الله موجود – الخلق معدوم
தொகுப்பு: ஞானபிதா, ஷெய்குனா மௌலானா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
இறைவனில் அவசியம் இருக்க வேண்டிய அம்சங்கள் இருபது. அவனில் அறவே இருக்க முடியாத அம்சங்கள் இருபது.
இவையாவையும் விளக்கமாக எழுத வாய்ப்பில்லை. ஆகையால் அவனில் அவசியம் இருக்க வேண்டிய அம்சங்களில் முதலாவது அம்சத்திற்கும், அவனில் அறவே இருக்க முடியாத அம்சங்களில் முதலாவது அம்சத்திற்கும் மட்டும் இத்தலைப்பில் விளக்கம் எழுதுகிறேன்.
அல்லாஹ்வில் அவசியம் இருக்க வேண்டிய அம்சங்களில் ஒன்று وُجُوْدٌ உள்ளமை என்பதாகும். உள்ளமை என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல் عَدَمٌ இல்லாமை என்பதாகும்.
உள்ளமை என்பது வேறு. உண்மை என்பது வேறு. صِدْقٌ உண்மை என்ற சொல்லின் எதிர்ச் சொல் كَذِبٌ பொய் என்று வரும்.
وُجُوْدٌ
உள்ளமை என்ற சொல்லின் எதிர்ச் சொல் عَدَمٌ இல்லாமை என்று வரும்.
இத்தலைப்பில் உள்ளமை, இல்லாமை பற்றியே பேசப் போகின்றோம். இங்கு உண்மை, பொய் பற்றிப் பேசவில்லை. இது இங்கு அவசியமும் இல்லை.
“வுஜூத்” உள்ளமை என்றால் உளதாக இருத்தல் அல்லது உள்ளதாக இருத்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் என்று ஒருவன் இருக்கின்றானா என்று கேட்டால் அதன் அர்த்தம் அல்லாஹ் என்று ஒருவன் உள்ளானா என்பதுதான். இங்கு இருக்கின்றான் என்ற சொல்லின் எதிர்ச் சொல் நிற்கின்றான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
வீட்டில் முஸ்ம்மில் இருக்கின்றானா? என்று கேட்டால் அவன் இருக்கவில்லை நிற்கின்றான் என்று சொல்வது கேட்டவனின் நோக்கத்திற்குரிய விடையாகாது. கேட்டவனின் நோக்கம் முஸம்மில் என்பவன் இருக்கிறானா? உள்ளானா? என்பதை அறிவதுதான். அவன் நிற்கிறானா? நடக்கிறானா? என்பதை அறிவதல்ல.
இன்னும் சுருக்கமாகவும், விளக்கமாகவும் சொல்வதாயின் அல்லாஹ் இருக்கின்றானா? இல்லையா? என்று கேட்ட ஒருவனுக்கு இருக்கின்றான் என்று பதில் சொல்வது போன்று. இவ்வாறு விடை சொல்வது நிற்கவில்லை இருக்கின்றான் என்ற கருத்துக்கு வராது.
அல்லாஹ்வில் அவசியம் இருக்க வேண்டிய அம்சங்களில் பிரதான அம்சம் அவன் இருத்தலாகும்.
இவ் அம்சம் அல்லாஹ்வில் இருப்பது அவசியமென்றால் இதன் எதிர்ச் சொல்லான இன்மை, அல்லது இல்லாமை அவனில் இருக்க முடியாது. இந்த அம்சம் படைப்பில் அவசியம் இருக்க வேண்டும். உள்ளமைக்கு எதிரான அம்சம் படைப்பில் இருக்க வேண்டுமென்றால் படைப்புக்கு “வுஜூத்” இல்லையென்றும், அது “அதம்” இல்லாமை என்றும் அல்லது இன்மை என்றும் முடிவு செய்தல் வேண்டும். இதுவே சரியான முடிவாகும்.
இந்த முடிவின் படி படைப்பு இல்லை என்று நம்ப வேண்டும். அதற்கு “வுஜூத்” உள்ளமை இல்லையென்றும் நம்ப வேண்டும்.
கண்ணால் பார்ப்பதற்கு படைப்புகள் தெரியும் நிலையில் படைப்பு இல்லை என்று எவ்வாறு நம்புவது? என்று ஒருவர் கேட்டால் சுமார் ஒன்பது நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஞான மாமேதை இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்கள் போன்ற ஞான மகான்களும் சொன்ன விடையையே நாமும் சொல்ல வேண்டும்.
إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – فَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةِ
كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةِ
படைப்பு என்பது “கயால்” ஆகும். எதார்த்தத்தில் அது “ஹக்”கேதான். இறைவனேதான். எவரெல்லாம் இதை அறிந்தார்களோ அவர்கள் அனைவரும் “தரீகா”வின் இரகசியங்களை அறிந்து கொண்டார்கள் என்று கூறியுள்ளார்கள்.
படைப்பு – சிருட்டி என்பது “கயால்” என்று கூறுகிறார்கள் ஸெய்யிதுனா இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
خَيَالٌ
“கயால்” என்றால் என்ன? இதற்கு ஸூபீகள் கூறும் வரைவிலக்கணத்தை இங்கு எழுதுகிறேன்.
اَلْخَيَالُ – كُلُّ مَا يُرَى وَلَا يُوْجَدُ فِى الْخَارِجِ بِالذَّاتِ، كَالسَّرَابِ،
“கயால்” என்றால் கண் பார்வைக்குத் தெரியும். எதார்த்தத்தில் கண்ணுக்குத் தெரிந்த பொருளாக அது இருக்காது. உதாரணமாக கானல் நீர் போன்று.
கானல் நீர் என்பது கண் பார்வைக்குத் தோற்றும். தெரியும். ஆயினும் அதை ஆய்வு செய்தால் அது தெரிந்த பொருளாக, பார்வைக்குத் தோற்றிய பொருளாக இருக்காது. ஆகையால் கானல் நீர் “கயால்” என்று சொல்லப்படுவது போல் படைப்பும் “கயால்” என்று சொல்லப்படும். கானல் நீராகத் தோற்றுவது போல் ஹக் தஆலாவின் உள்ளமை படைப்பாகத் தோற்றுகின்றது. அந்தக் கானல் நீருக்கு “வுஜூத்” இல்லாதிருப்பது போல் படைப்புக்கும் “வுஜூத்” கிடையாது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் காய்ந்து கருவாடான “அக்ல்” எவ்வாறு வேலை செய்துள்ளது? எவ்வாறு இயங்கியுள்ளது? என்று சிந்தனை செய்து பாருங்கள்.
التحفة المرسلة
என்று ஸூபிஸக் கலையில் ஒரு நூல் உண்டு. அந்த நூலை அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள். அந்த நூலில் முதற் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தையே அதன் ஆசிரியர் ஆதாரங்களோடும், உதாரணங்களோடும் எழுதியுள்ளார்கள். அந்த நூலை “வஹ்ததுல் வுஜூத்” பேசுகின்ற நாங்கள்தான் ஆதாரமாக எடுக்க வேண்டும். (ஆனால் உலமாஉகள் سكر الدنيا – துன்யா என்ற போதையில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை) அந்த நூலை “வஹ்ததுல் வுஜூத்” பேசிய என்னைக் காபிராக்கி என் கழுத்தை கொய்வதற்கு அவர்கள் ஆதாரமாக எடுத்திருப்பது பூமியில் விழுந்து உருண்டு புரண்டு சிரிக்க வேண்டிய விடயமாகும். பகிரங்கமாக மேடையொன்றில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் இவர்களின் ஊடுருவல் பத்வாவில் இவர்கள் செய்த ஊடுருவலை புட்டுப் புட்டுக் காட்டுவேன். அப்பமென்றால் புட்டுக் காட்ட வேண்டுமா என்று மக்கள் பேசுவதுண்டு. நான் அதையும் இவர்களுக்காக புட்டுப் புட்டுக் காட்டுவேன். இன்ஷா அல்லாஹ்.
எனது அடுத்த பதிவில் மேலே குறித்த “துஹ்பதுல் முர்ஸலா” என்ற நூலில் அறபு மொழியில் உள்ள விடயங்களை அறபியிலும், தமிழிலும் நான் எழுதிக் காட்டுவேன். இன்ஷா அல்லாஹ்.