தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
قال الشّيخ الأكبر ابن عربي رضي الله عنه فى قوله تعالى ‘وَأقْرِضُوا اللهَ قَرْضًا حَسَنًا ‘
அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுங்கள் (திருக்குர்ஆன் 73-20)
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக கடன் கொடுங்கள்” என்ற (73-20) வசனத்திற்கு பின்வருமாறு விளக்கம் கூறியுள்ளார்கள்.
اَلْقَرْضُ الْحَسَنُ أَنْ لَا يَطْلُبَ مُضَاعَفَةَ الْأَجْرِ، وَإِنَّمَا يُقْرِضُ لِأَجْلِ أَمْرِ اللهِ تَعَالَى لَهُ بِالْإِحْسَانِ، وَقَالَ فِى حَدِيث الّذي تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِيْنُهُ، فى هذا الحديث أَنَّ جَوَارِحَ الْإِنْسَانِ تَعْلَمُ بِالْأَشْيَاءِ، وَلِهَذَا وَصَفَهَا اللهُ تَعَالَى بِأَنَّهَا تَشْهَدُ يَوْمَ الْقِيَامَةِ، بقوله ‘ يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيْهِمْ وَأَرْجُلُهُمْ ‘ فافهم،
“அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக கடன் கொடுங்கள்” என்ற வசனத்திற்கு விளக்கம் கூறிய இப்னு அறபீ குத்திஸ ஸிர்றுஹூ அவர்கள் அழகிய கடன் என்பது அந்தக் கடனைக் கொடுத்தவன் அதைப் பெற்றவனிடமிருந்து இரட்டிப்பான நற்கூலியை கேட்காமலிருப்பதாகும் என்று விளக்கம் எழுதியுள்ளார்கள்.
இதன் விபரமாவது முசம்மில் முனாஸ் என்பவனுக்கு கடன் கொடுத்தால் முனாஸிடமிருந்து இரட்டிப்பான கூலியைக் கேட்காமலிருப்பதாகும். அல்லது முனாஸ் என்பவனுக்கு கொடுத்ததற்காக அல்லாஹ்விடமிருந்து இரட்டிப்பான நன்மையை கேட்காமல் இருப்பதாகும்.
இவ்வாறு செய்தலே அழகிய கடன் என்பதைக் குறிக்கும். ஏனெனில் ஒருவன் இன்னொருவனுக்கு கடன் கொடுப்பது பிறருக்கு உதவியுபகாரம் செய்ய வேண்டுமென்று அல்லாஹ் சொன்ன கட்டளைக்காகவேயாகும். அல்லாஹ்வின் கட்டளைக்காக கொடுத்துவிட்டு கடனைப் பெற்றுக் கொண்டவனிடமிருந்தோ, அல்லாஹ்விடமிருந்தோ இரட்டிப்பான நன்மையை எதிர்பார்ப்பது அடிப்படைக்கே முரணானதாகும்.
மேலும் இப்னு அறபீ குத்திஸ ஸிர்றுஹூ அவர்கள் பின்வரும் ஹதீது தொடர்பாகவும் விளக்கம் சொல்லியுள்ளார்கள்.
ஹதீது:
“ஒருவன் தனது வலது கையால் கொடுப்பதை இடது கை அறியாமல் “ஸதகா” தர்மம் செய்தான்” என்ற நபீ மொழி மூலம் மனித உறுப்புக்கள் அனைத்தையும் அறிகின்றன என்ற உண்மை தெளிவாகின்றது. மனித உறுப்புகளும் விடயங்களை அறிகின்றன என்பதினால்தான் அல்லாஹ் பின்வரும் திரு வசனத்தில் இந்த உண்மையை தெளிவுபடுத்துகிறான்.
يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ
“அந்தப் பாவிகளுக்குப் பாதகமாக அவர்களின் நாவுகளும், அவர்களின் கைகளும், அவர்களின் கால்களும் சாட்சி சொல்கின்றன” என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 24-24)
மேலே குறிப்பிட்ட மூன்று வகை உறுப்புக்களும் (நாவுகள், கைகள், கால்கள்) அந்தப் பாவிகளுக்குப் பாதகமாக சாட்சி சொல்கின்றன என்றால் அவை நேரில் கண்டு அறிந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
ஏனெனில் ஒரு செய்தியை சாட்சி அடிப்படையில் சொல்வதாயின் சாட்சி சொல்பவன் நிகழ்வை நேரில் தனது கண்களால் கண்டிருக்க வேண்டும். கண்ணால் காணாமல் சொல்லப்படும் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இது நீதித்துறையின் பிரதான நிபந்தனையாகும்.
ஒருவர் நீதிமன்றுக்கு சாட்சி சொல்லச் சென்று நான் அந்த நிகழ்வை கண்ணால் காணவில்லை. நான் கேள்விப்பட்ட செய்திதான் என்று சொல்வானாயின் நீதிவான் அவன் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். சாட்சியத்திற்கு முதல் நிபந்தனை “ஐ விட்னஸ்” கண்ணால் கண்டிருத்தல் அவசியம் என்று சட்டம் சொல்லிவிடுவார்.
எனவே, நாவுகள், கைகள், கால்கள் என்ற உறுப்புக்கள் சாட்சி சொல்கின்றன என்று அல்லாஹ் கூறியுள்ளதால் குறித்த உறுப்புக்கள் நேரில் கண்டே சாட்சியம் சொல்கின்றன என்பது தெளிவாகும்.
இப்னு அறபீ றஹமஹுல்லாஹ் அவர்கள் கூறிய கருத்தை மேலும் பல திருவசனங்கள் நிறுவுகின்றன.
الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ
நாங்கள் மறுமை நாளில் அவர்களின் வாய்களுக்கு ‘seal’ வைப்போம். அவர்களின் கைகள் எம்முடன் பேசும், இன்னும் அவர்களின் கால்கள் அவர்கள் செய்தவை பற்றி சாட்சி சொல்லும். (திருமறை 36-65)
இத்திருவசனம் மூலம் அவர்களின் கைகள் அல்லாஹ்வுடன் பேசும் என்பதும், கால்கள் சாட்சி சொல்லும் என்பதும் தெளிவாக விளங்கப்படுகின்றது.
“அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக கடன் கொடுங்கள்” என்ற திரு வசனம் “வஹ்ததுல் வுஜூத்” சிந்தனையைத் தூண்டுகிறது.
ஏனெனில் அல்லாஹ்வுக்கு கடன் கொடுக்கலாம். வேறு உதவிகளும் செய்யலாம். உதவி செய்ய வேண்டும் என்ற இறை கட்டளைகளையும், பெருமானாரின் அறிவுறுத்தல்களையும் கவனத்திற் கொண்டு எவரும் கடனும் கொடுக்கலாம், வேறு உதவிகளும் செய்யலாம். எவருக்கு எதைக் கொடுத்தாலும், என்ன உதவிகள் செய்தாலும் அல்லாஹ்வுக்கே கொடுக்கிறேன், அவனுக்கே உதவி செய்கிறேன் என்ற புனிதமான எண்ணத்தோடு செய்ய வேண்டும். பிறரின் பாராட்டையும், புகழையும் எதிர்பார்த்தோ அல்லது அவனல்லாத ஒருவருக்கு கொடுக்கிறேன் என்ற எண்ணத்திலோ வழங்கினால் அது அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக கடன் வழங்குதல் என்ற புனித நோக்கத்தில் செய்ததாகாது.
அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக கடன் கொடுங்கள் என்ற திரு வசனம் அல்லாஹ்வுக்காக கொடுங்கள் என்ற கருத்தை தரவில்லை. மாறாக அல்லாஹ்வுக்கே கொடுங்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் அமைப்பிலேயே உள்ளது.
இதன்படி அல்லாஹ்வுக்கே கடன் கொடுக்க வேண்டும்.
وَأقْرِضُوا اللهَ
அல்லாஹ்வுக்கு கடன் கொடுங்கள் என்ற திரு வசனத்தில் வந்துள்ள اللهَ என்ற சொல் மொழியிலக்கண விதிப்படி مفعول به – “மப்ஊல் பிஹி” என்று சொல்லப்படுமேயன்றி வேறு விதமாகச் சொல்லப்படமாட்டாது. இதன்படி குறித்த இவ்வசனத்திற்கு அல்லாஹ்வுக்காக கடன் கொடுங்கள் என்ற பொருள் கூற வாய்ப்பே இல்லை.
எனவே, அல்லாஹ்வுக்கு கடன் கொடுங்கள் என்றுதான் திருவசனத்திற்கு பொருள் கொள்ள வேண்டுமேயன்றி வேறு விதமாகப் பொருள் கொள்ள வழியே இல்லை.
எனவே, இத்திரு வசனத்திற்கு இதுதான் பொருள் என்று ஏற்றுக் கொண்டவர்கள் இத்திரு வசனத்தின்படி அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக கடன் கொடுக்க விரும்புகின்றவர்கள் எவ்வாறு கொடுப்பது? எவருக்கு கொடுப்பதென்று செய்வதறியாது தடுமாறுகிறார்கள். அதற்கு வழி செய்யாமல் அல்லாஹ் அவ்வாறு சொல்லவுமில்லை.
தொடரும்…