Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“தீன்” என்ற சொல் எதையெல்லாம் உள்வாங்கியது?(ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத்)

“தீன்” என்ற சொல் எதையெல்லாம் உள்வாங்கியது?(ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத்)

தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) 
دِيْنْ
– “தீன்” என்ற சொல் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற நான்கு அம்சங்களில் ஹகீகத், மஃரிபத் என்ற இரண்டையும் ஒன்றாக்கி மூன்று அம்சங்களையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும்.
 
“தீன்” என்ற சொல்லுக்கு மார்க்கம் என்பதே பொருள். மார்க்கம் என்ற சொல் மேற்கண்ட மூன்று அம்சங்களையும் உள்வாங்கியதாகும். இதற்கு ஸஹீஹான நபீ மொழி ஆதாரமாக உள்ளது. அதை முழுமையாக எழுதாமல் அதில் தேவையான குறிப்பை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

ஒரு சமயம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோழர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் ஒருவர் அங்கு வந்து யா முஹம்மத்! எனக்கு இஸ்லாம் பற்றி சொல்லித் தாருங்கள் என்றார். நபீகள் நாயகம் சொல்லிக் கொடுத்தார்கள். இரண்டாவதாக “ஈமான்” பற்றிச் சொல்லித் தாருங்கள் என்றார். அதையும் சொல்லிக் கொடுத்தார்கள். மூன்றாவதாக “இஹ்ஸான்” அதாவது “இக்லாஸ்” பற்றிக் கேட்டார். அதற்கு
 
أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ
என்று கூறினார்கள். இறுதியில் இருந்த தோழர்களிடம் இங்கு வந்து கேள்வி கேட்டுச் சென்றவர் யார் தெரியுமா? என்று கேட்டார்கள். அவர்கள் தெரியாதென்று சொன்னார்கள். அப்போது நபீகளார்
 
هذا جبريلُ أَتَاكُمْ لِيُعَلِّمَكُمْ أمور دِينَكُمْ
இவர்தான் ஜிப்ரீல். உங்களின் “தீன்” மார்க்க விடயங்களை உங்களுக்கு கற்றுத்தரவே வந்தார் என்றார்கள்.
 
இந்த நபீ மொழி மூலம் இஸ்லாம், ஈமான், இக்லாஸ் இம் மூன்றையும் உள்வாங்கியதே “தீன்” மார்க்கம் என்பது தெளிவாக விளங்குகிறது. இம் மூன்றிற்கும் “தீன்” என்று பெயர் சொன்னவர்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களே!
 
“தப்லீக் ஜமாஅத்” அமைப்பிலுள்ளோர் தம்மை தாமே தீன் பணி செய்வதாகச் சொல்கின்றார்கள். இதேபோன்று தான் ஏனைய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சொல்கிறார்கள்.
 
“தீன்” என்ற சொல் மேலே கூறிய மூன்று அம்சங்களையும் உள்வாங்கிய சொல்லாதலால் தீன் பணி செய்யும் தப்லீக் அமைப்பினர் மூன்று அம்சங்கைளயும் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேபோல் ஏனைய அமைப்பைச் சேர்ந்தவர்களும் இம் மூன்று அம்சங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அவர்கள் “தீன்” பணி செய்தவர்களாவர்.
 
ஆயினும் தப்லீக் அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஏனைய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதுகால வரை எங்கேயும் குறித்த மூன்று அம்சங்களையும் மக்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை வழிகாட்டியதற்கு வரலாறுமில்லை. ஆதாரமும் இல்லை. அனைத்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் “ஷரீஆ”வை மட்டுமே சொல்லிக் கொடுக்கின்றார்களேயன்றி மற்ற இரண்டு அம்சங்களில் எதையும் சொல்லிக் கொடுத்து வழி நடத்துவதாக இல்லை. இதற்கு வெளிப்படையான ஆதாரம் அவர்களில் எவரும் “தரீகா” பற்றியும், “ஹகீகா” பற்றியும் பேசுவதே இல்லை. அது மட்டுமல்ல. அவர்கள் அவற்றை எதிர்ப்பவர்களாகவே உள்ளனர்.
 
தப்லீக் அமைப்பைச் சேர்ந்த ஹஸ்றத்மார்கள் கூட “ஷரீஆ” மட்டும் பேசுகிறார்களே தவிர மற்ற மூன்றில் எதையும் மக்களுக்குச் சொல்வதில்லை. எந்த அமைப்பாயினும் பொதுவாக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஹகீகா, தரீகா, மஃரிபா பேசாத காரணத்தினால்தான் பொது மக்கள் அவற்றை எதிர்க்கின்றனர்.
 
“தீன்” மார்க்கத்தின்பால் மக்களை அழைக்கும் “தாயீ”கள் – அழைப்பாளர்கள் எவ்வாறு மக்களை அல்லாஹ்வின் வழிக்கு அழைக்க வேண்டுமென்று திருக்குர்ஆன் கூறியுள்ளதோ அவ்வாறே அழைக்க வேண்டும். இதுவே சரியான வழி.
 
ஆனால் இன்றுள்ள எந்த அமைப்பைச் சேர்நதவர்களாயினும் அல்லாஹ் சொன்ன வழியை முழுமையாக கை விட்டு அவர்கள் கதை சொல்லியே காலம் நகர்த்துகிறார்கள். இதனால் மக்கள் ஆன்மீகம் ஒரு சொட்டேனும் தெரியாதவர்களாகிவிட்டனர்.
 
அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் “ஷரீஆ”வை மட்டும் சொல்லிக் கொடுப்பதற்கும், மற்ற மூன்றையும் விட்டதற்கும் காரணம் மற்ற மூன்றும் அவர்களுக்குத் தெரியாமற் போனதென்றே நான் நினைக்கிறேன். அல்லது அவர்கள் அவற்றை எதிர்க்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
 
அல்லாஹ் சொன்ன வழி.
 
இஸ்லாம் மார்க்கத்தின் பக்கம் – அல்லாஹ்வின் வழிக்கு மக்களை அழைப்பதற்கு அல்லாஹ் காட்டிய வழி பின்வருமாறு.
 
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ
மக்கள் மத்தியில் “ஹிக்மத்” தத்துவம் சொல்லி அவர்களை அல்லாஹ்வின் வழிக்கு அழையுங்கள்.
திருக்குர்ஆன் 16-125)
 
“ஹிக்மத்”தைக் கூறி மக்களை அழைக்குமாறுதான் அல்லாஹ் சொல்லியுள்ளானேயன்றி சுவர்க்கத்தை ஆசையூட்டி நரகத்தை எச்சரித்து மக்களை அழைக்குமாறு கூறவில்லை.
 
இன்று “தாயீ” என்ற பெயரில் பலர் வருகின்றனர். அவர்களில் எவரும் அல்லாஹ் சொன்னது போல் செயல்படுவதாக இல்லை. நான்கு அம்சங்களில் அல்லது மூன்று அம்சங்களில் தரீகா, ஹகீகா, மஃரிபா பேச வேண்டியவர்கள் தரீகாவின் ஷெய்குமார்களேயாவர். அவர்கள் கூட “ஷரீஆ” தவிர வேறொன்றும் பேசுபவர்களாக இல்லை.
 
“ஹிக்மத்” என்றால் என்ன?
 
“ஹிக்மத்” என்றால் தத்துவம். இச் சொல்லை முஸ்லிம்கள் தமது அன்றாடப் பேச்சு வழக்கில் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். அவர்கள் அதை தந்திரம் என்ற பொருளுக்கு பயன்படுத்துகிறார்களேயன்றி அதன் சரியான பொருளை அறிந்தல்ல. உதாரணமாக அவனுடன் பேசும் போது “ஹிக்மத்”தாகப் பேச வேண்டும். அவனுடன் “ஹிக்மத்”தாக நடந்து கொள்ள வேண்டும் என்பது போல்.
 
தந்திரம் என்பதற்கும், தத்துவம் என்பதற்கும் வானத்திற்கும், பூமிக்குமுள்ள தூரம் உண்டு. தந்திரம் என்பதற்கு “ஹீலா” என்ற சொல்தான் பயன்படுத்தப்படும். தத்துவம் பேசி அழைப்பதே மார்க்கம். தந்திரம் பேசி அழைப்பது பிழை. மக்களை தந்திரமாக இஸ்லாமின் பால் அழைக்க அது என்ன பொய்யான மார்க்கமா?
 
اَلْحِكْمَةُ عِلْمٌ يُبْحَثُ فِيْهِ عَنْ حَقِيْقَةِ كُلِّ شَيْئٍ
இதுவே இச் சொல்லுக்கான வரைவிலக்கணமாகும். இதன் பொருள் ஒவ்வொரு வஸ்த்தின் எதார்த்தம் பற்றி ஆய்வு செய்யப்படும் அறிவிற்கு “ஹிக்மத்” என்று சொல்லப்படும்.
 
உதாரணமாக மனிதன் எங்கிருந்து வந்தான்? அவனின் இரகசியம் என்ன? வணக்கம் என்றால் என்ன? வழி கேடு என்றால் என்ன? இறைவன் என்றால் யார்? என்பன போன்ற விடயங்களை ஆராயப்படும் கலைதான் “ஹிக்மத்” எனப்படும்.
 
நமது நாட்டிலுள்ள அமைப்புக்களில் எந்த ஓர் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் “இல்முல் ஹிக்மத்” பேசி மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதை நான் காணவுமில்லை, கேள்விப்படவும் இல்லை. பெரும் பெரும் கலாநிதிகளும், கலை நதிகளும் பேசுகிறார்கள்தான். ஆயினும் அவர்களின் பேச்சு உப்பு, உறைப்பு இல்லாத உணவு போன்றே உள்ளது. எந்த ஒரு சுவையும் இல்லை. இத்தகையோர் 100 பேர்கள் மத்தியில் பேசினால் 98 பேர்கள் குறட்டை விட்டு உறங்கத்தான் செய்வார்கள். இவ்வாறாக அவர்களை நாம் வெள்ளிக்கிழமை ஜுமஆப் பிரசங்கத்தின் போது காண்கிறோம். இவர்கள் பிரசங்கம் செய்வதில் பயிற்சி பெற்ற பின் பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்களில் ஜும்ஆ, குத்பா செய்தல் வேண்டும்.
 
தப்லீக் சகோதரர்களின் கவனத்திற்கு.
 
நீங்கள் முழுமையான வஹ்ஹாபிகள் அல்ல. இதை நான் அறிவேன். எனினும் நீங்கள் 50 வீதம் ஸுன்னீகளாகவும், 50 வீதம் ஸுன்னீகளுக்கு மாற்றமானவர்களாகவும் உள்ளீர்கள். நீங்கள் “முகல்லித்” வஹ்ஹாபிகளாவீர்கள்.
 
நீங்கள் வஹ்ஹாபிகளுக்கெதிராக அவர்களின் கொள்கை பிழையென்றும், அவற்றில் ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டியும் பகிரங்கமாகப் பேச வேண்டும். இதுகால வரை நீங்கள் பேசவில்லை.
வலீமார், நல்லடியார்களை “ஸியாறத்” செய்தல் “ஸுன்னத்” என்றும், அவர்களின் கப்றுகளை முத்தமிடுவது ஆகுமென்றும், அவற்றுக்கு போர்வை போர்த்தி கண்ணியப்படுத்துவது ஆகுமென்றும் நீங்கள் பகிரங்கமாக பேசவும் வேண்டும். அவற்றை நீங்கள் செய்யவும் வேண்டும்.
உங்களின் தலைமை “மர்கஸ்” இல் றபீஉனில் அவ்வல் 12 நாட்களும் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைப் புகழ்ந்து ஸுப்ஹான மௌலித் ஓதி கந்தூரி செய்ய வேண்டும்.
இன்னுமிது போல் பிரசித்தி பெற்ற வலீமாரின் நினைவு தினங்களில் ஒரு யாஸீன் மட்டுமாவது ஓதி அந்த நாளை கண்ணியப் படுத்த வேண்டும்.
ஒரு வாரத்தில் ஒரு நாள் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை புகழ்ந்து பாடப்பட்ட “கஸீததுல் புர்தா” ஓத வேண்டும்.
இன்னுமிவை போன்ற ஸுன்னத்தான நற்காரியங்கள் செய்ய வேண்டும்.
“தப்லீக் ஜமாஅத்” தொடர்பாக மக்களுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதாயின் மேலே சொன்ன விடயங்களைப் பகிரங்கமாகச் செய்யவும் வேண்டும். தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை இதுதானென்று விளக்கமாக பத்திரிகையில் ஓர் அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செய்தீர்களாயின் ஸுன்னீ உலமாஉகளும், ஸுன்னீ கொள்கையுள்ள பொது மகக்ளும் உங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தப்லீக் சகோதரர்களே!
உங்கள் பற்றி ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகளில் அநேகர் நீங்கள் அனைவரும் “முகல்லித் வஹ்ஹாபிகள்” என்றே கூறுகின்றார்கள். ஸூபீகளான நாங்களும் உங்களை அவ்வாறே பார்க்கின்றோம். நீங்கள் “மத்ஹப்”களை பின்பற்றுகிறீர்கள். இவ்விடயத்தில் மட்டுமே நீங்கள் வஹ்ஹாபிஸத்திற்கு வேறுபட்டவர்களாக உள்ளீர்கள். ஏனைய விடயங்களில் நீங்கள் வஹ்ஹாபிகள் என்றே ஸுன்னீ உலமாஉகளும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய பொது மக்களும் அறிந்து வைத்துள்ளனர். அரசாங்கமும் அவ்வாறே அறிந்து வைத்துள்ளதாக நான் அறிகிறேன். உங்களின் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்புக்களில் இதுவரை இல்லையாயினும் உங்கள் அமைப்புக்கு அவ்வாறான தடை ஏற்படாதென்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை.
ஆகவே, உங்கள் அமைப்பின் “அகீதா” கொள்கை பற்றி பொது மக்களுக்கு விளக்கமாக ஓர் அறிக்கை வெளியிட வேண்டுமென்று அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.
தப்லீக் சகோதரர்களே!
உங்கள் விடயத்தில் தலையிட எனக்கு எந்த ஒரு அவசியமும் இல்லை. எனினும் நான் ஓர் எழுத்தாளனாகவும், பேச்சாளனாகவும் இருப்பதனால் என்னிடம் பலர் வந்து “தப்லீக்” அமைப்பு வஹ்ஹாபிஸ அமைப்பா? இல்லையா? என்று கேட்கிறார்கள். உங்கள் அமைப்பின் கொள்கை விளக்கம் எனக்குத் தெரியாமல் என்னால் ஒன்றுமே சொல்ல முடியாதாகையால் இது தொடர்பாக உண்மை நிலையை வெளிப்படுத்துவது எனது கடமை என்ற வகையில் உங்களிடம் இந்த விடயங்களைக் கேட்கிறேன். உங்கள் அமைப்பின் எதிர்காலம் சிறப்பாக அமைவதும், அது சிதறிப் போவதும் நீங்கள் தரும் அறிக்கையிலேயே உள்ளது.
தப்லீக் சகோதரர்களே!
நீங்கள் மக்களுக்கு நல்லவற்றை சொல்கிறீர்கள். தீய, பாவமான காரியங்களிலிருந்து அவர்களைத் தடுக்கிறீர்கள். திருக்குர்ஆனில் சொல்லப்பட்டவாறு செய்கிறீர்கள். இவையாவும் நல்ல காரியங்களே! உங்களைப் பாராட்டுகிறேன். உங்களின் இப்பணிக்கு ஆதாரமாக திருக்குர்ஆன் வசனம் ஒன்றையும் கூறுகிறீர்கள். அதை இங்கு எழுதுகின்றேன்.
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
இத்திருவசனத்தின் பொருள் – உங்களில் ஒரு சமுகம் – ஒரு கூட்டம் – “கைர்” நல்லதின் பக்கம் அழைப்பவர்களாகவும், நன்மை கொண்டு ஏவுகின்றவர்களாகவும், தீயதை தடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். (திருக்குர்ஆன் – 3-104)
இத்திரு வசனத்தில் முதல் அம்சமாக “கைர்” நல்லதின் பக்கம் அழைத்தல் என்றும், இரண்டாம் அம்சமாக நன்மையைக் கொண்டு ஏவுதல் என்றும், மூன்றாம் அம்சமாக தீயதை விட்டும் தடுத்தல் என்றும் கூறியுள்ளான். மொத்தம் மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகின்றான்.
இவற்றில் இரண்டாம், மூன்றாம் அம்சங்கள் எவை என்பதை எமக்கு வெளிச்சமாகின்றது. ஆனால் முதல் அம்சம் எது என்று உங்களிடம் கேட்டறிய விரும்புகிறேன். எனது பார்வையில் மூன்றில் ஒவ்வொன்றும் தனித்தனி அம்சமாகவே விளங்குகிறது. நன்மை கொண்டு ஏவுவதும், தீமையை விட்டும் தடுப்பதும் நல்ல காரியமாக இருக்கும் நிலையில் “கைர்” நல்லதின் பக்கம் அழைத்தல் என்று சொல்லியுள்ளானே இதன் விளக்கம் என்ன? ஏனெனில் நன்மை கொண்டு ஏவுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் நல்ல காரியம்தானே! அவ்வாறிருக்கும் நிலையில் “கைர்” என்று எதைச் சொல்லியுள்ளான் என்று நாடறிய, நாட்டு மக்களறிய விளக்கி வைக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
தப்லீக் சகோதரர்களே!
இப்னு அப்தில் வஹ்ஹாப், இப்னு தைமிய்யா போன்றவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் كُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ என்ற ஹதீதுக்கு “பித்அத் எல்லாமே வழிகேடு”தான் என்றும், அதில் ஐந்து வகை இல்லை என்றும் சொல்கிறார்களே இது தொடர்பாக உங்களின் கருத்தையும் நாட்டு மக்கள் அனைவரும் அறியும் வகையில் விளக்கி வைக்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments