தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
قال الشّيخ الأكبر ابن عربي رضي الله عنه فى الباب الرابع والستّين ومأتين: اعلم أنّه لا بُدَّ لجميع بني آدم مِن العُقوبة والبَلايا وَالآلامِ، شيئًا بعد شيئ، فى أبدانهم وسَرَائِرِهم، حتّى يدخُلوا الجنّة أو النّار،
فأوّلُ الأَلَمِ فى الدُّنيا اِسْتِهْلَالُ المولود حينَ وِلادتِه، فإنّه يخرُجُ صارخا لِمَا يَجِدُه مِن الألمِ عند مُفارقَةِ الرّحمِ وسُخونتِه، فيضربُه الهواءُ عند خروجه من الرّحم، فيُحسُّ بألمِ الْبَرْدِ فيَبْكِيِ، فإن مات بعد ذلك فقد أخذ بحظِّه مِن البلاء، وإن عَاشَ فَلَا بُدَّ له فى الحياة الدنيا من الألَمِ، إذ الحيوان مجبولٌ على ذلك، فإذا نُقِل إلى البَرْزَخِ فلَا بُدَّ له من الألَمِ، أدناه سؤال منكر ونكير، فإذا بُعث فلا بدَّ له من أَلَمِ الخوفِ، على نفسِه أو على غيره، فإذا دخل الجنّة اِرْتَفَعَ عنه حُكمُ الأَلَمِ، وصحِبَهُ النّعيمُُ اَبَدَ الآبِدِينَ وإن دخل النّار فهو فى أَلَمٍِ لا انتهاءَ له، إن كان من أهل النار، الّذين هم أهلها، وإلّا صَحِبَه الألمُ حتّى يُخرجَ بالشّفاعة،
அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் அல்புதூஹாதுல் மக்கிய்யா எனும் நூல் 264ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(ஆதமுடைய மக்கள் அனைவருக்கும் அவர்களின் உடல்களிலும், மற்றும் அவர்களின் வாழ்க்கைகளிலும் தண்டனைகளும், சோதனைகளும், வேதனைகளும் ஒன்றன் பின் ஒன்றாகவும், கொஞ்சம் கொஞ்சமாகவும் வந்து கொண்டே இருக்கும். இவ்வாறான சோதனைகளும், தண்டனைகளும் அவர்கள் சுவர்க்கம், அல்லது நரகம் செல்லும் வரை இருக்கவே செய்யும். தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அவர்களுக்கு இவ் உலகில் முதலில் கிடைக்கின்ற வேதனை அவர்கள் குழந்தைகளாக பிறக்கின்ற நேரம் அனுபவித்த வேதனைதான். எந்தக் குழந்தையாயினும் அது பிறக்கும் வேளையில் கூச்சலிட்டு அழுகிறது. இதுவே ஆதமுடைய மக்களுக்கு கிடைக்கின்ற முதல் வேதனையாகும். குழந்தை அழுவதற்கான காரணம் என்னவெனில், அக்குழந்தை அதன் தாயுடைய கர்ப்பாசனத்தில் தரித்த நாள் முதல் சுமார் ஒன்பது மாதங்கள் வரை அல்லது தாயின் கர்ப்பக் குகையிலிருந்து – வயிற்றிலிருந்து வெளியேறும் காலம் வரை தாயின் வயிற்றிலுள்ள சூட்டை அனுபவித்து வந்த குழந்தை அச்சூட்டை இழந்ததினாலும், குடியிருந்த வீட்டைப் பிரிந்ததினாலும் ஏற்பட்ட வேதனையோடு வெளியிலுள்ள குளிர் காற்றின் குளிர்த்தாக்கத்தினாலுமே அழுகிறது.
ஆதமுடைய மகன் பிறந்தவுடன் அவனுக்கு கிடைக்கின்ற முதல் வேதனை இதுவாகும். இதோடு பிறந்த குழந்தை மரணித்தால் அதோடு அக்குழந்தையின் கதை முடிந்து விடுகிறது.
பிறந்த குழந்தை மரணிக்காமல் வாழுமாயின் அது தொடர்ந்து பல்வேறு வேதனை, சோதனை, கஷ்டம் என்பவற்றை அனுபவிக்க வேண்டும். உயிரினம் இவ்வாறுதான் படைக்கப்பட்டுள்ளது. உயிரினமல்லாதவற்றுக்கு இவ்வாறில்லை.
அக்குழந்தை சில காலம் வாழ்ந்து மரணித்து “கப்ர்” உடைய வாழ்க்கையை தொடங்கியதும் மீண்டும் சோதனையும், தண்டனையும் அக்குழந்தையை சேரவே செய்யும். மரணத்தோடு அவை நின்றுவிடமாட்டா.
“கப்ர்” வாழ்க்கையில் மிகக் குறைந்த சோதனை முன்கர், நகீர் எனும் இரு மலக்குகளால் பல கஷ்டங்கள், துன்பங்கள் ஆதமுடைய மகனுக்கு ஏற்படுகின்றன. அதையடுத்து அவனுக்கு பயம் என்ற சோதனை ஏற்படுகின்றது. அவன் சுவர்க்கவாதியானால் அதோடு அவனின் கஷ்டங்கள், துன்பங்கள் யாவும் தீர்ந்து சுவர்க்க இன்ப சுகங்களை தொடர்ந்து அனுபவித்து வாழ்வான்.
அவன் நரகம் செல்ல வேண்டியவனாயின் சோதனைமேல் சோதனைகளை எக்காலமும் அனுபவிக்க நேரிடும். இறுதியில் “ஷபாஅத்” சிபாரிசின் மூலம் அவன் அங்கிருந்து வெளியேற்றப்படுவான்)
எனவே, ஆதமுடைய மகன் தாயின் வயிற்றிலிருந்து வெளியான போது காற்றின் அழுத்தம் காரணமாக வேதனைப்பட்டு அழுதான். அதைத் தொடர்ந்து அவன் சுவர்க்கம், அல்லது நரகம் செல்லும் வரையும் கஷ்டங்களையும், நஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்தே வந்தான். அவனின் தலைவிதி நரகமாயின் அவன் தொடர்ந்தும் வேதனைகளை அனுபவிப்பவனாகவே ஆகிவிடுகின்றான். அவன் சுவர்க்கவாதியாயின் காலமெல்லாம் இன்ப வெள்ளத்தில் மிதந்து மகிழ்வான்.
ஆதமுடைய மகன் அதாவது மனிதன் பிறந்தது முதல் மரணித்து சுவர்க்கம் அல்லது நரகம் செல்லும் வரை அவன் பல்வேறு சோதனைகளையும், தண்டனைகளையும், கஷ்டங்களையும் கடந்துதான் சுவர்க்கத்துக்கு அல்லது நரகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறுதான், இந்த அமைப்பில்தான் ஆதமின் மகன் படைக்கப்பட்டுள்ளான். இது இறைவன் செயல். இதன் தாற்பரியம் அவன் தவிர வேறு எவரும் அறிய மாட்டார்.
ஆதமின் மகன் துன்யாவில் அனுபவிக்கின்ற முதல் வேதனை அவன் பிறந்தவுடன் அவனைத் தாக்கும் குளிர் காற்றால் அவன் வேதனையால் அலறி அழுவதாகுமென்று மேலே குறிப்பிட்டேன். இந்தக் குறிப்பு எனது கற்பனைக் குறிப்பல்ல. இமாம் இப்னு அறபீ அவர்களின் கருத்தாகும்.
ஆதமின் மகன் பிறந்தவுடன் அலறி அழுவதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக நபீ மொழி கூறுகிறது. அதாவது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلَّا وَالشَّيْطَانُ يَمَسُّهُ حِينَ يُولَدُ، فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ إِيَّاهُ، إِلَّا مَرْيَمَ وَابْنَهَا»، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ}
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
பிறக்கின்ற எந்தவொரு பிள்ளையாயினும் அது பிறக்கும் வேளை அதை ஷெய்தான் தொடுகிறான். அப்போது அது அழுகிறது. “மர்யம்” அலைஹஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் மகன் ஈஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையும் தவிர. இவ்விருவரையும் “ஷெய்தான்” தொடவில்லை. இவ்வாறு ஹதீதை அறிவித்த அபூஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நீங்கள் விரும்பினால் மேற்கண்ட திரு வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
குழந்தை பிறந்தவுடன் அது அலறி அழுவதற்கு இமாம் இப்னு அறபீ அவர்கள் சொன்ன காரணம் வேறு, ஹதீதில் வந்துள்ள காரணம் வேறு. இதை வைத்துக் கொண்டு இந்த விடயத்தை வாதப் பிரதி வாதமாக்காமல் இரண்டு காரணங்களும் உண்டு என்று முடிவு செய்தல் வீணான பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுமென்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
ஆதமின் மக்கள் அனைவரும் கஷ்டம், துயரம், சோதனை, நோய் முதலானவற்றால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இதற்கு ஆதாரம்
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
என்ற திருவசனமேயாகும். (திருமறை 02-155)
பண நோட்டுக்களால் நிரப்பப்பட்ட மெத்தை மீது படுத்துறங்கும் கோடீஸ்வரனுக்கும், தங்க பேசனில் மலம் கழிக்கும் மன்னனுக்கும் எந்த வகையிலேனும் ஒரு கவலை இருக்கவே செய்யும்.
ஆதமின் மக்களில் எவரும் எந்த ஒரு கவலையுமின்றி இருக்கமாட்டார். இதை சுருக்கமாக “மண்வாசி” அல்லது “கருவின் வெளிப்பாடு” எனலாம்.
ஆதிபிதா ஆதம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மண்ணால் படைக்கப்பட்டவர்கள். அவர்களைப் படைக்க நாடிய அல்லாஹ் பரந்து விரிந்த இப்பூமியில் எல்லாப் பாகங்களிலிருந்தும் மண் எடுத்து வருமாறு மலக்குகள் – அமரர்களுக்கு கட்டளை பிறப்பித்தான். உலகின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் மலக்குகள் மண் கொண்டு வந்தார்கள்.
அமரர்கள் எங்கெல்லாமிருந்து மண் எடுத்தார்கள் என்று தெளிவான, சரியான ஆதாரங்கள் மூலம் நிறுவப்படவில்லை. ஆயினும் நான் தொடர்பு கொண்ட வரலாற்றாசிரியர் சிலர் மூலம் கிடைத்த தகவலின்படி பரந்த இப்பூமியின் பல இடங்களிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென்று யூகிக்கப்படுகின்றது.
இன்று உலகில் வாழும் பல்லின மக்களினதும், பல நாட்டவர்களினதும் தோற்றங்களையும், பண்பாடுகளையும், நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் ஆய்வு செய்தால் இவ்வுண்மை தெளிவாகும்.
மலேசிய நாட்டு மக்களில் அநேகர் ஒரே முகச் சாயல் உள்ளவர்களாகவும், சீன நாட்டு மக்களில் அநேகர் ஒரேமாதிரியான தோற்றமுள்ளவர்களாகவும், கறுப்பு இன மக்களில் 98 வீதாமனோர் ஒரே உடலமைப்புள்ளவர்களாகவும், பிலிபைன்ஸ் நாட்டவர்களில் அதிகமானோர் ஒரே முக வாக்குள்ளவர்களாகவும் இருப்பதும் மண்வாசியின் வெளிப்பாடுகளேயாகும்.
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.