தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
நான் இலங்கைத் திரு நாட்டில் காத்தான்குடி பட்டணத்தில் பிறந்த ஒரு முஸ்லிம். “லா இலாஹ இல்லல்லாஹ் – முஹம்மதுர் றஸூலுல்லாஹ்” என்ற திருக்கலிமாவை ஆராய்ந்தறிந்து நம்பின ஒரு விசுவாசி.
அல்லாஹ்வையும், அவனின் மலக்குகளையும், அவனின் வேதங்களையும், அவனின் திருத் தூதர்களையும், மறுமை நாளையும், “களா – கத்ர்” விதிகளில் நல்லவையும், தீயவையும் அல்லாஹ்வின் செயல்கள் என்றும் நம்பினவன்.
“அகீதா” – இறையியல் கொள்கையில் இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்களையும், மத்ஹபுகளில் இமாம் ஷாபிஈ அவர்களையும், தரீகாக்களில் காதிரிய்யாவையும் பின்பற்றி வாழ்பவன். ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வழியில் நடப்பவன். வஹ்ஹாபிஸக் கொள்கையையும், மற்றும் அது போன்ற வழி கெட்ட கொள்கைகளையும் வெறுத்து நடப்பதுடன் அவற்றை எதிர்த்துப் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்பவன். “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதன் வளர்ச்சிக்காக பேச்சு மூலமும், எழுத்து மூலமும் கடும் முயற்சி செய்பவன். ஸூபீகளையும், இறைஞானிகளையும், தரீகாக்களின் “மஷாயிகு”மார்களையும் தலைமேல் வைத்து கௌரவிப்பவன்.
ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையையும், ஸூபிஸ ஞானத்தையும் வளர்ப்பதற்காகவும், பரப்புவதற்காகவும் தமிழிலும், அறபியிலும் பல நூல்கள் எழுதி பல இலட்சம் ரூபாய் செலவில் அச்சிட்டு இலவசமாக வினியோகிப்பவன். வினியோகித்தவன்.
“வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தைப் பேசியும், எழுதியும் வருபவன். அதை மக்களுக்கு விளக்கி வைப்பதில் இராப்பகலாய் பாடுபடுபவன். இந்த ஞானம் தொடர்பாக சுமார் 800 CD களுக்கும் அதிகமான பேச்சுக்கள் பேசி அன்பளிப்பாக வழங்கினவன். வழங்கியும் வருபவன்.
சுமார் நாற்பதாண்டுகளாக அல்ஜாமிஅதுர் றப்பானிய்யா என்ற பெயரில் எனதூரில் ஓர் அறபுக் கல்லூரி நடத்தி வருபவன். பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல் என்ற பெயரில் ஒரு பள்ளிவாயலும் நடத்தி வருபவன். இதுவரை எனது கல்லூரியில் கற்று மௌலவீ றப்பானீ பட்டம் பெற்றவர்கள் உள்ளூரிலும், வெளியூர்களிலும் சுமார் 70 மௌலவீகள் உள்ளனர்.
நான் பெற்ற கல்விச் செல்வத்தை மற்றவர்களுக்கும் கொடுத்து அவர்களும் என்போல் கல்வியின் – இறைஞானத்தின் பேரின்பம் பருகி மன மகிழ்ச்சியோடும், நிம்மதியோடும் வாழ வேண்டுமென்பதை மட்டும் கருத்திற் கொண்டு அவர்களுக்கு “பைஅத்” ஞான தீட்சை வழங்கி அவர்களை எனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன். மாதத்தில் ஒரு தரம் காதிரிய்யா றாதிப் நடத்தியும், “தரீகா”வோடும், இறை ஞானத்தோடும் தொடர்புள்ள கருத்துக்களை அவர்களுக்குச் சொல்லி வழி நடாத்தியும் வருபவன். என்னிடம் “பைஅத்” ஞான தீட்சை – ஒப்பந்தம் செய்து கொண்ட ஆண்களும், பெண்களும் இவ் ஊரவர்கள் மட்டும் 2000 பேர்களும், இலங்கையில் வெளியூரவர்கள் சுமார் 700 பேர்களும், வெளி நாட்டவர்களில் – இந்தியா, சிங்கப்பூர், மலேசியா வாசிகள் 100 பேர்களும் உள்ளனர்.
1979ம் ஆண்டு காத்தான்குடியில் நடைபெற்ற மீலாத் விழாவொன்றில் பேசிய நான் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தத்துவத்தை பகிரங்கமாகவும், தெளிவாகவும் பேச வேண்டிய நிர்ப்பந்த தேவை எனக்கு ஏற்பட்டதால் பேசினேன். எனது பேச்சை “ஹுலூல் – இத்திஹாத்” என்று தவறாகப் புரிந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்னை அறவே விசாரிக்காமல் எனக்கும், எனது கருத்தை சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கினார்கள். அதை அவர்கள் இன்றுவரை அமுல்படுத்திக் கொண்டே உள்ளார்கள். ஆப்பிழுத்த குரங்குபோல் மாட்டிக் கொண்டதால் ஒன்றுமே செய்ய முடியாமல் மதில் மேல் பூனை போல் இரு பக்கமும் தலையசைத்துக் கொண்டுள்ளார்கள்.
إِنَّ التَّعَصُّبَ دَاءٌ لَا دَوَاءَ لَهُ
إِلَّا بِتَرْكِكَ إِيَّاهُ بِرُمَّتِهِ
என்று ஒரு கவிஞன் சொன்னது இங்கு நினைவுக்கு வருகிறது.
தரமான மௌலவீமார்களில் எத்தனை பேர்களாயினும் என்னிடம் வாருங்கள். மூன்று நாட்கள் என்னிடம் தங்கியிப்பதற்கு நான் எனது செலவில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருகிறேன். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை தொடர்பாக என்னால் முடிந்தவரை விளக்கம் சொல்கிறேன் என்று அவர்களிடம் நான் கூறியும் கூட எனது கோரிக்கை அவர்களின் செவிகளுக்குள் சென்றதாக இல்லை. மாறாக இவர் ஒன்பது மணி நேரம் பேச நாங்கள் கேட்டுக் கொண்டிருக்க நாங்கள் மடையர்களா? என்று ஒரு மௌலவீ மார்தட்டியும் உள்ளார். இவரின் இவ்வசனம் என் நெஞ்சில் குத்திய வேலாயிற்று.
إِنَّمَا الْعِلْمُ بِالتَّعَلُّمِ
அறிவு என்பது அதைக் கற்பது கொண்டே கிடைக்கும் என்ற பெருந்தகை பெருமானாரின் அறிவுரை கூடத் தெரியாதவருடன் நான் எதைப் பேசுவது? என்ன பேசுவது?
ஒரு சமயம் காத்தான்குடி நகர சபையில் எனது தரப்பினருக்கும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தரப்பினருக்கும் இடையே நடந்த உரையாடலின் போது (எனக்கு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையிலுள்ள உலமாஉகள், நீதிவான்கள், சட்டத்தரணிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், புத்தி ஜீவிகள், மற்றும் தரீகாக்களின் மஷாயிகுமார்களில் கணிசமான அளவு ஒன்று கூட்டித் தாருங்கள். நான் அவர்கள் மத்தியில் மூன்று மணி நேரம் தொடராகப் பேசுவேன். நான் பேசி முடிந்தபின் எனது பேச்சு இஸ்லாமிய மூலாதாரங்களுக்கு முரணானதென்று சமூகமீந்த அறிஞர்களால் முடிவு செய்யப்பட்டால் நான் கொண்டு வரும் வாளாலேயே என்னை வெட்டுங்கள்) என்று கூறினேன். என் கூற்று இதுவரை அவர்களின் செவிகளிற் புகுந்து செயல்படாதது அவர்களின் அறியாமையையும், இயலாமையையுமே எடுத்துக் காட்டுகின்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்களுக்கு பல கடிதங்கள் அனுப்பி வைத்தேன். அவற்றில் உங்களுக்கு எதிராக பல இடங்களில் நீங்களே என்னைப் பேச வைக்கிறீர்கள். எனக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்யுங்கள். நான் பேசி வரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை, இஸ்லாமிய தத்துவத்தை சர்வதேசம் அறியுமளவு நீதி மன்றின் மூலம் பகிரங்கப்படுத்த அது எனக்கு ஒரு வாய்ப்பாகிவிடும் என்று எழுதியிருந்தேன். அதற்கும் இதுவரை ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
என்னிடம் “பைஅத்” செய்து கொண்ட அனைவரும் நான் கூறும் கொள்கையை ஏற்றுக் கொண்டு ஸூபிஸ வழி நடக்கும் ஸூபிஸ சமுகத்தைச் சேர்ந்தவர்களேயாவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நானும், எனது கொள்கை வழி செல்வபவர்களும் இந்து மத ஞானம் பேசுபவர்கள் என்றும், “ஷரீஆ” வழி நடப்பவர்கள் அல்ல என்றும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், அவர்கள் எனக்கு வழங்கிய “பத்வா”வை சரி கண்டவர்களும் உண்மைக்குப் புறம்பான பொய்யான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இதனால் எனது கொள்கை பற்றியும், கொள்கையில் என்னுடனுள்ள ஸூபிஸ சமுகம் பற்றியும் குறிப்பிட வேண்டிய அவசியத் தேவை ஏற்பட்டதால் “நானும், ஸூபிஸ சமுகமும்” என்ற தலைப்பில் மேற்கண்ட விபரங்களை எழுதினேன்.
வஹ்ஹாபிஸத்தை ஓரங்கட்டுவதும், ஸூபிஸத்தை ஒளிரச் செய்வதுமே எனது தாகம். இத்தாகம் தீரும்வரை தயங்காமற் செயல்படுவேன். இன்ஷா அல்லாஹ்!