தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
ஸுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் உலகில் நோயாளியாகவும், பசியுள்ளவனாகவும், தாகமுள்ளவனாகவும் நடமாடுகிறானாம். இது பெருந்தகை பெருமானாரின் அறிவிப்பு. (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம், ஹதீது எண் – 2569)
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي ‘
இந்த நபீ மொழி ஸஹீஹ் முஸ்லிம் என்ற “ஹதீது” நூலில் பதிவாகியுள்ளது.
இதை ஏற்றுக் கொள்ள முடியாமலும், நிராகரிக்க முடியாமலும் வஹ்ஹாபிகள் தடுமாறுகிறார்கள். அவர்களின் தடுமாற்றத்திற்கு பிரதான காரணமாக இருப்பது அல்லாஹ் நோயாளியாகவும், பசியுள்ளவனாகவும், தாகமுள்ளவனாகவும் உலகில் நடமாடுகிறான் என்ற செய்தியேயாகும்.
ஏனெனில் இவர்கள் அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்தில் இருக்கின்றான் என்று நம்பினவர்களும், பேசி வந்தவர்களுமாவர். அதன் பின் பெல்டியடித்து “அர்ஷ்” என்ற இடத்தில் இல்லை அதற்கப்பால் உள்ளான் என்று சொன்னவர்களாவர். இதனால்தான் இந்த நபீ மொழியைக் கண்டு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது போலும். அவர்கள் தடுமாறவும் தேவையில்லை, தடம்புரளவும் தேவையில்லை. அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்தில் இருக்கின்றான் என்றால்தானே தடுமாற்றம் ஏற்படும். “எல்லாம் அவனே” என்றால் ஏன் இந்த தடுமாற்றம்? கொள்கை என்ற “அகீதா” பலமாக இருந்தால் தடுமாற்றம் எதற்கு?! அத்திவாரம் பலவீனம் என்றால்தான் அதன் மேல் கட்டிடம் எழுப்புவதற்குத் தயக்கம் வரும். வஹ்ஹாபீகள் “மிஸ்பாஹீ ஐந்து நட்சத்திர ஹோட்டலில்” ஓர் இரவு மட்டும் “டினர்” எடுத்தால் போதும். ஞானக் கண் தானாகத் திறந்து விடும். தடுமாறாமல் வருவதற்கான முகவரி இதோ. ஞானபிதா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ, காத்தான்குடி. இது போதும். உலகம் முழுவதும் “முஸீபத்” தரித்திரம் இறங்கியதற்கு இவர்களே காரண கர்த்தாக்களாவர்.
ஹதீதின் மொழியாக்கம்:
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள். (அல்லாஹ் மறுமை நாளில் ஓர் அடியானை அழைத்து ஆதம் உடைய மகனே! நான் உலகில் நோயாளியாக இருந்தேன். நீ என்னைப் பார்க்க வரவில்லை என்று சொல்வான். அதற்கவன், இறைவா! நீ உலக மக்களின் நாயகன் அல்லவா? நான் உன்னை நோய் விசாரிக்க எவ்வாறு வருவது? என்று அவன் அல்லாஹ்விடம் கேட்பான். அதற்கு அல்லாஹ், எனது இன்ன அடியான் நோயாளியாக இருந்தான். அவனை நீ பார்க்கவில்லை. நீ அவனைப் பார்த்திருந்தால் அவனிடம் என்னைப் பெற்றிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா? என்று சொல்வான்.
ஆதம் உடைய மகனே! நான் உலகில் உன்னிடம் உணவு கேட்டு வந்தேன். நீ எனக்கு உணவு தரவில்லை என்று சொல்வான். அதற்கு அந்த அடியான் நீ உலக மக்களின் நாயனாயிருக்கும் நிலையில் உனக்கு உணவு தருவது எவ்வாறு? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், எனது இன்ன அடியான் உன்னிடம் வந்து உணவு கேட்ட போது நீ கொடுக்கவில்லை என்பதை அறியவில்லையா? என்று கேட்டபின் நீ அவனுக்கு உணவு வழங்கியிருந்தால் அதை என்னிடம் பெற்றிருப்பாய் என்று கூறுவான்.
ஆதம் உடைய மகனே! தாகத்துக்காக நீர் கேட்டு வந்தேன். நீ எனக்கு தரவில்லை என்று சொல்வான். அதற்கு அந்த அடியான், நீ உலக மக்களின் நாயனாயிருக்கும் நிலையில் உனக்கு நான் நீர் தந்து தாகம் தீரப்பதெவ்வாறு என்று சொல்வான். அதற்கு அல்லாஹ், என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் நீர் கேட்டு வந்தான். நீ கொடுக்கவில்லை. நீ அவனுக்கு கொடுத்திருந்தால் என்னிடம் அதைப் பெற்றிருப்பாய் என்று கூறுவான்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்
ஹதீது எண்: 2569
இந்த நபீ மொழி மிக விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றாகும். அதோடு படித்தவர்களும், பரந்த அறிவுள்ளவர்களும், அதி விவேகமுள்ளவர்களும், ஸூபிஸ ஞானத்துறையில் முத்திப் பழுத்தவர்களும் ஒன்றிணைந்து ஆய்வு செய்ய வேண்டிய ஓர் அறிவுமாகும்.
இந்த நபீ மொழி தருகின்ற வெளிப்படையான கருத்து அல்லாஹ் உலகில் நோயாளியாகவும், பசியுள்ளவனாகவும், தாகமுள்ளவனாகவும் இருந்தான் என்று கூறுகின்றது.
இக்கருத்து “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தோடும், “தஸவ்வுப்” ஸூபிஸக் கலையோடும் தொடர்புள்ளதாகும். இவ்விரு கலைகளும் தெரியாதவர்கள் இது நபீ மொழிதானா? இப்படியும் ஒரு நபீ மொழியா? என்று தலையில் கை வைத்து வியப்படைவார்கள். சில சமயம் மயங்கி விழவும், சில சமயம் ஏங்கி “ஹார்ட்” வெடித்து மரணிக்கவும் முடியும்.
இதில் இப்படியொரு சிக்கல் இருப்பதினால்தான் இது பற்றி ஆராய்ந்தும், ஆய்வு செய்தும் பார்க்க விரும்புவோர் குறித்த இரு கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களாயும், பரந்த அறிவுள்ளவர்களாயும், திறமை மிக்கவர்களாயும், அனுபவம் மிக்கவர்களாயும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன்.
நான் குறிப்பிடும் நிபந்தனைகள் இல்லாத, பாலர் பாடசாலை மாணவர்கள் போன்ற, “வஹ்ததுல் வுஜூத்” என்ற பெயரைக் கூட அறிந்திராதவர்கள் ஆய்வு செய்ததினால்தான் “வஹ்ததுல் வுஜூத்” மற்றும் ஸூபிஸ தத்துவங்களைப் பேசிய எனக்கும், எனது பேச்சை சரி கண்ட இந்நாட்டையும், வெளிநாடுகளையும் சேர்ந்தவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “புத்வா” கொடுத்தார்கள்.
இந்த மகான்கள் எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் மட்டும் மேற்கண்டவாறு “புத்வா” வழங்கவில்லை.
இக்கருத்தை நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு “வஹீ” மூலம் அறிவித்த அல்லாஹ்வுக்கும், இக்கருத்தை தனது “உம்மத்” சமூகத்தவர்களுக்கு கூறிய கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கும், மற்றும் உலகில் தோன்றிய வலீமார், குத்புமார், இறை ஞானிகள் அனைவருக்குமே மேற்கண்டவாறு “புத்வா” வழங்கிவிட்டார்கள். அல்லாஹு அக்பர். ஸுப்ஹானல்லாஹ்!
யஹூதீ, நஸாறாக்களையும், காபிர், முஷ்ரிக்குகளையும் கூட நரக நெருப்பு தீண்டுவதற்குப் பயப்படும். ஆயினும் இவர்களை அது கண்டால் காட்டுப்புலிக்கு புள்ளி மான் கிடைத்தாற் போலவே இருக்கும். நரகத்தின் தீ துள்ளிக் குதித்து வந்து இவர்களைக் கட்டியணைத்து ஆலிங்கனம் செய்யும்.
இஸ்லாமிய வரலாற்றில் இவர்களின் இச்சாதனையே முதலில் கொட்டெழுத்தில் பதிவாகும். இவர்களுக்கு மறுமையில் நீதி கிடைக்குமுன் இவ்வுலகிலேயே அது கிடைத்துவிடும். சிலருக்கு கிடைத்தும் விட்டது.
وهو أحكم الحاكمين
அவன் அனைத்து நீதிவான்களுக்கும் தலைமை நீதிவானாவான். சாம்பல் கேட்ட கதையும், வட்டிலப்பம் கொடுத்த கதையும், அதனால் ஏற்பட்ட அவமானங்களும் மறுக்க முடியாத சான்றுகளேயாகும்.
இந்த நபீ மொழியில் மூன்று இடங்களில் يا ابن آدم ஆதமின் மகனே! என்று அல்லாஹ் அடியானை அழைத்து உரையாடுகிறான். அவன் அழைத்து உரையாடும் மூவரும் ஒருவராக இருக்க வாய்ப்பில்லை. மூன்று அம்சங்களுக்குரிய மூன்று பேர்கள் என்றே கொள்ள வேண்டும். இது ஓர் அம்சம்.
மூன்று பேர்களிடமும் இந்த ஹதீதில் கூறப்பட்ட பாணியில் உரையாடாமல் எனதடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்தான் நீ கொடுக்கவில்லை என்றும், எனதடியான் உன்னிடம் தனது தாகத்தை தீர்க்க நீர் கேட்டு வந்தான் நீ கொடுக்கவில்லை என்றும், எனதடியான் நோயாளியாயிருந்தான் அவனை நீ பார்க்க போகவில்லை என்றும் மட்டும் கூறி அவனுக்குரிய நியாயத்தை வழங்கியிருக்கலாம்.
நான் நோயாளியாக இருந்தேன். நீ பார்க்கவில்லை என்றும், நான் பசியோடு வந்து உணவு கேட்டேன் நீ தரவில்லை என்றும், நான் தாகத்தோடு வந்து நீர் கேட்டேன் நீ தரவில்லை என்றும் சொல்லியிருக்கத் தேவையில்லை.
அல்லாஹ் தனது செயல் எதுவாயினும் அதற்கான காரணத்தை அடியார்களிடம் கூறிக்காட்டி விளக்கம் சொல்லத் தேவையில்லை. இது இன்னோர் அம்சம்.
மறுமையில் அல்லாஹ் அடியானிடம் அவ்வாறு கூறுவதால் எந்த ஒரு பயனும் அவனுக்கு கிடைக்கப் போவதில்லை. இவ்வுலகில் அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் அவனுக்கு சில அறிவுரைகளைக் கூறியிருந்தால் அவன் தனது தவறான நடவடிக்கைகளை திருத்திக் கொள்ள வாய்ப்புக் கிடைத்திருக்கும். இது மற்றோர் அம்சம்.
எனவே, இந்த நபீ மொழி மூலம் உலகில் வாழ்கின்ற தனது அடியார்களுக்கு தன்னைத் தவிர வேறொன்றுமில்லை என்பதையும், உலகில் நோயாளியாக இருந்தவனும் நான்தான், பசியாளியாயிருந்தவனும் நான்தான், தாகித்தவனாயிருந்தவனும் நான்தான், மற்றுமுள்ள எல்லாமாயும் இருப்பவனும் நான்தான் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே இப்படியொரு ஏற்பாட்டை அல்லாஹ் செய்துள்ளான் என்பதும், இதற்கு அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒரு பாலமாக அமைந்துள்ளார்கள் என்பதும் விளங்கப்படுகின்றன.
மறுமையில் நடைபெறுவது போல் சொல்லப்பட்ட இந்த விடயம் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்று நம்பி இவ்வுலகில் வாழ்பவர்களுக்கான எச்சரிக்கையும், வழிகாட்டலுமேயாகும்.
“புத்வா” வழங்கிய முல்லா மகான்களை நீதிமன்றில் சந்திக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு நல்கினால் “எல்லாம் அவனே” என்று இஸ்லாமில் ஒரு தத்துவம் உண்டு என்பதை சர்வதேசமும் அறியச் செய்வேன். இன்ஷா அல்லாஹ்.
சூரியனை உள்ளங்கையால் மறைக்க முடியாது. நரி வாலால் பரந்த சமுத்திரத்தை அளக்க முடியாது.
“புத்வா”வில் அவர்கள் செய்துள்ள இருட்டடிப்புகளும், ஊடுருவல்களும் எனது அடுத்த பதிவில் இடம் பெறும்.
இலங்கை வாழ் ஸூபீகளினதும், தரீகாவாதிகளினதும் “புத்வா”வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை மிக விரைவில் எதிர்பாருங்கள்.