தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“கனவுலகு காட்டும் காட்சிகள்” என்ற தலைப்பில் தொடராக நான் எழுதிய கட்டுரை தொடர் 08ல் அல்லாஹ்வைக் காணுதல் தொடர்பாக எழுதுகையில் மாதர்க்கரசியும், மாதவத்தின் ராணியுமான “றாபிஅதுல் அதவிய்யா” றழியல்லாஹு அன்ஹா அவர்களின் தத்துவமொன்றை எழுதிய நான் அந்த ஞானப் பெண் பற்றியும் எழுதுவேன் என்று குறிப்பிட்டிருந்தேன். இன்றுதான் அல்லாஹ் நாடியுள்ளான்.
நான் சுமார் 15 வயதுள்ளவனாக இருந்த காலத்திலேயே இந்த ஞானப் பெண்ணைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்.
எனது தந்தை மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் உரை நிகழ்த்திய வேளைகளில் இவர்கள் பற்றி பல சமயங்களில் பேசியதை நான் கேட்டுக் கேட்டு அந்த ஞானப் பெண் என் மனதில் குடிகொண்டு விட்டார்கள். ஆயினும் அந்த நேரம் இவர்களின் வரலாறு எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
காலிக் கோட்டை பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியில் 1958ம் ஆண்டு தொடக்கம் சில வருடங்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் அங்கு “ஹழ்றா” என்ற பெயரில் அடிக்கடி நடைபெறும் “திக்ர்” மஜ்லிஸிலும் “றாபிஅதுல் அதவிய்யா” அவர்கள் இயற்றிய ஞானக் காதல் பாட்டு பாடுவார்கள். அக்காலத்தில் அந்தப் பாடல் கேட்டு கவரப்பட்டதால் அவர்கள் மீது “மஹப்பத்” அன்பு உள்ளவனாக இன்றுவரை இருந்து வருகிறேன். இவர்கள் ஞானி மட்டுமல்ல ஒரு மாபெரும் துறவியுமாவார்கள்.
இவர்கள் ஹிஜ்ரீ வருடம் 100ல் வாழ்ந்தவர்கள். “தபஉத் தாபியீன்” தாபியீன்களைக் கண்டவர்களில் இவர்களும் அடங்குவர்.
மீலாத் வருடம் 717ல் இருந்து 796 வரை வாழ்ந்தவர்களாவர். சுமார் 79 வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள். இவர்களின் காலத்தில் இறைஞானிகள், துறவிகள் வாழ்ந்திருந்தாலும் கூட “தஸவ்வுப்” எனும் ஸூபிஸம் கலை வடிவம் பெறாத காலமாயிருந்தது.
இவர்கள் அக்காலத்தில் வணக்கம், பேணுதல், துறவரம், இறைஞானம் என்பவற்றில் சுட்டிக் காட்டப்படுமளவு பிரசித்தி பெற்றிருந்தார்கள்.
أَثْنَى عَلَى رَابِعَةَ جَمَاعَةٌ مِنْ أَئِمَّةِ السَّلَفِ، مِنْهُمْ سُفْيَانُ الثَّوْرِيْ وَابْنُ الْجَوْزِيْ، اَلَّذِيْ أَلَّفَ فِى سِيْرَتِهَا جُزْءًا خَاصًّا، وَقَدْ اُتُّهِمَتْ بِالْحُلُوْلِ، وَأَنْكَرَ ذَلِكَ الْإِمَامُ الذَّهَبِيْ،
முன்னோர்களில் பலர் இவர்களைப் புகழ்ந்துள்ளார்கள். அவர்களில் இமாம் ஸுப்யான் அத்தவ்ரீ, இப்னுல் ஜவ்ஸீ ஆகியோர் அடங்குவர். இந்த ஞானப் பெண் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற வழி கெட்ட கொள்கையுள்ளவர் என்று அக்கால மக்கள் சந்தேகப்பட்டனர். ஆயினும் இமாம் தஹபீ அவர்கள் இந்தச் செய்தியை மறுத்துக் கூறியுள்ளார்கள்.
ஞானத்தின் அரசி றாபிஆ இறாக் நாட்டின் பஸறா என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை இஸ்மாயீல் ஏழையாகவும், வணக்க சாலியாகவும் இருந்தார்கள். அவரின் நாலாவது மகளாக இவர்கள் இருந்ததால் “றாபிஆ” நாலாவது என்ற பொருளுக்குரிய “றாபிஆ” என்ற சொல்லுடன் அதவிய்யா என்ற பெயர் சேர்க்கப்பட்டு பெயர் வரலாயிற்று.
தந்தை இஸ்மாயீல் றாபிஆவின் ஒன்பதாவது வயதில் “வபாத்” மரணித்துவிட்டார்கள். அதைத் தொடர்ந்து தாயும் மரணித்துவிட்டார்கள்.
நான்கு பெண் பிள்ளைகளும் குடியிருக்க வீடின்றியும், உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும் பசி, பட்டினியோடு வாழ்ந்து வந்தார்கள்.
தகப்பன் ஓர் ஏழை. அவர் தனது நான்கு பெண் மக்களுக்காக ஒரு தோணியை மட்டும் விட்டுச் சென்றிருந்தார். வேறு எதையும் விட்டுச் செல்லவில்லை. விட்டுச் செல்ல அவரிடம் வேறொன்றும் இருக்கவுமில்லை.
இறாகில் உள்ள “பஸறா” நகரில் ஓர் ஆறு ஓடியது. அந்த ஆற்றைத் தோணியில் கடப்பதற்காக ஏழைகளிற் பலர் சிறிய சில்லறைக் கூலிக்கு அத் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்கள். ஞானப் பெண் றாபிஆவும், மூன்று சகோதரிகளும் சேர்ந்து தோணியில் மக்களை மறு கரைக்கு எடுத்துச் செல்லும் சிறிய தொழிலைச் செய்து வந்தார்கள். ஏதோ சிறிய அளவு வருவாய் கிடைத்தது. அந்தப் பணம் தமது வாழ்வாதாரத்திற்குப் போதாது போனாலும் பொறுமையோடும், பட்டினி பசியோடும் காலம் கடத்தி வந்தனர்.
பஸறா நகரில் ஏற்பட்ட பஞ்சம், பட்டினி, பசி காரணமாக றாபிஅதுல் அதவிய்யா தனது சகோதரிகளுடன் “பஸறா”விலிருந்து வெளியேறினார்கள். பின்னர் சகோதரிகளை காலம் பிரித்து வைத்தது. றாபிஆ மட்டும் தனியாகிவிட்டார்கள்.
அவ்வாறிருந்து காடுகளிலும், நீரோடைகளிலும், சன நடமாட்டமில்லாத இடங்களிலும் றாபிஆ அவர்கள் பட்டினி, பசியோடும், கிழிந்த ஆடைகளோடும் வணக்க வழிபாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த சமயம் அவ்வழியால் சென்ற கள்வர்களும், வழிக் கொள்ளையர்களும் றாபிஆவைக் கண்டு கடத்திச் செல்ல முற்பட்டபோது இவளைக் கடத்தி நமக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறதென்று சொல்லி அவர்கள் ஒன்றுமே செய்யாமல் சென்றனர். பின்னால் வந்த ஒரு திருடன் இவளைக் கடத்தினால் ஐந்து திர்ஹத்திற்காவது விற்கலாம் என்றெண்ணி அவர்களைக் கடத்திச் சென்று ஒரு வியாபாரிக்கு ஆறு திர்ஹத்திற்கு விற்று விட்டான். அவனோ மிகக் கொடியவன். வம்பன். அவர்களுக்கு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்தான். இராப் பகலாக அடித்து அவர்களிடம் வேலை வாங்கியதாலும், இரவில் தூங்கவோ, இறைவனை வழிபடவோ, தியானம் செய்யவோ விடாது துன்புறுத்தியதால் அல்லாஹ்விடம் கையேந்தி விடுதலை கேட்டார்கள். அல்லாஹ் அவர்களின் “துஆ”வை ஏற்றுக் கொண்டான் போலும் அந்தக் கொடியவனின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றினான்.
அப்துல்லாஹ் இப்னு ஈஸா என்பவர் பின்வருமாறு கூறுகிறார். நான் ஒரு சமயம் றாபிஆவின் ஓலைக் குடிசையில் பிரவேசித்த போது அவர்களின் முகம் தனி ஒளியாக இலங்கியதைக் கண்டேன். தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த யாரோ ஒருவர் திருக்குர்ஆனை ஓதும்போது நரக வேதனை தொடர்பான வசனம் ஓதப்பட்டதும் தன்னை மறந்து கூச்சலிட்டு மயங்கிக் கீழே விழுந்து விட்டார்கள்.
அவர்களின் காலத்தில் வாழ்ந்த “அப்தத்” என்ற பெண் பின்வருமாறு கூறுகிறார்கள். இப் பெண் றாபிஆ நாயகிக்கு பணி புரிந்தவராவார். இவரும் மிகச் சிறந்த பெண்ணாகவே இருந்தார். றாபிஆ நாயகி இரவெல்லாம் தொழுது கொண்டே இருப்பார்கள். காலையில் மட்டும் அவர்களின் முஸல்லாவிலேயே சற்று நேரம் உறங்குவார்கள். அவர்கள் அடிக்கடி பின்வருமாறு சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
يَا نَفْسُ كَمْ تَنَامِيْنَ؟ وَإِلَى كَمْ تَقُوْمِيْنَ؟ يُوْشِكُ أَنْ تَنَامِيْ نَوْمَةً لَا تَقُوْمِيْنَ مِنْهَا، إِلَّا لِصَرْخَةِ يَوْمِ النُّشُوْرِ
எனது நப்ஸே! நீ எதுவரை உறங்குவாய்? எதுவரை நின்று வணங்குவாய்? நப்ஸே! உனக்கு ஒரு தூக்கம் வரும். அத்தூக்கம் இறுதித் தூக்கமாகவே இருக்கும். உலக முடிவின் போதே அத்தூக்கம் கலையும் என்று சொல்வார்கள்.
றாபிஆ நாயகி அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது தங்களின் பணியாள் “அப்தத்” என்ற பெண்ணை அழைத்து
لَا تُؤْذِنِيْ بِمَوْتِيْ أَحَدًا، وَكَفِّنِّيْنِيْ فِى جُبَّتِيْ هَذِهِ، قَالَتْ فَكَفَّنَّاهَا فِى تِلْكَ الْجُبَّةِ،
நான் மரணித்தால் எவருக்கும் அறிவித்துவிட வேண்டாம். நான் அணிந்துள்ள இந்த “ஜுப்பா”வில்தான் என்னை கபன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அவ்வாறே அந்தப் பெண்ணும் செய்தார்.
றாபிஆ நாயகியை பல அறிஞர்கள் புகழ்ந்து பேசியும், எழுதியுமுள்ளார்கள். அவர்களைப் புகழ்ந்த பலர் شَهِيْدَةُ الْعِشْقِ الْإِلَهِيِّ இறை காதலால் ஷஹீத் ஆனவர் என்று புகழ்ந்துள்ளார்கள்.
றாபிஆ நாயகி அவர்கள் இறை காதலால் உந்தப்பட்டு, “இஷ்க்” எனும் பேரின்ப போதையில் மயங்கிய நிலையில் பல பாடல்கள் பாடியுள்ளார்கள். அவை ஸூபிஸக் கலையோடும், இறைஞானக் கலையோடும் தொடர்புள்ள, பேரின்பத்தை தட்டியெழுப்பும் வகையில் அமைந்தவையாகவும், “ஹழ்றா” மஜ்லிஸ், “றாதிப்” மஜ்லிஸ் போன்ற இடங்களில் அப்பாடல்கள் பாடப்படும் போது “ஜத்பு” எனும் காதல் பொங்கியெழ அவை வழி செய்யக்கூடியவையாகவும் இருந்தன.
நாயகி அவர்கள் ஹிஜ்ரீ 180ல் “வபாத்” – மறைந்தார்கள் என்றும், 185ல் மறைந்தார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அவர்களின் புனித சமாதி ஜரூசலத்திலுள்ள “பைதுல் முகத்தஸ்” பள்ளிவாயலுக்கு அண்மையில் “தூர்” எனும் மலையில் இருப்பதாகவும், அவர்கள் வாழ்ந்த இறாக் நாட்டின் “பஸறா” என்ற நகரில் இருப்பதாகவும் வரலாறு கூறுகிறது. ஒரே காலத்தில் இவர்களும், இவர்கள் போன்று “றாபிஅதுஷ் ஷாமிய்யா” என்ற பெயரில் ஒரு ஞானப் பெண்ணும் வாழ்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
றாபிஅதுல் அதவிய்யா நாயகி “பஸறா”வில் அடக்கம் பெற்றுள்ளார்கள் என்பதும், “றாபிஅதுஷ் ஷாமிய்யா” என்பவர்தான் “பைதுல் மக்திஸ்” எனுமிடத்தில் அடக்கம் பெற்றுள்ளார்கள் என்பதுமே சரியான தகவல் என்று வரலாற்றாசிரியர்களிற் பலர் கூறியுள்ளார்கள். “றாபிஅதுல் அதவிய்யா” மட்டும் திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
رَضِيَ اللهُ عَنْهَا وَعَنْ كُلِّ وَلِيٍّ وَوَلِيَّةٍ، وَنَفَعَنَا بِعُلُوْمِهَا وَبَرَكَاتِهَا وَأَسْرَارِهَا، وَحَفِظَنَا وَجَمِيْعَ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ وَالْمُوَحِّدِيْنَ وَالْمُوَحِّدَاتِ مِنَ الْوَبَاءِ وَالطَّاعُوْنِ وَمِنْ مَرَضِ كُرُوْنَا وَيْرَسْ وَمِنَ الْمَوْتِ بِكُرُوْنَا وَيْرَسْ،
10 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் சகோதரிகள் இவ் இலங்கை நாட்டில் இருக்கும் நிலையில் றாபிஅதுல் அதவிய்யா போன்ற ஒரு ஞானப் பெண் இல்லையே! எனது இத்தாகம் எப்போது தீருமோ?! இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரிகளுக்கு றாபிஆ ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்பது எனதவா!