தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அவசியம் ஏற்படும் போது அள்ளி வழங்காத உலோபிகளுக்கு எதிராக இறைவனிடம் கையேந்தாதீர்கள். ஏன் தெரியுமா? அண்ணலெம் பெருமான் அஹ்மதெங்கள் கோமான் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இந்த உலோபிகளின் பொருளாதாரம் அழிய வேண்டுமென்றும், அள்ளி வழங்குவோரின் பொருளாதாரம் வளர வேண்டுமென்றும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருளிச் சென்றுள்ளார்கள். அவர்களின் “துஆ” தட்டப்பட்டதற்கு வரலாறே கிடையாது. அவ்வாறு தட்டப்பட்டிருந்தாலும் அது அவர்களின் நண்மைக்காகவே தட்டப்பட்டிருக்கும்.
அவர்கள் உலோபிகளுக்கு எதிராக கேட்ட துஆ.
قال النّبيّ صلى الله عليه وسلّم اللهم أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَ مُمْسِكًا تَلَفًا
யா அல்லாஹ்! உனக்காக செலவிடுபவனுக்கு இலாபத்தையும், கொடுக்காமல் பதுக்கி வைத்திருப்பவனுக்கு நட்டத்தையும் கொடுப்பாயாக! என்று இறைஞ்சினார்கள்.
(நபீ மொழி -ஸஹீஹுல் புஹாரீ – 1442)
பெருமானாரின் இந்த “பத்-துஆ” بَدْ – دُعَا சாபம் ஒன்றே அவர்களுக்குப் போதும். நாம் அவர்களுக்கு எதிராக கேட்க வேண்டிய அவசியமில்லை. பிரதமர் ஜனாதிபதியிடம் சொன்னால் போதும். அது நிச்சயமாக எடுபடும். நாம் கேட்டால் கிடைக்காமலும் விடலாமல்லவா?
நீங்கள் அவர்களுக்காக கேட்க விரும்பினால் யா அல்லாஹ்! உன் சொத்தை வைத்துக் கொண்டு உனக்கே தராமல் பதுக்கும் இப்பாவிகளுக்கு கொடுக்கும் மன நிலையை வழங்குவாயாக என்று கேளுங்கள். அவர்களுக்கு அருள் புரிவாயாக! அவர்களின் வியாபாரத்தில் இலாபத்தை வழங்குவாயாக என்று கேட்டுவிடாதீர்கள். அவ்வாறு கேட்பது பெருமானாருக்கு எதிராக கேட்பதாக அமைந்து விடும். அது பெருங்குற்றம்.
قال النّبيّ صلى الله عليه وسلّم اَلصَّدَقَةُ تَرُدُّ الْقَضَاءَ وَالْبَلَاءَ.
“தான தருமம் விதியையும் தட்டும், சோதனையையும் தட்டும்” என்று இயம்பினார்கள் ஏந்தல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்.
யாருடைமை எடுத்து தன்னுடைமை என்பவர்க்கு
கப்றில் வரும் துணையே கண்ணே றஹ்மானே!
மஸ்தான் அப்பா “ஜமாலிய்யத்” மிகைத்த நேரம் பாடி விட்டார்கள் போலும். இன்றேல் கள்ளனுக்கு கருணை காட்டுமாறு கேட்க முடியாதல்லவா!