اَلْحَسُوْدُ لَا يَسُوْدُ
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“அல்ஹாஸித்” اَلْحَاسِدْ என்றால் பொறாமைக்காரன். اَلْحَسُوْدُ “அல்ஹஸூத்” என்றால் கடும் பொறாமைக்காரன்.
ஒரு சொல்லில் இருந்த ஓர் எழுத்துப் போய் இன்னொரு எழுத்து அச் சொல்லில் வந்தால் – சொல்லமைப்பு மாறுபட்டால் பொருளும் மாறுபடும்.
“அல்ஹாஸித்” என்ற சொல்லில் உள்ள “அலிப்” என்ற எழுத்துப் போய் “வாவு” என்ற எழுத்து வந்தால் அதே சொல் اَلْحَسُوْدُ என்று தோற்றம் பெற்றதால் பொருளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பதவியிலிருந்த ஒருவர் போய் இன்னொருவர் வந்தால் வந்தவர் முன்பு இருந்தவரை விட நல்லவராகவும் இருக்கலாம். கடும் போக்குடையவராகவும் இருக்கலாம்.
இந்தச் சொல்லில் முன்பு இருந்த “அலிப்” என்பவரை விட வந்த “வாவு” என்பவர் கடும் போக்குடையவர் என்பது பொருளை அவதானித்தால் புரியும்.
மேற்கண்ட பழமொழி கடும் போக்குள்ளவரையே குறிக்கும்.
இதன் மூலம் சிறிய அளவு பொறாமை உள்ளவன் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பிருந்தாலும் கடும் பொறாமையுள்ளவன் ஒரு போதும் முன்னேறமாட்டான் என்ற உண்மை விளங்கப்படுகிறது.
பழமொழி சொல்லும் கருத்தும் நூறுவீதமும் சரியானதே! இதை நான் பலரில் பார்த்துள்ளேன்.
பொறாமை எனும் நஞ்சு நெஞ்சில் இருப்பவன் பொருளாதாரத்தில் மட்டுமன்றி எத்துறையிலும் அவன் முன்னேறமாட்டான். ஏனெனில் அவனுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்காது. அல்லாஹ் அவனை அன்பு, இரக்கம் எனும் கண்கள் கொண்டு பார்க்கமாட்டான்.
இத்தகையோன் பெரிய முதலீடு செய்து தொழில் ஒன்றை தொடங்குவான். சில மாதங்கள், சில வருடங்கள் வரை மட்டுமே அது ஜொலிக்கும்.
பிறகு தொழிலை மாற்றுவான். தங்க வியாபாரம் செய்தவன் ஒரு படியிறங்கி வெள்ளி வியாபாரம் செய்வான். இடத்தையும் மாற்றுவான். மட்டு நகரில் செய்தவன் மன்னார் சென்றுவிடுவான்.
இவ்வாறு தொழிலையும், இடத்தையும் மாற்றி மாற்றி ஒன்றுமே கை கொடுக்காமல் கூலித் தொழிலே தனது தஞ்சம் என்ற இழி நிலைக்கு இறங்கிவிடுவான்.
பொறாமைக் காரனை “முஸீபத்” எனும் நிழல் விட்டுப் பிரியாமல் அவனிலேயே குடியிருக்கும். இது சாதாரண சோதனைதான்.
ஆயினும் பொறாமைக் காரனுக்கு ஏற்படுகின்ற இன்னுமொரு சோதனை அவனின் “ஹஸனாத்” எனும் நன்மைகள் பொறாமை எனும் நெருப்புக்கு விறகாகி எரிந்து சாம்பலாய்ப் போவதாகும். நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இதை பின்வருமாறு கூறுகிறார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ‘ إِيَّاكُمْ وَالْحَسَدَ فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ ‘،
பொறாமை கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் பொறாமை “ஹஸனாத்” நன்மைகளை, நெருப்பு விறகைச் சாப்பிடுவதுபோல் சாப்பிடும் என்று அருளி எச்சரித்துள்ளார்கள்.
சடமுள்ள நெருப்பு சடமுள்ள விறகைச் சாப்பிடுவது புத்திக்குப் பொருத்தமானதும், நாம் நேரில் காணக் கூடிய ஒன்றுமாகும். ஆயினும் சடமற்ற பொறாமை அதேபோல் சடமற்ற “ஹஸனாத்” நன்மைகளை சாப்பிடுதல் என்பது புத்திக்குப் புலப்படாத ஒன்றாயினும் அதற்கு இங்கு விளக்கம் கூற நான் விரும்பவில்லை.
பொறாமையை நெஞ்சில் விதைத்து வருபவர்கள், குறிப்பாக ஸூபிஸ சமுகத்தவர்கள் இன்றே இறைவனிடம், நான் இனி பொறாமை எனும் அசூசியை நெஞ்சில் வைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ்வுக்கு வாக்களித்து நல்ல மனமுள்ளவர்களாக மாற வேண்டுமென்று அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.