அரை குறை ஞானியால் ஈமானுக்கு ஆபத்து!
அரை குறை வைத்தியனால் உயிருக்கே ஆபத்து!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அரை குறை ஆலிம் என்பவர் இரண்டொரு வருடங்கள் மட்டும் அறபுக் கல்லூரியில் ஓதிவிட்டு பிறகு ஓதுவதை நிறுத்தி தொழிலில் இறங்கியவர். இவர் இரண்டு வருடங்கள் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் வீட்டவர்களும், உறவினர்களும் அவரை மௌலவீ என்று செல்லமாக அழைத்து வந்தது அவருக்குப் பெயர் போலாயிற்று. இவரின் ஆரம்ப வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டும் இவர் அரை வேக்காடு என்பது தெரியும். ஏனையோர் அவரை ஆலிம் என்றும், மௌலவீ என்றும் அழைக்கலாயினர். அவரோ வெறும் வெங்காயம்தான்.
இவரை ஆலிம் என்று விஷயம் தெரியாமல் நம்பின பொது சனம் இவரிடம் “ஷரீஆ”வின் சட்டங்களை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு கேள்விகள் கேட்கிறார்கள். இவர் ஊரில் ஆலிம் என்று பிரசித்தி பெற்றவரல்லவா? இவரால் தெரியாது என்று சொல்ல முடியாத நிலையில் ஏதோ தனது அறிவுக்குப்பட்டதை சொல்லிக் கொடுக்கிறார்.
நடந்த சம்பவம் ஒன்றை எழுதுகிறேன். சுமார் 60 வருடங்களுக்கு முன் முதலாவதாக காத்தான்குடிக்கு “தப்லீக் ஜமாஅத்” அமைப்பைக் கொண்டு வந்த முதல் மனிதர் இவர்தான்.
இவர் பழகுவதற்கு நல்ல மனிதன்தான். ஆயினும் இவர் மௌலவீ என்றழைக்கப்பட்டார். ஆனால் சட்டப்படி “ஸனது” பெற்றவரல்ல. அறபு மொழிக்கும், இவருக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் உர்து மொழி நன்றாகப் பேசத் தெரிந்தவர். இவர் வஹ்ஹாபிஸக் கொள்கைக்கு ஆதரவானவர். ஆனால் அவருக்கு வஹ்ஹாபிஸமும் தெரியாது, ஸுன்னிஸமும் தெரியாது. ஷரீஆ சட்டத்திற்கும், அவருக்கும் சம்பந்தமே இல்லை.
ஒரு சமயம் ஒரு வியாபாரி இவரிடம் சென்று தனது உள்ளங்கையில் காயம் உண்டு. டொக்டர் தண்ணீர் படக் கூடாதென்று சொல்லவிட்டார். நான் தொழுகைக்காக “வுழூ” எவ்வாறு செய்ய வெண்டும்? என்று கேட்டுள்ளார்.
மௌலவீ ஸாஹிபு அவருக்குப் பின்வருமாறு விளக்கம் சொல்லியுள்ளார். அதாவது கையில் மணிக்கட்டிலிருந்து விரல்கள் உள்ளிட்ட பகுதிகளைக் கழுவுவது “பர்ழ்” கடமையல்ல. அது “ஸுன்னத்” ஆனதேயாகும். உனது உள்ளங்கையில் காயம் இருப்பதால் அதைக் கழுவ வேண்டிய அவசியம் இல்லை. நீ முழங்கை உட்பட மணிக்கட்டு வரையிலான பகுதியை கழுவினால் போதும். “ஸுன்னத்”தான பகுதியை கழுவுவது அவசியமில்லை என்று மௌலவீ கூறியுள்ளார். இதற்காக “தயம்மும்” செய்ய வேண்டுமா? என்றும் அவர் கேட்டுள்ளார். அதுவும் தேவையில்லை என்று அவர் சொல்லியுள்ளார்.
அரை வேக்காடு சொன்ன சட்டம் முற்றிலும் பிழையானதாகும். சரியான சட்டம் என்னவெனில் தண்ணீர் படக்கூடாதென்று டொக்டர் சொன்ன இடத்தை மட்டும் கழுவாமல் வழமையாக “வுழூ” செய்வதுபோல் செய்துவிட்டு கழுவுவது கடமையான பகுதியில் கழுவாமல் விடுபட்டதற்காக “தயம்மும்” செய்வது அவரின் கடமையாகும். இவ்வாறு செய்தால் மட்டுமே “வுழூ” கூடும். தொழுகையும் நிறைவேறும்.
இன்னுமொரு அரை வேக்காடு சொன்ன “ஷரீஆ” சட்டத்தைப் பாருங்கள்.
திருமணம் செய்த ஒருவன் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும் நேரம் அவனுக்கு மிக வேண்டிய நண்பன் வீட்டுக் கதவை தட்டி அவரை அழைத்தான். அவர் தான் செய்து கொண்டிருந்த உடலுறவை நிறுத்தி விட்டு தனது நண்பனை ஆதரித்து அனுப்பிவிட்டு ஓர் ஆலிமிடம் சென்று (அவரும் அரை வேக்காடுதான்) நடந்ததை விபரமாகக் கூறி சட்டம் கேட்டிருக்கிறார். அதற்கு மௌலவீ ஸாஹிபு உனக்கு இந்திரியம் வெளியானதா? என்று கேட்டுள்ளார். அவர் இல்லை என்று சொல்லியுள்ளார். அப்படியானால் குளிப்பது கடமையில்லை. ஒரு மனிதனுக்கு இந்திரியம் வெளியானால் மட்டுமே அவன் குளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இஸ்லாமிய சட்டம் என்னவெனில் ஒருவனுக்கு எந்த வகையில் இந்திரியம் வெளியானாலும் அவன் முழுக்காளிதான். அவன் “ஷரீஆ”வின் முறைப்படி குளிப்பது அவன் மீது கடமை.
ஆயினும் ஒரு கணவன் தனது மனைவியின் பெண் குறிக்குள் தனது ஆண்குறியின் “ஹஷபத்” வரை உட் செலுத்தினால் போதும். குளிப்பு கடமையாகிவிடும். இந்திரியம் வெளியாகாவிட்டாலும் சரியே. குளிப்பது கடமையாகும்.
يجب الغسل بمجرد إيلاج الحشفة فى قبل المرأة، وإن لم يُنزل
“ஹஷபத்” என்றால் ஆண்குறியில் “கத்னா” ஸுன்னத் செய்யும் போது வெட்டப்பட்ட பகுதியைக் குறிக்கும்.
ஒரு பெண்ணின் பெண் குறிக்குள் “ஹஷபத்” அளவு போனால் போதும். இந்திரியம் வெளியாகாது போனாலும் குளித்தல் கடமையாகிவிடும்.
ஆண்குறியிலிருந்தும், பெண் குறியிலிருந்தும் வெளியாகும் திரவங்கள் நான்கு. அவற்றில் ஒன்று “மதீ” என்றும், மற்றது “வதீ” என்றும், மற்றது சலம் என்றும், மற்றது “நுத்பா” என்றும் சொல்லப்படும். இதையே தமிழில் இந்திரியம் என்று சொல்லப்படுகிறது. இந்திரியம் என்பது “ஷரீஆ”வின் பார்வையில் சுத்தமானதாகும். சுத்தமானதெல்லாம் சாப்பிடலாம் என்பது கருத்தல்ல. இந்திரியம் சுத்தமானதாயினும் அதைச் சாப்பிடுவது “ஹறாம்” விலக்கப்பட்ட தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு உமிழ் நீர், சளி, மூக்குச்சளி போன்றவை சட்டப்படி சுத்தமானவையாயினும் அவற்றைச் சாப்பிடுதல் “ஹறாம்” தண்டனைக்குரிய குற்றமாகும். “மதீ” என்றால் மதநீர் எனப்படும். சிற்றின்பத்தால் வெளியாகும் வழுவழுப்பான நீர். இது அசுத்தமானது. “வதீ” என்றால் அது உடல் சூட்டினால் வெளியாகும் நீர். இதுவும் அசுத்தமேதான்.
அரைவேக்காடு ஆலிமால் ஏற்படுகின்ற விபரீதங்கள் அதிகம். ஆகையால் அரை குறை ஆலிம்கள் “ஷரீஆ”வின் சட்டங்கள் கூற முன்வராமல் அந்தப் பொறுப்பை தரமான ஸுன்னீ உலமாஉகளிடம் ஒப்படைப்பது சிறந்தது.
அரை குறை ஆலிம்களால் ஏற்படுகின்ற விபரீதங்களிற் சிலதை இங்கு நான் குறிப்பிடுகிறேன்.
நான் இவ்வாறு எழுதியது அரை குறை ஆலிம்களை அவமதிப்பதற்காகவோ, இழித்துரைப்பதற்காகவோ அல்ல. இத்தகையோர் மார்க்கச் சட்டங்கள் கூறவோ, “பத்வா” வழங்கவோ முன்வராமல் தமக்கு திட்டமாக விடை தெரியாத விடயங்களுக்கு திறமையுள்ள, ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுள்ள, “தரீகா”வோடு சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி கேட்போரை அனுப்பி வைக்க வேண்டும்.
பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கு!
பள்ளிவாயல் நிர்வாகம் பள்ளிவாயலுக்கு ஓர் இமாம் – “பேஷ் இமாம்” நியமிக்கும் போது திருக்குர்ஆனை சட்டப்படி – முறைப்படி ஓதத் தெரிந்த ஒரு மௌலவீ மூலமே பேஷ் இமாம் தெரிவு செய்யப்பட வேண்டும். பேஷ் இமாம் தெரிவு செய்வதில் அவர் “இக்லாஸ்” உடன் அப்பணியை செய்ய வேண்டும். சுயநலம் அவரிடம் இருக்கக் கூடாது.
இவ்வாறுதான் சிறுவர், சிறுமியர்களுக்கான “குர்ஆன் மத்றஸா”வின் முஅல்லிம்களும் தெரிவு செய்யப்பட வேண்டும்.
பள்ளிவாயலில் ஐந்து நேரத் தொழுகைக்கு பாங்கு சொல்வோரும் – “முஅத்தின்”களும் மேற்கண்ட விதிகள் பேணியே தெரிவு செய்யப்பட வேண்டும்.
எவரை எதற்கு தெரிவு செய்வதாயினும் ஸுன்னீகளான, திறமையுள்ளவர்களே தெரிவு செய்யப்பட வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவதுபோல் முன்கூட்டியே திட்டமிட்டு தெரிவு செய்தல் கூடாது.
முஅத்தின் – தொழுகைக்கான அறிவிப்பாளர் அழகிய குரல் வளம் உள்ளவராகவும், அறபு எழுத்துக்களை தெளிவாக மொழியக் கூடியவராயுமிருத்தல் வேண்டும். கொள்கையில் ஸுன்னீயாகவும் இருத்தல் வேண்டும். பாங்கு சொல்லு முன்னும், சொன்ன பின்னும் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது “ஸலவாத் – ஸலாம்” சொல்பவராகவும் இருக்க வேண்டும்.
நான் எனது சொந்த ஊரான காத்தான்குடியில் இருந்து கொண்டு பாங்கு சொல்லுமுன்னும், சொன்ன பின்னும் ஸலவாத் சொல்ல வேண்டுமென்று அதற்கான ஆதாரத்தையும் முன்வைத்து பல கூட்டங்களில் பேசியும், பல நூல்களில் எழுதியும் கூட காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவோ, சம்மேளனமோ நான் கூறிய மார்க்க கருத்தை கவனத்திற் கொள்ளாமலிருப்பது பற்றி மறுமையில் கேட்கப்படுவார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவர்களை விட்டும் இன்னும் வஹ்ஹாபிஸ அசுத்தம் போகவில்லை என்பதே இதற்கான காரணமாகும். இவர்களை இந்நாட்டு ஜனாதிபதியாலும் அசைக்க முடியாது போலுள்ளது.
அரை குறை ஆலிமால் ஆபத்து என்பது போல் அரை குறை ஞானியாலும் ஈமானுக்கு ஆபத்து உண்டு.
அரை குறை ஞானியென்றால் அவர் தொழாமல் இருப்பார். தியானமே தொழுகை என்பார். “திக்ர்” செய்தலே தொழுகை என்பார். இவ்வாறு சொல்வபர்தான் அரை குறை ஞானி ஆவார்.
இந்த ஞானி தனது வாதத்திற்கு ஆதாரமாக – அதாவது தொழத் தேவையில்லை என்பதற்கு ஆதாரமாக
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِيْنُ
உங்களுக்கு “யகீன்” வரும் வரை உங்களின் “றப்பு” இரட்சகனை வணங்குங்கள் என்ற திருக்குர்ஆன் வசனத்தை ஆதாரமாக முன்வைப்பார்.
இந்த ஞானி “அல்யகீன்” என்ற சொல்லுக்கு அதிகமானோர் சொல்வது போல் “நம்பிக்கை” என்று பொருள் கொண்டு ஒருவனுக்கு நம்பிக்கை வந்துவிட்டால் அவன் தொழத்தேவையில்லை என்று விளங்குகிறார் போலும்.
அவர் அவ்வாறு விளங்குவது சரியான கருத்தென்று வைத்துக் கொள்வோம். அவ்வாறாயின் அந்த வசனத்துக்கு நம்பிக்கை வரும் வரை நீ வணங்கு என்றுதானே பொருள் கொள்ள வேண்டும். நம்பிக்கை வரும் வரை தான் நீ தொழ வேண்டும் என்று பொருள் கொள்ள வாய்ப்பே இல்லையே. ஏனெனில் திரு வசனத்தில் واعبد ربك உங்கள் இரட்சகனை வணங்குங்கள் என்றுதான் வசனம் வந்துள்ளதேயன்றி وصلِّ ربّكَ உங்கள் இரட்சகனை தொழுங்கள் என்று வரவில்லை.
குறித்த ஞானி தொழாமல் இருப்பதற்கு இந்த வசனத்தை ஆதாரமாகக் கூறுவது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல. குறித்த ஞானி வசனத்தில் வந்திருப்பது போல் வணங்குங்கள் என்று பொருள் சொன்னாலும் அது அவருக்கு ஆதரவான பொருளாகாது. நம்பிக்கை வந்தால் தொழத் தேவையில்லை என்பதும் பிழைதான். நம்பிக்கை வந்தால் வணக்கம் செய்வதும் பிழைதான். இவ்வாறு கூறுவோர் “திக்ர்” மஜ்லிஸ் நடத்துகிறார்கள் எதற்காக? “றாதிப்” செய்கிறார்கள் எதற்காக? இவை வணக்கமில்லையா?
அரைகுறை ஞானியால் ஈமானுக்கு ஆபத்து என்பது புரிகிறதா?
அரை குறை ஞானிகளின் வெளிப்பாட்டில் இன்னுமொன்று உள்ளது. இதை அரை குறை ஞானமென்று கூறாமல் குருட்டு ஞானம் அல்லது இருட்டு ஞானம் என்றே கூற வேண்டும்.
“அல்லாஹ்” الله என்ற சொல்லில் நான்கு எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. இருட்டு ஞானிகளும், குருட்டு ஞானிகளும் ஐந்து எழுத்துக்கள் என்று சொல்வர். அவை அலிப், லாம், லாம், ஹே என்பனவாகும். குருட்டு ஞானிகள் கடைசி எழுத்தான “ஹே”யின் பின்னால் “வாவு” என்ற ஓர் எழுத்தை அதிகமாக்கி هُوْ என்று சொல்வர். இவ்வாறும் ஒரு ஞானம் இருப்பதாகச் சொல்வர். இது ஞானமல்ல. வெறும் ஆணமேதான்.
இவ்வாறு சொல்லுதல் எந்தவொரு ஞானத்திலும் அடங்கவுமாட்டாது, எந்தவொரு சட்டத்தில் அடங்கவுமாட்டது.
இவையாவும் அரை குறை ஞானிகளால் ஏற்படுகின்ற விபரீதங்களாகும்.
ஆகையால் மார்க்கச் சட்ட விடயங்களில் அரை குறை ஆலிம்களையும், இறைஞான கொள்கை விடயத்தில் அரை குறை ஞானிகளையும் பின்பற்றாமல் திருக்குர்ஆனையும், ஹதீதுகளையும், அவ்லியாஉகளினது அறிவுரைகளையும் பேணி வாழ்வோம்.
குறிப்பு: அரை குறை வைத்தியனால் உயிருக்கே ஆபத்து. இதற்கு விளக்கம் தேவையில்லை.