தொகுப்பு: ஞானபிதா, ஷெய்குனா மௌலானா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
அல்லாஹ் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். இவ்வசனம் பழமொழி போல் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் முஸ்லிம்களின் நாவில் நடமாடிய ஒரு வசனமாகும். உலமாஉகளும் சொல்லி வந்துள்ளார்கள். ஜுஹலாஉகளும் சொல்லி வந்துள்ளார்கள். எவரும் இதைத் தடுக்கவுமில்லை. இதிலுள்ள பாரிய பிழையை சுட்டிக் காட்டவுமில்லை. கூட்டத்தோடு கோவிந்தா சொல்வது போலும், நண்பர்களுடன் சேர்ந்து “நஹ்ரே தக்பீர்” அல்லது “நாறே தக்பீர்” சொல்வது போலும் அனைவரும் சொல்லியே வந்துள்ளார்கள்.
1979ம் ஆண்டு காத்தான்குடி மார்க்கட் சதுக்கத்தில் நடைபெற்ற மீலாத் விழாவில் “எல்லாமவனே” என்று நான் கூறிய பின் இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற கோஷம் இல்லாமற் போய்விட்டது. இதற்குப் பிரதான காரணம் குறித்த இவ்வசனம் பிழை என்று நானும், எனது மௌலவீமார்களும் பகிரங்கமாகப் பேசியும், எழுதியும் வந்ததேயாகும். அன்று முதல் உலமாஉகளும், பொது மக்களும் அவ்வாறு சொல்வதை நிறுத்திவிட்டார்கள். நீண்ட காலத்தின் பிறகுதான் ஆலிம்களில் பலருக்கு ஞானம் பிறந்தது. காலம் கடந்த பிறகாவது ஹக்கு வெளியானது மனதுக்கு நிம்மதிதான். அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற வசனம் “குப்ர்” என்ற நிராகரிப்பை ஏற்படுத்திவிடும் என்பதைப் புரியாமல் பல வருடங்களாக சொல்லி வந்த அனைவரும் அவ்வாறு சொல்வதை நிறுத்திக் கொண்டார்களாயினும் அவ்வாறு சொல்லி வந்ததால் ஏற்பட்ட மத மாற்றத்திற்காக எப்போது திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாம் மார்க்கத்தில் அவர்கள் இணைந்தார்கள் என்று பொது மக்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கின்றார்கள். இதுவரை உலமாஉகள் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
தலைப்பிற்குரிய விளக்கம்.
அல்லாஹ் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற வசனம் எந்த வகையில் பிழையாகும் என்பதை ஆய்வு செய்து பார்ப்போம்.
“ஹுலூல்” என்பது ஒரு கொள்கை. “இத்திஹாத்” என்பது இன்னொரு கொள்கை. இவ்விரு கொள்கைகளும் இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கு முரண்பட்டதாகும்.
“ஹுலூல்” என்றால் இறங்குதல் என்றும், “இத்திஹாத்” என்றால் கலத்தல், அல்லது இரு பொருள் ஒன்றாதல் என்றும் கருத்து வரும்.
“ஹுலூல்” என்ற சொல் حلَّ ஹல்ல என்ற சொல்லடியில் உள்ளது. அதாவது ஒரு வஸ்த்து இன்னொரு வஸ்த்தில் இறங்குதல் போன்று. உதாரணமாக حَلَّ الْمَاءُ فِى الْإِنَاءِ நீர் பாத்திரத்தில் இறங்கியது என்பது போன்று.
இதேபோல் எத்தனை உதாரணங்கள் தேவையானாலும் எடுத்து ஆய்வு செய்து பார்க்கலாம். இப்போது எழுதிய இவ்வுதாரணத்தில் இரண்டு பொருட்கள் உள்ளன. ஒன்று நீர், மற்றது பாத்திரம். இவ் உதாரணம் “ஹுலூல்” கொள்கைக்கு உதாரணமாகும்.
இவ்வுதாரணத்தில் மேலே கூறியது போல் இரண்டு பொருட்கள் உள்ளன. ஒன்று நீர், மற்றது பாத்திரம். நீர் “ஹால்லு” இறங்கியதென்றும், பாத்திரம் “மஹல்லு” இறங்கிய இடம் என்றும் சொல்லப்படும்.
நான் பேசிவருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை மேற்கண்ட வழிகெட்ட இரண்டு கொள்கைளிலும் சேராது. இது இவ்விரு கொள்கையை விட்டும் பரிசுத்தமானதாகும். “ஹுலூல்”, “இத்திஹாத்” கொள்கைக்கு இரண்டு பொருட்கள் தேவைப்படும். “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு ஒருபோதும் இரு பொருட்கள் தேவைப்படாது.
“ஹுலூல்” கொள்கைக்கு ஓர் உதாரணம் மேலே எழுதியுள்ளேன். இவ்வுதாரணத்தில் அல்லாஹ்வை நீராகவும், பாத்திரத்தை படைப்பாகவும் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அதாவது நீர் பாத்திரத்தில் இறங்குவது போல் அல்லாஹ் படைப்பில் இறங்குகிறான் என்று நம்பினால் அல்லது விளங்கினால் அது “ஹுலூல்” கொள்கையாகிவிடும். அல்லாஹ் இவ்வாறுதான் படைப்பில் இறங்குகிறான் என்று விளங்குதல் “குப்ர்” நிராகரிப்பாகிவிடும் என்று இஸ்லாமிய “அகீதா” கூறுகிறது. “அகீதா”வின் இமாம்களும் கூறுகிறார்கள்.
இப்போது “ஹுலூல்” கொள்கை என்றால் என்ன என்ற விபரம் விளங்கியிருக்கும் என்று நான் நம்புகிறேன்.
“இத்திஹாத்” கொள்கை என்றால் ஒரு வஸ்த்து இன்னொரு வஸ்த்தோடு கலந்து இரண்டும் ஒன்றாதல் போன்று.
உதாரணமாக நீரும், சீனியும் போன்று. நீரில் சீனி கரைந்து இரண்டும் ஒன்றாதல் போன்று. இவ்வாறுதான் அல்லாஹ் படைப்போடு கலந்து ஒன்றாகியுள்ளான் என்று நம்புதல் “குப்ர்” என்ற நிராகரிப்பாகிவிடும்.
மிகச் சுருக்கமாக “ஹுலூல்”, “இத்திஹாத்” எனும் இரு கொள்கைகளும் பிழை என்றும், “குப்ர்” என்ற நிராகரிப்பை ஏற்படுத்தும் என்றும் எழுதினேன். “ஹுலூல்” அடிப்படையில் அல்லாஹ் படைப்பில் இறங்குகிறான் என்று நம்புவதும், “இத்திஹாத்” அடிப்படையில் அல்லாஹ் படைப்போடு கலந்து ஒன்றாகிவிட்டான் என்று நம்புவதும் பிழையான நம்பிக்கையாகும். இவ்வாறு நம்பினவன் “ஷரீஆ”வின் பார்வையிலும், “தரீகா”வின் பார்வையிலும், மற்றும் “ஹகீகா”, “மஃரிபா”வின் பார்வையிலும் “காபிர்” என்பது இஸ்லாமிய சட்டமாகும்.
இதுவரை எழுதிய விளக்கத்தைப் புரிந்து கொண்ட ஒருவன் “இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று நம்புதல் சரியானதா? பிழையானதா? என்பதை தெளிவாக அறிந்திருப்பான் என்பது எனது நம்பிக்கை.
“ஹுலூல்” என்று சொல்வதற்கும், “இத்திஹாத்” என்று சொல்வதற்கும் இரண்டு வஸ்த்துக்கள் தேவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். “ஹுலூல்” என்பதற்கு நீர், பாத்திரம் இரண்டும் தேவைப்பட்டன. இதேபோல் “இத்திஹாத்” என்பதற்கும் நீரும், சீனியும் தேவைப்பட்டன.
அல்லாஹ் படைப்பில் இறங்குவதற்கும், அவன் படைப்போடு கலந்துவிடுவதற்கும் இரண்டு பொருட்கள் தேவைதான். ஒன்று அல்லாஹ். மற்றது படைப்பு. ஒரேயொரு பொருளை வைத்துக் கொண்டு “ஹுலூல் – இத்திஹாத்” பேசவே முடியாது. ஏனெனில் இறங்குதல் என்பதற்கும், கலத்தல் என்பதற்கும் இரண்டு பொருட்கள் அவசியம் என்பது தெரிந்த விடயமே!
எனவே, இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பது முற்றிலும் பிழையானதாகும். ஏனெனில் இவ்வாறு நம்புவதற்கு இரண்டு பொருட்கள் தேவையாகின்றன. அவை அல்லாஹ் ஒன்று. தூண் ஒன்று. அல்லாஹ் ஒன்று துரும்பு ஒன்று. ஆகையால் அல்லாஹ் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று நம்புதல் பிழையான நம்பிக்கையாகிவிடும்.
தூணும், துரும்பும் உதாரணத்திற்காக கூறப்பட்டவையாகும். இவ்வாறுதான் இறைவன் மனிதனில் இறங்குகிறான், மனிதனுடன் கலந்து ஒன்றாகிவிடுகிறான் என்றும் நம்புவதும், இறைவன் பொதுவாக படைப்பில் இறங்குகிறான், படைப்போடு கலந்து ஒன்றாகிவிடுகிறான் என்று நம்புவதுமாகும். ஆகையால் இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சொல்வதும், நம்புவதும் பிழையானதாகும். இவ்வாறு நம்புதல் “ஈமான்” விசுவாசமாகாது.
இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் 90 வீதமானோர் அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று மட்டும்தான் நம்பியுள்ளார்களே தவிர அவன் எப்படி உள்ளான்? எங்கே உள்ளான்? என்ற எந்தவொரு விபரமும் தெரியாத நிலையில்தான் அவ்வாறு நம்பியுள்ளார்கள்.
ஏனெனில் இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸம் தெரியாதவர்களும், “அகீதா” கொள்கைக் கோட்பாடு தெரியாதவர்களுமே அதிகமாக உள்ளனர். இறையியலோடு தொடர்புள்ளவர்கள் அரிதிலுமரிது.
உலமாஉகள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், ஸூபீகள் முதலானோர் மட்டுமே ஓரளவேனும் இறையியலோடு தொடர்புள்ளவர்களாக இருப்பதை நாம் காண்கிறோம்.
ஒருவனை “முஃமின்” விசுவாசி என்று சொல்வதற்கு ஆகக் குறைந்த பட்ச நிபந்தனை அவன் ஆறு விடயங்களை நம்ப வேண்டும். அவை அல்லாஹ்வையும், மலக்குகளையும், வேதங்களையும், றஸூல்மார்களையும், மறுமை நாளையும், “களா கத்ர்” நன்மை, தீமை என்பன அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்றும் நம்ப வேண்டும். அதோடு அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன “ஸிபாத்” தன்மைகள் இருபது என்றும், “முஸ்தஹீல்” ஆன தன்மைகள் இருபது என்றும், “ஜாயிஸ்” ஆன தன்மை ஒன்று என்றும் நம்ப வேண்டும். இவற்றில் ஒவ்வொன்றையும் விபரமாகவும் அறிந்து நம்ப வேண்டும்.
இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் உலமாஉகளையும், மார்க்கக் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள், மற்றும் மார்க்க அறிவோடு தொடர்புள்ளவர்களையும் தவிர ஏனையோரை “முஃமின்” விசுவாசிகளென்று சொல்வதில் எனக்கு ஐம்பது வீதம் உடன்பாடில்லை.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!
இதுவரை நான் கூறிய விபரங்கள் அல்லாஹ் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பது “ஹுலூல், இத்திஹாத்” கொள்கைக்கு இடம்பாடானதாயிருப்பதால் அவ்வாறு சொல்வது பிழை என்பதே எனது கருத்தாகும். ஆயினும் அல்லாஹ் தூணாயுமிருப்பான், துரும்பாயுமிருப்பான் என்பது “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை உணர்த்தும் வசனமாயிருப்பதால் இவ்வாறு சொல்வதே சரியானதென்பதும் எனது கருத்தாகும்.
“ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் சரியென்பதற்குமான விபரங்களை அடுத்த தொடரில் பதிவு செய்வேன். இன்ஷா அல்லாஹ்.