தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
வழி கெட்ட வஹ்ஹாபிஸம் வாழ வழியின்றி வனம் சென்று செத்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
பற்றை மறைவில் பதுங்கியிருந்த ஸுன்னீ உலமாஉகளே! ஸுன்னீ பொது மக்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
நீங்கள் அனைவரும் வஹ்ஹாபிகளுக்கு முகம் கொடுத்து நிற்கப் பயந்து பற்றை மறைவில் பதுங்கிக் கொண்டிருந்த காலம் போதும். உறங்கிக் கொண்டிருந்த காலமும் போதும். வெளியில் வாருங்கள். உங்களின் “இத்தா” காலம் முடிந்தது. வெளியேறுங்கள்.
மீசையுள்ளாண்பிள்ளைச் சிங்கங்களென் கூட
வெளியில் வாருங்கள் காணும்
நாசிநிரம்பவுமயிர்தா – னிரண்டு கால்
நடுவினு மொரு கூடை மயிர்தான்
ரோசங்கெடுவார்களென் கடைமயிர்தான் – குணங்
குடி கொண்டாலென்னுயிர்க் குயிர்தான்.
—
படிக்கும் படி நடக்கப் படிக்காலோபிகள் மோஷப்
பாதமற்றுப் போனாலும் போகட்டும் – அவர்
முடிக்கு முடிதரித்து முடிய முடிய வாழ்ந்து
முடிந்து முடி போனாலும் போகட்டும் – இன்னுங்
குடிக்கக் கஞ்சியுமற்றுக் குண்டிக்குத் துணியற்றுக்
குருடராய் போனாலும் போகட்டும்
அடித்தாலு மெலும்பெல்லாமொடித்தாலும் அவர்க்கஞ்சேன்
அடித்தாலடித்துக் கொண்டு போகட்டும் – அந்தக்
கெடுவார்களென் கடை மயிர்தான் – குணங்
குடிகொண்டாலென்னுயிர்க்குயிர்தான்.
—
மடையரெல்லாங்கூடிக் கூத்தாடிக் கூத்தாடி
வையாளி போட்டாலும் போடட்டும் – இன்னும்
விடிய விடியவும் பரத்தையர் மடிகளில்
விளையாடினும் விளையாடட்டும் – கள்ளுக்
குடியரெல்லாம் கள்ளைக் குடித்துக் குடித்தவர்கள்
குடி கெட்டுப் போனாலும் போகட்டும் – ஞானம்
படியாரெல்லாமென்னைப் பழித்துப் பழித்துக் கொண்டு
பகைத்தாற் பகைத்துக் கொண்டு சாகட்டும் – அந்தக்
கெடுவார்கள் என்கடை மயிர்தான் – குணங்
குடிகொண்டாலென்னுயிர்க்குயிர்தான்.
(அப்துல் காதிர் வலிய்யுல்லாஹ், குணங்குடி மஸ்த்தான் அப்பா)
அன்புக்குரிய ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளே!
ஸுன்னீ வழி வாழும் பொது மக்களே!
ஸூபிஸ வழி வாழும் ஸூபீகளே!
தரீகாவாதிகளே!
வஹ்ஹாபிஸ அமைப்புகளுக்கு நேர்ந்த கதியை கண்டீர்களா? ஏன் அவர்களுக்கு இந்த வேதனையும், துன்பமும், சோதனையும்?
وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ
இவர்கள் அல்லாஹ்வில் கை வைத்தார்கள். அவன் “அர்ஷ்” என்ற இடத்தில் இருக்கின்றான் என்று அவனுக்கு குறிப்பான ஓர் இடத்தைத் தரிபடுத்தினார்கள். “அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?” என்ற பெயரில் நான் ஒரு நூல் எழுதி அதை இலவசமாக மக்களுக்கு வழங்கினேன். அதன்பின் அல்லாஹ் அர்ஷில் இல்லை. ஆயினுமவன் “அர்ஷ்” என்ற இடத்திற்கு அப்பால் இருக்கின்றான் என்றார்கள். தந்திரமாக “றூட்”டை மாற்றினார்கள். சுக்கானை திசை மாற்றிப் பிடித்தார்கள். “அர்ஷ்”க்கு அப்பால் இருக்கின்றான் என்றாலும் அது அவனுக்கு ஓர் இடத்தை தரிபடுத்துவதாகவே ஆகும் என்று நானும், என்னுடனுள்ள ஸூபீ, ஸுன்னீ மௌலவீமார்களும் இதை எதிர்த்துக் குரல் கொடுத்தோம். பகிரங்கப் பிரச்சாரத்தில் இறங்கினோம். அவர்களால் வாய் திறக்க முடியாமற்போயிற்று. அதோடு நிற்கிறார்கள். இதன் பிறகு அவனை எங்கு அனுப்புவார்களோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். நீருக்குள் நெருப்பு எடுத்துச் செல்லும் இந்த மந்திரவாதிகளும், தந்திரவாதிகளும் இனி அவனை எங்கு அனுப்புவார்களோ தெரியவில்லை.
இவ்வாறு வஹ்ஹாபிகள் பகிரங்கமாக எழுதியும், பேசியும் வந்த காலத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையோ, காத்தான்குடி உலமா சபையோ வாய் திறக்கவே இல்லை.
கொலைகாரன் ஸக்றான் அல்லாஹ்வுக்கு இரண்டு உருவங்கள் மட்டும் உள்ளன என்று காரசாரமாகப் பேசினான். அவன் இரண்டு உருவங்களில் மட்டும் அல்லாஹ்வைக் கட்டுப்படுத்தினான். அப்போது கூட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், காத்தான்குடி உலமாகளும் மௌனிகளாகவே இருந்தார்கள்.
காத்தான்குடியில் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகள் பலர் இருந்தும் கூட அவர்கள் அவ்வேளை வாயடைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர்களால் “ஆ” வென்று வாய் திறக்க முடியாமற் போயிற்று போலும். شفى الله أمراضهم
இவற்றையெல்லாம் அவன் சொன்ன கால கட்டத்தில் மௌனம் சாதித்த ஸுன்னீ உலமாஉகள் அவன் என்னையும், என்னுடனுள்ள மௌலவீமார்களையும், மற்றும் மர்ஹூம் என் தந்தை அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களையும் மிகக் கீழ்த்தரமாகப் பேசிய நேரத்தில் குதிகால் பூமியில் படாதவாறு துள்ளித் துள்ளிச் சிரித்து மகிழ்ந்தார்கள் சங்கைக்குரிய ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள். உலமாஉகளின் பெருந்தன்மையும், உயர் பண்பையும் பார்த்தீர்களா?
1950ம் ஆண்டுக்கு முன் காத்தான்குடியிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களிலும் பாங்கு சொல்லு முன் ஸுப்ஹானல்லாஹ் கலிமாவும், கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது “ஸலவாத்”தும் சொல்லிய பின்னே தான் பாங்கு சொல்லும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
வஹ்ஹாபிகள் வந்தபின் அவர்களின் புதிய, தூய்மையான இஸ்லாம் மார்க்கத்தை காத்தான்குடி மக்களில் அதிகமானோர் சரி கண்டும், அவர்களை நம்பியும் தாங்கள் பன்னெடுங்காலமாகச் செய்து வந்த நல்ல வணக்கங்களை விட்டு விட்டார்கள். அதிகமான பள்ளிவாயல்களில் பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லப்படுவதில்லை. அதையும் விட்டுவிட்டார்கள்.
50 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கின்ற 60க்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் உள்ள இந்தப் பெரிய பட்டணத்தில் மூன்று பள்ளிவாயல்களில் மட்டுமே பழைய நடைமுறை இன்று வரை பின்பற்றப்படுகின்றது.
பாங்கு சொல்லுமுன் மட்டுமன்றி அதன் பின்னாலும் ஸலவாத் சொல்வது நபீ வழியாகுமென்று ஆதாரங்களோடு சிறிய புத்தகம் கூட நான் எழுதி அச்சிட்டு இலவசமாக வினியோகித்தேன். இவ்வாறு செய்தும் கூட பள்ளிவாயல் நிர்வாகிகள் நேர்வழி பெற்றதாகத் தெரியவில்லை. இன்றுவரை ஸலவாத் இன்றியே பாங்கு சொல்லப்பட்டு வருகிறது. அவர்களும் செவியேற்றுக் கொண்டுதான் உள்ளார்கள்.
காத்தான்குடி உலமா சபை கூட இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸலவாத் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்காத இவர்களுக்கும், இவர்களின் இச் செயலைக் கண்டும் நடவடிக்கை எடுக்காமலிருக்கும் உலமா சபைக்கும் அல்லாஹ் மிக விரைவில் நல்லதோர் பாடம் சொல்லிக் கொடுப்பான். எனது வாழ்வில் பலர் பாடம் கற்றதை நான் கண்டுள்ளேன். நபீ பெருமானை சாதாரண மனிதர் என்று கூறும் கூட்டம் இந்தக் கூட்டமேயாகும். இவ்வூரிலுள்ள வஹ்ஹாபிஸ நடவடிக்கைகளைப் பார்த்தும், கேள்விப்பட்டும் மனம் நொந்து போன வெளியூர் மக்களிற் பலர் கடந்த காலங்களில் காத்தான்குடி என்று கண்ணியமாக அழைத்து வந்ததை விட்டு எந்த ஒரு கண்ணியமும் இல்லாமல் ஷாத்தான்குடி என்று துணிந்து சொல்வதை கேட்கும் போது உள்ளம் அழுகிறது. தலை சுழல்கிறது.
1950ம் ஆண்டில் றபீஉனில் அவ்வல் மாதம்.
றபீஉனில் அவ்வல் மாதம் – கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் பிறந்த மாதம் – இலங்கையிலுள்ள பல ஊர்களில் கொண்டாட்ட மாதம் என்றே அழைக்கப்படும். இவ்வாறு அழைப்பது குறித்த மாதத்தை அவர்கள் கண்ணியப்படுத்துகிறார்கள் என்பதற்கு வெளிப்படையான ஓர் ஆதாரமாகும். கொண்டாட்ட மாதம் வந்தால் போதும் வீடுகளில் கொடி ஏற்றியும், மௌலித் ஓதியும், ஸலவாத் மஜ்லிஸ்கள் நடத்தியும், மீலாத் விழாக்கம் நடத்தியும் கொண்டாடுவார்கள். இக்காலத்தில் – வஹ்ஹாபிகளின் ஆட்சிக் காலத்தில் – கொண்டாட்ட மாதம் திண்டாட்ட மாதமாக மாற்றப்பட்டிருப்பது மாற்றியவர்களுக்கு பெருமானாரின் அருள் கிடைக்காதென்பது எனது கருத்தாகும்.
குடி மௌலித் என்ற பெயரில் காத்தான்குடியில் வீடுகளிலும், அதிகமான பள்ளிவாயல்களிலும் “ஸுப்ஹான மௌலித்” ஓதுவார்கள். தொடர்ந்து 12 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.
சுமார் 30 – 40 வயதுக்கு மேற்பட்ட உலமாஉகள் இரும்பு வலையால் அமைக்கப்பட்டு, மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட விஷேட இடத்தில் இருந்து அந்தக் காலத்து ராகத்தில் ஓதுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! அந்த அழகைக் கண்டு ரசிக்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது. அக்காலத்தில் நான் இருக்கக் கிடைத்ததற்கு வாய்ப்பளித்த அல்லாஹ்வை என்னால் மறக்க முடியவில்லை. அவர்கள் பாடும் பாடல் சத்தம் வானைத் தொடுமளவு உயர்ந்து செல்லும்.
உலமாஉகளுக்கும், தபர்றுக் – நார்ஸா – பெற அங்கு வரும் பொது மக்களுக்கும் பனை ஓலையால் செய்யப்பட்ட அழகிய சிறிய பெரிய பெட்டிகளில் நார்ஸா கொண்டு வரப்படும். பெட்டிகள் மாட்டு வண்டிலில் அடுக்கப்பட்டு அவ்வண்டி மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டு பாவாமாரின் தகறா முழக்கத்துடன் பள்ளிவாயலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும். சிறுவர், சிறுமியர் இதை ஒரு வேடிக்கையாக பார்த்து மகிழ்வார்கள்.
நெய் சோறில் பிளம்ஸ் கலந்து கொண்டு வரப்படும் தபர்றுக்கின் மணம் பள்ளிவாயல் முழுவதும் கமளும். அவ்வேளை சிறுவர்களும், இளைஞர்களும் பட்டாசு கொழுத்தி மகிழ்வார்கள். பட்டாசு சத்தம் கேட்டதும் வீடுகளில் இருப்போர் அனைவரும் பள்ளிவாயலுக்கு வந்து குவிந்துவிடுவார்கள். ஆண்கள் மட்டுமே பள்ளிவாயலினுள் அனுமதிக்கப்படுவார்கள். இரவு சுமார் 9 மணியளவில் தபர்றுக் வினியோகம் இடம் பெறும். ஆலிம்களுக்கு பெரிய அளவிலும், மற்றவர்களுக்கு சிறிய அளவிலும் நார்ஸா வினியோகிக்கப்படும்.
ஆலிம்கள் “தபர்றுக்” பொதியை தூக்க முடியாமல் தூக்கிச் செல்வர். தபர்றுக் வினியோகத்தின் போது பாரபட்சம் காட்டப்படுவதும், ஊழல் நடைபெறுவதும் சகஜமே!
நேர்ச்சை ஆடுகளும், கோழிகளும் வந்து கொண்டே இருக்கும். சில்லறை நேர்ச்சைகளும், உணவுப் பொருட்களும் குவிந்த வண்ணமே இருக்கும். நேர்ச்சைப் பொருட்கள் யாவும் ஏலத்தில் விற்பனை செய்யப்படும். சில நேரங்கள் கோழிகள் மாயமாய் மறைவதும் உண்டு.
1990ம் ஆண்டு வரை ஸுன்னத் வல் ஜமாஅத் நடைமுறைகள் மிகச் சிறப்பாகப் பேணப்பட்டு வந்தன.
அதன் பின் வஹ்ஹாபிஸக் காற்று மெல்ல மெல்ல வீசத் தொடங்கியது. தற்போது அது பெருஞ் சூராவளியாக நிற்கிறது.
ஸஹ்றானின் தற்கொலைக் குண்டு வெடிப்பின் பின் வஹ்ஹாபிஸக் கிழவிக்கு மூளைக் கென்ஸர் ஏற்பட்டு அவள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தாள்.
அன்று அவள் செத்திறந்து சுடு காட்டில் புதைக்கப்பட்டாள். ஆயினும் அவளின் “றூஹானிய்யத்” ஆவி உலகமெங்கும் நடமாடுகின்றது.
ஸஊதியில் “நஜ்த்” எனுமிடத்திலுள்ள “திறஇய்யா”வில் ஹிஜ்ரீ 1111ல் பிறந்த இவளின் வயது 331 ஆகும்.
இவள் தர்வேஷ் அப்துல் ஹமீத் என்ற வேடத்தில் இலங்கையில் பறகஹதெனிய, கல்முனை முதலான ஊர்களில் 1980 காலப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காலத்தில் அவளுக்கும், கிழக்கு மாகாணத்தில் அந்நேரம் பிரசித்தி பெற்றிருந்த ஸுன்னீ உலமாஉகளுக்கும் கல்முனையில் மாபெரும் விவாத மாநாடு நடந்தது. அதில் அவள் படுதோல்வியடைந்து நாட்டில் நடமாட முடியாத நிலையில் மக்கா நகர் சென்றாள்.
இலங்கை நாட்டில் ஆரம்ப காலத்தில் வஹ்ஹாபிஸப் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் தர்வேஷ் அப்துல் ஹமீத், மற்றவர் அபூ பக்ர் ஆலிம் நத்வீ லக்னோ. இவ்விருவர் தவிர பிரசித்தி பெற்ற வஹ்ஹாபிகள் எவரும் இருக்கவில்லை.
வஹ்ஹாபிஸக் கிழவி செத்தாலும் கூட அவளின் “றூஹானிய்யத்” ஆவி காத்தான்குடியிலும் வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த ஆவியை அரசாங்கத்தாலேயே அனுப்ப முடியும். மரணம் சொல்லிவிட்டு வருவதில்லை.
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.