அன்புச் சகோதரர்களே! சகோதரிகளே!
உங்கள் உறவினர்களில் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களையும், உங்கள் அயலவர்களில் அவ்வாறு வாழ்பவர்களையும் ஒரு கணம் சிந்தித்த பின் உங்கள் பெருநாள் பணியை தொடருங்கள்.
உங்கள் உறவினர்களில் இன்றைய காலைச் சாப்பாட்டிற்குக் கூட வசதியற்றவர்கள் இருக்கலாம். அதேபோல் உங்கள் அயலவர்களிலும் இருக்கலாம்.
அவ்வாறிருந்தால் முதலில் ஆயிரம் ரூபாயையாவது அவர்களில் ஒருவரின் கையில் கொடுத்து அவர்களைச் சந்தோஷமாக்கி வையுங்கள். அதன் பிறகு உங்களின் பெருநாள் பணிகளைத் தொடருங்கள். அல்லாஹ்வின் அடியார்களைச் சந்தோஷமாக்கி வைத்தல் எதார்த்தத்தில் அவனைச் சந்தோஷமாக்கியதாகவே ஆகும்.
“ஈகை” என்றால் கொடுத்தல் என்று பொருள் வரும். “ஈ” என்றால் வீடுகளில் பறந்து திரியும் உணவுப் பொருள்கள், குப்பைகள் போன்றவற்றை மொய்க்கும் ஆறு கால்களை உடைய ஒரு சிறிய கருப்பு நிறப் பூச்சியினமாகும்.
ஈகைப் பெருநாளில் ஈக்கேனும் ஏதாவதொன்றை கொடுக்க வேணும் என்பதை உணர்த்தும் பெருநாள்தான் ஈகைப் பெருநாளாகும்.
கடந்த காலத்தில் நமதூரில் ஒரு சகோதரன் இருந்தான். அவன் தொழமாட்டான், நோன்பு நோற்கமாட்டான், வெளிப் பார்வைக்கு குடிகாரன் போலும், “மினி மறுவா” போலும் இருப்பான். ஆயினும் எவரும் செய்யாத ஒரு நன்மையை மட்டும் அவன் தவறாமல் செய்வான்.
காலையில் எழுந்ததும் மூன்று அப்பம் வாங்குவான். அவன் அப்பத்தை கடையில் வாங்கிச் செல்கையிலே அவன் தலைமேலே குடை பிடித்தாற் போல் காக்கை கூட்டமொன்று வட்டமிட்டுச் செல்லும். அங்கு கூடும் காக்கைகளுக்கு அப்பம் மூன்றையும் சிறு துண்டுகளாக்கி கொடுப்பான்.
தினமும் 100 கிறாம் வெள்ளைச் சீனி வாங்கி பாதையில் தனக்கு விருப்பமான ஓர் இடத்தில் அமர்ந்து அங்கு கூடும் எறும்புகளுக்கு அதைக் கொடுப்பான்.
இது தவிர வேறெந்த நன்மையும் செய்யமாட்டான். ஆயினும் யாராவது ஓர் ஏழை மரணித்தால் அவரின் மரணச் செலவினங்களுக்காக கடைத் தெருவில் இறங்கி கடை கடையாகச் சென்று பணம் திரட்டி அந்த ஜனாசாவின் கடமைகளை சிறப்பாக முடிப்பான். அவன் எனக்கு மிக நெருங்கிய வலீமார்களின் ஆதரவாளனாகவும் இருந்தான்.
இவன் பொறாமைக் காரன் ஒருவனால் நஞ்சூட்டப்பட்டு மரணித்ததாக மக்கள் பேசிக் கொண்டார்கள். உண்மையை அல்லாஹ்தான் அறிந்தவன்.
இவன் மரணித்த அன்று இவனுடைய நாற்பதாம் நாள் நிகழ்வை எனது செலவில் சிறப்பாகச் செய்வதென்று நான் நேர்ச்சை செய்திருந்தேன்.
30ம் நாள் வரை என்னிடம் அதற்கான பண வசதி இருக்கவில்லை. நான் இதுபற்றி யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு நாளிரவு சுமார் 7.30 மணியளவில் தீன் வீதியிலுள்ள ஒரு சகோதரி என்னிடம் வந்து மரணித்தவரின் பெயரைச் சொல்லி அவரிடம் நான் பல வருடங்களுக்கு முன் சிறிய வளவு – காணி ஒன்று வாங்கியிருந்தேன். பணம் கொடுக்க வசதியில்லாமற் போய்விட்டது. அவர் என்னிடம் நீ பணம் தருவதற்கு முன் நான் திடீரென்று மரணித்தால் உனக்கு வசதி கிடைக்கும் நேரம் அந்தப் பணத்தை உங்களிடம் கொடுக்குமாறு சொல்லியிருந்தார். இப்போது என்னிடம் பணம் உள்ளது கொண்டு வந்துள்ளேன் என்று கூறி மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் பணம் தந்தாள்.
இது அவர் மரணித்து 34ம் நாள் நடந்ததாகும். அந்தப் பணத்தோடு நானும் மேலதிகமாக 40 ஆயிரம் ரூபாய் சேர்த்து நாலு இலட்சம் ரூபாய் செலவில் அவரின் 40ம் நாள் நிகழ்வை முடித்தேன்.
இந்த நிகழ்வை நான் எழுதியதற்கான காரணம் என்னவெனில் ஒரு மனிதனை நல்லவன் என்றோ, தீயவன் என்றோ, முஸ்லிம் என்றோ, முர்தத் என்றோ தீர்மானிப்பது அல்லாஹ்வின் விடயமேயன்றி மனிதனின் விடயமல்ல.
நான் குறிப்பிடும் நபர் வெளியுலகப் பார்வையில் கெட்டவன் என்று கணிக்கப்பட்டாலும் அவரின் அந்தரங்கத்தைப் பார்த்து தீர்ப்பு வழங்குபவன் அல்லாஹ்வேயன்றி வேறு யாருமில்லை.
நான் குறிப்படும் சகோதரன் உயிரினங்கள் மீது கடுமையான இரக்கமுள்ளவராயிருந்து செயல்பட்டதால் அல்லாஹ் அவரின் காரியத்தை மிக இலகுவாக முடித்து வைத்தான். நாமும் உயிரினங்களோடும் குறிப்பாக ஏழை மக்களோடும் மிகவும் அன்பாகவும், இரக்கமாகவும் இருப்பது அவசியமாகும்.
காதிமுல் கவ்மி