தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“ஸூபிஸம்” اَلتَّصَوُّفْ என்பது ஒரு மனிதன் மனிதப் புனிதனாவதற்கு வழிகாட்டும் ஒளி விளக்காகும். மனிதனில் குடி கொண்டுள்ள பொறாமை, வஞ்சகம், எரிச்சல், கோபம், பேராசை, அகந்தை, அகப் பெருமை, மற்றுமுள்ள தீக்குணங்கள் அனைத்தையும் அகற்றி அவனை நற்குணங்களும், நல்லொழுக்கமும் உள்ளவனாகவும், அல்லாஹ்வின் அருட்பார்வைக்குரியவனாகவும் அவனை மாற்றியமைக்கும் கிடைத்தற்கரிய மருந்துமாகும்.
இந்த மருந்தைக் குடித்த எவனும் தனதுயிர் பிரியும் வரை “ஈமான்” எனும் இறை நம்பிக்கையை இழக்கமாட்டான்.
عِلْمُ التَّصَوُّفِ لَيْسَ هُوَ اللَّقْلَقَةَ بِاللِّسَانِ، وَإِنَّمَا هُوَ أَذْوَاقٌ وَوِجْدَانٌ، وَلَا يُؤْخَذُ مِنَ الْأَوْرَاقِ، وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ أَهْلِ الْأَذْوَاقِ، وَلَيْسَ يُنَالُ بِالْقِيْلِ وَالْقَالِ، وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ خِدْمَةِ الرِّجَالِ، وَصُحْبَةِ أَهْلِ الْكَمَالِ، وَاللهِ مَا أَفْلَحَ مَنْ أَفْلَحَ إِلَّا بِصُحْبَةِ مَنْ أَفْلَحَ،
ஸூபிஸ ஞானம் என்பது நாவால் வாயால் வளவளவென்று கத்துவதல்ல. அது அனுபவ ரீதியாகப் பெறும் அறிவாகும். அது தாள்களிலிருந்து பெறப்படும் அறிவல்ல – நூல்களிலிருந்து கற்றுக் கொள்ளப்படும் அறிவல்ல. ஆயினுமது அனுபவித்து ருசி கண்டவர்களிடமிருந்து பெறும் அறிவாகும். மேலுமிந்த அறிவு அவர் சொன்னது, இவர் சொன்னதிலிருந்து பெறும் அறிவுமல்ல. இவ் அறிவு “ஆண்கள்” என்று இறைஞானிகள் சொல்கின்ற இறைஞான மகான்களிடமிருந்து பெறும் அறிவாகும். இதேபோல் இறையறிவிலும், ஆன்மிகப் படித் தரங்களிலும் சம்பூரணம் பெற்றவர்களுக்கு பணி செய்வதால் கிடைக்கும் அறிவாகும். இந்த ஸூபிஸ ஞானம் கிடைப்பதாயின் ஸூபீ மகான்களுக்கு பணி செய்ய வேண்டும். அவர்களுடன் நட்பாக – நெருக்கமாக இருந்து கொள்ளுதல் வேண்டும். இறைவன் மீது சத்தியமாக இறைஞான, ஸூபிஸ வழி வாழ்ந்து வெற்றி பெற்ற அனைவரும் ஸூபீகளின் நட்பு கொண்டுதான் வெற்றி பெற்றார்கள்.
ஸூபீகளும், ஞானிகளும் தமது ஞான வழியில் “ஆண்கள்” என்று குறிப்பிடுவது தம்மைப் போல் ஞானக் கடலில் மூழ்கிப் போனவர்களை மட்டுமே குறிக்கும். ஸூபிஸ ஞானம், இறைஞானமில்லாதவர்கள் உண்மையிலேயே ஆண்களாயிருந்தாலும் கூட இறைஞானிகள் அவர்களை “அர்ரிஜால்” ஆண்கள் பட்டியலில் சேர்க்கமாட்டார்கள். உதாரணமாக ஒருவன் கெய்ரோவிலுள்ள “அல் அஸ்ஹர்” பல்கலைக் கழகத்தில் கற்று பண்டிதர், கலாநிதி போன்ற பட்டங்கள் பெற்றிருந்தாலும் அவனிடம் ஸூபிஸ ஞானம் – இறைஞானமில்லையென்றால் அவனை الرِّجَالْ – ஆண்கள் என்று ஞான மகான்கள் சொல்லமாட்டார்கள்.
فُلَانٌ لَمْ يَبْلُغْ مَبْلَغَ الرِّجَالِ حَتَّى الْآنَ
இன்னான் இன்னும் ஆண்கள் என்ற இடத்திற்கு வரவில்லை என்றே கூறுவர்.
ஸூபிஸம் உடையில் இல்லை.
ஒருவன் கெய்ரோவில் உள்ள “அல் அஸ்ஹர்” பல்கலைக் கழகத்திலோ, திரு மதீனா நகரிலுள்ள அல் ஜாமிஅதுல் இஸ்லாமிய்யா பல்கலைக் கழகத்திலோ, அல்லது வேறு பல்கலைக் கழகங்களிலோ படித்து என்னதான் உயர் பட்டங்கள் பெற்றிருந்தாலும் அவனிடம் ஸூபிஸ ஞானமில்லையானால் அவனை ஸூபீ மகான்கள் கணக்கெடுக்கமாட்டார்கள். அவனை ஆண்கள் பட்டியலில் சேர்க்கவுமாட்டார்கள்.
ஆயினும் இன்று வாழும் சமுகம் அவர்களின் பட்டம், பதவிகளைக் கண்டு ஏமாந்து போகின்றது. அவர்கள் சொல்வது எதார்த்தத்தில் பிழையாக இருந்தாலும் கூட அவர்கள் சொல்வதே சரியானதென்று பொது மக்கள் சொல்வார்கள் – நம்புவார்கள்.
இன்னொருவன் எந்த பல்கலைக் கழகத்திலும் படிக்காமலும், பட்டங்கள் எதுவும் பெறாமலும் தனது ஊரிலுள்ள ஸூபிஸ வழி வாழ்ந்து இறைவனின் அருளால் “விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்ற ஒருவரிடம் கற்றுக் கடல் போன்ற, இமய மலை போன்ற அறிவு ஞானங்கள் பெற்றிருந்தாலும் அவனிடம் பட்டம் பதவிகள் இல்லையானால் உலகம் அவனைக் கணக்கெடுக்காது, அவனின் சொல்லுக்கும் மதிப்பு இருக்காது.
இஸ்லாமிய வரலாற்றில் இறைஞானிகளும், ஸூபீகளும் தற்கால இளம் மௌலவீகள் போல் நாகரிகமாகவும், ஆடம்பரமாகவும் உடுக்கவுமில்லை, வாழவுமில்லை. இதற்கான காரணம் ஸூபிஸ வழியிற் செல்லும் போது நாகரிக, ஆடம்பர வாழ்வு கசந்து போகும். இதனால் ஸூபிஸ வழி செல்பவர்களில் அநேகர் விலை குறைந்த, கசங்கிய உடைகளை உடுப்பதையும், உணவுகளில் ஆடம்பரமில்லாமலும், கட்டுப்பாட்டோடும் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.
இவர்களின் இந் நடைமுறையை இன்றுவரை பின்பற்றி வாழ்பவர்களும் உள்ளனர். இதற்கு மாறாக வாழ்பவர்களும் உள்ளனர்.
சுமார் 75 வருடங்களுக்கு முன் இலங்கை நாட்டிலிருந்த அறபுக் கல்லூரிகளிற் சில கல்லூரிகளில் மட்டும் ஸூபிஸக் கலையில் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ அவர்களின் “அல் ஹிகம்” எனும் ஸூபிஸ நூல் பாடத்திட்டத்தில் இருந்ததை நான் அறிவேன். இந் நூல் “தஸவ்வுப்” ஸூபிஸக் கலையில் மிகப் பிரசித்திபெற்ற நூலாகும். இந் நூலின் பல இடங்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் கூறுப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடற்குரியதாகும்.
இந்நூலை எழுதிய மகான் தாஜுத்தீன் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், ஷாதுலீ நாயகம் அபுல் ஹஸன் அலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் கலீபா அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “முரீது” சிஷ்யரும், “கலீபா”வுமாவார்கள்.
இந் நூல் காலி கோட்டை “அல் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா” அறபுக் கல்லூரியில் 1958ம் ஆண்டில் (நான் அங்கு ஓதப் போன வருடம்) பாடத்திட்டத்திலிருந்தது எனக்குத் தெரியும். எனினும் நான் அங்கு இருந்த காலத்தில் அது ஓதிக் கொடுக்கப்படவில்லை. அதற்கு முன் ஓதிக் கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. எனினும் 1958ம் ஆண்டு காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியில் அதிபர் மதிப்பிற்குரிய அப்துல் ஹமீத் ஹழ்றத் அவர்கள் தினமும் காலையில் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “இஹ்யாஉ உலூமித்தீன்” எனும் நூலை பெரிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கற்றுக் கொடுப்பார்கள். “இஹ்யா” எனும் இந்நூல் “தஸவ்வுப்” ஸூபிஸ ஞான நூலாக இருந்தாலும் கூட இப்னு அறபீ நாயகம் அவர்களின் புதூஹாத், புஸூஸ் போன்ற ஆழமான ஆழியல்ல. எனினும் “நப்ஸ்” எனும் துரோகியால் தாக்கப்பட்டும், ஷெய்தான் எனும் விரோதியால் தீண்டப்பட்டும் செய்வதறியாது தடுமாறி நிற்பவர்களுக்கு பொருத்தமான “டொனிக்”தான் இஹ்யா எனும் அறிவுக் களஞ்சியம்.
இந்த நூலை வஹ்ஹாபிகள் சரி காணமாட்டார்கள். இமாம் ஙஸ்ஸாலீ அவர்களையும் சரி காணமாட்டார்கள். “நக்குண்பதற்கும் “நஸீப்” வேணும்” என்ன செய்யலாம்? அல்லாஹ் நாடவில்லை போலும். அல்லது நாடியும் விரும்பவில்லை போலும். ஓர் ஊரில் ஒரு பெரியார் இருந்தார். இறைஞான வழியிற் சென்று முறையோடு “முறாகபா”, “முஷாஹதா” செய்யத் தவறியதால் ஏற்பட்ட தடுமாற்றம் அவரை சில நாட்கள் மௌனியாக்கிவிட்டது. இனம் புரியாத சிந்தனைக்குள் தள்ளிவிட்டது. நிலை குலைந்து போனார்.
ஒரு நாள் தனது வீட்டிலிருந்த காலியான ஒரு பெட்டகத்தை திறந்து அதனுள் படுத்துக் கொண்டார்.
செய்தி வெளியானதை அறிந்த ஓர் இறைஞானி “இஹ்யா” எனும் நூலை அவரிடம் கொடுத்து
أَنَا يَحْيَى، هَذَا إِحْيَاء، طَالِعْ إِحْيَاء وَأَنْتَ تُحْيَى
நான் யஹ்யா, இது இஹ்யா – நூல், இஹ்யாவை நீ வாசி. நீ உயிர் பெறுவாய் என்று சொல்லிக் கொடுத்தார். அவர் தெளிவு நிலைக்கு திரும்பிவிட்டார்.
1963 அல்லது 64ம் ஆண்டு பாணந்துறை தீனிய்யா அறபுக் கல்லூரியில் நான் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் “ஹிகம்” எனும் நூல் பாடத்திட்டத்தில் இருந்தது எனக்குத் தெரியும். ஆனால் அது கற்றுக் கொடுக்கப்படவில்லை.
“ஹிகம்” எனும் நூல் ஒவ்வொரு மௌலவீயும் கற்றிருப்பது அவசியம் என்று நான் கருதுகிறேன். இந்த நூலை மட்டும் கற்றுக் கொண்டவர் ஏனைய ஸூபிஸ நூல்களை மிக எளிதில் புரிந்து கொள்வார்.
நான் அறிந்தவரை ஸூபிஸ நூல்களில் இமாம் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா”, “புஸூஸுல் ஹிகம்” முதலான நூல்களை கற்றுக் கொடுக்கும் திறமையுள்ளவர்கள் இவ் இலங்கையில் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. அப்படியொருவர் இருந்தாராயின் அவரிடம் நான் சென்று அவரின் கை பற்றி “பைஅத்” செய்து கொள்ள நூறு வீதம் விருப்பமுள்ளவனாக உள்ளேன். எனது கணிப்பு என்னவெனில் மேற்கண்ட இரு நூல்களையும் கற்றுக் கொடுக்கும் திறமையுள்ளவர் ஒருவர் இருப்பாராயின் அல்லாஹ்வினால் “இல்ஹாம்”, “கஷ்பு”, “இல்முல் லதுன்னீ” வழங்கப்பட்ட ஒரு மகானாகவே இருப்பார். இலை மறை காயை காண்பது கடினம்.
தாஜுத்தீன் இப்னு அதாயில்லாஹ் இஸ்கந்தரீ அவர்களின் “ஹிகம்” எனும் நூலாயின் அதை என்னாலும் கற்றுக் கொடுக்க முடியும்.
#ஹிகம் ஆசிரியர் பற்றி சில வரிகள்.
இஸ்கந்தரீ என்றாலும் ஸிக்கந்தரீ என்றாலும் இரண்டும் ஒன்றுதான். இவர்கள் ஹிஜ்ரீ 658ல், மீலாதீ 1260ல் இஸ்கந்தரிய்யாவிலேயே பிறந்தார்கள். ஹிஜ்ரீ 709ல், மீலாதீ 1309ல் மிஸ்ர் இஸ்கந்தரிய்யாவிலேயே இறையடி சேர்ந்தார்கள். றஹிமஹுல்லாஹ்!
عَـابَ الْـكَلَامَ أُنَـاسٌ لَا خَـلَاقَ لَـهُـمْ – وَمَـا عَـلَيْهِ إِذَا عَـابُـوْهُ مِـنْ ضَـرَرٍ
مَا عَابَ شَمْسَ الضُّحَى فِى الْأُفُقِ طَالِعَةً – أَنْ لَا يَرَى ضَوْئَهَا مَنْ لَيْسَ ذَا بَصَرٍ
عِلْمُ الْكَلَامْ – என்பது “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தையே குறிக்கும்.
இந்த ஞானத்தை தமக்கு அதில் நற் பாக்கியமற்ற சிலர் இழித்துரைத்தார்கள். அவர்கள் அதை இழித்துரைத்ததால் அதற்கு எந்தவொரு சிக்கலுமில்லை. நட்டமுமில்லை.
காலை நேரம் சூரியன் வானில் உதித்திருக்கும்போது கண் பார்வையற்ற ஒருவன் அதைப் பார்த்துவிட்டு அதற்கு ஒளியில்லை என்று சொல்வான்.
عِلْمُ التَّصَوُّفِ عِلْمٌ لَيْسَ يَعْرِفُهُ
إِلَّا أَخُوْ فِطْنَةٍ بِالْحَقِّ مَعْرُوْفٌ
وَلَيْسَ يَعْرِفُهُ مَنْ لَيْسَ يَشْهَدُهُ
وَكَيْفَ يَشْهَدُ ضَوْءَ الشَّمْسِ مَكْفُوْفٌ
“தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானத்தை அதி விவேகமுள்ள, சத்தியத்தை அறிந்தவன் மட்டுமே தெரிந்து கொள்வான். அதை – சூரியனைக் காணாதவன் அதை அறியமாட்டான். அந்தகன் எவ்வாறு சூரியனைக் காண்பான்?