தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை எனக்கும், நான் பேசிய ஸூபிஸ ஞானக் கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்களென்று வழங்கிய “புத்வா” தீர்ப்பு முற்றிலும் பிழையானதும், மனச் சாட்சிக்கு முரணானதும், திட்டமிட்ட சதியுமேயாகும்.
தவணைகள் கூறி காலம் தாழ்த்தாமல் உடனடியாக “முர்தத்” தீர்ப்பு வழங்க வேண்டுமென்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை வற்புறுத்தியவர்களும், அவசரப்படுத்தியவர்களும் காத்தான்குடி உலமா சபையைச் சேர்ந்த தீவிரவாதப் போக்குடைய வஹ்ஹாபீகளேயாவர்.
இரு உலமா சபைகளினது தந்திர மந்திரத்தாலும் கிடைத்த வெற்றி காத்தான்குடி உலமா சபைக்கும், சம்மேளனத்திற்கும், தீவிரவாதப் போக்குடைய வஹ்ஹாபிகளுக்குமேயாகும்.
நான் கூறிய அதே கருத்தை ஒரு வஹ்ஹாபீ சொல்லியிருந்தால், அல்லது ஓர் அரசியல்வாதி சொல்லியிருந்தால், அல்லது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த யாராவதொருவர் சொல்லியிருந்தால் அது “ஆறிய கஞ்சி பழங்கஞ்சி” என்ற கதையாயிருக்கும்.
ஆடும் மயிலின் இறகை உடைத்தால்தானே அது ஆடாது. அதேபோல் ஓடும் குதிரையின் காலை உடைத்தால்தானே அது ஓடாது. மெயின் துரும்பை கண்டு பிடித்து சதி மூலம் உலமாஉகள் தமது குறிக்கோளை வென்றுவிட்டார்கள்.
இன்னும் இது தொடர்பாக இறைவனின் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் காக்காமார்களும், தம்பிமார்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள். பொறுத்திருப்போம். பொறுமையில் வெற்றி காண்போம்.
அசத்தியம் தலைதூக்கும். ஆனால் அது தலை நிமிர்ந்து வாழாது.
“பத்வா”வுக்கான சதித் திட்டத்தை தொடங்கி வைத்த பெருமை காத்தான்குடி உலமா சபையையும், சம்மேளனத்தையும், இன்னும் சில தனி மனிதர்களையுமே சாரும்.
இது தொடர்பாக நான் எழுதவுள்ள தொடர் கட்டுரையை பக்க சார்பற்ற, பரிசுத்த மனதோடு வாசிப்பவர்கள் உண்மை எதுவென்பதையும், நியாயம் எதுவென்பதையும் புரிந்து கொள்வார்கள்.
எனக்கும், எனது கருத்தைச் சரிகண்டவர்களுக்கும் “முர்தத்” என்று உலமா சபை “பத்வா” வழங்கியது 1979ம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
1979ம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வை அந்நேரம் சுமார் 15 வயதுக்கு மேற்பட்ட வயதையுடையவராய் இருந்த ஒருவரால் மட்டும்தான் எது சரி? எது பிழை? என்பதை அறிந்திருக்க முடியும். 15 வயதுக்குட்பட்டவராயிருந்த ஒருவர் சரியான விபரத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அக்காலை “கூட்டத்துடன் கோவிந்தா” போட்ட பொடியன்களேயாவர்.
1979ம் ஆண்டு 15 வயதுள்ளவராயிருந்த ஒருவர் இப்போது (2021) சுமார் 57 வயதுடையவராக இருப்பார். இதன் மூலம் 57 வயதுக்கு மேற்பட்ட வயதுள்ளவராயிருக்கும் ஒருவருக்கு மட்டுமே 1979ம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அவர்களோ இன்று அடங்கியும், ஒடுங்கியும், காடு வா வா என்றும், வீடு போ போ என்றும் சொல்லும் நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இளமைத் துடிப்பால் என்னை எதிர்த்தாலும் கூட இன்று அவர்கள் “தானும் தனது ஹாலும்” என்று வாழ்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யட்டும்.
எனினும் 1979ம் ஆண்டிற்குப் பல வருடங்களின் பின் பிறந்தவர்கள்தான் அதாவது தற்போது 30 – 35 வயதுள்ளவர்கள்தான் என்னையும், நான் கூறி வருகின்ற இறையியலையும், ஸூபிஸ தத்துவங்களையும் எதிர்த்துக் கொண்டும், ஏசிக் கொண்டும் உள்ளார்கள். உண்மையிலேயே இவர்களில் எவரும் சம்பவத்தை நேரில் கண்டவர்களல்ல. எனினும் செவி வழி மூலம் தமக்கு கிடைத்த செய்திகளை வைத்துக் கொண்டே என்னை ஏசியும், திட்டியும் வருகின்றார்கள். நான் பாதைகளால் செல்லும்போது பிறருக்கு கேட்காமல் “வணக்கம்” என்றும் சொல்கிறார்கள்.
எனவே 1979ம் ஆண்டின் ஆரம்ப வரலாறும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் இப்போதுள்ள இளைஞர்களுக்குத் தெரியாதாகையால் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக விடயம் தெரிந்த, மனத் தெளிவும், இறை பக்தியுமுள்ள, வயதில் மூத்தவர்களிடம் தீர விசாரித்து முடிவு செய்தல் அவர்களின் விடிவுக்கு பெரிதும் உதவும்.
படிக்கின்ற மாணவர்களான இவர்கள்தான் நான் பேசி வருகின்ற இறையியற் கொள்கையையும், ஸூபிஸ தத்துவங்களையும் அவசியம் படிக்க வேண்டியவர்களாவர்.
ஏனெனில் இறையியல் தத்துவமான மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் ஒரே சூலில் பிறந்த அண்ணனும், தம்பியும் போன்றவர்களாவர். ஆயினும் விஞ்ஞானம் முன்னேறிய அளவு மெய்ஞ்ஞானம் முன்னேறவில்லை. மெய்ஞ்ஞானப் பின்வாங்கலுக்குப் பிரதான காரண கர்த்தாக்கள் “ஷரீஅத்”தோடும், “பத்வா”வோடும் நின்று கொண்டு தரீகா, ஹகீகா, மஃரிபா முதலான கலைகளைத் தூக்கியெறிந்து வாழ்ந்த, வாழ்கின்ற சிலரேயாவர். இவர்களே மெய்ஞ்ஞான வளர்ச்சிக்கு தடை கற்களாக, முள்வேலிகளாகவும் இருந்துள்ளார்கள். இப்போதும் உள்ளார்கள். இவர்களின் தலையீடுகள் இல்லையெனில் இன்று விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்தின் வாசற் படியில் வரம் கேட்டு நின்றிருக்கும். இன்று மெய்ஞ்ஞானம், இறை ஞானம், வலீமார், குத்புமார், முறாகபா, முஷாஹதா, கறாமத் முதலான சொற்களை மொழிவது கூட “ஷிர்க்” என்ற இணையை ஏற்படுத்திவிடும் என்று பொது மக்கள் அஞ்சுகின்றார்கள். கந்தூரி, தர்ஹா, கொடியேற்றம், தபர்றுக் முதலான சொற்களை மொழிவது கூட தவிர்க்கப்பட வேண்டுமென்ற விஷம் பொது மக்களுக்கு பாய்ச்சப்பட்டுள்ளது. இதனால் ஒன்றுமே புரியாத பொது மக்கள் பயங்கர மிருகத்தைக் கண்டு ஓடுவது போல் ஞானப் பள்ளிவாயல்கள், மற்றும் ஞானப் பாசறைகளைக் காணும் போது ஓடி ஒழித்துவிடுகிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் மூல காரணம் என்னவெனில் எவர்கள் சொன்னால் சமுகம் ஏற்றுக் கொள்ளுமோ அவர்கள் “ஷரீஅத்”தோடு மட்டும் நின்று கொண்டு ஏனைய மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளையும் மக்கள் மத்தியில் சொல்லாமல் விட்டதேயாகும். அது மட்டுமல்ல. ஏனைய மூன்று வழிகளின் நடைமுறைகளை அமுல் செய்யாமல் விட்டதுமேயாகும். சில வருடங்களுக்கு முன் ஊர்கள் கடந்தும், நாடுகள் கடந்தும் தேடியலைந்து கற்று வந்த இறையியல் அல்லது ஸூபிஸ ஞானம் இன்று எள்ளி நகையாடும் இழி பொருளாயிற்று. பொறாமைக் காரர்களின் காற் பந்தாயுமாயிற்று. சிலரின் காலடிக்கு எடுத்துச் சென்று கொடுத்தாலும் கூட அதை இன்முகத்தோடு வாங்கிப் படிக்கும் வழக்கமுள்ளோர் குறைந்து விட்டனர். நான் காத்தான்குடி மௌலவீ ஒருவரை கௌரவித்து நான் வெளியிடும் நூல்களை அவரின் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அவரும் அதை நன்றியுடன் ஏற்றுக் கொள்வதும் வழக்கம். ஆயினும் இறுதியாக நான் அனுப்பிய அன்பளிப்பு நூலை அவரின் வீட்டிலுள்ளோர் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி வைத்தனர். அதோடு நின்று கொள்ளாமல் இப்படியான அறிவு எமக்குத் தேவையில்லை என்று சொல்லியும் அனுப்பி வைத்தனர்.
வெளியூர் பள்ளிவாயல் ஒன்றில் கடமை செய்கின்ற காத்தான்குடி மௌலவீ ஒருவருக்கும் வழமையாக எமது ஆக்கங்களை அனுப்பி வைப்போம். அண்மையில் அவருக்கு அனுப்பி வைத்தபோது அவரும் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியிருந்தார். நாம் வழங்கி வரும் உயர் கல்வியான இறையியலை, ஸூபிஸ ஞானத்தை சிலரின் காலடிக்கு அனுப்பி வைத்தும் கூட அதை ஏற்க மறுப்பது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பயத்தினாலேயே தவிர அதற்கு வேறு காரணம் எதுவுமில்லை.
இவ்வாறு இறையியல் தத்துவமும், ஸூபிஸ ஞானமும் மற்றவர்களுக்குச் சென்றடையாமல் தடை வேலிகளாக இருப்பது உலமா சபையே தவிர வேறு யாருமில்லை. உலமாஉகளே இவ்வாறு நடந்து கொள்வது மறுமை நாளின் அடையாளமென்று சொன்னாற்கூட மிகையாகாது.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நீண்ட அருள் மொழியொன்றில் يُرْفَعُ الْعِلْمُ அறிவு உயர்த்தப்படும் என்று குறிப்பிட்டிருப்பது “இல்முல்லாஹ்” அல்லாஹ்வின் ஞானத்தைக் குறிக்குமேயன்றி “ஷரீஆ”வின் அறிவைக் குறிக்காது. ஏனெனில் “ஷரீஆ”வின் அறிவு இக்காலத்தைப் பொறுத்த வரை உலகலொம் பரவி வருகிறதேயன்றி அது உயர்த்தப்பட்டதற்கு ஆதாரமில்லை. எங்கு பார்த்தாலும் “ஷரீஆ”வை சொல்லித் தருபவர்கள் நிறைய உள்ளார்கள். ஆனால் இறையியல் மேதைகளைக் காண்பதே அரிதினுமரிதாகிவிட்டது.
நமது இலங்கை நாட்டைப் பொறுத்த வரை இறையியலுக்கும், ஸூபிஸ ஞானத்திற்கும், மற்றும் “தரீகா”வின் இரகசியங்களுக்கும் தடையாக இருப்பது ரிஸ்வியின் தலைமையிலும், வஹ்ஹாபிகள் சிலரின் வழிகாட்டலிலும் இயங்கி வருகின்ற அகில இலங்கை உலமா சபையேயாகும்.
உலக நாடுகளில் எந்தவொரு நாட்டிலும் பல்லாயிரம் முஸ்லிம்களை “முர்தத்” என்ற ஒரு சொல்லால் பிரித்துப் பிளவு படுத்தப்பட்ட நாடு இலங்கை நாடு தவிர வேறெந்த நாடுமில்லை. இலங்கை நாட்டுக்கு இறை சாபம் இறங்குவதாயின் அதற்கு காரண கர்த்தாக்களாக இறையியலையும், ஸூபிஸ ஞானத்தையும் “ஷிர்க்” என்றும், “குப்ர்” என்றும் “புத்வா” வழங்கிய உலமாஉகளே இருப்பார்கள்.
(தொடரும்…)
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.