தொகுப்பு: ஞானபிதா, ஷெய்குனா மௌலானா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “ஷரீஆ”வுக்கு எந்த வகையில் முரணானதென்று மறுப்பவர்கள் கூற வேண்டும். குறிப்பாக அது பிழையென்று தீர்ப்பு வழங்கிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கூற வேண்டும்.
அல்லாஹ்வின் பேரருளாலும், அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பறகத்தாலும், இறை நேசர்களான வலீமாரின் பொருட்டாலும் நான் முடிந்தவரை “ஷரீஆ”வின் அறிவு கற்றுள்ளேன். நான் அறிந்தவரை “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “ஷரீஆ”வுக்கு எந்த வகையிலும் முரணானதாக அறியவில்லை. “ஷரீஆ”வைக் கரைத்துக் குடித்த பேரறிஞர்கள் இந்நாட்டில் பலர் உள்ளனர். அவர்களாவது நான் பேசுகின்ற இறையியல் தத்துவம் “ஷரீஆ”வுக்கு முரணானதென்று ஆதாரத்துடன் நிறுவுவார்களாயின் அவர்களின் கூற்றை ஏற்றுச் செயல்பட நான் எப்போதும் ஆயித்தமாக உள்ளேன்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “ஷரீஆ”வுக்கு எந்த வைகயிலும் முரணானதல்ல என்பதற்கு ஒருபோதும் மறுக்க முடியாத ஆதாரம் அல்லாஹ்வின் திருக்குர்ஆனும், அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருள் மொழிகளும், அவர்களின் அனந்தரக்காரர்களான உலமாஉகளினதும், மற்றும் ஞானக் கடல்களில் மூழ்கிய வலீமார்களினதும், இறையியல் மேதைகளான “ஆரிபீன்”களினதும் பேச்சுக்களும், எழுத்துக்களுமேயாகும்.
அவ்லியாஉகளில் எவரும் “ஷரீஆ”வுக்கு ஒரு மண்ணளவும் முரணானவர்களல்லர். பெருமானாரின் அடிக்கு மேல் அடி வைத்து வாழ்ந்தவர்களே அவ்லியாஉகள். அத்தகைய மகான்களே எமக்கு ஆதாரங்களாவர்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசிய மகான்களில் எவரும் தொழாமல் இருந்ததற்கோ, தொழத் தேவையில்லை என்று சொன்னதற்கோ, தொழுகைக்கு “வுழூ” தேவையில்லை என்று சொன்னதற்கோ, அல்லது விபச்சாரம் ஆகுமென்று சொன்னதற்கோ, திருடலாம், குடிக்கலாம், வட்டி வியாபாரம் செய்யலாம் என்று சொன்னதற்கோ எந்த ஓர் ஆதாரத்தையும் நான் காணவுமில்லை. கேள்விப்படவுமில்லை.
“ஷரீஆ” சட்டம் அறவே தெரியாத, அறிவுக்கும், தமக்கும் சம்பந்தமில்லாத சிலர் வலீமார், ஷெய்குமார் போல் நடித்தும், மெஸ்மரிஸம், கண்கட்டி வித்தை, குறளி போன்றவைகளைக் காட்டியும் மக்களை ஏமாற்றி உழைப்பவர்கள் உலகின் பல நாடுகளிலும் இருக்கிறார்கள். இதை நான் மறுக்கவில்லை. எனக்கும் இது தெரியும்.
இன்னோரை ஒருபோதும் நாம் பின்பற்றக் கூடாது. இவர்கள் கூறும் வழியில் செல்லவும் கூடாது. இவர்களை கண்ணியப்படுத்தவும் கூடாது. இவர்களுக்கு உதவியுபகாரம் செய்யவும் கூடாது. ஒருவர் சரியானவரா? இல்லையா என்றறிந்து கொள்வதற்கான வழி அவர்களை “ஷரீஆ” என்ற உரை கல்லில் உரைத்துப் பார்ப்பதும், குர்ஆன், ஹதீது என்ற தராசில் நிறுத்துப் பார்ப்பதுமேயாகும். சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றேல் அவர்களை விட்டுவிட வேண்டும்.
ஆயினும் ஞான வழியிற் சென்று தம்மால் அந்த ஞான வெளிச்சத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ஞானக் கண் பார்வையிழந்த சிலர் உள்ளார்கள். அவர்கள் போலிகள் அல்லர். நடிப்பவர்களுமல்லர். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் காதல் போதையால் சுய நினைவிழந்தவர்களாவர். “லைலா”வின் காதலால் மதியிழந்தவன் சுய நினைவிழந்தவன் “மஜ்னூன் லைலா” என்று மக்களால் அழைக்கப்படுவது போல் “மஜ்னூன் அல்லாஹ்” அல்லாஹ் என்ற காதிலியின் போதையால் மதியிழந்தவன் என்று அவன் அழைக்கப்படுவான்.
இவன் அல்லாஹ்வின் காதலால் மதியிழந்தவனாயிருப்பதால் மரியாதைக்காக “மஜ்னூன்” பைத்தியக் காரன் என்று சொல்லாமல் مَجْذُوْبْ என்று அவன் ஸூபீ மகான்களால் அழைக்கப்படுவான். இவன் நடிகன் அல்ல. ஏமாற்றுப் பேர்வழியுமல்ல. இவனும் ஒரு வகையில் பைத்தியம்தான். எனினும் இவன் அல்லாஹ்வின் விடயத்தில் மதியிழந்தவன் என்ற வகையில் “மஜ்தூப்” என்று அழைக்கப்படுவான்.
“மஜ்தூப்” என்ற அறபுச் சொல் جَذَبَ என்ற சொல்லடியில் உள்ளதாகும். இதற்கு இழுக்கப்பட்டவர் என்று பொருள் வரும். இவரின் புலன்கள் யாவும் அல்லாஹ்வால் அவன் பக்கம் இழுக்கப்பட்டவராவார். இவரின் “ரிமோட்” இவரிடமிருக்காது. இவரால் இவரைக் கொன்றோல் பண்ணவும் முடியாது.
இவரை மற்றவர்கள் கண்ணியப்படுத்த வேண்டும். இவருக்கு உதவியுபகாரம் செய்ய வேண்டும். இவரை வேதனைப் படுத்தக் கூடாது. “ஷரீஆ” விடயத்தில் அல்லது ஆன்மிக விடயத்தில் இவர் காட்டும் வழியில் செல்லவும் கூடாது. இவரிடம் எவரும் “பைஅத்” செய்யவும் கூடாது. இவரை இவர் போக்கில் விட்டு விட வேண்டும்.
ஒரு சமயம் மூஸா நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வைக் காண விரும்பினார்கள்.
رَبِّ أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ
இறைவா! உன்னைக் காண எனக்கு ஆசையாக உள்ளது. உன்னை எனக்கு காட்டுவாயாக என்று கெஞ்சினார்கள். அல்லாஹ் அவர்களுக்கு لَنْ تَرَانِي என்னைக் காணமாட்டீர்கள் எனினும் وَلَكِنِ انْظُرْ إِلَى الْجَبَلِ இந்த மலையைப் பாருங்கள் فَإِنِ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي இந்த மலை அது இருக்குமிடத்தில் அவ்வாறே இருக்குமாயின் என்னைக் காணலாம் என்று கூறினான். அதேபோல் அவர்கள் மலையைப் பார்த்தார்கள்.
فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى صَعِقًا
அந்த மலையில் அல்லாஹ் அவர்களுக்கு காட்சியளித்த போது மலை வெடித்துச் சிதறியதாக உணர்ந்த மூஸா நபீ மயக்கமுற்றுத் தரையில் விழுந்தார்கள்.
இந்த வரலாறு விளக்கமாக எழுத வேண்டிய ஒன்றாகும். இந்த வரலாறில் ஒரு குறிப்பு மட்டும் எடுப்பதற்காகவே இதை எழுதினேன். அந்தக் குறிப்பை மட்டும் இங்கு எழுதுகிறேன்.
அதாவது நபீ மூஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை நேரில் காணாமல் அவனின் “தஜல்லீ” மலையில் ஏற்பட்டதைக் கண்டு அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மயங்கி விழுந்தார்கள்.
ஆயினும் நபீகட்கரசர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வைத் தலைக் கண்ணால் நேரில் கண்டும் கூட அசையாமலும், எந்த ஒரு மயக்கம் ஏற்படாமலும் இருந்தார்கள்.
இதன் மூலம் அல்லாஹ்வின் “தஜல்லீ”யை காண்பவர்கள் தமது ஆன்மிக பலத்திற்கேற்றவாறு அதை அனுபவிப்பார்கள்.
நான் “மஜ்தூப்” என்று மேலே எழுதியவர்களும் இவ்வாறுதான். சிலர் அவனின் காட்சியைக் கண்டு சகித்துக் கொள்வார்கள். இன்னும் சிலர் தமது சுய நினைவையும் இழந்து மயங்கிப் போவார்கள்.
இறைஞானி அபூபக்ர் ஷிப்லீ அவர்களைக் கண்டு அருள் பெற நாடிய ஒருவர் அவர்களைத் தேடிச் சென்றார். அவர்கள் ஒரு காட்டில் வாழ்வதாக செய்தி கிடைத்தது. அங்கு சென்றார். அவர்கள் புலித் தோலால் தன்னைப் போர்த்திக் கொண்டு குகை ஒன்றில் தியானத்தில் இருந்தார்கள். போனவர் நீண்ட நேரம் காத்திருந்தார். எதிர் பாராமல் ஷிப்லீ மகான் புலித் தோலை அகற்றிய போது அவர்களின் முகத்தைக் கண்ட போன மனிதன் அல்லாஹ் என்று சத்தமிட்டவராக அவ்விடத்திலேயே உயிர் துறந்தார்.
இவ்வாறுதான் அல்லாஹ்வின் காட்சி கிடைப்பதாகும். “மஜ்தூப்” எனப்படுவோர் இவ்வாறு தாக்கத்திற்குள்ளானவர்களோயவர்.
சுருக்கம் என்னவெனில் “விலாயத்” என்ற ஒலித்தனம் பெற்ற எவரும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையில் வேரூன்றியவர்களாக இருந்தாலும் “ஷரீஆ”வுக்கு மண்ணளவும் முரணாக செயல்படமாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை ஏற்றுக் கொண்ட சிலர் தொழாமல் இருப்பதாலும், மார்க்க கடமைகளை நிறைவேற்றாமல் இருப்பதாலும், மற்றும் பாவமான காரியங்கள் செய்வதாலும் குறித்த ஞானம் பிழையென்று சொல்லுதல் அறிவுடைமையாகாது.
“வஹ்ததுல் வுஜூத்” கொள்கைவாதிகளின் ஞானச் சோலையான பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் எங்குமில்லாதவாறு “ஷரீஅத்” பயானும், தரீகத், ஹகீகத், மற்றும் மஃரிபத் பயானும் நடைபெற்று வருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.