தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ (النّساء – 0 4)
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلّم ”بَدَأَ الْإِسْلَامُ غَرِيْباً وَسَيَعُوْدُ كَمَا بَدَأَ غَرِيْباً ، فَطُوْبَى لِلْغُرَبَاءِ”
)صحيح مسلم ١٤٥ – ٢٣٢)
விசுவாசிகளே! அல்லாஹ்வையும், அவனின் திருத்தூதரையும் விசுவாசியுங்கள். அவர்களை நம்புங்கள்.
அந்நிஸா – 04
மேற்கண்ட திரு வசனத்தில் அல்லாஹ் விசுவாசிகளே! என அழைத்து அல்லாஹ்வையும், அவனின் திருத்தூதரையும் நம்புமாறு – அவர்களைக் கொண்டு “ஈமான்” நம்பிக்கை கொள்ளுமாறு அடியார்களைப் பணித்துள்ளான்.
இத்திரு வசனம்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ آمِنُوابِهِمَا.
இவ்வாறு அருளப்பட்டிருக்கலாம். எவ்வாறு வந்தாலும் பொருள் ஒன்றுதான். எனினும் அல்லாஹ் இவ்வசனத்தைக் கூறியுள்ள பாணியில்தான் ஆழமான தத்துவங்கள் வெளியாகின்றன.
அல்லாஹ்வையும், இறை தூதரையும் நம்பினவர்கள் “முஃமின்” விசுவாசிகள்தான். அவர்களை விசுவாசிகளே! என்று அழைத்து அல்லாஹ்வையும், தூதரையும் நம்புங்கள் என்று சொல்வது பொருத்தமற்றதாகும். ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து ஈமான் கொள்ளுங்கள் என்று கூறுவது “முஹால்” அசாத்தியமானதாகும். تَحْصِيْلُ الْحَاصِلِ مُحَالٌ உண்டாக்கப்பட்டுள்ள ஒன்றை உண்டாக்குமாறு சொல்வது அசாத்தியமானதும், “அக்ல்” என்ற புத்திக்குப் பொருத்தமற்றதுமாகும்.
அல்லாஹ்வின் இவ் ஏவல் சாப்பிட்டு வயிறு நிரம்பினவனை சாப்பிட்டவனே சாப்பிடு என்று சொல்வது போலாகும். “ஈமான்” நம்பிக்கை கொள்ளாதவனை அழைத்து நம்பிக்கை கொள்ளுமாறு பணிப்பதே பொருத்தமானதாகும். இது எமது இத்துப்போன அறிவு சொல்கின்ற கருத்து.
அல்லாஹ்வின் பேச்சு எந்த ஒரு குறையுமில்லாததாகும். அவன் பேச்சில் குறைகாண நான் யார்? நீ யார்? ஆகையால் அல்லாஹ் சரியாகவே கூறியுள்ளான். நாமேதான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனலாம்.
இத்திரு வசனத்தை மனச் சாட்சிக்கு மாற்றமின்றிச் சிந்தனை செய்து பார்த்தால் يَا ايَّهَا الَّذِيْنَ آمَنُوا ஈமான் கொண்டவர்களே என்று அழைத்தது எந்த வகையிலும் இறை மறுப்பாளர்களைக் குறிக்காது. ஏனெனில் இறை மறுப்பாளர்களை “ஈமான்” நம்பிக்கை கொண்டவர்களே என்று ஒரு போதும் அல்லாஹ் அழைக்கமாட்டான். இதனால் “ஈமான்” கொண்டவர்களையே அல்லாஹ் அழைத்துள்ளான் என்பது தெளிவாகிறது.
விசுவாசிகள் விசுவாசிகள்தானே! அவர்களை அழைத்து விசுவாசம் கொள்ளுமாறு அல்லாஹ் ஏன் பணித்தான் என்பதை ஆய்வு செய்தறிய வேண்டும். எவ்வளவுதான் ஆய்வு செய்தாலும் கிடைக்கப் போகின்ற முடிவு அவர்கள் பெயரளவில் “முஃமின்” விசுவாசிகளேயன்றி எதார்த்தத்தில் அவர்கள் விசுவாசிகளே அல்ல. அதாவது அவர்கள் “ஈமான்” கொண்டவர்கள்தான் அதில் மாற்றமில்லை. எனினும் எவ்வாறு நம்ப வேண்டுமோ அவ்வாறு அல்லாஹ்வையும், அவனின் திருத்தூதரையும் நம்பவில்லை. இன்னோர் கூட்டத்துடன் சேர்ந்து கோவிந்தா போட்டவர்களேயன்றி விடயம் புரிந்து சொன்னவர்களல்ல.
வசனத்தின் சரியான கருத்து என்னவெனில் விளக்கமின்றிப் பெயரளவில் விசுவாசம் கொண்டவர்களே நீங்கள் விளங்கி விசுவாசம் கொள்ளுங்கள் என்பதாகும்.
இவர்களின் “ஈமான்” பிற மதத்தைச் சேர்ந்த யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோவில் முஸ்லிம்கள் ஏறினால் அவனும் ஓர் முஸ்லிம் போல் நடித்து – பாவனை செய்து லாயிலாஹ இல்லல்லாஹ் என்றும், பிஸ்மில்லாஹ் என்றும் சொல்லி முஸ்லிம்களிடமிருந்து கூடுதலான கூலியை பெறுவது போன்றவனின் “ஈமான்” போன்றதாகும்.
அல்லாஹ் விசுவசிகளே என்றழைத்து விசுவாசம் கொள்ளுமாறு பணித்தது திருக்கலிமாவை உரிய முறைப்படி விளங்கியறியாமல் கூட்டத்துடன் சேர்ந்து “அல்லாஹு அக்பர்” என்று கூறியவர்களையும், நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்று சொன்னவர்களையுமே குறிக்கும்.
அவர்களிலும் குறிப்பாக அடிக்கடி திருக்கலிமாவின் விளக்கத்தையும், “வஹ்ததுல் வுஜூத்” ஞான விளக்கத்தையும் கேட்டுக் கொண்டு வாழ்கிறார்களே நமதூரவர்கள் இவர்களையே குறிக்கும். இவர்களை மட்டுமன்றி தாமும் திருக்கலிமாவின் தாற்பரியத்தை விளங்காமல் இருந்து கொண்டு அதை விளங்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அவ்விடங்களுக்குச் செல்வோரைப் பயமுறுத்தி அவர்களைத் தடுத்து நிறுத்தும் திருக்கலிமாவின் விரோதிகளையும் குறிக்கும்.
இத்தகைய நயவஞ்சகர்களுக்கு அல்லது பொறாமைக் காரர்களுக்கு இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஅறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் வழங்கிய அறிவுரை பின்வருமாறு,
لَا يَخْفَى اَنَّ اَصْلَ الْإِنْكَارِ مِنَ الْاَعْدَاءِ الْمُبْطِلِيْن اِنَّمَا يَنْشَأُ مِنَ الْحَسَدِ، وَلَوْ اَنَّ اُولَئِكَ الْمُنْكِرِيْنَ تَرَكُوا الْحَسَدَ وَسَلَكُوا طَرِيْقَ اَهْلِ اللهِ لَمْ يَظْهَرْ مِنْهُمْ إِنْكَارٌ وَلَا حَسَدٌ، وَازْدَادُوا عِلْمًا إِلَى عِلْمِهِمْ، وَلَكِنْ هَكَذَا كَانَ الْاَمْرُ،
(اليواقيت الجزء الأول ص – 14)
இறை ஞானத்தை – திருக்கலிமா தருகின்ற உண்மையான தத்துவத்தை மறுக்கும் எதிரிகள் வீணர்களேயாவர் என்பது அறிவுள்ளவர்களுக்கு விளங்காத ஒன்றல்ல. வீணர்கள் இதை எதிர்ப்பதற்கான பிரதான காரணம் பொறாமைதான். வேறொன்றுமில்லை. இவர்கள் பொறாமையை தூக்கியெறிந்து விட்டு ஸூபீ மகான்களின் வழியில் சீராக நடந்து செல்வார்களானால் இவர்களை விட்டும் பொறாமை தானாகப் போய்விடுவதுடன் மேலும் அதிக அறிவுகளும் அவர்களுக்கு கிடைத்து விடும் என்று கூறியுள்ளார்கள்.
அல் யவாகீத் – பாகம் – 02
பக்கம் – 14
ஆசிரியர் – இமாம் ஷஅறானீ
ஹதீதின் பொருள் – “இஸ்லாம் “ஙரீப்” ஆக ஆரம்பமானது. அது ஆரம்பமானது போல் “ஙரீப்” ஆகவே மீளும்” என்று கூறிய நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “தூபா லில் குغறபாயீ” “ஙரீப்”களுக்கு சுவர்க்கம் உண்டு என்றும் சுபச் செய்தி சொன்னார்கள்.
“கரீப்” غَرِيْبْ என்ற சொல்லுக்கு அறபுக் கல்லூரிகளின் தமிழில் சொல்வதாயின் “பரதேசி” என்று பொருள் சொல்வார்கள்.
“பரதேசி” என்ற சொல்லுக்கு ஊர் ஊராகச் சுற்றித் திரியும் பிச்சைக் காரன், துறவி, பிற நாட்டவன், திக்கற்றவன், ஆதரவற்றவன் என்ற பொருள்கள் உள்ளன. பிறதேசி என்ற சொல் பரதேசி என்று தோற்றம் பெற்றிருப்பதற்கும் சாத்தியமுண்டு.
பொதுவாக சொல்வதாயின் பிற நாட்டவன், பிற தேசத்தவன், ஆதரவற்றவன், கவனிப்பாரற்றவன் என்ற பொருள்களை உள்வாங்கிய ஒரு சொல் என்று கூறலாம்.
இவ்வடிப்படையில் இஸ்லாம் என்பது ஆதரவற்ற நிலையில் ஆரம்பமானது எனலாம். தாய், தந்தை இல்லாமலும், இருக்க இடமின்றியும், உறவினர்களின் உதவி உபகாரம் இல்லாத, அழுக்கான, கசங்கிய உடைகளுடன் ஊர் ஊராகச் சென்று யாசகம் செய்பவனைக் குறிக்கும் எனவும் சொல்லலாம்.
இச்சொல் மேலே சொன்ன அர்த்தங்களுக்கு பயன்படுத்தினாலும் கூட கிழிந்த உடைகளோடும், மூட்டை முடிச்சுக்களோடும், தலைவிரி கோலத்தோடும், அழுக்கான உடலோடும், உடைகளோடும், ஊர் ஊராய்ச் சுற்றி யாசகம் செய்பவர்களைக் குறிக்கும். அறபு நாடுகளிலும் இச் சொல் மேற்கண்ட அமைப்பில் உள்ளவர்களுக்கே பயன் படுத்தப் படுகிறது. துறவிக்கும் இச் சொல் பயன்படுத்தப்படுகிறது. நமது நாட்டைப் பொறுத்த வரை இத்தகையோருக்கு பகீர், மஸ்தான், மஜ்தூப் போன்ற சொற்களையும் பயன் படுத்துவார்கள். இதே மாதிரி “தர்வேஷ்” என்ற சொல்லும் பயன் படுத்தப்படுகிறது.
சுருக்கமென்னவெனில் இஸ்லாம் மார்க்கம் பரதேசிபோல் அநாதரவான நிலையில் , அணைப் பாரில்லாததாகவே ஆரம்பமானது. بَدَأَ الْإِسْلَامُ غَرِيْباً என்ற வசனம் இக்கருத்தையே தருகிறது. இதுவே எதார்த்தமும் உண்மையுமாகும். வரலாறு தெரிந்த எவரும் இதை மறுக்கமாட்டார்கள்.
ஆயினும் وَسَيَعُوْدُ كَمَا بَدَأَ غَرِيْباً அது பரதேசியாக ஆரம்பமானது போன்றே பின்னொரு காலத்தில் மீளும் என்ற வசனம் தான் எம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.
ஏனெனில் இஸ்லாம் விரல்விட்டு எண்ணும் வகையில் ஒரு சிலரின் ஆதரவோடு ஆரம்பமானதாயினும் நாளடைவில் அது வளர்ந்து இன்று பல கோடி உறுப்பினர்களைக் கொண்டு ஒளிர்கிறது அதோடு நாளுக்கு நாள் முஸ்லிம்கள் பெருகியே வருகிறார்கள்.
எனினும் நபி பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மேற்கண்ட வசனம் இஸ்லாம் எவ்வாறு வந்ததோ அவ்வாறே மீளும் என்ற வசனம் நாளடைவில் முஸ்லிம்கள் குறைந்து ஒரு காலத்தில் ஆரம்ப கால கட்டம் போல் மிகக் குறைவான ஒரு சிலரே இஸ்லாமில் இருப்பார்கள் என்று கூறுகிறது.
பெருமானாரின் தீர்க்கதரிசன பேச்சு நூறுவீதம் உண்மையாகும். அதெவ்வாறெனில் ஒரு காலம் வரும். அப்போது முஸ்லிம்கள் மற்ற மதத்தை சேர்ந்தவர்களை விட சனத் தொகையில் அதிகமாக இருக்கலாம் ஆயினும் அவர்களில் 90 வீதமானோர் பேரளவில் மட்டும்தான் முஸ்லிம்களாக இருப்பார்களே தவிர முஸ்லிமிடம் இருக்க வேண்டிய பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், மார்க்க அனுஷ்டானங்கள் எதுவுமே அவர்களிடம் இருக்காது. ஆயினும் சிலைகளை மட்டும் அவர்கள் வணங்க மாட்டார்கள். அவ்வளவுதான்.
அழகுக்கும், பணத்திற்கும், பதவிக்கும் அடிமையான முஸ்லிம்களில் சிலர் பிற மத பெண்களை இஸ்லாத்தில் இணைக்காமல் திருமணம் செய்து வாழ்கிறார்கள். இது ஹராம். தண்டனை மிகுந்த குற்றமாகும். பிற மத மனைவியை அவளின் வணக்க வழிபாட்டு தளங்களான பன்சலை, கோயில், ஷேர்ச் போன்ற இடங்களுக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்பவர்களும் உள்ளனர். அவர்கள் சிலைகளை வணங்காது போனாலும் அவ்வாறான ஒரு பெண்ணுடன் வாழ்வது இஸ்லாமின் பார்வையில் அது திருமணம் ஆகாது.
قال النبي صلى الله عليه وسلّم ”بَدَأَ الْإِسْلَامُ غَرِيْباً وَسَيَعُوْدُ كَمَا بَدَأَ غَرِيْباً ، فَطُوْبَى لِلْغُرَبَاءِ”
இஸ்லாம் பரதேசியாக – ஆதரவற்ற நிலையில் ஆரம்பமானது. அது ஆரம்பமானது போல் பரதேசியாகவே மீளும் என்று கூறிய நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் பரதேசிகளுக்கே சுபசோபனம் – அவர்களுக்கே சுவர்க்கம் என்று கூறி முடித்தார்;கள்.
இந்த நபீ மொழி தொடர்பாக முதலாவது பதிவில் غَرِيْب – “ஙரீப்” பரதேசியென்றால் யார் என்பது தொடர்பாக என்னால் முடிந்தவரை எழுதியுள்ளேன்.
இந்த ஹதீதின் வெளிப்படையான விளக்கம் என்னவெனில் ஆதரவற்ற நிலையில் ஆரம்பமான இஸ்லாம் அவ்வாறே மீளும் என்றால் அதன் இறுதி முடிவு அவ்வாறே இருக்கும் என்பதாகும். அதாவது ஆதரவற்ற நிலைக்கு அது திரும்பும் என்பதாகும்.
அவ்வாறாயின் உலக முடிவின் போது முஸ்லிம்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள் என்று கருத்து வரும்.
இன்று இஸ்லாம் பரவிக் கொண்டிருக்கின்ற வேகத்தைக் கவனித்தால் முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகின்றதேயன்றி குறைந்து கொண்டு போகவில்லை.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “வபாத்” இவ் உலகைப் பிரிந்த நேரம் சுமார் ஓர் இலட்சம் நபீ தோழர்கள் இருந்ததாக பல்வேறு ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. அவர்களில் அதிகமானோர் அறபு நாடுகளில் வாழ்ந்தவர்களோயாவர்.
ஓர் இலட்சம் என்பதை இரண்டு இலட்சம் என்று நாம் வைத்துக் கொண்டாலும் கூட முஸ்லிம்கள் இன்றுள்ள சனத்தொகை கணிப்பின் படி எத்தனை வீதம் அதிகமாகி உள்ளனர் என்பதை அறியும் போது வியப்பாக உள்ளது.
இலங்கையை ஒரு நாடு என்று பேசிக் கொண்டாலும் அது கடலால் சூழப்பட்ட ஒரு தீவுதான். தீவு என்பது நான்கு பக்கமும் நீர் சூழ்ந்த நிலப்பகுதியை குறிக்கும் ஓர் இடத்தின் பெயராகும். அங்கு உயிரினம் வாழ்ந்தாலும், வாழாதிருந்தாலும் அவ்விடம் “தீவு” என்றே அழைக்கப்படும். கடலில் இதுவரை கண்டு பிடிக்கப்படாத பல தீவுகள் உள்ளன.
இலங்கைத் தீவிலேயே முஸ்லிம்கள் 22 இலட்சம் பேர் வாழ்கிறார்களென்றால் உலகில் முஸ்லிம்களின் தொகை எத்தனை கோடியிருக்குமென்று அறிஞர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். சுமார் 160 கோடி முஸ்லிம்கள் என்று பலர் கூற நான் கேட்டுள்ளேன்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மேற்கண்ட ஹதீதின் படி நாள் செல்லச் செல்ல முஸ்லிம்களின் சனத் தொகை குறைந்து கொண்டே செல்ல வேண்டும். ஆனால் இன்று அவர்களின் அருள் மொழிக்கு மாறாக முஸ்லிம்களின் சனத் தொகை கூடிக் கொண்டே செல்கிறது.
இஸ்லாம் எவ்வாறு ஆரம்பமானதோ அவ்வாறே அது மீளும் என்றால் அவ்வாறே அது முடியும் என்பதாகும். அவ்வாறாயின் உலக முடிவின் போது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே முஸ்லிம்கள் இருப்பார்கள் என்று யூகிக்க வேண்டியுள்ளது.
இக் கருத்தை மேலே எழுதிய “ஹதீது” நிறுவுவதுடன் பின்வரும் நபீ மொழியும் நிறுவுகிறது.
عَنْ أَنَسٍ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللّهِ صلى الله عليه وسلم قَالَ: ‘لاَ تَقُومُ السَّاعةُ حَتَّى لاَ يُقَالَ فِي الأَرْضِ: الله، الله’. رواه مسلم،
عَنْ أَنَسٍ رضي الله عنه قال، قال رَسُولَ اللّهِ صلى الله عليه وسلم قَالَ: ‘لاَ تَقُومُ السَّاعةُ على أحدٍ يقول: الله، الله’.
மேற்கண்ட இரண்டு நபீ மொழிகளும் ஒரே கருத்தையே தருகின்றன.
இப்புவியில் அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லப்படாத நிலை ஏற்படும் வரை மறுமை நாள் உண்டாகாது என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் – 234 (148)
அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லும் ஒருவர் இருக்கும் வரை மறுமை உண்டாகாது என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
இவ்விரு நபீ மொழிகளின் சுருக்கம் பின்வருமாறு,
பரந்து விரிந்து காணப்படுகின்ற இப் பூமியில் – இந்த உலகில் – அல்லாஹ் என்று சொல்கின்ற ஒருவன் இருக்கும் வரை கியாமத் நாள் – மறுமை உண்டாகாது என்றால் அல்லாஹ் என்று சொல்லக்கூடிய ஒருவனாவது இல்லாத நிலை ஏற்பட்டால் மட்டும்தான் மறுமை உண்டாகும் என்பதே அருள் வாக்கின் அர்த்தமாகும்.
அவ்வாறான நிலை ஏற்படுவதற்கு சாத்தியமுண்டா என்று நாம் ஆய்வு செய்தால்
بَدَأَ الْإِسْلَامُ غَرِيْباً وَسَيَعُوْدُ كَمَا بَدَأَ غَرِيْباً، فَطُوْبَى لِلْغُرَبَاءِ
இஸ்லாம் ஆதரவற்ற பரதேசியாக ஆரம்பமானது போல் பின்னொரு காலத்தில் மீளும் – முடிவுறும் – என்ற நபீ மொழியின் படி மறுமை ஏற்படும் போது முஸ்லிம்களில் மிகக் குறைந்தவர்களே இருப்பார்கள் என்று விளங்குகிறது.
இந்த ஹதீதுக்கு உள்ரங்க அர்த்தமும் உண்டு. அதாவது மறுமை ஏற்படுகின்ற காலத்தில் முஸ்லிம்களின் சனத் தொகை ஏனைய மதத்தவர்களின் சனத் தொகையை விட அதிகமாக இருந்தாலும் கூட அவர்கள் பெயரிலும், உடையிலும் மட்டுமே முஸ்லிம்களாக இருப்பார்களேயன்றி எதார்த்தத்தில் முஸ்லிம்களாயிருக்க மாட்டார்கள்.
அவ்வாறாயின் அவர்கள் தொழமாட்டார்களா? நோன்பு நோற்க மாட்டார்களா? மார்க்க வழியில் நடக்க மாட்டார்களா? என்ற கேள்விகள் எழுகின்றதல்லவா? அவற்றுக்கான விடை என்ன?
இல்லை. அவர்கள் தோழுவார்கள், நோன்பு நோற்பார்கள், மார்க்க அனுஷ்டானங்களும் செய்வார்கள். ஹலால், ஹறாம் பேணி நடப்பார்கள். நன்மைகள் செய்வார்கள். ஆயினும் இறையியல், ஸூபிஸம் முதலான அறிவிலும் கொள்கையிலும் இஸ்லாமிய “தவ்ஹீத்” ஏகத்துவக் கொள்கை தெரியாதவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் கூழ் முட்டை போலும், ஆனை சாப்பிட்ட விழாங்கனி போலும், சரக்கில்லா கப்பல் போலும், சத்தில்லா உணவு போலும் பார்ப்பதற்கு மட்டும் முஸ்லிம்கள், முஃமின்கள் போலும் இருப்பார்கள்.
அவர்கள் கொள்கையில் “முஃமின்”கள் அல்லர். அவர்களை “முஃமின்”கள் என்று நாம் சொல்வதாயின் அவர்கள் “வஹ்ததுல் வுஜுத்” ஞானத்தை நூறு வீதம் விளங்காதவர்களாயினும் அதை ஏற்றுக் கொள்பவர்களாகவேனும் இருக்க வேண்டும். “இன்கார்” மறுப்பவர்களாக இருத்தல் கூடாது.
قال الإمام البخاري في كتاب خلق أفعال العبادِ ص ٦٧، ويذكرون عن عليّ رضي الله عنه : يَأْتِيْ على النّاس زَمانٌ، لا يَبْقَى من الإسلام إلّا اسمُه، ولا يَبْقَى من القُرْآنِ إلّا رَسْمُهُ،
இமாம் புஹாரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் خَلْقُ أَفْعَالِ الْعِبَادِ மனிதர்களின் செயல்களைப் படைத்தல் என்ற பாடம் 67ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
மனிதர்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தில் “இஸ்லாம்” என்ற பெயர்தான் இருக்கும். இதே போல் திருக்குர்ஆன் – முஸ்ஹபில் எழுத்து மட்டுமே இருக்கும் என்று நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம் – خَلْقُ أَفْعَالِ الْعِبَادِ
பக்கம் – 67
ஆசிரியர் – இமாம் புஹாரீ
وفي شُعب الإيمان للإمام البَيهَقي (3-317)عن عليّ بن أبي طالب رضي الله عنه قال ، قال رسول الله صلّى الله عليه وسلّم يُوْشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ، لَا يَبْقَى مِنَ الْإِسْلَامِ إِلَّا اسْمُهُ، وَلَا يَبْقَى مِنَ الْقُرْآنِ إِلَّا رَسْمُهُ، مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَهِيَ خَرَابٌ مِنَ الْهُدَى، عُلَمَائُهُمْ شَرُّ مَنْ تَحْتَ اَدِيْمِ السَّمَاءِ، وَمِنْ عِنْدِهِمْ تَخْرُجُ الْفِتْنَةُ وَفِيْهِمْ تَعُوْدُ،
ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்னதாக அறிவிக்கிறார்கள். மனிதர்களுக்கு ஒரு காலம் வரலாம். அக்காலம் வந்தால் இஸ்லாம் என்ற பெயர் மட்டுமே இருக்கும். இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களாக இருக்கமாட்டார்கள். திருக்குர்ஆனில் எழுத்து மட்டுமே இருக்கும். முஸ்லிம்கள் அதன்படி செயல்படமாட்டார்கள். அவர்களின் பள்ளிவாயல்கள் பரிபாலிக்கப்படும். ஆயினும் அவை நல்லமல்கள், நேர்வழி என்பவற்றை விட்டும் பாழாய்ப் போயிருக்கும். அக்காலத்து உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள் – வானத்தின் கீழ் வாழ்பவர்களில் மிகக் கொடியவர்களாயிருப்பர். குழப்பம் என்பது அவர்களிடமிருந்தே ஏற்படும். அவர்கள் பக்கமே அது மீளும் என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம் – ஷுஅபுல் ஈமான்
பாகம் – 03
பக்கம் – 317
ஆசிரியர் – பைஹகீ
இந்த நபீ மொழியின் சுருக்கம். ஒரு காலம் வரும். அக்காலத்தில் முஸ்லிம்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்களாயிருப்பார்கள். அதாவது முஸ்லிம்களின் பெயரில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆயினும் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானதாகவே இருக்கும். அவர்களின் பெயர்கள் மட்டுமே அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்கான அடையாளமாக இருக்கும்.
இலங்கையில் சில ஊர்கள் உள்ளன. அங்கு முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்களை முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுகின்ற, இனம் காட்டுகின்ற ஒரேயொரு அம்சம் அவர்களின் பெயர்கள் மட்டுமேயாகும். அதோடு அவர்களின் தாயை அம்மா என்றழைக்காமல் “உம்மா” என்று அவர்கள் அழைப்பதும் இன்னொரு அடையாளமாகும். இவை தவிர வேறெந்த அடையாளங்கள் கொண்டும் அவர்களை முஸ்லிம்கள் என்று இனம் கண்டு கொள்ள முடியாது.
பெருமானார் குறிப்பிட்ட அக்காலம் எப்போது வருமென்று எவரும் எதிர்பார்க்கத் தேவையில்லை. அது எப்போதோ வந்து விட்டது. அந்தக் காலத்தில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
குறித்த அந்தக் காலத்தில் பள்ளிவாயல்களை அழகாகவும், கவர்ச்சியாகவும் கட்டுவார்கள். ஆனால் அப்பள்ளிகளில் தொழுகை, மற்றும் மத அனுஷ்டானங்கள் ஒன்றுமே நடக்காது.
வஹ்ஹாபிஸம் இலங்கையில் பரவுமுன் பள்ளிவாயல்களில் வணக்க வழிபாடுகள், பயான் மஜ்லிஸ்கள், திக்ர் மஜ்லிஸ்கள், மௌலித் மஜ்லிஸ்கள் என்று பல நிகழ்வுகள் நடைபெற்றன. பள்ளிவாயல்கள் யாவும் வழிபாடுகளால் ஜொலித்துக் கொண்டே இருந்தன.
வந்ததும் வந்தார்கள் வஹ்ஹாபிகள். பள்ளிவாயல்கள் இஷாத் தொழுகையுடன் மூடப்பட்டு விடுகின்றன. எந்த ஒரு மஜ்லிஸும் நடைபெறுவதில்லை. பள்ளிவாயல்கள் இரவு எட்டு மணியுடன் இருள் மயமாகிவிடும். இந்நிலை வஹ்ஹாபிகள் வந்த பிறகுதான்.
இஸ்லாம் பரதேசியாக ஆரம்பமானது. அது பின்னொரு காலத்தில் பரதேசியாகவே மீளும் என்று கூறிய பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவ்வாறான ஒரு காலத்தில் வாழ்கின்ற பரதேசிகளுக்கு சுபசோபனம் உண்டாவதாக! வாழ்த்துக்கள் உண்டாவதாக! என்று அவர்களை வாழ்த்தினார்கள் பெருமானார் அவர்கள்.
“தூபா” என்றால் சுவர்க்கம் என்றும் பொருள் கொள்ளலாம், சுபச் செய்தி என்றும் பொருள் கொள்ளலாம்.
பெருமானார் குறித்துக் கூறிய அக்காலத்தில் ஒருவன் மார்க்கத்தில் கொள்கைவாதியாக இருப்பதும், தன்னை இஸ்லாமியனாகக் காட்டிக் கொள்வதும் உள்ளங்கையில் நெருப்புத் தணலை வைத்திருப்பது போன்றதாகும்.
ந}ன் என்னைப் படைத்த இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். இஸ்லாமிய “அகீதா” கொள்கை என்பது ஸூபீ மகான்களும், ஆரிபீன் – இறைஞானிகளும் சொல்கின்ற “வஹ்ததுல் வுஜுத்” மெய்ப்பொருள் ஒன்றே ஒன்றுதான், அதுவே “ஆலம்” உலகமாய் தோற்றுகிறது என்பதை அறிவதே இறையறிவும், ஈமானும் ஆகும். இதற்கு மாறானவை யாவும் வழிகேடுதான். அல்லாஹ் மிக அறிந்தவன்.