தொகுப்பு: ஞானபிதா, ஷெய்குனா மௌலானா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
“ஜின்”களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (திருக்குர்ஆன் 51-56)
இத்திரு வசனத்தின் அமைப்பு ஜின்களும், மனிதர்களும் இறைவனை வணங்குவதற்காகவேயன்றி வேறெதற்கும் படைக்கப்படவில்லை என்ற கருத்தை வலியுறுத்துவது சிந்தனையாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மறைவானதல்ல.
இந்த வசனம் பின்வருமாறு அமைந்திருந்தால் இவ்வசனம் மூலம் விளங்கப்படுகின்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருக்காது.
خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ لِيَعْبُدُوْنِ
ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகப் படைத்தேன்.
இந்த வசன அமைப்பில் இது தரும் கருத்து வலியுறுத்தப்படவில்லை.
முந்தின வசன அமைப்பின் படி ஜின்களும், மனிதர்களும் இறைவனை வணங்குவதற்காக மட்டுமே படைக்கப்பட்டுள்ளார்களேயன்றி வேறெதற்கும் படைக்கப்படவில்லை என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.
முந்தின வசனத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்தியது வசனத்தின் தொடக்கத்தில் வந்துள்ள “மா” என்ற சொல்லும், பின்னால் வந்துள்ள “இல்லா” என்ற சொல்லுமேயாகும். இதில் மொழியிலக்கணத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு நுட்பம் உண்டு. அந்த நுட்பம்தான் விலியுறுத்தலுக்கு காரணமாக உள்ளதென்பது அறபு மொழியிலக்கணம் கற்றவர்களுக்கு மறையாது.
“மா” என்ற சொல்லும், “இல்லா” என்ற சொல்லும் வராத பிந்தின வசனத்தில் வலியுறுத்தல் செய்யப்படவில்லை.
வலியுறுத்தப்பட்ட முந்தின வசனத்தின்படி மனிதனும், ஜின்னும் வணங்கிக் கொண்டுதான் இருக்கவேண்டுமே தவிர உண்ணல், குடித்தல், உறங்குதல், மற்றும் ஏனைய வேலைகள் எதுவும் செய்யக் கூடாது என்ற கருத்து வரும். இது மனிதனாலும், ஜின்னாலும் செய்ய முடியாததாகும்.
இந்த வசனத்தின்படி ஒருவன் தொழில் செய்யக் கூடாது. நண்பர்களுடன் உல்லாசப் பயணம் செல்லக் கூடாது. விளையாடக் கூடாது. பொதுவாக வணக்கம் தவிர வேறொன்றும் செய்யக் கூடாது.
அதாவது மனிதன் ஏதாவது ஒரு வணக்கம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்த வசனத்தின் படி ஒரு மனிதன் ஒரு நிமிட நேரமாவது ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும், அல்லது வணக்கமல்லாத ஏதாவது ஓரு வேலை செய்தாலும் அவன் பாவம் செய்கிறான் என்றுதான் கருத்து வரும். ஒரு நொடி நேரமாவது வணக்கம் செய்யவில்லையானால் அவன் பாவியாகிவிடுவான்.
மனித வாழ்வில் அவனால் சாத்தியமாகாத ஒன்றைச் செய்யுமாறு அவைனப் பணிப்பது நியாயமற்றதாகும்.
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
எந்தவொரு மனிதனாலும் முடியாத ஒன்றைச் செய்யுமாறு அல்லாஹ் கஷ்டப்படுத்தமாட்டான். (திருக்குர்ஆன் 2-286)
இவ்வாறு மனிதன் செய்தாலும் கூட அல்லாஹ் செய்யமாட்டான். அவன் நீதிவான். அது மட்டுமல்ல. நீதிவான்களுக்கெல்லாம் நீதிவான் அவன்தான்.
ஆகையால் மனிதன் இத்திரு வசனத்திற்கு முரணாகாமல் வாழ்வதாயின் அவன் தனது வேலைகள் யாவையும் வணக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது தவிர அவனுக்கு வேறு வழியில்லை.
அதாவது தொழுகை, நோன்பு, திருக்குர்ஆன் ஓதுதல், ஸலவாத் சொல்வது போல் மனிதன் அன்றாடம் செய்யும் தனது வேலைகளையும் வணக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
அவன் உண்பது, குடிப்பது, உறங்குவது, திருமணம் செய்வது, உடலுறவு கொள்வது, விளையாடுவது, உல்லாசப் பயணம் போவது போன்ற அனைத்து வேலைகளையும் அவன் வணக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
அவன் எதைப் பாரத்தாலும் அல்லாஹ்வைப் பார்ப்பதாகவும், யாருடன் பேசினாலும் அல்லாஹ்வுடன் பேசுவதாகவும், எவன் எதை அவனுக்குக் கொடுத்தாலும் அல்லாஹ் கொடுக்கிறான் என்ற உணர்வோடு அதை வாங்க வேண்டும். எந்த ஒரு சத்தத்தைக் கேட்டாலும் அதை அல்லாஹ்வின் சத்தமென்று உணர வேண்டும். அவன் எவருக்கு எதைக் கொடுப்பதாயினும் அல்லாஹ்வுக்கு கொடுப்பதாகவும் நினைத்துக் கொள்ள வேண்டும். ஒருவன் இவ்வாறு தனது வாழ்வையும், உணர்வுகளையும் அமைத்துக் கொண்டானாயின் அவன் இரவு, பகல் 24 மணி நேரமும் வணக்கம் செய்தவனாகவே கருதப்படுவான்.
இறை ஞானி ஒருவர் பின்வருமாறு சொன்னார்.
لِيْ ثَلَاثُوْنَ سَنَةً أَتَكَلَّمُ مَعَ اللهِ تَعَالَى، وَالنَّاسُ يَظُنُّوْنَ أَنِّيْ أَتَكَلَّمُ مَعَهُمْ
நான் முப்பது ஆண்டுகளாக அல்லாஹ் உடனேயே பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் மனிதர்களோ நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள்.
இதுவரை இத்திரு வசனத்தை “இபாதத்” வணக்கம் என்ற அடிப்படையில் ஆய்வு செய்தோம். இதன் பிறகு يَعْبُدُون வணங்குதல் தொடர்பாக சற்று ஆய்வு செய்து பார்ப்போம்.
இத்திரு வசனத்திற்கு விளக்கம் எழுதிய நபீ தோழர் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பின்வருமாறு விளக்கம் எழுதியுள்ளார்கள்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ أي ليعرفوني ويعبدوني
என்னை வணங்குவதற்காக மட்டுமன்றி என்னை அறிந்து வணங்குவதற்காக என்று ஒரு விளக்கம் எழுதியுள்ளார்கள். அதாவது لِيَعْبُدُونِ என்றுதான் அல்லாஹ் சொல்லியுள்ளான். இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் لِيَعْرِفُونِيْ என்று ஒரு விரிவுரை செய்துள்ளார்கள். அருமையான, ஆழமான விரிவுரை.
இந்த விரிவுரையின்படி இத்திரு வசனத்திற்கு மனிதர்களையும், ஜின்களையும் என்னை “அறிந்து” வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை என்று பொருள் வரும்.
அல்லாஹ்வை அறிந்து வணங்க வேண்டும் என்பதற்கு இத்திரு வசனம் ஆணித்தரமான ஆதாரமாகும்.
அறியாமல் வணங்கினால்?
அறிந்து வணங்க வேண்டுமென்பது நிபந்தனை. நிபந்தனை தவறின் அதற்கான காரியம் கை கூடாது. சரி வராது. இதுவே முடிவு.
பகுத்தறிவின் படி ஆய்வு செய்தால் கூட அறிவின்றி வணக்கம் நிறைவேறாதென்பதே முடிவாகும். அறிவின்றி வணக்கம் நிறைவேறாதென்பதற்கு ஓர் உதாரணம் எழுதுகிறேன்.
ஓர் இடத்தில் பத்து நபர்கள் கூடி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் மௌலவீ. அப்போது அங்கு ஒருவர் வந்தார். அவர் யாரென்று மௌலவீ தவிர மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை. வந்தவரைக் கண்ட மௌலவீ எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்து அவரைக் கட்டியணைத்து ஆலிங்கனம் செய்தார்.
இந் நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த ஒன்பது பேர்களும் வந்தவருக்கு மௌலவீ மரியாதை செய்ததால் அவர்களும் அவருக்கு மரியாதை செய்தார்கள். நிகழ்வெல்லாம் முடிந்த பிறகு வந்தவர் யாரென்று இருந்தவர்கள் மௌலவீயிடம் கேட்டார்கள்.
வந்தவர் பெருமானார் அவர்களின் “அஹ்லுல் பைத்” குடும்பத்தைச் சேர்ந்தவரென்றும், தரமான ஒரு மார்க்க மேதை என்றும் மௌலவீ விளக்கம் சொன்னார்.
இந்த நிகழ்வின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் வந்தவருக்கு மௌலவீ செய்த மரியாதைக்கும், மற்றவர்கள் செய்த மரியாதைக்கும் வித்தியாசமுண்டு. மௌலவீ அவர் யாரென்று புரிந்து மரியாதை செய்தார். மற்றவர்கள் அவர் யாரென்று புரியாமல் மௌலவீ மரியாதை செய்தார் என்பதற்காக அவர்களும் மரியாதை செய்தார்கள். மௌலவீயின் மரியாதைக்கு 1000 நன்மைகள் என்றால் மற்றவர்களில் ஒவ்வொருவருக்கும் ஐந்து நன்மைகளே கிடைத்திருக்கும்.
இவ்வாறுதான் அல்லாஹ்வை அறிந்து வணங்குபவனும். அவனை அறியாமல் வணங்குபவனுமாவான். இருவருடைய வணக்கத்திற்கும் வித்தியாசமுண்டு. மௌலவீயின் மரியாதை உயிரோட்டம் உள்ளதும், மற்றவர்களின் மரியாதை அது இல்லாததுமாகும்.
அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று அறிவது மட்டும் அல்லாஹ்வை அறிந்ததாகாது. அதோடு அவனின் தன்மைகளையும், அவனுக்கும், படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதென்றும் அறிவதே அவனை அறிவதாகும்.
அறிந்து வணங்காமல் மற்றவர்கள் வணங்குகின்றார்கள் என்பதற்காக வணங்குவது வணக்கமாகாது. அது வெறும் exercise – பயிற்சி செய்ததாகவே ஆகிவிடும்.