Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் உலமாஉகளே!

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் உலமாஉகளே!

தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் உலமாஉகளே! (திருக்குர்ஆன்: 35-28)
 
திருக்குர்ஆன் வசனங்களிற் பல வசனங்கள் ஏழு “காரீ”களால் பலவிதமாக ஓதப்பட்டுள்ளன. ஏழு “காரீ”களால் மட்டும் எவ்வாறு ஓதப்பட்ட வசனமாயினும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதேயாகும்.
 
உதாரணமாக “ஸூறதுல் பாதிஹா” என்ற அத்தியாயம் உலக முஸ்லிம்களில் தொழுகின்ற அனைவரும், தொழாதவர்களிற் சிலரும் மனனமாக ஓதி வருகின்ற ஓர் அத்தியாயமாகும். திருக்குர்ஆன் பிரதிகளைப் பார்த்து ஓதத் தெரிந்தவர்களும் உள்ளனர்.

இவ் அத்தியாயத்தில் مَالِكِ يَوْمِ الدِّيْنِ என்று ஒரு வசனம் வருகிறது. இதன் பொருள் “அல்லாஹ் தீர்ப்பு நாளின் அரசன்” என்பதாகும்.
 
நமது நாட்டிலுள்ள திருக்குர்ஆன் பிரதிகளில் குறித்த வசனத்தில் مَالِكِ “மாலிகி” என்றுதான் உள்ளது. இவ்வாறே நாம் அனைவரும் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் ஓதி வருகிறோம்.
 
எனினும் இச் சொல்லை مَلِكِ “மலிகி” என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏழு “காரீ”களிற் சிலர் ஓதியுள்ளனர். இவ்வாறு ஓதுவது தவறுமில்லை. இவ்வாறு ஓதினால் தண்டனையுமில்லை. விரும்புவோர் எவ்வாறும் ஓத முடியும். தவறில்லை. தொழுகையிலும் ஓதலாம். அதற்கு வெளியிலும் ஓதலாம். அறபு நாடுகளிற் சில நாடுகளில் இவ்வாறுதான் தொழுகையில் ஓதப்பட்டு வருகிறது.
 
இதுபோன்றதே وَالضُّحَى “வழ்ழுஹா” அத்தியாயமும் ஆகும். இதைப் பின்வருமாறும் ஓதலாம்.
 
உதாரணமாக வழ்ழுஹே வல்லைலி இதா ஸஜே, மாவத்தஅக றப்புக வமா கலே, வலல் ஆகிறது கைறுன் லக மினல் ஊலே, வலஸவ்ப யுஃதீக றப்புக பதர்ளே, அலம் யஜித்க யதீமன் பஆவே, வவஜதக ளால்லன் பஹதே, வவஜதக ஆஇலன் பஅங்னே! என்பது போன்று. இவ்வாறு ஓதலாம். தவறுமில்லை. தண்டனையுமில்லை. எனினும் நமது நாட்டு வழக்கத்தின் படி ஓதுவதால் சர்ச்சைகள் குறையும்.
 
இவ்வாறுதான் நான் தலைப்பில் எழுதிய திருவசனமுமாகும். இவ்வசனத்தை தலைப்பில் எழுதியுள்ளவாறும் ஓதலாம்.
 
إِنَّمَا يَخْشَى اللَّهُ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءَ
இவ்வாறும் ஓதலாம். அதாவது “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு “ழம்மு” வைத்தும், “அல் உலமாஅ” என்ற சொல்லுக்கு “பத்ஹ்” வைத்தும் ஓதலாம்.
 
நான் மேலே எழுதியது போல் “மாலிகி” “மலிகி” என்று ஓதுவதால் பொருளில் மாற்றம் வராது. இதேபோல் “வழ்ழுஹா” அத்தியாயத்தை நான் எழுதிக் காட்டியவாறு ஓதுவதாலும் பொருளில் மாற்றமில்லை.
 
ஆயினும் தலைப்பில் எழுதப்பட்ட திருவசனத்தை மாற்றி ஓதுவதால் பொருளும் மாறிவிடும்.
 
அதாவது “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு “பத்ஹ்” வைத்து اللهَ என்றும், العُلَمَاءُ “அல் உலமாஉ” என்ற சொல்லுக்கு “ழம்மு” வைத்தும் ஓதினால் அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வை அஞ்சுவோர் உலமாஉகள்தான் என்று பொருள் வரும். இதற்கு மாறாக “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு “ழம்மு” வைத்தும், “அல் உலமாஅ” என்ற சொல்லுக்கு “பத்ஹ்” வைத்தும் ஓதினால் அல்லாஹ் தனது அடியார்களில் உலமாஉகளையே அஞ்சுகிறான் என்று பொருள் வரும். திருக்குர்ஆனை ஓதிய “காரீ”களிற் சிலர் மேற்கண்டவாறு ஓதியுள்ளார்கள்.
 
முதலாவது பொருளின் படி (அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோர் உலமாஉகள்தான்) என்பது பற்றி நாம் பேசத் தேவையில்லை. பொதுவாக அறியப்பட்ட பொருள் இதுதான்.
 
இரண்டாவது பொருளின் படி – அல்லாஹ் தனது அடியார்களில் உலமாஉகளையே அஞ்சுகிறான் – என்று பொருள் வரும். இப்பொருள்தான் ஆய்வு செய்ய வேண்டிய பொருளாகும்.
 
அல்லாஹ் தனது அடியார்களில் உலமாஉகளை ஏன் அஞ்சுகிறான்? எதற்காக அஞ்சுகிறான்? என்பது வியப்பான கருத்தாக உள்ளது. எதார்த்தத்திற்கு முரணான கருத்தாகவும் தோணுகிறது. இதனால் இது தொடர்பாக ஆய்வு செய்யவே வெண்டும்.
 
உலமாஉகள் என்போர் பொது மக்களை விட அல்லாஹ்வை நன்றாக அறிந்தவர்கள். அவர்கள் அவனை அஞ்சி வாழ வேண்டும். ஆயினும் உலமாஉகளை அவன் அஞ்சுகிறான் என்றால் அவர்கள் பொது மக்களைவிட கெட்டவர்களாக இருக்க வேண்டுமென்று தோணுகின்றதல்லவா?
 
பொது மக்கள் தொழாமல் இருந்தாலும் உலமாஉகள் தொழாமல் இருக்கமாட்டார்கள். இருக்கவும் கூடாது. பொது மக்கள் இதுபோல் பல தவறுகள் செய்யலாம். ஆனால் உலமாஉகள் என்போர் ஒரு தவறும், ஒரு பாவமும் செய்யாதவர்களாகவே இருக்க வேண்டும். இதுவே எதார்த்தம். இதுவே உலக மகக்ளின் பார்வையுமாகும்.
 
இதன் விளக்கம் என்னவெனில் زَلَّةُ الْعَالِمِ زَلَّةُ الْعَالَمِ “ஸல்லதுல் ஆலிம் ஸல்லதுல் ஆலம்” ஓர் ஆலிமின் கால் சறுகுதல் ஓர் ஆலம் கால் சறுகுதலாகும் என்று ஒரு பழமொழி உண்டு.
 
இதன் விளக்கம் என்னவெனில் ஓர் ஆலிம் செய்யும் தவறு ஓர் “ஆலம்” உலகிலுள்ள மக்கள் அனைவரும் செய்யும் தவறு போன்றதாகும்.
 
ஒரு பொது மகன் – மார்க்க ஞானமில்லாதவன் ஒரு தவறு செய்தால் அது அவனோடு மட்டும் நின்று விடும். அடுத்த வீட்டுக்கும் கூட தெரியாமற் போய்விடும். ஆயினும் ஓர் ஆலிம் ஒரு தவறு செய்தால் அது பேசும் பொருளாக நாடெல்லாம் பகிரங்கமாகி விடும். எனவே, அறிந்து தவறு செய்பவனுக்கும், அறியாமல் தவறு செய்பவனுக்கும் வித்தியாசமுண்டு. அறிந்து செய்பவனுக்கு தண்டனையும் கடுமையானதே!
 
وَكُلُّ مَنْ بِغَيْرِ عِلْمٍ يَعْمَلُ
أَعْمَالُهُ مَرْدُوْدَةٌ لَا تُقْبَلُ
அறிவின்றி அமல் செய்பவர்களின் அமல்கள் எல்லாம் ரத்துச் செய்யப்பட்டதாகும்.
 
وَعَالِمٌ بِعِلْمِهِ لَنْ يَعْمَلَنْ
مُعَذَّبٌ مِنْ قَبْلِ عُبَّادِ الْوَثَنْ
ஓர் அறிஞன் தான் அறிந்தபடி செயல்படவில்லையாயின் அவன் விக்கிரகம் வணங்கினோர் வேதனை செய்யப்படுமுன் வேதனை செய்யப்படுவான். இது இஸ்லாமிய சட்டக்கலையோடு தொடர்புள்ள விடயமாகும்.
 
உதாரணத்திற்காக ஒன்றைக் கூறுகின்றேன். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தீ அவர்கள் பௌத விகாரை சென்று கையில் வெசாக் விளக்கேந்தி நின்றார். இதை TV மூலம் உள்நாடு, வெளிநாடு மக்கள் பார்த்தனர். அவர் மார்க்கம் தெரியாத ஒரு பொது மகனல்ல. அவர் “அவாம்”களில் சேரமாட்டார். அவர் ஓர் ஆலிம் மட்டுமல்ல. “பத்வா” வழங்கும் “முப்தீ”யுமாவார். அதிசயமென்னவெனில் அவரின் பட்டமே “முப்தீ”தான். இத்தகைய ஒருவர் இப்படியொரு வேலை செய்தது முஸ்லிம்களில் இறையச்சமுள்ளவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத, வெறுக்கத்தக்க விடயமாகிவிட்டது. சாமானிய மனிதனுக்கே வெறுக்கத்தக்கதான விடயமென்றால் அல்லாஹ் இவரை கட்டியணைத்து முத்தங்கள் சொரிந்தா இருப்பான்?
 
இவ்வுதாரணத்தின் மூலம் அல்லாஹ் தனது அடியார்களில் உலமாஉகளையே அஞ்சுகிறான் என்று திருக்குர்ஆன் கூறியது ரிஸ்வி முப்தீ அவர்களுக்கு கூறினாற் போலல்லவா உள்ளது?
 
திரு வசனத்தின் அருமையான பொருள் இப்போது விளங்குகிறதல்லவா?
 
முஸ்லிம் அரசியல்வாதிகளே! முஸ்லிம் தலைவர்களே! பிரமுகர்களே! உலமாஉகளே! கல்லையும், பொல்லையும் வணங்குவது மட்டும் பாவமில்லை. மனச் சாட்சிக்கு முரணாக, மார்க்கத்திற்கு முரணாக நடப்பதும் பாவமேயாகும். நீதி செய்யும் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்வது நான் உள்ளிட்ட அனைவரினதும் கடமைதான். இதில் தவறு செய்தோர் அனைவரும், மற்றும் அதைத் தட்டிக் கேட்காமல் மௌனமாயிருந்த அனைவரும் மறுமையில் அல்லாஹ்வின் நீதி மன்றில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு துருவித்துருவி கேள்வி கேட்கப்படுவர் என்பதை நானும் மறக்கலாகாது. மற்றவர்களும் மறக்கலாகாது. ரிஸ்வி முப்தியின் மார்க்க துரோகத்தைக் கண்டும் காணாதவர்கள் போலிருந்த அனைவரும் மறுமையில் விசாரிக்கப்படும் போது நானும் அங்கு இருப்பேன் என்பதை ரிஸ்வியின் செயலைக் கண்டும், கேட்டறிந்தும் மௌனியாயிருந்த மார்க்க மேதைகளும், கலாநிதிகளும் விளங்கிக் கொள்ள வேண்டும். தீர்ப்பு நாளில் அமைச்சுப் பதவியும் வேலை செய்யாது. வட்டிலப்பமும் வேலை செய்யாது. அல்லாஹ்வின் ஆட்சி மட்டுமே நடக்கும்.
 
அல்லாஹ் தனது அடியார்களில் மார்க்க அறிஞர்களை அஞ்சுவதற்கான காரணம் மார்க்க விடயத்திலும், கொள்கையிலும் பொது மக்கள் வழி தவறிப் போவதற்கு மார்க்க அறிஞர்களே காரணகர்த்தாக்களாவர். ஏனெனில் சாமானிய மக்கள் உலமாஉகளையே பின்பற்றுவார்கள். உலமாஉகள் ஒரு தவறு செய்தால் அதற்கு ஏதேனுமோர் ஆதாரம் இருப்பதினால்தான் அவர்கள் செய்கிறார்களேயன்றி ஆதாரமில்லாமல் எதையும் செய்யமாட்டார்கள் என்று நம்பி பொது மக்களும் அவர்கள்போல் செய்வார்கள்.
 
எனவே, பொது மக்களால் பொது மக்கள் வழிகெட்டுப் போவதை விட அவர்கள் உலமாஉகளால் வழி கெட்டுப் போவதே நடைமுறையில் அதிகமாக உள்ளது.
 
அல்லாஹ் தனது அடியார்களில் உலமாஉகளான மார்க்க அறிஞர்களை அஞ்சுகிறான் என்று திருக்குர்அன் வசனம் கூறுவது போல் பல ஹதீதுகள் – நபீ மொழிகளும் கூறுகின்றன. அவற்றை இங்கு எழுதி விடயத்தைப் பெரிதாக்க நான் விரும்பவில்லை.
 
எனவே, உலமாஉகள் மார்க்க அறிஞர்கள் ஏதாவது ஒரு விடயத்திற்கு “பத்வா” தீர்ப்பு வழங்குவதாயின் அந்த விடயம் தொடர்பான அறிஞர்களோடு ஆலோசனை செய்தும், கலந்துரையாடியுமே தீர்ப்பு வழங்க வேண்டும்.
 
ஸூபிஸம் தொடர்பான ஒரு விடயம் சரியென்றோ அல்லது பிழையென்றொ “பத்வா” வழங்குவதாயின் அந்த ஞானத்தில் திறமையுள்ள ஒருவரை அல்லது பலரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகுதான் “பத்வா” வழங்க வேண்டும். ஸூபிஸம் தொடர்பான ஒரு விடயத்திற்கு “பத்வா” வழங்குவதற்கு علم الفلك – வானவியற்துறையில் திறமையுள்ள ஒருவரிடம் ஆலோசனை கேட்பது அறியாமையாகும்.
 
ஸூபிஸ ஞானக் கருத்துக்களைக் கூறிய என்னை ஒரு தரமேனும் விசாரிக்காமலும், அத்துறை சார்ந்த மகான்களிடம் ஆலோசனை பெறாமலும் எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” என்று தீர்ப்பு வழங்கியது மட்டுமன்றி எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் எழுத்து மூலம் தீர்ப்புக் கூறியதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்வதற்கு மார்க்கத்திலும் இடம் இல்லை. மனச்சாட்சிக்கும் இது மாறானதாகும்.
 
உலமாஉகளே இப்படியொரு தவறை செய்துவிட்டிருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுவது எவ்வாறு? “பத்வா” வாபஸ் பெறப்படாமல் ஒற்றுமை ஏற்பட இஸ்லாமிய சட்டத்தில் இடமே இல்லை என்பது உலமாஉகளுக்கு தெரிந்த விடயமேயாகும். ஆகையால் சமாதானத்தை நூறு வீதம் விரும்புகின்ற நாங்கள் எங்களின் அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக நிம்மதியாக வாழ்வதற்கு சமாதான விரும்பிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமேயன்றி ஒரு பக்க சார்பாக நின்றுகொண்டு என்னைக் குறை கூறுவது அறிவுடைமையல்ல என்பதை சமாதானத்தை விரும்புகின்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments