தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
நிறை குடங்கள்.
இறை ஞானம் பேசுபவர்களில் நிறை குடங்களும் உள்ளனர். குறை குடங்களும் உள்ளனர். நிறை குடங்கள் என்று நான் சொல்வது இறைஞானக் கடலில் குழியோடுபவர்களையும், அதன் கரை கண்டவர்களையும், “ஷரீஆ”வுக்கு எந்த வகையிலும் முரணில்லாமல் பேசுபவர்களையும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை தெளிவாக விளங்கி ஞானம் பேசுபவர்களையும் குறிக்கும். இவர்கள் தெளிவு கண்டவர்களும், நல்வழி பெற்றவர்களுமாவர்.
இவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் “ஷரீஆ”வுக்கு முரணாக பேசவுமாட்டார்கள். பணம், பதவி போன்றவற்றுக்காக மார்க்கத்தைப் புரட்டவும் மாட்டார்கள். மனச்சாட்சிக்கு விரோதமாக எழுதவோ, பேசவோ, செயல்படவோ மாட்டார்கள். அன்பியாஉகள், முன்னோர்களில் வாழ்ந்த அவ்லியாஉகள், மஷாயிகுமார்கள் போன்று.
குறை குடங்கள்.
குறை குடங்கள் என்று நான் குறிப்பிடுவது மேலே கூறிய நிறை குடங்களுக்கு மாற்றமானவர்களைக் குறிக்கும். இவர்கள் இறைஞானம் பேசுவார்கள். ஆனால் அதை சரியாக விளங்கியிருக்கமாட்டார்கள். “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் என்று ஒன்றிருப்பது உண்மையாயினும் காத்தான்குடி அப்துர் றஊப் மௌலவீ சொல்வது அதுவல்ல. இவர் பேசுவது இந்து மத ஞானம். அல்லது ஒன்றும் விளங்காமல் உளறுகிறார் என்று சொல்வார்கள். இவர் சொல்வது பிழையென்றால் சரியான “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை நீங்கள் சொல்லித் தாருங்கள் என்று பொது மக்கள் கேட்டால் அது உங்களுக்கு விளங்காதென்று சிலரும், அது பேசுவதற்கு அமைதி வேண்டுமென்று இன்னும் சிலரும் மழுப்பி விடுவார்கள். இவர்களையே குறை குடங்கள் என்று நான் குறிப்பிடுகின்றேன். இதுவே எதார்த்தம். இதற்கு முரணாக நான் யாரையும் ஏசவில்லை.
எனக்கும், எனது கருத்தைச் சரிகண்ட உள்நாடு, வெளிநாடு முஸ்லிம்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்களென்றும், இவர்களைக் கொல்வது ஏனைய முஸ்லிம்களின் கடமையென்றும் “புத்வா” வழங்கிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை சேர்ந்தவர்களையும், இவர்களுக்குப் பின்னால் நின்று பட்டம், பதவிகளுக்காக இவர்களுக்கு வால்பிடிக்கும் ஒரு சில உலமாஉகளையும் குறிக்கும். இவர்களும் குறை குடங்களேயாவர்.
குறை குடங்களில் ஒரு கூட்டம்.
குறை குடங்களில் இன்னும் சிலருளர். இவர்கள் பேசுவது இறை ஞானமல்ல. அது குருட்டு ஞானமும், இருட்டு ஞானமுமேயாகும்.
இந்தக் குறை குடங்கள் கூறும் கருத்தை கவனியுங்கள்.
(ஆன்மீகத்தில் ஒரு “மகாம்” படித்தரம் உண்டு. அதை ஒருவன் அடைந்தால் அவனை விட்டும் “ஷரீஅத்” நீங்கிவிடும். அவ்வாறு நீங்கினால் அவன் “ஷரீஆ”வை பின்பற்றத் தேவையில்லை. தொழுவதோ, நோன்பு நோற்பதோ, மற்றும் ஏவல் விலக்கல்களைப் பேணி நடப்பதோ அவனுக்கு கடமையில்லை) என்று சொல்வார்கள்.
மஜ்தூபும், மஜ்னூனும்.
இவர்கள் கூறும் மேற்கண்ட சட்டங்கள் மஜ்தூப், மஜ்னூன் போன்றவர்களுக்கேயாகும். சாதாரண மனிதர்களுக்கல்ல.
“மஜ்தூப்” என்றால் இறை சிந்தனையால் மூளையும், மனமும் பாதிக்கப்பட்டவர்களாவர். இச் சொல்லுக்கு இழுக்கப்பட்டவர் என்ற பொருள் உண்டு. جَذَبَ என்றால் இழுத்தான் என்றும், “மஜ்தூப்” என்றால் இழுக்கப்பட்டவன் என்றும் பொருள் வரும். “மஜ்தூப்” என்பவரின் மூளையும், அவரின் மனமும் அல்லாஹ்வினால் இழுக்கப்பட்டிருக்கும். அவருக்கு சுய சிந்தனை இருக்காது. அவருக்கென்று ஒரு விருப்பு, வெறுப்பு இருக்காது. இவர் நடவடிக்கையில் பைத்தியக்காரன் போன்றவரே! இவருக்கு ஏவல் விலக்கல் இல்லை. இவர் “முகல்லப்” அல்ல. ஆயினுமிவர் இறை வழியில் சென்று இந்நிலை அடைந்திருந்தால் இவர் “விலாயத்” ஒலித்தனத்தின் முதற்படியில் நிற்பவராவார். இவர் கௌரவிக்கப்பட வேண்டியவரே! இவரைத் துன்புறுத்துவது கூடாது.
“மஜ்னூன்” என்றால் பைத்தியக்காரன். நோயால், அல்லது குடிப் பழக்கத்தால் மூளைக் கோளாறுள்ளவன். இவன் பைத்தியக் காரன் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவனேயன்றி “மஜ்தூப்” பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவனல்ல. எனினும் இவ்விருவருக்கும் “ஷரீஆ”வில் ஒரே சட்டம்தான்.
ஏவல், விலக்கல் கடமையில்லாதவர் என்று குறை குடங்கள் சொல்வது “மஜ்தூப்” நிலையை அடைந்தவரல்ல. அவர் “ஆகில்” புத்தியுள்ளவராயிருப்பார். ஆரோக்கியமான மனிதர்கள் போல் வாழ்வார். சுத்தமாயிருப்பார். குளிப்பார், அழகாக உடுப்பார். எல்லா வேலைகளையும் சரியாகவே செய்வார். ஆயினும் ஆன்மீகத்தில் தானொரு “மகாம்” அந்தஸ்த்தை அடைந்து விட்டதாகக் கூறிக் கொண்டு தொழாமலும், நோன்பு நோற்காமலும், மற்றும் “ஷரீஆ”வைப் பேணாமலும் நடப்பார். நீங்கள் “ஷரீஆ”வைப் பேணாமல் இருப்பதேன் என்று அவரிடம் கேட்டால் நாங்கள் அந்த இடத்தை அடைந்து விட்டோம். எங்களுக்கு “ஷரீஆ” தேவையில்லை என்று சொல்வார்.
இவ்வாறு “ஷரீஆ”வைப் புறக்கணித்து வாழும் குறை குடம் ஒரு “ஷெய்கு” ஞானகுருவிடம் “பைஅத்” ஞான தீட்சை பெற்றவராக இருந்தால் குருவின் வழியே சிஷ்யனின் வழி என்று சொல்வார். இதற்குப் பிரதான காரணம் குருவானவர் மெய்நிலை கண்ட “ஆரிபீன்” இறை ஞானிகளின் பேச்சை தவறாக விளங்கிக் கொண்டதேயாகும். இறையியலைக் கரைத்துக் குடித்த ஞானிகளில் எவரும் ஷரீஅத் தேவையில்லை என்று சொன்னதுமில்லை. எழுதியதுமில்லை.
இக்குறை குடங்கள் தமது கருத்துக்கும், கொள்கைக்கும் சில ஆதாரங்கள் கூறுவர். அவ் ஆதாரங்களில் சில ஆதாரங்களை மட்டும் இங்கு கூறி அதற்கான சரியான விளக்கத்தையும் எழுதுகிறேன்.
ஆதாரம் 01:
قال بعض العارفين ‘ إنّ السّالك يصل إلى مقام يَرْتَفِعُ عنه التّكليفُ ‘ مرادُه بهذه التّكليف ذهابُ كُلفَةِ العبادة، فلا يصيرُ يمَلُّ منها، بل رُبّما تلذّذَ بِفِعل ما كانت نفسُه تَتَصَعَّبُ لِفِعله قبل ذلك، وقد مكثتُ أنا فى هذا المقام لا أتكلَّفُ لأشقِّ العبادات، ثمّ كُشف لي عن نقص ذلك المقام لما يصاحبُه من هَوَى النّفس، فتُبتُ منه، وصِرتُ لا آتي بعبادة إلّا بمشقّةٍ وكُلفةٍ، كأنّي حاملٌ جبلا، وذلك لِمَا فيها من الآداب والمشاهد، الّتي كُلِّفْنا بها فيها، وكنت قبل ذلك لا أتكلّف لها كما لا أتكلّف لخروج النَّفَسِ من أَنْفِي ودُخوله، وذلك لأنّي رأيت الله عزّ وجلّ يقول لمحمدٍ صلّى الله عليه وسلّم ‘فإذا فرغت فانصب ‘ أي إذا فرغْتَ من عمل مُتْعِبٍ فانصب فى عملٍ آخر، أي مُتْعِبٍ، وهذا أمرٌ لا يذوقه إلّا من سلك الطريق، فأين الراحةمن التكليف؟ ونحن مطالَبون بالإقبال على الله فى كلّ نَفَس، (اليواقيت، ج1،ص 135،، المبحث السادس والعشرون)
நான் மேலே எழுதியுள்ள அறபு மொழியிலான வசனங்கள் – வரிகள் என்னுடைய வசனங்கள் அல்ல. வசனத்திற்கும், கருத்துக்கும் உரியவர்கள் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்களேயாவர். நான் அறபு மொழியில் அவர்கள் எழுதியதை தமிழ் மொழியாக்கம் செய்பவன் மட்டும்தான். கருத்தின் சொந்தக்காரர் இமாம் அவர்களே!
இவர்கள் யார்? இவர்களின் வரலாறு என்ன? என்பது தொடர்பாக இதற்கு முன் நான் எழுதியுள்ளேன். இவர்கள் ஒரு “குத்பு” என்றும், தகுதி பெற்ற, திறமையுள்ள இமாம் என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
மேலே நான் எழுதிய அறபு வசனங்களில்
قال بعض العارفين ‘ إنّ السّالك يصل إلى مقام يَرْتَفِعُ عنه التّكليفُ ‘
என்று ஒரு வசனம் வந்துள்ளது. இவ்வசனம்தான் குறை குடங்களை குலுக்கிய, கலக்கிய வசனமாகும். வசனத்தின் பொருள் பின்வருமாறு.
(நிச்சயமாக “ஸாலிக்” இறை வழி நடப்பவன் அவ்வழியில் ஒரு “மகாம்” இடத்தை – அந்தஸ்த்தை அடைவான். அவ்வாறு அவன் அடைந்தால் அவனை விட்டும் تَكْلِيْفْ “தக்லீப்” நீங்கிவிடும்) இவ்வாறு இறை ஞானிகள் சொன்னது உண்மைதான். எனினும் இவ்வசனத்தில் வந்துள்ள تكليف – தக்லீப் என்ற சொல்லை சரியாக விளங்கிக் கொள்ளாதவர்களே “ஷரீஆ” தேவையில்லை என்று உளறும் குறை குடங்களாவர்.
குறை குடங்கள் “தக்லீப்” என்ற சொல்லுக்கு “ஏவல் விலக்கல்” என்று பொருள் கொண்டதினால்தான் ஒருவன் ஆன்மீகத்தில் ஒரு “மகாம்” படித்தரத்தை அடைந்து விடுவானாயின் அவனை விட்டும் “ஏவல் விலக்கல்” போய்விடும் – அதாவது “ஷரீஆ” போய் விடும் என்று விளங்கிக் கொண்டார்கள்.
தக்லீப்” என்ற சொல்
تَكْلِيْفْ தக்லீப் – என்ற சொல்லும், مُكَلَّفْ – முகல்லப் என்ற சொல்லும் ஒரே சொல்லடியில் உள்ளவையாகும். இவ்விரு சொற்களும் كَلَّفَ – “கல்லப” என்ற சொல்லின் இரு தோற்றங்களே. “கல்லப” என்றால் கஷ்டப்படுத்தினான் என்றும், “தக்லீப்” என்றால் கஷ்டப்படுத்துதல் என்றும், “முகல்லப்” என்றால் கஷ்டப்படுத்தப்பட்டவன் – கஷ்டத்துக்குள்ளாக்கப்பட்டவன் என்றும் பொருள் வரும்.
“முகல்லப்” என்ற சொல்லுக்கு “ஷரீஆ” அடிப்படையில் ஒரு பொருளும், மொழி அடிப்படையில் இன்னொரு பொருளும் வரும்.
“ஷரீஆ” அடிப்படையில் இச் சொல்லுக்கு கஷ்டப்படுத்தப்பட்டவன் என்ற பொருள் இருந்தாலும் கூட இது ஒரே நேரத்தில் இரண்டு பேர்களைக் குறிக்கும். இதை இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக சட்ட நூல்களில் வருகின்ற ஒரு வசனத்தை சுட்டிக் காட்டுகிறேன்.
சட்ட நூல்களில் எந்த ஒரு நூலை எடுத்தாலும் இந்த வசனத்தைக் காணலாம்.
يَجِبُ عُلَى كُلِّ مُكَلَّفٍ ஒவ்வொரு “முகல்லப்” மீதும் கடமையாகும் என்ற இவ்வசனத்தில் வந்துள்ள “முகல்லப்” என்ற சொல்லுக்கு அறபு மொழி – அகராதி அடிப்படையிலுள்ள கஷ்டம் கொடுக்கப்பட்டவன் என்று பொருள் சொல்லாமல் “ஷரீஆ” அடிப்படையிலுள்ள பொருள் சொல்ல வேண்டும். அதாவது “முகல்லப்” என்றால் “ஆகில் – பாலிக்(غ)” என்று பொருள் கொள்ள வேண்டும்.
عَاقِلْ – ஆகில் என்றால் புத்தியுள்ளவன். بَالِغْ – பாலிக்(غ) என்றால் பருவ வயதை அடைந்தவன். அதாவது வயது வந்தவன். “முகல்லப்” என்ற இச்சொல் மேற்கண்ட இருவரையும் “ஷரீஅத்” அடிப்படையில் உள்வாங்கிய ஒரு சொல்லாகும்.
இதன்படி மேலே எழுதிய يجب على كل مكلف என்ற வசனத்தை தொடர்ந்து عاقل بالغ என்ற இரு சொற்களும் வரும். இதன் பொருள் மார்க்கத்தில் ஏதாவதொன்று ஒருவர் மீது கடமையாவதாயின் அவர் புத்தியுள்ளவராயும், வயது வந்தவராயும் இருத்தல் வேண்டும். இது அவசியம். உதாரணமாக தொழுகை, நோன்பு கடமையாவது போன்று.
ஒருவனுக்கு ஏவல், விலக்கல் கடமையாவதாயின் – அவனை “முகல்லப்” என்று சொல்வதாயின் குறித்த இரண்டு அம்சங்களும் ஒரே நேரத்தில் அவனில் இருக்க வேண்டும். ஒன்றிருந்து மற்றொன்று இல்லையானால் அவனை “முகல்லப்” என்று சொல்லவும் முடியாது. ஏவல் விலக்கல் அவனுக்கு கடமையாகவும் மாட்டாது.
மொழியடிப்படையில் “முகல்லப்”
மொழியடிப்படையில் “முகல்லப்” என்ற சொல்லுக்கு கஷ்டப்படுத்தப்பட்டவன் அல்லது கஷ்டத்துக்குள்ளாக்கப்பட்டவன் என்ற பொருள் எந்த வகையில் பொருத்தமானதென்று சிறிய விளக்கம் எழுதுகிறேன்.
ஒருவன் பிறந்ததிலிருந்து சுமார் 15 ஆண்டுகள் எந்தவொரு வணக்க வழிபாடும் கடமையில்லாதவனாகவும், மனம் போன போக்கிலும் வாழ்கிறான். சுருங்கச் சொன்னால் ஏவல் விலக்கல் கடமையற்றவனாக வாழ்கிறான். விரும்பின நேரம் சாப்பிடுவான், விரும்பியதையும் சாப்பிடுவான். விரும்பின நேரம் உறங்குவான். விரும்பின நேரம் விழிப்பான். அவிழ்த்து விட்ட மாடு போல் அலைவான்.
15 வயதை அடைந்ததும் அவன் மார்க்கப்படி வயது வந்தவனாகிவிடுகின்றான். அன்று முதல் அவனுக்கு ஏவல் விலக்கல் கடமையாகின்றது. அன்று முதல் அவன்மீது பல சுமைகள் ஏறுகின்றன. உரிய நேரத்தில் எழும்ப வேண்டிய நிலையும், உரிய நேரத்தில் தொழ வேண்டிய நிலையும், மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அவனுக்கு கடமையாகிவிடுகின்றன. இதனால் இவன் கஷ்டம் கொடுக்கப்பட்டவனாகிவிடுகிறான். இவனுக்கு “முகல்லப்” என்று சொல்வது நூறு வீதம் பொருத்தமானதாயிற்று.
இவை மட்டுமன்றி ஒருவன் தொழத் தொடங்கியது முதல் அது நிறைவு பெறும் வரை அவனின் உள்ளம் ஊர் சுற்றாமல் இறைவனை நினைத்தவாறே இருக்க வேண்டும்.
மேற்கண்ட யாவும் பொதுவான கண்ணோட்டத்தில் மனிதனுக்கு கஷ்டமானவைதான். எனினும் இறை வழி நடக்கும் ஒருவன் ஆரம்பக்கட்டங்களில் இவற்றைக் கஷ்டமானவையாகவே கருதுவான். இக்கடமைகள் தனது தலையில் ஒரு மலை இருப்பது போன்றே நினைப்பான். எனினும் இவன் பொறுமை செய்து தொடர்ந்து வணக்க வழிபாடுகள் செய்து வருவானாயின் அல்லாஹ் இவன் மீது அன்பு கொண்டு இவனை ஆன்மீகத்தில் உயர்த்தி விடுவான். இவன் உயர் பதவி அடைந்தானாயின் இவன் கஷ்டமாக நினைத்துச் செய்து வந்த வணக்கங்கள் இன்பமானவையாக ஆகிவிடவும் கூடும். அவனை விட்டும் அவன் கருதிய கஷ்டம் நீங்கிப் போவதையே يَرْتَفِعُ عَنْهُ التَّكْلِيْفُ அவனை விட்டும் அவன் நினைத்திருந்த, அனுபவித்து வந்த கஷ்டம் நீங்கிவிடுமென்று மேற்கண்ட வசனம் மூலம் கூறுகிறார்கள். அதோடு வணக்கம் செய்வதில் அவனுக்கு ஆர்வமும், இன்பமும் ஏற்பட்டுவிடும்.
இதே கருத்தையே இறைஞானி மேற்கண்ட தனது வசனத்தின் மூலம் கூறியுள்ளாரே தவிர இறை ஞானத்தில் அதியுச்ச பதவியை அடைந்தால் ஏவல் விலக்கல் இல்லாமற் போய்விடுமென்று அவர் கூறவில்லை. அவரின் வசனத்தில் வந்துள்ள “தக்லீப்” என்ற சொல்லுக்கு ஏவல் விலக்கல் என்று பொருள் கொள்ளாமலும், அல்லது “ஷரீஆ” என்று பொருள் கொள்ளாமலும் கஷ்டம் நீங்கிவிடுமென்று பொருள் கொள்ள வேண்டும்.
مرادُه بهذه التّكليف ذهابُ كُلفَةِ العبادة،
ஞானியின் இவ்வசனம் சற்று முன் மேலே எழுதிய கருத்தையே தருகின்றது. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில் ஞானியின் மேற்கண்ட வசனத்தில் வந்துள்ள “தக்லீப்” என்ற சொல்லுக்கு ஞானி சொன்னது போல் பொருள் கொள்ள வேண்டுமேயன்றி அச் சொல்லுக்கு ஏவல் விலக்கல் என்றோ, “ஷரீஆ” என்றோ பொருள் கொள்ளக் கூடாது. இவ்வாறு பொருள் கொண்டதால் தான் ஞானத்தின் உச்சியை அடைந்தால் “ஷரீஆ” தேவையில்லையென்று குறை குடங்கள் குலுங்கின. குறை குடங்கள் சறுக்கி விழுந்து உடைந்து நொருங்கின. அப்துல்லாஹ்வும், அப்துல் ஜப்பாரும், முஸ்தபாவும், முனாஸும் கால் சறுக்கிய இடம் இந்த இடமேயாகும்.
இவ்வசனம் சொன்ன மகான் பின்வருமாறு சொல்கிறார்.
بل رُبّما تلذّذَ بِفِعل ما كانت نفسُه تَتَصَعَّبُ لِفِعله قبل ذلك
அவன் ஞான வழியிற கால் வைத்து வணக்கங்கள் செய்த கால கட்டத்தில் அவனுக்கு ஏற்பட்ட சடைவும், சோம்பலும் போய், அதேபோல் கசப்பு நிலையும் மாறி வணக்கத்தில் இன்பம் காணும் நிலை ஏற்பட்டு விடும் என்று சொல்கிறார்.
மேலும் அந்த ஞான மகான் ஞானத்தின் உச்சியை அடையுமுன் தான் பட்ட பாட்டையும், அனுபவித்த கஷ்டங்களையும் கூறும் போது பின்வருமாறு சொல்கிறார்.
وقد مكثتُ أنا فى هذا المقام لا أتكلَّفُ لأشقِّ العبادات، ثمّ كُشف لي عن نقص ذلك المقام لما يصاحبُه من هَوَى النّفس،
நானும் இவ்வாறான ஒரு நிலையை அடைந்து எந்தவொரு கஷ்டமான வணக்கமாயினும் அதைக் கஷ்டமாகக் கருதாமல் விரும்பத்தோடும், இன்பத்தோடுமே செய்து வந்தேன். பின்னர் எனக்கு அல்லாஹ் “கஷ்பு” என்ற ஞானோதயம் மூலம் இந்த “மகாம்” (அதாவது வணக்கத்தில் கஷ்டத்தை அனுபவிக்காமல் அதை விருப்பத்தோடும், இன்பத்தோடும் செய்தல்) ஞான அந்தஸ்த்துகளில் உயர்வான அந்தஸ்த்தல்லவென்றும், அது மனவாசைக்கும், இச்சைக்கும் அடி பணியும் “மகாம்” அந்தஸ்த்து என்றும் அறிவித்தான். அதன் பின் நான் பின்வருமாறு நடந்து கொண்டேன் என்று கூறுகிறார்.
فتُبتُ منه، وصِرتُ لا آتي بعبادة إلّا بمشقّةٍ وكُلفةٍ، كأنّي حاملٌ جبلا،
நான் அந்த இன்பத்தை அனுபவித்து வணக்கம் செய்யும் நிலையை விட்டும் பாவ மன்னிப்புத் தேடி எந்தவொரு வணக்கமாயினும் என் தலைமேல் ஒரு மலையை சுமந்தவன் போல் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே செய்கிறேன்.
ஏனெனில் ஒரு வணக்கத்தை அதிலுள்ள கஷ்டத்தை அனுபவித்துச் செய்வதிலேயே ஒழுக்கமும், காட்சிகளும் கிடைக்கும் நிலை ஏற்படும். அவ்வாறு அனுபவித்துச் செய்வதே “முகல்லப்” கஷ்டப்படுத்தப்பட்டவன் என்ற பெயருக்கும் பொருத்தமானதுமாகும். இந்த நிலை ஏற்படுமுன் வணக்கம் செய்வதில் நான் எந்த ஒரு கஷ்டத்தையும், சுமையையும் அனுபவிக்கவில்லை. எனது மூக்கினால் மூச்சுப் போவதும், வருவதும் எனக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் தராதது போல் அல்லாஹ்வை வணக்கம் செய்வதும் எனக்கு இருந்தது.
இந்த நிலைதான் அதாவது கஷ்டத்தை அனுபவித்துச் செய்யும் நிலைதான் சரியான நிலை என்பதற்கு ஆதாரம் அல்லாஹ் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு فإذا فرغت فانصب என்று சொன்னதாகும்.
இதன் விபரம் என்னவெனில், அல்லாஹ் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு பின்வருமாறு கூறியுள்ளான். நபீயே! நீங்கள் ஓர் “அமல்” வணக்கத்தை முடித்தால் இன்னோர் “அமல்” வணக்கம் செய்யுங்கள். (திருக்குர்ஆன் 94-7) இந்த வசனம் நீங்கள் கஷ்டமான ஒரு வணக்கத்தை முடித்தால் தொடர்ந்து இன்னொரு கஷ்டமான வணக்கத்தை தொடங்கவும் என்று கூறியுள்ளானேயன்றி நீங்கள் ஒரு வணக்கத்தை முடித்தால் ஓய்வு எடுங்கள் என்று கூறவில்லை. இதே கருத்தை உறுதி செய்யும் வகையில் பின்வருமாறு விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.
إذا فرغْتَ من عمل مُتْعِبٍ فانصب فى عملٍ آخر، أي مُتْعِبٍ،
நீங்கள் கஷ்டமான ஒரு வணக்கத்தை முடித்துவிட்டால் இன்னொரு கஷ்டமான வணக்கத்தைச் செய்யுங்கள் என்று.
وهذا أمرٌ لا يذوقه إلّا من سلك الطريق، فأين الراحةمن التكليف؟ ونحن مطالبون بالإقبال على الله فى كلّ نَفَس،
ஞானியின் பேச்சுக்கு மேற்கண்டவாறு விளக்கம் சொன்ன இமாம் இப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இறுதியாகப் பின்வருமாறு கூறி முடிக்கிறார்கள்.
மேற்கண்ட இந்த விடயம் இறை வழி நடக்கும் ஒருவனால் மட்டுமே அனுபவிக்க முடிந்த ஒன்றாகும். இந்நிலையில் கஷ்டத்தை அனுபவிக்காமல் ஓய்வு எப்படி உண்டாகும்? அடியார்களான மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு நொடியிலும் அல்லாஹ்வை முன்னோக்கியவர்களாக இருக்க வேண்டுமென்று வேண்டப் பட்டவர்களாவர்.
“முகல்லப்” என்றால் யார்?
இதுவரை எழுதி வந்த விளக்கங்களை விளங்குவதற்கு “முகல்லப்” என்றால் யாரென்று விளங்கிக் கொள்வது உதவியாயிருக்குமாகையால் இது பற்றி சற்று விளக்கி வைக்கிறேன்.
“முகல்லப்” என்ற இச் சொல்லுக்கு கஷ்டப்படுத்தப்பட்டவன், கஷ்டம் கொடுக்கப்பட்டவன் என்ற பொருள் வரும்.
இப் பெயர் ஒருவனுக்குச் செல்வதாயின் அவனில் இரண்டு அம்சங்கள் இருக்க வேண்டும். ஒன்று. அவன் “ஆகில்” புத்தியுள்ளவனாக இருக்க வேண்டும். இரண்டு. அவன் வயது வந்தவனாக இருக்க வேண்டும். அதாவது பருவ வயதை அடைந்தவனாக இருக்க வேண்டும்.
பெண்ணாயினும், ஆணாயினும் வயதைக் கொண்டு “பாலிக்(غ)” பருவமடைவதாயின் 15 வயதை அடைந்தால் அவர்கள் பருவமடைந்தவர்களாவர். பெண்ணாயின் தீட்டு வருவது கொண்டும், ஆணாயினும், பெண்ணாயினும் இந்திரியம் வருவது கொண்டும் பருவமடையலாம். இது ஓர் அம்சம்.
இரண்டாவது அம்சம் புத்தியுள்ளவனாயிருத்தல். இவ்விடயத்தில் புத்தியுள்ளவனுக்கு எதிரானவன் பைத்தியகாரனேயன்றி புத்தி குறைந்தவனல்ல. சிலர் உள்ளார்கள். அவர்களைப் பைத்திய காரர்கள் என்று சொல்லவும் முடியாது. புத்திக் காரர்கள் என்று சொல்லவும் முடியாது. ஆயினும் மக்கள் அவர்களை பேயர்கள் என்றும், பேக்கயர்கள் என்றும் சொல்வதுண்டு. இவர்களை எவர்களோடு சேர்ப்பது என்பதை ஒரு வைத்தியரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.
இடைக்குறிப்பு: சிந்தியுங்கள். சிந்தித்தால் சந்திப்பீர்கள்.
எனதூரில் ஒருவர் இருக்கிறார். அவர் தெருக்களில் சத்தம் போட்டும் திரிவார். பைத்தியக் காரன் போலும் நடந்து கொள்வார். ஊர் மக்கள் அவரைப் பைத்தியக் காரன் என்றே சொல்வார்கள். இவர் சில நாட்களில் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல் முன்றலில் அமர்ந்திருப்பார்.
ஒரு நாள் என்னைக் கண்ட இவர் என்னை அழைத்து மௌலவீ! இந்த துன்யாவில் வாழ்வது “ஸிறாதல் முஸ்தகீம்” பாலத்தில் நடப்பது போன்றதென்று சொல்கிறார்களே அது எப்படி? அதற்கு ஓர் உதாரணம் சொல்லுங்கள் என்றார். நீங்களே சொன்னால் பொருத்தமாயிருக்குமென்று நான் சொன்னேன்.
இவ்வுலகில் வாழ்வது நெருப்புக் கடலில் மெழுகுக் கப்பலில் பயணிப்பது போன்றதாகும். நெருப்பினால் மெழுகு உருகிவிடாமலும், பயணம் தடை படாமலும் உயிர் உடைமைகளுக்கு நட்டம் வராமலும் இருக்க வேண்டும். இவ்வாறே இவ் உலகில் வாழ வேண்டும் என்றார்.
ஊர் மக்களால் பைத்தியக் காரன் என்று அழைக்கப்படும் இவர் யார்? இவர் ஆகிலா? மஜ்னூனா? இவருக்கு ஏவல் விலக்கல் உண்டா? இல்லையா? இவர் யாரென்று வைத்தியர்தான் சொல்ல வேண்டும்.
யாசகன் உருவில் இறை நேசன்.
அழுக்கான உடலோடும், கந்தலான உடையோடும், தலையிலும், தோளிலும் மூட்டை முடிச்சுகளோடும், கையில் கம்போடும், அடர்ந்த தாடியோடும், பாதைகளில் முணுமுணுத்தும், பார்ப்போரை ஏசியும், துன்புறுத்தியும் பாதைகளில் நடமாடுவோரெல்லோரும் பைத்தியக் காரர்கள் அல்லர் என்பதை அனைத்துமத, இன, மொழி மக்களும் புரிந்து செயல்பட வேண்டும். இத்தகையோர் முஸ்லிம்களில் மட்டுமன்றி அனைத்து மதங்களிலும் உள்ளார்கள். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் காத்தான்குடியில் அபின்குடி முஸ்தபா என்றழைக்கப்பட்ட ஒருவர் இருந்தார். அவரின் வரலாறு தெரிந்த எவரும் இங்கு இருக்கவில்லை. அவரின் வீடு மையவாடிதான். அவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பின் அவரின் அடக்கவிடத்தில் தினமும் நள்ளிரவில் விளக்கொன்று ஒளி தரும். பலருடன் நானும் கண்டுள்ளேன். “மஜ்னூன்”கள் போல் வாழும் “மஜ்தூப்”களும் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கம்: நான் இதுவரை எழுதி வந்த வரிகளின் சுருக்கம் என்னவெனில்
إنّ السّالك يصل إلى مقام يَرْتَفِعُ عنه التّكليفُ
என்ற ஞானிகளிற் சிலரின் வசனத்துக்குரிய கருத்து என்னவெனில் இறை வழி நடக்கும் ஒருவன் தனது பயணத்தின் இடைவழியில் ஒரு “மகாம்” அந்தஸ்த்தை அடைவான். அவ்வேளை வணக்கம் செய்வது அவன்மீது கஷ்டமாயிருந்த நிலை அவைன விட்டும் போய்விடும் என்பதேயாகும். “ஏவல் விலக்கல்” போய்விடும் என்பது கருத்தல்ல.
“தக்லீப்” என்ற சொல்லுக்கு ஏவல் விலக்கல் என்று பொருள் கொள்ளாமல்
المرادُ بهذه التّكليف ذهابُ كُلفَةِ العبادة، فلا يصيرُ يمَلُّ منها،
வணக்கம் செய்தல் அவனுக்கு கஷ்டமானதாயிருந்த நிலை அவனை விட்டும் போய் இன்பத்தோடு வணக்கம் செய்யும் நிலை ஏற்படும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
بل رُبّما تلذّذَ بِفِعل ما كانت نفسُه تَتَصَعَّبُ لِفِعله قبل ذلك،
ஒருவன் இறைவழி நடக்கத் தொடங்கியதிலிருந்து வழிபாட்டில் அதிக கவனம் செலுத்தி அதிக வணக்க வழிபாட்டில் இறங்கிவிடுவான். இவன் இறைவழி நடக்கத் தொடங்குமுன் எந்த ஒரு வணக்க வழிபாடும் செய்யாமலிருந்து பழகிய காரணத்தால் இறைஞான வழிக்கு வந்த ஆர்வத்தினால் அதிக வணக்கங்கள் செய்வான். இதனால் அவனுக்கு வணக்கம் செய்வது கஷ்டமாகிவிடும். அதாவது வணக்கம் செய்வதை கஷ்டமாகக் கருதக் கூடிய நிலை ஏற்படும். அவன் தனக்கேற்படுகின்ற கஷ்டங்களைப் பொருட்படுத்தாது வணக்கம் செய்வான். இவ்வாறு செய்து வரும் கால கட்டத்தில் வணக்கம் மூலம் அவன் அனுபவித்து வந்த கஷ்டம் இன்பமாக மாறிவிடுவதற்கும் சாத்தியமுண்டு. அவ்வாறு மாறினால் அவனின் “நப்ஸ்” என்ற மனம் வணக்கத்தின் மூலம் பெற்று வந்த கஷ்டத்தை இன்பமாக காணும் மன நிலை ஏற்பட்டுவிடும். வணக்கத்தை கசப்பு உணர்வோடு செய்து வந்த அவன் இன்பம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வோடு அதைச் செய்ய வேண்டியவனாகிவிடுவான்.
قد مكثتُ أنا فى هذا المقام لا أتكلَّفُ لأشقِّ العبادات،
நானும் இவ்வாறான ஒரு “மகாம்” இடத்தை அடைந்து கஷ்டமான வணக்கங்கள் செய்வதை கஷ்டமாகக் கருதாமல் இன்பமாகக் கருதியே செய்து வந்தேன்.
ثمّ كُشف لي عن نقص ذلك المقام لما يصاحبُه من هَوَى النّفس، فتُبتُ منه، وصِرتُ لا آتي بعبادة إلّا بمشقّةٍ وكُلفةٍ، كأنّي حاملٌ جبلا، وذلكلِما فيها من الآداب والمشاهد، الّتي كُلِّفْنا بها فيها، وكنت قبل ذلك لا أتكلّف لها كما لا أتكلّف لخروج النَّفَسِ من أَنْفِي ودُخولُه،
பின்னர் எனக்குத் தெளிவானது. (“கஷ்பு” மூலம் எனக்குக் கிடைத்தது). இன்பத்தைக் கருத்திற் கொண்டு வணக்கம் செய்யும் அந்த “மகாம்” சரியானதல்ல என்று. ஏனெனில் அதில் “நப்ஸ்” என்ற மனவெழுச்சியின் தூண்டுதல் இருப்பதால் நான் அதை விரும்பவில்லை. ஆகையால் அதிலிருந்து “தவ்பா” பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். இப்போது நான் எந்தவொரு வணக்கமாயினும் அதை தலையில் மலையை சுமப்பது போல் என்ற உணர்வோடு சுமந்து சொல்லொணா இன்னல்களைத் தாங்கிக் கொண்டு வணக்கம் புரிகிறேன். நாம் ஏவப்பட்டது போல் இவ்வாறு செய்யும் வணக்கத்திலேதான் ஒழுக்கங்கள் பலவும், காட்சிகள் பலவும் உள்ளன. அதற்கு முன்னால் வணக்கம் செய்வதில் எந்த ஒரு கஷ்டத்தையும் அனுபவிக்காமல் என் மூக்கால் மூச்சு உள்ளே சென்றும் வெளியே வந்தும் போவது போலுமே நான் உணர்ந்து கொண்டிருந்தேன்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு, “நீங்கள் கஷ்டமான ஒரு வணக்கத்தை முடித்தால் இன்னொரு வணக்கத்தை தொடங்குங்கள்” என்று அல்லாஹ் சொல்லியுள்ளான்.
மேற்கண்ட இவ்விடயம் இறை வழி நடக்கும் ஒருவனால் மட்டுமே அனுபவிக்க முடிந்த ஒன்றாகும். கஷ்டப்பட்டு வணக்கம் புரியாமல் ஓய்வெடுப்பதெங்கே? நாம் அனைவரும் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ்வை முன்னோக்கிச் செல்லுமாறு வேண்டப்பட்டுள்ளோம். மேற்கண்டவாறு இமாம் ஷஃறானீ கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்யவாகீத் வல்ஜவாஹிர்
பாகம்: 01, பக்கம் 135, பாடம்: 26
ஆசிரியர்: அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ்.
குறை குடங்களின் ஆதாரம் 02
மெய்ஞ்ஞானத்தின் உச்சியை அடைந்தவர்களுக்கும், அதைக் கடந்தவர்களுக்கும் ஏவல் விலக்கல் என்பன கிடையாதென்றும், தொழுகை, நோன்பு போன்றவை கடமையில்லை என்றும் கூறும் குறை குடங்கள் தமது கருத்துச் சரியானதென்று நிறுவுவதற்கு கூறும் ஆதாரங்களில் ஒன்றைக் கூறி அதற்குரிய சரியான விளக்கத்தையும் எழுதினேன்.
அவர்களின் கண்டுபிடிப்பு வெறும் கண்துடைப்பு என்பதை நான் எழுதிய விபரங்கள் மூலம் அறிவுள்ளோர் அறிந்திருப்பர்.
அவர்களின் இரண்டாவது கண்டுபிடிப்பு பற்றி ஆராய்வோம்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
“உங்கள் இரட்சகனை உங்களுக்கு “யகீன்” வரும் வரை வணங்குங்கள்” என்று கூறியுள்ளான். (15-99)
இத்திரு வசனம் தருகின்ற கருத்தின்படி “யகீன்” வரும் வரை வணங்குங்கள் அது வந்தால் விட்டு விடுங்கள் என்ற கருத்து வரும்.
“யகீன்” என்றால் என்னவென்று ஆய்வு செய்து பார்ப்போம். இச் சொல்லுக்கு “மவ்த்” மரணமென்று திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பொருள் கூறியுள்ளார்கள். இவர்களின் கூற்றின்படி ஒருவன் மரணிக்கும் வரை வணக்கம் செய்யவே வேண்டும். அதை விடக் கூடாது என்று கருத்து வரும்.
இச் சொல்லுக்கு நம்பிக்கை, உறுதி என்ற பொருள்களும் உள்ளன. ஆன்மிகத்தில் அதன் உச்சியை அடைந்தோருக்கு “ஷரீஆ” இல்லை – ஏவல் விலக்கல் இல்லையென்று கூறும் குறை குடங்கள் “யகீன்” என்ற சொல்லுக்கு மரணம் என்று பொருள் கூறாமல் நம்பிக்கை வந்தால் வணக்கம் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.
இவர்களின் கூற்று பிழையென்று பல வழிகளில் நிறுவ முடியும். அவற்றில் ஒன்று ஆன்மீகத்தின் உச்சியை அடைந்த ஒருவன், இவர்கள் சொல்வது போல் “யகீன்” என்ற “மகாமை” அடைந்தானாயின் அவன் தொழுகை மட்டுமன்றி எந்த ஒரு வணக்கமும் செய்யத் தேவையில்லை என்றே முடிவு செய்ய வேண்டும். தொழத் தேவையில்லை என்று மட்டும் சொல்ல முடியாது.
ஏனெனில் இவர்கள் கூறும் மேற்கண்ட திரு வசனத்தில் وَاعْبُدْ நீங்கள் வணங்குங்கள் என்ற சொல்தான் வந்துள்ளதேயன்றி وَصَلِّ நீங்கள் தொழுங்கள் என்று வரவில்லை. இதன்படி இக்குறை குடங்கள் பொதுவாக அனைத்து வணக்கங்களையும் விட வேண்டும். தொழாமல் மட்டும் இருந்து கொண்டு இத்திரு வசனத்தை தமது கருத்துக்கு ஆதாரமாக முன்வைப்பது பிழையாகும்.
இவர்கள் “றாதிப்”, “திக்ர் மஜ்லிஸ்” நடத்துகிறார்கள். இது என்ன? “இபாதத்” வணக்கமா இல்லையா? இவர்கள் ஆதாரமாகக் கூறும் திரு வசனத்தின்படி இவர்கள் “றாதிப்” நடத்துவதும், “திக்ர்” செய்வதும் கூடாது. தொழுகையை விடுவது போல் இதையும் விடவேண்டும்.
இதை விடுவது மட்டுமன்றி “இபாதத்” வணக்கமென்று சொல்லப்படுகின்ற எதையும் செய்யக் கூடாது. திருமணமும் செய்யலாகாது. அவ்வாறாயின் இவர்கள் திருமணம் செய்திருந்தால் அது நிறைவேறாது. இதன்படி இவர்கள் தொடர்ந்து விபச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் விபச்சாரத்தில் பிறந்த குழந்தைகளாகவே இருக்க வேண்டும்.
பொதுவாக “யகீன் வரும் வரை வணங்க வேண்டும், அது வந்தால் அதை விட்டுவிட வேண்டும்” என்ற இவர்களின் கூற்றின்படி எந்தவொரு வணக்கமும் செய்யக் கூடாது. ஆனால் இவர்கள் தொழத்தேவையில்லை, “யகீன்” வந்தால் அதை விட வேண்டுமென்று மட்டும் சொல்லிக் கொண்டு தமது கூற்றுக்கு இத்திருவசனத்தை கூறிக் கொண்டிருப்பது இவர்களின் அறியாமையை படம் பிடித்துக் காட்டுகிறது.
இவர்கள் தமது வாதத்திற்கு وَاعْبُدْ என்ற திருவசனத்தை ஆதாரமாகக் கூறிக் கொண்டிருப்பதற்குப் பிரதான காரணம் இவர்களின் வழி காட்டிக்கும், இவர்களுக்கும் அறபு மொழி அணு அளவும் தெரியாமற் போனதேயாகும். குறிப்பாக وَاعْبُدْ வணங்குக என்ற சொல்லுக்கும், وَصَلِّ தொழுங்கள் என்ற சொல்லுக்கும் வித்தியாசம் தெரியாமற் போனதேயாகும்.
குறை குடங்கள் சொல்வது போல் இறை ஞானத்தின் உச்சியை அடைந்தவர்களுக்கு “ஷரீஆ” இல்லை என்றும், ஏவல் விலக்கல் இல்லையென்றும் வைத்துக் கொண்டால் எம்பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தொழுதார்களே அவர்கள் இந்த உச்சியையும், இவர்கள் கூறும் “யகீன்” என்ற நம்பிக்கையையும் அடையவில்லையா? வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தொழுதார்களே அவர்கள் அந்த மகாமை அடையவில்லையா? மற்றும் உலகில் தோன்றிய அனைத்து அவ்லியாஉகளும் தொழுதார்களே அவர்கள் அனைவரும் அந்த “மர்தபா” பதவியை அடையவில்லையா? குறை குடங்களே! நீங்கள் உலகைச் சுற்றி வலம் வராமலும், பழைய புராணங்களைப் பேசிப் பேசி மழுப்பாமலும் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு மட்டும் விளக்கம் சொல்லுங்கள்.
குறை குடங்களே! ஒருவர் மரணித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஜனாஸாவுக்குள்ள நான்கு கடமைகளும் “ஷரீஆ” கூறும் கடமைகளல்லவா? நீங்களோ “ஷரீஆ”வைக் கடந்த மகான்களாயிற்றே என்ன செய்வீர்கள்?
கண் திறவுங்கள். காமில் ஒருவரின் கரம் பற்றி கரை சேருங்கள்.
இமாம் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” எனும் நூல் 135ம் பக்கத்தில் ஞானிகளிற் சிலர் கூறிய வசனத்திற்கு விளக்கம் எழுதுகையில் கூறிய சில விடயங்கள் தொடர்பாக சில குறிப்புகள் தருகின்றேன்.
அவற்றில் ஒன்று “ஸாலிக்” என்ற சொல். இதற்கு பொதுவாக நடப்பவன் என்று பொருள் வரும். உதாரணமாக عَبْدُ اللهِ سَالِكٌ سَبِيْلَ أَبِيْهِ அப்துல்லாஹ் என்பவன் தனது தந்தையின் வழி நடப்பவன் என்பது போன்று. இந்த இடத்தில் காலால் நடப்பவன் என்ற பொருள் வராது. மாறாக கொள்கை வழி நடப்பவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.
இன்னும் மார்க்கவழி நடப்பவன் என்ற பொருளும் இதற்கு உண்டு. உதாரணமாக مُحَمَّدٌ رَجُلٌ صَالِحٌ سَالِكٌ முஹம்மத் மார்க்க வழி நடக்கும் நல்லவன் என்பது போன்று. ஸூபீ மகான்கள் இச் சொல்லை “தரீகா” வழி, ஸூபிஸ வழி நடப்பவர்களுக்குப் பயன்படுத்துவார்கள்.
ஷஃறானீ அவர்கள் அந்தப் பந்தியில் ஓர் இடத்தில்
وقد مكثتُ أنا فى هذا المقام لا أتكلَّفُ لأشقِّ العبادات، ثمّ كُشف لي عن نقص ذلك المقام لما يصاحبُه من هَوَى النّفس الخ،
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது தானும் அந்த “மகாம்” படித்தரத்தில் இருந்ததாகவும், கஷ்டமான வணக்கங்களை கஷ்டமாக கருதாமல் அதில் கிடைத்த இன்பம் காரணமாக அதை அனுபவித்துச் செய்து வந்ததாகவும், பின்னால் அவர்களுக்கு அந்த மகாம் நல்லதல்ல என்று “கஷ்பு” மூலம் கிடைத்த தகவலின் படி அதிலிருந்து பாவமன்னிப்புக் கேட்டு மீண்டதாகவும் கூறியுள்ளார்கள்.
இதன் சுருக்கம் என்னவெனில் ஒரு வணக்கத்தை இன்பம், சுகம் என்பவற்றை அனுபவித்துக் கொண்டு செய்தல் “நப்ஸ்” என்ற நச்சுப் பாம்புக்கு உணவு வழங்குவது போலாகிவிடும். ஆகையால் அந்த வணக்கத்தின் மூலம் அந்த “நப்ஸ்” சுகம் பெறலாகாதென்று கருதியே அவ்வாறு அதை துறந்தேன் என்று கூறுகிறார்கள்.
இந்தக் கருத்தை மஸ்தான் ஸாஹிபு அப்துல் காதிர் ஆலிம் அவர்கள்,
வேட்டை பெரிதென்றே வெறி நாயைக் கைப்பிடித்து
காட்டில் புகலாமோ கண்ணே றஹ்மானே!
என்று பாடியுள்ளார்கள்.
வேட்டை என்று அவர்கள் குறிப்பிட்டது நல்லமல்களைக் குறிக்கும். வெறி நாய் என்று அவர்கள் குறிப்பிட்டது தங்களின் “நப்ஸ்” என்ற மன ஆசையாகும். எவன் தனது மனவாசையை வழிகாட்டியாக எடுத்தானோ அவன் பாழடைந்த கிணற்றில் விழுந்து தன்னை அழித்துக் கொள்வான். பட்டம், பதவி, புகழ் என்பதை கருத்திற் கொண்டு எவர் எந்த அமல் செய்தாலும் அந்த அமல் பிரகாசிக்காது. உயிரோட்டமுள்ள நற்செயலாகாது.
ஒரு நாள் வறுமைப்பட்ட ஒரு கிராமப் புற மக்கள் தமது கிராமத்தில் பள்ளிவாயல் ஒன்று கட்டுவதற்கு வசூல் எடுப்பதற்காக ஒரு கோடீஸ்வரனைச் சந்திக்க வந்தனர். வறுமைப்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்களாதலால் ஏழைகளின் உருவத்தில் இருவர் மட்டும் வந்தார்கள். விடயத்தைக் கோடீஸ்வரனிடம் கூறி உதவி கேட்டார்கள்.
வந்தவர்களிடம் கோடீஸ்வரன் அடிக்கல் நாட்டு விழா எப்போது? அதற்கு யார் வருவார்? கல் நாட்டும் நிகழ்வை படமெடுத்து பத்திரிகைக்குக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளீர்களா? என்று கேட்டார்.
அதற்கவர்கள் எங்களின் கிராமம் வறுமைப்பட்ட மக்கள் வாழும் கிராமம். பெரிய அளவில் ஏற்பாடு செய்ய வாய்ப்பு இல்லை. மௌலவீ ஒருவரை மட்டும் அழைத்து நாங்கள் இருவரும் கலந்து விஷயத்தை முடித்து விடுவோம் என்றார்கள். ஓலையால் சிறிய மட்டத்தில் அமைக்க 50 ஆயிரம் தந்தால் போதும் என்றும் கூறினார்கள். கோடீஸ்வரன் நல்ல பணிதான் செய்யுங்கள். ஆனால் இப்போது நான் பணம் பற்றாக்குறையுடன் இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் இன்னொரு சமயம் வாருங்கள் என்று கூறி அனுப்பிவிட்டான்.
மறுநாட்காலை அவனின் வீட்டுக்கு முன்னால் சுமார் 1.5 கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பத்திரிகையாளர் – றிபோர்டர் – ஒருவரும், வீடியோ கமறாவோடு இன்னொருவரும், செல்வந்தர்களில் இருவரும் இறங்கினார்கள். வந்தவர்களை வரவேற்றான் கோடீஸ்வரன். விடயத்தை விளக்கமாகக் கூறி நீங்கள்தான் பள்ளிவாயலுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும். நீங்கள் பொது மக்கள் மத்தியில் சிறிது நெரம் பேசவும் வேண்டும். நீங்களே ஐந்து இலட்சம் ரூபாய் அனைவரும் பார்க்க கையளிக்க வேண்டுமென்றும் கூறி இந்நிகழ்வுகளை டீ.வீ யில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். கோடீஸ்வரனின் உச்சியில் சிவப்பு ரோஸா மலர் பூத்தது போல் இருந்தது. ஐந்து இலட்சமென்ன ஐம்பது இலட்சமே நான் தருகின்றேன் என்றான்.
மறு நாள் காலை 10 மணியளவில் அடிக்கல் நட்டு விழாவும், ஏனைய நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. கோடீஸ்வரன் பட்டம் பதவிக்காகவும், புகழுக்காகவும் செய்து அவற்றைப் பெற்று “நப்ஸ்” என்ற மனவெழுச்சியின் அடிமையாகிவிட்டானேயன்றி அவனுக்கு எந்தவொரு பயனும் கிடைக்காது.
எனவே, “நப்ஸ்” என்ற மனவாசைக்கு அடிமையாகாமல் வாழ்வது மட்டுமே பயன் தரும்.
முற்றும்..