عَيْنِيَّة – غَيْرِيَّة
தொகுப்பு: ஷம்ஸுல் உலமாஇ வல்ஆரிபீன் அஷ்ஷெய்க் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற நம்பிக்கை “ஙெய்ரிய்யத்” என்றும், படைத்தவனும், படைப்பும் ஒன்று என்ற நம்பிக்கை “ஐனிய்யத்” என்றும் சொல்லப்படும்.
“ஐனிய்யத்” என்பது “வஹ்ததுல் வுஜூத்” என்று ஸூபீ மகான்களின் மொழியிலும், அதாவது அவர்களின் பரிபாஷையிலும், “ஙெய்ரிய்யத்” என்பது “கத்றதுல் வுஜூத்” என்றும் சொல்லப்படும்.
((وحدة الوجود – كثرة الوجود
“வஹ்ததுல் வுஜூத்” என்ற வசனத்திற்கு உள்ளமை ஒன்று என்றும், “கத்றதுல் வுஜூத்” என்ற வசனத்திற்கு உள்ளமை பலது என்றும் பொருள் வரும்.
“வஹ்ததுல் வுஜூத்” உள்ளமை ஒன்று என்று நம்புவது “ஈமான்” சரியான நம்பிக்கையும். “கத்றதுல் வுஜூத்” உள்ளமை பலது என்று நம்புதல் விசுவாசத்திற்கு முற்றும் பிழையானதுமாகும்.
“வுஜூத்” என்ற சொல்லுக்கு உள்ளமை என்று பொருள் கூறினாலும் “உள்ளமை” என்பது அல்லாஹ்வின் “தாத்” என்பதையே குறிக்கும். “தாத்” என்பது ஒன்றே ஒன்றுதான். அது இரண்டோ பலதோ அல்ல. இதற்கு மாற்றமாக “ஆரிபீன்” இறை ஞானிகளில் எவரும் சொன்னதாக நான் அறியவில்லை.
“வுஜூத்” என்பது அதாவது அல்லாஹ் என்பவன் قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு நிற்பவனாவான். தன்னைக் கொண்டு நிற்பதானது அல்லாஹ்வுக்கு மட்டும் உரியதேயாகும். படைப்புக்களில் எதற்கும் இத்தன்மை கிடையாது. யாராவது இத்தன்மை படைப்புக்கு உண்டு என்று நம்பினால் அல்லது சொன்னால் அவன் விசுவாசியல்லன்.
ஏனெனில் قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு நிலைபெறுதல் என்ற தன்மை – “ஸிபத்” அல்லாஹ்வில் கட்டாயம் இருக்க வேண்டிய இருபது “ஸிபாத்” தன்மைகளில் ஒன்றாகும். அல்லாஹ்வில் இருக்க வேண்டிய தன்மைகளில் ஒன்றை யாராவது ஒருவன் மறுத்தானாயின் அல்லது அத்தன்மை படைப்புக்கு உண்டு என்று சொன்னானாயின் அவன் “முஃமின்” விசுவாசியல்லன் என்பது திண்ணம். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. இதுவே இஸ்லாமிய “அகீதா” கொள்கையாகும்.
படைத்தவன் வேறு படைப்பு வேறு என்றால் படைப்பு قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு நிலை பெற்றதென்ற கருத்து வரும். கண்ணையும், மூளையையும் அகல விரித்து ஆய்வு செய்பவர்களுக்கு இவ் உண்மை மறையாது. இவ்வாறு வரும் போது தன்னைக் கொண்டு நிலை பெற்ற தன்மையில் படைப்பு படைத்தவனுக்கு ஒப்பாகிவிடுகிறது. நிகராகிவிடுகிறது.
ஏனெனில் படைத்தவன் மட்டும்தான் தன்னைக் கொண்டு நிற்பவன் என்றும், படைப்பு என்பது قائم بغيره தன்னைக் கொண்டு நிற்காமல் தன்னல்லாதது கொண்டு அதாவது அல்லாஹ்வைக் கொண்டு நிற்பதென்றும் நம்புவதே “அகீதா” இஸ்லாமிய கொள்கை கூறும் சட்டமும், விளக்கமுமாகும்.
படைப்பு தன்னைக் கொண்டு நிற்காமல் தன்னல்லாதது கொண்டு நிற்பதென்றால் அதன் பொருள் அது அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறது என்பதாகும்.
இந்த விபரப்படி நாம் ஒரு முடிவு செய்ய வேண்டும். அதாவது அல்லாஹ் மட்டும்தான் தன்னைக் கொண்டு நிற்பவன் என்றும், அதாவது قَائِمٌ بِنَفْسِهِ என்றும், படைப்பு என்பது قائم بالله அல்லாஹ்வைக் கொண்டு நிற்பதென்றும் நம்ப வேண்டும்.
அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்பவன் என்றால் அதன் விளக்கம் என்னவெனில் அவன் நிற்பதற்கு எந்த ஒரு மூலமும், கருவும் இல்லாதிருப்பதாகும்.
படைப்பு என்பது அல்லாஹ் போல் தன்னைக் கொண்டு நிலைபாடானது என்று ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்வுக்கு இவ்விடயத்தில் இணை வைத்து விட்டான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
படைப்பு தன்னைக் கொண்டு நிற்காமல் அல்லாஹ்வைக் கொண்டே நிற்கிறதென்று நாம் கூறுகிறோம். இஸ்லாமிய “அகீதா”வும் இவ்வாறே கூறுகிறது. இதன் சாராம்சம் என்னவென்று முஸ்லிம்களில் அநேகர் விளங்கிக் கொள்ளவில்லை. பல்கலைக் கழகங்களில் ஸூபிஸக் கலையில் PhD பட்டம் பெற்றவர்களில் கூட சிலர் இதை விளங்கிக் கொள்ளாமல் இருப்பது என் உள்ளத்தில் வேல் நுழைந்த வேதனையாக உள்ளது. யாரிடம் சொல்லி அழுவது? யாரிடம் முறையிட்டு வலியை குறைத்துக் கொள்வது? PhD செய்தவர்கள் அனைவரையும் நான் கூறவில்லை. அவர்களில் திறமையுள்ளவர்கள் இல்லாமலில்லை. ஆயினும் வெடிக்காத “புஷ்” வானங்களும் உள்ளன.
படைப்பும், படைத்தவனும் வேறு என்று எவன் சொல்கிறானோ அவன் தானறியாமலேயே படைப்பு அல்லாஹ்; போல் தன்னைக் கொண்டு நிற்கிறதென்று சொல்கிறான். அவனிடம் நீ இவ்வாறு சொல்கிறாயே அப்படியானால் படைப்புக்கு கரு எது? அதற்கு மூலம் எது என்று அவனிடம் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால்
அவன் அதற்கு கருவுமில்லை, குருவுமில்லை என்று சொல்வான். அவ்வாறாயின் அது அல்லாஹ் போல் தனக்குத் தானே உண்டாகி தன்னைக் கொண்டு நிற்கிறதென்றா சொல்கிறாய்? என்று அவனிடம் கேட்க வேண்டும். அவன் ஆம் என்று சொன்னால் படைப்பு அல்லாஹ் போல் قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு நிற்கிறதென்ற விடயத்தில் அல்லாஹ்வுக்கு நீ நிகர் – இணை வைத்துவிட்டாய் என்று சொல்ல வேண்டும். அப்துல்லாஹ் என்ற அவனின் பெயரை அப்புஹாமி என்றோ அருணாசலம் என்றோ பெர்னாண்டோ என்றோ மாற்றி முந்தினவனை பௌத மத விகாரைக்கும், இரண்டாமவனை இந்து மத கோயிலுக்கும், மூன்றாமவனை தேவாலயத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு நம்பியோர் எவராயினும் அவரை இவ்வாறுதான் செய்ய வேண்டும்.
அல்லாஹ் திரு மறையில்
إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ
இணை வைத்தோர் அசுத்தமானவர்கள். அவர்கள் “மஸ்ஜிதுல் ஹறாம்” பள்ளிவாயலுக்கு வரக் கூடாதென்று கூறியுள்ளான். (09 – 28)
நான் கூறிவருகின்ற இத் தத்துவத்தின் படி தமது பெயர்களை மாற்றிக் கொண்டு “மஸாஜித்” பள்ளிவாயல்கள் தவிர வேறு மத வழிபாட்டுத் தலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியவர்கள் உலமாஉகளிலும் உள்ளார்கள். பொது மக்களிலும் உள்ளார்கள். இந்த அடிப்படையில் உலக முஸ்லிம்களின் சனத் தொகை ஓர் இலட்சத்தைக் கூட தாண்டாதென்று அடித்துக் கூற முடியும்.
படைப்பு வேறு படைத்தவன் வேறு என்று சொல்பவன் படைப்புக்கு கருவுமில்லை. குருவுமில்லை என்று பதில் சொன்னால்தான் மேலே நான் எழுதிய விபரத்தின் படி அவனைக் கணிக்க வேண்டும்.
அவன் மேற்கண்டவாறு சொல்வதால்தான் படைப்பு அல்லாஹ் போல் தன்னைக் கொண்டு நிற்றல் என்ற அம்சத்தில் அவன் அல்லாஹ்வுக்கு நிகர் – இணை வைத்தவனாகின்றான்.
அவன் அவ்வாறு சொல்லாமல் படைப்பு தன்னைக் கொண்டு நிற்காமல் அல்லாஹ்வைக் கொண்டுதான் நிற்கிறதென்று சொன்னால் அதன் விபரம் என்ன? நீ எவ்வாறு நம்பியுள்ளாய் என்றும், விளங்கியுள்ளாய் என்றும் கேட்க வேண்டும். ஏனெனில் படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்று சொல்பவனும், நம்பினவனும் அதற்கு விளக்கம் கூற வேண்டும். எனக்கு விளக்கம் தெரியாது என்று சொன்னால் அவனும் பெயர் மாற்றிச் செயல்பட வேண்டியவனேயாவான்.
அவன் அ்வ்வாறு சொல்லாமல் பின்வருமாறு விளக்கம் சொன்னால் அதாவது படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்றால் அவனின் நாட்டம் கொண்டும், சக்தி கொண்டும் நிற்கிறதென்று சொன்னால் அவனிடம் பின்வருமாறு கேட்க வேண்டும். அல்லது பின்வருமாறு விளக்கம் கூற வேண்டும்.
அதாவது அல்லாஹ்வின் அறிவு, நாட்டம், சக்தி என்பன அல்லாஹ்வின் “ஸிபாத்” தன்மைகள் எனப்படும். இத்தன்மைகள் அவனின் “தாத்” அல்லது “வுஜூத்” ஐ விட்டும் ஒருபோதும் பிரியாது. அவனின் உள்ளமையையும் விட்டும் பிரிந்து தனியாக நிற்காது.
ஸூபீ மகான்கள் الصفة لا تفارق الموصوف தன்மை என்பது எதை அண்டி நிற்கிறதோ அதை விட்டும் ஒரு விநாடி நேரம் கூட பிரியவும் மாட்டாது. அதைப் பிரித்தெடுக்கவும் முடியாது. என்று கூறியுள்ளார்கள்.
சீனியும், இனிப்பும், மிளகாயும் உறைப்பும் பாகற்காயும், கசப்பும், உப்பும் உவர்ப்பும் போன்று.
இனிப்பு என்ற சீனியின் தன்மையும், கசப்பு என்ற பாகற்காயின் தன்மையும், உறைப்பு என்ற மிளகாயின் தன்மையும், உவர்ப்பு என்ற உப்பின் தன்மையும் அவை அண்டி நிற்கின்ற சீனியை விட்டும், பாகற்காயை விட்டும், மிளகாயை விட்டும், உப்பை விட்டும் ஒருபோதும் பிரிய மாட்டாது.
“ஸிபாத்” தன்மைகள் ஆதேயங்கள் என்றும், அவை எவற்றை அண்டி நிற்கின்றனவோ அவை ஆதாரம் என்றும் சொல்லப்படும். இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
“முசம்மில்” என்பவனின் “இல்ம்” அறிவையும், அவனின் “குத்றத்” சக்தியையும், அவனின் “இறாதத்” நாட்டத்தையும் அவனை விட்டும் பிரிக்க முடியாதிருப்பது போல் அல்லாஹ்வின் எத்தன்மையாயினும் அதை அவனை விட்டும் பிரிக்க முடியாது. அவன் வேறு, அவனின் அறிவு அவனை விட்டும் பிரிந்ததென்றும், அவனின் நாட்டம் அவனை விட்டும் பிரிந்ததென்றும், இதேபோல் அவனின் ஏனைய தன்மைகளும் எக்காரணம் கொண்டும் அவனை விட்டும் பிரிந்ததென்றும் சொல்ல முடியாது.
எனவே, படைப்பு அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டும், அவனின் சக்தியைக் கொண்டும், அவனின் அறிவைக் கொண்டும் நிற்கிறதென்று அவனையும், அவனின் தன்மைகளையும் வோறக்கி சொல்லவே முடியாது.
ஆகையால் படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்றால் அவனின் “தாத்” – உள்ளமை கொண்டுதான் நிற்கிறதேயன்றி அவனின் தன்மைகளை மட்டும் கொண்டு நிற்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். படைப்பு அல்லாஹ்வின் தன்மைகள் கொண்டே நிற்கிறதென்று சொல்பவனுக்கும் இவ்விளக்கத்தை கூற வேண்டும்.
படைப்பு வேறு, படைத்தவன் வேறென்று சொல்பவனிடம் நாம் கேட்கின்ற கேள்விகளுக்கு அவன் கூறும் பதில்கள் என்று நான் மேலே கூறிக் காட்டிய பதில்கள் எல்லாம் மறுக்கப்பட்ட நிலையில் அவனால் இன்னொரு பதில் மட்டுமே கூற முடியும். அது கூட ஆதவனைக் கண்ட பனி போல் அகன்று விடும் பதிலேயாகும்.
அதாவது அவன் தனது வாத்ததிற்கு ஆதாரமாகக் கூறக்கூடிய கடைசித் துரும்பு என்னவெனில் படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்றால் பலமிழந்த வாழை மரம் சாய்ந்து கீழே விழுந்து விடாமல் ஒரு முட்டில் – ஒரு தூணின் உதவி கொண்டு விழாமல் நிற்பது போன்றதே படைப்பு அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்பதாகும்.
அவன் கூறும் இந்த விளக்கமும் அர்த்தமற்ற விளக்கமேயாகும். இதற்கான விளக்கம் அடுத்து வரும் பதிவுகளில் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்! எனது பதிவுகள் மூலம் பயன் பெற விரும்புவோர் எனது பதிவுகளை இடைவிடாது வாசித்தல் வேண்டும்.
இடையில் பொதுவான ஒரு குறிப்பை இங்கு எழுதுகிறேன்.
ஒரு கட்டிடம் உறுதியாக நீண்ட காலம் நிலைத்திருப்பதாயின் அதன் அத்திவாரம் மிக உறுதியாக இருக்க வேண்டும். அத்திவாரம் உறுதியற்றதாயின் கட்டிடம் நீண்ட காலம் நிலைத்திருக்காது. அது சிறிய காற்றுக்குக் கூட நின்று பிடிக்காது. இஸ்லாம் என்ற தொடர்மாடிகளைக் கட்டுவதாயின் அதன் அத்திவாரமான “ஈமான்” நம்பிக்கை மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். அத்திவாரத்தைப் பலப்படுத்தாமல் – நம்பிக்கை என்ற அத்திவாரம் உறுதியாக இல்லாத நிலையில் கட்டிடத்தை அழகு படுத்துவது அறியாமையாகும். இவ்வாறுதான் “ஈமான்” எனும் நம்பிக்கையை பலப்படுத்தாமல் அமல்கள் செய்பவர்களின் நிலையுமாகும்.
தொடரும்..