Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்தத்துவ முத்துக்கள்!

தத்துவ முத்துக்கள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

يَقُوْلُ اللهُ جَلَّ جَلَالُهُ فِى الْحَدِيْثِ الْقُدْسِيّ، عَبْدِيْ بِيْ وَجَدْتَنِيْ، وَبِيْ وَقَعَ بَيْنِيْ وَبَيْنَكَ عُقَدُ الْمَحَبَّةِ، وَبِيْ صِرْتَ مِنْ أَهْلِ خِدْمَتِيْ، وَبِيْ تَعْرِفُنِيْ، وَبِيْ تَذْكُرُنِيْ، وَتُثْنِيْ عَلَيَّ، وَبِيْ تَتَلَذَّذُ بِذِكْرِيْ، وَبِيْ قَصَدْتَ صُحْبَتِيْ، وَبِيْ قَدَرْتَ أَنْ تَنْظُرَ فِى الْآخِرَةِ إِلَى وَجْهِيْ، عَبْدِيْ نَفْسُكَ لِيْ، وَرُوْحُكَ لِيْ، وَقَلْبُكَ لِيْ، وَكُلِّيَّتُكَ لِيْ، فَإِنْ أَعْطَيْتَنِيَ الْكُلَّ أَعْطَيْتُكَ الْكُلَّ، وَكُنْتُ لَكَ مَعَ الْكُلِّ،

அல்ஹதீதுல் குத்ஸீ எனும் பரிசுத்த ஹதீதில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

எனதடியானே! நீ என்னைக் கொண்டே என்னைப் பெற்றுக் கொண்டாய்! என்னைக் கொண்டே எனக்கும், உனக்குமிடையில் அன்பு எனும் இணைப்பு ஏற்பட்டது! என்னைக் கொண்டே நீ எனது பணியாட்களில் ஒருவனானாய்! என்னைக் கொண்டே என்னை அறிகிறாய்! என்னைக் கொண்டே என்னை நினைக்கிறாய்! என்னைப் புகழ்கிறாய்! என்னை நினைப்பதன் மூலம் நீ இன்பமடைகிறாய்! என்னைக் கொண்டே எனது நட்பை நீ நாடினாய்! என்னைக் கொண்டே மறுமையில் என் முகம் காண சக்தி பெற்றாய்! என்னடியானே! நீ எனக்கு சொந்தமானவன்! உனது உயிரும் எனக்கு சொந்தமானது! உனது உள்ளமும் எனக்குச் சொந்தமானது! உன் எல்லாமே எனக்குச் சொந்தமானது! நீ எனக்கு அனைத்தையும் தந்தால் நான் எல்லாத்தோடும் உன்னுடன் இருப்பேன். இவ்வாறு அல்லாஹ் அடியானுக்கு கூறுகிறான்.

இங்கு ஒரு நுட்பம் உண்டு. அதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது அந்த நுட்பம் பின்வருமாறு.

بِيْ كَانَ مَا كَانَ وَبِيْ يَكُوْنُ مَا يَكُوْنُ

என்னைக் கொண்டே ஆகிய அனைத்தும் ஆகின. இன்னும் என்னைக் கொண்டே ஆகுபவை அனைத்தும் ஆகும்.

என்னைக் கொண்டே ஆகிய அனைத்தும் ஆகின என்ற வசனத்தை சற்று விரித்துப் பார்த்தால் அதனுள்ளே “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் மறைந்திருப்பது ஸூபிஸ ஞானத்தோடு தொடர்புள்ளவர்களுக்கு புதிய செய்தியாகவோ, வியப்பான செய்தியாகவோ இருக்காது. இரண்டு எழுத்துக்களைக் கொண்ட இந்த بِيْ என்ற சொல்லில் “பே” என்ற எழுத்துக்கும், “யே” என்ற எழுத்துக்குமிடையில் மறைந்துள்ள ஒரு சொல்தான் சர்வ சிருட்டியுமாய் தோற்றுகின்ற மெய்ப்பொருளாகும்.

இதேபோல் இரண்டாவதாக வருகின்ற وَبِيْ என்ற சொல்லிலும் மேலே நான் கூறிய விபரம் உண்டு.

بِيْ – என்னைக் கொண்டு ஆகிய அனைத்தும் ஆகின என்றால் எனது “தாத்”து கொண்டுதான் அல்லது எனது “வுஜூத்” கொண்டுதான் ஆகிய அனைத்தும் ஆகின என்றும், ஆகுபவை அனைத்தும் ஆகும் என்றும் விளங்க வேண்டும்.

بِيْ – என்ற சொல்லில் “பே” என்ற எழுத்துக்குப் பின்னால் ذَاتِيْ அல்லது وُجُوْدِيْ என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்விளக்கம் மொழியிலக்கணத்திற்கும் பொருத்தமான விளக்கமேயாகும்.

இவ்வாறு அமைந்தால் بِذَاتِيْ அல்லது بِوُجُوْدِيْ நானே ஆகிய அனைத்துமாய் ஆகினேன் என்றும், நானே ஆகுபவை அனைத்துமாய் ஆவேன் என்றும் பொருள் அமையும். “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையின் அத்திவாரம் இங்குதான் உள்ளது.

“பே” என்ற எழுத்துக்கு “அப்ஜத்” கணக்கின்படி இரண்டு எண்ணும், “யே” என்ற எழுத்துக்கு பத்து எண்ணும் வரும். பத்தும், இரண்டும் பன்னிரண்டாகும். “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்திலுள்ள எழுத்துக்களுக்கான மொத்த எண் பன்னிரண்டு என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.

அறபு மொழியிலக்கணம் கற்ற, கற்றுக் கொண்டிருக்கின்றவர்களுக்குமான மொழியிலக்கணக் குறிப்பு.

بسم الله – என்ற வசனத்திற்கு அல்லாஹ் எனும் திரு நாமம் கொண்டு என்று மட்டும்தான் பொருள் வருமேயன்றி அந்த வசனம் நிறைவு பெறாது. அது நிறைவு பெறுவதாயின் “பிஸ்மில்லாஹ்” என்று சொன்னவன் என்ன நோக்கத்திற்காக சொன்னானோ அந்த நோக்கத்திற்குப் பொருத்தமான ஒரு சொல்லை முதலில் கொண்டு வர வேண்டும். அறபு மொழியில் அந்தச் சொல்லை எழுத்திலோ, மொழித்தலிலோ கொண்டுவருவது வழக்கத்தில் இல்லை.

உதாரணமாக ஒருவர் கடை திறப்பு விழாச் செய்யும் போது بسم الله அல்லாஹ் எனும் திரு நாமம் கொண்டு என்று சொல்வாராயின் அதற்கு முன்னால் ஒரு சொல்லை சேர்ப்பதாயின் அவர் செய்கின்ற வேலைக்குப் பொருத்தமான ஒரு சொல்லையே சேர்க்க வேண்டும். உதாரணமாக أَفْتَحُ بِسْمِ اللهِ என்று வசனம் அமைய வேண்டும். இவ்வாறான இடத்தில் பிஸ்மில்லாஹ் என்ற சொல்லுக்கு முன்னால் أَشْرَبُ – “அஷ்றபு” நான் குடிக்கிறேன் என்ற சொல்லை சொல்லக் கூடாது. ஏனெனில் அது அவ்விடத்திற்கு பொருத்தமானதல்ல.

இவ்வாறு ஒரு சொல்லைச் சேர்த்தால் மட்டும்தான் பொருள் நிறைவு பெறும். இன்றேல் பொருள் இடையில் நின்று விடும்.

எனவே, மனிதர்களில் யார் “பிஸ்மில்லாஹ்” என்று சொன்னாலும் அவர் எதற்காகச் சொன்னாரோ அதற்குப் பொருத்தமான ஒரு சொல்லை முன்னால் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அமைக்கப்படுகின்ற அச் சொல்லுக்கு மொழியிலக்கணக் கலையில் مُتَعَلَّقٌ என்று சொல்லப்படும். அதாவது பொருள் பொருந்துமிடம் என்று பொருள் வரும்.

அல்லாஹ் “பிஸ்மில்லாஹ்” என்று சொன்னால் அந்த இடத்தில் அவனின் செயலுக்குப் பொருத்தமான சொல்லையே அமைக்க வேண்டும். அல்லாஹ் சொன்ன நேரம் குடிக்கிறேன், குளிக்கிறேன் என்பன போன்ற சொற்களை அமைத்து விடக் கூடாது. அதனால்தான் பொதுவாக அனைத்தையும் உள்வாங்கும் சொல்லான

بِيْ كَانَ مَا كَانَ وَبِيْ يَكُوْنُ مَا يَكُوْنُ

என்ற வசனத்தை மொழியிலக்கண மேதைகள் அமைத்தார்கள். இவ்வாறு அமைத்தால் நான் மேலே எழுதிக்காட்டிய பொருள் வரும். அது அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும். அல்லாஹ் சொல்லும் போது மட்டும்தான் இவ்வாறு அமைக்க வேண்டும்.

அறபு மொழியில் பிஸ்மில்லாஹ் என்று எழுதும் போது ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.

யார் எழுதுவதாயினும் அதில் முதலாவதாக வருகின்ற “பே” என்ற எழுத்தை அறபியில் எழுதும் போது “பே” என்ற எழுத்தின் தலையை சற்று நீளமாக்கி بسم الله இவ்வாறு எழுத வேண்டும். بــــسم الله என்று எழுதலாகாது.

இதற்கான காரணம் என்னவெனில் بسم – பிஸ்மி என்று சொன்னால் இதில் “பே” ஓர் எழுத்தும், اسم என்ற ஒரு சொல்லும் உள்ளது. இச் சொல்லில் மூன்று எழுத்துக்கள் உள்ளன. அவை அலிப், ஸீன், மீம். “பே” என்ற எழுத்தை اسم என்ற சொல்லுடன் இணைத்தால் “இஸ்ம்” என்ற சொல்லில் உள்ள “அலிப்” எழுத்தில் வராது. بِاسْمِ என்று எழுதுவதில்லை.

எனவே, இஸ்ம் – اسم என்ற சொல்லில் உள்ள முதலெழுத்து விழுந்துள்ளது என்று சூசகமாகக் காட்டுவதற்காகவே அந்த “பே” என்ற எழுத்தின் தலை சற்று நீட்டி எழுதப்படுகிறது.

உதாரணமாக بسم என்பது போன்று.

بسم الله – என்ற வசனத்திற்கு அல்லாஹ்வுடைய திரு நாமம் கொண்டு என்ற பொருள் சொல்வது சரியா? அல்லாஹ் எனும் திரு நாமம் கொண்டு என்று பொருள் சொல்வது சரியா? இவ்விரண்டிற்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா? என்பது தொடர்பாகவும், “பிஸ்மி” எந்த இடத்தில் பாவிக்கலாம்? எந்த இடத்தில் பாவிக்கக் கூடாது? என்பது பற்றியும் அடுத்த தொடரில் ஆய்வு செய்வோம்.

குறிப்பு: “பே” என்ற எழுத்தின் தலையை சற்று நீளமாக்கி எழுதுவதுபோல் கணினி மூலம் தட்டச்சு செய்யும் போது செய்ய முடியாதாகையால் கீழுள்ள படத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments