தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
தொழுகைகள் பல வகை. ஐங்காலத் தொழுகை. “நப்ல் முத்லக்” கால நேரம் குறிப்பிடாத பொதுவான “ஸுன்னத்” ஆன தொழுகை, கால நேரம் குறித்த “ஸுன்னத்” ஆன தொழுகைகள்.
உதாரணமாக “ழுஹா” தொழுகை, “தஹஜ்ஜுத்” தொழுகை, “வித்ர்” தொழுகை, “அவ்வாபீன்” தொழுகை, “தறாவீஹ்” தொழுகை, ஐங்கால “பர்ழ்” ஆன தொழுகைகளுக்கு முன், பின் உள்ள “ஸுன்னத்” ஆன தொழுகைகள்.
மேற்கண்ட “ஸுன்னத்” ஆன தொழுகைகள் அவற்றின் அமைப்பில் “பர்ழ்” ஆன தொழுகைகள் போன்றவைதான்.
இவை தவிர இன்னும் சில “ஸுன்னத்” ஆன தொழுகைகள் உள்ளன. அவை தொழுகை அமைப்பில் வித்தியாசப்பட்டவையாகும்.
உதாரணமாக “ஸலாதுல் இஸ்திஸ்காயி” மழை வேண்டித் தொழும் தொழுகை, “ஸலாதுல் குஸூப்” صلاة الكسوف சூரிய கிரகணத் தொழுகை, صلاة الخسوف சந்திர கிரகணத் தொழுகை போன்று.
“மையித்” தொழுகை “ஸுன்னத்” ஆன தொழுகையல்ல. இது “பர்ழ் கிபாயா” தொழுகையாகும். இத் தொழுகையும் அமைப்பில் வித்தியாசப்பட்டதேயாகும்.
பொதுவாக “பர்ழ்” ஆன தொழுகைகளாயினும், மேலே கூறியது போல் ஏனைய தொழுகைகளாயினும் பொதுவாக தொழுகைகள் எல்லாமே அடியானை சுத்தப்படுத்தும் ஆன்மிக மருந்துகளும், அதற்கான பயிற்சிகளுமேயாகும்.
பெருநாள் தொழுகை
முஸ்லிம்களுக்கு பெருநாள் தொழுகை இரண்டு மட்டுமேதான். ஒன்று صلاة عيد الفطر – நோன்புப் பெருநாள் தொழுகை. மற்றது صلاة عيد الأضحى – ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை. இவ்விரு தொழுகைகளும் ஷாபிஈ மத்ஹபில் அமைப்பில் ஒன்று போன்றதேயாகும்.
இரண்டு “றக்அத்” தொழ வேண்டும். முந்தின “றக்அத்”தில் ஏழு தரமும், இரண்டாவது “றக்அத்”தில் ஐந்து தரமும் “தக்பீர்” சொல்ல வேண்டும். அதோடு இரு கைகளையும் உயர்த்திக் கட்டிக் கொள்வதும் ஸுன்னத் ஆகும். இங்கு “தக்பீர்” என்று குறிப்பிடுவது “அல்லாஹு அக்பர்” என்பதைக் குறிக்குமேயன்றி பெருநாள் தினத்தில் மக்கள் ஒன்று கூடி சொல்லும் தக்பீரை குறிக்காது.
பெருநாள் தொழுகைக்கான சிறந்த நேரம்.
இரு பெருநாள் தொழுகைகளையும் காலை சுமார் எட்டு மணிக்கு முன் தொழுது முடிப்பதே மிகச் சிறந்ததாகும். எவ்வாறாயினும் “ஸவால்” சூரியன் உச்சிக்கு வருமுன் தொழுது முடிக்க வேண்டும். எந்த அளவு முன் கூட்டி தொழ முடியுமோ அவ்வாறு தொழுவது மிகவும் சிறந்தது.
இலங்கை நாட்டில் எமது பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளியில் மட்டுமே சுமார் 11 மணியளவில் பெருநாள் தொழுகை நடைபெறுகிறது. இதற்கு நியாயமான காரணம் உண்டு. அதை கருத்திற் கொண்டே தொழுகை மிகவும் தாமதாகி நடைபெறுகிறது.
பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலானது ஸூபிஸ சமுகத்தவர்கள் மட்டும் தொழுகின்ற பள்ளிவாயலாகும். இச்சமுகத்தவர்களில் அநேகர் வெளியூர்களில் வணிகம் செய்பவர்களாவர். இவர்களிலனேகர் பெருநாள் இரவும், அன்று காலையுமே ஊருக்கு வருவார்கள். ஆகையால் இவர்களின் வசதி கருதியே அவ்வாறு செய்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் எதிர்காலங்களில் இந் நடைமுறையை மாற்றிக் கொள்வோம். இதற்கு ஸூபிஸ சமுகத்தைச் சேர்ந்தவர்களும் ஒத்துழைப்புத் தருவார்கள் என்று நம்புகிறேன்.
பெருநாள் தொழுகையின் “நிய்யத்” أُصَلِّيْ سُنَّةَ عِيْدِ الْفِطْرِ “உஸல்லீ ஸுன்னத ஈதில் பித்ரி” என்பதும், أُصَلِّيْ سُنَّة َعِيْدِ الْأَضْحَى “உஸல்லீ ஸுன்னத ஈதில் அழ்ஹா” என்பதுமாகும்.
இவ்வாறு “நிய்யத்” வைத்து “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் சொல்லி கை கட்டியவுடன் வழமைபோல் “வஜ்ஜ்ஹ்து” ஓத வேண்டும். “மையித்” தொழுகைக்கு மட்டுமே “வஜ்ஜஹ்து” ஓதுவது ஸுன்னத் இல்லை. இதை ஓதி முடித்த பின் “அல்லாஹு அக்பர்” என்று ஒன்றன் பின் ஒன்றாக ஏழு தரம் “தக்பீர்” சொன்னபின் “பாதிஹா ஸூறா” ஓதி, முடியுமாயின் அதன் பின் விரும்பிய ஒரு “ஸூறா”வும் ஓதி வழமை போல் ஒரு “றக்அத்” தொழ வேண்டும். இரண்டாம் “ஸுஜூதில்” இருந்து நிலைக்கு வந்த பின் தொடர்ந்து ஐந்து முறை தக்பீர் செர்லலி கை கட்டவேண்டும். ஐந்தாவது “தக்பீர்” சொன்ன பின் முதலாம் “றக்அத்”தில் செய்தவாறு செய்து முடிக்க வேண்டும்.
ஆரம்பத்தில் “அல்லாஹு அக்பர்” என்று சொல்லி “தக்பீர்” கட்டிய தக்பீர் தவிரவே ஏழு தக்பீர் சொல்ல வேண்டும். முதலாம் றக்அத்தில் இரண்டாம் “ஸுஜூதை” முடித்த பின் நிலைக்கு வரும்போது சொல்லும் தக்பீர் தவிரவே ஐந்து தக்பீர் சொல்ல வேண்டும். ஏழு தக்பீர்களில் ஒவ்வொரு தக்பீர் சொன்ன பிறகும், அதேபோல் ஐந்து தக்பீர்களில் ஒவ்வொரு தக்பீர் சொன்ன பிறகும் “ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” என்று மூன்று தரம் அல்லது ஒரு தரமாவது சொல்ல வேண்டும்.
ஜமாஅத்துடன் தொழுவதாயின் தொழும் முறை பற்றி இமாம் சொல்லித் தருவார். அவ்வாறு செய்து கொள்ளுதல் வேண்டும்.
ஏழும், ஐந்தும் எதற்கு?
முதலாம் “றக்அத்”தில் ஏழுதரமும், இரண்டாம் “றக்அத்”தில் ஐந்து தரமும் “தக்பீர்” சொல்வது எதற்காக? என்பதை தெரிந்து செயல்பட்டவன் தொழுகை முடிந்த பின் மனிதப் புனிதனாக மாறிவிடுவான்.
ஏனெனில் தத்துவம் புரிந்து ஏழு தரமும், ஐந்து தரமும் தக்பீர் சொன்னவன் “அல்லாஹு அக்பர்” எனும் சைனட் கோடரியால் “நப்ஸ்” என்ற தஜ்ஜாலின் தலையைக் கொத்திக் கொன்ற மா வீரனாகிவிடுவான். அவன் பள்ளியில் தொழுகையை முடித்து வெளியேறி பாதையால் செல்லும் போது பாதையின் இரு மருங்கிலும் மலக்குகளும், வலீமாரும் அவனுக்கு அணி வகுப்பு மரியாதை செய்து, நப்ஸைக் கொன்ற, அதை வென்ற மகான் வருகிறார் வழி விட்டு கௌரவியுங்கள் என்று குரலெழுப்புவார்கள். அவனைக் காணும் மண்ணும், விண்ணும் அவனுக்கு ஸலாம் உரைத்து, வந்தனம் கூறி வாழ்த்து தெரிவித்து மகிழ்வார்கள்.
அல்லாஹ் அவனைப் பார்த்து
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ، ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً
சாந்தி பெற்ற ஆன்மாவே! நீ உனது இரட்சகன் பால் அவனைப் பொருந்திய ஆன்மாவாகவும், அவன் பொருந்திய ஆன்மாவாகவும் மீள்வாயாக! அதோடு எனது நல்லடியார்களிலும் நுழைந்து எனது சுவர்க்கத்திலும் நுழைவாயாக என்று வாழ்த்துவான்.
இச்சிறப்புக்கள் யாவும் அவன் தனது ஏழு நப்ஸுகளையும் கொண்றிருந்தால் மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல. அவன் அன்று பிறந்த பாவமே அறியாப் பாலகன் போலாகியும் விடுவான்.
பெருநாள் தொழுகையில் முதலாவது றக்அத்தில் சொல்கின்ற ஏழு “அல்லாஹு அக்பர்”களில் ஒவ்வொன்றையும் “நப்ஸ்” எனும் மனவெழுச்சியில் போடுகின்ற “சைனட்” குண்டாக நினைத்துக் கொள்ள வேண்டும்.
ஏழு குண்டுகளிலும் அம்மாறா, லவ்வாமா, முல்ஹிமா, முத்மஇன்னா, றாழியா, மர்ழியா, காமிலா ஆகிய ஏழும் அழிந்து “றூஹ்” உடைய “மகாம்” தரத்தை தொழுபவன் அடைய வேண்டும்.
ஏழு குண்டுகளில் அழியாமற் போய் எஞ்சியுள்ள “நப்ஸ்” களை பாக்கியுள்ள ஐந்து குண்டுகள் கொண்டும் இரண்டாவது றக்அத்தில் அழிக்க வேண்டும்.
மொத்தமாக போட வேண்டிய 12 குண்டுகளிலும் ஒரு “நப்ஸ்” கூட அழியவில்லையானால் அவன் அக்குண்டுகளை குறி பார்த்துப் போடவில்லையென்பதே அதன் விளக்கமாகும். குண்டுகள் போலிக்குண்டுகள் அல்ல. அவை “குன்” என்ற சொல்லால் “அஹதிய்யத்” என்ற ஆயுதத் தொழிற்சாலையில் “ஜுனூதுல்லாஹ்” என்ற மலக்குகளால் தயாரிக்கப்பட்டவையாகும். குறி தவறாமலும், இலக்கு மாறாமலும் நன்றாகப் பயிற்றப்பட்டவர்களால் போடப்பட வேண்டும்.
مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ
ஒருவன் “ஹஜ்” வணக்கத்தை எந்த ஒரு தவறும் செய்யாமல் முறைப்படி செய்தானாயின் அவன் அன்று பிறந்த பாலகன் போலாகிவிடுவான் என்று கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் கூறியுள்ளார்கள்.
நபீ பெருமானின் கூற்றில் எந்த ஒரு பிழையும் கிடையாது. பேச்சு நூறு வீதம் சரியானதே! ஆயினும் “ஹஜ்” செய்துவிட்டு வருபவர்களிற் சிலர் பாலகன்களாக வராமல் பாவிகளாகவே வருகிறார்கள். இவர்கள் பற்றி என்ன சொல்வது?
“ஹஜ்” செய்யப் போகுமுன் நூற்றுக்கு மூன்று வீதம் வட்டி வாங்கியவன் போய் வந்தபின் நூற்றுக்கு பதினைந்து வீதம் வட்டி வாங்குகின்றானே? இவன் பாலகனாய் வந்தவனா? பாவியாய் வந்தவனா?
“ஹஜ்” செய்யுமுன் ஊழல் என்றால் என்னவென்றே அறியாதிருந்தவன் “ஹஜ்” செய்து வந்தபின் ஊழல் பேர்வழியாக மாறிவிடுகிறானே இவன் பாலகனாய் வந்தவனா? பாவியாய் வந்தவனா?
12 குண்டுகளையும் குறி தவறிப் போட்டதால் “நப்ஸ்” சாகாதது போல் “ஹஜ்” வணக்கத்தை சரியாகச் செய்யாததால் பாலகன் போல் வர வேண்டியவன் பாவியாக வருகிறான்.
சூத்திரப் பாவை கயிறற்று விழுமுன் சூட்சக் கயிற்றினைப் பாரடா – அதி சூட்சக் கயிற்றினைப் பாரடா!
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.