தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
முஹம்மத் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “மிஃறாஜ்” விண்வெளிப் பயணத்தின்போது 90 ஆயிரம் தலைப்பில் அல்லாஹ்வுடன் உரையாடினார்கள்.
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை ஆன்மிக பலத்தின் மூலம் உலகத்தை வலம் வந்த உத்தமர் ஒருவருளரேல் அவர்கள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டுமேயாவர்.
அவர்கள் உலகத்தை வலம் வந்தது மட்டுமன்றி சுவர்க்கம், நரகம், மற்றுமுள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகள் அனைத்தையும் கண்டு மகிழ்ந்து, நபீமார், மலக்குகளுடன் உரையாடியபின் இவ்வுலகிற்கு மீண்டார்கள்.
தங்களது இப்பயணத்தின் போது அல்லாஹ்வுடன் நேருக்கு நேர் உரையாடிய, அவனைத் தலைக் கண்ணால் கண்டு மகிழ்ந்தவர்களும் இவர்கள் மட்டுமேயாவர்.
நபீ பெருமான் அவர்கள் மேற்கண்ட இப்பயணத்திற்கும், அதன் போது அவர்கள் கண்டுகளித்த காட்சிகளுக்கும் கால நேரம் சொல்வதாயின் பல நூறாண்டுகள் தேவை என்றே சொல்ல வேண்டும். ஆயினுமவர்கள் ஒரு சில நிமிடங்களில் பயணத்தை முடித்துக் கொண்டு இப்புவிக்குத் திரும்பியது உலக அதிசயங்களில் ஒன்று என்றே கூற வேண்டும்.
இவர்கள் தனது புனித பயணத்திற்காக செலவிட்ட நேரம் சுமார் பத்து நிமிடத்தை தாண்டாது என்றே ஆய்வாளர்களின் கணிப்பு உள்ளது. அவர்கள் பயண நேரத்தைப் பின்வருமாறு கணிக்கின்றார்கள். திரு மக்கஹ் நகரில் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வீட்டிலிருந்து பயணத்தை மேற் கொண்ட பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தாங்கள் உறங்கிய இடத்திற்கு மீண்ட போது அவ்விடத்தில் அவர்களின் புனித உடற் சூடு மாறாமல் இருந்ததாக வரலாறு கூறுகிறது.
சாதாரண ஒரு மனிதனின் உடல் சூடு அவன் உறங்கியிருந்த இடத்தில் ஆகக் கூடிய நேரம் பத்து நிமிடங்கள் இருக்க வாய்ப்பு உண்டு என்று வைத்திய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது வைத்திய மேதைகளிடம் கேட்டறிந்த உண்மையாகும்.
இந்த நிகழ்வு பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானிகளிற் பலர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதாகவும், இன்னும் பல ஆய்வாளர்கள் இஸ்லாம் மார்க்கத்தின் தத்துவம் புரிந்து அதில் இணைந்து கொண்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
இது நம்ப முடியாத ஓர் உண்மையாயிருப்பதால் இது தொடர்பாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தமது ஆய்வில் தோல்வி கண்டு இது தெய்வீக சக்தி என்று முடிவு செய்து கொண்டாலும் இதிலுள்ள இரகசியத்தைப் புரிந்து கொள்வதற்காக இன்னும் ஆய்வு செய்து கொண்டே உள்ளனர்.
ஆயிரம் விஞ்ஞானிகளும், ஆயிரம் ஆய்வாளர்களும், ஆயிரம் சிந்தனையாளர்களும் ஒன்று கூடிப் பல ஆயிரம் வருடங்கள் ஆய்வு செய்தாலும் அவர்களின் முடிவு அந்த முஹம்மத் அவர்கள் ஆய்வுக்கும், சிந்தனைக்கும், விஞ்ஞானத்திற்கும் எட்டாத தெய்வீக சக்திகளைக் கொண்ட ஓர் அற்புத சக்தி என்பதேயாகும்.
இது பெருமானாரின் ஆன்மீகப் பயணம். இவர்கள் போல் உயிரோடும், உடலோடும் அண்ட சராசரங்களையும் வலம் வந்த சிறப்பு இவர்களுக்கு மட்டும் உரியதேயாகும். ஆயினும் அவர்களின் ஆன்மீக வழி வாழ்ந்து மெய் நிலை கண்ட மேதைகள், ஞான மகான்களாலும் “மிஃறாஜ்” செல்ல முடியும். ஆனால் “றூஹ்” உயிருடன் மட்டும்தான் அவர்களால் போக முடியும். உயிரும் உடலும் சேர்ந்து போகும் நிலை பெருமானாருக்கு மட்டுமுள்ளதேயாகும்.
அல்லாஹ் படைத்த ஆலம்கள் பதினான்கு என்றும், பதினெண்ணாயிரம் என்றும் ஸூபீ மகான்கள் கூறுவர். அவர்கள் பல ஆலங்களுக்குப் போனவர்களுமேயாவர். இன்று வரை பலர் பயணித்துக் கொண்டே உள்ளனர்.
ஆன்மீகம் மேலோங்கிய குத்புமார்கள் அடிக்கடி பல ஆலங்களுக்குச் சென்று வருவர். ஆன்மீகவாதிகளிற் சிலருக்கு நேரத்தையும், தூரத்தையும் சுருக்கியும், நீட்டியும் கொடுப்பான். அந்த வகையில் ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தை ஐந்து நிமிடமாகச் சுருக்கியும் கொடுப்பான். ஐந்து நிமிடத்தை ஐந்து வருடமாக விரிவாக்கியும் கொடுப்பான்.
ஒரு ஞான மகானின் வரலாறை சுருக்கமாக எழுதுகிறேன். அந்த மகான் கடலுக்குச் சென்று மீன் பிடித்து சந்தையில் அதை விற்று தனது மக்களுடன் வாழ்ந்து வந்த மகான் ஆவார்.
ஒரு நாள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து கறி சமைத்து வைக்குமாறு மனைவியிடம் கூறிவிட்டு மீண்டும் வலையுடன் கடலுக்குச் சென்றார். அவ்வழியே சென்ற ஓர் இறை ஞானி அவரை அணுகி இதோ பார் என்று சட்டைக் கையை விரித்துக் காட்டினார். அவ்வளவுதான் அவர் ஒரு நொடி நேரத்தில் இன்னொரு நாட்டில் நின்றார். தனது நாட்டுக்குத் திரும்பி வர முடியாத நிலையில் அந்த நாட்டிலேயே திருமணம் செய்து ஆறு ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தார். ஆறு ஆண்டுகளில் அவருக்கு நான்கு குழந்தைகளும் பிறந்தன.
வெளி நாட்டில் வாழ்ந்த ஆறு வருடமும் மீன்பிடித் தொழிலையே செய்தும் வந்தார். ஒரு நாள் மீன் பிடிப்பதற்காக வலையோடு கடலுக்குச் சென்ற அவர் ஆறு வருடங்களுக்கு முன் தனது சட்டைக்கையை காட்டி வெளிநாடு அனுப்பி வைத்த ஞான மகானைச் சந்தித்தார். மீண்டும் அவர் தனது சட்டைக் கையைப் பார்க்கச் சொன்னார். மறுகனமே அவர் தனதூர் கடலோரம் வந்துவிட்டார்.
தனது வீட்டுக்கு வந்தார். தனது மனைவி அவர் ஆறு வருடங்களுக்கு முன் கடலில் பிடித்துக் கொடுத்த மீனைக் கறி சமைத்து அந்தக் கறிச் சட்டியை அடுப்பிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தாள்.
ஆறு வருடம் அவருக்கு சுமார் இரண்டு மணித்தியாலங்களாகவும், அதேபோல் அவரின் மனைவிக்கும் சுருக்கிக் கொடுக்கப்பட்டது. கணவன் தனக்கு நடந்ததை – வெளிநாடு சென்று திருமணம் செய்து நான்கு பிள்ளைகள் பெற்ற வரலாறை மனைவியிடம் கூற மனைவி அதை முற்றாக மறுத்துவிட்டார்.
மிகப் பிரசித்தி பெற்ற இமாம்கள், அவ்லியாஉகள், ஞான மகான்கள், ஸூபீகளின் வாழ்க்கை வரலாறை நாம் பார்க்கும் போது ஒரே இரவில் மூன்று தரம் திருக்குர்ஆனை ஓதி முடித்த வரலாறுகளை நாம் காண்கிறோம். ஒருவர் ஒரு “ஜுஸ்உ” திருக்குர்ஆனின் ஒரு பாகத்தை முறைப்படி ஓதுவதற்கு சுமார் 15 நிமிடங்களாவது தேவை. மூன்று தரம் திருக்குர்ஆன் முப்பது பாகங்களையும் ஓதி முடிப்பதற்கு – ஒரு பாகத்தை ஓதி முடிக்க 15 நிமிடங்கள் தேவை என்றதன் படி 22.5 மணித்தியாலங்கள் தேவைப்படும். சுமார் பகலிரவு கொண்ட ஒரு நாள் தேவைப்படும். ஒருவர் “இஷா” தொழுது முடிந்ததிலிருந்து – அதாவது எட்டு மணியிலிருந்து இடையில் நிறுத்தாமல் ஓதினால் மறுநாள் 06.30 மணி வரை ஓத வேண்டும். சுமார் ஒரு நாள் ஓத வேண்டும்.
ஞான மகான்கள், ஸூபீகள் ஓர் இரவில் மட்டும் 30 பாகங்களையும் மூன்று தரம் ஓதி முடிக்கின்றார்கள் என்றால் இது எவ்வாறு சாத்தியமாகும்?
எனவே நல்லடியார்களுக்கு அல்லாஹ் நிலத்தை சுருக்கிக் கொடுப்பது போல் நேரத்தையும் சுருக்கி கொடுக்கிறான் என்பது தெளிவாகின்றது.
இது நல்லடியார்களுக்கு அல்லாஹ் வழங்கும் “கறாமத்” அற்புதமாகும். இதுபோல் இன்னும் பல விஷேடங்களையும் அல்லாஹ் வழங்குவான்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுடன் எத்தனை மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதைப் பின்வரும் குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
قيل وَقَعَ بَيْنَ اللهِ عَزَّ وَجَلَّ وَرَسُوْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْمِعْرَاجِ تِسْعُوْنَ أَلْفِ كَلِمَةٍ، ثَلَاثُوْنَ أَلْفٍ مِنْهَا مُتَعَلِّقٌ بِأَحْكَامِ الشَّرِيْعَةِ، وَثَلَاثُوْنَ أَلْفٍ مُتَعَلِّقٌ بِأَحْكَامِ الطَّرِيْقَةِ، وَثَلَاثُوْنَ أَلْفٍ مُتَعَلِّقٌ بِأَحْكَامِ الْحَقِيْقَةِ، (سرّ الأسرار، ص 62، الصل الرابع فى بيان عدد العلوم)
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “மிஃறாஜ்” விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இரவு 90 ஆயிரம் சொற்கள் பேசினார்கள். அவற்றில் முப்பதாயிரம் சொற்கள் “ஷரீஆ”வோடு சம்பந்தப்பட்டவையாகவும், இன்னும் முப்பதாயிரம் சொற்கள் “தரீகா”வோடு சம்பந்தப்பட்டவையாகவும், இன்னும் முப்பதாயிரம் சொற்கள் “ஹகீகா”வோடு சம்பந்தப்பட்டவையாகவும் இருந்தன.
ஸிர்றுல் அஸ்றார், பக்கம் 62, நாலாம் பிரிவு
அறபு வசனத்தில் “கலிமா” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதற்குரிய “சொல்” என்ற பொருளைக் கொடுத்தால் 90 ஆயிரம் சொற்கள் என்று பொருள் வரும். “கலிமா” என்ற சொல்லுக்கு அவ்வாறு பொருள் கொள்ளாமல் பேச்சு என்று பொருள் கொண்டால் 90 ஆயிரம் பேச்சு என்று பொருள் வரும்.
பேச்சு என்று நமது பேச்சு வழக்கில் ஐந்து நிமிடம் ஒருவர் பேசினாலும் அதற்கு பேச்சு என்றே சொல்வோம். இதேபோல் ஐந்து மணி நேரம் பேசினாலும் அதற்கும் பேச்சு என்றே சொல்வோம்.
பெருமானாரவர்களின் தரத்தையும், பயணத்தின் மகிமையையும் கவனித்தால் அவர்கள் பேசிய சொற்கள் போதாதென்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர்கள் பேரின்பக் காதல் கடலில் மூழ்கியவர்கள். அவர்கள் இருவரும் உரையாட உரையாட பேரின்பக் கடல் அலை மோதிக் கொண்டே இருக்கும். ஆகையால் அவர்கள் கோடிக் கணக்கான சொற்களில் உரையாடி இருந்தால்தான் அது பேரின்ப உரையாடலாக இருந்திருக்கும்.
எனவே, அறபு வசனத்தில் வந்துள்ள كلمة என்ற சொல்லுக்கு அதற்குரிய பொருளான “சொல்” என்று பொருள் கூறாமல் “பேச்சு” என்று பொருள் கொண்டு 90 ஆயிரம் பேச்சுப் பேசினார்கள் என்றும், ஒவ்வோர் பேச்சும் பல்லாயிரம் சொற்கள் கொண்டதாக இருந்திருக்கும் என்றும் விளங்க வேண்டும்.
(இந்தப் பதிவை வாசித்த அனைவரும் எனது உடல் நலத்திற்காகவும், என் தேவைகள் நிறைவேறுவதற்காகவும் “துஆ” செய்யுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்)