Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மரணத்திற்குப் பயந்து எங்குதான் ஓடலாம்? ஒழிக்கலாம்? மரணம் எங்கிருந்தும் வருவதில்லை! அது நம்மிலேயே இருக்கின்றது. “ஹார்ட்”...

மரணத்திற்குப் பயந்து எங்குதான் ஓடலாம்? ஒழிக்கலாம்? மரணம் எங்கிருந்தும் வருவதில்லை! அது நம்மிலேயே இருக்கின்றது. “ஹார்ட்” நின்றால் கதை முடியும்!

தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ ،وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ ، وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ، – سورة المنافقون،

விசுவாசிகளே! உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய மக்களும் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து திருப்பி வீணாக்கிவிட வேண்டாம். இன்னும் எவர் அதைச் செய்கிறாரோ அவர்கள் தாம் நஷ்டமடைந்தவர்கள்.

உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே நாம் உங்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மமாக செலவு செய்யுங்கள். அவ்வாறு செய்யாதவர் தன் மரணத் தருவாயில் என் இரட்சகனே! சமீப தவணையின் பால் என்னை நீ பிற்படுத்த வேண்டாமா? அவ்வாறு பிற்படுத்தினால் நான் தர்மம் செய்வேன், இன்ன பிற நற் கருமங்கள் செய்து நல்லோர்களிலும் உள்ளவனாக நான் ஆகிவிடுவேன் எனக் கூறுவான்.

இன்னும் அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் தவணை வந்து விட்டால் அதனை பிற்படுத்தவே மாட்டான். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவன். (திருக்குர்ஆன் – 63 -9,10,11)

உங்களின் செல்வங்களும், உங்களின் பிள்ளைகளும் அல்லாஹ்வின் நினைவிலிருந்து திருப்பி வீணாக்கி விட வேண்டாம் என்பது ஒரு விடயம்.

இத்திரு வசனம் நீங்கள் சொத்துக்கள் தேடக் கூடாதென்றோ, செல்வங்களைச் சேர்க்கக் கூடாதென்றோ சொல்லவில்லை. எனினும் அவை உங்களை இறை நினைவிலிருந்து திருப்பி விட வேண்டாம், திருப்பிவிடக் கூடாதென்றே சொல்கிறது.

இதன் கருத்து என்வெனில் உங்களின் செல்வங்களையும், உங்களின் பிள்ளைகளையும் நீங்கள் அல்லாஹ்வாகவே பாருங்கள் என்பதாகும். அவற்றை அல்லாஹ்வாக பார்த்தால் அவனின் நினைவின்றி வேறு நினைவு வராது. இவ்வாறு பார்க்காமல் செல்வங்களையும், பிள்ளைகளையும் அல்லாஹ்வுக்கு வேறானவையாக பார்ப்பவர்கள் நஷ்டவாளர்கள் என்று சொல்கிறான்.

இது தவிர செல்வங்களையோ, பிள்ளைகளையோ பார்க்கக் கூடாதென்பதோ, அவற்றையோ, அவர்களையோ கவனிக்க கூடாதென்பதோ, அல்லாஹ் தந்த செல்வங்களை நிர்வகிக்க கூடாதென்பதோ, பிள்ளைகள் மீது இரக்கம் காட்டியும், அவர்களுடன் விளையாடியும் மகிழக் கூடாதென்பதோ அல்ல.

அல்லாஹ் சிலருக்கு சிறிய செல்வங்களையும், இன்னும் சிலருக்கு பெரிய செல்வங்களையும் கொடுத்திருப்பான். பெரிய செல்வங்கள் வழங்கப்பட்டவன் அதைச் சரியாக கவனிக்கா விட்டால் எல்லாம் சீர் கெட்டு விடும். ஒருவன் தனது பிள்ளைகளை முத்தமிடுவதும், அவர்களுடன் விளையாடுவதும் வணக்கம் என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில் அவற்றைப் புறக்கணித்து நடப்பது எவ்வாறு சாத்தியமாகும்?

எனவே, செல்வங்களையும், பிள்ளைகளையும் கவனிப்பதோடு அவர்களையும் ஏனைய படைப்புகள் போல் அல்லாஹ்வை நினைவு படுத்தும் சின்னங்களாகவும், அவனின் “மளாஹிர்” பாத்திரங்களாகவும் பார்த்து வாழ்பவன் நஷ்டவாளர்களில் சேராமல் வெற்றியாளர்களில் சேர்ந்து விடுவான்.

திரு வசனத்தில் கூறப்பட்ட இரண்டாவது அம்சம் உங்களுக்கு மரணம் வருமுன் உங்களுக்கு அவன் வழங்கியவற்றிலிருந்து நீங்கள் தர்மம் செய்ய வேண்டும் என்பதாகும்.

இத்திரு வசனத்தின் அறிவுரை பொதுவாக விசுவாசிகளுக்குச் சொல்லப்பட்டதேயன்றி பணம், செல்வம் உள்ளவர்கள் குறித்து மட்டும் சொல்லப்பட்டதல்ல. இவ்வுண்மை இத்திரு வசனத்தின் ஆரம்பத்தைப் பார்த்தால் புரியும்.

இது “ஸகாத்” நிதி தொடர்பாக அருளப்பட்ட வசனமல்ல. அதுதான் பணச் செல்வம் உள்ளவர்கள் விடயத்தில் அருளப்பட்டது. இத்திரு வசனம் ஏழைகள், யாசகர்கள், நடு நிலைவாதிகள் அனைவரையும் உள்வாங்கிய ஒரு வசனமாகும்.

தர்மம் என்பது பணக்காரனும், ஏழைகளும், மற்றும் நடுத்தர வாதிகளும், யாசகர்கள் கூட கொடுக்க வேண்டிய ஒன்றாகும். பணக்காரன் தர்மம் கொடுக்கலாம். நடுத்தரவாதிகளும் கொடுக்கலாம். ஆயினும் ஏழைகளும், யாசகர்களும் எவ்வாறு தர்மம் செய்ய முடியும்? என்று ஒருவர் நினைக்கலாம். அவருக்குப் பின்வரும் திரு வசனம் விளக்கம் கூறும். அவர் கவனிக்க வேண்டும். وَأَنْفِقُوْا مِمَّا رَزَقْنَاكُمْ என்ற இந்த வசனத்தை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

இத்திரு வசனத்தில் مِمَّا “மிம்மா” என்று ஒரு சொல் வந்துள்ளது. இதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் அவ்வாறு பார்த்தால் (மின் – மா) என்று வரும். இவ்விரண்டும் சேர்ந்துதான் مِمَّا என்று வந்துள்ளது.

(مِنْ – مَا மின் -மா) என்பதில் வந்துள்ள “மின்” என்ற சொல் மொழியிலக்கண விதிப்படி “தப்ஈழ்” تبعيض என்று சொல்லப்படும். இதற்கு சிலது, கொஞ்சம், சொற்பம் என்று பொருள்கள் கொள்ளலாம். இந்த விதியை விளங்கிக் கொண்டால் சந்தேகம் நீங்கி தெளிவு ஏற்பட்டு விடும். இதன் படி குறித்த திரு வசனத்திற்கு அதாவது
وَأَنْفِقُوْا مِمَّا رَزَقْنَاكُمْ
உங்களுக்கு நாங்கள் வழங்கிய செல்வத்தில் ஒரு சதமேனும் கொடுங்கள் என்ற கருத்து வந்து விடும். இந்த விளக்கத்தின் படி ஒருவன் தனது செல்வத்திற்கேற்ப ஒரு ரூபாய் தர்மம் செய்தாலும் போதும். இவ்வாறு தர்மம் செய்வதற்கு யாசகனால் கூட முடிந்ததேயாகும்.

உதாரணமாக ஒரு யாசகன் ஒரு நாளில் பத்து ரூபாய் மட்டும் யாசகமாக பெறுகிறான் என்றால் அவனால் ஒரு ரூபாய் தர்மம் கொடுக்க முடியாதா? ஒரு நாளில் ஆயிரம் ரூபாய் உழைக்கின்ற ஒருவனால் ஐந்து ரூபாய் தர்மம் செய்ய முடியாதா? ஒரு நாளில் ஓர் இலட்சம் உழைக்கின்ற ஒருவனால் 25 ரூபாய் தர்மம் செய்ய முடியாதா?

இவ்வாறு யாசகன் முதல் கோடீஸ்வரன் வரை ஒவ்வொருவனும் செய்ய முன் வந்தால் ஒருவனின் குடும்பத்தில் ஓர் ஏழை கூட இருப்பதற்கு இடமில்லாமற் போய் விடும்.

எனவே, தர்மம் செய்ய நினைப்போர் பெரிய தொகை கொடுக்க வேண்டுமென்று யோசிக்காமல் தம்மால் முடிந்ததைக் கொடுத்து தர்மம் செய்த கூட்டத்துடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.

اَلصَّدَقَةُ تَرُدُّ الْقَضَاءَ وَالْبَلَاءَ

தர்மம் விதியைக் கூட தட்டும். சோதனைகள், நோய் நொடிகளையும் தட்டும் – தடை செய்யும் என்ற பெருமானாரின் அருள் வாக்கையும், “தர்மம் தலை காக்கும்” என்ற முன்னோர்களின் திரு வாக்கையும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும். இந்த நன்மைகளை மரணம் வருமுன் செய்தல் வேண்டும்.

பண வசதியிருந்தும் தான தர்மம் செய்யாத ஒரு செல்வந்தன் மரண படுக்கையிலிருக்கும் வேளை, “இறைவா! சொற்ப காலம் என்னைப் பிற்படுத்த மாட்டாயா? நீ அவ்வாறு பிற்படுத்தினால் தான தர்மம் செய்த நல்லடியானாகிவிடுவேன்” என்று அல்லாஹ்விடம் கெஞ்சுவான்.

அப்போது அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் தவணை வந்துவிட்டால் அதனைப் பிற்படுத்த முடியாதென்று கூறிவிடுவான்.

எனவே, அல்லாஹ்வின் நல்லடியார்களே! செல்வந்தர்களே! பெருமனங் கொண்டவர்களே! கொடை வள்ளல்களே! கொரோனா வைரஸ் காரணமாக அன்றாடம் தொழில் செய்து உழைத்தவர்களும், கூலி வேலை செய்து காலம் கழித்தவர்களும், ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் நோயுற்றுப் படுத்த படுக்கையிலேயே இருப்பவர்களும் உண்ண உணவின்றியும், மருந்து வாங்க வசதியின்றியும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் இக்கால கட்டத்தில் உங்களால் பண உதவி செய்தும், பொருளுதவி செய்தும் அவர்களின் “துஆ”வுக்கும், அல்லாஹ்வின் அன்புக்கும் உங்களைத் தயார் செய்து கொள்ளுமாறு உங்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

நம்மை விட்டும் நமது “றூஹ்” பிரியும் போது நமது உள்ளம் “கல்பு” நாம் பிறக்கும் போது எவ்வாறு பரிசுத்தாமானதாயும், “றூஹ்” உடைய தரத்திலும் இருந்ததோ அதே நிலையில் இருந்து மரணிக்க எனக்கும், உங்களுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக!

குறிப்பு: நாளை சூரிய கிரகணம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. கர்ப்பிணித் தாய்மார்கள் தலை பாதிஹா கிதாபில் فِى بَدْءِ تَلَيْ فَاتِحَه الْمُنَظَّمْ என்ற பாடல் தொடரை முடியும் வரை ஓதுமாறும், கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மீது உங்களுக்குத் தெரிந்த ஸலவாத்தை ஓதிக் கொண்டும்

اللهم يَا مُخْرِجَ النَّبَاتِ مِنَ الْحَبَّةِ الْيَابِسَةِ، أَخْرِجِ الْوَلَدَ مِنْ بَطْنِيْ مَعَ السَّلَامَةِ وَالْعَافِيَةِ مِنْ غَيْرِ نَقْصٍ وَعَيْبٍ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنْ

இந்த “துஆ”வையும் ஓதிக்கொண்டு இருக்கவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments