான் என்று அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் ஒரே குரலில் பதில் கூறியிருக்கும் நிலையில் அல்லாஹ் சிலரை ஏற்றுக் கொண்டதும், சிலரை ஏற்றுக் கொள்ளாமல் விட்டதும் ஏன்?

الجواب لهذا السّؤال كما قال الحكيم الترمذي رضي الله عنه، أنّه تعالى تَجَلَّى لِلْكُفَّارِ بِالْهَيْبَةِ، فقالوا بَلَى مَخَافَةً، فلم يك ينفعهم إيمانُهم كإيمان المنافقين، وتَجَلَّى للمؤمنين بالرحمة فقالوا بَلَى طَوْعًا، فنفعهم إيمانهم،

இந்தக் கேள்விக்கு இமாம் ஹகீம் துர்முதீ அவர்கள் கூறிய பதிலை இங்கு எழுதுகிறேன். அதாவது நான் உங்களின் இரட்சகனா இல்லையா? என்று கேட்ட இறைவன் காபிர்களுக்கு பயங்கரத்தைக் கொண்டு வெளியாகிக் கேட்டான். அதனால் அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். எனவே, “முனாபிகீன்” நயவஞ்சகர்களின் ஈமான் போல் அவர்களின் ஈமான் அவர்களுக்கு பயனளிக்கவில்லை. இது அவர்களின் நிலையாகும்.

ஆயினும் விசுவாசிகளுக்கு அல்லாஹ் “றஹ்மத்” அருள் கொண்டு வெளியாகிக் கேட்டான். அதனால் அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். விசுவாசிகள் காபிர்கள் போல் பயந்து அவ்வாறு சொல்லாமல் மனத் தூய்மையுடன் சொன்னார்கள். எனவே, அவர்களின் விசுவாசம் அவர்களுக்கு பயனளித்துவிட்டது.

“ஆலமுல் அர்வாஹ்” என்ற ஆன்மலோகத்தில் விசுவாசிகளும், காபிர்களும் ஒரே குரலில் நீதான் எங்களுடைய “றப்பு” என்று ஏற்றுக் கொண்டார்கள். ஆயினும் “காபிர்கள்” “முனாபிக்”குகள் போல் தூய்மையான எண்ணத்துடன் அவ்வாறு ஏற்றுக் கொள்ளாமல் தண்டனையைப் பயந்து உள்ளத்தில் ஒன்றிருக்க அதில் இல்லாத ஒன்றை உதட்டால் மொழிந்ததால் அவர்கள் பின்னொரு காலத்தில் “ஆலமுல் அஜ்ஸாம்” என்ற சட உலகிற்கு வந்து “முனாபிக்” நயவஞ்சகர்களாக வாழ்வார்கள். இன்று ஒருவன் காபிராக இருப்பானாயின் அல்லது முனாபிக்காக இருப்பானாயின் அவன் அவ்வுலகில் அவ்வாறு “பலா” என்று சொன்னவனேயாவான்.

லிஸானுல் ஹால் என்றால் என்ன?

‘லிஸானுல் ஹால்” என்றும் “லிஸானுல் மகால்” என்றும் இரண்டு அம்சங்கள் உள்ளன. முந்தின விடயம் நாவால் பேசாமல் நிலைமையால் பேசுவதைக் குறிக்கும்.

இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவாக்கலாம். இதற்காக உதாரணம் தேடாமல் இதை எழுதுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் எனக்கு நடந்த ஒரு நிகழ்வை உதாரணமாகக் கூறுகிறேன்.

எமது கல்லூரியில் ஓதுகின்ற ஒரு மாணவன் வறுமையின் எல்லையில் வாழ்கிறான். ஒரு மணி நேரத்திற்கு முன் இன்று பகல் இரண்டு அல்லது மூன்று மணியிருக்கும். நான் பாதையால் வரும் போது என் தந்தையின் அடக்கவிடத்தின் சுவர் ஓரமாக உறங்கிக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் எழுந்து நின்றான். உதடுகள் வரண்டு போயிருந்தன. முகம் வாடிப் போயிருந்தது. பகல் சாப்பிட்டாயா? என்று கேட்டேன். என் கேள்விக்கு அவன் நாவால் பதில் சொல்லவில்லை. ஒரு சொட்டு கண்ணீர் எனக்கு பதில் கூறியது. அவருக்கு என்னால் முடிந்ததைக் கொடுத்தேன். அவனோ என்னிடம் நாவால் பணம் கேட்கவுமில்லை, சாப்பாடு கேட்கவுமில்லை. இந்நிலைதான் “லிஸானுல் ஹால்” என்று சொல்லப்படும். இதற்கு மாறாக நாவால் – வாயால் கேட்பது “லிஸானுல் மகால்” என்று சொல்லப்படும்.

இப்பிரசுரத்தில் “லிஸானுல் ஹால்” என்று குறிப்பிட்ட நான் அதற்கு விளக்கம் எழுதவில்லை. அதனால் இதை எழுதினேன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments