تَوْحِيْدُ الْوَاحِدِ مُحَالٌ – تَوْحِيْدُ الْكَثِيْرِ مُمْكِنٌ
تَوْحِيْدُ الْوَحْدَةِ مُحَالٌ – تَوْحِيْدُ الْكَثْرَةِ مُمْكِنٌ
தொகுப்பு: அஷ் ஷெய்குல் காமில் ஷம்ஸுல் உலமா, மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லாஹுல் ஆலீ)
“தவ்ஹீத்” என்ற சொல்லின் பொருளைப் புரிந்து கொள்ளாத “தவ்ஹீத் ஜமாஅத்” அமைப்புக்கள் பல உள்ளன.
இன்று உலகில் வாழும் வஹ்ஹாபிகள் தமது அமைப்புகளுக்கு “தவ்ஹீத்” என்ற சொல்லுடன் இன்னும் சில சொற்களைச் சேர்த்து பெயர் வைத்துள்ளார்கள். இது தவறிலும் தவறாகும். இவர்கள் இவ்வாறு பெயர் வைத்திருப்பது கானக்கறுப்பிக்கு வெள்ளையும்மா என்று பெயர் வைப்பது போன்றதாகும். இவ்வாறு பெயர் வைத்தல் ஒரு வகையில் நாகரீகம்தான். இன்னொரு வகையில் மடச்சாம்பிராணிகளின் வேலையாகும். இவர்கள் எந்த வகையில் அவ்வாறு பெயர் வைத்தார்களோ எமக்குப் புரியவில்லை.
வஹ்ஹாபிகளின் குப்பையை கிளறுவது பொன்னான நேரத்தை மண்ணாக்கிவிடுமென்பதால் தலைப்புக்கு வருகிறேன்.
சிருட்டிகள் அனைத்தும், அல்லாஹ்வும் ஒன்று என்று சொல்வதே “தவ்ஹீத்” எனப்படுமேயன்றி எதார்த்தத்தில் ஒருவனாயிருப்பவனை ஒருவனாக்கி வைக்க எவராலும் முடியாது, تَوْحِيْدُ الْوَاحِدِ مُحَالٌ இது ஒரு பொது விதி. புத்தியில்லாத ஒருவனிடம் ஒரு பேனையைக் கொடுத்து இதை ஒன்றாக்கி வை என்றால் ஒன்றை எப்படி ஒன்றாக்குவது என்று கேட்பானே தவிர அவனால் அதை ஒன்றாக்க முடியாமற் போய்விடும்.
எனவே, “தவ்ஹீத்” ஒன்றாக்கி வைத்தல் என்ற பொருளுக்குரிய சொல்லை அல்லாஹ்வுக்குப் பயன்படுத்தி அல்லாஹ்வை ஒன்றாக்கி வைத்தல் என்பது பிழையாகிவிடும். அதிகமாக இருப்பதையே ஒன்றாக்கி வைக்க முடியும். ஒன்றாயிருப்பதை ஒன்றாக்க முடியாது.
ஆனால் பலதை ஒன்றாக்குவது சாத்தியமான விடயம்தான். இந்த அடிப்படையிலேயே பலதாய்த் தோற்றும் படைப்புகள் யாவும் அல்லாஹ்தான் என்று ஒன்றாக்குவதே “தவ்ஹீத்” என்ற சொல்லின் கருத்தாகும். பின்வரும் உதாரணங்களையும் கவனித்தால் உண்மை தெளிவாகும்.
இறைவனை அறிந்து அவனோடு ஐக்கியப் பட வேண்டும் என்று விரும்பிய ஒருவன் இறை ஞானி ஒருவரைச் சந்தித்து எனக்கு இறைவனைச் சொல்லித் தாருங்கள் என்று கேட்டான். அவனுக்கு அந்த ஞானி “எல்லாம் அவனே” என்று சொல்லிக் கொடுத்தார்.
அவன் இந்த ஞானத்தை பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்லும் போது வழியில் ஒரு யானை வந்து கொண்டிருந்தது. அதன் மேல் யானைப் பாகனும் இருந்தான்.
எல்லாம் அவனே என்று ஞானி சொல்லித் தந்த படி யானையும் அவனேதான். நான் வழியில் குறுக்கே படுத்திருப்பேன். யானை என்னை மிதித்தால் குருவின் தத்துவம் பிழையென்று முடிவு செய்வேன். அது என்னை மிதிக்காமல் விலகிச் சென்றால் குருவின் தத்துவம் சரியென்று முடிவு செய்வேன். ஏனெனில் அவன் அவனை மிதிக்க மாட்டான் என்று மனதில் நினைத்துக் கொண்டு வழியின் குறுக்கே காலை நேராக நீட்டிப் படுத்திருந்தான்.
யானை அவனை நெருங்கிய போது ஓரம் போ யானை வருகிறதென்று அந்தப் பாகன் சத்தமிட்டான். அவன் விலகவில்லை. தனது நம்பிக்கையை கைவிடாமல் படுத்தவாறே இருந்தான். மீண்டும் பல தரம் யானைப் பாகன் சத்தமிட்டான். அவன் விலகவே இல்லை. யானை அவனின் காலில் மிதித்து இரண்டு துண்டாக்கிவிட்டுச் சென்றது.
குருவின் தத்துவம் பிழையாகிவிட்டது. அவரிடமே சென்று சொல்லிவிடுவோம் என்று நொண்டினவனாக அவரிடம் சென்று முறையிட்டான். குரு நாதர் அவனிடம் நான் உனக்கு எவ்வாறு சொல்லித் தந்தேன் என்று கேட்டார். எல்லாம் இறைவன் என்று சொல்லித் தந்தீர்கள் என்று அவன் சொன்னான். எல்லாம் அவனே என்று நான் சொல்லித் தந்தபடி யானைப் பாகனும் அவன்தானே! அவனின் சொற்படி நீ ஏன் செயல்படவில்லை? என்று குரு நாதர் கேட்டார். அவன் குருவின் பேச்சை சரி கண்டவனாக தலை குனிந்தான்.
இந்தச் சம்பவத்தின் மூலம் அல்லாஹ் படைத்த அனைத்துப் படைப்புகளும் – அவனிலிருந்து வெளியான யாவும் அவனேதான். அவன் தானானவைதான் என்ற விளக்கம் தெளிவாகிறது.
இன்னுமொரு உதாரணம் எழுதுகிறேன். ஒரு மாணவன் ஓர் இறை ஞானியிடம் வந்து எனக்கு அல்லாஹ் யார் என்று சொல்லித் தாருங்கள் என்று கேட்டான். அதற்கவர் தற்போது நான் வேலையில் உள்ளேன். எனக்கு கடற்கரையில் ஒரு தோட்டம் உள்ளது. இன்று மாலை நாம் அங்கு சென்று உனக்கு தோட்டத்தையும் காட்டிவிட்டு பேசிக் கொள்வோம் என்றார்.
மாலை ஐந்து மணிக்கு இருவரும் தோட்டத்திற்குச் சென்றர்கள். இறைஞானி அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார். அங்குள்ள மா மரத்தைக் காட்டி இது மா மரம் என்றும், பலா மரத்தைக் காட்டி இது பலா மரம் என்றும், வாழை மரத்தைக் காட்டி இது வாழை மரம் என்றும், இன்னுமிவை போல் தோட்டத்திலுள்ள ஒவ்வொன்றையும் காட்டி அவற்றின் பெயர்களையும் சொல்லி முடித்து விட்டு இருவரும் ஓர் இடத்தில் அமர்ந்து குளிர் பானம் குடித்து விட்டு வெளியேற முற்பட்ட போது அந்த மாணவன் இறை ஞான மகானே! தோட்டம் காட்டுவதாகச் சொன்னீர்கள். அதைக் காட்டவுமில்லை. அல்லாஹ் பற்றிச் சொல்லித் தருவதாகச் சொன்னீர்கள். அதையும் நீங்கள் செய்யவில்லை என்றான்.
ஞான மகான் சிரித்துவிட்டு அன்புக்குரிய மாணவனே! இரண்டு பணியையும் நான் செய்து முடித்துவிட்டேன். நீ விளங்கிக் கொள்ளவில்லையா? என்று கேட்டார். அருமை மாணவா! நான் தோட்டத்தைக் காட்டிவிட்டேன். நீயும் கண்டு கொண்டாய். இதுவே தோட்டம் என்பதை அறியாத நிலையில் அதைப் பார்த்து விட்டாய். நீ விளங்கிக் கொள்ளவில்லை. தோட்டம் என்று ஒன்றில்லை. அனைத்து மரங்களையும், செடி கொடிகள் யாவையும், மற்றும் கிணறு, குளம் போன்றவற்றையும் உள் வாங்கிய ஓர் இடத்தின் பெயர்தான் தோட்டம். இது தவிர தோட்டம் என்று தனியான ஒன்று கிடையாது. தோட்டத்தில் உள்ள எதுவும் அதற்கு வேறானதல்ல. இவ்வாறுதான் அல்லாஹ்வுமாவான். உன்னையும், என்னையும், உலகிலுள்ள யாவையும், மற்றும் அனைத்துப் படைப்புக்களையும் உள் வாங்கிய ஒருவனே அல்லாஹ் ஆவான். உன்னாகவும், என்னாகவும் “தஜல்லீ” வெளியாகியிருப்பவன் அவன்தான். எல்லாமே அவன் என்றால் அவனுக்கு நிகர் எவ்வாறு வரும்? குறைந்தபட்சம் நிகர் சொல்வதற்கு இரண்டு பொருளாவது தேவையல்லவா?
அன்புக்குரிய மாணவா! சற்று பொறுமையோடு சிந்தித்துப் பார். நான் இப்போது இறை ஞானத்திற்கு அத்திவாரம் போட்டுத் தந்துள்ளேன். இதன் மேல் எத்தனை மாடியிலும் நீ கட்டிடத்தை அமைத்துக் கொள்ளலாம். முயற்சி செய். முன்னேறு. அவனைத் தனிப் பொருளாக நீ காண முடியாது. ஏதோ ஒரு பாத்திரம் மூலமே அவனைக் காணலாம். காதலியின் நிழலைத் தொடர்ந்து சென்றால்தான் அவள் உன்னைத் திரும்பிப் பார்ப்பாள்.