தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
கறை படிந்த, துருப்பிடித்த இரும்பின் கறை நீக்கி அதைச் சுத்தம் செய்ய விரும்பினால் கொல்லன் உலை இரும்பாக வேண்டும்.
ஓர் மனிதன் வீட்டில் ஓர் இரும்புத் துண்டு கறை படிந்த நிலையில் ஒருவருக்கும் பயன்படாமல் அவன் வீட்டு மூலையில் கவனிப்பாரற்று நீண்ட நாட்களாகக் கிடந்தது. அவன் போகும் போதும், வரும் போதும் காலால் அதை மிதித்துக் கொண்டே செல்வான்.
ஒரு நாள் அவன் வீட்டுக்கு வந்த கொல்லன் ஒருவன் அவனிடம் இந்த இரும்புத் துண்டை எனக்குத் தருவாயா என்று கேட்டான். அவன் கேட்கும் வரை வீட்டுக்காரன் அது பற்றிச் சிந்திக்கவே இல்லை. அவன் அவ்வாறு கேட்டதும் வீட்டுக் காரனுக்கு சந்தேகம் வந்தது. இருப்பினும் எவ்வளவு தருவாய் என்று வீட்டுக்காரன் அவனிடம் கேட்டான். இலவசமாகத் தருவதாயின் பெற்றுக் கொள்வேன் என்றான் அவன். வீட்டுக் காரனுக்கு சந்தேகம் வலுவடைந்தது. கொல்லன் பகடியாக 100 ரூபாய் தருகிறேன் என்றான். வீட்டுக்காரனுக்கு மேலும் சந்தேகம் வலுத்ததால் இது பெறுமதியான பொருளாயிருக்குமோவென்ற எண்ணத்தில் 500 ரூபாய் தந்தால் தரலாமென்று சொன்னான். வந்தவன் அவன் கேட்ட தொகையை கொடுத்து அந்த இரும்புத் துண்டை வாங்கிச் சென்றான்.
அதை வாங்கிச் சென்றவன் ஒரு கொல்லன். அவன் அதை எடுத்துச் சென்று அதிலிருந்து பத்து சிறிய பாக்கு வெட்டிகள் செய்வதற்கு முடிவெடுத்து தினமும் காலையும், மாலையும் அந்த இரும்புத் துண்டை தனது உலையில் வைத்து சூடாக்கி பெரிய சுத்தியல் ஒன்றால் அடிப்பதும், பின்னர் உலையில் வைத்து சூடாக்குவதுமாக ஒரு மாத காலம் மிகவும் கஷ்டத்தை அனுபவித்து அழகிய, கண்களைக் கவரக் கூடிய பத்து பாக்கு வெட்டிகள் தயாரித்தான். அவற்றை பல்நிற கண்ணாடி கற்கள் கொண்டு அலங்கரித்து அழகு படுத்தி ஒவ்வொரு பாக்கு வெட்டியையும் ஒவ்வொரு கண் கவர் பெட்டியில் வைத்து விற்பனைக்காக கடைத் தெருவுக்கு கொண்டு வந்தான். அந்தக் கடைத் தெருவில் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரன் தங்க நகைக் கடை வைத்திருந்தான். கொல்லன் அவனிடம் சென்று பாக்கு வெட்டிகளைக் காண்பித்தான். ஒன்றின் விலை என்ன என்று அவன் கேட்டான். ஐந்தாயிரம் என்றான் கொல்லன். கடைக்காரன் குறைத்து விலை கேட்க விரும்பாமல் உடனே ஐந்தாயிரம் கொடுத்து 10 பாக்கு வெட்டிகளையும் வாங்கினான்.
சுமார் ஒரு வருடத்தின் பின் ஆபிரிக்கன் தனது நாட்டுக்குச் சென்று இலங்கை வந்து கொல்லனுக்கு 50 ஆயிரம் கொடுத்து 10 பாக்கு வெட்டிகளையும் வாங்கி 50 இலட்சத்துக்கு விற்றதாகச் சொன்னான். இச்சம்பவம் சுமார் 150 வருடங்களுக்கு முன் காலியில் நிகழ்ந்த உண்மைச் சம்பவமாகும்.
இந்தச் சம்பவம் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், ஒன்றுக்கும் உதவாமலும், கவனிப்பாரற்றும் கிடந்த கறை படிந்த இரும்புத் துண்டை சூடான உலையில் வைத்து சூடாக்கியும், சுத்தியலால் அடித்தும் உருவாக்கப்பட்ட பாக்கு வெட்டிகள் கொல்லனின் பெரு முயற்சியால் ஒரு பாக்கு வெட்டி ஐந்து ஆயிரம் ரூபாய் வீதம் 10 பாக்கு வெட்டிகளும் 50 ஆயிரம் ரூபாய்களை கொல்லனுக்குப் பெற்றுக் கொடுத்தது.
இவ்வாறுதான் – கறை படிந்த இரும்புத் துண்டு போன்றதே மனிதனின் “கல்பு” உள்ளம் ஆகும். ஒருவன் கோபம், மமதை, பெருமை, புகழ் அகங்காரம், ஆணவம், பொறாமை முதலான கறைகள் படிந்த உள்ளத்தை கொல்லன் கறை படிந்த இரும்பை அடித்தும், சுட்டும் பாக்கு வெட்டிகளாக்கி விலையுயர்ந்த பொருளாக்கியது போல் ஒருவன் தனது “நப்ஸ்” என்ற மன வெழுச்சியை சுட்டும், அடித்தும் உருப்படியான, விலையுயர்ந்த பொருளாக்கி ஆன்மீகத் துறையில் முன்னேற வேண்டும். இவ்வாறு முன்னேறினவன் அல்லாஹ்விடத்தில் “விலாயத்” என்ற பெறுமதி கூற முடியாத ஒலித்தனம் பெறலாம். “நப்ஸ்” என்ற மன வெழுச்சியை வெல்வதே ஆன்மீகத்தின் குறிக்கோள்.
*- மனதை வெல்லு மனிதனாகுவாய் -*