Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்வஹ்ததுல் வுஜூத் அல்லாஹ்வின் இரகசியமா?

வஹ்ததுல் வுஜூத் அல்லாஹ்வின் இரகசியமா?

தொகுப்பு: ஞானபிதா, ஷெய்குனா மௌலானா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
قَالَ الْعَارِفُوْنَ إِفْشَاءُ سِرِّ الرُّبُوْبِيَّةِ كُفْرٌ
(“வுஜூத்” உள்ளமை என்பது ஒன்றே ஒன்றுதான். அது பலதல்ல) என்ற தத்துவம் மறைக்கப்பட வேண்டிய இரகசியமா? அல்லது சொல்லப்பட வேண்டிய தத்துவமா? இந்தக் கேள்விக்கு சரியான விடை காணுதல் இக்காலத்தைப் பொறுத்த வரை அறிவோடு தொடர்புள்ள அனைவர் மீதும் கடமையாகும்.

ஏனெனில் நானும், என்னுடன் உள்ள மௌலவீமார்களும் “வஹ்ததுல் வுஜூத்” பேசுகிறோம்.
 
நாங்கள் பேசி வருகின்ற இந்த ஞானத்தை அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தமது அறியாமையினால் – அவர்களுக்கு இந்த ஞானம் தொடர்பான விளக்கம் தெரியாமற் போனதால் அல்லாஹ்வும், நபீமாரும், வலீமாரும் பேசிய, தமது நூல்களிலும் எழுதிய இந்த ஞானத்தை “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை என்று விளங்கி எனக்கும், நான் கூறிய ஞானத்தை சரிகண்ட உலமாஉகளுக்கும், பொது மக்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” கொடுத்துவிட்டார்கள். இதனால் ஆப்பிழுத்த குரங்கு போல் மாட்டிக் கொண்டார்கள். அவர்களுக்கு இப்போதுதான் தாம் மாட்டிக் கொண்ட விடயம் மண்டைக்கு ஏறியுள்ளது. இப்போது அவர்களின் மனச் சாட்சி அவர்களின் நெஞ்சை நஞ்சூட்டப்பட்ட அம்பு போல் குத்திக் கொண்டிருக்கிறது. கொடுத்த “பத்வா”வை வாபஸ் பெற்றால் தமது மானம், மரியாதையெல்லாம் கனடா வரை காற்றில் போய்விடுமென்று அஞ்சுகிறார்கள்.
 
பெட்டி பீத்தலாயிருந்தாலும் அதன் வாய்க்கட்டு பலமாயிருந்தால் தப்பிக் கொள்ளலாம் என்ற பாணியில் கண்ணியத்திற்குரிய உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் காத்தான்குடிக்கு வந்த போது நடுநிலையானவர்களின் சில கேள்விக்கு பதில் கூறுகையில் “எங்களின் தீர்ப்பு அல்லாஹ்வின் தீர்ப்பு போன்றது. யாராலும் அதை அசைக்க முடியாதென்றும், நாங்கள் கொடுத்த “பத்வா”வை வாபஸ் பெறப்பட்டதற்கு வரலாறே கிடையாதென்றும் மார்தட்டிச் சொன்னாராம்” குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையென்று யாரோ ஒரு பேயன் சொன்னது போல் நடந்து கொண்டே சொல்லிக் கொண்டு போனாராம். அவர் போகட்டும். போய்க் கொண்டே இருக்கட்டும். அல்லாஹ்விடம் அவர் கூறட்டும். அல்லது நீதிமன்றில் அவர் நிறுவட்டும்.
 
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை “ஹுலூல் – இத்திஹாத்” என்று விளங்கியது ஒரு தவறு. எனது பெயர் கூறப்படாத அறபு “பத்வா”வின் மொழி பெயர்ப்பில் எனது பெயரைக் குறிப்பிட்டது இன்னொரு தவறு. இது உடல் குலுங்கச் சிரிக்க வேண்டிய விடயம். எந்தவொரு அனுபவமிக்க திருடனாயினும் அல்லாஹ் நாடினால் அவனை மாட்டி வைப்பது அவனுக்கு பெரிய காரியமல்ல.
 
இந்த மொழியாக்கம் எது போன்றதெனில் ذَهَبْتُ إِلَى بَيْتِ رِزْوِيْ ரிஸ்வியின் வீட்டுக்கு நான் சென்றேன் என்ற அறபு வசனத்தை “ரிஸ்வியின் வீட்டுக்கு அவரின் பல்லைக் கழட்டுவதற்காகச் சென்றேன்” என்று மொழியாக்கம் செய்தது போலுள்ளது.
 
مَنْ حَفَرَ حُفْرَةً لِأَخِيْهِ وَقَعَ فِيْهَا
தன் தோழனுக்கு தோண்டிய குழியில் தானே விழுந்தான்.
إِفْشَاءُ سِرِّ الرُّبُوْبِيَّةِ كُفْرٌ
றப்புடைய இரகசியத்தை பகிரங்கப்படுத்துவது “குப்ர்” நிராகரிப்பாகும் என்று இறை ஞானிகளிற் பலர் கூறியுள்ளார்கள். இது உண்மைதான். இதை நாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம்.
 
ஆயினும் இரகசியம் என்பது “வஹ்ததுல் வுஜூத்” ஞானமா? அல்லது அது வேறு விடயமா? இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
“றப்பின் இரகசியம்” என்பது “வஹ்ததுல் வுஜூத்” ஞானம்தான் என்று கூறும் குறை குடங்களிடம் இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறோம். அவர்கள் சொல்வார்களா?
 
ஆதாரம் கூறாது போனாலும் றப்பின் இரகசியம் என்பது “வஹ்ததுல் வுஜூத்” ஞானம்தான் என்று வைத்துக் கொண்டால் இது காலவரை “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசிய குத்புமார்களும், வலீமார்களும் ஏன் பேசினார்கள்? ஏன் பெரும் பெரும் நூல்கள் எழுதினார்கள்? றப்பின் இரகசியத்தை பகிரங்கப்படுத்துவது “குப்ர்” என்பது அவர்களுக்குத் தெரியாமற் போய்விட்டதா?
 
குத்பு மார்களையும், வலீமார்களையும் விடுவோம். நபீகட்கரசர் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திருக்கலிமாவான “லாயிலாஹ இல்லல்லாஹ்” அல்லாஹ் தவிர எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை என்ற கருத்தின் படியோ, அல்லது அல்லாஹ் தவிர எதுவுமே இல்லை என்ற கருத்தின் படியோ பகிரங்கமாக ஏன் சொன்னார்கள்? இத்திருக் கலிமாதானே “வஹ்ததுல் வுஜூத்” கருத்தின் கிரீடமாக உள்ளது?
 
நபீகளாரையும் விடுவோம். وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான் என்று அல்லாஹ் ஏன் சொன்னான்?
 
எனவே, றப்பின் இரகசியம் என்று ஒன்று உண்டு என நாம் நம்புகிறோம். அது எது என்பது எவருக்கும் தெரியாது. குத்புமார், வலீமார் ஆகியோர் ذوقي அனுபவத்தில் பெற்றுக் கொண்ட விடயம்தான் “வஹ்ததுல் வுஜூத்” என்றிருந்தால் ஏன் அவர்கள் கிதாபுகளில் பகிரங்கப்படுத்தினார்கள்? அவர்கள் எழுதியதினால்தானே நாங்களும் தெரிந்து கொண்டோம்.
 
எனவே, “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “தவ்ஹீத்” ஞானத்தின் இன்னுமொரு தோற்றமேயன்றி அது தவ்ஹீதுக்கு எதிரானதல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
 
எனவே, றப்பின் இரகசியத்தை பகிரங்கப்படுத்துதல் “குப்ர்” என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் இறை இரகசியம் என்று சொல்வதை நாங்கள் மறுக்கின்றோம்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments