البليد لا يفيده التطويل ولو تليت عليه التوراة والإنجيل
மண்டையில் சரக்கற்ற மட்டிப்பயலுக்கு தவ்றாத், இன்ஜீல் வேதங்களை ஓதிக் காட்டினாலும் அது அவனுக்கு பயன் தராது.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
سُئل الإمام محي الدين النّووي عن الشّيخ محي الدين ابن عربي، قال: تلك أمّة قد خلت، ولكنّ الّذي عندنا أنّه يحرم على كلّ عاقل أن يسيئَ الظّنّ بأحدٍ من أولياء الله تعالى عزّ وجلّ، ويجب عليه أن يؤوِّلَ أقوالهم ما دام لمْ يَلْحَقْ بدرجتهم، ولا يعجز عن ذلك إلّا قليلُ التوفيق، قال فى شرح المُهذّب، ثمّ إذا أُوّل فليُؤوِّلْ كلامَهم إلى سبعين وجها، ولا نقبلُ عنه تأويلا واحدا، ما ذاك إلّا تَعَنُّتٌ اهـ،
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி கேட்கப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
(அது வாழ்ந்து மரணித்த ஒரு சமூகம். எமது கடமை என்னவெனில் – நாம் கூற விரும்புவது என்னவெனில் அவ்லியாஉகளில் எவர் மீதும் தப்பான எண்ணம் கொள்வது “ஹறாம்” ஆகும். அவர்களின் ஆன்மீகத் தரத்தை அடையாத அனைவர் மீதும் அவர்களின் சொல், செயல்களுக்கு வலிந்துரை கொள்வதும் அவர்கள் மீது கடமையாகும். இதற்கு மாறாக நடப்பவன் அல்லாஹ்வின் நல்லனுகூலம் குறைந்தவனாகவே இருப்பான்.
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் தங்களின் “ஷர்ஹுல் முஹத்தப்” என்ற நூலில் இது தொடர்பாக எழுதும்போது அவர்களின் பேச்சுக்கு வலிந்துரை கொடுப்பதாயினும் எழுபது வலிந்துரையாவது கொடுக்க வேண்டும். ஒரேயொரு வலிந்துரை கொடுப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.)
ஆதாரம்: அல்யவாகீத், பாகம்: 01, பக்கம்: 08
ஆசிரியர்: அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ்.
படித்தவர்களே! பாமரர்களே!
சட்டக்கலையில் இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் பேச்சுக்குள்ள மதிப்பு ஏனைய இமாம்களுக்கு இல்லை. ஒரு பேச்சை சுட்டிக்காட்டி இது இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் பேச்சு என்றால் அனைத்து இமாம்களும் தலை குனிந்து நிற்பர்.
இத்தகைய சட்ட மேதையிடம் ஞான வள்ளல் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி கேட்ட போதுதான் மேற்கண்டவாறு அவர்கள் பதிலளித்துள்ளார்கள். இத்தகையோர்தான் அறிஞர்கள். இத்தகையோர்தான் மகான்கள். வழிகாட்டிகள்.
இமாம் நவவீ என்ன சொல்கிறார்கள்? அவர்களின் இந்தப் பேச்சை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரும், பத்வா வழங்கும் அல்லாமாக்களும் அறியவில்லையா? கிதாபுகளில் காணவில்லையா?
ஆன்மீக ஸூபிஸவாதிகளின் சொல்லோ, செயலோ எதுவாயினும் அது இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணாயிருந்தால் அது ஆகும் அல்லது ஆகாது என்று உடனே முடிவு செய்யாமல் அந்தப் பேச்சுக்கு வலிந்துரை கொடுத்து பேசியவரை காபிர் என்றோ, “முர்தத்” மதம் மாறியவர் என்றோ சொல்வது “ஹறாம்” தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளார்கள்.
அதோடு அவர்கள் நின்றுவிடவில்லை. தொடர்ந்து சொல்கையில் அவ்வாறு பேசியவரின் பேச்சுக்கு ஒரு வலிந்துரை மட்டும் கொடுத்து நிறுத்திக் கொள்ளாமல் அந்த வலிந்துரையில் சொன்னவரைக் காப்பாற்ற முடியாது போனால் இரண்டாம் வலிந்துரை கொடுத்துப் பார்க்க வேண்டும். அதிலும் அவரைக் காப்பாற்ற முடியாது போனால் மூன்றாம் வலிந்துரை கொடுத்து அவரைக் குற்றத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக 70 வலிந்துரை கொடுத்தேனும் அவரைக் காப்பாற்ற வேண்டும். 70 வலிந்துரை கொடுத்தும் அவரைக் காப்பாற்ற முடியாது போனால் மட்டுமே அவர் காபிர் என்றோ, “முர்தத்” மதம் மாறியவர் என்றோ “பத்வா” கொடுக்க வேண்டும். தீர்ப்புச் சொல்ல வேண்டும்.
இவ்வாறு சொன்ன இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இறுதியில்
ولا نقبلُ عنه تأويلا واحدا، ما ذاك إلّا تَعَنُّتٌ
ஒரு வலிந்துரையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அதாவது அவருடைய பேச்சுக்கு ஒரு வலிந்துரை மட்டும் கொடுத்துப் பார்த்து விட்டு “பத்வா” கொடுப்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மாறாக 70 வலிந்துரைகள் கொடுத்தும் அவரைக் காப்பாற்ற முடியாது போனால் மட்டுமே தீர்ப்புக் கூற முடியும்.
இவ்வாறு கூறிய இமாம் அவர்கள் ما ذاك إلّا تَعَنُّتٌ – 70 வலிந்துரையெல்லாம் செய்ய முடியாது ஒரு வலிந்துரையோடு மட்டும் முடிவு செய்ய வேண்டுமென்று ஒருவன் சொன்னால் அது அவரின் மன முரண்டும், பிடிவாதமுமேயாகும் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்குச் சொன்னது போல் கூறியுள்ளார்கள்.
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வீ அவர்களினதும், பத்வாக்குழு பண்டிதர்களினதும் நாடிகளை அன்றே பிடித்துப் பார்த்து இவர்கள் யார் என்பதை அறிந்துதான் அவ்வாறு சொல்லியுள்ளார்கள் போலும்.
ஏழு வலிந்துரையாயினும், 70 வலிந்துரையாயினும் பொதுவாக வலிந்துரை கொள்வது கூட பேசியவர் இல்லாத போது மட்டுமேயாகும். அவர் மரணித்திருந்தால், அல்லது அவர் தலைமறைவாகியிருந்தால், அல்லது அவர் பேச முடியாமலிருந்தால் மட்டுமே வலிந்துரைப் பேச்சுக்கு இடமுண்டு.
பேசியவர் உயிருடன் இருந்தால் அவரிடம் நேரில் விளக்கம் கேட்க வேண்டும். அவருக்கு பல தவணைகள் கொடுத்தாவது அவரிடமே அதற்கான விளக்கத்தை கேட்டறிய வேண்டும். எந்த வகையிலும் அவருடன் தொடர்பு கொள்ள முடியாது போனால் மட்டுமே வலிந்துரைக்குச் செல்ல வேண்டும்.
1979ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை செய்தது என்ன? அவர்கள் இஸ்லாமிய “பிக்ஹ்” சட்டத்தைப் பேணி நடந்தார்களா? அல்லது தாமே முப்திகள், இங்கு சட்டம் பேச வேறு யாருமில்லை, இருக்கும் உலமாஉகள் அனைவரும் பேயர்களும், மடையர்களும் என்ற இறுமாப்போடும், கர்வத்தோடும் அவ்வாறு நடந்தார்களா?
1979ம் ஆண்டு இறையியல், ஸூபிஸக் கருத்துக்களைக் கூறிய நான் அன்று முதல் இன்று வரை சுமார் 42 வருடங்களாக இலங்கையிலேயே இருக்கின்றேன். நான் சமூகத்துடன் இணைந்து பகிரங்கமாகவே வாழ்கிறேன். பங்கறில் – பதுங்கு குழியில் ஒழித்து வாழவில்லை. பகிரங்கமாக கூட்டங்களில் பேசுகிறேன். இது தொடர்பாக பல நூல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறேன். இன்னமும் வெளியிட இருக்கிறேன். இந்நிலையில் என்னிடம் விளக்கம் கேட்காமல் தீர்ப்புக் கூறியது இஸ்லாமிய சட்டப்படியும், உலக பொது நியதிப்படியும் பிழையானதாகும்.
قال شيخ الإسلام زكريا الأنصاري رحمه الله فى شرْحه للرّوض ‘ وكان اليافعيّ يُجيزُ روايةَ كُتُبِ الشّيخ محي الدين، ويقول إنّ حُكمَ إنكارِ هؤلاء الجَهَلةِ على أهل الطّريق حُكمُ نَاموسةٍ نَفَخَتْ على جبل تريد إزالته من مكانه بِنَفْخَتِها ‘ اهـ .
ஷெய்குல் இஸ்லாம் ஸகரிய்யா றஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஷர்ஹுர் றவ்ழ்” என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(இமாம் யாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள், ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய அனைத்து நூல்களையும் பார்க்கலாம். கற்றும் கொடுக்கலாம் என்று தீர்ப்புக் கூறியுள்ளார்கள். அதோடு ஸூபிஸவாதிகள், தரீகாவாதிகளை எதிர்க்கும் “ஜாஹில்”கள் மடையர்கள் ஒரு மலையை வாயால் ஊதி அதை அகற்ற முயற்சிக்கும் சிறிய பல்லிகளாவர்) என்றும் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்யவாகீத், பாகம்: 01, பக்கம்: 08
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இறை ஞானத்தில் 900 நூல்களுக்கும் அதிகமான நூல்களை எழுதிய மகான் ஆவார்கள். “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தை மக்களுக்கு அள்ளி வழங்கிய மகானும் ஆவார்கள். அவ்வாறிருந்தும் அவர்களின் நூல்களை கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் ஆகும் என்று “பத்வா” வழங்கியுள்ளார்கள்.
قال الإمام أحمد بن سريح رحمه الله ‘ إنّ أصل الإنكار من الأعداء المبطلين إنّما ينْشأُ من الحسد، ولو أنّ أولئك المنكرين تَرَكُوا الحسدَ وسَلكُوا طريقَ أهلِ الله لم يظهر منهم إنكارٌ ولا حسدٌ وازْدادُوا علما إلى علمهم، (اليواقيت، ج أوّل، ص 14)
இமாம் அஹ்மத் இப்னு ஸுறைஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். (இவர்கள் “ஸெய்யிதுத் தாயிபா” ஜுனைத் அல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் பாடத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
ஸூபிஸ ஞானம், வஹ்ததுல் வுஜூத் ஞானங்களை எதிர்க்கும் வீணர்கள் பொறாமை காரணமாகவே எதிர்க்கின்றார்கள். இந்த வீணர்கள் பொறாமையை தூக்கி எறிந்துவிட்டு “தரீகா: வழியிற் சென்றார்களாயின் பொறாமை, எதிர்ப்பு என்பன அவர்களிடம் இல்லாமற் போய்விடும். அதோடு அவர்களின் அறிவோடு பல அறிவுகளும் கிடைத்துவிடும்.
ஆதாரம்: அல் யவாகீத், பாகம் 01, பக்கம் 14
மௌலவீ ரிஸ்வீ அவர்களே! நீங்கள் செய்த வேலை அல்லாஹ்வின் சீற்றத்தை ஏற்படுத்தும் கீழ்த்தரமான செயலாகும். இறுதியாகச் சொல்கிறேன். நீங்கள் “பத்வா”வை வாபஸ் பெறவில்லையானால் அல்லாஹ்வின் சோதனையும், அவனின் தண்டனையும் உங்களின் நிழலைப் போல் உங்களைத் தொடரும். உங்கள் பத்வாவினால் பாதிக்கப்பட்டு அல்லல் படும் பல்லாயிரம் ஸூபீகளின் கரங்களும் அல்லாஹ்வின் பால் உயரும்.