-மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ-
(தொடர் 01)
ஸூபிஸத்தின் எதிரிகளால் ஸூபி ஞானிகளுக்கு பன்னெடுங்காலமாக பல்வேறு தொல்லைகள், துன்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தொல்லைகள் ஏற்படுத்தப்பட்டதற்கு பிரதானமாக இரண்டு காரணங்களைக் கூறலாம்.
01. ஸூபி ஞானிகளின் கருத்துக்கள், அவர்கள் கூறும் ஆழமான தத்துவங்கள் பற்றிய அறியாமை
02. ஸூபி ஞானிகளின் மீதுள்ள பொறாமையும் அவர்களை எதிர்ப்பதன் மூலம் அறிவீனர்களின் ஆதரவைப்பெற்று உயர் பதவிகளை அடைந்துகொள்வதும்
இவ்வாறான காரணங்களின் அடிப்படையில் ஸூபிஸத்தின் எதிரிகளால் பல ஸூபி ஞானிகள் காபிர்கள், முர்தத்துகள், ஸிந்தீக்கள், பித்அத் உடையவர்கள், வழிகேடர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பலர் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள், பலர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். இது இன்றுவரை தொடர்கதையாகவே உள்ளது. அவ்வாறான சில சம்பவங்களை இங்கு நான் உங்களுக்கு சுருக்கமாக தருகின்றேன்.
இவ்வரலாற்றின் மூலம் ஸூபிஸம் எவ்வாறான எதிர்ப்பலைகளை தாண்டி வளர்ந்துள்ளது என்பதையும் ஸூபிஸத்தின் எதிரிகள் ஷெய்த்தானின் தோழர்களாக எவ்வாறு செயற்பட்டுள்ளார்கள் இப்போதும் செயற்படுகின்றார்கள் என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.
அந்த வகையில் ஹிஜ்ரி 179 – 245 காலத்தில் வாழ்ந்த ஸூபி ஞானி துன்னூன் அல் மிஸ் ரீ றஹிமஹில்லாஹ் அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த ஸூபிஸத்தின் எதிரிகளால் காபிர் என்றும் ஸிந்தீக் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு மிஸ்ர் நாட்டிலிருந்து பக்தாதுக்கு நாடுகடத்தப்பட்டர்கள்.
ஹிஜ்ரி 298 ல் மரணித்த ஸூபி ஞானி அபுல் ஹஸன் ஸம்னூன் இப்னு ஹம்ஸதுல் ஹவாஸ் (ஸம்னூன் அல் முஹிப்பு) றஹிமஹில்லாஹ் அவர்கள் சிறந்த பேச்சாளராகவும் அழகிய தோற்றமடையவர்களாகவும் காணப்பட்டார்கள். ஒரு விபச்சாரப்பெண்ணின் மூலமாக அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகள் எதிரிகளால் அரசனிடம் முன்வைக்கப்பட்டது. இதனால் அவர்களை கொலைசெய்யுமாறு அரசன் தீர்ப்பளித்தான். இதை அறிந்த ஸம்னூன் அல் முஹிப்பு) றஹிமஹில்லாஹ் அவர்கள் ஒரு வருடகாலம் தலை மறைவாக வாழ்ந்தார்கள். பின்னர் அந்த தண்டணையிலிருந்து அல்லாஹ்வின் உதவியால் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 277 ல் மரணித்த ஸூபி ஞானி அபூ ஸயீத் அல்கர்ராஸ் றஹிமஹில்லாஹ் அவர்களுக்கு அக்காலத்தில் உலமாக்கள் என்ற பெயரில் வாழ்ந்தவர்கள் அவர்களின் “கிதாபுஸ்ஸிர்” என்ற நூலில் கூறப்பட்ட தத்துவங்களை சரியாக விளங்கிக்கொள்ளாமல் காபிர் என தீர்ப்பளித்தனர்.
ஹிஜ்ரி 283 ல் மரணித்த ஸூபி ஞானி ஸஹ்ல் இப்னு அப்தில்லாஹ் அல் துஸ்தரீ றஹிமஹில்லாஹ் அவர்கள் அக்காலத்தில் இமாம் என பிரசித்தி பெற்றவர்கள் ஆயினும் அவர்களின் எதிரிகள் பொதுமக்கள் மத்தியில் அவர்கள் பற்றிய தவறான செய்திகளைப் பரப்பி அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தினர். பின்னர் அவர்களுக்கு காபிர் என தீர்ப்பளித்து அவர்களின் பிறந்த ஊரிலிருந்து பஸறாவிற்கு நாடுகடத்தினார்கள். அவர்கள் மரணிக்கும் வரை பஸறாவிலேயே வாழ்ந்தார்கள்.
(தொல்லைகள் தொடர் 2ம் பக்கத்தில்…..)