أَلْهَاكُمُ التَّكَاثُرُ، حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ،
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
நீங்கள் ஒன்றைப் பலதாய்க் காண்பது உங்களை வீணர்களாக்கிவிட்டது. நீங்கள் மையவாடிகளை சந்திக்கும் வரை. (திருமறை 102- 1,2 )
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தை கறுப்பு மூக்குக் கண்ணாடி போட்டுப் பார்ப்பவர்களும் உள்ளனர். கலங்காத, தெளிவான கண்ணாடி போட்டுப் பார்ப்பவர்களும் உள்ளனர். இவ்வாறு உலமாஉகளில் இரு சாரார் உள்ளனர்.
முந்தின சாரார் علماء الظاهر வெளிரங்க உலமாஉகள் என்றும், பிந்தின சாரார் علماء الباطن உள்ரங்க உலமாஉகள் என்றும் இனங்காணப்படுவர்.
வெளிரங்க உலமாஉகள் என்போர் வாழை இலையைச் சாப்பிடும் புழுக்கள் போன்றவர்கள் என்றும், உள்ரங்க உலமாஉகள் என்போர் வாழைப் பூவில் தேன் குடிக்கும் வண்டுகள் போன்றவர்கள் என்றும் தத்துவ ஞானிகள் கூறுகின்றனர். அவர்களின் இக்கூற்று சத்துள்ள தத்துவமேதான்.
மேற்கண்ட திரு வசனத்தை ஆய்வு செய்யும் புழுக்கள் குறித்த திரு வசனத்திற்கு ஒரு விளக்கமும், வண்டுகள் அவர்கள் கூறும் விளக்கத்திற்கு மாறான இன்னொரு விளக்கமும் கூறுகின்றனர்.
புழுக்கள் கூறும் விளக்கம் இனிப்பு, ருசியற்றதாகவும், வண்டுகள் கூறும் விளக்கம் தரமான இனிப்பு ருசியுள்ளதாயும் இருப்பதை சுவைத்தவர்கள் அறிவர்.
இங்கு குட்டிக்கதையொன்று சொல்கிறேன். சிந்தித்து தெளிவு பெறுங்கள்.
ஒரு புழு வாழை மரத்தின் இலையை சப்பிக் கொண்டிருந்தது. அங்கு வந்த வண்டு ஒன்று பூவில் அமர்ந்து தேன் சுவைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் வண்டிடம் நீ என்ன செய்கிறாய் என்று புழு கேட்டது? நான் வாழைப் பூவில் தேன் சுவைக்கிறேன் என்றது வண்டு. புழுவிடம் நீ என்ன செய்கிறாய் என்று கேட்டது வண்டு. நான் இலையைச் சப்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீ சொல்வது எனக்குப் புரியவில்லையே! ஒரே மரத்தில் இரு வகைச் சுவை எவ்வாறு வரும்? என்று புழு வண்டிடம் கேட்டது. நீ அதைப் புரிவதாயின் பூவில் அமர்ந்து தேன் குடித்துப் பார் என்றது வண்டு. என்னால் பறக்கவும் முடியவில்லை, தேன் குடிக்கவும் முடியவில்லையே! என்றது புழு. நீ என்னானால், அல்லது நீ நானானால், அல்லது நீ வண்டானால் தேன் குடிக்க முடியும். நீ நீயாக இருக்கும் வரை பூவில் அமரவுமாட்டாய். தேன் குடிக்கவுமாட்டாய் என்று சொன்னது வண்டு.
நான் உன்னாவதாயின் நான் என்ன செய்ய வேண்டும் என்று புழு கேட்டது. நீ என்னிடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும். உனது விருப்பம் எனது விருப்பமாக ஆக வேண்டும். உனது விருப்பத்தின்படி நீ எதையும் செய்யக் கூடாது. நான் கீறும் கோட்டை நீ தாண்டக் கூடாது. பொதுவாக உனக்கென்று ஒரு விருப்பமோ, நாட்டமோ இருக்கக் கூடாது என்று பல நிபந்தனைகள் கூறியது வண்டு. தேன் சுவைக்க வேண்டுமென்ற விருப்பத்தினால் அனைத்து நிபந்தனைகளுக்கும் பணிந்தது புழு.
உடனே அந்த வண்டு அந்தப் புழுவை வாயில் கவ்விக் கொண்டு தனது கூண்டுக்குள் வந்தது. நான் இங்கு வண்டு என்று கூறிப்பிடுவது தேனீயை – தேன் பூச்சைத்தான். தேன் கூடு எவ்வாறிருக்குமென்று சொல்லத் தேவையில்லை.
அந்தக் கூண்டில் கண் வடிவில் பல அறைகள் இருந்தன. அவ் அறைகள் அனைத்திலும் புழுக்களே இருந்தன. தனக்கும் ஓர் அறை கிடைத்தது. அதில் அது அமர்ந்து கொண்டது.
அதனிடம் வண்டு வந்து நீ இங்கு நாற்பது நாட்கள் இருக்க வேண்டும். தினமும் உன்னிடம் வந்து மந்திரம் சொல்லி உன் மீது ஊதுவேன். அதாவது நீ என் போன்ற வண்டாவதற்கு மருந்து செய்வேன். நாற்பதாம் நாள் நீ தோற்றத்திலும், தன்மைகளிலும் என்போல் முழு வண்டாகிவிடுவாய் என்று வண்டு உபதேசம் செய்து தொடர்ந்து 39 நாட்களும் அதைப் பரிபாலித்து வந்தது.
நாற்பதாம் நாள் வந்தது. வண்டு கூண்டுக்கு வந்து புழுவிடம் போவோமா என்று கேட்டது. குருமகானே! போவோமா என்று ஏன் கேட்கிறாய். பறப்போமா என்று கேள் என்றது புழு.
பல நாட்கள் பறக்கத் தெரியாமலிருந்த புழுவுக்கு சிறகடித்துப் பறக்கும் தகுதி ஏற்பட்டது. இருவரும் ஒரு வாழை மரத்தை குறி வைத்துப் பறக்கலாயின.
வழமையாக வாழை இலையை சப்பி வாழ்ந்த புழு வண்டாக மாறிய பின் அதற்கு வாழையிலையில் அமர்ந்து அதைச் சப்புவதற்கு விருப்பமே வரவில்லை. மாறாக பூவில் அமர்ந்து தேன் சுவைக்கத் தொடங்கியது.
தாய் வண்டு அதை நோக்கி தேனின் இன்பம் எப்படியென்று கேட்டது. இன்பமா ஒன்றா? என்ன சொல்வேன்? என் காலம் வீணாகிவிட்டது என்று வேதனையுடன் பதில் கூறியது நாற்பது நாள் பயிற்சியின் பின் வண்டாக மாறிய புழு.
வண்டாக மாறுமுன் புழுவாக இருந்த காலத்தில் தேன் குடிக்கத் தெரியாமலிருந்த புழு போன்றவர்களே வெளிரங்க உலமாஉகளாவர்.
நான் தலைப்பில் கூறிய திரு மறை வசனமான أَلْهَاكُمُ التَّكَاثُرُ، حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ، என்ற வசனத்திற்கு வெளிரங்கமான பொருள் சொல்பவர்கள்தான் வெளிரங்கமான உலமாஉகளாவர். இவர்கள் இலையைச் சாப்பிடும் புழு போன்றவர்களே!
வெளிரங்க உலமாஉகள் குறித்த வசனத்திற்கு பொருளாதாரத்தை அதிகம் தேடுவது அவர்களை அல்லாஹ்வை விட்டும் வேறு திசைக்கு திருப்பிவிட்டது. அவர்கள் மரணித்து மண்ணறையை சந்திக்கும் வரை என்று பொருள் கூறுவார்கள்.
உள்ரங்க உலமாஉகள் அதாவது ஸூபீகளும், இறைஞானிகளும் குறித்த திரு வசனத்திற்கு, நீங்கள் ஒன்றைப் பலதாக காண்பது உங்களை வீணாக்கிவிட்டது. நீங்கள் “மக்பறா” அடக்கத்தலங்கள் சென்று அங்கு அடக்கம் பெற்றுள்ளவர்களை “ஸியாறத்” – தரிசிக்கும் வரை என்று பொருள் கூறுவார்கள்.
இவ்விரு சாராரின் கூற்றிலும் “உலமாஉல் பாதின்” உள்ரங்க அறிவுள்ளவர்களின் கூற்றே ஆன்மீகத்தை தட்டியெழுப்பும் கூற்றாக உள்ளது. இரண்டாமவர்களின் கூற்று உப்பில்லா உணவு போன்றுள்ளது.
எனினும் நான் அதை முற்றாக மறுக்கவில்லை. ஏனெனில் சிறு பிள்ளைகள் நடை பயில நடை கரத்தை அவசியம்தான்.
எனவே, வெளிரங்க உலமாஉகளின் கருத்தை ஏற்றுக் கொண்டு உள்ரங்க உலமாஉகளின் கருத்தை மட்டும் சற்று ஆராய்வோம்.
ஒரேயொரு பொருளைப் பல பொருட்களாகக் காண்பதும், அறிவதும் அறியாமை மட்டுமன்றி அது பொய்யும், ஏமாறுதலுமாகும்.
அல்லாஹ்வின் விடயத்தில் திருக்குர்ஆனும், நபீ வாக்குகளும், இறைஞானிகள், மற்றும் ஸூபீ மகான்களின் கருத்தும் ஒன்றுதான். அதாவது அல்லாஹ் எனும் மெய்ப் பொருள் தவிர வேறெப்பொருளும் இல்லை என்பதேயாகும். ஒன்றை இரண்டாகவோ, அல்லது பலதாகவோ காண்பதும், அறிதலும் “வஹ்ம்” என்ற மருட்சியும், பேதமையுமேயாகும். அது மட்டுமன்றி அது பொய்யுமாகும். பொய் என்றால் என்ன? இல்லாத ஒன்றை இருப்பதாக அறிதலும், நம்புவதும், சொல்வதுமேதான்.
இந்த வகையில் ஒன்றைப் பலதாக அறிபவனும், காண்பவனும், பேசுபவனும் பொய்யை மெய்யென்று நம்பின முழு முட்டாளேயன்றி அவனைக் கால் முட்டாள், அரை முட்டாள் என்று கூடச் சொல்ல முடியாது.
உலகில் பேசுகின்ற பேச்சாளர்களும், வெளிரங்க உலமாஉகளும் அல்லாஹ் ஒருவன் என்று நம்ப வேண்டுமென்று பேசுகிறார்களேயன்றி அவன் ஏகனா? அல்லது எண்ணிக்கையில் ஒருவனா? அல்லது எவ்வாறானவன் என்று சொல்லிக் கொடுப்பதாக அறியவில்லை.
அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று அறிவது மட்டுமே “ஈமான்” விசுவாசமென்றால் நாத்திகர்கள் தவிர உலகில் வாழ்கின்ற அனைத்து மத வாதிகளும் “ஈமான்” விசுவாசமுள்ளவர்கள் என்றே கொள்ள வேண்டும்.
அவ்வாறு கொள்வதாயின் பௌத்த மத வாதி பிரேமதாசா என்பவனையும், இந்து மத வாதி ராமச் சந்திரனையும், கிறித்துவ மத வாதி பெர்ணாந்துவையும் “முஃமின்” விசுவாசிகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களேயாவர். ஆத்திகர்களேயாவர். நாத்திகர்கள் அல்லர்.
எனவே, உள்ளது ஒன்று மற்றது அன்று என்ற குத்புமார்களின் தத்துவத்தின்படி அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்றும், அவன் தவிர வேறொன்றுமில்லை என்றும், படைப்புகளாக நமது கண்களுக்குத் தோற்றுவது அல்லாஹ்வின் “தஜல்லியாத்” வெளிப்பாடுகள் – அவனின் مظاهر பாத்திரங்கள் என்றும் அறிந்து செயல்படுவோம்.
وَفِى كُلِّ شَيْئٍ لَهُ آيَةٌ – تَدُلُّ عَلَى أَنَّهُ وَاحِدٌ
ஒவ்வொரு வஸ்த்தும் நான் அவன்தான் என்று “திக்ர்” செய்வதுடன் நான் அவனுக்கு வேறானவனுமல்ல, அவன் எனக்கு வேறானவனுமல்ல என்று கூறிக் கொண்டே இருக்கின்றது. நமக்கு செவிப்புலன் சரியாக இருந்தால் அதேபோல் பார்வைப்புலனும் சரியாக இருந்தால் எதார்த்தம் புரியும். இரண்டும் நமதில்லையே! என்ன செய்வது?