தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
وقد عُرف ابن تيمية في بعض الدُّول بشيخ الإسلام، ولكن لم ينفرد هو فقط بذلك الوصف، فقد عرف كثير من علماء الأمة بشيخ الإسلام، ففى ”نزهة الألباب في الألقاب” للحافظ ابن حجر ١/٤١٠ في تعريفه كلمةَ شيخ الإسلام، قال (شيخ الإسلام اشتهر بها قديما أبو إسمائيل عبد الله بن محمد الأنصاري، صاحب ‘منازل السائرين’ وذَمِّ الكلام، ثم لُقِّب بها جماعةٌ بعده،
(أخطاء ابن تيميّة ص ٨ )
“ஷெய்ய்குல் இஸ்லாம்” என்றால் இஸ்லாம் மார்க்கத்தின் தலைவர், பெரியவர் என்று பொருள் வரும். இவ்வசனம் ஒருவரை கண்ணியப்படுத்தி அவருக்கு வழங்கப்படுகின்ற பட்டமேயன்றி இது எவரினதும் பெயர் அல்ல.
இஸ்லாமிய வரலாற்றில் இப்பட்டம் மூலம் முதன் முதலாக கண்ணியப்படுத்தப்பட்டவர் “அபூ இஸ்மாயீல் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் அல் அன்ஸாரீ” என்பவராவர். இவருக்கு منازل السائرين என்று ஒரு நூல் உள்ளது.
இந்த விபரம் இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்களின் نزهة الألباب في الألقاب என்ற நூல் பாகம் 01 பக்கமட் 410ல் இடம் பெற்றுள்ளது. பின்னர் இப்பட்டம் கொண்டு பலர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆதாரம் – அக்தாஉ இப்னு தைமிய்யா. பக்கம் – 08
இவ்வாறு பட்டம் வழங்கப்பட்டவர்களில் வஹ்ஹாபிஸத்தின் தந்தையின் தந்தை இப்னு தைமிய்யா என்பவரும் ஒருவராவர். ஆயினும் இவர் மட்டும் இப்பட்டம் கொண்டு அழைக்கப்பட்டவர் அல்ல.
எவருக்கு என்ன பட்டம் வழங்கி கௌரவிப்பதாயினும் அவருக்கு அப்பட்டம் பொருத்தமானதாக இருக்க வேண்டும். ஆனாவும், அலிபும் தெரியாத ஒருவனுக்கு “அல்லாமா” என்று பட்டம் வழங்குவது பொருத்தமா? அல்லாஹ் பற்றி ஒரு “நுக்தா” புள்ளியும் தெரியாத ஒருவனுக்கு “ஆரிப் பில்லாஹ்” என்று பட்டம் வழங்குவது பொருத்தமா?
நான் அறிந்த வரை شيخ الأسلام “ஷெய்குல் இஸ்லாம்” என்று ஒருவருக்கு பட்டம் வழங்குவதாயின் அவர் “ஸுன்னீ” ஸுன்னத் ஜமாஅத் கொள்கையுள்ளவராகவும், இறை கொள்கையில் “அஷ்அரிய்யா” அல்லது “மாதுரீதிய்யா” கொள்கை உள்ளவராகவும் இருக்க வேண்டும். “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ தத்துவம் தெரியாது போனாலும் அதை ஏற்றுக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
இந்த நிபந்தனைகள் ஒரு முஸ்லிமுக்கு மார்க்கத்தோடு தொடர்பு பட்ட ஒரு பட்டம் கொடுப்பதென்றால் மட்டுமேயாகும். அரசியலோடு உலக விவகாரங்களோடு தொடர்புள்ள பட்டம் கொடுப்பதாயின் மேற்கண்ட நிபந்தனைகள் தேவையில்லை.
குடிகாரன் ஒருவருக்கு அல்லது தொழாதவனுக்கு ناصر الإسلام இஸ்லாம் மார்க்கத்துக்கு உதவி செய்பவன். محي المِلَّة – மார்க்கத்துக்கு உயிர் கொடுப்பவன் என்ற பட்டங்கள் வழங்குதல் போன்று.
பட்டம் வழங்குகின்றவரோ வழங்கப்படுகின்றவரோ தனது “நப்ஸ்” எனும் மனவெழுச்சிக்கு அந்த நிகழ்வை விருந்தாக்கி விடக்கூடாது. ஏனெனில் இவ்வாறான நிகழ்வுகளின் போது ஷெய்தான்- ஷாத்தான் ஓய்வெடுக்கமாட்டான். தனக்கு கிடைக்கின்ற வேட்டையை தவற விடாமல் தட்டிக் கொள்ளவே பார்ப்பான்.
ஓர் உதாரணம் சொல்கிறேன். ஓர் ஊரிலுள்ள ஓர் இஸ்லாமிய அமைப்பு, அல்லது ஒரு பள்ளிவாயல் நிர்வாகம் அவ்வூரைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதிக்கு ஒரு பட்டம் வழங்க முடிவு செய்தார்கள். அப்பட்டத்தை தெரிவு செய்வதற்கென்று அவ் அமைப்பைச் சேர்ந்த ஒரு கலாநிதியை தெரிவு செய்தார்கள்.
கலாநிதியோ தனது தலை மேல் “நப்ஸ்” மனவெழுச்சி என்ற “பிர்அவ்ன்” என்றவனை சுமந்தவராக வீட்டுக்கு வந்து அடியே ராணி இங்கே வாடி என்று மனைவியை அழைத்து உனக்கு செய்தி தெரியுமா என்ற கேட்டார். இல்லையே என்றாள் அவள். நமதூர் அரசியல்வாதிக்கு பட்டம் வழங்கத் திட்டமிட்டு இந்தப் பெரிய ஊரில் எத்தனையோ கலாநிகளும் கலை நதிகளுமிருக்க அந்தப்பட்டத்தை தெரிவு செய்ய எனனைத்தான் நியமித்துள்ளார்கள் என்றார்.
மனைவியோ “டபிள்” கலாநிதிப் பட்டம் பெற்றவள். அது மட்டுமல்ல. அவள் கடும் விவேகியும் கூட. கணவனின் தலை மேல் “நப்ஸ்” மனவாசை என்ற ”பிர்அவ்ன்” இருந்ததைக்கண்டு அவள் மேலும் உஷார் ஏற்றும் வகையில் உங்கள் போல் கலாநிதி ஆண்களில் இவ்வூரில் எவருமில்லையே அதனால்தான் உங்களைத் தெரிவு செய்துள்ளார்கள் என்றாள்.
கலாநிதியின் தலை மேல் இரண்டு கால்களுடன் நின்றிருந்த பிர்அவ்னுக்கு இன்னும் இரண்டு கால்கள் முழைத்து விட்டன. காண்பவர்களிடமெல்லாம் நமதூர் அரசியல்வாதிக்கு பட்டம் வழங்கி கௌரவிப்பதற்காக பட்டம் தெரிவு செய்யும் பொறுப்பை என்னிடமே ஒப்படைத்துள்ளார்கள் என்று ஊரெல்லாம் பரப்பி விட்டார். அகராதியும் கையுமாக உண்ணாமலும், உறங்காமலும் பட்டம் தெரிவு செய்யும் பணியில் தன்னை அர்ப்பணித்தார்.
அவர் இவ்வாறு இன்னல்களைச் சுமந்தது ஏன் தெரியுமா? அரசியல்வாதிக்கு பட்டம் வழங்கப்பட்ட பின் இது யார் தெரிவு செய்த பட்டமென்று ஊர் மக்களும், அரசியல்வாதிகளும் தன்னைப் புகழ வேண்டுமென்பதற்காவேதான்.
பட்டம் வழங்கும் நாள் வந்தது. கலாநிதியின் தலையும், அரசியல்வாதியின் தலையும் வீங்கத் தொடங்கின. இருவரின் உள்ளங்களிலும் பிர்அவ்ன் குடும்ப சகிதம் வந்து குடி கொண்டு விட்டான்.
பட்டம் வழங்கும் விழாவில் எழுந்தார் கலாநிதி. தான் தெரிவு செய்த “அரசியல் ராஜாளி” என்ற பட்டம் சூட்டி கௌரவித்தார் அரசியல்வாதியை. பிர்அவ்ன் இருவரின் உள்ளங்களிலும் பறந்து விளையாடினான். இரண்டு நாட்கள் வரை அரசியல்வாதியின் வீடு அடியாட்களாலும், கூலிப்படையினராலும் நிரம்பி வழிந்தது. கலாநிதியின் வீடோ காய்ந்து போய் கிடந்தது.
ஒருவனுக்கு பட்டம் வழங்குவதும், விழா நடாத்துவதும் நல்ல காரியங்களாயினும் அவற்றால் பிர்அவ்னுக்கும், ஷெய்தானுக்கும் மகிழ்ச்சி வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் பெருமை, அகங்காரம், மமதை, கர்வம், பதவி மோகம் போன்றவை மனிதனை நரகிற்கு அனுப்பும் சாதனங்களாகும்.
(மனதை வெல்லு மனிதனாவாய்)