Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸுப்ஹானல்லாஹ்! இப்படியும் பல ஞானங்களா? மெய்ஞ்ஞானம் என்பது ஒன்றுதான்!

ஸுப்ஹானல்லாஹ்! இப்படியும் பல ஞானங்களா? மெய்ஞ்ஞானம் என்பது ஒன்றுதான்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

இறை ஞானம் கற்றுக் கொள்ள விரும்பும் ஒருவன் இறைஞான அறிவில் ஆழமான அறிவும், விளக்கமும் உள்ள ஒருவரிடமே கற்றுக் கொள்ள வேண்டும். அவர் அறபு மொழியறிவு உள்ளவராக இருப்பது அவசியம். அதேபோல் “ஷரீஆ”வின் சட்டங்கள் அறிந்தவராக இருப்பதும் அவசியம்.

அறபு மொழியை அவர் தேடிக் கற்றவராகவும் இருக்கலாம். அல்லது அவர் தேடாமல் அல்லாஹ் அவருக்கு “இல்ஹாம்” அல்லது “கஷ்பு” மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டவராகவும் இருக்கலாம். இதேபோல் “ஷரீஆ”வின் அறிவை அவர் தேடி அறிந்தவராகவும் இருக்கலாம். அல்லாஹ் அவருக்கு மேலே சொன்ன வழியில் அறிவிக்கப்பட்டவராகவும் இருக்கலாம். இதில் பாகுபாடு இல்லை.

எவ்வாறாயினும் அறபு மொழி அறிவும், “ஷரீஆ”வின் சட்டமும் தெரிந்தவராயிருத்தல் வேண்டும்.

இவ்வாறுதான் ஒரு ஞான குருவின் கரம் பற்றி அவரின் ஞான சிஷ்யனாவதும், “பைஅத்” வழங்கும் “ஷெய்கு” குரு இவ்விரண்டும் கூறப்பட்ட இரு வழிகளில் எவ்வழியிலேனும் தெரிந்தவராயிருப்பது அவசியமாகும். கல்லூரியில் கால் பதிக்காத பலர் “குத்பு”களாய் வாழ்ந்து மறைந்துள்ளார்கள்.

யார் இறைஞானம் பேசினாலும் அது திருக்குர்ஆனுக்கும், ஹதீதுக்கும், இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கும் முரணில்லாமல் இருத்தல் வேண்டும்.

நம்மில் பலர் இறைஞானம்தான் பேசுகிறார்கள். நாம் பேசுகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திற்கு ஆதரவாகவும் இருக்கின்றார்கள். ஆயினுமிவர்கள் சில கருத்துக்களும், தத்துவங்களும் சொல்கிறார்கள். ஆயினுமவை அறபு மொழி, மொழியிலக்கணம் படித்தவர்கள் மத்தியில் நகைப்புக்குரியதாக உள்ளது.

ஓர் உதாரணம் மட்டும் எழுதுகிறேன்.

“லா இலாஹ இல்லல்லாஹ்” لَا إلهَ إِلَّا اللهُ எனும் இவ்வசனம் “திருக்கலிமா” என்றழைக்கப்படுகிறது. இதில் நான்கு சொற்கள் உள்ளன. அவை லா, இலாஹ, இல்லா, அல்லாஹ் என்பனவாகும்.

இந்த நான்கு சொற்களை ஐந்து சொற்களாக்கி ஞானம் பேசுவோரும் உள்ளனர்.
இவர்கள் எவ்வாறு ஞானம் பேசுகிறார்கள் என்பதை இங்கு எழுதுகிறேன்.

இவர்கள் திருக்கலிமாவிலுள்ள நான்கு சொற்களை ஐந்து சொற்களாக்கி ஞான விளக்கமொன்று கூறுகின்றார்கள்.

திருக்கலிமாவில் நான்கு சொற்கள் மட்டுமே உள்ளன. அவை லா, இலாஹ, இல்லா, அல்லாஹ் என்பனவாகும். (لَا، إلهَ، إِلَّا، الله)

இவர்கள் “அல்லாஹ்” என்ற சொல்லின் இறுதியிலுள்ள “ஹே” என்ற எழுத்தை அதை விட்டும் பிரித்து அதைத் தனியாக்கி “அல்லா – ஹூ” என்று சொல்லி திருக்கலிமாவில் ஐந்து சொற்கள் இருப்பதாக கூறி ஏதோ ஒரு விளக்கம் கூறுகிறார்கள். அதைச் செவியேற்கும் போது இது விளக்கமா? அல்லது மந்திரமா? என்று எண்ணத் தோணும்.

இவ்வாறு செய்தல் பிழையாகும். அறபு மொழியும், அதன் விதிமுறைகளையும் அறியாதவர்களிடம் இவ்வாறு கூறி அவர்களை ஏமாற்றிவிடலாம். ஆயினும் அறபு மொழியையும், அதன் இலக்கணத்தையும் கற்றவர்களை ஏமாற்ற முடியாது. ஏமாற்றுதலும், ஏமாறுதலும் ஒரு புறமிருந்தாலும் அல்லாஹ் என்ற சொல்லை மேலே நான் எழுதியவாறு பிரிப்பது சட்ட விரோதமாகும். இவ்வாறு ஞானம் பேசுவோர் ஓர் ஆலிமான ஆரிப் இடம் – அறபு மொழி மூலம் “ஷரீஆ”வைக் கற்று இறைஞானியான ஒருவரிடம் தான் சொல்வது சரியா? பிழையா? என்று முதலில் கேட்டறிந்த பின்புதான் அதைப் பேச வேண்டும்.

எனவே, திருக்கலிமாவில் உள்ள சொற்கள் நான்கு என்றும், அல்லாஹ் என்ற சொல்லின் கடைசி எழுத்தான “ஹே” என்பது அந்தச் சொல்லில் உள்ளதேயன்றி “அல்லா” என்பது ஒரு சொல் என்றும், “ஹே” என்பது அதிலுள்ள ஓர் எழுத்தேயன்றி அது தனியான ஒரு சொல் அல்ல என்பதையும் ஞானம் பேசும் மகான்கள் அறிந்து பேச வேண்டும். அவர்களின் பட்டாசி கற்றவர்களிடம் “புஷ்”வானமாகிவிடும்.

இதுவே குருட்டு ஞானமென்றும், இருட்டு ஞானமென்றும் சொல்லப்படும்.

சிரிப்போடும், சிந்தனையோடும் கலந்த ஒரு செய்தியொன்று இங்கு எழுதுகிறேன். ஒரு நாள் காலியில் இருந்து மாத்தறை செல்லும் வழியில் “ஹஜ்ஜுவத்தை” எனுமிடத்தில் அப்துர் றஹ்மான் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “தர்ஹா” அடக்கவிடத்தில் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருந்தேன். அழகான, அமைதியான, ஆன்மீக சிந்தனயை அள்ளித் தருகின்ற ஓர் இடம். பாதை ஓரமாகவே உள்ளது. அற்புதம் நிறைந்த இடம்.

அங்கு எதிர் பாராமல் வந்த ஒருவர் என்னை அழைத்து “அல்லா” என்றால் என்ன பொருள்? என்று கேட்டார். “அல்லா” என்றுதான் மொழிந்தாரேயன்றி “அல்லாஹ்” என்று அவர் மொழியவில்லை.

நீங்கள் என்னை யாரென்று நினைத்துக் கொண்டு கேட்கின்றீர்கள்? என்று அவரிடம் கேட்டேன். றஊப் ஹஸ்றத் என்றார்.

நான் அவரை ஒரு “மஜ்தூப்” என்று நினைத்தவனாக அவசரமாக தரிசனத்தை முடித்துக் கொண்டு போகவேண்டியிருப்பதால் இங்கு என்னால் சுணங்க முடியாது. இதனால் உங்கள் கேள்விக்கு ஒரு சொல்லில் எனக்கு விளக்கம் சொல்ல முடியாது என்றேன்.

அவர் என்னிடம் “அல்லா” என்றால் அவன் அல்லமாட்டான். அவனைப் பிடித்தவனைக் கைவிட மாட்டான் என்று கூச்சலிட்டார். அவர் அல்லாஹ் என்ற சொல்லின் கடைசியில் உள்ள “ஹே” என்பதை விட்டு கயிறு அறுந்தது போல் “அல்லுதல்” என்று சொல்லும் பாணியில், அவனைப் பிடித்தவன் அறுந்து போகான் என்ற கருத்தில் சொன்னார். இதுவும் ஒரு வகை ஞானம்தான். ஆயினும் இது அறபு மொழிக்கு பொருந்தாத ஞானமாகும்.

இன்னுமொரு ஞானமுண்டு. அது أَنَّ مُحَمَّدْ “அன்ன முஹம்மத்” எனும் ஞானமாகும்.

அன்னம். இதற்கு அகராதி விளக்கம்: “அன்னம்” என்றால் உணவு, சோறு என்று பொருள். சோறு போட்ட கைக்கு “அன்னமிட்ட கை” என்பர்.

“அன்னம்”: நீண்டு வளைந்த கழுத்தையும், சவ்வினால் இணைந்த விரல்களையும் உடைய – வாத்து போன்று இருக்கும் வெண்ணிற நீர்ப்பறவை. (இந்தியாவில் அன்னம் கிடையாது)

பாலையும், நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து உண்ணும் தன்மை உடைய ஒரு வெண்ணிறப் பறவை.

சோறு அள்ளும் கரண்டி “அன்னவெட்டி” எனப்படும். (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி)

அதான் – பாங்கு சொல்லும் போது “முஅத்தின்” பாங்கு சொல்பவர்
أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُوْلُ اللهِ என்று சொல்லும் வசனத்தில் “அன்ன முஹம்மத்” என்று ஒரு வசனம் வந்தள்ளது. இதன் பொருள் “நிச்சயமாக முஹம்மத்” என்பதாகும்.

இதை தவறாக விளங்கியதாலோ என்னவோ “அன்ன முஹம்மத்” என்று சோறு, உணவு போன்ற கருத்துக்குப் பயன்படுத்தி “அன்ன முஹம்மத்” சொன்னார்கள் என்றும், நபீகள் நாயகமவர்களின் பெயர் சொல்லும் போதெல்லாம் “அன்ன முஹம்மது” என்று சொல்லும் ஞானக் கூட்டமொன்று நடமாடுகிறது.

இந்த ஞானத்தின் மூலம் பெருமானார் அவர்களின் பெருமையும், மகிமையும் சுட்டிக் காட்டப்பட்டாலும் கூட இந்த ஞானம் வந்த வழி பொருத்தமானதல்ல.

இதை நான் எப்போது அறிந்து கொண்டேன் தெரியுமா?

கேரளா சென்ற நான் எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றேன். அவரும், அவரின் வீட்டவர்களும் சோறுக்கு அன்னம் என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள். அது பற்றி அவர்களிடம் கேட்ட போது, அன்ன முஹம்மத் அவர்களை கண்ணியப்படுத்தியே அவ்வாறு சொல்கிறோம் என்றனர். இப்படியும் ஒரு ஞானம்.

இன்னுமொரு ஞானம் எழுதுகிறேன். இது மிகப் பயங்கர, மனிதனை வாட்டி வதைக்கும் ஞானமாகும். இந்த ஞான வலையில் எனது உறவினர் ஒருவர் மாட்டிக் கொண்டார்.

இவர் தொழுவதில்லை. ஆயினும் இறைஞானமென்றால் போதும். இராப் பகலாய் கண் விழித்திருப்பார். இவர் தனக்கு ஒரு ஷெய்கு தேவையென்று பல ஊர்களிலும் அலைந்து ஒருவரைக் கண்டுகொண்டார். அவர் “பைஅத்” வழங்கும் ஒரு ஷெய்கு ஆவார்.

அவரிடம் “பைஅத்” கேட்ட போது அவர் இவருக்கு சில அறிவுரைகள் கூறியுள்ளார். அவற்றில் ஒன்று. ஒருவர் தொழுவதாயின் தனது உடலின் வியர்வையால் மட்டுமே “வுழூ” செய்ய வேண்டும். இன்றேல் தொழுகை நிறைவேறாதென்று சொல்லியுள்ளார். ஆறு வருடங்கள் முயற்சி செய்துள்ளார். இவரால் அந்த அளவு வியர்வை எடுக்க முடியாமற் போன காரணத்தால் சுமார் ஆறு வருடங்கள் ஒரு “ஸுஜூத்” கூடச் செய்யாமலேயே வாழ்ந்துள்ளார்.

ஒரு நாள் அவரிடம் நீங்கள் ஏன் தொழுவதில்லை? என்று நான் கேட்டேன். “வுழூ” இன்றித் தொழலாமா? என்று அவர் என்னிடம் கேட்டார். இல்லை என்றேன். “வுழூ” செய்வதற்கு முடியாமல் இருக்கிறேன் என்றார். ஏன் என்று கேட்டேன். அதற்கவர் எங்களின் தரீகா “றூல்ஸ்” விதிப்படி ஒருவர் தனது உடலில் இருந்து வருகின்ற வியர்வையால் “வுழூ” செய்தால் மட்டும்தான் நிறைவேறும் என்றார். அந்த தரீகத்தின் பெயர் என்ன? என்று கேட்டேன். அதற்கவர் “பாவா” தரீகா என்றார். பாவா தரீகாவும் உங்களுக்குத் தேவையில்லை, காவா தரீகாவும் உங்களுக்குத் தேவையில்லை. பாவாவுக்கும், காவாவுக்கும் கருவான கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் தரீகா வழியில் செல்வோம் வாருங்கள் என்று அவர் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

இன்னுமொரு ஞானம் உண்டு. இந்த ஞான வழி செல்வோர் தொழுவதுமில்லை, தொழுவது அவசியமென்று மற்றவர்களுக்கு சொல்வதுமில்லை. இதேபோல் நோன்பு நோற்பதுமில்லை. பொதுவாக ஒரு மனிதனின் ஈடேற்றத்திற்கு “ஷரீஆ” அவசியமென்று நம்பினவர்களுமல்லர். அவ்வாறு மற்றவர்களுக்குச் சொல்பவர்களுமல்லர்.

இவர்களின் குறிக்கோள் ஒரு மனிதன் 24 மணி நேரமும் இறை “திக்ர்” நினைவில் இருந்தால் போதும், வேறெந்த வணக்கமும் செய்யத் தேவையில்லை என்பதாகும்.

இப்படியும் ஒரு கூட்டம் உண்டு!

இவ்வாறு இறைஞானம் பேசுபவர்களில் பல போக்குடையோர் உள்ளார்கள். இவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்ப்பது முடியாத காரியம் என்றே நான் நினைக்கிறேன்.

எனவே, நான் கண்ட சரியான வழி ஒரே நேரத்தில் “ஷரீஆ” வழியையும், “தரீகா” வழியையும் பேணிச் செல்வதே சிறந்ததாகும்.

திருக்குர்ஆனையும், ஹதீதுகளையும், அக்தாபுகள், அவ்லியாஉகள், மற்றும் ஆரிபீன் ஆகியோரின் பேச்சுக்களையும் கருவாகக் கொண்டு நான் கூறிவருகின்ற “எல்லாம் அவனே” எனும் ஸூபிஸ தத்துவம் “ஷரீஆ”வுக்கு மண்ணளவேனும் மாறுபட்டதுமல்ல. முரண்பட்டதுமல்ல. “வஹ்ததுல் வுஜூத்” ஞான விளக்கத்தை சரியாகப் புரியாதவர்களே அது “ஷரீஆ”வுக்கு முரணானதென்பர். இந்த ஞானத்தில் “ஷரீஆ”வுக்கு முரணான ஓர் அம்சத்தை மறுப்பவர்களால் முன் வைக்க முடியுமா? முடிந்தால் அவர்கள் முன்வைக்கட்டும். அவர்களுக்கு மறுப்புக் கூற என்னால் – எங்களால் முடியும்.

أعط كل ذي حق حقَّه، وأعط الحقَّ سبحانه وتعالى حقَّه من التّنزيه والتّشبيه، وآمِنْ بقوله تعالى هو الأوّل والآخر والظّاهر والباطن، وأثبتْ فى التّشبيه كلَّ ما نفيتَه فى التّنزيه، فسُبحان من جمع التَّنزيه والتّشبيه فى آية واحدة بقوله ليس كمثله شيئ وهو السّميع البصير، وكيف يسمع العبد وكيف يَبْصُر العبد مع كونه تعالى هو السّميعَ والبصير، فاعقل واعمل،

RELATED ARTICLES

Most Popular

Recent Comments