Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கலைகளும், கலைச் சொற்களும்..

கலைகளும், கலைச் சொற்களும்..

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஒவ்வொரு கலைக்கும் கலைச் சொற்கள் என்று சில சொற்கள் உள்ளன. இறைஞானக் கலையிலும் கலைச் சொற்கள் உள்ளன. இறைஞானிகள் தமது கலைக்கு கலைச் சொற்களை அமைத்துக் கொண்டதற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு கலையுடையவர்களும் தமது கலைக்கு சில சொற்களை கலைச் சொற்களாக அமைத்துக் கொண்டதற்கு நிச்சயமாக காரணம் இருக்கவே செய்யும்.

இதேபோல் இறைஞானிகள் தமது ஞானக் கலைக்கு சில சொற்களை கலைச் சொற்களாக அமைத்துக் கொண்டதற்கும் காரணம் இருக்கவே செய்யும்.

ஏனைய கலைக் காரர்களின் காரணங்கள் பற்றி நான் எழுதாமல் இறைஞானக் கலையுடையோர் மட்டும் கூறும் காரணங்களை எழுதுகிறேன்.

தலைப்பில் கூறப்பட்ட விடயம் தொடர்பான ஒரு சிறிய ஆய்வு.

قال الشيخ محي الدين ابن عربي في الباب الرابع والخمسين من الفتوحات المكيّة، ما نصّه،

‘اعلم أنّ اَهلَ الله لم يضعوا الإشاراتِ الّتي اصطلحوا عليها فيما بَينهم لِأنفسهم، فإنّهم يعلمون الحقّ الصّريحَ في ذلك،

وإنّما وضعوها مَنعًا لِلدَّخِيْلِ بينهم، حتّى لا يعرف ماهُمْ فيه شفقةً عليه، أن يسمعَ شيأ لم يَصِلْ إليه فيُنكِرَه على أهل الله، فيُعاقَبَ على حِرمانه، فلا ينالُه بعد ذلك أبدًا،


அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “அல்புதூஹாத்” எனும் நூல் 54ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

“அஹ்லுல்லாஹ்” என்றால் அல்லாஹ் உடையவர்கள் என்று சொல்லர்த்தம் வரும். இவ்வாறு வரும் வசனத்திற்கு அவ்லியாஉகள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஸூபீகள் என்றும் பொருள் கூறலாம்.

அவ்லிhயஉகள் பேசும் போதும், எழுதும் போதும் அவர்கள் தவிர மற்றவர்கள் தமது கருத்தைப் புரிந்து கொள்ளாமலிருப்பதற்காக சில சொற்களை பயன்படுத்துவார்கள். அவர்கள் அவ்வாறு பயன்படுத்துவது தமது நலன் கருதியல்ல. அவர்கள் எதையும் தெளிவாக விளங்கியவர்களேயாவர். ஆகையால் அவர்களின் நலன்கருதி அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

மாறாக தங்களின் கூட்டத்தில் இல்லாத ஒருவன் அதாவது – ஆழமான இறை தத்துவம் புரியாத ஒருவன் அவர்களுடன் கலந்து கொண்டானாயின் அவனுக்கு ஞான அறிவு இல்லாத காரணத்தால் அவன் மட்டும் விளங்கிக்கொள்ளாத வகையில் சில சொற்கள் அமைத்து வைத்துள்ளார்கள். அச் சொற்கள் வலீமாருக்கு மட்டுமே புரியும். இடையில் வந்தவனுக்குப் புரியாது. இவர்கள் இவ்வாறு அமைத்து வைத்ததற்குக் காரணம் தமது கருத்துக்களை இடையில் வந்து கேட்டு தனது அறியாமை காரணமாக வலீமார்களையும், அவர்களின் கொள்கைகளையும் அவன் தவறாகப் புரிந்து வலீமாரைக் குறை கூறிவிடுவானாயின் அவனுக்கு எந்த ஒரு காலத்திலும் ஈடேற்றம் கிடைக்காமல் போய்விடுமென்று பயந்து அவன் மீது இரக்கம் கொண்டுதான் அவ்வாறு பயன்படுத்தினார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக இளைஞர்கள் பத்துப் பேர் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக இயங்கும் போது அவர்களின் வண்டவாளங்கள் மற்றவர்களுக்கு புரிந்துவிடக் கூடாதென்பதற்காக சில சொற்களை அமைத்து வைத்திருப்பது போன்று. உதாரணமாக சிகரட்டிற்கு மேல்படியான் என்றும், பணத்திற்கு மின்னல் ஹபீப் என்றும், மலசல கூடத்திற்கு “றெஸ்ட் ஹவ்ஸ்” என்றும் அமைத்து வைத்திருப்பது போன்று.

அக்குழுவினர் மட்டும் இருக்கும் போது அவர்கள் தாம் அமைத்துக் கொண்ட சொற்களைப் பயன்படுத்தாமல் வேறு சொற்களைப் பயன்படுத்துவார்கள். ஆயினும் அவர்களுடன் தொடர்பில்லாத ஒருவனாவது வந்துவிட்டால் மட்டுமே நான் மேற்சொன்னவாறு நடந்து கொள்வார்கள்.

ஞானிகளும், ஸூபீகளும் “பக்ர்” فَقْرٌ என்ற சொல்லை வறுமைக்கும், “பகீர்” فَقِيْرْ என்ற சொல்லை வறியவனுக்கும் பயன்படுத்தாமல் “பக்ர்” என்ற சொல்லை உச்சக்கட்ட இறைஞானத்திற்கும் – அதாவது “பனா” எனும் நிலைக்கும், “பகீர்” என்ற சொல்லை அவ்வாறு உச்சக்கட்டத்தை அடைந்தவனுக்கும், அதாவது “பனா” நிலை அடைந்தவனுக்கும் பயன்படுத்துவது போன்று.

ஸூபீகளுடன் வேறொருவன் இருக்கும் போது “பகீர்” வந்தான் என்று அவர்கள் தமக்கிடையே பேசிக் கொண்டார்களாயின் வந்தவன் ஏழை வந்தான் என்றுதான் புரிவானேயன்றி ஞானி வந்தார் என்று புரியமாட்டான்.

இவ்வாறு அடிப்படை இறைஞானம் தெரியாதவர்களை திசை திருப்புவதற்காகவேதான் அவர்கள் அமைத்துக் கொண்டனரேயன்றி மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடாதென்ற பொறாமையினால் அல்ல. மாறாக மற்றவன் பாவியாகிவிடக் கூடாதென்று அவனைப் பாதுகாப்பதற்காகவேயாகும்.

قال الشيخ الأكبر أيضا: وَمِن أعجَب الأشياء في هذه الطّريق بل لا يُوجد إلّا فيها، أنّه ما مِن طَائفةٍ تَحمَّل علما من المَنْطِقِيِّيْنَ والنُّحاةِ وأهل الهَنْدَسةِ والحساب والمتكلّمين والفلاسفة إلّا ولهم اصطلاح لا يعلمه الدَّخيلُ فيهم، إلَّا بتوقِيف منهم، لا بُدَّ من ذلك، إلّا أهل هذه الطريق خاصّةً،

فإنَّ المريدَ الصادق إذا دخل طريقهم وما عنده خَبرٌ بما اصطلحُوا عليه وجلس معهم وسمع منهم ما يتكلَّمون به من الإشارات فهِم جميعَ ما تكلّموا به، حتّى كأنّه الواضعُ لذلك الإصطلاح، ويشاركُهم في الخوض في ذلك العلم، ولا يستَغْرِب هو ذلك من نفسه، بل يَجِدُ علمَ ذلك ضرُوريًّا لا يقدِر على دفعه، فكأنّه مازال يعلمه، ولا يدري كيف حصل له ذلك، هذا شأنُ المريد الصادق، وأمّا الكاذب فلا يعرف ذلك إلّا بتوقيف ولا يَسمَحُ له قبل إخلاصه في الإرادة وطلبِه لَهَا أحدٌ من القوم، ولم يزل علماء الظاهر في كلّ عصر يتوقَّفُون في فهم كلام القوم . ( اليواقيت ج أول ص – 14)

அஷ் ஷெய்குல் அக்பர் மேலும் அதே நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். மேலே கூறிய கருத்துக்கும், பின்வரும் இக்கருத்துக்கும் தொடர்புண்டு. வாசக நேயர்கள் தொடர்பைப் புரிந்து வாசித்தால் பயன் கிட்டும்.

ஒவ்வொரு கலைக்காரர்களும் தமது கலைக்கென்று சில கலைச் சொற்களை வைத்திருப்பார்கள். அந்தக் கலையுடையவன் மட்டுமே அதைப் புரிந்து கொள்வான்.

ஆயினும் இறைஞான, ஸூபிஸக் கலையிலுள்ள கலைச் சொற்களின் தன்மைக்கிடையிலும், வேறு கலைச் சொற்களின் தன்மைக்கிடையிலும் பெருந்தூரமுண்டு. ஏனைய கலைச் சொற்களை கற்றுத்தான் அறிய வேண்டும். ஆயினும் இறைஞானக் கலைச் சொற்களின் தன்மை மாறுபட்டதாகும். அதாவது தாகமுள்ளவனுக்கு தானாக அது கற்றுக் கொடுக்கும் தன்மை கொண்டதாகும்.

இதன் விபரத்தையே ஷெய்குல் அக்பர் அவர்கள் فَإِنَّ الْمُرِيْدَ الصَّادِقَ என்று துவங்கும் இரண்டாம் பந்தி முடியும் வரை விளக்கம் எழுதியுள்ளார்கள்.

உண்மையான ஒரு சிஷ்யன் – இறை வழி நடப்பவன் – ஸூபீகளினது கலைச் சொற்களின் அறிவு இல்லாத, ஆனால் இறைவழி – ஞான வழி நடக்கும் உண்மையான சிஷ்யன் அவர்களின் “தரீகா” வழியில் இணைந்து அவர்களின் பேச்சுக்களையும், அவர்களின் கலைச் சொற்களையும் செவியேற்று வந்தானாயின் அவன் அவர்களின் கலைச் சொற்கள் தொடர்பான யாவும் அறிந்து கொள்வான். எந்த அளவு அறிந்து கொள்வான் என்றால் அவனேதான் அக்கலைச் சொற்களை அமைத்தவன் என்று உணர்ந்து கொள்வான். அவனும் ஸூபீகளுடன் கலந்து உரையாடுவான். அவர்களின் கலைச் சொற்களை அவனும் பயன்படுத்துவான். தனக்கு அந்த ஞானம் வந்ததை வியப்பாக கருதமாட்டான். எனினும் அது தவிர்க்க முடியாத தானாக வந்த அத்தியாவசிய அறிவென்று புரிந்து கொள்வான். தனக்கு அந்த ஞானம் எவ்வாறு கிடைத்ததென்று கூட அவன் விளங்கிக் கொள்ளமாட்டான். இதுவே உண்மையான “முரீத்” சிஷ்யனின் நிலையாகும்.

ஆயினும் பொய்யான சிஷ்யனோ அவர்களின் கலைச் சொற்களை அவன் அவர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். அவன் அதைக் கற்றுக் கொள்ளும் வரை ஸூபீகளில் எவரும் அவன் தம்முடன் நெருங்கியிருப்பதற்கு விரும்பமாட்டார்கள். “ளாஹிர்” வெளிரங்க உலமாஉகள் எல்லாக் காலங்களிலும் ஸூபீ மகான்களின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாமலேயே உள்ளனர்.

ஆதாரம்: அல்யவாகீத்,
பாகம் 01, பக்கம் 14

وَقَدْ كَانَ الحَسَنُ البصري، وكذلك الجنيد والشّبلي وغيرُهم لا يقرِّرون علمَ التّوحيد إلا فى قُعُورِ بُيوتِهم بعد غلق أبوابهم وجَعلِ مفاتيحها تحتَ وَرِكِهم، ويقولون أَتُحِبُّوْنَ أن تُرمى الصحابةُ والتابعون الّذين أخذنا عنهم هذا العلمَ بالزَّنْدَقَةِ بُهْتانًا وظُلما،

இறைஞானி இமாம் ஹஸனுல் பஸரீ றழியல்லாஹு அன்ஹு, இறைஞானி அபூ பக்ர் ஷிப்லீ றழியல்லாஹு அன்ஹு, இறைஞானி இமாம் ஸூபீகளின் தலைவர் ஜுனைதுல் பக்தாதீ றழியல்லாஹு அன்ஹு ஆகியோரும், மற்றும் பலரும் “இல்முத் தவ்ஹீத்” எனும் ஏகத்துவ அறிவை பகிரங்கமாகக் கூறாமல் தமது வீடுகளின் உள்ளறைகளில், வீட்டின் கதவுகளைப் பூட்டி அவற்றின் திறப்புகளைத் தமது தொடைக்குக் கீழ் வைத்துக் கொண்டுதான் இறைஞானம் பேசுவார்கள். அதோடு பின்வருமாறும் சொல்வார்கள். நாங்கள் இந்த அறிவை நபீ தோழர்கள், “தாபியீன்”களைப் பின்பற்றியே பெற்றோம். அத்தகைய அறிவை நாங்கள் பகிரங்கமாகச் சொல்லும் போது ஒரு கூட்டம் அந்த மகான்களை “சிந்தீக்” – “முர்தத்”துகள் என்று ஏசுவதற்கு நாம் வழி செய்ய விரும்பவில்லை என்று கூறுவார்கள்.

இந்த இறைஞானத்தை அதாவது “தவ்ஹீத்” எனும் ஏகத்துவத்தை பகிரங்கமாகப் பேசியவர்களிற் பலர் கொல்லப்பட்டார்கள், இன்னும் சிலர் நாடு கடத்தப்பட்டார்கள், இன்னும் சிலர் மிருகங்களுக்கு உணவாக்கப்பட்டார்கள். இவ்வாறான அட்டூழியத்திற்கும், அநீதிக்கும் சூத்திரதாரியாக இருந்தவர்கள் முஷ்ரிக்குகளுமல்ல, யஹூதிகளுமல்ல. இவர்களை விடக் கொடியவர்களான இந்த அறிவை அறியும் பாக்கியமற்ற – விதியற்ற உலமாஉகளான மார்க்க அறிஞர்களேயாவர். இக்காலத்தில் இன்னோர் போல் செயற்பட்டு வருபவர்கள் யாரெனில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலை மறைவான தலைவரும், அவரின் கைக் கூலிகளான “முப்தீ”களும், மற்றும் இந்த அறிவிலிகளின் “பத்வா”வை சரிகண்டு ஸூபீகளைக் கொன்றும், தொல்லைகள் கொடுத்தும் வருகின்ற ஏனைய முட்டாள்களுமேயாவர்.

இந்த அநீதியாளர்களின் வரம்பு மீறிய அட்டூழியத்தை தாங்க முடியாமற் போனதினால்தான் இந்த ஞானத்தை பகிரங்கமாகப் பேசி வந்த, நான் மேலே பெயர் குறிப்பிட்ட இமாம்களான ஹஸனுல் பஸரீ, அபூபக்ர் ஷிப்லீ, ஸூபீகளின் தலைவர் ஜுனைதுல் பக்தாதீ றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் வீட்டுக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு அதன் திறப்பை தமது தொடையின் கீழ் வைத்துக் கொண்டும் ஞானம் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். எனினும் இந்த அட்டூழியக் காரர்களைக் கணக்கெடுக்காத, அவர்களின் அநீதிக்கு அஞ்சாத இறைஞானிகளிற் பலர் பகிரங்கமாக பேசியும், எழுதியும் வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மேலான சுவர்க்கத்தை வழங்கி தன் மடியில் அமர்த்திக் கொள்வானாக!


இந்த மகான்களும் போலிகளுக்கும், பொறாமைக் காரர்களுக்கும் பயந்து இறைஞானம் பேசுவதையும், எழுதுவதையும் நிறுத்தியிருந்தால் இன்று – இக்காலத்தில் எந்த ஒரு நாட்டிலும் இறைஞானம் பேசுகின்ற, எழுதுகின்ற எவரும் இருக்க முடியாது.

நான் பேசுகின்ற “வஹ்ததுல் வுஜூத்” இறைஞானம் பேசிய நமது இலங்கைத் திரு நாட்டைச் சேர்ந்த, என்னை விட ஒரு படி மேலே சென்று தானே அல்லாஹ் என்று சூசகமாகக் கூறிய ஓர் இறைஞானி இருந்தார். இப்போதும் இருக்கிறார். ஆயினுமவர் (தன்னை அல்லாஹ் என்று சொன்னாலும் கூட) “பத்வா” வியாபாரிகளின் அட்டூழியத்தைப் பயந்து ஒதுங்கிக் கொண்டார் போலும்.

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments