Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸூபிஸவாதிகளே! அறிவு ஞானம், நற்பண்பு, நல்லொழுக்கம் உள்ளவர்களாக இருங்கள்!

ஸூபிஸவாதிகளே! அறிவு ஞானம், நற்பண்பு, நல்லொழுக்கம் உள்ளவர்களாக இருங்கள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஸூபிஸ வழி வாழும் சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.

நீங்கள் வேலை எதுவுமின்றி வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் நானும், ஸூபிஸ மௌலவீமார்களும் பேசிய CD களைப் பெற்றுச் செவிமடுத்துச் செயல்படுமாறும், எனது ஆதராவளர்களாக பெயரளவில் மட்டும் இருக்காமல் அறிவு ஞானம் உள்ள, நற் பண்பும், நல்லொழுக்கமும் உள்ளவர்காளகவும் வாழுமாறு உங்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

“பைஅத்” பெற்ற உங்களின் நடவடிக்கைகளை மற்றவர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றார்கள். நீங்கள் தொழுகின்றீர்களா? ஹலால், ஹறாம் பேணி வாழ்கிறீர்களா? நேர்மை, நியாயம் என்பன உங்களிடம் உள்ளதா? பொறாமை, வஞ்சகம், பெருமை, அகங்காரம், ஆணவம் போன்ற தீக்குணங்கள் உங்களிடம் உள்ளனவா? கோள் சொல்லுதல், புறம் பேசுதல், கோள் சொல்லி குடும்பத்தவர்களிடம் பிளவையும், மனக் கசப்புக்களையும் ஏற்படுத்துகிறீர்களா போன்றவற்றையெல்லாம் மற்றவர்கள் கவனிக்கின்றார்கள்.

“பைஅத்” எடுத்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும். புடம் போடப்பட்ட நகைக்கும், புடம் போடப்படாத நகைக்கும் வித்தியாசமிருப்பது போல் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.

பொழுது போக்கு நோக்கத்துடன் உறவினர், தோழிகளுடன் உரையாடிக் கொண்டிருப்பதில் குற்றமில்லை. ஆயினும் பெண்கள் ஒன்று சேர்ந்தால் குறிப்பாக அறவே படிப்பறிவில்லாதவர்களும், உயர் பண்பில்லாதவர்களும், சந்தர்ப்ப சூழ் நிலைக்கேற்றவாறு பேசத் தெரியாதவர்களும், மார்க்கப்பற்றில்லாதவர்களும் ஒன்று சேர்ந்தால் அவர்களின் ஒவ்வொருவரினதும் இடது பக்கத்திற்குப் பொறுப்பான “அதீத்” என்ற மலக் அவர்களே தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பார்களென்பது பலரும் அறிந்த விடயமே! அவரின் கையில் வலி ஏற்பட்டால் أَرَاحَنَا اللهُ مِنْ هَذِهِ இவளை விட்டும் எங்களுக்கு ஓய்வு தருவாயாக என்று அவர் பிரார்த்தனை செய்வார். அவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டால் PCR சோதனையில் தோல்விதான் (Positive) ஏற்படும்.

பெண்கள் ஐந்து பேர் ஒன்று கூடினாலும், ஐம்பது பேர் ஒன்று கூடினாலும் அக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஆண்கள் பற்றியோ, பெண்கள் பற்றியோ யாராவது ஒரு சகோதரி வாய் திறந்தால் இருக்கின்றவர்கள் நம்மைப் பற்றி மட்டும் பேசுவோம். பிறரைப் பற்றிப் பேசுவதை தவிர்த்துக் கொள்வோம் என்று கூடியிருக்கும் பெண்களில் வயதில் கூடிய ஒரு சகோதரி சொல்ல வேண்டும்.

பொழுது போக்கு நோக்கத்துடன் ஒன்று கூடுவதாயினும் ஒரு மாதத்தில் ஒரு தரம் அல்லது இரண்டு தரம் மட்டுமே ஒன்று கூடுதல் வேண்டும்.

வீட்டுத் தலைவி தனது கணவனினதும், பிள்ளைகளினதும் அவசியத் தேவைகளையும், வீட்டு வேலைகளையும் முடித்த பின் நேரமிருந்தால் மார்க்கத்தோடு அல்லது பொது அறிவோடு தொடர்புள்ள நூல்களை வாசிப்பதில் அல்லது பயன் தரக் கூடிய TV நிகழ்ச்சிகபை பார்ப்பதில் நேரத்தை செலவிடலாம்.

காலையில் கணவனும், மனைவியும் “ஸுப்ஹ்” தொழுகைக்கான பாங்குடன் எழுந்து தொழ வேண்டும். அதைத் தொடர்ந்து அன்னை பாதிமா, அன்னை ஆயிஷா போன்றவர்கள் போல் திருக்குர்ஆனில் ஒரு சில வரிகளை மட்டுமாவது ஓதிவிட்டு பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தினமும் ஓதி வந்த “அவ்றாது”களில் தமக்குத் தெரிந்ததை ஓதிக் கொள்ள வேண்டும். அதன் பின் குழந்தைகளினதும், கணவரினதும் காலைச் சாப்பாடு, மற்றும் வீட்டுப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

கணவன் தொழிலுக்காக வீட்டை விட்டும் வெளியேறும் போது அவருக்கு “ஸலாம்” கூறி குறைந்த பட்சம் فِيْ أَمَانِ اللهْ என்ற வசனத்தை மட்டுமாவது சொல்லி வழியனுப்பி வைக்க வேண்டும். பிள்ளைகள் படிக்க அல்லது ஓதப் போகும் வேளையிலும் மேற்கண்டவாறு செய்தல் வேண்டும்.

கணவன் வீடு திரும்பியவுடன் காலையில் ஸலாம் கூறி, துஆ செய்து அனுப்பியது போல் பகலெல்லாம் குடும்பத்துக்காக வியர்வை சிந்தி உழைத்துவிட்டு வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று அவரின் மனங்குளிர அவரை உபசரிக்க வேண்டும்.

கணவனும், மனைவியும் எந்த நேரமும் நாயும், கறிச் சட்டியும், கீரியும், பாம்பும் போல் அகோரிகளாய் இருத்தலாகாது. வீட்டில் யாராவதொருவர் காலையில் யாஸீன் ஸூறாவையும், “ஸூறதுல் வாகிஆ”வையும் ஓதி வர வேண்டும். முடியாது போனால் இவற்றில் ஒன்றையாவது ஓத வேண்டும்.

தாய்மார் அக்காலத்தில் தமது கைக் குழந்தைகளை உறங்க வைக்கும் வேளையில் தாலாட்டுப் பாடி உறங்க வைப்பார்கள். நான் சிறுவனாயிருந்த காலத்தில் சுமார் 75 வருடங்களுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் ஊஞ்சல் இருக்கும். ஊஞ்சல் இல்லாத வீடு மிக அரிதாகவே இருக்கும். இதே போல் இன்னும் சில பொருட்கள் இல்லாத வீடுகளும் மிக அரிதாகவே இருக்கும். அவற்றில் ஊஞ்சல், அம்மி, வட்டா, திலாந்து திலாக்கால், படிக்கம், நாட்டு வைத்தியர்கள் கொடுக்கும் குளிசை அரைக்கும் சிரட்டை, மண்ணெண்ணை, குரு தைலம், கோபால் பற்பொடி, சூத்துக்குத்தி, பன் பாய், பிரம்பு, பல் துலக்கும் உமி, மற்றும் பல பொருட்கள் கட்டாயம் இருக்கும். இப்போதுள்ள இளைஞர்களிற் பலர் இவற்றில் சிலதை கண்ணால் கூட கண்டிருக்கமாட்டார்கள்.

தாய்மார் பிள்ளைகளை ஊங்சல் ஆட்டி உறங்க வைக்கும் போதெல்லாம் தாலாட்டி உறங்க வைப்பார்கள். அக்காலத்தில் தாலாட்டை “ரோராட்டு” என்று சொல்வார்கள்.

குழந்தைகள் பாலருந்தும் காலத்திலேயே அவர்களுக்கு ஆன்மிக உணர்வையும் பாலுடன் கலந்து கொடுப்பார்கள்.

யாராரோ யாரிவரோ
ஆறுமஞ்சிக்கப்பாலே
ஆராய்ந்ததன் பொருளை
அறிந்துணர்ந்து நித்திரை செய்!

யாராரோ யாரிவரோ தாயின் மடியில் இருப்பவர் யார்? யார் இவர்? ஆறுமஞ்சிக்கப்பாலே – ஆறும், ஐந்தும் பதினொன்று அதற்கப்பால் – ஆறும், ஐந்தும் ஈமானின் “பர்ழு” கடமைகள் ஆறு. இஸ்லாமின் கடமைகள் ஐந்து. ஈமானுக்கும், இஸ்லாத்துக்கும் அப்பால் “இக்லாஸ்” என்ற தத்துவத்தை அறிந்துணர்ந்து நித்திரை செய்.

இவ்வாறான பாடல்கள் பாடித் தாலாட்டியும், ரோராட்டியும் வளர்க்கப்பட்டவர்கள்தான் இப்போது 75 வயதைக் கடந்திருப்பவர்களாவர். இவர்கள் பாலருந்தும் காலத்தில் ஆன்மிகம் ஊட்டி வளர்க்கப்பட்டதினால்தான் இன்று குறித்த வயதை கடந்தவர்கள் கொஞ்சமாவது நல்ல பண்புள்ளவர்களாக உள்ளனர்.

பின்வரும் தாலாட்டை குழந்தைகளை உறங்க வைக்கும் போது பாடுங்கள். உங்கள் குழந்தைகள் எதிர் காலத்தில் ஸாலிஹானவர்களாக வருவதற்கு வாய்ப்புண்டு.

01. இறை நினைவில் எனை இழப்பேன்
இறையல்லாதவை மறப்பேன்
இறை இஷ்கில் பனா ஆவேன்
இலாஹீ எனக்கருள் சொரிவாய்

02. உனைக் காணாத கண் எதற்கு
உனைப் புகழாத நா எதற்கு
உனையறியாத கல்பெதற்கு
இலாஹீ எனக்கருள் சொரிவாய்

03. வுஜூத் ஒன்றே இரண்டில்லை
வுஜூத் இன்றேல் படைப்பில்லை
வுஜூதும் தாத்தும் வேறில்லை
இலாஹீ எனக்கருள் சொரிவாய்

04. ஆலம் உந்தன் கண்ணாடி
அதைப் பார்ப்பேன் உனை நாடி
அதுவே என்னுயிர் நாடி
இலாஹீ எனக்கருள் சொரிவாய்

05. நீரின் மேல் எழும் குமிழி
நீரேதான் இதை அறி நீ
நீருக்கு குமிழி வேறில்லை
இலாஹீ எனக்கருள் சொரிவாய்

06. கானல் நீரை நிஜமென்று
காணுதல் பேதமை என்று
காமில்கள் கூறினர் அன்று
இலாஹீ எனக்கருள் சொரிவாய்

07. உன்னைக்காண என்னானாய்
உயிராய் உடலாய் நீ ஆனாய்
ஊராய் உலகாய் நீ ஆனாய்
இலாஹீ எனக்கருள் சொரிவாய்
;
08. உன்னைக்காணுதல் சொர்க்கம்
உனக்காய் வாழ்வதில் இன்பம்
உன்னாய் ஆவதென் நோக்கம்
இலாஹீ எனக்கருள் சொரிவாய்

09. ஆலம் உந்தன் கோலமென்று
அஹ்மதின் கோலம் நீ என்று
ஆரிப்கள் சொன்னனர் அன்று
இலாஹீ எனக்கருள் சொரிவாய்

10. ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ என்று
ஹூவில் இன்பம் நான் பெற்று
ஹூவில் நான் மறைவதற்கு
இலாஹீ எனக்கருள் சொரிவாய்.

11. நாஹூர் ஆலிமின் மகனே!
நபி வழி வாழ்ந்த நன் மகனே!
நபி அருள் பெற்ற திரு மகனே!
அணைப்பீர் எம்மை அலி மகனே!

12. கால் கை நீட்டி காட்டிடுவீர்
காதலர் எம்மை காத்திடுவீர்
கப்றில் துணையாய் வந்திடுவீர்
காமில் வலிய்யே அலி மகனே!

13. காத்த நகர் பதி காத்திடுவீர்
கருணை மழைதனை சொரிந்திடுவீர்
கவலைகள் கழைந்தெமை பார்த்திடுவீர்
காமில் வலிய்யே அலி மகனே!

14. வறுமை நீக்கி அருள் புரிவீர்
வற்றாச் செல்வம் வழங்கிடுவீர்
வஹ்தத் வுஜூத் வழி நடத்திடுவீர்
காமில் வலிய்யே அலி மகனே!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments