தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
பள்ளிவாயல்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானவை. எனவே அங்கு அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள். (திருக்குர்ஆன் ஜின் அத்தியாயம், வசனம்: 18)
01. பள்ளிவாயல்களில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்க வேண்டும். வேறு எவரையும் அழைத்தல் கூடாது.
02. பாங்கு சொல்பவர் “ஹய்ய அலஸ்ஸலாஹ் – ஹய்ய அலல் பலாஹ்” இரண்டை மட்டும் பள்ளிக்குள் சொல்லாமல் வெளியே வந்து சொன்ன பின் மிகுதியை பள்ளிவாயலில் சொல்லலாம்.
03. தொழுகைக்காக “இகாமத்” சொல்லப்படும் போதும் மேற்கண்டவாறே செய்ய வேண்டும்.
04. பள்ளிவாயலில் தொழுபவன் “அத்தஹிய்யாத்” ஓதும்போது “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு” என்ற வசனத்தை மட்டும் வெளியே வந்து ஓதிவிட்டு பாக்கியை பள்ளிவாயலில் ஓதி முடிக்கலாம்.
05. வெள்ளிக்கிழமை மின்பரில் பிரசங்கம் நிகழ்த்தும் மௌலவீ தமிழ் மொழியிலும், அறபியிலும் கூடியிருக்கும் மக்களை விழிக்கும் வசனங்களை மட்டும் பள்ளிவாயலுக்கு வெளியே வந்து மொழிந்து விட்டு பின்னர் பள்ளிவாயலில் பிரசங்கம் செய்யலாம்.
06. பள்ளிவாயலில் பிரசங்கம் நிகழ்த்தும் எவரும் சகோதரர்களே! சகோதரிகளே! போன்ற விழிக்கும் வசனங்களை பள்ளிவாயலுக்கு வெளியே வந்து விழித்து விட்டு பின்னர் உள்ளே சென்று பிரசங்கம் செய்யலாம்.
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தை திருக்குர்ஆன் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்த வஹ்ஹாபிஸ விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள்.
பள்ளிவாயல் உள்ளே பாங்கு சொல்வது மார்க்க விரோதம்!
திருக்குர்ஆனையும், திரு நபீயின் ஹதீதுகளையும் நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்த வஹ்ஹாபிஸ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
பள்ளிவாயல்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானவை. எனவே அங்கு அல்லாஹ்வுடன் எவரையும் வணங்காதீர்கள். (திருக்குர்ஆன் ஜின் அத்தியாயம், வசனம்: 18)
பள்ளிவாயல் பற்றி சில வரிகள்.
பள்ளிவாயலாக “வக்பு” செய்யப்பட்ட நிலம் – காணியில் கட்டிடம் கட்டப்பட்டிருந்தாலும், வெறும் நிலமாக இருந்தாலும் அந்த எல்லை “மஸ்ஜித்” என்றே “ஷரீஆ”வில் கணிக்கப்படும். பள்ளிவாயலுக்குரிய அனைத்துக் சட்டங்களும் அந்த இடத்திற்கு உண்டு.
ஆயினும் பள்ளிவாயலாக “வக்பு” செய்யாமல் பள்ளிவாயலுக்காக “வக்பு” செய்யப்பட்ட காணிக்கோ, கட்டிடத்திற்கோ பள்ளிவாயல் – “மஸ்ஜித்” என்று மார்க்க ரீதியில் கணிக்கப்படமாட்டாது. அந்தக் காணியில் அல்லது கட்டிடத்தில் பள்ளிவாயலுக்குரிய மார்க்க சட்டம் பேணப்படத் தேவையில்லை.
பள்ளிக்காக “வக்பு” செய்தல் என்பது அதன் வருவாய் கருதி, அல்லது அதன் வேறு தேவை கருதி ஒரு காணியை, தோட்டத்தை, கட்டிடத்தை “வக்பு” செய்தல் போன்று.
ஒருவர் ஒரு நிலத்தில் குறிப்பிட்ட ஓர் எல்லையை பள்ளிவாயலாக “வக்பு” செய்ய விரும்பினால் அந்த இடத்தில் கல்லால் கட்டிடம் கட்டித்தான் “வக்பு” செய்ய வேண்டும் என்பதோ, அல்லது ஓலை, தகரம், மரம் போன்றவற்றால் ஒரு கூடாரம் அடித்த பிறகுதான் “வக்பு” செய்ய வேண்டுமென்பதோ அவசியமில்லை. வெறும் நிலத்தையே “வக்பு” செய்யலாம்.
எனினும் அவ்விடம் எல்லையிடப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு அது “மஸ்ஜித்” என்று இனங்காட்டப்பட வேண்டும். அதோடு இவ்விடம் “மஸ்ஜித்” ஆக “வக்பு” செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தல் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தால்தான் பொது மக்கள் அவ்விடத்திற்கு பள்ளிவாயலுக்குரிய மார்க்க சட்டங்களை பேணி நடப்பதற்கும், அவ்விடத்தில் தொழுது பள்ளிவாயலில் தொழுத பலனை அடைவதற்கும் வழியேற்படும். அந்த இடத்தில் “இஃதிகாப்” இருப்பதற்கும் முடியும்.
பள்ளிவாயலாக “வக்பு” செய்யப்பட்ட இடத்தில் மல, சல கூடம் அமைப்பதும் தடை செய்யப்பட்டதாகும்.
தலைப்பிற்குரிய விளக்கம்
மேலே நான் எழுதிய “ஜின்” அத்தியாயம் 18ம் வசனத்தை கவனிப்போம்.
وأن المساجد لله
பள்ளிவாயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகும். இதில் எவருக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடுமில்லை. பள்ளிவாயல் விடயத்தில் ஆட்சியுரிமை என்பதற்கு இடமே இல்லை. பின்வரும் வசனம் மட்டும் வஹ்ஹாபிகள் கையடிக்கும் வசனமாகும். فلا تدعوا مع الله أحدا
இந்த வசனத்திற்கு, இரண்டு விதமாக பொருள் சொல்ல சாத்தியமுண்டு. ஒன்று. “அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்க வேண்டாம்” என்பது. இரண்டு. “அல்லாஹ்வுடன் எவரையும் வணங்க வேண்டாம்” என்பது.
இவ்விரு பொருள்களிலும் இரண்டாவது பொருளான “அல்லாஹ்வுடன் எவரையும் வணங்க வேண்டாம்” என்ற பொருளை மட்டுமே “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வழி செல்லும் அறிஞர்கள், இமாம்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், வலீமார், மஷாயிகுமார் அனைவரும் சரி கண்டு ஏற்றுக் கொள்கின்றனர்.
முதலாவது பொருளான “அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள்” என்ற பொருளை இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் இருவரும், இவர்களின் கொள்கையை சரிகண்டவர்களுமான வஹ்ஹாபிகளுமே ஏற்றுக் கொள்கின்றனர்.
வஹ்ஹாபிகளின் கருத்தின்படி அதாவது “அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள்” என்றதன்படி பள்ளிவாயலில் ஒருவர் இன்னொருவரை அழைப்பது “ஹறாம்” விலக்கப்பட்ட, தண்டனைக்குரிய குற்றமாகிவிடும்.
வஹ்ஹாபிகள் சொல்வதுதான் சரி என்று வைத்துக் கொண்டால் பள்ளிவாயலில் எவரும் எவரையும் அழைக்கக் கூடாது என்பது திருக்குர்ஆன் கூறும் சட்டமாகிவிடும்.
பாங்கு சொல்கின்ற “முஅத்தின்” என்பவரிடம் ஒருவன் ஒரு செய்தி சொல்ல வேண்டுமாயின் அவரை அழைத்துச் சொல்லக் கூடாது. அவரை நெருங்கித்தான் சொல்ல வேண்டும். முஅத்தினார் என்றோ, அவரின் பெயர் சொல்லி முஸ்தபா என்றோ அழைப்பது கூடாது.
பள்ளிவாயலில் ஒரு நிகழ்வு நடைபெறுகின்ற போது ஒருவர் இன்னொருவரை அழைத்து அவரிடம் ஆலோசனை கேட்பதோ, அவருக்கு ஆலோசனை சொல்வதோ கூடாதென்றாகிவிடும்.
ஒருவன் பள்ளிவாயலில் ஒரு அசுத்தத்தைக் கண்டால் அதை நீக்குவதற்காக பள்ளிவாயலின் “காதிம்” பணியாளனை அழைத்து அதுபற்றிச் சொல்ல முடியாமற் போய்விடும்.
பள்ளி நிர்வாகியொருவர் பள்ளிவாயலில் பணியாளனை அழைத்து இந்த இடத்தில் இருளாக உள்ளது. இங்கு ஒரு மின் குமிழ் ஏற்பாடு செய் என்று சொல்ல முடியாமற் போய்விடும்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பிரசங்கம் ஆரம்பிக்குமுன் பள்ளிவாலில் தொழுகைக்காக வந்துள்ள மக்கள் ஒருவர் மற்றவருடன் பேசாமல் பிரசங்கத்தை காது தாழ்த்திக் கேட்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களை அழைத்து அவ்வாறு சொல்வது பாவமாகிவிடும். சகோதரர்களே! அல்லாஹ்வின் நல்லடியார்களே! என்று சொல்வது அழைப்பா? இல்லையா?
வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பிரசங்கம் நிகழ்த்தும் “கதீப்” பிரசங்கி அல்லது பள்ளிவாயல் இமாம் சகோதரர்களே! என்று பொது மக்களை அழைப்பது அழைப்பா? இல்லையா?
பொது மக்களுக்கு பள்ளிவாயல் ஒலிபெருக்கி மூலம் அரசாங்க, மற்றும் தனியார் அறிவித்தல்கள் சொல்லப்படுகின்றன. சகோதரர்களே! பொது மக்களே! என்று அழைக்காமல் சொல்ல முடியுமா?
இவற்றை ஓரளவு தடுக்க முடிந்தாலும் பள்ளிவாயலில் பாங்கு “அதான்” சொல்வதை தடுக்க முடியுமா? பாங்கு சொல்பவர் حَيَّ عَلَى الصَّلَاةْ، حَيَّ عَلَى الْفَلَاحْ தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்றும், வெற்றி பெற விரைந்து வாருங்கள் என்றும் சொல்வது அழைப்பா? இல்லையா? இதே வசனம் “இகாமத்” சொல்லும் போதும் சொல்ல வேண்டும். முஅத்தின் அவ்விரு வசனங்களையும் சொல்லாமல் பாங்கு சொல்வதும், இகாமத் சொல்வதும் ஆகாது.
வஹ்ஹாபிகள் சொல்வது போல் பள்ளிவாயலில் ஒருவர் மற்றவரை அவழைக்கக் கூடாதென்பதே சரியென்றிருந்தால் பாங்கும், இகாமத்தும் பள்ளிவாயலுக்கு வெளியேதான் சொல்லப்பட வேண்டும்.
அல்லது பாங்கு சொல்பவன் அழைப்புக்குரிய “ஹய்ய அலஸ்ஸலாஹ் – ஹய்ய அலல் பலாஹ்” என்ற வசனங்களை மட்டும் பள்ளிவாயலுக்கு வெளியேயும், மற்ற வசனங்களை உள்ளேயும் சொல்ல வேண்டும். இதேபோல் “இகாமத்” சொல்லும் போதும் செய்ய வேண்டும். இன்னுமிதேபோல் ஜும்ஆப் பிரசங்கம் நிகழ்த்துகின்றவரும் அழைப்புக்குரிய வசனங்கள் எதுவாயினும் அதை வெளியே வந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் விட மிக விஷேட தகவல் என்னவெனில் பள்ளிவாயலில் தொழுகின்ற ஒருவன் “அத்தஹிய்யாத்” ஓதும்போது التحيات المباركات الصلوات الطيبات لله “அத்தஹிய்யாதுல் முபாறகாதுஸ் ஸலவாதுத் தய்யிபாது லில்லாஹி” வரை மட்டுமே பள்ளிவாயலில் ஓத வேண்டும். அதையடுத்துள்ள السلام عليك أيها النبي “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு” என்ற வசனத்தை பள்ளிவாயலில் ஓதாமல் வெளியே வந்து ஓதிவிட்டு பின்னர் பள்ளிவாயலுள் சென்று மிகுதியை ஓதி முடித்து தொழுது முடிக்க வேண்டும்.
ஏனெனில் السلام عليك أيها النبي என்ற வசனத்தில் “அய்யுஹன் நபிய்யு” என்ற சொல் பெருமானாரை அழைப்பதற்கான சொல்லாகும். பள்ளிவாயலில் அல்லாஹ் தவிர வேறெவரையும் அழைக்கலாகாதென்ற வஹ்ஹாபிஸ விஞ்ஞானிகளின் கருத்தின்படி “அய்யுஹன் நபிய்யு” என்று அழைத்தால் தொழுகை வீணாகிவிடும்.
இவ்வாறு செய்தல் நடைமுறைக்குப் பொருத்தமற்றதும், நகைப்புக்குரியதும், பிறர் பார்த்து வியப்படையக் கூடியதுமாகும்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்திலோ, அருமை ஸஹாபாக்கள், மற்றும் தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள் காலத்திலோ பள்ளிவாயலில் எவரும் எவரையும் அழைக்கக் கூடாதென்று ஒரு சட்டம் இருந்ததுமில்லை. இப்போதுமில்லை. எந்த ஒரு நாட்டிலும் கூட இப்படியொரு நடைமுறை கிடையாது.
அல்லாஹ்வின் பேச்சுக்கும், மனிதனின் பேச்சுக்கும் வித்தியாசமுண்டு. மனிதனின் பேச்சு சில வேளை முன்பின் தொடர் இல்லாமலும் இருக்கும். ஆயினும் அல்லாஹ்வின் பேச்சு அவ்வாறிருக்காது. அது முன்பின் தொடர் உள்ளதாகவே இருக்கும்.
இந்த அடிப்படையில் மேலே நான் எழுதிய وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا “பள்ளிவாயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. அல்லாஹ்வுடன் எவரையும் வணங்க வேண்டாம்” என்ற இவ்வசனத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
அல்லாஹ்வுடன் எவரையும் வணங்க வேண்டாம் என்று பொருள் கொள்வது முன் பின் தொடருக்குப் பொருத்தமானதா? அல்லது அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்க வேண்டாம் என்று பொருள் கொள்வது பொருத்தமானதா? என்று சற்று சிந்தனையை விரித்துப் பார்த்தால் எது பொருத்தமானதென்பது தெளிவாகும்.
எனது அபிப்பிராயமும், கருத்தும் என்னவெனில் فلا تدعوا مع الله أحدا அல்லாஹ்வுடன் எவரையும் வணங்காதீர்கள் என்பதேயாகும். இதுவே சரியானதென்று நான் நம்புகிறேன்.
ஏனெனில் பள்ளிவாயலுக்கும், வணக்கத்திற்குமே தொடர்பு உண்டு. பள்ளிவாயல் வணக்கத்திற்குரியதாகும். அழைப்பிற்குரியதல்ல.
ஆகையால் “பள்ளிவாயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. அவனுடன் எவரையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்றே பொருள் கொள்ள வேண்டும்.
இதற்கு மாறாக பள்ளிவாயல்களில் எவரையும் அழைக்க வேண்டாமென்று பொருள் கொள்வதால் மேலே நான் எழுதிக் காட்டிய பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். பள்ளிவாயல்களில் ஒரு வகையான அமளிதுமளியும் ஏற்பட்டு விடும்.
இவ்வாறு பொருள் கொள்வது வஹ்ஹாபிகளின் தந்திரங்களில் ஒன்று என்றே நான் கூறுவேன். இவர்கள் யா முஹ்யித்தீன், யா ரிபாஈ, யா ஹாஜா என்று அவ்லியாஉகளை அழைப்பது “ஷிர்க்” என்று மக்களிடம் கூறி அவர்களை தம் பக்கம் திருப்புவதற்காக கையாண்ட யுக்தியும், தந்திரமுமேயாகும்.
வஹ்ஹாபிகளின் கருத்தின் படி அல்லாஹ்வுடன் வேறொருவரை அழைத்தல் கூடாதென்பது பள்ளிவாயல்களில் மட்டும்தான் என்றும், மற்ற இடங்களில் அழைக்கலாம் என்றும் விளங்குகின்றது. துறை தெரியாமல் தோணி தொடுத்துவிட்டார்கள் வஹ்ஹாபிஸ விஞ்ஞானிகள். தமக்குத் தாமே அடித்துக் கொள்கிறார்கள்.
அழைப்பும், வணக்கமும்.
دَعَا – “தஆ”, يَدْعُوْ – “யத்ஊ”, تَدْعُوْ – “தத்ஊ”
என்ற சொற்கள் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல் ஓர் அடிப்படையின் வேறுபட்ட பல தோற்றங்களாகும். திருக்குர்ஆனிலும் இச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
திருக்குர்ஆனில் இச் சொற்கள் அழைத்தல் என்ற பொருளுக்கும், வணங்குதல் என்ற பொருளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
اَلْقُرْآنُ يُفَسِّرُ بَعْضُهُ بَعْضًا
திருக்குர்ஆனின் வசனங்களிற் சில வசனங்கள் அதன் வேறு வசனங்களுக்கு விரிவுரையாக, விளக்கமாக அமைவதும் உண்டு.
இந்த அடிப்படையில் பின்வரும் திருக்குர்ஆன் வசனம் நான் வலியுறுத்தி வருகின்ற விடயத்தை உறுதி செய்வதை விளங்கலாம்.
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ،وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ (سورة الأحقاف ، آية 5-6)
இத்திருவசனத்திற்கு வஹ்ஹாபிகள் செய்துள்ள மொழியாக்கத்தை கவனிப்போம்.
(மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்குப் பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிக வழிகேடன் யார்? அவர்கள் இவர்களுடைய அழைப்பை பற்றி மறந்தவர்களாக உள்ளனர். மேலும் மனிதர்கள் மறுமை நாளுக்காக ஒன்று திரட்டப்பட்டால் வணங்கப்பட்டவர்களான அவர்கள் இவர்களுக்கு விரோதிகளாக இருப்பர். இவர்கள் தங்களை வணங்கிக் கொண்டிருந்ததையும் அவர்கள் நிராகரித்துவிடுவர்)
மேற்கண்ட “அஹ்காப்” அத்தியாயம் 5ம், 6ம் வசனங்களுக்கான மொழியாக்கம் என்னுடையதல்ல. இந்த மொழியாக்கத்தில் பிழை உள்ளது. அது மட்டுமல்ல மொழியாக்கம் செய்தவர்கள் கூட இத்திருவசனத்தின் சரியான சாரத்தை விளங்கிக் கொள்ளாமலேயே முன்னுக்குப் பின் முரணாக மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பதும் விளங்கப்படுகிறது. அறபு வசனத்தையும், மொழியாக்கத்தையும் திறமையுள்ள ஒருவர் ஆய்வு செய்தால் நான் கூறும் உண்மையை கண்டு கொள்வார். இந்த மொழியாக்க நூல் பற்றிய குறிப்பை இறுதியில் குறிப்பிடுவேன். இன்ஷா அல்லாஹ்!
மேற்கண்ட திருவசனத்திலுள்ள يَدْعُوْ – “யத்ஊ” என்ற சொல்லுக்கு (அழைத்த போதிலும்) என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் (அழைப்பவனை விட) என்றும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தவறு. சரியான மொழியாக்கம் வணங்குதல் என்று வர வேண்டும்.
நான் கூறும் இதே பொருள்தான் சரியான மொழியாக்கம் என்பதற்கான ஆதாரம் இதே வசனத்தில் பின்னால் வந்துள்ள وَكَانُوْا بِعِبَادَتِهِمْ كَافِرِيْنَ அவர்கள் வணங்கியதால் என்ற பொருளைத் தருகின்ற بِعِبَادَتِهِمْ என்ற சொல்லேயாகும். மொழியாக்கம் செய்தவர்களின் கருத்தின்படி بِعِبَادَتِهِمْ என்று வராமல் بِدُعَائِهِمْ (அவர்கள் அழைத்ததால்) என்று வசனம் வந்திருக்க வேண்டும்.
இத்திருவசனம் விக்கிரகங்களை தெய்வங்களாக கருதி அவற்றை வணங்கி வந்த “முஷ்ரிக்”குகள் தொடர்பாக அருளப்பட்ட வசனமேயாகும். அல்லாஹ் அவர்கள் பற்றிக் கூறுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளான்.
இவ்விரு வசனங்களினதும் சரியான, ஸுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு ஆதரவான எனது மொழியாக்கம் பின்வருமாறு.
(5ம் வசனம்: மேலும் அல்லாஹ்வை விடுத்து, மறுமை நாள் வரை தனக்கு பதில் சொல்லாதவர்களை (விக்கிரகங்களை) வணங்கினவனை விட மிக வழி கெட்டவன் யார்? அவர்களோ (விக்கிரகங்களோ) இவனின் வணக்கத்தை மறந்தவர்களாக உள்ளனர்)
(6ம் வசனம்: மேலும் மனிதர்கள் மறுமை நாளுக்காக ஒன்று திரட்டப்பட்டால் வணங்கப்பட்டவர்களான அவர்கள் (விக்கிரகங்கள்) இவர்களுக்கு விரோதிகளாக இருப்பர். இவர்கள் தங்களை வணங்கிக் கொண்டிருந்ததையும் நிராகரித்து விடுவர்)
நான் மேலே எழுதிக் காட்டிய மொழியாக்கமே சரியானது.
வஹ்ஹாபிகளுக்கு சாதகமாக மொழியாக்கம் செய்தவர்கள் ஒரே வசனத்தில் வந்துள்ள சொல்லுக்கு ஓர் இடத்தில் அழைத்தல் என்ற கருத்திற்கும், இன்னோர் இடத்தில் வணங்குதல் என்ற கருத்திற்கும் பயன்படுத்தியுள்ளார்கள். இது மொழியாக்கம் செய்தவர்களின் அறியாமையா? அல்லது அவர்களின் திட்டமிட்ட செயலா? என்பது புரியவில்லை.
வஹ்ஹாபிஸத்தின் மூலவர் இப்னு அப்தில் வஹ்ஹாப் “முஷ்ரிகீன்” விக்கிரக வணக்கம் செய்தவர்கள் தொடர்பாக அருளப்பட்ட இவ்விரு வசனங்களையும் அன்பியாஉகள், அவ்லியாஉகளை யாமுஹ்யித்தீன், யா ரிபாஈ என்று அவர்களை அழைத்து அவர்களிடம் உதவி கேட்கும் அவ்லியா பக்தர்களுக்கு எதிராக இறங்கிய வசனம் போல் சோடித்துக் கூறி முஹ்யித்தீனையும், ரிபாஈயையும் அழைப்பது கூடாதென்று அல்லாஹ் சொல்லிவிட்டான் என்று அல்லாஹ்வின் தலையில் மண் அள்ளிப் போட்டு விட்டார்கள்.
ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளே!
நான் மேலே எழுதிய அஹ்காப் அத்தியாயம் 5ம், 6ம் வசனங்களுக்கு ஸஊதி அரேபியாவின் ஆதரவில் மொழியாக்கம் செய்யப்பட்ட தமிழ் மொழியாக்க நூல் 503ம் பக்கத்தையும், அதேபோல் “ஜின்” அத்தியாயம் 18ம் வசனத்திற்குரிய மொழியாக்கம் 576ம் பக்கத்தையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இந்தத் திருக்குர்ஆன் பிரதியும், அதன் கருத்துக்களின் மொழி பெயர்ப்பும் ஸஊதி அரேபிய அரசின் இஸ்லாமியக் கலாச்சார வக்பு அழைப்பு மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றின் அமைச்சக கண்காணிப்பின் கீழ் அல்மதீனா அல் முனவ்வறாவில் அமைந்துள்ள கண்ணியமிக்க இரு புனித்தலங்களின் பணியாளர் மன்னர் பஹத் அச்சகத்தில் அச்சிடப்பட்டு ஹிஜ்ரீ 1414ம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டது.
அவ்லியாஉகளை அழைத்து “வஸீலா” உதவி தேடுதல் “ஷிர்க்” என்று நிறுவுவதற்கு வஹ்ஹாபிகள் விக்கிரகங்களை வணங்குதல் தொடர்பாக அருளப்பட்ட வசனங்களை நரித் தந்திரமாக கையாண்டு எவ்வாறு பொது மக்களை வழி கெடுக்கின்றார்கள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள்.
ஸுன்னீ உலமாஉகளே!
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இப்போது அருள் மறையாம் திருமறையின் வசனங்களை கடிக்கத் தொடங்கியுள்ள வஹ்ஹாபிஸம் இன்னும் சில வருடங்களில் உங்களையும், என்னையும் போன்ற ஸுன்னீகளையும், ஸூபீகளையும் கடித்துச் சாப்பிட்டு ஏப்பம் விடும் போல் தெரிகிறது.
திருக்குர்ஆனையும், ஹதீதுகளையும், பொதுவாக “தீன்” என்ற மார்க்கத்தையே சுமந்த நீங்களும், நானும் மௌனிகளானால் இந்நாட்டில் ஸுன்னீ உலமாஉகளில் ஒருவரைக் கூட காண முடியாமற் போய்விடும். காதிரிய்யா, ஷாதுலிய்யா, நக்ஷபந்திய்யா, சிஷ்திய்யா, ரிபாஇய்யா போன்ற தரீகாக்களின் மணமே இல்லாமற் போய்விடும்.
காதிரிய்யா தரீகாவின் தைக்காக்கள், ஷாதுலிய்யா தரீகாவின் ஸாவியாக்கள், மற்றும் அவ்லியாஉகள் பெயரால் பிரகாசிக்கும் பள்ளிவாயல்கள் என்பன அத்திவாரத்தோடு அகற்றப்படும்.
யஹூதிகளின் தலைவர்களும், வஹ்ஹாபிஸ வழிகேட்டின் தீவிர ஆதரவாளர்களும் மற்றும் ஐ. எஸ் போன்ற பயங்கர, தீவிரவாத அமைப்புக்களும் ஸூபிஸம், ஸுன்னிஸம் இரண்டிலுமே குறி வைத்துள்ளன.
எனவே, ஸுன்னீகளான, ஸூபீகளான நாம் ஒன்றிணைவோம். தரீகாக்களையும், அவ்லியாஉகளின் ஆன்மிக அறிவை வளர்ப்பதற்கும் காலூன்றி நிற்போம். பொது மக்கள் தடம் புரளாமல் அவர்களைப் பாதுகாப்பது எமது கடமை என்பதை உணர்வோம்.