தொகுப்பு: ஞானபிதா, ஷெய்குனா மௌலானா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
சுத்தம், சுகாதாரம் இரண்டும் பேணப்பட்டால் நோய்கள் அணுகாது. உடல் சுத்தம், உடைச் சுத்தம் இரண்டும் பேணப்பட வேண்டும்.
சுத்தம் சுகாதாரம் இரண்டுக்கும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்திருப்பதுபோல் வேறெந்த சமயமும் கொடுத்துள்ளதாக நான் அறியவில்லை.
இறைவனை வணங்குவதற்கு சுத்தம் அவசியம். சுத்தமின்றேல் வணக்கம் நிறைவேறாதென்று சொன்ன மார்க்கம் நான் அறிந்த வரை இஸ்லாம் மட்டுமே!
“வுழூ” என்ற வெளிச்சுத்தம் ஐவேளைத் தொழுகைகளுக்கும் அவசியமாகிறது. “வுழூ” என்ற சுத்தம் அதிசயமான ஒரு அமைப்பைக் கொண்டதாகும். இஸ்லாம் கூறிய அமைப்பில் அச் சுத்தம் செய்யாத போது வணக்கம் நிறைவேறாதென்றால் சுத்தத்திற்கு இஸ்லாம் கொடுத்துள்ள முக்கியத்துவம் எத்தகையதென்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவன் தலை உச்சி முதல் உள்ளங் கால் வரை எத்தனை வகையான “சோப்”புகள் பாவித்துக் குளித்தாலும், உடலில் ஒரு மண்ணளவு கூட விடுபடாமல் முழுவுடலும் பூரணமாக நனையும் வரை குளித்தாலும் கூட அது தொழுகைக்கான சுத்தமாகாது. இதன் மூலம் “வுழூ” என்ற வெளிச்சுத்தத்தின் நோக்கம் உடலை முழுமையாக நனைப்பதோ, அழுக்கை, அசுத்தத்தை நீக்குவதோ அல்ல என்பது புரிகிறது.
ஆகையால் “வுழூ” என்ற சுத்தத்தின் நோக்கம் வேறு என்பதும், அது ஆன்மிகத்துடன் தொடர்புள்ளதென்றும் தெளிவாகிறது.
“வுழூ” என்ற சுத்தத்திற்கு மனிதனின் உடலில் கழுவப்பட வேண்டிய உறுப்புகள் குறிப்பிட்டவைதான். அவை முகம், முழங்கை உட்பட இரு கைகள், தலையில் அல்லது தலை முடியிற் சிலதை தடவுதல், கரண்டை உட்பட இரு கால்கள் என்பவையாகும். இவற்றைக் கூறப்பட்ட வரிசையில் செய்தல்.
ஒருவன் கண்ணால் பாவம் செய்யலாம், கையால் பாவம் செய்யலாம், சிந்தனையால் பாவம் செய்யலாம், காலால் பாவம் செய்யலாம். இவ் உறுப்புக்களைக் கழுவும் போது அவற்றால் செய்த பாவங்கள் அழிந்து விடுகின்றன.
முகம் கழுவுவதால் முகத்திலுள்ள உறுப்புக்களான கண்களால் செய்த பாவங்களும், வாயால் செய்த பாவங்களும், மூக்கால் செய்த பாவங்களும் கழுவப்படுகின்றன. தலையில் அல்லது முடியில் சில பகுதிகளைக் கழுவுவதால் சிந்தனையால் ஏற்பட்ட பாவங்களும் கழுவப்படுகின்றன.
“வுழூ” செய்யும் போது காதை தண்ணீரால் தடவுதல் கடமையாகாது. ஆயினும் அதைச் செய்வதால் அதனால் செய்த பாவங்களும் கழுவப்படுகின்றன.
தொழுகை அல்லது திருக்குர்ஆன் பிரதிகளைத் தொடுமுன் “வுழூ” என்ற வெளிச்சுத்தம் செய்தல் கடமை என்பது அதன் பின்னணியிலுள்ள தத்துவத்தைக் கருதியாகும். அந்தப் பின்னணிதான் இறைவனின் சமுகம் செல்பவர்களும், இறைமறையைத் தொடுபவர்களும் தன்னைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
ஒரு வணக்கத்தைச் செய்கின்றவன் அதற்கு முன் தன்னை மேற்கண்ட முறைப்படி சுத்தம் செய்து கொள்ள வேண்டுமென்று கூறுவதன் மூலம் இஸ்லாம் சுத்தத்திற்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் புரிகிறது.
ஒருவன் “வுழூ” என்ற வெளிச்சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்துகின்ற நீருக்குக் கூட இஸ்லாம் நிபந்தனை கூறியிருப்பது சுத்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
“வுழூ” என்ற வெளிச்சுத்தம் செய்வதற்கு தேங்காய் நீர், இளநீர் போன்றவை குடிப்பதற்கு ஆகுமாக்கப்பட்டிருந்தாலும் அவற்றைக் கொண்டு “வுழூ” என்ற சுத்தம் ஏற்படமாட்டாது. இதிலும் தத்துவமிருக்கத்தான் வேண்டும்.
“வுழூ” என்ற சுத்தம் செய்யும் போது – செய்யுமுன் பல் துலக்குவதும், மூக்குத் துவாரங்களை நீரால் சுத்தம் செய்வதும் “வுழூ”வின் விஷேடங்களில் அடங்கும். இதற்கான காரணம் வாய் நாற்றத்தை தடுப்பதும், மூக்கின் துவாரம் வழியாக தூசிகள் செல்வதை தடுப்பதுமாகும். மல, சலம் கழித்த பின் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நீரும் மேற்கண்ட தேங்காய் நீர், இளநீர் போன்ற நீராக இருத்தல் கூடாது.
பல் துலக்கி வாய் கழுவுதல் தொடர்பாக நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் பல பொன்மொழிகளில் எச்சரித்துள்ளார்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு.
அறபு மக்களிடம் பல் துலக்கி வாய் சுத்தம் செய்யும் வழக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. இதனால்தான் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அது பற்றி எச்சரித்தும், கட்டாயப்படுத்தியும் கூறியுள்ளார்கள். இன்றும் கூட அறபு மக்களிற் சிலர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்யாமல் வாய்க்கு குளோன் பாவிப்பதை நாம் காணுகிறோம்.
சலம் கழித்த பின் சுத்தமான நீரால் ஆண்குறியை ஆணும், பெண் குறியைப் பெண்ணும் சுத்தம் செய்வது கடமை என்று இஸ்லாம் கூறுகிறது. இது கூட சுத்தம் சுகாதாரம் என்பதைக் கருத்திற் கொண்டே கடமையாக்கப்பட்டுள்ளது.
சலம் கழித்தபின் சுத்தம் செய்து கொள்ளும் வழக்கம் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம்களிடம் நூறு வீதம் உள்ளது. எனினும் சுத்தம் செய்யாத முஸ்லிம்களும் உள்ளார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றுதான். இவ்வழக்கம் உள்ளவர்கள் “கப்ர்” மண்ணறையில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதற்கு நபீ மொழிகள் ஆதாரமாக உள்ளன.
கமுக்கட்டு முடி களைவதும், அப முடி களைவதும், மூக்கு முடி களைவதும் இஸ்லாம் வலியுறுத்திய விடயங்களோயகும். முஸ்லிமான ஆணும், பெண்ணும் ஒரு வாரத்தில் ஒரு தரம், அல்லது இரு வாரத்தில் ஒரு தரம் அல்லது ஒரு மாதத்தில் ஒரு தரமாவது குறித்த முடிகளைக் களைந்து கொள்வது அவசியமாகும். அப முடி களையும் விடயத்தில் ஆண்கள் முற்றாகக் களைவதும் – அதாவது பிலேட், கத்தி போன்வற்றால் இறக்கிக் கொள்வதும், பெண்கள் அவ்வாறு செய்யாமல் கத்தரியால் கத்தரித்துக் கொள்வதும் “ஸுன்னத்” ஆகும். இதற்கான காரணத்தை எழுத நான் விரும்பவில்லை. விளக்கம் தேவையானோர் கற்றறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக ஒரு மனிதன் எல்லா நேரங்களிலும் உடல் சுத்தம், உடைச் சுத்தம் பேணிக் கொள்வது சிறந்தது. உடலும், உடையும் உறைவிடமும் சுத்தமாயிருந்தால் நோயின் தாக்கம் இருக்காது.