தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
காணும் பொருளையெல்லாம் கர்த்தன் “மள்ஹர்” என்று
பேணி ஷுஹூது செய்து
பிலப்படுவதெக்காலம்!?
(ஸெய்யிதுனா காயல் நகர் தைக்கா ஸாஹிப் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ்)
ஒரு மனிதன் தான் காணும் பொருளையெல்லாம் ஹக்காக – அதாவது அல்லாஹ்வாகப் பார்க்க வேண்டும். அந்தப் பார்வைதான் சரியான பார்வை. ஒருவன் அவற்றையெல்லாம் அல்லாஹ்வுக்கு வேறானவையாகப் பார்த்தானாயின் அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவனாகிவிடுவான். இதுவே ஸூபிஸம். ஸூபிஸம் மட்டுமல்ல இதுவே எதார்த்தம்.
மனிதர்களை வழி நடத்திக் கொண்டிருந்த அறிஞர்களிற் பலரும், ஷெய்குமார்களிற் சிலரும், வஹ்ஹாபிகள் அனைவரும் அவர்களை “ஷரீஆ” வழியில் மட்டும் வழி நடாத்தினார்களேயன்றி தரீகா, ஹகீகா, மஃரிபா வழிகளில் வழி நடாத்த தவறிவிட்டார்கள். தவறிக் கொண்டும் இருக்கிறார்கள். “ஷரீஆ”வின் படி வழி நடாத்தினாலும் கூட அது போலியான வழி நடத்தலேயாகும்.
படைப்பு இறைவனின் “மள்ஹர்” என்று மட்டும் ஷெய்குமார் – குருமார் சொல்லி வந்ததாலும், தற்போது சொல்லிக் கொண்டிருப்பதினாலுமே மக்கள் புரியாமல் எது ஈமானோ அதை “குப்ர்” என்றும், எது குப்றோ அதை “ஈமான்” என்றும் தலைகீழாய் விளங்கிக் கொண்டார்கள்.
படைப்பு இறைவனின் “மள்ஹர்” என்றால் அது சரியென்றும், அது இறைவன்தான் என்றால் அது “ஷிர்க்” என்றும் விளங்கி வைத்துள்ளார்கள். இதற்குக் காரணம் அறபுச் சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்யாமல் அறபு சொற்களாகவே பயன்படுத்தி வந்ததால் மக்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை. “மள்ஹர்” என்றால் என்னவென்று விளக்கமாகவும், தெளிவாகவும் அவர்கள் சொல்லிக் கொடுக்கவில்லை.
இன்று நாள்வரை இந்நிலை நீடித்துக் கொண்டே செல்கிறது. எல்லாம் அல்லாஹ் என்பது பிழையென்றும், எல்லாம் அவனின் வெளிப்பாடு என்பதே சரியென்றும் கூறும் “ஸூபிஸம்” தெரியாத ஸூபீகளும் உள்ளனர். இவர்களின் எண்ணத்தில் இவர்கள் ஸூபீகளாக இருக்கலாம். ஆயினும் இவர்கள் ஸூபிஸத்தின் எதிரிகளேயாவர். இவர்கள் “மள்ஹர்” என்றால் என்ன? “ளாஹிர்” என்றால் என்னவென்று அழகிய தற்காலத் தமிழில் சொல்லிக் கொடுக்கவில்லை. இதுவே மக்கள் அறியாமற் போனதற்கான காரணமாகும்.
(ளாஹிர் – மள்ஹர்)
“ளாஹிர்” என்ற அறபுச் சொல்லுக்கு வெளியானதென்றும், “மள்ஹர்” என்ற சொல்லுக்கு வெளியாகுமிடம் என்றும் பொருள் வரும்.
இவ்விரண்டும் ஒன்றை விட்டும் மற்றது பிரிந்ததுமல்ல. எவராலும் பிரிக்கவும் முடிந்ததுமல்ல. சேர்ந்ததென்று சொல்லவும் முடியாது, பிரிந்ததென்று சொல்லவும் முடியாது. ஏனெனில் சேர்தல், பிரிதல் என்பதற்கு இரண்டு அம்சங்கள் வேண்டும். ஒரேயொரு அம்சத்தை வைத்துக் கொண்டு சேர்தல், பிரிதல் கதை சொல்ல இடமில்லை.
உதாரணங்கள் மூலம் இவ்விவகாரத்தை ஆய்வு செய்து பார்ப்போம்.
بِذِكْرِ الْأَمْثِلَةِ تَتَبَيَّنُ الْأَشْيَاءُ
உதாரணங்கள் கூறுவதன் மூலம் விஷயங்கள் தெளிவாகும்.
மோதிரம் என்பது தங்கத்தின் வெளிப்பாடு. மோதிரத்துடன் தங்கம் சேரவுமில்லை. மோதிரத்தை விட்டும் தங்கம் பிரியவுமில்லை. தங்கத்தை விட்டும் மோதிரம் பிரியவுமில்லை. சேர்வதற்கும், பிரிவதற்கும் இரண்டு சாமான்களே இல்லை. மோதிரம் தங்கம்தான் என்று மட்டுமே சொல்ல வேண்டும். உள்ளது தங்கம் மட்டும்தான் மோதிரம் அல்ல. சொல்வதாயின் தங்கம் மோதிர வடிவில் தோற்றுகிறது என்று மட்டுமே சொல்லலாம். மோதிரத்தின் வடிவில் தங்கம் உள்ளது. இருப்பது தங்கமேயன்றி மோதிரம் அல்ல. இங்கு அத்வைதமே உள்ளது. துவிதம் அல்ல.
தங்கம் “ளாஹிர்” என்றும், மோதிரம் “மள்ஹர்” என்றும் சொல்லப்படும். தங்கமும், மோதிரமும் என்று சொன்னால் பெயரில் இரண்டு வஸ்த்து என்று விளங்கப்பட்டாலும் வஸ்த்து ஒன்றுதான் உள்ளது. அதுதான் தங்கம். தங்கத்திற்கு “வுஜூத்” உண்டு. மோதிரத்திற்கு அது இல்லை.
இன்னுமோர் உதாரணம் எழுதுகிறேன். ஆணி என்பது இரும்பின் வெளிப்பாடு. ஆணியுடன் இரும்பு சேரவுமில்லை. இரும்புடன் ஆணி சேரவுமில்லை. ஆணியை விட்டும் இரும்பு பிரியவுமில்லை. இரும்பைவிட்டும் ஆணி பிரியவுமில்லை. ஆணியென்றும், இரும்பு என்றும் பெயரளவில்தான் இரண்டு வஸ்த்துக்கள் சொல்லப்படுகின்றனவேயன்றி எதார்த்தத்தில் இரண்டே இல்லை.
காணும் பொருட்களெல்லாம் கர்த்தன் “மள்ஹர்” என்பது சரியென்றும், அவை கர்த்தன் என்பது பிழையென்றும் சொல்வோர் ஆணியென்பது இரும்பின் “மள்ஹர்” என்பதே சரியென்றும், அது இரும்பு என்பது பிழையென்றும் சொல்ல வேண்டும். சொல்வார்களா?
மகா கனம் தங்கிய ஷெய்கு நாயகமவர்கள், படைப்புக்கள் யாவும் அல்லாஹ்வின் “மள்ஹர்”கள் என்று முரீதுகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். அதே நேரம் படைப்புக்கள் அல்லாஹ் அல்ல என்றும் சொல்லிக் கொடுக்கின்றார்கள். ஏன் இந்த நாடகமோ புரியவில்லை.
இவ்வாறு மறுத்துரைக்கும் மகான்கள், “பைஅத்” வழங்கும் ஷெய்குமார் “ஆரிபீன்”களால் எழுதப்பட்ட நூல்களை வாசிக்கவில்லையா? “இன்ஸான் காமில்” நூலாசிரியர் இமாமுனா அப்துல் கரீம் அல் ஜீலீ, “அந்நாதிறாதுல் ஐனிய்யா” நூலாசிரியர் இமாமுனா அப்துல் ஙனீ அந்நாபலஸீ றஹிமஹுமல்லாஹ் ஆகியோர் பின்வரும் பாடல்களில் சொல்வதென்ன? இன்னோர் பின்வரும் பாடலை கவனிக்க வேண்டும்.
وَمَا الْخَلْقُ فِى التِّمْثَالِ إِلَّا كَثَلْجَةٍ
وَأَنْتَ بِـهَا الْمَاءُ الَّـذِيْ هُـوَ نَـابِـعٌ
وَمَا الثَّلْجُ فِى تَـحْـقِيْقِنَا غَيْرَ مَائِهِ
وَغَيْرَانِ فِى حُـكْمٍ دَعَتْهُ الشَّرَائِعُ
وَلَكِنْ بِذَوْبِ الثَّـلْجِ يُرْفَعُ حُكْمُهُ
وَيُوْضَعُ حُـكْمُ الْمَاءِ وَالْأَمْرُ وَاقِعٌ
تَجَمَّعَتِ الْأَضْدَادُ فِـى وَاحِدِ الْـبَهَا
وَفِيْهَ تَلَاشَتْ فَهُوَ عَنْـهُـنَّ سَـاطِعٌ
படைப்புக்கு உதாரணம் ஐஸ் கட்டியாகும். இறைவனுக்கு உதாரணம் ஐஸ் கட்டியான நீராகும். ஐஸ் கட்டி நீரேதான் என்பது ஸூபீகளின் கருத்தாகும். அது வேறு. இது வேறென்பது உயிரில்லலா பொம்மைகளின் கருத்தாகும். ஐஸ்கட்டி கரைந்தால் நீரன்றி வேறென்ன? ஒன்றுக்கு மற்றது எதிரான இரண்டும் அல்லாஹ்வில் ஒன்று சேர்ந்துள்ளன.
“வஹ்ததுல் வுஜூத்” “குப்ர்” என்று கூறிய மகான்களே!
உலகில் இவ்வாறு பேசியோர் பல்லாயிரம் பேர் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். இவர்களுக்கு தர்ஹாக்கள் உண்டு. தினமும் பல்லாயிரம் பேர்கள் இவர்களைத் திரிசித்து அருள் பெறுகிறார்கள். இந் நாட்டிலும் இதே கருத்தைச் சொன்ன மகான்கள், ஷெய்குமார்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காபிர்கள் என்றால் ஏன் இவர்களின் சியாறங்களை விட்டு வைத்துள்ளீர்கள்? விட்டு வைத்திருப்பது அநீதியல்லவா? ரிஸ்வி கோடரியை தோள் மீது சுமந்து வரட்டும். பத்வா குழு மண் வெட்டி, பக்காசிகளுடன் நடந்து வரட்டும். செல்லுங்கள் அனைவரும் இதே “வஹ்ததுல் வுஜூத்” கருத்தைப் பேச்சிலும். எழுத்திலும் எடுத்து வைத்தவர்களின் கப்றுகள், சியாறங்கள் தரிசிக்கப்பட்டு வருகின்றன. அனைத்தையும் உடைத் தெறியுங்கள். இதே கருத்து எழுதப்பட்ட கிதாபுகள் உள்ளன. அவற்றையெல்லாம் பொது மைதானமொன்றில் குவித்து எரித்துச் சாம்பலாக்குங்கள்.
நபீ புகழ் காப்பியம் வித்ரிய்யா ஷரீபா பாடல் ஒன்றில் மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹ் காஹிரீ அவர்கள்
يَدُ الْمَاحِيْ هَلْ كَانَتْ يَدَ اللهِ قُلْ نَعَمْ
وَقُلْ وَكَذَا الْمَوْلَى رَمَى إِذْ رَمَى رَمْيًا
பெருமானாரின் கை அல்லாஹ்வின் கையா? என்று கேட்ட மாதிஹுர் றஸூல் ஆம் என்று சொல்லுங்கள் என்றும். எதிரிகளுக்கு மண்ணை எறிந்தவன் அல்லாஹ்தான் நபீ அல்ல என்றும் சொல்கிறார்கள்.
அறிஞர் மர்ஹூம் சித்தி லெப்பை அவர்களும் இதே “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர் மட்டுமல்ல. எழுதியவரும்தான். அவர் நமது நாட்டில்தான் சமாதி கொண்டுள்ளார்கள். எங்கே உங்கள் தலைவர் அவர் தலைமையில் சென்று அதையும் உடையுங்கள். “முர்தத்” என்று “பத்வா” வழங்கிவிட்டு ஏன் மௌனிகளாயுள்ளீர்கள். உங்கள் “பத்வா” எழுத்தில் மட்டும்தானா? செயலில் இல்லையா?