Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உன்னிலே உற்றுப்பார். நீயாரென்று தெரியும். யார் நீ?

உன்னிலே உற்றுப்பார். நீயாரென்று தெரியும். யார் நீ?

وَفِي اَنْفُسِكُمْ اَفَلَا تُبْصِرُوْنَ؟
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
 
நானென்றிருந்தேனே! நாளும் கழிந்தேனே நீயாயிருந்த ரகசியம் அறியேனே!
 
இறை ஞானி அபூ பக்ர் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஆரம்ப படியிலுள்ள இறை காதலன் ஒருவன் சென்று, பெரியவரே! மகானே! எனக்கு இறைவன் யார் என்று சொல்லித்தாருங்கள் என்றான்.
 
அதற்கவர் உன் தேவையை நான் நிறை வேற்றுவதை விட கடல் வாழ் மீன்கள் நிறைவேற்றுவதே பொருத்தம் என்றார்.

ஞான மகானின் கதையில் கருத்திருக்குமென்ற நம்பிக்கையோடு இறை காதலன் கடற்கரைக்குச் சென்று கடல் வாழ் மீன் கூட்டமே எனக்கு இறைவன் யார் என்று சொல்லித் தாருங்கள் என்றான்.
 
மூன்று மீன்கள் நீரின் வெளியே தலையை உயர்த்தி, சொல்லித் தருகிறோம். ஆயினும் புனிதமான இறைவனை சொல்லித் தரும் நாங்களும் புனிதமானவர்களாக இருக்க வேண்டும். நாங்களோ தற்போது முழுக்காளிகளாக இருக்கிறோம். குளிப்பதற்கு இது வரை நீர் கிடைக்கவில்லை. அது கிடைத்ததும் குளித்து சுத்தமாகிய பின் சொல்லித்தருகிறோம் என்று கூறின.
 
இறை காதலன் இமாம் ஷிப்லீ மகானிடம் வந்து நடந்ததைக் கூறி மீன் கூட்டம் சொன்ன கதையையும் சொல்லி அதற்கான விளக்கத்தையும் கேட்டான்.
 
காண்பவை யாவையும் மீன் கூட்டம் இறைவனாகக் காண்பதால் தான் அக்கூட்டத்திற்கு நீர் தெரியவில்லை. நீரையும் அது இறைவனாகவே காண்கிறது. கண்டது. மீன் கூட்டம் அவ்வாறு சொன்னதற்கு இது தான் விளக்கமென்று இறை ஞானி ஷிப்லீ கூறினார்கள். இறை காதலன் அப்போதுதான் இறைவன் என்றால் யார் என்று புரிந்து கொண்டான்.
 
மேலே தலைப்பில் எழுதிய குர்ஆன் வசனத்தில் (நீங்கள் உங்களிலே பார்க்க வேண்டாமா?) என்று அல்லாஹ் அடியார்களிடம் கேட்கிறான். அதாவது நீங்கள் உங்களிலே ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளானே தவிர எதைப் பார்க்க வேண்டும் என்று கூறவில்லை.
 
இவ்வசனத்தில் வந்துள்ள “துப்ஸிறூன்” என்ற சொல்லின் பின்னால் ஒரு சொல் வர வேண்டும். அது மொழியலக்கணத்தில் مَفعُول – மப்ஊல் என்று சொல்லப்படும். அது இங்கு கூறப்படவில்லை. அது கூறப்பட்டிருந்தால் பொருள் தெளிவாகியிருக்கும்.
 
எனவே இதற்கு مَفعُول – மப்ஊல் கூறப்பட்டால்தான் அல்லாஹ் எதைப் பார்க்கச் சொன்னான் என்பது. தெளிவாகும்.
 
அல்லாஹ் திருவசனத்தில் எதையும் குறித்துக் சொல்லவில்லை யாதலால் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் “முபஸ்ஸிரீன்”கள் எவ்வாறு எழுதியுள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்கள் எதை எழுதியுள்ளார்களோ அதை நாம் எடுக்க வேண்டும். இதனால் எந்த ஒரு விரிவுரையாளரும் எழுதாத ஒரு கருத்தை எந்த ஒரு தப்ஸீர் விரிவுரை நூல்களிலும் இல்லாத ஒரு கருத்தை ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவர் கூறும் கருத்து எந்த ஒரு விரிவுரை நூல்களிலும் கூறப்படவில்லை என்ற காரணத்திற்காக மட்டும் அவரின் கருத்தை மறுத்து விடலாகாது. அவ்வாறு மறுப்பது திருக்குர்ஆனுக்கே முரணாகிவிடும். இந்த விபரம் தேவையென்றால் தர முடியும்.
 
ஒருவர் கூறும் கருத்து சரியா பிழையா என்பதை கண்டறிவதற்கான உரைகல் அல்லது தராசு அந்த கருத்தை முன்னோர்களில் யாராவது சொல்லியிருக்க வேண்டுமென்பதோ, அல்லது யாராலாவது எழுதப்பட்டிருக்க வேண்டுமென்பதோ அல்ல, ஆகையால் ஒருவர் கூறிய கருத்தை சரியா பிழையா என்று உரைத்துப் பார்பதற்கான உரைகல் திருக்குர்ஆனும், நபீ மொழிகளும், “அகீதா” கொள்கையுமேயாகும். அவரின் கருத்தை நான் மேலே எழுதிய மூன்று உரை கற்களிலும் உரைத்துப் பார்க்க வேண்டும். அவரின் கருத்து மேற்கண்ட மூன்று மூலங்களில் ஒன்றிற்கேனும் மாறுபடவில்லையானால் சொன்னவன் யாரென்று பார்க்காமல் அவன் சொன்னதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
மேலே நான் எழுதியுள்ள وفي أنفسكم أفلا تبصرون – “உங்களிலே நீங்கள் பார்க்க வேண்டாமா” என்ற வசனத்துக்கு யாரோஒருவர் إِيَّايَ என்று மப்ஊல் ஒன்றைக் கூறி நீங்கள் உங்களிலே என்னைப் பார்க்க வேண்டாமா என்று, அல்லது رَبَّكُمْ என்று ஒரு “மப்ஊல்”ஐக் கூறி நீங்கள் உங்களிலே உங்கள் இரட்சகனை பார்க்க வேண்டாமா என்று பொருள் சொன்னால் இது எந்த கிதாபில், எந்த தப்ஸீரில் வருகின்றதென்றுதான் علماء الرسوم என்றும், علماء الأوراق என்றும் ஸூபி மகான்களால் சொல்லப்படுகின்ற மார்க்க அறிஞர்கள் கேட்பார்கள். யாருமே இவ்வாறு சொல்லவில்லை. எனினும் இதோ இருக்கின்ற “பக்கிர் பாவா” சொன்னரென்று ஒரு மஸ்தானைக் காட்டினால் இவன் யார் மார்க்கம் பேச இவன் ஆலிமா? என்றுதான் அவர்கள் கேட்பார்களே தவிர அந்த “பகீர்” உடைய பேச்சை கவனத்திற் கொண்டு குர்ஆன், ஹதீது, இஜ்மாஉ, கியாஸ் எனும் நான்கு மூலாதாரங்கள் என்ற உரை கற்களில் உரைத்துப் பார்க்க மாட்டார்கள்.
 
இவ்வாறு எழுதிக் கொண்டிருந்த எனக்கு தமிழ் நாடு – முத்துப்பேட்டையில் நடந்த நிகழ்வொன்று என் நினைவுக்கு வந்து விட்டது.
நானும் எனது நண்பர்களிற் சிலரும் ஷெய்கு தாவூத் வலியுல்லாஹ் அவர்களின் அடக்கவிடம் -தர்ஹாவை நாடி ஜாம்புவானோடை என்ற கிராமத்தை நோக்கி நடந்து செல்கையில் வைத்தியக் கலாநிதி ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அவர்களிடம் வைத்தியம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட பல பைத்தியங்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மடத்தில் தங்கி இருந்தார்கள். சுமார் 15 பேர்கள் இருக்கலாம். அவர்களில் ஒருவர் எங்களை கண்டதும் உங்களுக்கு குல்ஹுவல்லா என்பதற்கு விளக்கம் தெரியாது அதிலுள்ள “ஹூ” என்றால் என்னவென்று தெரியாது உங்களுக்கு எதுக்குடா சியாரத்தும், அவ்லியாக்களும் என்று சத்தமிட்டார்.
பைத்தியக்காரனும் இறை ஞானம் பேசுவான் அவன் பைத்தியமாயிருந்தாலும் பேச்சு சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
 
உங்களிலே நீங்கள் என்னை காண வேண்டாமா என்ற திருவசனம் மனிதன் தன்னைப் பற்றி சிந்தித்தால் ஆய்வு செய்தால் தானும் அவனே என்ற தத்துவத்தை உணர்ந்து கொள்வான்.
 
இதேபோல் இன்னும் ஒரு திருவசனம் உண்டு அல்லாஹ் திருக்குர்ஆனில் واذكر ربك إذا نسيت “நீ உனது இரட்சகனை நினைத்துக்கொள்” நீ மறந்தால் என்று கூறியுள்ளான். இவ்வசனமும் மேலே சொன்ன வசனம் போல் மப்ஊல் கூறப்படாமலேயே வந்துள்ளது இந்த வசனத்திலும் نَسِيْتَ நீ மறந்தால் என்ற சொல்லின் பின்னால் ஒரு சொல் வரவேண்டும் அதாவது உனது இரட்சகனை நீ நினைத்துக் கொள் “நீ மறந்தால்” என்று மட்டும் தான் வந்துள்ளதேயன்றி எதை மறந்தால் என்ற விபரம் கூறப்படவில்லை.
இந்த இடத்திலும் இடத்துக்குப் பொருத்தமான ஒரு சொல்லை “நஸீத்த” என்ற சொல்லுக்குப் பின்னால் கொண்டு வந்து விளக்கம் சொல்ல வேண்டும் . அது எதுவாக இருக்கும் என்பது தொடர்பாக ஆய்ந்தவர்களில் இறை ஞானிகள் نَفْسَكَ உன்னை என்று விளக்கம் கூறியுள்ளார்கள்.
 
அதாவது நீ உனது அல்லாஹ்வை நினைப்பதாயின் உன்னை நீ மறக்க வேண்டும். உன்னை நீ மனதில் வைத்துக் கொண்டு அல்லாஹ்வை நினைக்க முடியாது. ஆகையால் நீ அல்லாஹ்வை நினைப்பதாயின் முதலில் உன்னை மறந்து விடு என்று எழுதியுள்ளார்கள்.
 
எதிலும் இறைவன் உள்ளான் என்ற கொள்கை ஹுலூல், இத்திஹாத் என்ற வழிகெட்ட கொள்கையாகும். ஆயினும் எல்லாமாயும் உள்ளான் என்பதுவே “வஹ்ததுல் வுஜூத்” எனும் ஞானமாகும். எனவே மெய்ப் பொருள் மட்டுமே உள்ளது மற்றவை இல்லாதவை என்பதை நம்புவோம். இவ்வாறு நம்பினோர்தான் கை விடப்படமாட்டார்கள்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments