தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
நீதியே நிலையாய் வாழும்!
அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்
இலங்கையில் மட்டுமன்றி உலகின் எந்த ஒரு நாட்டிலும் சரி முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை இடம் பெறும் போது அதை எதிர்த்து அரசியல்வாதிகளும், மார்க்கவாதிகளும் ஆர்ப்பாட்டங்கள் மூலமும், மனித உரிமைகள் அமைப்புகள் மூலமும், நீதித்துறை முலமும் குரல் கொடுக்கின்றார்கள். அதில் வெற்றியும் காண்கிறார்கள். நானும் காலை, இரவு, பகல் என்று பாராமல் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏகன் அல்லாஹ்விடம் தனியாகவும், கூட்டத்தைக் கூட்டியும் பிரார்த்தனை செய்வேன். அனைவரின் முயற்சியால் வெற்றியும் கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
1979ம் ஆண்டு ஸூபிஸ ஞானமும், மஃரிபா எனும் இறையியலும் கூறுகின்ற தத்துவத்தை நான் கூறியதற்காக என்னை விசாரிக்காமலும், ஒரு தவனையேனும் பின் போட்டு ஆராயாமலும் எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்ட உள் நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எம்மைக் கொலை செய்ய வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா “பத்வா” தீர்ப்பு வழங்கியதால் பெரிய முஸ்லிம் சமுகம் ஒன்றே “பத்வா” என்ற தீயில் எரிந்து கொண்டிருக்கிறதே இதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரு அரசியல்வாதி யார்? ஒரு மார்க்கவாதி யார்? ஒரு பொது மகன் யார்? ஓர் ஸுன்னீ யார்? எவருமில்லை. நீதி செத்துவிட்டது. தலையில்லாத, உயிரில்லாத “பத்வா”வினால் இன்று வரை எரிந்து கொண்டிருக்கும் ஒரு சமுகத்திற்காக – அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகளில் “ஈமான்” உள்ள ஒரு ஜீவன் இல்லையா? மார்க்கவாதிகளில் ஓர் ஆலிம் இல்லையா? முஸ்லிம் தலைவர்களிலும், பிரமுகர்களிலும் ஒருவர் இல்லையா? இவர்கள் எங்கே போய்விட்டார்கள். உறங்குகின்றார்களா? அல்லது இவர்கள் நீதிக்காக குரல் கொடுக்க நீதி தெரியாதவர்களா?
இன்று திருக்குர்ஆன், ஹதீது, இஜ்மாஉ, கியாஸ் என்ற இஸ்லாமிய நான்கு மூலாதாரங்களில் திருக்குர்ஆனையும், ஹதீதையும் மட்டும் எடுத்துக் கொண்டு “மத்ஹப்” தேவையில்லை என்றும், இமாம்கள் தேவையில்லை என்றும், தரீகாவும் தேவையில்லை, “மஃரிபா”வும் தேவையில்லை என்றும், அவ்லியாஉகளையும், எமது உயிரினும் மேலான அண்ணலெம் பெருமானை கண்ணியம் செய்வது கூட “ஷிர்க்” என்றும் உளறிக் கொண்டிருக்கின்ற விறகை நெருப்புத் தின்பது போல் மார்க்க அனுஷ்டானங்களை தின்று சப்பித்துப்பும் வஹ்ஹாபிஸ அமைப்புக்களை அரசு தடை செய்தமைக்காக நீதி பேச முன்வருகின்ற முஸ்லிம் சகோதரர்கள், அரசியல்வாதிகள், முஸ்லிம் தலைவர்கள் இவ்விடயத்தில் நீதிக்காய் மட்டும் குரல் கொடுக்க முன்வர வேண்டுமென்று அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
ஸூபிஸ சமுகமும் “லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ்” என்று “ஈமான்” விசுவாசம் கொண்ட முஸ்லிம்கள்தான் என்பதைக் கருத்திற் கொண்டு செயல்பட வேண்டுமென்று மீண்டும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
ஆனால் வியப்பான விடயம் என்னவெனில் சில சமுக ஊடக வாய் வீச்சாளர்கள் இன்று தடை செய்யப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள வஹ்ஹாபிஸ அமைப்புக்களுக்கு ஆதரவாக முகமூடிக்குள் ஒழிந்து கொண்டு குரல் கொடுக்க முன் வந்துள்ளார்கள். அவர்கள் கூறும் காரணம் அவர்களைத் தடை செய்வது முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை என்பதாகும். இது முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை எனின் எனக்கும், எனது கருத்துக்களைச் சரிகண்டவர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளை என்னென்று சொல்வது? ஒரே சமுகத்தினுள் வாழும் உறவுகளுக்கு சொல்லொணா அநியாயங்களைச் செய்துவிட்டு அவை நியாயம் என்று மௌனிகளாய் இருப்பது நீதியானதா?
நீதிக்காக தலை சாய்ப்போம்.
நீதிக்காக தலையையும் கொடுப்போம்.