قَالَ الشَّيْخُ الْبَازُ الْأَشْهَبُ عَبْدُ الْقَادِرِ الْكَيْلَانِيْ قُدِّسَ سِرُّهُ، اَللَّهُمَّ لَكَ الْكُلُّ، وَبِكَ الْكُلُّ، وَمِنْكَ الْكُلُّ، وَإِلَيْكَ الْكُلُّ، وَأَنْتَ الْكُلُّ، وَكُلُّ الْكُلِّ
“அல்பாஸுல் அஷ்ஹப்” அவ்லியாஉகளின் “ராஜாளிப் பறவை” அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். (அல்புயூழாதுர் றப்பானிய்யா, பக்கம் 43)
பொருள்: யா அல்லாஹ்! உனக்கே எல்லாம். உன்னைக் கொண்டே எல்லாம். உன்னில் நின்றுமே எல்லாம். உன்னளவிலேயே எல்லாம். நீதான் எல்லாம். எல்லாமின் எல்லாமும் நீதான்.
ஒவ்வொரு “ஸமான்” காலத்திலும் ஒவ்வொரு “குத்பு” இருப்பார். அவர்தான் “குத்புஸ்ஸமான்” என்றும், “கவ்து” என்றும் அழைக்கப்படுவார். அவர்தான் தனது காலத்திலுள்ள அனைத்து அவ்லியாஉகளினதும் தலைவராக இருப்பார்.
அவ்லியாஉகள் என்று பொதுவாக சொல்லிக் கொண்டாலும் அவர்களின் ஆன்மீக படித்தரங்களைப் பொறுத்து பல பிரிவினர் உள்ளனர். இதன் விபரம் பின்னால் வரும்.
அவர்களில் أَحْوَالْ – “அஹ்வால்” உள்ளவர்களுமிருப்பர். مَقَامَاتْ – “மகாமாத்” உள்ளவர்களுமிருப்பர். “அஹ்வால்” நிலைமைகள் உள்ளவர்கள் என்றால் அவர்களில் ஆன்மீக நிலைமைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாறிய நிலைகளில் இருக்கும். “மகாமாத்” உள்ளவர்கள் என்றால் அவர்களின் ஆன்மீக படித்தரங்களிலும் மாற்றம் ஏற்படும்.
ஒரு நேரம் அல்லாஹ்வின் “தாத்”தில் “பனா”வாகி தன்னையுமிழந்து, மற்றுமுள்ள சர்வமும் இழந்து இருப்பார்கள். இன்னொரு நேரம் அவனின் “ஸிபாத்” என்ற தன்மைகளில் “பனா”வாகியும், இன்னுமொரு நேரம் “அஸ்மா”க்கள், “அப்ஆல்”களில் “பனா” ஆகியுமிருப்பார்கள். இன்னும் சில சமயங்களில் அவனுடைய “ஜமாலிய்யத்”திலும், “ஜலாலிய்யத்”திலும் “பனா” ஆகி இருப்பார்கள்.
மேலே நான் எழுதிக் காட்டிய ஓதல் குத்பு நாயகம் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்த புகழ்களில் ஒன்றாகும். அவ்லியாஉகள் அல்லாஹ்வை தங்களின் படித்தரத்திற்கேற்றவாறு புகழ்வார்கள். ஆயினும் எவராலும் அல்லாஹ்வின் தரத்திற்கேற்றவாறு அவனைப் புகழ முடியாது.
இவ்வாறுதான் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது ஸலவாத், ஸலாம் சொல்வதுமாகும். அவ்லியாஉகளாயினும் அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் தரத்திற்கேற்றவாறு சொல்ல அவர்களாலும் முடியாது. அவர்களும் தமது தரத்திற்கேற்றவாறே சொல்வார்கள். எனினும் அல்லாஹ்வால் மட்டுமே பெருமானாரின் தரத்திற்கேற்றவாறு ஸலவாத் சொல்ல முடியும்.
اللهم لَكَ الْكُلُّ – யா அல்லாஹ்! அனைத்தும் உனக்கே! அதாவது பூமியும், வானங்களும், மற்றுமுள்ள சர்வ படைப்புக்களும் உனக்கே சொந்தம். எந்த ஒருவனுக்கும் எதுவும் சொந்தமில்லை.
காணி பூமி, தோட்டம் கடை மட்டுமல்ல. அவர்களுக்கு நீ வழங்கியுள்ள அனைத்துப் புலன்கள் கூட உனக்கே சொந்தமானவையாகும்.
உண்மை இவ்வாறிருக்க மனிதன் இது என்னுடையது, அது என்னுடையது என்று இறைவனின் சொத்தில் சொந்தம் கொண்டாடுவதை إِنَّ الْإِنْسَانَ كَانَ ظَلُومُا جَهُوْلًا மனிதன் கடுமையான அநீதியானவனாகவும், கடுமையான அறிவிலியாகவும் உள்ளான் என்ற இறைவாக்கு உறுதி செய்வது போல் உள்ளது.
ظَلُوْمٌ
– என்ற சொல்லுக்கும், ظَالِمٌ என்ற சொல்லுக்கும் வித்தியாசமுண்டு. இதேபோல் جَهُوْلٌ என்ற சொல்லுக்கும், جَاهِلٌ என்ற சொல்லுக்கும் வித்தியாசமுண்டு.
ظَالِمٌ
– என்றால் அநீதியாளன். ظَلُوْمٌ என்றால் கடும் அநீதியாளன். جَاهِلٌ என்றால் அறிவிலி. جَهُوْلٌ என்றால் முட்டாள்.
அல்லாஹ் மனிதனைப் பற்றிக் கூறுகையில் கடும் அநீதியாளன் என்ற சொல்லையும், முட்டாள் என்ற சொல்லையுமே பயன்படுத்தியுள்ளான்.
ஏன் இவ்வாறு சொன்னான்? அந்த அளவு சொல்வதற்கு எதனால் அவனுக்கு கோபம் வந்தது?
ஒருவன் இன்னொருவனுடைய உடைமையை – சொத்தை எடுத்துக் கொண்டு என்னுடையது என்று சொல்வதற்கும், ஒருவன் அல்லாஹ்வின் சொத்தை எடுத்துக் கொண்டு என்னுடையது என்று சொல்வதற்கும் வித்தியாசமுண்டு.
இது எது போன்றதெனில் ஒருவனின் கடையில் வேலை செய்யும் பணியாட்களில் ஒருவன் இன்னொரு பணியாளனின் சொத்தை திருடி வைத்துக் கொண்டு அது என்னுடையதென்று சொல்வது போன்றதும், ஒரு பணியாளன் கடைச் சொந்தக் காரனின் சொத்தை திருடி வைத்துக் கொண்டு அது தன்னுடையதென்று சொல்வது போன்றதுமாகும்.
கடைச் சொந்தக்காரன் இருவரையும் குற்றவாளிகள் என்று சொன்னாற் கூட தனது சொத்தை திருடியவனை மட்டும் உண்ட பீங்கானில் உமிழ்ந்து விட்டாய். நீ இங்கு ஒரு நிமிடம் கூட இருப்பதற்கு தகுதியற்றவன் என்று கூறி அவனை தனது கடைப் பக்கம் கூட வரக் கூடாதென்று தடுத்துவிடுவான்.
இதற்கு இன்னுமொரு உதாரணம் சொல்வதாயின் பின்வருமாறு சொல்லலாம். ஒரு செல்வந்தன் தனது வீட்டுப் பணி செய்வதற்காக ஒரு வேலைக் காரனை நியமித்தான். அவனுக்கு தங்குமிட வசதியும், ஊதியமும், உடுப்பும் மற்றும் உணவும் கொடுத்து கௌரவமாக கவனித்து வந்தான். ஒரு நாள் அந்த வேலைக்காரன் தனது முதலாளியின் மனைவியுடன் தகாத முறையில் நடந்து கொண்டான். அதேபோல் எந்த ஒரு உதவியையும் அவனிடமிருந்து பெறாத அந்நியனொருவனும் அதே தவறை அவனின் மனைவியுடன் செய்து கொண்டான்.
செல்வந்தன் இருவரையும் குற்றவாளிகள் என்று சொன்னாற் கூட தனது வேலைக்காரனை மட்டும் கடுமையாக தண்டிப்பான். அவனைக் கொலை செய்ய நினைத்தாலும் செய்து விடுவான்.
இவ்வாறுதான் இறைவனின் உடைமைகளையும், சொத்துக்களையும் வைத்துக் கொண்டும், அவன் வழங்கிய சொத்துக்களை விடப் பெறுமதியான ஐம்புலன்களையும், விஷேடமாக மனிதனுக்கு வழங்கிய பகுத்தறிவையும் வைத்துக் கொண்டு நான் யார் தெரியுமா? நான் ஒரு கலாநிதி, கவியரசு, இசைமுரசு, ஒன்பது மொழிகள் கற்றவன், எனக்கு கொழும்பில் மூன்று கடைகள், கண்டியில் ஒரு நகைக் கடை, அவுஸ்திரேலியாவில் ஓர் அப்பிள் தோட்டம், நுவரெலியாவில் ஒரு தேயிலைத் தோட்டம், கார்கள் மூன்று, லொறி நான்கு, ஆட்டோ ஒன்று, என்னை மிஞ்சின எவனும் இங்கில்லையென்று மார்தட்டி, மதியின்றி திமிர் பிடித்துக் கர்ஜிக்கும் மனிதனை ظَلُومٌ கடும் அநீதியாளன், جَهُوْلٌ முட்டாள் என்று சொல்லாமல் வேறெவ்வாறு இறைவன் சொல்வான்? நீதிவான் நீதியாகவே பேசியுள்ளான்.
அரச காணியை எடுத்துக் கள்ள உறுதி முடித்துக் கொண்டு இது எனது காணி என்பவன் அநீதியாளனா இல்லையா? பொதுச் சொத்தை சுருட்டிக் கொண்டு இது என் சொத்து என்பவன் திருடனா? இல்லையா?
எனவே, குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை சொன்னது போல் “அல்லாஹும்ம லகல் குல்லு” இறைவா! எல்லாம் உனக்கே சொந்தம். நானும் உனக்கே சொந்தம். எனக்குள்ளவை என்று நாம் கற்பனை செய்து கொண்டிருக்கும் எல்லாமே உனக்கே சொந்தம் என்று அவனுக்கே அனைத்தையும் உரிமையாக்கி நாம் “பகீர்” ஆவோம். இதனால்தான் குத்பு நாயகம் “பகீர் முஹ்யித்தீன்” என்று அழைக்கப்பட்டார்களோ!
இப்பதிவை வாசிக்கும் நல்லடியார்கள் அனைவரும் என் ஆரோக்கிய வாழ்வுக்கும், என் தேவைகள் நிறைவேறுவதற்கும் “துஆ” செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
وَاللهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ
இப்பதிவை நுகரும் அறபுக் கல்லூரி மாணவர்களுக்காக,
فَعَّالٌ أَوْ مِفْعَالٌ أَوْ فَعُوْلٌ – بِكَثْرَةٍ عَنْ فَاعِلٍ بَدِيْلٌ
இதில் மூன்றாம் விடயமான وَمِنْكَ الْكُلُّ “எல்லாம் உன்னில் நின்றுமுள்ளவையே!” என்ற அவர்களின் வசனத்திற்கு விளக்கம் எழுதுகிறேன்.
“அப்ஆல்” என்றால் செயல்கள் என்று பொருள் வரும். எவர் மூலம் எச்செயல் வெளியானாலும் அது அல்லாஹ்வில் நின்றுமுள்ளதேயாகும். அதாவது அவனின் செயலேயாகும். செயல்களுக்கெல்லாம் சொந்தக் காரன் அல்லாஹ்வேயன்றி வேறு யாருமல்ல. அல்லாஹ் தவிர வேறெவருக்கும் எச்செயலும் கிடையாது. எந்த வகையில் ஆய்வு செய்தாலும் செயலுக்குச் சொந்தக் காரன் – உரிமையுள்ளவன் அல்லாஹ்தான்.
இவ்வாறு நம்புதல்தான் “ஈமான்” நம்பிக்கை எனப்படும். இதற்கு மாறாக, படைப்புக்குச் செயலுண்டு என்று நம்புதல் விசுவாசமேயல்ல.
முஸம்மில் செய்தான், பாதிமா ஏசினாள், நெருப்புச் சுட்டது, பாம்பு கடித்தது என்று செயல்களை படைப்புகளின் பக்கம் சேர்த்துச் சொல்வது உலக மக்களின் வழக்கமேயன்றி அது எதார்த்தமல்ல. குறித்த செயல்கள் வெளியாவதற்கு அந்தப் படைப்புக்கள் காரணமாகவும், வழியாகவும் இருந்ததினாலேயே அவற்றின் பக்கம் சேர்த்துச் சொல்லப்படுகின்றது.
இவ்வாறு சொல்வது மொழி வழக்கத்தில் உள்ளதேயாகும். இவ்வாறு சொன்னாலும் கூட நம்பிக்கை இவ்வாறிருத்தல் கூடாது. இவ்வாறு சொல்வதற்கு அறபு மொழியில் “மஜாஸ் அக்லீ” என்று வழங்கப்படும். இவ்வாறு சொல்லும் பாணி, இவ்வாறு சொல்லும் நடை திருக்குர்ஆனிலும், ஹதீதுகளிலும், அறபு மக்களின் பேச்சு வழக்கிலும் உள்ளதேதான். இது பொய்யாகவுமாட்டாது. இது பாவச் செயலாகவுமாட்டாது. இதற்கு “மஜாஸ் அக்லீ” என்று சொல்லப்படும்.
‘மஜாஸ் அக்லீ’யும், ‘ஹகீகத் அக்லீ’யும்.
ஒரு செயலை எதார்த்தத்தில் அச் செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அந்தச் செயல் வெளியாவதற்கு எந்தப் படைப்பு காரணமாக – வழியாக இருந்ததோ அதன் பக்கம் சேர்த்துச் சொல்வதற்கு “மஜாஸ் அக்லீ” என்று சொல்லப்படும்.
உதாரணமாக أَنْبَتَ الْمَطَرُ الْبَقْلَ “மழை கீரையை முளைக்கச் செய்தது” என்பது போன்று. எதார்த்தத்தில் கீரையை முளைக்கச் செய்தவன் அல்லாஹ்வேயன்றி மழையல்ல. மழை என்பது சிருட்டிதான். படைப்புத்தான். மழை என்ற படைப்புக்கு கீரையையோ, அல்லது வேறு எதனையோ முளைக்கச் செய்யும் சக்தி கிடையாது. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. எனினும் கீரையை அல்லாஹ் முளைக்க வைத்தாலும் கூட அல்லாஹ்வின் அச்செயலுக்கு எது வழியாக இருந்ததோ அச் செயலை அந்த வழியின் பக்கம் சேர்த்துச் சொல்வது ஆகும். இது “மஜாஸ் அக்லீ” என்று சொல்லப்படும். திருக்குர்ஆன் வசனங்கள் இந்த நடையில் அருளப்பட்டுள்ளன.
ஆகையால் நாமும் இந் நடையைப் பின்பற்றிச் சொல்ல முடியுமாயினும் மனதிலுள்ள நம்பிக்கை – ஈமான் சொல்வது போல் இருத்தலாகாது. அவ்வாறு ஒருவன் நம்பினால் – அதாவது கீரையை முளைக்க வைக்கும் சக்தி மழைக்கு உண்டு என்று நம்புதல் “குப்ர்” அல்லது “ஷிர்க்” என்றே கொள்ள வேண்டும்.
ஆகையால் أَنْبَتَ الْمَطَرُ الْبَقْلَ என்று சொல்வது ஆகுமென்றிருந்தால் أَنْبَتَ اللهُ الْبَقْلَ அல்லாஹ் கீரையை முளைக்கச் செய்தான் என்று சொல்வதும் தாராளமாக ஆகுமானதே. இன்னுமோர் உதாரணம் மூலம் இதை உறுதி செய்து கொள்வோம். شَفَى الطَّبِيْبُ الْمَرَضَ வைத்தியன் நோயை சுகமாக்கினான் என்பதும், شَفَى اللهُ المَرَضَ நோயை அல்லாஹ் சுகமாக்கினான் என்பதும் ஒன்றுதான். மேற்கண்ட இவ்விரு உதாரணங்களிலும் முந்தினது “மஜாஸ் அக்லீ” என்றும், பிந்தினது “ஹகீகத் அக்லீ” என்றும் சொல்லப்படும். இரண்டு பாணியிலும், வசன நடையிலும் திருக்குர்ஆன் வசனங்கள் வந்துள்ளன.
இதன் விபரத்தை விளக்கமாகவும், தெளிவாகவும் அறிய விரும்புவோர் நான் எழுதி வெளியிட்ட வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம் என்று நூலிலும், இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் வெளிவரவுள்ள “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலிலும் கண்டு கொள்ளலாம்.
சுருக்கம் என்னவெனில் செயல் என்று சொல்லப்படுகின்ற ஒன்று சிறியதாயினும், பெரியதாயினும் அதன் சொந்தக்காரனும், அதற்கு உரியவனும் அல்லாஹ்வேயன்றி வேறு யாருமில்லை. அல்லாஹ்வுக்கு மாத்திரமே சுயமான செயலுண்டு. படைப்புக்கு இல்லவே இல்லை.
முஸம்மில் அழைத்தான், முஜாஹித் அடித்தான், முனாஸ் சிரித்தான், பாதிமா கொடுத்தாள் என்று செயல்களை படைப்புக்களின் பக்கம் சேர்த்துச் சொல்லுதல் இவ்வுலக நடைமுறை சீராக அமைவதற்கேயாகும். தவிர எதார்த்தம் அதுவல்ல. இதை நாம் நம்ப வேண்டும். இதுவே “ஈமான்” விசுவாசமாகும்.
செயல்களெல்லாம் அல்லாஹ்வுக்கே என்ற தத்துவத்தை விளங்கிய ஒருவன் لَا فَاعِلَ إِلَّا اللهُ செய்பவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்வதும், நம்புவதும் எந்த வகையிலும் தவறாகமாட்டாது. அதுமட்டுமல்ல விசுவாசி என்பவன் இவ்வாறுதான் நம்பவும் வேண்டும்.
சில தரீகாவின் ஷெய்குமார்கள் لَا فَاعِلَ إِلَّا الله என்ற வசனத்தை தமது “தரீகா”வில் ஒரு “திக்ர்” ஆகவே அமைத்துள்ளார்கள்.
இப்படியும் சில ஹழ்றத்மார்.
ஸூபிஸம், இறையியல் என்பன மருகிப்போனதற்கும், எதிர்க்கப்படுவதற்கும் பிரதான காரணம் “புகஹாஉ” சட்டத்துறை சார்ந்த மார்க்க அறிஞர்கள், ஹழ்றத்மார்களின் மனத் தூய்மையின்மையேயாகும்.
பின்னால் வரும் நிகழ்வுகள் நான் கூறியதற்கு ஆதாரமாக அமையும்.
இலங்கையில் ஒரு ஹழ்றத் இருந்தார். இவர் சட்டக்கலை, அறபு இலக்கணம், இலக்கியம் முதலான கலைகளில் மிகத் திறமையுள்ளவராக விளங்கினார். இதேபோல் அவ்லியாஉகள், மஷாயிகுமார்களில் குறை கண்டு அவர்களை இழித்துரைப்பவராகவும் இருந்தார். பிறரை இழித்துரைத்து கவிகள் எழுதுவதில் அவருக்கு நிகர் அவர்தான். குப்பிகாவத்தையில் சமாதி கொண்டுள்ள அதி சங்கைக்குரிய ஷெய்குனா அப்துல் காதிர் ஆலிம் ஸித்தீகீ ஸூபீ றஹிமஹுல்லாஹ் அவர்களைத் தூற்றாமல் ஒரு நாள் கூட உறங்கியிருக்கமாட்டார். இவர் தஸவ்வுப் – ஸூபிஸக் கலை, இறையியற் துறையில் வெறும் “சீறோ”வாகவே விளங்கினார்.
ஒரு நாள் வகுப்பில் لَا فَاعِلَ إِلَّا الله செய்பவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்று ஸூபீ மகான்கள் கூறும் தத்துவத்தை நையாண்டி பண்ணினார். ஒருவன் விபச்சாரம் செய்யும் வேளை لَا فَاعِلَ إِلَّا الله செய்பவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்று சொன்னால் அது “திக்ர்” ஆகிவிடும் என்று கூறி கிண்டல் செய்தார்.
இதன் மூலம் இவர் ஸூபிஸ ஞானத்தை விட்டும் பல கோடி கிலோமீற்றர் தூரத்தில் நிற்கிறார் என்பதை புரியக் கூடியதாக இருந்தது.
ஸூபீ மகான்கள் தமக்கு மாத்திரம் புரியும் வகையில் தமது ஸூபிஸக் கலையில் சில சொற்களை அமைத்துக் கொண்டனர். உதாரணமாக லாஹூத், ஜபறூத், நாசூத் என்பன போன்று. ஹழ்றத் அவர்கள் இச் சொற்களைக் கூட நையாண்டி பண்ணுவார்கள். உதாரணமாக “நாசூத்” என்ற சொல்லை மொழியும் போது “நாசூத்து பீச்சூத்து” என்று கிண்டல் செய்வார்கள்.
இவற்றைவிட மிகக் கேவலமாகவும், இழிவாகவும் அவர்கள் நையாண்டி பண்ணுவதுமுண்டு.
“காதிரிய்யா” தரீகாவைச் சேர்ந்தவர்களும், குத்பு நாயகத்தின் மீது பற்றுள்ளவர்களும் தமது நாட்டங்கள், தேவைகள் நிறைவேறுவதற்காக “புனித குத்பிய்யா மஜ்லிஸ்” என்ற பெயரில் ஒரு நிகழ்வு நடத்துவது வழக்கம்.
இந்த நிகழ்வின்போது غَوْثَ الوَرَى يَا دَسْتَكِيْرْ يَا مُحْيِ الدِّيْنْ – “கவ்தல் வறா யா தஸ்தகீர் யா முஹ்யித்தீன்” என்று தொடங்கும் நீண்ட பாடல் ஒன்று பாடுவார்கள். இந்தப் பாடலை ஹழ்றத் அவர்கள் “கவ்து Bபண” என்று சொல்வார்கள். அதாவது பௌத பிக்குமார் தமது விகாரையில் வணக்க வழிபாட்டு முறையில் சொல்கின்ற ஒரு பிரார்த்தனைக்கு குத்பு நாயகமவர்களின் இந்தப் பாடலை ஒப்பிட்டு நையாண்டி பண்ணுவார்கள்.
திறமை மிக்க ஒரு ஹழ்றத் இவ்வாறெல்லாம் வலீமாரை கிண்டல் செய்ததற்கான பிரதான காரணம் அவர் “தஸவ்வுப்” என்ற ஸூபிஸம் கற்றுக் கொள்ளாததும், அவர் வலீமாரைப் புரியாமலும், அவர்களை நேசிக்காமலும் விட்டதேயாகும்.
இவ்வாறு தரீகாக்களையும், ஸூபிஸ தத்துவத்தையும் நையாண்டி செய்த ஹழ்றத் அவர்களிடம் நானும் ஓதியிருக்கின்றேன். இலங்கை நாட்டிலுள்ள மௌலவீமார்களில் 200க்கும் அதிகமானோரும் ஓதியிருப்பார்கள்.
வலீமாரை இவ்வாறு கிண்டல் செய்து வாழ்ந்த ஒருவரின் இறுதி முடிவை அல்லாஹ் எவ்வாறு அமைத்தானோ தெரியவில்லை. எனினும் அவரின் மகன் ஒருவன் தினமும் அவரைச் சபித்துக் கொண்டும், அவர் “காபிர்” என்று சொல்லிக் கொண்டும் இருப்பது எனது கண் முன்னே அவருக்கு வழங்கிய பெரும் தண்டனையேயாகும். இது ஒரு வகையில் தண்டனையாயினும் இதைவிடப் பெரிய தண்டனை என்னவெனில் ஒருவர் கற்ற கல்வி அவருக்குப் பயனளிக்காமல் போவதாகும். இவர் 200 பேர்களுக்கு ஓதிக் கொடுத்திருந்தாலும் அல்லாஹ்வுடன் போர் செய்யப் புறப்பட்டது அல்லாஹ் இவருக்கு வழங்கிய தண்டனையேயாகும். اللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ பயன் தராத அறிவை விட்டும் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.
இவர் போல் இன்னும் பலருளர். அவர்கள் ஸூபிஸம், இறை ஞானம் இரு கலைகளிலும் “சீறோ”வாக இருந்தாலும் வெளிப்படையான அறிவுகளில் திறமையானவர்கள்தான். எனினும் குறித்த இரண்டு வகை அறிவும் இல்லாததால் மிருகமாகவே உள்ளனர். இவர்கள் பாடம் கற்று நல்வழி பெற வேண்டும் என்பதற்காகவே மேற்கண்டவாறு எழுதினேன்.
எனது மதிப்புக்குரிய தந்தை மர்ஹூம் ஆரிப் பில்லாஹ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்ன ஒரு செய்தியை இங்கு எழுதுகிறேன்.
எனது தந்தை அவர்கள் தமிழ் நாடு காயல்பட்டணத்தில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் அவ் ஊருக்கு ஸூபீ ஹுஸைன் என்று ஒரு பெரிய மனிதர் வந்தார்களாம். அவர்கள் ஒரு “தரீகா”வின் ஷெய்கு குருவாக இருந்ததால் அவர்களின் முரீதுகள் ஒன்று சேர்ந்து “கஸீதா” படித்து ஒரு பாதையால் அவர்களை அழைத்துச் சென்றார்களாம். அந்த பாதையில்தான் தந்தை அவர்கள் ஓதிக் கொண்டிருந்த மத்ரஸாவும் இருந்ததாம்.
அங்கு ஓதிக் கொடுத்த ஹழ்றத்மார்களில் ஒருவர் தரீகாக்கள், அவற்றின் ஷெய்குமார்களுக்கு எதிரானவராக இருந்தாராம். அந்த வழியால் வந்த மகானை கஸீதா முழக்கத்துடன் அழைத்துச் சென்ற போது “ஸூபீ ஹுஸைன் ஸூபீ ஹுஸைன்” என்று படித்துச் சென்றார்களாம். பாடம் நடத்திக் கொண்டிருந்த ஹழ்றத் அவர்கள் வந்த மகானை கிண்டல் பண்ணும் பாணியில் “சூப்பி ஹுஸைன் சூப்பி ஹுஸைன்” என்று நையாண்டி பண்ணினாராம்.
பாடம் முடிந்து வீட்டுக்குச் சென்ற ஹழ்றத் அவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடியில் தனது முகம் பார்த்த போது மயங்கி கீழே விழுந்துள்ளார். சில நிமிடங்களில் தெளிவு பெற்ற அவர் என்னை ஸூபீ ஹுஸைன் அவர்களிடம் அழைத்துச் செல்லுமாறு சொல்லியுள்ளார். அவ்வாறே அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்ட போது ஹழ்றத் அவர்கள் வந்த மகானின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டபின் நடந்ததை அவர்களிடம் சொன்னார்.
ஹழ்றத் அவர்கள் பாடம் முடிந்த பின் வீட்டுக்குச் சென்று தனது முகத்தைப் பார்ப்பதற்காக முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்த போது அதில் தன்னைக் காணாமல் அங்கு வந்த மகான் ஸூபீ ஹுஸைன் அவர்களையே கண்டதாக கூறினார்.
வலீமாரைக் கிண்டல் செய்யும் விடயத்தில் பொது மக்களும், குறிப்பாக உலமாஉகளும் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.
كَانَ الشَّيْخُ سِرَاجُ الدِّيْنِ المَخْزُوْمِيْ شَيْخُ الْإِسْلَامِ بِالشَّامِ يَقُوْلُ (إِيَّاكُمْ وَالْإِنْكَارَ عَلَى شَيْئٍ مِنْ كَلَامِ الشَّيْخِ مُحْيِ الدِّيْنِ ابْنِ عَرَبِيْ، فَإِنَّ لُحُوْمَ الْأَوْلِيَاءِ مَسْمُوْمَةٌ، وَهَلَاكَ أَدْيَانِ مُبْغِضِيْهِمْ مَعْلُوْمَةٌ، وَمَنْ أَبْغَضَهُمْ تَنَصَّرَ وَمَاتَ عَلَى ذَلِكَ، وَمَنْ أَطْلَقَ لِسَانَهُ فِيْهِمْ بِالسَّبِّ اِبْتَلَاهُ اللهُ بِمَوْتِ الْقَلْبِ)
சிரியா நாட்டின் ஷெய்குல் இஸ்லாம் ஸிறாஜுத்தீன் அல் மக்ஸூமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
(முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பேச்சில் எதையும் மறுத்துவிடாதீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறேன். அவ்லியாஉகளின் மாமிசம் நஞ்சூட்டப்பட்டதாகும். அவர்களைக் கோபப்படுத்துபவர்களின் மார்க்கம் அழிந்து போவது அறியப்பட்ட ஒன்றாகும். அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியவன் நஸ்றானியாகிவிட்டான். நஸாறாக்களுடன் சேர்ந்து விட்டான். அவ்வாறே அவன் மரணித்தும் விடுவான். அவர்களை வாய்க்கு வந்த மாதிரியெல்லாம் ஏசுபவனின் உள்ளம் மரணித்து விடும்) (யவாகீத், பாகம் 01, பக்கம் 08)
َكَانَ الشَّيْخُ أَبُوْ عَبْدِ اللهِ الْقُرَشِيْ يَقُوْلُ (مَنْ غَضَّ مِنْ وَلِيِّ اللهِ عَزَّ وَجَلَّ ضُرِبَ فِى قَلْبِهِ بِسَهْمٍ مَسْمُوْمٍ، وَلَمْ يَمُتْ حَتَّى تَفْسُدَ عَقِيْدَتُهُ، وَيُخَافُ عَلَيْهِ مِنْ سُوْءِ الْخَاتِمَةِ)
அஷ் ஷெய்கு அபூ அப்தில்லாஹ் குறஷீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். (ஒரு வலிய்யுல்லாஹ்வை தரக் குறைவாக கண்டவனின் உள்ளத்தில் நஞ்சூட்டப்பட்ட ஓர் அம்பினால் அடிக்கப்படும். அவனின் கொள்கை கெட்டுப் போகும் வரை அவன் மரணிக்கமாட்டான்)
அல்யவாகீத், பாகம்: 01, பக்கம்: 08
வமின்கல் குல்லு
குத்பு நாயகம் அல்லாஹ்வைப் புகழ்ந்த வசனத்தில் وَمِنْكَ الْكُلُّ “எல்லாம் உன்னில் நின்றுமுள்ளவையே” என்று வந்துள்ளது. எல்லாச் செயல்களும் உன்னில் நின்றுமுள்ளவை என்ற பொருளும் இவ்வசனத்திற்கு உண்டு. இதேபோல் எல்லா வஸ்த்துக்களும் உன்னில் நின்றுமுள்ளவை என்ற பொருளும் உண்டு.
“உன்னில் நின்றுமுள்ளவை” என்றால் இதன் சுருக்கமான பொருள் “செயலெல்லாம் உன் செயலே” என்றும், எல்லா வஸ்த்துக்களும் உன்னில் நின்றுமுள்ளவை என்றால் அனைத்து வஸ்த்துக்களும் நீதான் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பொருள் கொள்ளாமல் அல்லாஹ் அர்ஷில் இருந்து கொண்டோ, அல்லது வேறெங்காவது இருந்து கொண்டோ செயலை நாடுகின்றான் அது நடக்கிறதென்றும், படைத்தலை நாடுகின்றான் அது நடக்கிறதென்றும் அவனை செயலை விட்டும், வஸ்த்துக்களை விட்டும் வேறாக்குதல் “ஷிர்க்” என்ற இணை வைத்தலுக்கு வழிகோலும்.
அறிவுள்ள, அறிவில்லாத மக்கள் அனைவரும் எல்லாம் அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்று சொல்வார்கள். இதேபோல் எல்லாம் அல்லாஹ்வின் செயலென்றும் சொல்வார்கள். இவ்வாறு சொல்வதற்குப் பயப்படமாட்டார்கள். ஆயினும் தாம் சொல்வதின் அகமியமென்ன? அந்தரங்கம் என்ன? என்று சிந்திக்கமாட்டார்கள்.
எல்லாம் அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்று சொன்னாலும், எல்லாம் அவன் செயலென்று சொன்னாலும் வசனங்களில் மட்டும்தான் சிறிய மாற்றமுண்டேயன்றி கருத்தில் இரண்டும் ஒன்றுதான். அதாவது அனைத்து செயல்களையும் செய்பவன் அவனேதான் என்றே கருத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் அனைத்து வஸ்த்துக்களும் அவனேதான் என்றும் கருத்தில் கொள்ள வேண்டும்.
செயலெல்லாம் அவன் செயலாகவும், வஸ்த்துக்கள் எல்லாம் அவனாகவுமிருக்கும் நிலையில் செயலை மட்டும் அவன் செயலென்று சொல்வதும், நம்புவதும், எல்லாம் அவனே என்பது பிழை என்பதும் வியப்பிற்குரிய ஒன்றாகும். இவ்வாறு சொல்வோர் இதுபற்றி ஒரு கணமேனும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
وَمِنْكَ الْكُلُّ எல்லாம் உன்னில் நின்றுமுள்ளதென்றும், உன் செயலென்றும் சொல்வது “ஈமான்” நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டதாகும். وَالْقَدْرُ خَيْرُهُ وَشَرُّهُ مِنَ اللهِ تَعَالَى விதியில் நல்லதும் அவன் செயலே, கெட்டதும் அவன் செயலே என்று நம்புவதுதான் நம்பிக்கையாகும். இதற்கு மாறாக நல்ல செயல்கள் அல்லாஹ்வின் செயல்களென்றும், கெட்ட செயல்கள் படைப்புகளின் செயல்களென்றும் நம்புதல் “ஈமான்” நம்பிக்கைக்கு முரணானதாகும். படைப்புகளுக்கு செயல்களை தரிபடுத்துவதுமாகும்.
எல்லாச் செயல்களும் அல்லாஹ்வின் செயல்களாக இருந்தாலும் அவனின் எச் செயல் எதன் மூலம் வெளியாகிறதோ அதன் பக்கம் சேர்த்துச் சொல்வது உலக நடைமுறையை கருத்திற் கொண்டேயாகும். இன்றேல் உலக வாழ்வு சிக்கலாகிவிடும். சீர்கெட்டும் விடும்.
கையெழுத்திட்ட இரு மகான்கள்
இங்கு ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகின்றது. அதை இங்கு எழுதுவது இத்தலைப்பிற்கும், பொதுவாக “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கும், “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானக் கருத்துகளுக்கும் உரமிட்டாற் போல் இருக்குமென்று நான் நம்புகிறேன்.
இலங்கை வாழ் இறையியலறியாக் குருடர்கள் எனக்கும், நான் கூறிய கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கினார்கள். அவர்களின் “பத்வா”வை மறுத்து அறபியில் “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற பெயரில் ஒரு நூல் எழுதி இந்தியா தமிழ் நாட்டிலுள்ள உலமாஉகளிற் சிலரிடம் கெயெழுத்து எடுப்பதற்காக நான் இந்தியா சென்றேன். தமிழ் நாட்டில் இறையியற் துறையில் திறமையுள்ளவர்கள் பற்றி உலமாஉகளிடம் விசாரித்தேன். அவர்கள் சில உலமாஉகளைச் சுட்டிக் காட்டினார்கள். அவர்களில் இருவர். அவர்கள் இருவரும் மிகப் பிரசித்தி பெற்றவர்களாகவும், “கறாமத்” அற்புதமுள்ள வலீமாராகவும் இருந்ததால் முதலில் அவர்களிடம் கையெழுத்துப் பெற நாடி நாகூர் ஷரீப் சென்று அவர்களில் ஒருவரான பார்ஸீ கவிஞர், மௌலானா மௌலவீ முஹம்மத் பாகிர் ஆலிம் (நாகூர் ஷரீப் பாக்கர் ஆலிம்) றஹிமஹுல்லாஹ் அவர்களைச் சந்தித்து நான் எழுதிய அறபு நூலைக் கையளித்து சரியாக இருந்தால் கையெழுத்திட்டுத் தாருங்கள். பிழையாயிருந்தால் எனக்குக் கற்றுத் தாருங்கள் என்றேன்.
மூன்று நாட்களின் பின் வருமாறு பணித்தார்கள். அவ்வாறே செய்தேன். என்னைக் கண்டதும் நீங்கள் “ஹமவோஸ்த்” கொள்கையா? “ஹமஊஸ்த்” கொள்கையா என்று கேட்டார்கள். நான் “ஹமவோஸ்த்” எல்லாம் அவனே என்ற கொள்கையுள்ளவன். ஆனால் “ஹமஊஸ்த்” பற்றி நான் அறியவில்லை என்றேன்.
அவர்கள் பாரசீக மொழியில் ஒரு பாடல் பாடிவிட்டு கையெழுத்திட்டுத் தந்தார்கள்.
நான் அவர்களிடம் “ஹமஊஸ்த்” என்றால் என்னவென்று வினவினேன். அதற்கவர்கள் “அது “ஙெய்ரிய்யத்” படைத்தவன் வேறு படைப்பு வேறு” என்ற “ஷிர்க்”ஆன கொள்கையை குறிக்கும் என்றும் “ஹமவோஸ்த்” என்பது எல்லாம் அவனே என்ற கொள்கையாகும். இக் கொள்கை “ஐனிய்யத்” படைத்தவனும், படைப்பும் ஒன்றுதான் என்ற “ஈமான்” சரியான கொள்கையை குறிக்கும் என்றும் கூறினார்கள். அன்று அவர்கள் மூலமே “ஹமஊஸ்த்” பற்றி அறிந்து கொண்டேன்.
முஹம்மத் பாகிர் ஆலிம் அவர்கள் ஸெய்யிதுனா ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாகூர் நாயகம் அவர்களின் அற்புதத்தால் ஒரு பெண்ணுக்குப் பிறந்த “தாதா யூஸுப் வலிய்யுல்லாஹ்” அவர்களின் பேரர்களில் ஒருவராவார்கள். இவர்கள் “கறாமத்” உள்ள ஒரு வலீ என்று நாகூர் வாசிகள் கூறுகின்றார்கள். இவர்கள் பல நூல்கள் எழுதியுள்ளார்கள். இறுதியாக எழுதிய நூலின் பெயர் “ஹிதாயதுல் அனாம் இலா ஸியாறதில் அவ்லியாஇல் கிராம்” என்பதாகும்.
எனது நூலில் கையெழுத்திட்ட மற்ற மகான் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்ளலுல் உலமா, அல் ஆரிFப் பில்லாஹ், அற்புதக் கடல், குத்புஸ் ஸமான் அப்துர் றஹ்மான் இப்னு முஹம்மத் ஸயீத் ஜல்வதீ கம்பமீ றஹிமஹுல்லாஹ் அவர்களாவர்.
இவர்கள் கம்பம் நகரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பற்றி என்னிடம் சொன்னவர் அந்நேரம் “மத்றஸதுல் மவாலீ” அறபுக் கல்லூரியின் அதிபர் மௌலவீ பாஸில் அப்துர் றஊப் ஹழ்றத் அவர்களாவர்.
கம்பம் நகரைச் சேர்ந்த அம்பா நாயகம் அவர்களைச் சந்திப்பதற்காக கம்பம் வந்தேன். அன்று காலை நேரம் 9 மணி இருக்கும். ஒரு சிறு தைக்கா என் கண்ணில் பட்டது. அதை நோக்கி நெருங்கினேன். முன்வாயலில் விளம்பர போர்ட் ஒன்று இருந்தது. அதில் பெரிய எழுத்தில் “ஒன்றும் பூச்சியமும் இரண்டாகுமா?” என்று தமிழில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு நான் தேடிவருமிடம் இதுதான் என்று மனதில் நினைத்தவனாக உள்ளே சென்றேன். அடர்ந்த தாடியுள்ள, உடல் கொழுத்த, உயரமான ஒரு வயோதிபர் “வுழூ” செய்து கொண்டிருந்தார். அவரை அதற்கு முன் நான் கண்டதில்லை. அவரும் என்னைக் கண்டதில்லை.
என்னைக் கண்டதும் “உங்கள் தகப்பனாரின் ஜனாஸா தொழுகையில் “அப்தால்”களில் ஒருவர் கலந்து கொண்டுள்ளார்” என்று சொன்னார்கள். இவ்வாறு சொன்னதும் இவர்கள்தான் அம்பா நாயகம் என்று நான் புரிந்து கொண்டவனாக அவர்களுக்கு ஸலாம் கூறி கை கால் முத்தமிட்டு அமர்ந்தேன்.
அவர்கள் என்னிடம் உங்களுக்கு ஒரு வயிற்று வலி இருந்ததல்லவா? அது எப்படியென்று கேட்டார்கள். அவ்வாறுதான் உள்ளது என்றேன். நீங்கள் மூன்று நாட்கள் இங்கே தங்க வேண்டும். இங்குதான் சாப்பிட வேண்டும் என்று கூறினார்கள்.
அன்று “இஷா” தொழுகையின் பின் கட்டிலின் மேல் அவர்களோடு என்னை அமரச் செய்து எதற்காக இந்த மாட்டைப் பார்க்க வந்தீர்கள்? என்று கேட்டார்கள். நான் “பத்வா” தொடர்பான எனது வரலாறை விளக்கமாக கூறி, நான் எழுதிய “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலையும் கொடுத்து தாங்கள் இதைப் பார்வையிட்டு சரியாக இருந்தால் கையெழுத்திட்டுத்தருமாறும், பிழையாக இருந்தால் எனக்கு விளக்கித் தருமாறும் கேட்டேன்.
அவர்கள் தங்களின் மகன்களில் ஒருவரான மௌலவீ அப்துல் கபூர் அவர்களை அழைத்து “இவர் “வஹ்ததுல் வுஜூத்” பற்றி அறபியில் ஒரு நூல் எழுதி கையெழுத்துக்காக கொண்டு வந்துள்ளார். இச்சிறிய வயதில் இப்படியொரு நூல் எழுதியிருப்பது பாராட்ட வேண்டிய ஒன்று. இதை நீ வாசிக்க நான் செவியேற்க வேண்டும்” என்றார்கள்.
அவர்கள் கட்டிலில் இருக்க மகன் மௌலவீ அவர்கள் கட்டிலின் ஓரமாக நின்று கொண்டு தவறெதுவுமின்றி தொடர்ந்து வாசித்து முடித்தார். அவர்கள் இடையிடையே ஸுப்ஹானல்லாஹ்! என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
முடிந்தபின் மகன் மௌலவியிடம் “இந்த நூலை ஆரம்பத்தலிருந்து கடைசி வரை பார்த்தேன். இதுவே உண்மையும், சரியானதுமாகும் என்று எழுதிக் கொண்டு வாருங்கள் நான் கையெழுத்திட்டுத் தருகிறேன்” என்றார்கள். அவ்வாறு எழுதிக் கொண்டு வந்து கொடுத்த போது என்னைப் பார்த்து, எவரும் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக நூல் எழுதி என்னிடம் கையெழுத்துக் கேட்டு வந்ததுமில்லை, நான் எவருக்கும் கையெழுத்திட்டுக் கொடுத்ததுமில்லை” என்று கூறிவிட்டு கையெழுத்திட்டுத் தந்தார்கள்.
மேலே குறிப்பிட்ட இரண்டு மகான்களும் எழுதிய வசனங்களும், கையெழுத்தும் இன்ஷா அல்லாஹ் நான் வெளியிடவுள்ள “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலில் இடம் பெறும். தேவையானோர் அங்கு கண்டு கொள்ளலாம்.
நான் எழுதிய நூலைச் சரிகண்டு கையெழுத்திட்ட இரு மகான்களும் இப்போது “ஹயாத்”தோடு இல்லை. எனினும் அவர்களின் கையொப்பங்களை நான் இன்று வரை பாதுகாத்து வைத்திருக்கிறேன். குறித்த இரு மகான்களும் கையெழுத்திட்டுள்ளார்கள் என்று நான் யாரிடமாவது கூறினால் அவ்விருவர் பற்றியும் அறிந்தவர்கள் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆதாரம் காட்ட வேண்டுமென்று கேட்கிறார்கள். ஆதாரம் கொடுத்த பிறகுதான் நம்புகிறார்கள். இவ்வாறு நான் பலருக்கு ஆதாரம் கொடுத்து அவர்களை நம்பச் செய்துள்ளேன். இன்ஷா அல்லாஹ் வெளிவரவிருக்கின்ற எனது நூலில் தெளிவாக கண்டு கொள்ளலாம்.
இவ்விரு மகான்கள் தவிர இன்னும் சிலரிடம் கையொப்பம் எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களிர் நாகூர் ஷரீப் நகரைச் சேர்ந்த யாஸீன் ஹழ்றத் அவர்களாவர். இவர்கள் மிகத் திறமையுள்ள ஒரு வயோதிபர். தாங்களும், தங்களின் மனைவியும் மட்டும் பழைய பெரிய வீடொன்றில் வாழ்ந்து வந்தார்கள். குழந்தைகள் இல்லை. அறபு மொழியில் மிகத் திறமை உள்ளவர்களாகவும், “ஸூபிஸம்”, “வஹ்ததுல் வுஜூத்” கலைகளில் சுட்டிக் காட்டப்படுபவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் மட்டுமல்ல. இவர்களின் மனைவியும் றாபிஅதுல் அதவிய்யா போன்ற இறை ஞானக் கடலாக விளங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கையொப்பமும் எனது நூலில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் வெளிவரும்.
இந்த மகான் கையெழுத்திட்ட நிகழ்வு அவர்களின் வீட்டுக்கு அண்மையிலுள்ள ஒரு பள்ளிவாயலில் நடந்தது. இது நீண்ட வரலாறு. விரிவையஞ்சி விட்டுவிட்டேன்.
குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்வதற்குப் பயன்படுத்திய மேற்கண்ட வசனத்தில் ஆறு அம்சங்கள் உள்ளன. அவ் ஆறு அம்சங்களில் மூன்று அம்சங்களுக்கு கடந்த நான்கு பதிவுகளின் போது வளக்கம் எழுதியுள்ளேன். இந்த ஐந்தாம் பதிவில் وَإِلَيْكَ الْكُلُّ “அனைத்தும் உன்னளவிலேயே மீளும்” என்ற வசனத்திற்கு விளக்கம் எழுதுகிறேன்.
وَإِلَيْكَ الْكُلُّ
“எல்லாம் உன்னளவிலேயே மீளும்”. இந்த வசனத்தில் وَإِلَيْكَ يَرْجِعُ الْكُلُّ، وَإِلَيْكَ يَعُوْدُ الْكُلُّ “யஊது” அல்லது “யர்ஜிஉ” மீளும் என்ற பொருளுக்குரிய இரண்டு சொற்களில் ஒன்றைச் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும்.
இந்த வசனம் மரணச் செய்தி கேட்டு அல்லது ஒரு துன்பச் செய்தி கேட்டு சொல்லப்படுகின்ற إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ என்ற வசனத்தை நினைவூட்டுகின்றது. இதன் பொருள் பின்வருமாறு. “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்களும், இன்னும் நிச்சயமாக நாங்கள் அவனளவில் மீள்பவர்களுமாவோம்” என்பதாகும்.
إنا لله
“நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்களாவோம்”.
சொந்தமானவர்களாவோம் என்ற பொருளுக்குரிய அறபுச் சொல் இங்கே கூறப்படாது போனாலும் அது இன்ன சொல்தான் என்பதையும், அது இவ்விடத்தில் மறைந்துள்ளது என்பதையும் நமக்கு காட்டித் தருகின்ற எழுத்து “லில்லாஹி” என்ற சொல்லிலுள்ள “லாம்” அல்லது “லி” என்ற எழுத்தேயாகும். மறைந்துள்ள அச் சொல் مِلْكٌ – மில்குன் என்ற சொல்லாகும். இதற்குச் சொந்தம் என்று பொருள் வரும். இவ்விவரப்படி إنا لله நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானவர்கள் என்று பொருள் வரும்.
யாராவதொருவன் மரணித்த செய்தி கிடைத்ததும் “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்” என்று சொல்வது “ஸுன்னத்” நபீ வழியாகும். மரணச் செய்தி மட்டுமன்றி துக்கம், கவலை போன்ற செய்திகள் கிடைத்தாலும் இவ் வசனத்தை முழுமையாக சொல்ல வேண்டும். இதுவும் நபீ வழியேயாகும்.
மரணச் செய்தியோ, கவலைக்குரிய செய்தியோ கிடைத்தால் குறித்த வசனத்தை சொல்வதற்கான காரணத்தை விளங்கினால் மட்டும்தான் பொருத்தம் புரியும்.
முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அஸ்ஸெய்யித் அலவீ மௌலானா அவர்களின் வீட்டில் நடைபெற்ற “றாதிப்” முடிந்த பின் சற்று நேரம் பேச வேண்டுமென்று மௌலானா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிறிது நேரம் உபன்னியாசம் செய்தேன். அவர்களின் வீடு ஒரு “ஜனாஸா”வோடு தொடர்பாயிருந்ததால் إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ என்ற வசனத்தை தலைப்பாக எடுத்துப் பேசினேன்.
உபன்னியாசமும், இராச்சாப்பாடும் முடிந்த பின் அலவீ மௌலானா அவர்கள் என்னை அழைத்து, நான் இது காலவரை إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ என்று ஆயிரத்துக்கும் அதிகமாக நான் சொல்லியிருப்பேன், ஆயினும் அந்த வசனத்தின் சரியான பொருளையும், விளக்கத்தையும் உங்கள் மூலமே தெரிந்து கொண்டேன் என்று கூறினார்கள்.
மரணச் செய்தியோ, கவலைக்குரிய செய்தியோ கிடைத்தால் இத்திரு வசனத்தைச் சொல்வதற்கும், கிடைத்த கவலைக்குரிய செய்திக்கும் என்ன தொடர்புள்ளதென்று அறிந்து கொண்டால்தான் பொருத்தம் புரியும் என்பதால் சுருக்கமாகச் சொல்கிறேன்.
உலகமும், உலகத்திலுள்ள சகல வஸ்த்துக்களும், மனிதர்களும், ஏனைய உயிரினங்களும், பொதுவாக கண்ணுக்குத் தெரியாத சிறிய எறும்பு உள்ளிட்ட அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை.
இதுவே சரியான தத்துவமும், கொள்கையும் என்பதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் ஆதாரங்கள் நிறைய உள்ளன. இங்கு இப்போது விளக்கம் சொல்லி வருகின்ற திருக்குர்ஆன் வசனமும் அவ் ஆதாரங்களில் ஒன்றேதான்.
إنا لله
நிச்சயமாக நாம் எல்லோரும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்களாவோம். அதாவது நாம் அனைவரும் அல்லாஹ்வின் சொத்துக்கள். அவனின் உடைமைகளாவோம்.
இத்திரு வசனத்தின் மூலம் உலகும், உலகிலுள்ளவையும் அல்லாஹ்வின் சொத்துக்கள், அவனுக்குச் சொந்தமானவை என்று தெளிவாகிவிட்டது.
எதார்த்தமும், உண்மையும் இவ்வாறிருக்கும் நிலையில் மனிதர்கள்தான் தமக்கு வீடு சொந்தம், கடை சொந்தம், காணி சொந்தம், தோட்டம் சொந்தம் என்று பேசுவதும், சொந்தம் கொண்டாடுவதும் அறியாமையின் உச்சக் கட்டமேயாகும். ஒரு மனிதன் திருக்குர்ஆனை கருவாகக் கொண்டு ஆய்வு செய்தானாயின் உலகில் ஒரு துரும்பு கூட தனக்குச் சொந்தமானதல்ல என்ற எதார்த்தத்தை அறிந்து கொள்வான்.
அல்லாஹ்வின் சொத்துக்கு கள்ள உறுதி முடித்து வைத்துக் கொண்டு இது எனது சொத்து என்று சொல்வோர் மறுமையில் பதில் சொல்ல வேண்டும். கள்ள உறுதிக்கு சாட்சிகளாக ஒப்பமிட்டவர்களும் பதில் சொல்ல வேண்டும்.
மனிதன் படைக்கப்படுமுன் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாக இருந்திருக்கலாம். ஏனெனில் அவ்வேளை வாங்குவதற்கு எவருமே இல்லாதிருந்த நிலையாகும். யார் வாங்குவது? யார் விற்பது? என்ற கேள்விக்குரிய காலம்.
முதல் மனிதன் ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் படைக்கப்பட்டு அதன்பின் “ஹவ்வா” அலைஹஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும் படைக்கப்பட்டு அவர்கள் இருவர் மூலமும் மனுகுலம் பல்கிப் பெருகிய பிறகுதான் வாங்குதல், விற்றல் என்பது ஏற்பட்டது.
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம், ஸெய்யிததுனா ஹவ்வா அலைஹஸ்ஸலாது வஸ்ஸலாம் ஆகியோர் மூலம் மனுகுலம் பெருகத் தொடங்கியது. அவர்களுக்கு வதிவிடங்கள் தேவைப்பட்டன. வாழ்வாதாரங்களும் தேவைப்பட்டன.
ஆதம் நபீ அவர்களுக்கும், ஹவ்வா அவர்களுக்கும் பல குழந்தைகள் பிறந்தன. ஒரே சூலில் ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக பல குழந்தைகள் பிறந்தன. சந்ததிகள் பெருக வேண்டுமாயின் ஒரு சூலில் பிறந்த ஆணுக்கும், மறு சூலில் பிறந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. திருமணத் தம்பதிகள் இருவரும் ஒரே தாய், தந்தைக்கு உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாக இருந்தாலும் கூட நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட “ஷரீஆ”வில் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கிடையில் திருமணம் செய்து வைப்பது ஆகுமாக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலம் வரை நடைமுறையில் இருந்து வந்தது.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய “ஷரீஆ” அவர்களுக்கு முன் நடைமுறையிலிருந்து வந்த அனைத்து “ஷரீஆ”க்களையும் மாற்றிவிட்டது. சட்டங்களையும் மாற்றிவிட்டது. இறுதி நாள் வரை நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “ஷரீஆ” மட்டுமே இருக்கும்.
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளுக்கு வசிப்பதற்கு வீடுகள் தேவைப்பட்டன. அல்லாஹ்வுக்குச் சொந்தமான இப்பூமியில் அவர்களில் ஒவ்வொருவரும் தமக்கென்று ஓர் இடத்தை எடுத்து வீடு கட்டுவது எப்படியென்றே தெரியாமலிருந்த ஆதமுடைய மக்களுக்கு அவர்கள் மூலம் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். இதேபோல் தொழிலையும், மனித வாழ்க்கை முறையையும், சகல வஸ்த்துக்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மக்கள் பரந்த இப்பூமியின் பல பகுதிகளுக்கும் சென்று வாழத் தொடங்கினார்கள்.
இன்று வரை அவர்களின் சந்ததிகள் காலத்திற்கேற்றவாறு தொழில்களையும், வதிவிடங்களையும் அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள்.
சுருக்கம் என்னவெனில் அல்லாஹ் படைத்த பரந்து விரிந்து காணப்படுகின்ற இப்பூமி அவனுக்கு மட்டுமே உரித்துடையதாகவும், சொந்தமானதாகவும் இருந்தது. மனிதனைப் படைக்குமுன் இப்பூமியில் மலக்குகளின் நடமாட்டங்களும், ஜின்களின் நடமாட்டங்களும் மட்டுமே இருந்தன.
وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ
நாங்கள் அனைவரும் அல்லாஹ் அளவிலேயே மீள்வோம். إنا لله நாங்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள் என்று கூறிய அல்லாஹ் இதையடுத்து நாங்கள் நிச்சயமாக அல்லாஹ் அளவிலேயே மீள்வோம் என்றும் சொல்லியுள்ளான்.
இத்திருவசனம் குத்பு நாயகம் وَإِلَيْكَ الْكُلُّ என்று சொன்னது போல் அனைவரும் அல்லாஹ்வின் பக்கமே மீளவேண்டுமென்ற கருத்தை வலியுறுத்துகிறது.